Monday, October 14, 2019

பிச்சை


மணி ஒன்பது. அழகேசன் சட்டையை மாட்டிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான். தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு தண்ணீர் பிடிக்கச் சென்ற சுசீலா குடத்துடன் ஓடி வந்தாள். குழந்தையின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அழகேசனிடம் “ஏங்க குழந்தைக்கு இன்னும் ஜூரம் குறையல. கைவைத்தியமும் செஞ்சு பார்த்தாச்சி. நேரத்தோட யார்கிட்டயாவது ஐநூறு ரூபாய் வாங்கிட்டு வந்தீங்கன்னா டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டிடலாம்” என்று சொல்லிவிட்டு அழகேசன் முகத்தையே பார்த்தபடி நின்றாய் சுசீலா.

அழகேசன் சட்டைப் பையை தொட்டுப் பார்த்துக் கொண்டான் அதில் பத்து ரூபாய் தான் இருந்தது  தேதி இருபது தான் ஆகியிருந்தது. ஒன்னாம் தேதி வர்ற வருமானத்துக்கு எல்லாத் தேதியிலும் செலவிருந்தது. சுவற்றில் மாட்டியிருந்த முருகன் படத்தைப் பார்த்துக் கொண்டே “கேட்டுப் பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அழகேசனை சொந்தங்கள் சீந்துவதில்லை. அவன் என்ன கோடீஸ்வரனா, என்னப்பா என்னைத் தெரியலையா நான் தான் அவரோட சம்மந்தி இவரோட கொழுந்தன் என்று ஒரு கூட்டம் கையேந்தி நிற்க. சர்க்கரை இருந்தால் தானே எறும்புகள் மொய்க்க வரும். பிச்சைக்காரனிடம் குசலம் விசாரிக்க வந்தால் சில்லறை போட வேண்டுமே என சொந்தங்கள் அவன் இருக்கும் பக்கமே தலை காட்டுவதில்லை. உலகப் பணக்காரர்கள் வரிசையில் நான்கைந்து இந்தியர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் ஏழ்மை மிகுந்த நாட்டில்.

அழகேசன் சைக்கிளை வாத்தியார் வீட்டின் முன்பு நிறுத்தினான். காலிங் பெல்லை அழுத்திவிட்டு முருகா என்று சொல்லிக் கொண்டான். கோவணத்துடன் மலை ஏறிய சாமி இவன் கூப்பிட்டா மட்டும் வந்துவிடப் போகிறதா என்ன. கதவைத் திறந்த வீட்டுக்கார அம்மாவிடம் “சார் இருக்காங்களா பார்க்கணும்” என்று சொன்னான். அந்தம்மா ஏற இறங்க பார்ததுவிட்டு “நீங்க யாரு” என்றாள். “ராமு பிரஸ்ல வேலை செய்யற அழகேசன்னு சொல்லுங்க வாத்தியாருக்கு தெரியும்” என்றான்.

உள்ளே சென்ற அவள் தன் கணவனிடம் “இந்த மாதிரி ஆளுங்ககிட்டயெல்லாம் எதுக்கு சிநேகிதம் வச்சிக்கிறீங்க இப்ப பாருங்க காலைலங்காட்டியும் வீட்டு வாசல்ல ஏதோ கொடுத்ததை கேக்கற மாதிரி வந்து நிக்கிறான் பாருங்க, ஏதாச்சும் சொல்லி அனுப்புங்க போங்க வெள்ளிக்கிழமை அதுவுமா” என்று வாத்தியாரிடம் அவள் முணுமுணுத்தது அழகேசன் காதில் விழுந்தது.

சட்டையை மாட்டிக் கொண்டு பட்டனைப் போட்டபடி வெளியேவந்த பொன்னுதுரை வாத்தியார் “என்ன அழகேசா சொல்லு பள்ளிக் கூடத்துக்கு நேரம் ஆவுது” என்றார். “பாப்பாவுக்கு மூணுநாளா காய்ச்சல் நிக்கவே இல்லை. கைவைத்தியமும் பண்ணிப் பார்த்தாச்சி பிரயோஜனப்படலை. சுசீலா டாக்டர்கிட்ட காட்டிடலாம் யார்கிட்டயாவது ஐநூறு ரூபாய் வாங்கிட்டு வாங்கண்ணா அதான்” என்றான் அழகேசன் எச்சிலை மென்று விழுங்கியபடி.

“அழகேசா எனக்கும் குடும்பம் குட்டியெல்லாம் இருக்கு. அதுக்கு நல்லது கெட்டதுக்கு நான் தான் செலவு செய்யணும்.  கொழுந்தியாளுக்கு திடீர்ன்னு கல்யாணம் நிச்சயம் ஆயிடிச்சி உதவி பண்ணுங்கன்னு மாமனார் வந்து நிக்கிறாரு கால்ல விழாத குறைதான் என்ன, கஷ்ட நஷ்டத்தில பங்கெடுத்துக்கிறது தானே சொந்தம் செய்ய முடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்ல முடியுமா சொல்லு, இருக்கிறதையெல்லாம் புரட்டி ஒரு நாலு லட்சம் கொடுத்தேன். அக்காவை கட்டினவன் கையை விரிச்சிட்டான்னு நாளைக்கு நாலு பேர் நாக்கு மேல பல்ல போட்டு பேசிடக் கூடாதுல்ல. நேத்து பாரு பள்ளிக்கூடம் விட்டு வர்ற வழியில ஒரு நாயி பைக்ல மோதிட்டு நிக்காம போயிட்டான். கருமாரி தயவுல எனக்கு அடி ஒண்ணும் இல்ல. ஆனா வண்டி செலவு வச்சிடிச்சி அதுக்கே காசில்லாம நான் மணிவாத்தியார்கிட்ட கேட்கலாம்ன்னு கிளம்பிட்டு இருக்கேன் நீ வந்து நிக்கற, நான் என்ன பண்றது சொல்லு” என்றார். குழந்தை வீல்லென்று அழும் சத்தம் அழகேசனுக்கு கேட்டபடி இருந்தது அவன் மனம் குமைந்தபடி “சரிங்கய்யா நான் வேற இடத்துல விசாரிச்சிக்கறேன்” என்று சொல்லிவிட்டு தன்னை நொந்தபடியே சைக்கிளை எடுத்தான் அழகேசன்.

சைக்கிளை நிழலில் போட்டுவிட்டு பிரஸ்ஸூக்குள் நுழைந்தான் அழகேசன். முதலாளி கார்மேகம் ஊதுபத்தியை சாமி படங்களுக்கு காட்டியபடி “அழகேசா ஆயிரம் நோட்டீஸ் அர்ஜெண்டா மதியம் கொடுத்தாகணும் ஓட்டிடு” என்றார். தயங்கியபடியே நின்ற அவனைப் பார்த்து “என்ன பஞ்சப்பாட்டு பாடப் போறியா ஐநூறா, ஆயிரமா ஏற்கனவே நீ வாங்கினதுக்கு நான் உனக்கு சம்பளமே தரப்படாது. போனா போவட்டும் குடும்பஸ்தன்னு கொடுக்கறேன். தரேங்ககிறதுனால அப்பப்ப கை நீட்டுனா என்ன அர்த்தம். இந்த ராமு பிரஸ்ஸை விட்டு வெளியில போய் வேலை பார்த்தா தெரியும் இந்த கார்மேகத்தோட அருமை என்னன்னு. உனக்கு சுகம் கொடுத்தவளுக்கு என்னை சோறு போட சொல்லிறியே உனக்கு வெக்கமா இல்ல” என்று வெடித்தார் முதலாளி கார்மேகம்.

அழகேசன் கோபத்தை அடக்கிக் கொண்டான் இயலாமையினால் அவன் கண்களில் நீர் கோர்த்தது. சட்டையை கழட்டி ஸ்டான்டில் மாட்டிவிட்டு மெஷினை ஓட்டச் சென்றான். எங்கு பார்த்தாலும் குழந்தை வித்யாவே அவன் கண்முன் நின்றாள். வித்யா கடவுள் எனக்கு போட்ட பிச்சை அவள் சிரிப்பில் தான் என்னால் கஷ்டங்களை மறக்க முடியுது அவ இல்லைனா நான் இல்ல முருகா முருகா என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மதியம் மெஸ்லேர்ந்து வந்த சாப்பாட்டு பார்சலை பிரிக்காமல் சுசீலாவுக்கு கொடுக்கலாம் என்று எடுத்துக் கொண்டு, “ முதலாளி குழந்தைக்கு சுகமில்லை அரைநாள் லீவு வேணும்” என்றான். “மூணு ஆர்டர் வந்திருக்கு டைப் பண்ணி முடிச்சாச்சி நாளைக்கு நைட் இங்கேயே இருந்து நீ தான் ஓட்டித்தரணும் போ” என்றார் முணுமுணுத்தபடி.

சைக்கிளை தள்ளிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான் அழகேசன். தான் வக்கத்து போய்விட்டதை எண்ணி வருந்தினான். கடைத்தெருவில் தாயின் இடுப்பில் அமர்ந்தபடி செல்லும் குழந்தையெல்லாம் அவனுக்கு வித்யாவைப் போலவே தெரிந்தன. தன்னையே விற்றால் கூட என்னை நம்பி யாரும் ஐநூறு ரூபாய் கொடுக்க மாட்டார்களே கடவுளே என்று தலையில் அடித்துக் கொண்டான். சுசீலா காலையில் சொல்லி அனுப்பியது அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. தன்னிலை மறந்து சென்று கொண்டிருந்தவனை பிரபோ, பிரபோ என்று சொல்லிக் கொண்டே யாரோ பின் தொடர்வதைப் போலிருந்தது. அழகேசன் திரும்பிப் பார்த்தான்.

கருத்த நிறமும் மெலிந்த தேகமும் வெண்தாடியும் உடலெல்லாம் திருநீற்றுப் பட்டையும் கொண்ட அந்த பிச்சைக்காரன் கைநீட்டியபடியே அழகேசன் முன் நின்றான். போடுவதற்கு சில்லறை இல்லை பத்து ரூபாயை போடுவதற்கு அழகேசனுக்கு மனம் வரவில்லை. சைக்கிளை தள்ளிக் கொண்டு நகர முயன்ற அழகேசனைப் பார்த்து அந்தப் பிச்சைக்காரன் “ஆண்டி ஆண்டியாத்தான் அலைய வைப்பான் பிச்சைக்காரனுக்கு எதுக்கு சைக்கிள்ங்கறேன், அவன் கொடுத்ததை காப்பாத்திக்க, அவன் கொடுத்ததை காப்பாத்திக்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான் அந்தப் பிச்சைக்காரன்.

உடம்பெல்லாம் வியர்த்திருந்தது அழகேசனுக்கு. சைக்கிளை வேகமாக மிதித்தபடி மூர்த்தி சைக்கிள் கடையில் போய் நின்றான். “இந்த சைக்கிளை வச்சிகிட்டு எவ்வளவு கொடுப்பீங்க எனக்கு அவசரமா ஐநூறு ரூபாய் தேவைப்படுது” என்றான். கடைக்காரர் உள்ளே சென்று கல்லாப்பெட்டியிலிருந்து 600 ரூபாய் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.

தனது உதிரத்தைக் காப்பாற்றிக் கொள்ள தனது வீட்டை நோக்கி ஓடினான் அழகேசன். நாடே கம்பெனி ஆகிவிட்ட போதிலும் ஏழைகளின் வாழ்வு இப்படித்தான் உள்ளது எங்கள் இந்தியாவில்.

Wednesday, October 9, 2019

நந்தி


அளவில் சிறிய கோவில் தான் சிலசமயம் அர்ச்சகரையும், கைலாசநாதரையும் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். சிறிய பிரகாரம், நவகிரக சந்நதி, பைரவர் எல்லாம் உண்டு. அம்மன் பெரியநாயகி, லோகத்துக்கும் அவள் தான் பெரியநாயகி. நாயகன் யாரென்று என் வாயால் சொல்ல வேண்டுமா? கோயிலுக்கென்று நுழைவு வாயில் இடது பக்கத்தில் சிறிய தோட்டம் உண்டு. சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய வரும்படி  எதுவுமில்லை. கிழக்கு நோக்கியிருக்கும் வாயிலில் பாமிணி ஆறு ஓடுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் வாயிலில் தான் வெகுஜனம் புழங்குகிறது. சிவனுக்கு ஏன் சொத்து நாலுமுழ வேஷ்டி போதாதா? போதும் போதும் ஆனால் அர்ச்சகருக்கு, அவருக்கு குடும்பத்தைக் காவந்து பண்ணும் பொறுப்பிருக்கிறதே. ஏதோ ஒருவேளை நமசிவாய என்று சொல்லி ஈரத் துணியை வயிற்றில் கட்டிக் கொள்ளலாம். வேளா வேளைக்கு ஆகாரத்துக்கு மனம் அலைபாயாதா? ஏதோ பிரதோஷம், தேய்பிறை அஷ்டமின்னா தட்டுல அஞ்சோ பத்தோ விழும் மத்த நாள்ல. நாலு காலத்தையும் முணுமுணுக்காமல் மாசானம் தான் பண்ணி வைக்கிறார். அவர் போஜனத்துக்கு ஊர்ல யார்கிட்ட போய் கையேந்துவார் சொல்லுங்க.

மன்னார்குடியில் வசிக்கும் கைலாசநாதரையே ஊர்மக்களுக்கு தெரியாமல் போகும் போது ஜெயராமனையா தெரியப் போகிறது. எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு கதை தானே. ஜெயராமன் வாழ்க்கையைப் பத்தி இங்கு அதிகமாக பிரஸ்தாபிக்கப் போவதில்லை. அவர் தொழில் பேருந்து நிலையத்தில் சுண்டல், வேர்க்கடலை விற்பது. இப்போதுமா என்று நீங்கள் கேட்டால் நான் என்ன சொல்வது. யார் வாழ்க்கையில் தான் சிவன் விளையாடவில்லை. ஜெயராமன் தற்போது கோயில் பூந்தோட்டத்தைப் பராமரிப்பதும் பூஜை வேளையில் மணியடிக்கும் வேளையும்தான் செய்து வருகிறார். வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேரா சிவனைப் பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் நம்புவீர்களா? பார்த்திருப்பாரோ என நமக்கும் சந்தேகம் வரத்தான் செய்கிறது. ஏன்னா குடும்பத்தையும், சொந்த பந்தத்தையும் உதறிவிட்டு இங்கு வந்து ஏன் சம்போ மகாதேவான்ட்டு உட்காரணும். அர்ச்சகருக்கும் ஜெயராமனுக்கும் ஏழாம் பொருத்தம். கோயிலே கதின்னு கிடக்கிற என்னைய உட்டுபுட்டு மனக்கோயில் கட்டுன பூசலார் மாதிரி அவருக்கு ஈசன் தரிசனம் தந்துட்டான்னோன்னு மனசுல ஒரு முள் தைச்சிருச்சி. இந்த முள்ளை பிடுங்கி தூர எறிஞ்சிட்டுப் போக அர்ச்சகருக்கு மனசில்லை.

இந்த ராகவனை எந்த லிஸ்ட்டில் சேர்க்கறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கீங்க. இவன் வயசுல்ல இளவட்டப் பசங்க எல்லாம் என்னத்த தேடறாங்க? சாக்கடையில விழுந்துட்டு நாரக் கூடாதுன்னா எப்படிங்க? உலகம் எங்கங்க போயிட்டு இருக்குது. கூட்டிக் கொடுத்தவன் காசில நாமளும் பங்கு கேட்டா கேவலம் இல்லீங்களா? இந்த வயசுல ரமணரை பிடிச்சிப் போச்சின்னா வாழ்க்கை சர்க்கரையாவாங்க இனிக்கும். எல்லாத்துக்கும் துணிஞ்சவனாலதான் வாழ்க்கையில கொடி நாட்ட முடியுது. நான் நல்லவன்னு சொல்லிகிட்டு நின்னா அரசாங்க ஆபீஸ்ல காரியம் ஆவுமாங்க. துட்டுக்கு தானேங்க மகுடிப்பாம்பா மயங்கறாங்க. மனுசப் பொம்மைகளுக்கு யாருங்க கீ கொடுத்து உட்டுருக்கிறது. ஒருத்தன் தங்கத்தட்டுல சாப்பிடுறதுக்கும் இன்னொருத்தன் எச்சில் இலை பொறுக்கிறதுக்கும் என்னங்க காரணமா இருக்க முடியும். ராகவன் படிப்புல, காதல்ல, வேலைல மூணுத்துலையும் கோட்டைவிட்டவங்க. ஏங்க ஏட்டுப்படிப்பு மட்டுந்தான் படிப்பாங்க? அனுபவம் படிப்பில்லையா? வாழ்க்கையே கறாரான வாத்தியார் தானுங்களே. பள்ளத்துல விழுந்துட்டா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்திப் பார்ப்போம் யாரும் வரலைனா நாமே முயற்சி பண்ணி மேலேறப் பார்ப்போமேங்க. வாழ்க்கையில ஏதோவொரு பிடிப்பை வைச்சித்தானே வாழவேண்டியிருக்கு. அந்த நம்பிக்கை தானுங்க ராகவனுக்கு இந்த கைலாசநாதர். அவரே அள்ளிக்கொடுக்க ஆசைப்பட்டாலும் விதி உடணும் இல்லீங்களா? எப்படியும் வாழ்றவனை உட்டுட்டு உண்மையைத் தேடி ஓடுறவனை சோதிக்கிறதுதான் சாமிங்களா? மந்தையிலேர்ந்து பிரிஞ்சு போறது ஆட்டுக்கு நல்லதா, கெட்டதாங்க? எல்லாரும் ஓடுறதை ஒதுக்குப்புறமா நின்னு பார்க்கறதுக்கு ஒருசிலராகத்தாங்க முடியும். ராகவனால எவன் சொத்தையும் அடிச்சி பிடுங்க முடியாது. எவளையும் மயக்கி வழிக்கு கொண்டுவர மெனக்கடவும் முடியாதுங்க.

சூழ்நிலையை விதிதான் நிர்ணயிக்கிறது என்பதை நம்பத்தான் வேண்டியிருக்கு. ஏன்னா சென்னையிலேர்ந்து வந்த கையோடு ராகவன் ஏன் கோயிலுக்கு ஓடுவானேன். குகைக்குள்ள மான் வந்தா சிங்கம் சும்மா உடுமாங்க அப்படித்தாங்க ஜெயராமனும். பிரகாரத்தை சுற்றி வந்து அமர்ந்த ராகவனிடம் ஜெயராமன் “எந்த ஊரு” என்று பேச்சை ஆரம்பிக்க. ராகவன் “சென்னை” என்றான்.

வந்திருக்கிறது மான்தான்னு சிங்கத்துக்கு தெரிஞ்சிப்போச்சிங்க சமயம் பார்த்து பாயப் போவுதுங்க. “சிவனைப் பார்த்தாச்சா?” என்றார் ஜெயராமன்.
“பார்த்தேன் சந்நதிக்கு போயிட்டுத்தான் வந்தேன்” என்றான் வெகுளித்தனமாக ராகவன்.

“அது லிங்கத்திருமேனி நான் கேட்கிறது சிவனை” என்றார் ஜெயராமன் அவனை உற்றுப் பார்த்தபடி.

“நீங்க கனவுல பாக்குறதை சொல்றீங்களா?” என்றான் ராகவன் அப்பாவித்தனமாக.

“அப்ப பாத்ததில்லை” என்றார் ஜெயராமன் ஏளனமாக.

“…………………………..”

“நான் பாத்திருக்கேன் என் இரண்டு கண்ணாலேயும் பார்த்து இருக்கேன். அவன் எப்படி கோயிலைவிட்டுட்டு மயானமே கதின்னு கிடக்கானோ அது மாதிரி என்னை எல்லாத்தைவிட்டும் ஒதுங்க வைச்சிட்டான். கோயில்ல கூலிக்கு மாரடிக்கிற நாயாத்தான் என்னைப்பத்தி வெளியில தெரியும். ஒரு நாள் மாசானம் கையேந்துற உனக்கே இவ்வுளவு திமிறான்னு கேட்டான் தெரியுமா? அடுத்த நாளே சைக்கிள்லேந்து விழுந்து கையை உடைச்சிட்டு வந்து நின்னான் தெரியுமா? ஆளைப் பார்த்தாலே ஜாதகத்தையே கண்டுபிடிச்சிருவேன் தெரியுமா? உன்னைப் பத்தி சிவன்ட்ட நான் சொன்னாத்தான் உண்டு. இல்லாட்டி விதியிலேர்ந்து நீ தப்ப முடியாது. அப்புறம் எல்லாரையும் போல நீயும் பிறந்து வறர்ந்து இறந்து, பிறந்து வளர்ந்து இறந்து தான் புரிஞ்சிக்க. எம்பேர் ஜெயராமன் பேர்ல மட்டும் நீ ராமன் இல்ல நிஜத்துலேயும் நீ ஸ்ரீராமன் தான்னு எங்க ஆத்தாவே சொல்லிச்சி தெரியுமா?”

ஜெயராமன் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த மாசானம் அருகே வந்து, “எல்லாருக்கும் கொள்ளி வைக்கிற சிவன் இவன் நேர்ல வந்தான்னு சொல்றானா? இந்தக் கோயில்ல காலம் காலமா கைங்கர்யம் பண்ற நானெல்லாம் விளக்கமாத்துகட்டை இவன் மட்டும் பட்டுப் பீதாம்பரமா. சிவனை கட்டி ஆள்றேன்கிறான்னே படுக்க ஒரு வீடு இருக்கான்னு கேளு. போட்டுக்க மாத்து துணி இருக்கா? ஊர் உலத்துல யாராச்சும் மதிக்கிறான்னா இவனை பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. நல்லா வாய்ல வருது. இந்தக் கிறுக்கன தர்மகர்த்தா எந்தலையில கட்டிட்டு போயிட்டார் பாரு என்றார்.

“வழிச்சிட்டு போறவனுவனுவோ சொல்லுறானுங்கன்னா நான் பாத்தது இல்லன்னு ஆயிடும்மா” என்றார் ஜெயராமன் ஆதங்கத்துடன்.

“இந்தக் காலத்துல போய் சிவனைப் பார்த்தேன் எமனைப் பார்த்தேன்னு சொன்னா பைத்தியம்னு தான் சொல்வாங்க என்ன தம்பி நான் சொல்றது” என்றார் மாசானம்.

“அவன் எங்கூட பேசுறாங்கிறேன்” என்றார் ஆவேசத்துடன் ஜெயராமன்.

“மூளை குழம்பிப் போச்சின்னா சிவன் மட்டுமில்லை செத்தவன் கூட எங்கூட பேசுறான்னுதான் சொல்லிகிட்டு திரிவே” என்றார் தன் பங்குக்கு மாசானம்.

“நான் சொல்றது உண்மையா இல்லையான்னு நான் செத்ததுக்கப்புறம் தெரிஞ்சிப் போயிடும்ல” என்றார் விரக்தியுடன் ஜெயராமன்.

“உனக்கு கிரகம் புடிச்சி ஆட்டுது. இல்லைனா இப்படி சொல்லிகிட்டுத் திரிவியா” என்றார் மாசானம் தலையிலடித்தபடி.

“கும்புட்டு போறவனுக்கெல்லாம் கல்லா தெரியிறவன் எனக்கு மட்டும் ஏன் சிவனாத் தெரியறான்” என்றார் ஜெயராமன்.

“கல்லோ, கடவுளோ அந்த  ஆராய்ச்சியெல்லாம் நமக்கெதுக்கு குழந்தை குட்டின்னு ஆனதுக்கப்புறம்” என்றார் தீர்க்கமாக மாசானம்.

“நாயன்மார்கள் வாழ்க்கையில அவன் விளையாடலையா” என்றார் விசனத்துடன் ஜெயராமன்.

“எந்தக் காலத்து கதை அது. அதுக்கும் இதுக்கும் ஏன் இப்ப முடிச்சிப் போட்டு பேசுற” என்றார் மாசானம்.

“பட்டினத்தாருக்கு நுனிக் கரும்பு எப்படி இனிச்சிதுன்னு கேட்பீங்களா” என்றார் ஜெயராமன்.

“வரும்படி வர்ற கோயில்ல தானே ஜனங்க ஈ மாதிரி மொய்க்கிறாங்க. இங்க யாராவது வந்து எட்டிப் பார்க்குறாங்களா. சிவனுக்கு நாலு முழ வேட்டி சாத்திட்டிப் போறேன். காப்பு உண்டா, கவசம் உண்டா இங்க” என்றார் ஆதங்கத்துடன் மாசானம்

“சித்தன் போக்கு சிவன் போக்கு” என்றார் எங்கோ பார்த்தபடி ஜெயராமன்

“உன்னையெல்லாம் திருத்த முடியாது அகல் விளக்கையெல்லாம் எடுத்து கிணத்து கிட்ட போட்டுட்டு பூட்டி சாவியை வீட்ல வந்து கொடுத்துட்டு கூலியை வாங்கிட்டுப் போ” என்று கிளம்பினார் மாசானம்.

ஜெயராமன் ராகவனிடம் “பித்தா, பிறைசூடி அவன். யாருக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளனும்னு அவன் தான் முடிவு பண்ணுவான். உன்னோட விதி வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி. அடுத்த தடவை வரும் போது என்னைய தேடாத நான் இங்கன்னு இல்ல எங்கயும் இருக்க மாட்டேன் பிரகாரத்தை மூணு தடவை சுத்திட்டு திரும்பிப் பார்க்காம போ” என்றார்.

எழுத்து தன் தொழிலாக ஆனதுக்கப்புறம் எத்தனையோ தடவை கோயில்ல வந்து ஜெயராமனை தேடி இருக்கிறான் ராகவன். ஆனால் அவர் இவன் கண்ணுக்குத் தென்படவே இல்லை.

ஞானச்சுடரை தூண்டிவிட்ட அவரது கைகளுக்கு வெறும் எழுதுகோலாகத்தான் இன்றுவரை ராகவன் இருக்கிறான். இவன் தனித்த மண்பானையாகத்தான் இருந்தான். அவருடனான சந்திப்புக்கு பிறகு பானை உடைந்து காற்று வெளியுடன் கலந்துவிட்டது. ஏதோவொன்றுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அதுதான் கடவுளா என்றால் இருக்கலாம். அதற்கு நீங்கள் என்னப் பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். இந்த அணையப்போகவிருந்த சுடரை ஏற்றி வைத்த அந்த ஜெயராமன் இப்போது எங்கே இருக்கிறார்.

Sunday, October 6, 2019

சிருஷ்டி


“உங்களுக்கு ஆயுசு நூறு சார் என்றான் மெக்கானிக். நூறு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் இவர் பேருக்கு தலையாட்டிக் கொண்டு சிரித்து வைத்தார். வாங்குற சம்பளத்துல பாதி வண்டிக்கே போய்விடுதே என எண்ணிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

வரும் வழியில் கயல்விழியை நினைத்துக் கொண்டார் வரதுப்பிள்ளை. இறங்கும் முன் ஓடிவந்து பையைத் துழாவுவாள். பிள்ளை ஏமாறாதிருக்க ஏதாவது வாங்கிப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டவராய், பகவான் ஸ்வீட் ஸ்டாலில் வண்டியை நிறுத்தி ஓமப்பொடி வாங்கிக் கொண்டார்.

கடையிலிருந்து வீட்டுக்கு நான்கு மைல் தூரம். வீட்டை வந்து அடையும் வரை ஏதாவதொரு பிரச்சனை அவருடைய நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கும். இரண்டு வருடங்களாக அதாவது கயல் பிறந்ததிலிருந்து மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கிறது. அவள் தூங்குவதையும், சாப்பிடுவதையும் பார்க்கும் போது அப்பா ஸ்தானம் என்பது கடவுள் கொடுக்கும் வரம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

வரதுப்பிள்ளையும் வயதில் கிறுக்குத்தனமாகத்தான் சுற்றி அலைந்தார். அந்த வயதில் கோயில் கருவறையிலுள்ள தெய்வம் அவருக்குச் சிலையாகத்தான் தெரிந்தது. ஜமா சேர்த்துக் கொண்டு கையெழுத்து பத்திரிகையெல்லாம் நடத்தினார். அதில் கல்லா-கடவுளா என அவர் எழுதிய தொடர் கட்டுரையை சிநேகிதர்கள் இன்றும் சிலாகிப்பார்கள்.

வரதுப்பிள்ளையின் அப்பா தீவிர சிவபக்தர். நெற்றியில் விபூதி பட்டை இல்லாமல் அவரை வெளியில் பார்க்க முடியாது. வரதுப்பிள்ளையிடம் அவர் ‘உன் சித்தாந்தம் வாழ்க்கைக்கு உதவாது என நேரே சொன்னதில்லை. தெய்வமே உணர  வைத்தால் ஒழிய யாரும் யாரையும் திருத்த முடியாது என அவருக்குத் தெரியும்.

படிப்பை முடித்து தனது உழைப்பை காசாக்க முயலும் போது தான் வரதுப்பிள்ளை தெரிந்து கொண்டார் சமூகம் தான் நினைத்தபடி இல்லையென்று. அவருக்குத் தெரிந்து சிறிய காரியத்துக்காக பணத்தை எதிர்பார்ப்பவர்களாகத்தான் எல்லோரும் இருந்தனர். தெய்வம் இல்லையென்றவன், தெய்வத்தை ஏற்றுக் கொண்டவனைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக தவறு செய்வதை வரதுப்பிள்ளை கண் கூடாகக் கண்டார்.

காந்தியை படித்துவிட்டு பணத்துக்காக பொய் சொல்பவர்களை அவருக்கு அறவே பிடிக்கவில்லை. அவரது உண்மையின் மீதிருந்த நாட்டத்தால் அரசாங்க உத்தியோகமும் அவருக்கு கிடைக்காமல் போனது. பணத்திற்காகவும், பெண்ணிற்காகவும் மனிதர்கள் எந்த அளவுக்கு தரம்தாழ்ந்து போவார்களென அவர் கண்கூடாகக் கண்டார். பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பவன் போதுமென்றா நினைக்கிறான்.

வேறு வழியில்லாமல் தான் வரதுப்பிள்ளை முதலியாரின் மளிகைக் கடையில் கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்ந்தார். முதலியார் கறாரான பேர்வழி. போணியாகாவிட்டாலும் எட்டரை மணிவரை உட்கார்ந்து தான் ஆகவேண்டும். மற்றவர்களைப் போல் வரதுப்பிள்ளைக்கு நொண்டிச் சாக்கு சொல்லத் தெரியாது. கணக்கு முடிக்கிற மாதத்தில் குடும்பஸ்தன் என்று கூட பார்க்காமல் கடையே கோயிலென்றும் முதலியாரே தெய்வமென்றும் தான் கிடக்க வேண்டும். இந்த வேலையையும் விட்டால் வேறு போக்கிடம் கிடையாது வரதுப்பிள்ளைக்கு.

நிறைய இடத்துல ஜாதகம் பொருந்தி வந்திச்சி. எல்லா பெண்களும் மாசத்துக்கு அம்பதாயிரம் சம்பாரிப்பவனாகத்தான் எதிர்பாரத்தார்கள். சுயம் வரத்துல கலந்துக்க ஆம்பளையா இருந்தா போதுமா, நாட்டுக்கு இளவரசனா இருக்க வேண்டாம்.

ஒரு இடத்திலிருந்து பெண்வீட்டார் அவனுடைய சம்பளம் பற்றி விசாரிக்க முதலியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்கள். முதலியார் போட்டு உடைத்துவிட. பெண் வீட்டார் கழன்று கொண்துமில்லாமல் அந்த இடத்துல வேலைக்கு இருக்கிற வரை அவரால உருப்படவே முடியாது என வரதுப்பிள்ளை அப்பாவின் காதுபடவே ஏசினார்கள்.

திருமணத்திற்கு பணப்பொருத்தம் மட்டுமே இப்போதெல்லாம் பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில் நல்லவனை யார் தேடுகிறார்கள். பணம் சம்பாரிக்கவல்ல வல்லவனைத்தான் தேடுகிறார்கள். நான் வரம் வாங்கி வந்தது அப்படி என்று வரதுப்பிள்ளை தன்னைத் தேற்றிக் கொண்டார்.

திலகமும் வரதுப்பிள்ளைக்கு வாய்க்க இருந்தவள் அல்ல. திலகத்தைப் பெண் பார்க்க போனவர்கள் எண்ணிக்கை குறையவே இவரையும் சேர்த்துக் கொண்டார்கள். மாப்பிள்ளை பையன் ஜகா வாங்க இவருக்கு அடித்தது யோகம். திருமணம் என்பது ஜாதகப் பொருத்தத்தை எல்லாம் மீறி எப்படி நடத்தி வைக்கப்படுகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

திலகமும் அவ்வப்போது வார்த்தைகளை வீசத்தான் செய்வாள். தம்படிக்கு வக்கற்றவனாக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும். வரதுப்பிள்ளை மளிகைக் கடையே கதியென்று கிடப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. “அதே வரும்படிக்கு எத்தனை வருசமா குப்பை கொட்டுவிங்க, மாசக்கடைசியல் நாம விரதம் இருக்கலாம் குழந்தை என்ன பண்ணும் என்று அவள் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

அன்று ஏன் விடிந்தது என்று இருந்தது வரதுப்பிள்ளைக்கு, வீட்டுக்கு இரண்டு மாத வாடகை பாக்கி. வந்து உட்கார்ந்து விட்டார் வீட்டுக்கு சொந்தக்காரர். “என்ன வரது குழந்தைகுட்டினு ஆனதுக்கு அப்புறம் இன்னும் சாமர்த்தியம் இல்லாம இருந்தா எப்படி. ஒருத்தர் வரும்படியை வைத்து இந்தக் காலத்துல குடும்பம் நடத்த முடியுமா? நாலு வழியிலேர்ந்தும் பணம் வரணும். இல்லைனா இப்படி அவமானப்பட்டு நிக்க வேண்டியது தான். உண்மையை நம்பிப் போன அரிச்சந்திரன் வெட்டியானாய்த்தானே ஆனான். நீ நல்லவனாய் இருக்கிறதுனால தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டு குடுக்குமா என்ன. எந்த ருதுவும் இல்லாம யார்கிட்டயாவது பத்து ரூபா வாங்க முடியுமா உன்னால. பொட்ட புள்ளயா வேற போயிடிச்சி எல்லாம் செஞ்சாகணும் அப்ப எங்க போய் முட்டிக்கிவே. இன்னும் ரெண்டு நாள் டைம் தரேன், அப்புறம் பழக்கப்பட்ட நாடார் இப்படி செஞ்சிட்டாரேன்னு நினைக்கப்படாது ஆமா சொல்லிட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

வரதுப்பிள்ளை தான் யோக்கியனாக இருக்க வேண்டும் என்பதற்காக வைராக்கியத்துடன் அப்படி இல்லை. வரதுப்பிள்ளையின் இயல்பே அப்படித்தான். வார்த்தை மாறி பேசத் தெரியாது. சொல்லாததை சொன்னேன் என்று சத்தியம் அடிக்க வரதுப்பிள்ளையால் முடியாது. அப்பா இறந்த பிறகு தேரை இழுத்து தெருவில் விட்டது போலாகிவிட்டது வரதுப்பிள்ளையின் கதை. சுயமாக முடிவு எடுப்பதில் தடுமாறித்தான் போகிறார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைதான். செலவுக்கு காசில்லை என்றால் திலகத்தின் பேச்சில் உஷ்ணம் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருக்கும். வரதுப்பிள்ளையின் மனம் புழுங்கத்தான் செய்கிறது அதனால் உதறிவிட்டு சம்போமகாதேவா என்று போய்விட முடியுமா என்ன.

வீடு தான் மனிதனின் விடுதலையான இடம். நிம்மதியைத் தொலைத்தவர்கள் அதனை வேறு எங்கு போய்த் தேடுவார்கள். பேச்சால சூடுவைக்கிறதுல யாரும் திலகத்தைப் போலாகமுடியாது. போன மாசக் கடைசியில் கடையிலேர்ந்து வந்த அசதியில ஒருவா காபி கேட்டுவிட்டேன். வந்த பதிலை பார்க்கணுமே அவளிடமிருந்து “காபி கேட்க வந்துட்டாரு டீ எஸ்டேட் ஓனரு என்றாள். வரதுப்பிள்ளைக்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது. ஒருநாள் சர்க்கரை போடலயா என தெரியாத்தனமாக கேட்டுவிட்டேன். “டீக்கு சர்க்கரை இல்லைன்னு இல்ல வீட்டுல சர்க்கரை தீர்ந்து போய் இரண்டு நாளாச்சி நான் சொன்னப்ப ஊமை சாமியார் மாதிரி இருந்துட்டு இப்ப கேட்குறதை பாரு என்றாள் சம்பாரிக்கிறது குறைச்ச என்றாலும் நாக்குக்கு ருசி கேட்கிறது பாரு என வரதுப்பிள்ளை தன்னைத் தானே நொந்து கொண்டார்.

வரதுப்பிள்ளை வீட்டருகே வந்துவிட்டார். இப்போது தான் அவர் ஞாபகத்திற்கு  வந்தது. ஆறாயிரம் கடனுக்காக பைனாஸ் கம்பெனிக்காரன் வீடு புகுந்து டி.வியை எடுத்து போனதும் அதனால திலகம் கோவிச்சிட்டு குழந்தையுடன் பிறந்தகம் போனதும். வரதுப்பிள்ளை வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். வைத்த பொருள் வைத்த இடத்தில் இருப்பதைப் பார்த்த போது வரதுப்பிள்ளைக்கு கயல்விழி ஞாபகம் வந்தது. வரதுப்பிள்ளைக்கு தன்னைக் கரிச்சிகொட்டவாவது திலகம் வேண்டியதா இருந்தாள். எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு போவது என வரதுப்பிள்ளைக்கு யோசனையாய் இருந்தது. வெறுமை புதைகுழியில் தள்ள வரதுப்பிள்ளை தன் பெண்டாட்டி பிள்ளையை அழைத்து வரும்பொருட்டு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார்.

பக்கத்து வீட்டு வானொலி பண்பலையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
கடைசி வரை யாரோ

விடுகதை


இரத்த மாதிரியை பரிசோதித்து ராமச்சந்திரனுக்கு blood cancer என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் என்று அவனுக்கு நாள் குறித்து discharge செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ராமச்சந்திரனுக்கு கல்யாணமாகி ஒரு மகளுண்டு  ராமச்சந்திரனுக்கு அப்பா தவறிவிட்டாலும் அம்மா இருக்கிறாள். கூடப் பிறந்தவர்கள் ஒரு அக்கா மட்டுமே, அவள் கல்யாணமாகி திருச்சியில் வசிக்கிறார்கள். அம்மாவைப் பார்க்க அவ்வப்போது வந்து போவதுண்டு. என்ன அக்காவும், மாமனும் காசிலேயே கண்ணாய் இருப்பார்கள்.

அப்பா வச்ச அச்சகத்தைத்தான் ராமச்சந்திரன் நடத்தி வருகிறான். சீசனுக்கு ஏற்றபடி வரும்படி கூடும் குறையும். இப்ப இருக்கிறது சொந்தவீடுதான். கவனிப்பு இல்லாம தரிசா கிடந்த இரண்டு ஏக்கர் நிலத்தை விளைச்சலுக்கு தகுந்ததாய் மாற்றி கிரயத்துக்கு விட்டிருக்கான். இவன் சம்பாரிச்சான்னு சொல்லிக்கும்படியாய் ஒரு காலிமனை வாங்கி போட்டிருக்கான். அச்சகம் வீடு நிலம்னு சுத்திகிட்டு இருந்த ராமச்சந்திரன் வாழ்க்கையில இடிதான் விழுந்து போச்சி. சுதாரிக்காம வாயில ரத்தம் வர்ற வரையிலும் நாட்டு வைத்தியம் தான் பார்த்துகிட்டு இருந்திருக்காங்க. இப்ப ரொம்ப முத்திபோச்சின்னு டாக்டர்களும் கைவிரிச்சிட்டாங்க.

வீட்டுக்கு வந்தவுடன் ராமச்சந்திரன் ஆத்துப் பக்கம் சென்றுவிட்டான். கல்லை தண்ணீரில் தூக்கிப் போட்டபடி அவனுடைய சிந்தனைப் பறவை வானவெளியை வட்டமடிக்க ஆரம்பித்தது. இனிமேல் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது என யோசிக்க ஆரம்பித்தான். ஆசைகளை குழிதோண்டி புதைத்த பின்பு புலன்களின் வழியே வெளியே அலைந்து கொண்டிருந்த மனது உண்முகமாக திரும்பியது. தன்னையே சாட்சியாக பார்க்க ஆரம்பித்தான். நான் யார் என்று தன்னை தன்னுள் தேடினான். தானே கேள்வி கேட்டு தானே பதிலும் சொல்லிக் கொண்டான். எல்லோரும் சாகப் போகின்றார்கள் நாம கொஞ்சம் முந்திகிட்டோம் அவ்வளவு தான். வாழ்க்கைப் பயணத்துல உறவுகளையெல்லாம் விட்டுட்டு நான் மட்டும் தனியா விடைபெற்றுக் கொள்வது கொடுமையான விஷயம் தான். நாற்பது வருஷம்ங்கிறது கண்ணிமைக்கிற நேரத்துல ஓடிப் போய்ச்சி இல்ல. அழிஞ்சு போற உடலுக்குத்தான் எவ்வளவு ஆடம்பரம் தேவைப்படுது. புணுகும், ஜவ்வாதும் இந்த சாம்பலுக்குத்தாங்கிறது யாருக்காவது உரைக்குதா என்ன.

இன்னிக்கு வரை எனக்கு நடந்த ஒவ்வொரு நல்ல காரியத்திலேயும் அம்மா கூட நின்னு இருக்கா. இந்த வயசுலேயும் அவ என் கூட இருக்கிறதுக்கு நான் கொடுப்பினை செஞ்சிருக்கணும். சின்ன முள்ளுக் குத்துனாக்கூட நான் தாங்கமாட்டேன்னு அவளுக்குத் தெரியும். சின்ன வயசுல காட்டுல சுள்ளியைப் பொறுக்கிட்டு வந்து வெந்நீர் வச்சி தான் என்னைக் குளிப்பாட்டுவா. பள்ளிக் கூடத்துல மிஸ் எம்மேல கையை வச்சிட்டான்னு கோபப்பட்டா பாரு, அதுதான் முதல் தடவையா அவ கோபப்பட்டு நான் பார்த்தது. முந்தாணியில காசை மட்டுமில்ல எங்களையும் தான் சேர்த்து முடிஞ்சு வச்சிருந்தா. அம்மாக்கள் குழந்கைகளுக்காகவே கோயில் படியேறுகிறார்கள். குழந்தைகளுக்காகவே இறைவனிடம் பிச்சைக் கேட்கிறார்கள். தாய்மை அடைவதன் மூலம் பெண்கள் தெய்வமாக மாறிவிடுகிறார்கள். பெற்றெடுத்தவுடன் அவளுடைய உலகம் குழந்தைகளுக்கு மட்டுமானதாக மாறிவிடுகிறது.

அச்சகம் விலைக்கு வந்தபோது அதைவாங்க முகம்கோணாமல் அப்பாவிடம் தாலியை கழட்டிக் கொடுத்தாள் அடகு வைக்க. தீபாவளியன்று நாங்கள் புத்தாடை அணிந்து கொண்டிருக்க அவள் நைந்த புடவையுடன் பலகாரம் செய்து கொண்டிருப்பாள். இன்னும் அவள் கருவறையின் கதகதப்பு எனக்கு வேண்டியதாய் இருக்கிறது. தாய்மை தெய்வத்தைவிட உயர்ந்தது என்று எனக்கு இப்போதுதான் புரிகிறது. ஒருவனிடம் அன்பிற்காக மட்டுமே அக்கறை கொள்வது கடவுள் தன்மையைவிட உயர்ந்தது அல்லவா. இன்னும் அவள் கண்களின் மூலமாகத்தான் நான் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் இல்லாதிருந்தால் வாழ்க்கைச் சகதியில் விழுந்து புரண்டிருப்போம் நாங்கள். பழிபாவத்துக்கு அஞ்ச வேண்டும் என்பதை அவள்தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்தாள்.

அம்மாக்களின் வாழ்க்கை கரிபடிந்த அடுக்களையில் ஆரம்பித்து அடுக்களையிலேயே முடிந்துவிடுகிறது. படியளப்பவளை ஏன் அன்னபூரணி என்ற பெண் தெய்வமாக்கினார்கள் இப்போது என்னால் உணரமுடிகிறது. அப்பா கிழித்த லெட்சுமணக்கோட்டை அம்மா தாண்டியதே இல்லை. எந்த முடிவையும் அப்பாவே எடுப்பார். தன்னை ஆலோசிக்கவில்லையே என்ற குறை அம்மாவிடம் இருந்ததாகவே தெரியவில்லை. அவளின் தியாகத்திற்கு விலையாக வேறென்ன என்னால் கொடுக்க முடியும். எங்களைத் தொந்தரவாய் அவள் எப்போதும் கருதியதில்லை. அவள் அப்பாவிடம் பஞ்சப்பாட்டு பாடி நாங்கள் பாரத்ததில்லை. தெய்வாம்சம் மிகுந்த பெண்கள் பணம் கொண்டுவந்தால் பல்லிளிப்பதும் இல்லாவிட்டால் எரிந்து விழுவதுமாக இருப்பார்களா என்ன? வாழ்க்கை கொடுத்தவனை கடவுளாக பார்க்கும் பெண்களை இந்தக்காலத்தில் தேடிப் பிடிக்க முடியுமா. அவள் மீது கொண்ட மதிப்பினால் தான் அப்பா சமையலைப் பற்றி எப்பவும் குற்றம் சொன்னதே இல்லை.

அப்பாக்கள் எப்பவுமே சைக்கிள் கற்றுக் கொடுக்கும்போது சிறிது தூரம் சென்ற பின் பிடியை விட்டுவிடுவார்களே ஏன்? தான் பின்னால் பிடித்துக் கொண்டு வருகிறேன் என்ற தைரியத்தில் அவன் ஓட்ட வேண்டும் என்பதற்காகத்தானே. பறவை தன் குஞ்சை கூட்டைவிட்டு கொத்தித் தள்ளும் கீழே விழுவதற்கு முன் சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிடும் அந்தக் குஞ்சு. அந்தக் குஞ்சு தாயான பிறகு தான் தெரிந்து கொள்ளும் தாய் தன்னை ஏன் கொத்தித் துரத்தினாள் என்று. அப்பா ஏதாவதொரு சிந்தனை ஓட்டத்தில் இருந்தாலும் எங்களைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் புன்னகை அரும்புவதை எப்படி என்னால் மறக்க முடியும். அவருக்கு ஏதாவது பலகீனங்கள் இருந்தால் குடும்பக் கப்பல் மூழ்கித்தான் போயிருக்கும். எங்களுக்கு எதிராக அவர் சிகரெட் குடித்ததே இல்லை. அப்பாவுக்கு அந்தப் பழக்கம் இருந்ததென்று அம்மா சொல்லித்தான் எங்களுக்கே தெரியும்.

வெண்ணிலா வீட்டில் வீடுகட்டி குடிபோகிறார்கள், தெய்வானை வீட்டுக்காரர் அவளுக்கு நாலு பவுன்ல நகை வாங்கி போட்டிருக்கிறார்- இப்படி அம்மா அப்பாவிடம் அக்கம் பக்கத்து சங்கதியை வாய் துடுக்காய் பேசியதே கிடையாது. அம்மா இதுவரை தனக்கென்று எதுவும் யாரிடமும் கேட்டதே கிடையாது. கொடுத்தது தப்படி என்றாலும் அதை வைத்தும் குடும்பம் நடத்த தெரிந்திருந்தது அவளுக்கு. அப்பா எம்டனாக இருந்தாலும் யாரிடமும் அவரை விட்டுக் கொடுத்து பேசமாட்டாள். அப்பா யாரிடமாவது ஏமாந்து வந்து நிற்பாரே ஒழிய அவர் யாரையும் ஏமாற்ற மாட்டார். எதற்கு ஆசைப்பட்டாலும் அதற்கு தனக்கு தகுதி இருக்கிறதா என தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் ரகம் அவர். அப்பா இருந்தவரை எந்தக் கஷ்டங்களும் எங்களைத் தாக்கா வண்ணம் தடுப்புச் சுவராய் இருந்தார். இப்போது கூட அவர் வெளியூருக்கு சென்றிருக்கிறார் என்ற ஞாபகத்தில் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இதோ எனக்கு நாள் குறித்துவிட்டார்கள். வெளியேறு வாசலை கடவுள் எனக்காக திறந்து வைத்துவிட்டார். என்னை அழைத்துச் செல்ல என் அப்பா ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக அல்ல. அம்மாவுக்கு மருமகள் வேண்டும் என்பதற்காகத்தான் நான் விசாலாட்சியை கல்யாணம் செய்து கொண்டேன். இதை அவளிடம் தெரிவித்த போது “அதனால தான் அத்தைக்கு ஒருகுறையும் வைக்காம இன்னிக்கி வரை நடந்துகிட்டு வாரேன் என்றாள். கல்யாணங்கிறது குதிரைக்கு கடிவாளம் போடுறமாதிரி. அக்கம் பக்கம் பாக்காம நேரா ஓடிகிட்டு இருக்கணும. இன்று வரை நாலு பேர் என்ன நினைப்பார்களோ என்றெண்ணித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இருட்டில் கல் என்று தண்ணீரில் தூக்கி எறிந்து கொண்டிருந்துவிட்டேன் விடிந்த போதுதான் தெரிந்தது அது வைரமென்று இப்பொழுது ஒரு வைரக்கல் தான் மீதமிருந்தது. வாழ்வும் அதுபோல் தானே. சர்க்காரின் சட்டம் கூட செல்லுபடியாகாத ஒரே இடம் சுடுகாடு தானே. பைபிளில் ஒரு வாக்கியம்  வருமே உன்னுடையை தலைமுடி கூட எண்ணப்பட்டிருக்கின்றன என்று. ஏற்கனவே எழுதப்பட்ட விதிக்கு நானும் இரையாகப் போகிறேன். சதுரங்க காய் நகர்த்தலில் ஏதாவதொரு ராஜா கண்டிப்பாக வெட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். நடப்பதை தலைகீழாக நின்றாலும் நிறுத்த முடியாதல்லவா.

வாழ்க்கை சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் அமைந்துவிடுகிறது. எனக்கு வாய்த்தவள் அழுத்தக்காரி எதையும் சமாளித்துவிடுவாள். பூவும் பொட்டும் பறிபோய்விடுமே என்பதற்காகவாவது அவள் அழுது அரற்றத்தான் செய்வாள். இரவல் தந்தவன் கொக்கிப் போடும்போது சொந்த பந்தத்தைக் காரணம் காட்டியா தப்பிக்க முடியும். வாழ்க்கை ஆறு அடித்துச் செல்லப்படும் தூசி துரும்புகளைப் பற்றிக் கவலைப்படுமா என்ன. மேகங்கள் தன்னை இழப்பதில் சந்தோஷப்படலாம் ஆனால் மனிதன். மரணப்பாம்பு என்னை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டுள்ளது. மண்ணுடனான பிணைப்பை இறந்தபிறகும் விடமுடியாதல்லவா.

ஒருவர் இருப்பே இல்லாமல் போவதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரியமா. ஆட்டுவிப்பவன் தான்தோன்றி அல்லவா அவனுக்கு ஆசாபாசங்கள் புரியுமா என்ன. வியூகத்தில் சிக்கிய அபிமன்யூ நிலைதான் எனக்கு. இந்த கிழிந்த சட்டையை களைந்து எனது ஆன்மா புதிய சட்டையை அணிந்து கொள்ள தயாராகிவிட்டது. வாழ்க்கையின் போக்கு இப்படித்தான் செல்லுமென்று ஜோதிடத்தால் கூட கணிக்க முடியாது அல்லவா. உயிர் வெளியேறிவிட்டால் ஆணானாலும், பெண்ணானாலும் பிணம் தானே. வாழ்க்கையில் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது தான். என் மூலம் பிழைக்க கற்றுக் கொண்டவர்களாவது என்னைப் பற்றி நினைப்பார்களா என்ன.

என் வீடேறி வந்த தெய்வத்திடம் எப்படி நான் விடைபெற்றுக் கொள்வது. அவளது தோழிகளிடம் அறிமுகப்படுத்துவதற்காகவாவது நான் தேவைப்படுவேன் அல்லவா. இந்தப் பாழும் உலகத்தில் அவளை அனாதையாக விட்டுப் போகிறேன் என நினைத்தால் எனக்கு அழுகை வருகிறது. மரணம் விடுதலையா கைவிலங்கா என்று யாரைப் போய் கேட்பது. எனக்குப் பின்னால் அவள் சிறகிழந்து நிற்கக்கூடாது அல்லவா. அவள் மாலை போடப்பட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் எனது புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் என்ன நினைத்துக் கொள்வாள். அவள் மழலைக் குரலை மறந்து நான் போய் தான் ஆகவேண்டுமா. விதியின் கைகள் என் கழுத்தை இறுக்குகிறது. இந்த நினைவுகள் இறந்த பிறகும் எனக்கு சுமையாக கனத்துக் கொண்டுதான் இருக்கும்.

எவ்வளவு சொத்துபத்து இருந்தாலும் ஒருவனால் ஐந்து இட்லிக்கு மேல் தின்ன முடிகிறதா. அழகாயிருக்கிறேன் என்பதற்காக எப்போதும் நிலைக்கண்ணாடி முன் நின்றுகொண்டா இருக்க முடியும். அத்தியாவசிய செலவுக்காகத்தானே பணம் சம்பாதிப்பது. அக்கா பலனை எதிர்பார்த்து தான் எந்தக் காரியமும் செய்வாள். சொந்தமாக தொழில் செய்கிறான் ஃபாரினுக்கொல்லாம் ஏற்றுமதி செய்கிறான் என்று கூறித்தான் மாமனை அவளுக்கு கட்டி வைத்தார்கள். புக்ககம் புகுந்த பின்தான் சொன்னதெல்லாம் பொய் என அவளுக்கு தெரியவந்தது. அவன் சம்பாத்தியம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாய் இருந்தது. சுகபோகத்துக்கு ஆசைப்பட்டவள், ஆடம்பர வாழ்வுக்காக யாரை குழியில் தள்ளலாம் என சமயம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நான் இறந்தவிடுவேன் என்ற சேதி தேனாய் இனிக்கத்தான் செய்யும். இதோ எனது தேவஆட்டுக்குட்டியை நரிகளின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்.

மரணமென்பது மனிதனுக்கு தன்னோடு சம்மதப்பட்டது மட்டுமல்ல. அவ்வளவு சீக்கிரத்தில் அவனது நினைவுகள் முற்றிலும் அழியாது. வாழ்க்கை நாடகத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக செய்தேனா என்று கடவுளைத்தான் கேட்க வேண்டும். துயரக் கடவுளால் தான் மரணப் புத்தகத்தை எழுத முடியும். அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு இன்று இயேசு நம்மிடையே இல்லை. திருவிளையாடல் புரிவதற்கு இங்கு சிவனும் தவக்கோலத்தைக் கலைத்து எழுந்து வரப்போவதில்லை. மைதானத்தில் உதைபடும் கால்பந்தாய் விதி என்னை அங்கும் இங்கும் பந்தாடுகிறது. இந்தப் பாதை மரணவூருக்கு கொண்டுபோய் விடும் என்றால் நான் அதைத் தேர்ந்தெடுத்து இருப்பேனா. மழைத்துளி தோள் மீது பட்டவுடன் ராமச்சந்திரனுக்கு சிந்தனை கலைந்தது நினைவுப் பறவை மீண்டும் கூட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டது. மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும் இனி இந்த இரண்டு மாதங்களாவது தனக்காக வாழ வேண்டும் என்று முடிவு செய்தவனாய் தெளிவான மனத்துடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வடக்குப் பக்கத்தில் பேரிகை போல் இடி முழங்கியது.