Friday, March 30, 2018

மெளனத்துயர்


விதியின் கைகளில் மனிதன் ஒரு விளையாட்டுப் பொம்மை. தனது துயரத்துக்கு இந்த நாளிலாவது விடுதலை கிடைக்கட்டும் என்று எண்ணித்தான் படுக்கையிலிருந்து எழுகிறான். எத்தனையோ தெய்வங்கள் இருந்தும் எந்தக் கடவுளும் அவனுடைய சுமையைத் தாங்கிக் கொள்ள முன்வரவில்லை. வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே வீசிக்கொண்டிருக்காது என்று அவன் அறிவதில்லை. கடலில் கால்நனைக்க அலைகள் ஓயும் வரை காத்திருப்பது அறிவுடைமையாகுமா. எவ்வளவு காலத்திற்கு மேகங்களால் சூரியனை மறைத்துக் கொண்டிருக்க முடியும் அதன் கிரணங்கள் பூமியை வந்தடைந்தே தீரும் இல்லையா?

கையேந்தும் இடத்திற்குக் கீழே புதையலிருப்பதை பிச்சைக்காரன் அறிவதில்லை. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுமென்று ஒவ்வொரு மனிதனும் கனவு காண்கிறான். தற்போதைய நிலையில் இருள் சூழ்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் வெளிச்சம் வரும் என்று தான் மனிதன் தவங்கிடக்கிறான். ஏதாவதொரு நம்பிக்கை வேண்டியதாய் இருக்கிறது மனிதனுக்கு வாழ்க்கையில் நடைபோடுவதற்கு. வெட்டியான் செத்த பிணத்திலிருந்து கோணித்துணியை உருவிக் கொள்வதைப் போல வாழ்க்கை மனிதனிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு தான் விடுகிறது.

மனிதர்கள் பிறக்கும் போது கடவுளாய் இருக்கிறார்கள், வளர்ந்ததும் சாத்தான் ஆகிவிடுகிறார்கள். தான் நினைத்த ஒன்றை அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறார்கள். பகலில் பொருட்களைக் காண விளக்கு ஏந்திச் செல்பவன் முட்டாள் அல்லவா. தெய்வத்திடம் செல்வத்தைத் தவிர வேறென்ன கேட்கிறோம். கப்பித்தானிடம் நம்பிக்கை இல்லையென்றால் கப்பலில் பயணம் செய்ய முடியுமா. ஆட்டுமந்தையைப் போல் அவர் பின்னால் அணிவகுக்கின்றீர்களே நீங்கள் பின்பற்றிச் செல்பவர் உத்தமரா என்று உங்களுக்குத் தெரியுமா. பொறுமையாக நீங்கள் தட்டினால் திறக்காத கதவுகள் உண்டா. நிச்சயமாக சாவோம் என்று தெரிந்திருந்தும் சத்தியத்தின் பக்கம் நிற்க உங்களால் முடியுமா?

மாயா ஜாலம் காட்டும் செப்படுவித்தைக்காரன் கடவுளுக்கு நிகரானவனாக முடியுமா. மாகடலை பார்க்கும் போதெல்லாம் மனிதன் சிறு தூசு என்று உணரமுடிகிறதா. வாழ்வில் சூழ்ந்துள்ள மூடுபனி விலக மனதில் ஞானச்சூரியன் உதிக்க வேண்டும். எந்த மொழியில் பிரார்த்தனையை ஏறெடுத்தாலும் கடவுள் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேய்ப்பன் பிரசங்கம் செய்வதற்கு ஏன் கல்வாரிமலையை தேர்ந்தெடுத்தார். வேதனைப்படுபவர்களுக்கு காலம் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த உலகில் கடவுளால் கூட ஏகாந்தமாய் இருக்க முடிவதில்லை. கோயிலில் வீற்றிருக்கும் தெய்வத்திடம் வேண்டுதல்களை ஒப்பித்த பின் மனம் வாயிலில் கழற்றிப் போட்ட செருப்பைத் தேடி ஓடுகிறது. பணத்தை பூட்டி வைக்காமல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் நாளையே மரணம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம். இரை தேடத்தான் பறவைகளுக்கு சிறகுகளை கொடுத்திருக்கிறான் இறைவன். மரண வெள்ளத்தில் மூழ்கப் போகும் உலகைப் பற்றி வருணிக்க என்ன இருக்கிறது. இரகசியங்களை நெருங்க நெருங்க  தீப்பற்றிக் கொள்கிறது எனது உடல். இறைத் தூதர்களுக்கு சொந்த மண்ணில் கனம் இருக்காது. புவிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தான் நாமனைவரும்.

பூமியில் நடைபெறும் காரியங்களைப் பார்த்தால் கடவுளுக்கு கருணையில்லை என்பதையே காட்டுகிறது. இருண்ட வாழ்வில் வெளிச்சம் கொடுக்கும் ஒரே ஒரு விளக்கையும் கடவுள் அணைத்துவிடுகிறார். மனிதனின் இறுதி நாளில் கசப்பான நினைவுகளே மனதில் வந்து அலைமோதும். சாத்தான், கடவுள் என்ற இருசக்திகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு மனிதன் பைத்தியமாகிறான். இரவின் நிழலை கடைசி வரை சூரியனால் காண முடியவில்லை. தோலால் மூடப்பட்ட வெறும் கூடுதான் மனிதன். மனித வாழ்க்கையில் உண்மைக்கும், பொய்க்கும்  இடையே தராசுத் தட்டு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

பலவீனமான மனிதனின் மனதை கெட்ட ஆத்மாக்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அப்பாவிகளை சித்ரவதை செய்வது கடவுளுக்கு உவப்பாக இருக்கிறது. மனிதனின் முயற்சிகளையெல்லாம் இயற்கை தோற்கடித்து விடுகிறது. ஆணவத்தால் ஆடுபவர்களையெல்லாம் கடவுள் கண்டுகொள்ளாவிட்டாலும் இயற்கை காவு வாங்கியேத் தீருகிறது. ஏமாளிகளை கைப்பாவையாக்கி காரியத்தை சாதித்துக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுள் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை காட்டலாம். ஆனால் விதி வெகுநியானமானது. மனிதர்களை அது பேதம் பிரிக்காது. அரசனுக்கு என்ன நேர்கிறதோ அதுவே ஆண்டிக்கும் நேர்கிறது. சத்தியத்தைக் காப்பாற்ற துணிபவர்கள் எல்லாருமே அவதாரங்கள் தான்.

Wednesday, March 28, 2018

தாய்


மனித வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது. வயிற்றில் சுமக்கும் போது குழந்தைக்கும் சேர்த்து அவளே உண்கிறாள். கனவுகளோடு பெற்றெடுக்கும் அவள் தன் கண்போல குழந்தையைப் பாதுகாக்கிறாள். குழந்தை எதற்காக அழுகிறது என்று அவளுக்கு மட்டுமே தெரியும். குழந்தை தூங்க வேண்டுமென்றால் அவள் தாலாட்டுப் பாட வேண்டும். தொப்புள் கொடி உறவு ஆயுள் முடியும் வரை தொடர்கிறது. அன்னை இட்ட தீ அடிவயிற்றில் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் குலதெய்வமாக தாயே இருக்கிறாள். வாழ்க்கைப் பாதையில் தடுமாறி வழுக்கி விழும் போதெல்லாம் அவன் தாயின் மடியில் சாய்ந்தே ஆறுதலடைகிறான்.கோயில் கர்ப்பக்ருஹ இருளில் தாயின் முகத்தையே அவன் காண்கிறான்.

அம்மா ஆகும் போதே பெண்கள் தெய்வமாகிவிடுகின்றனர். அவளுடைய தாய்ச்சியைத் தொடும் ஆட்டமாகத்தான் இவ்வுலகம் இதுநாள்வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. பூக்களை எப்போதும் செடிகள் சொந்தம் கொண்டாடியதில்லை. அவளுக்குப் பிறகான வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. உன் கைப்பிடித்தபடி அலையில் நான் கால் நனைத்ததை இன்னும் நான் மறக்கவில்லை. வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடிக் களைத்து உனது மடியில் தலை சாய்கிறேன் நீ என் தலை கோதி தூங்க வைக்கிறாய். இரவில் ஆயிரம் நட்சத்திரக் கண்களைக் கொண்டு நீ என்னை கவனித்துக் கொண்டே இருக்கிறாய்.

காலம் உன்னை என்னை விட்டு தொலைதூரம் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்த வண்ணத்துப்பூச்சி ஒருநாள் வானை அளக்கும் என்று நீ இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறாய். பிரமாண்டமானக் கோயிலைக் கண்டால் பரசமடைவோம் ஆனால் சிதிலமடைந்த கோயிலில் இருக்கும் தெய்வம் பக்தனுக்காக ஏங்குவதை கண்டுகொள்ள மாட்டோம். ஒவ்வொரு தாயும் வாழ்க்கையெனும் கானகத்தில் மகனை விட்டுவிட்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடுகின்றனர். மீதிப் பயணத்தை அவன் அவளின் நினைவுகளைச் சுமந்து கொண்டே கடக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கை அவளை சிரிக்க விடவில்லை. விதியை நொந்து கொள்வதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்.

அவளுடைய கவுச்சி வாசனை வேண்டியதாய் இருக்கிறது நான் தூங்குவதற்கு. என் கேள்விக்கெல்லாம் மெளத்தையே பதிலாகத் தந்தாய் ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது. அம்மாக்கள் வேர்களைப் போல தங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிறிதளவும் சுயநலமின்றி எப்படி அவளால் இருக்க முடிகிறது. உடம்புக்கு நோவென்றாலும் எனக்குப் பின்னால் தூங்கி எனக்கு முன்னால் எழுந்து விடுவாள். பெற்றுவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல் இன்றும் என்னைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறாள். சுயமாக இரையைத் தேடிக் கொள்ளத் திறனற்ற பறவையாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன். கருவறையில் குடியிருக்கும் கடவுளுக்குக் கூட இவ்வளவு கருணை இருக்குமா என்று தெரியவில்லை.

நான் கைக்குழந்தையாக இருந்தபோது எப்படி பார்த்துக் கொண்டாளோ அப்படித்தான் இப்போதும் பார்த்துக் கொள்கிறாள். நினைவுகள் என்னை அலைக்கழிக்கும் போது அவளது நிழலில் தான் இளைப்பாறுகிறேன். நான் வெயிலில் நடக்கும் போதெல்லாம் நீ தான் முகிலாக வந்து நிழல் தருகிறாய். மழை பெய்யும் போது சிறு தூறல் கூட என் மீது விழா வண்ணம் சேலைத் தலைப்பால் என் தலையை மூடிக் கொள்வாய். நினைவு நதியில் நான் நீந்திக் கொண்டிருக்கும் போதெல்லாம் நீ கரையில் நின்று கொண்டு என்னை வாவென்று அழைக்கிறாய். அவளின் பேரன்பை விவரிக்க நான் வார்த்தைகளின்றி தவிக்கிறேன். எனது கனவுலகைக் கூட அவள் தான் ஆள்கிறாள். கருணை தான் மனிதனிடமிருந்து கடவுளை வேறுபடுத்துகிறது.

எனது ஆயுள் முடியும் வரை என்னில் எங்கோ ஒரு மூலையில் நீ வாழ்ந்து கொண்டிருப்பாய். நான் ஒருவனே உலகம் என்று வாழும்  உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். வானம் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மழை பொழிவது போல எனது மகள் உனது பாசமழையில் இப்போது நனைந்து கொண்டிருக்கிறாள். வெறும் தோற்றப் பொலிவில் என்ன உள்ளது ஒப்பனை அறையில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் உன்னைப் போன்ற அழகு யாருக்கும் வராது. குடும்பக் கப்பல் பேரலைகளால் தள்ளாடும் போதெல்லாம் எங்களை தப்பிக்க விட்டுவிட்டு நீ ஏன் தண்ணீரில் மூழ்குகிறாய். வாழ்க்கைச் சக்கரத்திற்கு அச்சாணியாக நீ இருப்பதால் தான் இவ்வளவு தொலைவைக் கடக்க முடிந்தது. அம்மா உன் பேரன்பை வர்ணிப்பதற்கு தமிழில் வார்த்தைகளே கிடையாது.

Tuesday, March 27, 2018

வாழ்க்கை


வாழ்க்கை தனது ரகசியத்தை யாருக்கும் வெளிக்காட்டாது. நாளை என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது. நம் கண்முன் இறப்பு நேரிடும் போது கூட நம்மை மரணம் நெருங்காது என்றே நாம் நினைக்கிறோம். மனிதன் பலனை எதிர்பார்த்தே செயல்களைச் செய்கிறான். விதியின் கைகள் மனிதனின் கழுத்தை நெரிக்கிறது. மறதியும், தூக்கமும் மனிதனுக்கு இல்லையெனில் வாழ்வு நரகமாயிருக்கும். வாழ்வில் எப்போதும் வசந்தம் வீசிக் கொண்டிருக்காது. மூன்று வேளை உணவருந்தினாலும் பசிநெருப்பை அணைக்க முடிவதில்லை. மனிதன் பரிதாபத்திற்குரிய ஒரு ஜீவன். அவனது ஒரு எல்லை மிருகமாகவும் மற்றொரு எல்லை கடவுளாகவும் உள்ளது. அவனது சிந்தனைக் கூட சிறைப்பட்டுத்தான் கிடக்கிறது.

அணையும் விளக்கு பிரகாசமாக எரிவது போலத்தான் அவனது வாழ்வு. அவனுக்கு ஒரு நம்பிக்கை தம்மைவிட உயர்ந்த அனைத்தும் தனக்கு மேலாக இருக்குமென்று. அதனால் தான் இறைவன் வானத்திலிருப்பார் என்றெண்ணி அண்ணாந்து பார்த்து இறைஞ்சுகிறான். எவ்வளவு போராடியும் அவனால் வாழ்வின் இரும்புச் சட்டங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அவனது பூமியில் அவன் அன்னியமாய்த் தான் இருக்கிறான். மனிதன் கடவுளிடமிருந்து வேறுபடுவது கருணையினால் தான். இயற்கை அவனை மடியில் வைத்து தாலாட்டினாலும் மனிதன் அமைதியற்றவனானவே அலைந்து கொண்டிருக்கிறான். புலன்களை பாவக் காரியத்துக்கு ஒப்புக் கொடுத்து மனிதன் தூங்கிக் கிடக்கிறான்.

உயிர்த்தெழுந்த இயேசுவின் கண்களில் மன்னிப்பின் ஒளி தெரிந்தது. அதைப் பார்த்து மனிதன் பேதலித்துப் போனான். கடவுள் மனிதனுக்கு துயரக் கோப்பையை பரிசளித்தார். அதிலிருக்கும் மதுவைக் குடித்து மனிதன் கேட்பாரற்று வீதியில் விழுந்து கிடக்கிறான். போலிபுகழ்ச்சியின் மூலம் சாத்தான் மனிதனிடமிருந்த தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்கிறான். வாழ்வின் கோரப்பிடியில் சிக்கி மனிதன் பைத்தியமானான். மரணத்தின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து சவப்பெட்டிக்கு அருகிலேயே நெடுநாட்கள் காத்திருக்கிறான். வெண்ணிறச் சிறகுகளை உடைய மரணப் பறவை பூமியைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

அற்ப மனிதர்கள் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டதைப் பார்த்து சாத்தான் சிரித்துக் கொண்டிருந்தான். கடவுளின் அசரீரியை இவ்வுலகில் ஏழைக் கவிஞனால் மட்டுமே கேட்க முடிந்தது. கடவுளின் இறுதி ஊர்வலத்தில் எந்த மனிதனால் கலந்து கொள்ள முடியும். ஆதாமின் சந்ததியினரின் அழுகுரலுக்கு இறைவன் செவிகொடுப்பதில்லை. சுவர்க்கத்திலிருந்து விரட்டப்பட்டவர்களின் கனவில் கூட இறைவன் தோன்றுவதில்லை. இவ்வுலகில் மனுஷகுமாரனோடு உண்மையும் மரித்துவிட்டது.

Monday, March 26, 2018

கவலையில்லாத மனிதன்


கவலையில்லாத மனிதன் ஒன்று இறந்துவிட்டான் இல்லையெனில் இன்னும் பிறக்கவில்லை. வாழ்வுப் பெருங்கடலின் அலைகள் தான் மனிதன். ஆழ்கடலில் பொக்கிஷம் இருப்பது தெரியாமல் அலைகள் கரையையே நாடுகிறது. இப்பரந்த உலகில் கவிஞன் துயரத்தின் வாரிசாக மட்டுமே இருக்கிறான். ஊரில் முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கிறார்கள் என்றால் பணம் உள்ளவர்களுக்கே. அறிவுஜீவிகள் கூட பணக்காரர்களுக்குப் பின்னால் தான் அணிவகுக்கிறார்கள். அடிமைப்பட்டிருக்கிற மனிதனுக்குத்தான் சுதந்திரத்தின் அருமை தெரியும். ஒரு நபரின் வங்கிக் கணக்கில் பலகோடி இருக்கட்டும் அதனைக் கொண்டு ஒருநாள் தூக்கத்தை அவரால் விலைக்கு வாங்க முடியுமா.

கப்பலை கடலில் செலுத்துவதற்கு மாலுமியின் பங்கு சிறிது கடவுளின் பங்கு பெரிது. அஸ்திரத்தை பிரயோகிக்க அவ்வளவு யோசிப்பார்கள் அந்நாட்களில் இப்போது அப்படியா. நிராகரிப்பின் வலி விஷம் தோய்த்த அம்பு உடலின் மீது தைய்ப்பதை விடக் கொடுமையானது. வாழ்வில் ஒருமுறையேனும் அன்பின் கரங்கள் உன்னை ஆரத்தழுவிக் கொண்டிருக்கக் கூடும். உடலளவில் செய்யப்படாத தீங்குகளால் பாவமில்லை என மனிதன் கருதுகிறான். அவரவர் பாதையை சுயமாக தேர்ந்தெடுக்க வசதியாகத்தான் பல மதங்கள் தோன்றியுள்ளது. ஆன்மிக வழியில் ஞானப்பாதை கடுமையானது. பக்திப் பாதை எளிமையானது.

இவற்றை ஏன் உங்கள்  முன் வைக்கிறேன் என்றால். கஷ்டத்தில் உழலுகிறேன் காப்பாற்று என தங்களை கடவுளிடம் ஒப்புக் கொடுத்தால் தீங்குநேராமல் அவர்களைப் பாதுகாப்பது அவனுடைய கடமை. சரணடையும் போது சுமையை இறைவன் மீது இறக்கி வைத்து விடுகிறீர்கள். ஆண்டவனிடம் பற்று வைக்கும் போது அங்கு நம்பிக்கை வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ராம நாமத்தின் மீது வைத்த நம்பிக்கையால் தான் அனுமனால் கடல் தாண்ட முடிந்தது. பிரஹலாதன் வைத்த நம்பிக்கையினால் தான் பிரம்மம் தூணை உடைத்துக் கொண்டு காட்சி தந்தது. கல்லான அகலிகை ராமன் கால் பட்டதும் பெண்ணாகவில்லையா. திரெளபதியின் அசைக்க முடியாத நம்பிக்கைதானே அவள் மானத்தைக் காத்தது. ஆத்மா அழிவில்லாதது என அர்ஜுனனை நம்பச் செய்வதற்கு அருளப்பட்டது தானே கீதை.

வாழ்வின் குரல் எப்போதும் மரணத்தைப் பற்றியே பேசுகிறது. சாமானியனுக்கும் சக்கரவர்த்திக்கும் ஒரே விதி தான். அகந்தை தான் மரணத்தைக் கொடுமையாக்குகிறது. நான் என்கிற அகந்தை தான் கடவுளை மறைத்துக் கொண்டுள்ளது. அந்த திரைச்சீலை விலகினால் தெய்வத்தின் தரிசனம் கிடைக்கும். இறை சக்தி மனிதன் மூலமாக வெளிப்படுகிறது ஒருவரிடம் அது கூடுதலாகவும் இன்னொருவரிடம் குறைவாகவும் காணப்படுவதற்கு கர்மவினை காரணமாக இருக்கலாம். அவதாரங்கள் அனைத்தும் மனிதன் கடவுள் நிலையை அடையலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஏற்பட்டதாகவே தோன்றுகிறது.

வாழ்வுத் தீவில் மனிதஇனம் நிரந்தரமாக வசிக்க முடியாது. அந்நிலையில் மனிதனுக்கு புகலிடம் தருவதற்கு யார் முன்வருவார்கள். தனிமையின் மேகம் என் மனவானில் இடியாக குமுறுகிறது. விதியின் கைகள் ஒரு பந்தைப் போல மனிதனை தூக்கி எறிந்து விளையாடுகிறது. கடவுள் இல்லாத மறைவான இடமொன்றை யாராலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. புத்தரால் கூட ஞானக்கடலின் சிறுதுளியைத் தான் விவரிக்க முடிந்தது. சத்தியம் ஒன்றே கடவுளிடம் நம்மை கொண்டு செல்லும் என்பதே இயேசுவின் போதனையாக அமைந்தது. குழந்தையிடம் அகப்பட்டுக் கொண்ட கொசு போன்று தான் இறைவனின் கைகளில் மனிதன்.

எஜமான் விசுவாசமுள்ள வேலைக்காரர்களிடமே பொறுப்பை ஒப்படைப்பான். ஒருவனிம் இருக்கும் செல்வமே மக்களில் நால்வரை அவன்பால் ஈர்க்கச் செய்கிறது. உண்மையை உணர்ந்தவர்கள் விவாதத்தில் பங்கேற்க மாட்டார்கள். ஞானத்தை விளக்க வார்த்தைகள் போதாது. தெய்வீக விளக்கின் ஒளி மூலமாகவே நாம் இந்த உலகைக் காண்கிறோம். சாத்தானுக்கு வாய்ப்பு தராமல் மனதைக் கோயிலாக வைத்துக் கொண்டால் இறைவன் வந்து குடியேறுவான். பூமியுடனான பிணைப்பை அறுத்துக் கொள்ள மனிதர்களால் முடிவதில்லை. கடவுளின் கருணையைப் பற்றி நாம் சந்தேகம் கொள்ள தேவையில்லை அவர் தான் மனிதனுக்கு பூமியில் அடைக்கலம் தந்துள்ளார். மனிதனின் தேவைகள் அனைத்தையும் ஒரு தந்தையைப் போல அவர் நிறைவேற்றுகிறார். இப்பூமியில் அன்பே ஆட்சி செய்ய வேண்டும் என கடவுள் விரும்பினார். கடவுளுக்குள்ள அதிகாரம் மனிதனின் கண்களை உறுத்துகிறது. மரணப்புதிருக்கு விடைகாண அவன் இன்றுவரை முயன்று கொண்டிருக்கிறான்.

Friday, March 23, 2018

தெய்வம் தந்த வீடு


பிணத்தின் மீது காசை விட்டெறிந்து போவதைப் போலத்தான் எங்களுக்கு பிச்சையிடுகிறார்கள். வானக் கூரையின் கீழே தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். விசேஷ நாட்களில் கோயில் வாசலே எங்களுக்கு கதி. கையேந்துபவன் மரக்கட்டைதான். சுயக்கொலை செய்து கொள்ளாமல் யாராலேயும் கையேந்த முடியாது. என்னோட நொண்டி, நொடமானவனெல்லாம் பிச்சை எடுக்கிறான். இவனுக்கு கால், கையை ஊனமாக்காம வயித்தை ஊனமாக்கியிருந்தான் அந்தக் கடவுள்னா இந்த  நிலைமைக்கு அவன் வந்திருப்பானா?

கவலையைப் போக்கும் அருமருந்தாக நான் சிகரெட்டைத்தான் நினைக்கிறேன். பாம்பு கடிச்சாக் கூட நான் பயப்படமாட்டேன், இந்த மனுசப் பயல்களின் வாயிலேர்ந்து வர்ற வார்த்தை இருக்கே. ஆத்துல ஓடுற தண்ணீர் கூட எங்களைத் தீண்டுவதற்கு யோசிக்கும். எஜமானனுக்கு சேவகம் செய்ற நாய் எங்களைக் கண்டால் துரத்தும். எங்களுக்கு காசு போடுறவன் எப்படி சம்பாதிக்கிறான்னு யாருக்குத் தெரியும்.

கொஞ்ச நாளா சிறுக்கி மவ ஒருத்தி நான் போற இடத்துக்கெல்லாம் வந்துர்றா. அவ மடியில கிடக்கிற புள்ளைய பார்த்துட்டு மவராசனுங்க அவ திருவோட்டை நிரப்பிட்டுப் போறானுங்க. பிச்சைக்காரனுக்கு பொறந்தவன் அம்பானி ஆவணும்னு ஆசைப்பட்டா நடக்குமா? வாழ்ற வரைக்கும் வயித்துல இருக்குற நெருப்பை அணைக்க அல்லாடுறோம் அப்புறம் தீயில எரிஞ்சி சாம்பலாவுறோம்.

இந்த ரோட்டைக் கடக்க எவ்வளவு கஷ்டமாயிருக்கு. கீ கொடுத்த பொம்மை மாதிரி மனுசப்பயலுங்க அங்கேயும் இங்கேயும் போறானுங்க. மனுஷனுக்கு எங்க இப்ப மதிப்பிருக்கு எல்லாம் பணம் தான். எந்த வழியிலயாவது பணத்தை சம்பாதின்னு சொல்லிக் கொடுத்து தான் சின்ன புள்ளையிலேர்ந்து வளக்குறானுங்க. சொந்த பந்தந்தான் சிக்கலே. சிலந்தி வலையில சிக்குற இரை போலத்தான் நாம. அப்படித்தான் அந்தச் சிவன் பண்ணி வச்சிருக்கான்.

கோயில்ல அன்னதானத்துக்கு டோக்கன் தருவானுங்க. வயிறு நிரம்பின உடனே ஒரு திருப்தி வரும் பாருங்க அதுதான் கடவுள்னு நினைக்குறேன். இந்த உலகத்தை சாட்சியாய் இருந்து பார்க்கிறதுல ஒரு சுகம் இருக்கு. நாங்க மனுசப்பயலுங்ககிட்ட கையேந்துறோம், அவனுங்க சாமிகிட்ட பதவி உயர்வு, குழந்தை பாக்கியம்னு கையேந்தி நிக்கிறானுங்க.

பக்தியை வளர்க்கிறேனு சொல்லிகிட்டு காவி கட்டிகிட்டு அதையும் காசு பண்றானுங்க. இந்தக் காலத்துல கோயில்லேயும், ஆஸ்பத்திரிலேயும் தான் கூட்டம் அதிகமா இருக்கு. மனுசனை கூறு போட்டு ஆராய்ஞ்சவங்க சிவன், அவன் கிடுக்கி போடுறான் அம்மா, ஆத்தான்னு கத்துனா கேப்பானா? மனுசனுக்கு ஆசைங்க செவத்த தோலுக்கு, பணங்காசுக்கு.  ஆசைய அடக்கினா சிவனாயிடுவோம்னு தெரியாதப் பயலுங்க சாவுகிராக்கிங்க.

தூங்குறப்ப இந்த உலகம் இருக்காங்க. பகல்ல மட்டும் தான் இருக்குதுனா அதுக்கு ஏங்க முக்கியத்துவம் கொடுக்குறோம். கனவு காணும்போது நிசம் போல இருக்குதுங்களா. கண் விழிச்சதுக்கப்புறம்தானேங்க கனவுன்னு தெரியுது. வாழ்க்கையே கனவுதான்னு சித்தர் சொன்னதை கேட்குறீங்களா நீங்க. உங்க சங்காத்தமே வேணாண்ணு தானேங்க ஒதுங்கி மலைல போய்ச் சித்தருங்க வசிக்கிறாங்க. அங்கயும் போய் பணம் பணம்னா வேறெங்கங்க அவங்க போவாங்க.

நான் விருப்பப்பட்டு பிச்சைக்காரனா ஆவுலங்க. என் ஜாதகத்துல சந்நியாச யோகம் இருக்குண்ணான், அதான் என் தலையெழுத்து இப்படி ஆகிப்போச்சு. கண்ணை மூடி கொஞ்ச நேரம் அமைதியா இருந்து பாருங்க முடியுதுங்களா? உள்ளுக்குள்ள புதையல் இருக்குங்க வெளி விஷயத்துல மனசை ஏன் அலையவிடறீங்க? சாவைக் கண்டு எனக்கு பயமில்லீங்க ஏன்னா நான் தனியாகத்தானேங்க அலையறேன். மனுசப்பயலுங்க வாயை வளத்துட்டானுங்க அவனுங்களால பேசாம இருக்க முடியாது. வாயாலதான் வளர்ந்து நிக்கிறானுங்க பேமானிங்க.

இந்த உடம்பே அவன் கடனா கொடுத்தது தானுங்க. நீங்க போடுற ஆட்டத்தையெல்லாம் அவன் பார்த்துக்கிட்டுத் தானுங்க இருக்கான். நெஞ்சை நிமித்தி நிற்கிறவனுங்க எல்லாம் அவன் காலுல விழுந்தாவனுமே அப்ப என்ன பண்ணுவானுங்க. உடம்பு விழுந்திடக் கூடாதுன்னு தாங்க பிச்சையெடுக்கிறேன். மனசுக்கு தீனி போட்டனா எத்தனை தடவை பிறக்குறதுங்க இங்க.

மனுசனுக்கு நாக்குல விஷம் இருக்குங்க. வார்த்தையை விடும்போது யோசிக்கிறதே இல்லங்க அவன். அகந்தை இருக்கிற வரைக்கும் மனுசனால கடவுள் இருக்கிற திசையில கூட திரும்ப முடியாதுங்க. புலன்கள் வழியே மனசை செலுத்திக்கிட்ட இருந்தோம்னா முடிவு பயங்கரமாயிருக்குங்க. மனசோட லகானைப் புடிச்சி இழுக்கலேனா அது ஊர் மேயத்தாங்க போவும். சொல்லித் தெரியறது இல்லீங்க பட்டாத்தான் புரியும் போங்க.

அருணகிரிநாதரை ஏன் புள்ள பாடவைச்சான்? பட்டினத்தாரை ஏன் அப்பன் கரும்போட ஓடவைச்சான்? மனம் தாங்க படம் காட்டுது. நடிங்க வேணாங்கலை, பாத்திரத்தோட ஒன்றிப் போயிட்டா எப்படிங்க? ஆத்மா இருக்கோ இல்லையோ அதப் பத்தி பேச வேணாங்க. மரணத்தை எதிர்கொள்றதுக்கு தயாராயிட்டீங்களான்னு உங்களையே நீங்க கேட்டுப்பாருங்க. எல்லாரும் எண்பது வயசு வரை வாழ்றது இங்க நிச்சயமில்லீங்க.

நட்சத்திரமெல்லாம் கண்ணுதானுங்க அது உங்களையே பார்த்துகிட்டு இருக்கிறதா தோணலை. நாலு பேரு இருக்கிற மட்டும் நல்லவனா நடிச்சா எப்படிங்க. மனசை மனுசன் கோயிலாவா வச்சிருக்கான், குகையாத்தாங்க வச்சிருக்கான். சமயம் பார்த்து வேட்டையாடுற விலங்காத்தாங்க அவன் இன்னும் இருக்கான். வேஷத்தை கலைச்சதுக்கப்புறம் இன்னொரு உடம்புக்கு ஆளாப்பறந்தா எப்படிங்க.

சிவன் யாருக்காவது விதிவிலக்கு அளிச்சான்னு கேள்விப்பட்டிருக்கீங்களாங்க. விதி வாழ்க்கையில எப்படியெல்லாம் விளையாடுது பாருங்க. எனக்கு தவறு செய்ய வாய்ப்பு இல்லீங்க, அப்படினா சந்தர்ப்பம் கிடைக்கிறவன் தவறு செய்யலாம்னு அர்த்தமாங்க.

கடவுளே விரும்பினாலொழிய அவன் தரிசனம் பெற முடியாதுங்க. கத்தி கூப்பாடு போடுங்க அவன் இறங்கிவரானானு பார்ப்போம். நாங்க மட்டும் பாவப் பிறப்பாங்க. எல்லோருக்கும் முடிவு ஒண்ணு தானுங்களே. எரிச்சாலும், புதைச்சாலும் கடைசியிலே மண்ணுக்கு இரையாகத் தானே போறோம்.

கடவுளுக்கு பணத்தால அபிஷேகம் பண்றதுனால பாவக்கணக்கு தீர்ந்துபோயிடுமாங்க. வினைப் பயனை அனுபவிக்கத்தாங்க உடலெடுக்கிறோம். இயேசு, புத்தரெல்லாம் அன்பை தானே போதிச்சாங்க. இப்ப போய் மேடையேறி அகிம்சையை பிரசாரம் பண்ணினா பைத்தியம்னு சொல்ற கூட்டங்க இது. அதிகாரத்துல உள்ளவங்க வன்முறையைப் பயன்படுத்தி தங்களோட காரியத்தை சாதிச்சிக்கலைன்னு சொல்லுங்க பார்ப்போம். நாடு எங்கங்க போய்க்கிட்டு இருக்கு. மனுஷன் ஏங்க மனுசனா இருக்க மாட்டேங்கிறான். ஓங்குற அரிவாள கழுத்தில இறக்க எப்படிங்க மனசு வர்றது.

திருவள்ளுவலேர்ந்து எல்லோரும் சொல்லிட்டுத்தானே போயிருக்காங்க. நேத்தி இருந்தவன் இன்றில்லை. அழியப் போற உடம்பைச் சொந்தம் கொண்டாட சண்டை போட்டுக்காதீங்க. ராமன் ஏகபத்தினிவிரதன் அப்படிங்கிறதுனால தாங்க கோயில் கட்டி கும்பிடுறோம். ராமனை கும்பிட்டுட்டு இராவணனா ஏன் நடந்துக்கறீங்க. எத்தனை மகான்கள் இருந்த பூமிங்க இது. அவங்களை கும்பிடச் சொல்லித்தானுங்களே உங்களை வளர்த்தானுங்க.

பட்டினத்தார் பிறந்த இடத்தை தேடுதே பேதை மனம்
                     கறந்த இடத்தை நாடுதே கண்என்று ஏன் பாடிவச்சான்னு எண்ணிப் பாருங்கங்க. வாழ்க்கைங்கிறது கண்ணாடிப் பாத்திரம் மாதிரிங்க உடைச்சா ஒட்ட வைக்க முடியுமாங்க. வெறும் தோல் விவகாரத்தால வாழ்க்கையை இழந்துடாதீங்க. நான் பிச்சைக்காரன் தாங்க ஒரு விதத்துல நான் சக்கரவர்த்திங்க. உங்க வேலைவெட்டிக்கு நடுவுல என்னையத் தேடி கோயில் கோயிலா அலையாதீங்க. ‘உனக்கு நீயே ஒளியாய் இருன்னு புத்தர் தானுங்களே சொல்லிட்டு செத்துப் போனது. கோயில்ல உள்ளது சாமியா? கல்லான்னு அவரைக் கேளுங்க சொல்லுவாறு. நீங்க கத்துக்கிற மனநிலைல இருந்தா இந்தப் பிச்சைக்காரன்கிட்டக் கூட பாடம் படிக்கலாம்ங்க. இந்த வாழ்க்கைய நிஜம்னு நினைச்சி உடும்பாப் புடிச்சிக்காதீங்க. உங்க ஊருல சுடுகாடு இருக்குங்களா? சிதை எரியிறதை ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்துண்டு வாங்க போங்க!