Thursday, March 15, 2018

மாயை


கபிலவஸ்து நாட்டின் அருகாமையில் காட்டிலுள்ள ஒரு குடில் தன் மகன் ராஜ்யத்தின் மீது பற்று இல்லாமல் இருப்பதைக் கண்ட மன்னர் சுத்தோதனர் காட்டிலுள்ள துறவியிடம் சித்தார்த்தனை அனுப்பிவைத்தார்.

குருவின் முன்பு பத்மாசனத்தில் நன்றாக நிமிர்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தான் சித்தார்த்தன்.எதிரில் தியானத்தில் ஆழ்ந்திருந்த குரு கண்களைத் திறந்து சித்தார்த்தனை கருணையுடன் நோக்கினார்.தியானத்தில் மூழ்கியிருந்த போதே உணர்ந்திருந்தார் சித்தார்த்தனின் எண்ண ஓட்டத்தை .பல பிறவிகாய் உண்மையின் வாசல் வரை வந்த சித்தார்த்தன் இம்முறை மெய்யாகவே உள்ளே நுழைந்து விடுவானா? பிறவி ஆற்றுச் சுழலிலிருந்து தப்பிவிடுவானா? ஒவ்வொரு முறையும் இயற்கை அவனைப் பந்தாடியதே, சகதியில் காலை வாறிவிட்டு சிரித்தது; அழகிய பெண்ணைக் கொடுத்து கண்ணைப் பறித்தது; உறவுகளின் இறப்பில் அவன் அழுவதைப் பார்த்து பேய்ச் சிரிப்பு சிரித்தது.இவ்வுலகில் உன்னைப் போல எத்தனை பேரை பார்த்திருக்கிறேன் என்ற கர்வம் அதற்கு இறைவனுக்காக தவம் செய்யும் முனிவர்கள் கூட பெண்களின் அழகில் மதி மயங்கி காமப் பித்தனாக அலைவதைக் கண்டு எக்காளமிட்டது.மனிதனுக்கு காமம்,செல்வம்,உணவு,புகழ்,அதிகாரம் போன்ற விலங்கினைப் பூட்டி அருகில் அமிர்தத்தை வைத்தது.மனிதர்களின் ஆசை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டே சென்றது.குழந்தை பருவத்தில் தின்பண்டம், விளையாட்டின் மீது ஆசை, பருவ வயதில் பெண் மோகம், பெண் கிடைத்துவிட்டால் நிலம்,வீடு,வாகனம்,பொன் நகை இதிலும் திருப்தியடையாமல் புகழ், அதன் காரணமாக வரும் பதவி,அதிகாரம்.உயிர் அவனை விட்டுப் பிரியும் தறுவாயில் கூட மனம் இவற்றையே சுற்றிச் சுற்றி வரும்.இறைவன் என்றால் தன்னை விட பெரிய செல்வந்தன் என்ற நினைப்பே மனிதர்களுக்கு அவன் மன்னாதி மன்னன் இவன் தேச எல்லைகளைவிட அவன் தேச எல்லை மிகப் பெரியது என்ற நினைப்பு.

ஆனாலும் பலபிறவியாய் இதையே அனுபவித்து வந்த சில ஜீவாத்மாவுக்கு ஒரு கட்டத்தில் இச்சுகம் திகட்ட ஆரம்பிக்கிறது.பெண் மோகம் கடலலை போல் தணிகிறது பின்பு எழுகிறது.அந்தப்புரத்தில் பஞ்சு மெத்தையில் கட்டி உருளும் போது இருந்த வெறி காமம் தணிந்த பின் எங்கு சென்றது.எதிரே அதே பெண் மயக்கும் அங்கங்கள் சில நிமிட நேரத்திற்கு முன் போதையேற்றிய அவ்வுருவம் இப்போது அருகிலிருந்தும் வேறு பக்கமாய் படுக்கத் தோன்றுகிறதே.எந்த சுகத்தையும் தொடர்ந்து அனுபவித்துக கொண்டேயிருக்க முடியுமா? ஒரு நாள் முழுவதும் பெண்ணுடன் கட்டிப் புரள முடியுமா? ஒரு நாள் முழுவதும் உணவருந்திக் கொண்டேயிருக்க முடியுமா? ஒரு நாள் முழுவதும் உடையை உடுத்தி உடுத்திக் களைய முடியுமா? செய்த செயலையே திரும்பத் திரும்ப செய்கிறோம்.ஏன் அச்செயலை ஒழுங்காக செய்யவில்லை என்பதற்கா? நாம் இவ்வுலகில் அனுபவிப்பது எல்லாம் இன்பம் மட்டுமே. ஆனந்தம் ஆண்டவனுடையது.ஏனெனில் செய்ததை பற்றிய வருத்தம் அவனுக்கு கிடையாது; .நாளை என்ன நடக்குமோ என்ற பயம் அவனுக்கு இல்லை; இதையெல்லாம் மறக்க நிகழ்காலத்தில் பெண்களின் அருகிலும், மதுவிலும் இன்பம் காண வேண்டிய நிலைமை அவனுக்கு இல்லை.ஆனந்தம் அடைய முடியாததா? எல்லா ஜீவாத்மாவும் எதில் எதிலோ இன்பம் கண்டு அதன் வழியே நித்யானந்தத்தை அடைய முயற்சிக்கிறது.சிறு எறும்பு இமயமலை ஏறும் முயற்சி போல்; ஊர்ந்து செல்வதை விட்டு பறக்க முயற்சித்தால் ஒழிய அதனால் அடைய முடியாது.ஓணான் வானில் பறக்கும் கழுகைக் கண்டு தானும் பறக்க முயற்சித்து கீழே விழுந்தது, கழுகும் ஒரு நாள் இப்படித்தான் கீழே விழுந்திருக்கும் என ஓணான் நினைத்தது.இது சித்தார்த்தனுக்கும் பொருந்தும் தானே.

"சித்தார்த்தன் கண்ணைத் திறந்து என்னைப் பார்.நீ இளவரசன் உன் தந்தைக்கு பிறகு அரியணை ஏற வேண்டியவன்.அன்னை அக்கரையில் நின்று கொண்டிருக்கிறாள் அவளின் இரு மகன்கள் ஆற்றைக் கடந்து அக்கரைககுச் செல்ல வேண்டும்.ஒரு மகன் ஆற்றைக் கண்டு அஞ்சி விலகி வேறுவழியாக ஊரைச் சுற்றிக் கொண்டு அன்னையிடம் வருகிறான்.இன்னொரு மகன் இதோ வருகிறேன் அம்மா என்று ஆற்றின் நீர் மட்டம் எவ்வளவு என்று பார்க்காமல் ஆற்றில் குதித்து நீந்தி அன்னையிடம் வருகிறோன்.அன்னை நீந்திக் கடந்து வந்த மகனை அரவணைத்துக் கொள்கிறாள்.அன்னைக்கு இரு மகன்களின்பால் வேறுபாடு இல்லை.ஒருவன் வேறு வழியாகச் சுற்றிக் கொண்டு வந்தாலும் மனித நடமாட்டம் உள்ள பகுதியின் வழியாக எந்த இடையூறுமின்றி  பத்திரமாக தன்னை வந்தடைவான் என்று எண்ணுகிறாள்.ஆற்றில் இறங்கியவனுக்கு முதலைகளாலும்,வெள்ளத்தாலும்,பாம்புகளாலும் ஆபத்து ஏற்படலாம், எனவே லெளகீகம் எனும் ஆற்றைக் கடந்து வந்தவனுக்கே அன்னையின் அரவணைப்பு.ஊரைச் சுற்றுபவன் துறவி;ஆற்றில் நீந்துபவன் இல்லறத்தான்.சித்தார்த்தா நீ ஆற்றைக் கடந்து அன்னையை சென்றடைய வேண்டுமென்பது என் அவா! "


"குருவே உங்களிடம் தர்க்கம் செய்ய எனக்கு வயதில்லை, இருந்தாலும் என் மனம் விடைதேடும் சில கேள்விகள். மாதாவிடம் அறிந்து கொள்ள முடியாததை மனைவியிடம ஒருவன் எப்படி அறிந்து கொள்ள முடியும்? "

"சித்தார்த்தா மனைவியின் இளமை,அழகு இதிலெல்லாம் ஈடுபாடு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் முடிந்துவிடும்.இது மனைவியால் கிட்டும் அனுபவம்.இளைஞனே குடும்பத்தில் எப்போதும் மனைவியிடத்திலிருந்து இதமான வார்த்தைகளையே கேட்டுக் கொண்டிருக்க முடியாது.சில வேளைகளில் அவள் மனதைக் காயப்படுத்தும் சொற்களையும் வீசுவாள்.அவ்வேளையில் நீ அவளை மனைவியாகப் பார்க்காமல் உன்னுடைய மாதாவாகப் பார்க்க வேண்டும்.உனக்கு இராமகாதை தெரியுமல்லவா? கிருஷ்ணர் சொல்படி நடக்க வேண்டும்; இராமன் வாழ்க்கை வாழ வேண்டும்.இல்லறத்தை நல்லறமாக நடத்தியவன்,தந்தையின் சொல்படி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தான்.இதமை நீ நன்கு உணர வேண்டும்.உன் தந்தையின் விருப்பம் என்னவென்று உனக்குத் தெரியும் தானே? "
"தெரியும் குருவே.இப்போது நான் எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறேன்.திருமணம் முடிந்த பின் அப்பெண்ணின் சிரிப்பு,பேச்சு,இளமை இவையெல்லாம் என் மனதில் சலனத்தை ஏற்படுத்தாதா? அலைகளற்ற தூய குளத்தில் கல் விழுந்தது போலாகாதா? அவள் வேறொரு ஆடவரோடு பேசிச் சிரித்தால் என் மனதில் சந்தேகம் தோன்றுமல்லவா, நீங்கள் கூறிய இராமகாதையில் இராமச்சந்திரமூர்த்தி கூறியதை உங்களுக்கு இக்கணத்தில நினைவூட்ட விரும்புகிறேன். "

"இராவணனிடமிருந்து சீதையை மீட்டு வந்த இராமன் தன்னைத் தழுவ வந்த சீதையை தடுத்தி நிறுத்தி உனக்கு அத்தகுதி உளதோ?உன்னை லெட்சுமணன் காவலில் விட்டுச் சென்றேன்.பர்ணசாலையை விட்டு வெளியேறாதே என்று லெட்சுமணன் போட்ட கோட்டை தாண்டிவிட்டாய் அல்லவா?என் சொல்லை மீற உன் மனது விழைந்து விட்டதல்லவா?இப்போது என் மனம் உன்னை சோதித்தறிய விரும்புகிறது பெண்களை மனதாலும் தீண்டாத இந்த ராமச்சந்திரமூர்த்திக்கு தன்மனைவியை அக்னி பிரவேசம் செய்யச் சொல்ல தகுதி உண்டல்லவா?என்ன தான் நம் தோட்டத்தில் பூத்த மலரென்றாலும் அழகாயிருக்கிறது என்பதற்காக சேற்றில் விழுந்த பூவை சூடிக்கொள்ள முடியுமா? இந்த ஸ்ரீராமனை உலகம் பிரளயத்தில் அழியும் வரை அவதார புருஷன் என மக்கள் கொண்டாடுகின்ற காலம் வரும்போது,என் மனைவியாகிய உன்னை தர்மபத்தினி என யுகம் தோறும் மக்கள் துதிக்கவேண்டுமல்லவா?இராவணன் சீதையை சிறையெடுத்தான் இராமன் மீட்டு வந்தான் என்பது ஏதோ தன் நாட்டை தன்னிடமிருந்து கைப்பற்றியவளை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்று தன் நாட்டை தன் வசமாக்கிக் கொள்வது போலல்ல.இராவணன் ஆசைப்பட வைத்தது உன் மேனி அழகல்லவா அந்நிய ஆடவனை ஆசைப்பட வைத்த அம்மேனியை தீக்கிரையாக்கு, உத்தமியானாள் பெறுவாய் புது எழிலை எழுவாய் அக்னியிலிருந்து,அயோத்தி நாட்டின் சிம்மாசனத்தில் என் அருகில் அமர்வாய் என்று உரைத்தான் - இப்படி அதிகமாக பெண்ணைப் பற்றி உருகியும் பின்பு அதே வாயால் அவளையே ஏசவும் செய்யும் நிலை எனக்கு வரவேண்டுமா குருவா? "

துறவி கண்களை மூடி நீண்ட மெளனத்திற்குப் பிறகு வாய் திறந்தார். "குமாரனே மகாபாரதத்தில் ஒரு சிறு நிகழ்வு.கெளரவர்களில் மூத்தவன் துரியோதனனின் மனைவி தன் கணவனின் நண்பனான கர்ணனுடன் பரமபதம் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.ஆட்டத்தை முடிக்காமல் பாதியில் எழுந்து சென்ற அவளின் கைகளைப் பிடித்து இழுக்க முயன்ற கர்ணனின் கைபட்டு அவள் கழுத்தில் அணிந்துள்ள முத்துமாலை அறுந்து விழுந்தது இதனை அப்போது ஏதேச்சையாக அங்கு வந்த துரியோதனன் பார்த்தான்.சற்றும் சந்தேகம் கொண்டு முகம் கோணாமல் அவனிடமிருந்து வந்த வார்த்தைகள் எடுக்கவோ கோர்க்கவோ என்பது".

"இதிகாச புராணங்களில் நாயகர்களின் நாவிலிருந்து வந்த தீஞ்சொற்களை பார்க்கும் நீ.கொடியவர்களின் நாவிலிருந்து வரும் நன் சொற்களையும் பார்க்க வேண்டும்.கோகுலத்தில் சீதை, அயோத்தியில் கிருஷ்ணனும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.களங்கமற்ற சந்திரனைப் போன்ற உன் குணத்திற்கேற்ற நல்ல குணவதி மனைவியாய் அமைவாள்.இந்த ஏழைத்துறைவியின் வேண்டுகோளை ஏற்கும்படி இறைஞ்சிகிறேன்".

குருவிடம் விடைபெற்றுக் கொண்டு அரண்மனை திரும்பினான் சித்தார்ததன்.தேரோட்டியிடம் மன்னரிடம் கொடுக்குமாறு ஓலை ஒன்றை கொடுத்திருந்தார் துறவி.அதனைப் பிரித்துப் படித்தார் மன்னர் அவ்வோலையில்
    சித்தார்த்தன் முடிசூடிக்கொண்டால் கபிலவஸ்து நாட்டை மட்டும் ஆள்வான்.இல்லையேல் உலகை ஆள்வான்.மற்றதேச இராஜகுமாரர்களைப் போன்று உன் மகன் இல்லையே என்ற கவலை வேண்டாம்.வானில் நட்சத்திரங்கள் தான் அதிகம் ஆனால் சூரியன் ஒன்றே ஒன்று தான் என்று எழுதியிருந்தது.

அரண்மனை திரும்பிய சித்தார்த்தன் தந்தையிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.தந்தை சுத்தோதனர் எண்ணிய வண்ணமே வெகு விமரிசையாக நடந்த திருமணத்தில் அரசிளங்குமரி யசோதரை சித்தார்த்தனின் மனைவியனாள்.இல்லறம் இனிதே நடந்தது.சில வருடங்களில் ராகுலன் என்ற மகன் பிறந்தான்.

அன்று விசாகம் சித்தார்த்தனின் இருபத்தொன்பதாவது பிறந்த தினம் .உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த சுந்தோதனருக்கு ஜோதிடர் கூறியது நினைவுக்கு வந்தது.உன் மகன் தன்னுடைய இருபததொன்பதாம் வயதில் துறவு பூணுவான் என்றல்லவா கணித்துச் சொன்னார்.

இன்று வரை சித்தார்த்தனின் கண்கள் வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் பிணி.மூப்பு,சாக்காடு இவைகளை பார்த்தறியாதவாறு செய்தாகிவிட்டது.அவன் உல்லாசப் பூங்கா வரை தேரில் உலவச் சென்றாலும் அவன் போகும் வழியில் வாழ்வின் அநித்யத்தையும்,துயரத்தையும்,முதுமையையும் வெளிப்படுத்தும் மக்கள் யாரும் எதிர்படா வண்ணம் வீரர்கள் காவல் காக்கும் பாதை வழியாகவே தேரோட்டியை தேரைச் செலுத்த கட்டளைப் பிறப்பிக்கப்பட்டு,அது இன்று வரை நிறைவேற்றப்பட்டும் வருகிறது.துன்பத்தின் நிழல் கூட அவன் மீது படாதவண்ணம் இந்நிமிடம் வரை காப்பாற்றி வந்ததில் சிறிது மனத்திருப்தி ஏற்பட்டது சுத்தோதனருக்கு.

சுத்தோதனர் மகனை அழைத்தார். "இன்று உன் பிறந்த தினம்;நாடே விழாக்கோலம் பூண்டிருக்கும் நீ தேரில் உல்லாச பூங்கா வரைச் சென்று மக்களின் கொண்டாட்டங்களை கண்டு வா" என்றார்.

சித்தார்த்தர் தேரில் ஏறி அமர்ந்தார் "போகலாமா இளவரசே" என்று தேரோட்டி அனுமதி கேட்டான்.குரல் விண்ணிலிருந்து வருவதைப் போலிருந்ததை உணர்ந்த இளவரசர் "சன்னா" என்று அழைத்தார்.தேரோட்டி திரும்பி இளவரசரை பார்த்தான்;தம் தேரோட்டியான சன்னா தான் என்று தெரிந்தது, அவனுடைய முகத்தில் வேறென்றும் இல்லாத அளவுக்கு ஒளிவீசியது;அவனின் இரு கண்கள் சித்தார்த்தனின் உள்ளே ஊடுருவியது "சரி போகலாம்" என்று இளவரசரின் வாய் உரைத்தது.

தேரோட்டி சன்னா அன்றைய தினம் அரண்மனைக்கு உடல்நலக்குறைவால் வர இயலவில்லை.இளவரசரின் தேரைச் செலுத்த வந்தமர்ந்தவர் சன்னாவின் உருவத்திலிருந்த துறவி.அவர்களின் தேர் வீரர்கள் காவலிருக்கும் வழியில் செல்லாமல் மக்கள் நடமாட்டம் மிகுந்த வேறு வழியில் நுழைந்தது.

தேர் சென்று கொண்டிருந்த பாதையில் இருந்த மரத்தை சுட்டிக்காட்டி "மர நிழலில் ஒருவன் போர்வையை போத்திக்கொண்டு படுத்திருக்கின்றானே இவனுக்கு என்ன நேர்ந்தது?உடல் நடுங்கிக் கொண்டுயிருக்கிறதே அவனுக்கு என்னவாயிற்று?" என்றான் தேரோட்டியிடம் சித்தார்த்தன்.

"பிரபோ அவன் ஒரு நோயாளி ஆரோக்கியமாக மனிதன் இருக்கும் போது உடல் காற்றில் இலை பறப்பது போல் இலகுவாக இருக்கும்;நோய் தாக்கிவிட்டால் நத்தை கூட்டினைச் சுமந்து கொண்டு நகர்ந்து செல்கிறதே அது போல உடல் ஒரு சுமையாகிவிடும்.பசு தின்னப்பட்ட வைக்கோலை வாய்க்கு திரும்பிக் கொண்டு வந்து அசைபோடுவதைப போல் பின்னோக்கிய நினைவுகளோடேயே ஒரு நொடியினை யுகமாய் கழிக்க வேண்டியிருக்கும்.பிறந்துவிட்டாலே
பிணிங்கிறது இயற்கை தானே இளவரசே, அதை யாரால் தடுக்க முடியும்.அசுரனைப் போல் திடகாத்தரமாய் இருப்பவனையே நோய் சில வருடங்களில் எலும்பாய் உருக்கிவிடுகிறதே" எனறு பதிலுரைத்தார் தேரோட்டி வடிவிலிருந்த குரு.

சிறிய தூரம் சென்ற பிறகு கையில் கோல் ஊன்றி முடி நரைத்து தோலில் சுருக்கங்களுடன் கூனிக்குறுகி நடந்து வரும் முதியவரைக் காட்டி "இது என்ன வேடம்?கூத்திலிருந்து அரிதாரத்தை கலைக்காமல் சென்று கொண்டுயிருக்கின்றானா?நல்ல வேடிக்கையாக இருக்கிறதே! "என்றார் சித்தார்த்தர்.

"பிரபோ அவன் ஒரு வயோதிகன் வயது தொண்ணூறுக்கு மேல் இருக்கும் மரத்தில் பூ காயாகி கனியாவதில்லையா? காயாயிருக்கும் போது அதன் இயல்பு புளிப்பு;கனியானால் இனிப்பு.அதன்படி மனித உடல் குழந்தையாயிருக்கும் போது இலவம் பஞ்சு போல் மென்மையாக இருக்கும்;பருவ வயதில் நரம்புகள் புடைக்க முறுக்கேறி இருக்கும்;முதிய வயதில் தோல்கள் சுருங்கி தலைமுடி நரைத்து உடல் தளர்ந்து கூன் விழுந்து மரத்திலிருந்து காய்ந்த இலை எப்போது உதிருமென்று சொல்ல முடியுமா இளவரசே" என்றான் தேரோட்டி.

பூங்காவை நெருங்கும் வேளையில் ஒரு பிணத்தை நால்வர் சுமக்க.உறவினர்கள் கதறி அழ மயானம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது அக்காட்சியைக் சித்தார்த்தர் "அவனை ஏன் நான்கு பேர் சுமந்து செல்கிறார்கள்?அதன் அருகில் இவ்வளவு ஜனங்கள் அழுது அரற்றிக் கொண்டிருக்கின்றார்களே, அவள் ஏன் காதில் வாங்காமல் காலை நீட்டி படுத்துக் கொண்டிருக்கின்றான்? " என்ற இளவரசரின் கேள்விக்கு தேரோட்டி விடை கூறத் தொடங்கினான்.

"பிரபோ தோன்றுவதெல்லாம் ஒரு நாள் அழியத்தானே வேண்டும் - எத்தனையோ சக்கரவர்த்திகள், தேவலோகப் பெண்களைப் போன்ற அழகிகள், ஞானிகள் எல்லோரும் இறுதியில் மண்ணாய்த்தானே போனோர்கள்.ஏழை,பணக்காரன்,உயர்ந்த குலம்,தாழ்ந்த குலம்,விவசாயி,போர் வீரன்,மன்னன்,சந்நியாசி என சமூக அந்தஸ்து பேதம் வைத்த இறைவன் மரணத்தை மட்டும் அனைவருக்கும் பொதுவில் அல்லவா வைத்துவிட்டான்.ஊரில் பல பேர்கள் எத்தனையோ மரணமடைந்தரவர்களின் வீடுகளுக்கு சென்று வந்தாலும் தாங்களும் இறந்துவிடுவோம் என்ற உறுத்தலே இல்லாமல் செருக்குடன் நடமாடுகிறார்களல்லவா இளவரசே" என்று சொல்லிக் கொண்டே

மயக்கம் தானோ மாயைதானோ
பார்க்கின்ற எல்லோரும்
மாயமாய் மறைகிறார்கள்
சென்றதடம் எதுவுமில்லை
அப்பா என்றும் அம்மா என்றும்
எவ்வளவு தான் கத்தினாலும்
விட்டகன்ற மூச்சி தான்
விரைந்து உடல் திரும்புமோ
என்று பாடத்துவங்கினான் தேரோட்டி

"சன்னா, மனைவி, மக்கள், தாய், தந்தை இருந்தும் இப்போது நான் யாருமற்ற வனத்தில் தனிமையாய் இருப்பதைப் போன்று உணர்கிறேன்;உடனே தேரை அரண்மணைக்குத் திருப்பு" என்றார் இளவரசர்.

"ஒருவர் வலியை மற்றொருவர் உணரமுடியாதவரை எவ்வளவு உறவிருந்தாலும் இவ்வுலகத்தில் எல்லோரும் தனிமையானவர்கள் தான் இளவரசே மனம் அமைதி அடையுங்கள்" என்றான் தேரோட்டி.

அரண்மனை திரும்பிய சித்தார்ததர் மனக் குழப்பத்தோடேயே இரவு உறங்கச் சென்றார்.நித்திரையில் கழுகாய் வானில் பறப்பது போல் கனவு திடீரென கண்விழித்த சித்தார்த்தரருக்கு மூளையில் ஒரு மின்னலடித்தது.நான் நான் கழுகாய் பறப்பதாக கனவு காண்கிறேனா?இல்லை அக்கழுகு அரசகுமாரனாய் இருப்பதைப் போல் கனவு காண்கிறதா?எது உண்மை?மனம் தான் கழுகாகவும், மனிதனாகவும் தனக்கு உடல் இருப்பதைப் போல் கற்பனை செய்கிறதா? கழுகு வானில் பறக்கும் போதும் அதன் இருகண்கள் மட்டும் தரையில் உள்ள அதன் இரையிலேயே பதிந்திருக்கிறதே எந்த வினாடியும் அந்த இரையின் மீது பாய்ந்து கவ்வி அவ்வுயிரைக் குரூரமாக்கி புசித்துவிடும் வேட்கை அதற்கு.அது போல மனிதமனம் ஆசையினால் விளையும் இன்பத்தை நோக்கி எந்தக் கணமும் பாய்ந்துவிட தயாராக இருக்கிறதே;இந்த உண்மையறியா உறக்கத்திலிருந்து எப்போது விழிததெழுவது.

கூண்டுக்குள் இருக்கும் கிளி ஜோசியக்காரன் கொடுக்கும் இரு அரிசிக்கு சுவடி எடுத்துக் கொடுத்துவிட்டு உள்ளே திரும்பவும் செல்வதைப் போல், உலகம் எனும் சிறையில் பெண்,பொன்,புகழ் என்ற ஆசையினால் சிறைக்கு வெளியே செல்லும் பாதையை மறந்து உலகமாயையில் சிக்கி துன்பம்,இன்பம் என மாறி மாறி எதிர்ப்படும் நெடும்பாதையில் அச்சாணி இல்லாத தேரை எவ்வளவு நாள் செலுத்துவது என்று வாழ்க்கையின் உண்மையான அர்த்தததைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலானார்.

கட்டிலை விட்டு எழுந்து மனைவி மற்றும் மகனை கண் இமைக்காமல் பார்த்தார்.கண்ணாடி முன் சென்று தன் அரசகுல அணிகலன்களை ஒவ்வொன்றாக கலைந்தார்;வாளால் தன் சிகையினை வெட்டியெறிந்தார்.ராஜகுமாரனாக அவரைக் காட்டிய நிலைக் கண்ணாடியிலிருந்து அத்தோற்றம் மறைந்து இப்போது சந்நியாசக் கோலத்தை பிரதிபலித்தது.

நாடே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது;சித்தார்த்தர் விழிப்புணர்பு பெற்றுவிட்டதை அறியாமல்.வெளிப்புற வாயிலை வீரர்கள் காவலிருப்பதை அறிந்து வேறொரு வாயில் வழியாக அரண்மணையைவிட்டு வெளியேறினார்.சித்தார்த்தர் ஞானம் அடைந்து புத்தராய் மலர்ந்த அரச மரத்தடி அவரின் வருகைக்காக காத்திருந்தது.இலக்கற்ற பயணத்தில் நிலவொளியில் அவரின் மேனி மீது விழுந்த அரண்மணையின் நிழலை சித்தார்த்தரின் திருப்பாதங்கள் கடந்து சென்றன சூன்யத்திலிருந்து வந்தவன் திரும்புவும் சூன்யத்துக்குள் நுழையும் வரை இவ்வுடலைத் தாங்கி உலக மக்களின் துன்பங்களுக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிவேன் என எண்ணிக்கொண்டடே இருளில் மறைந்தார்.

No comments:

Post a Comment