Tuesday, March 20, 2018

கடவுள்


கடவுள் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. ஆதிசங்கரர் உலகம் மாயை என்றார். அஞ்ஞானத்திலிருந்து பார்க்கும் போது உலகம் மாயை தான். ஞானிகளின் கண்களுக்கு இந்த உலகம் பிரம்மம். நாம் இல்லாத போது உலகம் இருந்தது. நாம் இல்லாது போகும் பின்பும் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும். கடவுளை நம் உருவத்தில் பொருத்திப் பார்ப்பதே தவறு. எல்லைக்குட்பட்ட மனத்தினால் கடவுளை அறிய முடியுமா என்பதே கேள்விக்குறி.

கடவுளின் கருவியாகத்தான் மனிதன் செயல்படுகிறான். எந்தவொரு செயலைச் செய்வதற்கும் மனிதனுக்கு விருப்பார்வம் இருந்தால் தான் செய்ய முடியுமென்பதல்ல. அச்செயலைச் செய்வதற்கு கடவுள் பின்னாலிருந்து உந்தித் தள்ளுகிறார். கடவுளுக்கு பெயர் வைத்து நபராக்கிவிடுகிறோம். மனித உடலிலிருந்து கடவுள் செயல்படுவாரானால் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டுபோவார். கடலில் உயிர்வாழும் மீன்கள் கடலைப் பற்றி ஆராய்வது போலத்தான் நாம் உலகத்திலிருந்து கொண்டு கடவுளைப் பற்றி கேட்பது.

கடவுள் நீங்கள் எண்ணிக்கொண்டிப்பது போல ஒரு நபரல்ல. மனிதன் தோன்றிய காலத்திற்கு முன் அவர் இங்கே இருந்திருப்பார். அப்போது அவருக்கு என்ன உருவம் இருந்திருக்கும். கடவுளுக்கு அகந்தை கிடையாது அவருக்கு அந்நியமாய் யாரும் கிடையாது. கடவுள் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார். நெருப்பை வைத்து விளக்கையும் ஏற்றலாம் வீட்டையும் கொளுத்தலாம். அதற்கு நெருப்பு பொறுப்பேற்க முடியாது. காற்றையே உங்களால் சிறைப்படுத்த முடியாத போது கடவுளை பெயர் வைத்து உடலுக்குள் அவரை எப்படி சிறை வைக்க முடியும். இயேசு தன்னை இறைமகன் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் கடவுளுக்கும் தனக்குமிடையேயான ஒரு சுவரை உடைத்துவிட்டார். ஆனால் சாதாரண மனிதர்கள் ஆலயங்களுக்குச் சென்று வருவதோடு தனது கடமைகள் முடிந்துவிட்டாதக் கருதுகிறார்கள்.

கடவுளை வைத்து மனிதன் விளையாட்டுக் காட்டுகிறான். மக்களை அச்சப்பட வைத்து அடிமையாக்குகிறான். பிரச்சனைகளை நீங்களே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க கடவுளை அழைக்கிறீர்கள். கடவுள் ஒருபோதும் உங்களுக்கு முன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார் ஏனெனில் அவர் உயிர்த்தன்மை. கருவறையிலிருந்து வெளிவந்த எவரும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிச்சயமாகிறது. ஏனென்றால் உடலெடுத்தால் அகங்காரம் அங்கே எழுகிறது. உயிர்த்தன்மை உங்களைப் பற்றி கவலை கொள்ளாது. நீங்கள் இல்லாமல் போனாலும் அதன் இருப்பு இங்கே இருந்து கொண்டுதான் இருக்கும். யாருமே இல்லாத நிலையில் ஒருவன் தன்னை ஆண் என்று உணர்ந்து கொள்வது சாத்தியமில்லாதது.

முழுமை தன்னை எல்லைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ளாது. எல்லைக்கு உட்பட்டதானால் அது உயிர்த்தன்மையாக இருக்க முடியாது. இந்த மனம் தான் உலகக் காட்சிகளை கண்முன் விரியச் செய்கிறது. ஆன்மாவுக்கும் உயிர்த்தன்மைக்கும் இடையே மனம் தான் திரையாக மூடியிருக்கிறது. அழகு அசிங்கம் என்று கடவுள் பேதப்படுத்துவதில்லை. மனிதனே பிரித்து வைக்கிறான். நல்லது கெட்டது பற்றி முழுமை உங்களுக்கு பாடம் எடுக்காது. மனிதனின் உள்ளுணர்விற்கு உயிர்த்தன்மையின் ஒளி கொஞ்சம் படுகிறது.

முழுமை தீர்ப்பு வழங்காது தான். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் இந்தப் பூமியில் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆத்மாவுக்கு அழிவில்லை என்று சொல்லிக் கொண்டு உடலைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. உயிர்த்தன்மையின் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளும் மனிதன் கடவுளாகலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. கடவுள் மனிதனாய் இருந்தால் ஏதாவதொன்றை பயன்படுத்தி அவரை வசியம் செய்துவிட ஏதுவாகிறது. அவன் எல்லையில்லாதவன் எனும்போது உங்கள் சாமர்த்தியம் அவனிடம் எடுபடாது. பேராசைக் கொண்ட சமூகம் ஊழலைத் தான் பிரசவிக்கிறது.

ஒழுக்கமற்ற சமுதாயம் சடங்குகளுக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொள்கிறது. பாவகாரியங்களுக்கு பயந்து நடுங்காதீர்கள் என்பதே அதன் வேத வாக்காக உள்ளது. அன்பை நீங்கள் உங்கள் மனத்தில் விதைத்தால் முழுமை அதை மண்ணைப் பிளந்து கொண்டு வளர வழிவகை செய்யும். அருவருப்புமிக்க ஒன்றை நீங்கள் ஒதுக்கித்தள்ளும் போது, அழகு தன்னை உங்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்குகிறது. மனிதனாக இருக்க முயற்சி செய்யும் யாவரும் அன்புக்கும் வெறுப்புக்கும் மத்தியில் ஊசலாடித்தான் ஆகவேண்டும். அன்பின் நறுமணத்தை நீங்கள் முகர்ந்தால் கடவுளின் தரிசனம் தேவையிருக்காது. கடவுளின் கிரணங்கள் மூலம் உங்கள் இதயம் மலர்வதற்கு வாய்ப்பளியுங்கள். வாழ்க்கை இருண்ட இரவுதான் விடியல் சமீபமாய் இருக்கிறது முழுமை அதனை வெளிப்படுத்த உங்களிடம் வேண்டுவது சிரத்தையை மட்டுமே.

நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் தோன்றுவார் என்பது நம்பிக்கைதான். பாவிகளை நியாயந் தீர்க்க கடவுள் அவர்கள் முன் தோன்றததான் வேண்டுமா. நம் வாழ்க்கையின் அர்த்தம் ஏன் கடவுளை அடைதலாக இருக்கக் கூடாது. இறந்த பிறகு மதச்சடங்குகளின்படிதான் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே நீங்கள் கடவுளைக் காண முடியாது முடியாது. ஏனென்றால் மதம் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்க மாட்டார். மனிதன் பின்பற்றும் ஒவ்வொரு மதமும் கிணறுபோன்றது தான். கிணற்று நீரும் அடியாழத்தில் செல்லும் கடலுடையதே. இந்தக் கிணற்றுநீர் அடியாழத்தில் சென்று கடலை அடைகிறதல்லவா நீங்கள் அங்கு செல்ல வேண்டும். எவ்வளவு நாட்கள் அலையாய் இருப்பீர்கள் சலனமற்ற கடலாகிவிடுங்கள். கடலில் இருக்கும் போது நீங்கள் கடவுளைப் பற்றி கேள்வி எழுப்ப மாட்டீர்கள்.

No comments:

Post a Comment