Sunday, February 21, 2021

பாவமன்னிப்பு

 


“ஹலோ ஃபாதர் ஜெயராஜ் பேசுறேன்.”

 

“ஓ ஜீஸஸ்! இப்பதான் உங்களபத்தி நினைச்சிட்டு இருந்தேன் நீங்களே கால் பண்ணிட்டீங்க. என்ன விஷயம் ஃபாதர்” என்றார் தொழிலதிபர் டேவிட் தணிகாசலம்.

 

“ஒண்ணுமில்லை. உங்கள சந்திக்கணும்னு ராயப்பன்னு ஒருத்தர் பிரியப்படுறாரு.”

 

“என்ன பேர் சொன்னீங்க ஃபாதர்?”

 

“ராயப்பன். உங்களுக்கு அவரைத் தெரியுமா?”

 

“ம். இப்பதான் ஞாபகத்துக்கு வருது. வெயிட் பண்ணச் சொல்லுங்க இன்னும் அரைமணி நேரத்துல வர்றேன்.”

 

டேவிட்டின் கண்கள் சிவந்தன. ‘ராயப்பன் ராஸ்கல் ராயப்பன் உன்னை எமலோகத்துக்கு அனுப்புறதுதான் என் முதல் வேலை.’ கைத்துப்பாக்கியில் தோட்டா நிரப்பப்பட்டு இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டு விறுவிறுவென வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் நோக்கி விரைந்தார் டேவிட். கார் சாலையில் சீறிப்பாய்ந்தது.

 

‘ப்ளடி இடியட் ஃப்யூல் பழைய டேவிட்டா என்னை நினைச்சானா காசு, பணம், லொட்டு லொசுக்குன்னு எல்லாத்தையும் பாத்தாச்சி அப்ப என்னைய புழுவா பூட்ஸ் கால்ல மிதிச்சிபுட்டு இப்ப பாம்பானோன்ன மகுடி ஊதலாம்னு பாக்குறானா ஸ்டுப்பிட் ஃபெல்லோ. ராயப்பன்னு அவன் பேரை வாயால சொல்லக்கூட அருவருப்பா இருக்கு. ராயப்பா உன்னோட விதிதான் உன்னை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கு.’ அவரது வலது கையால் பிஸ்டலை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

 

கார் ஃபாதர் வீட்டின் முன் நின்றது. கார் சத்தம் கேட்டதும் ஃபாதர் ஜெயராஜ் வெளியே வந்து டேவிட்டை வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

 

ஃபாதர் டேவிட்டிடம் “நீங்கள் சம்மதித்ததால் தான் அவரை வெயிட் பண்ணச் சொன்னேன். இந்த அறையில தான் இருக்காரு. நீங்கள் சந்தித்துவிட்டு வாருங்கள் நாம் பிறகு பேசுவோம்” என்றார்.

 

டேவிட் அறைக் கதவைத் திறந்ததும் ராயப்பன் சோபாவிலிருந்து எழுந்து கொண்டான். ‘ஸிட் ஸிட்’ என்று சொல்லிக்கொண்டே எதிரே உள்ள சோபாவில் டேவிட் அமர்ந்தார்.

 

கால்மேல் கால்போட்டபடி ராயப்பனை மேலும் கீழுமாக இரண்டு தடவை பார்த்தார், “இத்தனை வருஷம் கழிச்சி தேவையில்லாம தேடி வந்திருக்க மாட்டேன்னு தெரியும். இப்ப என்னோட ஸ்டேடஸே வேற, என்னை உன்னால விலைபேச முடியாது. இல்ல நான் செஞ்சது பாவம்னு ஞானோதயம் வந்திடுச்சின்னு பிச்சை கேட்டு வந்திருக்கியா?” என்றார் வெண்தாடியை வருடியபடி.

 

ராயப்பன் கண்களை தாழ்த்திக் கொண்டு “மிஸ்டர் டேவிட் உங்க பேரைக் கெடுக்கணும்னு நான் விரும்பலை. நான் செஞ்ச தவறுக்கு பிராயச்சித்தம் தேடித்தான் வந்திருக்கேன். நான் ஒரு பாவி டேவிட்.”

 

“நாம சந்திச்சி இருபத்தைந்து வருஷம் இருக்குமா? இப்ப ஞானம் பொறந்திருச்சின்னு வந்து நின்னா நான் நம்பணும் இல்ல.”

 

டேவிட்டின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. நிதானமாக கோட்டுக்கு உள்ளே இருந்த செல்லை எடுத்து காதில் வைத்தார். “ஹலோ செபஸ்டியன் டுடே இஸ் யூவர் டே. அப்பா ப்ளாங்க் செக்கை டேபிள்ல உன் போட்டோவுக்கு கீழ வைச்சிருக்கேன். ரேஸ்ல ஜெயிக்கிற குதிரைமேல பணத்தைக் கட்டுறதுதான் புத்திசாலித்தனம். இதெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு கல்யாணம் பண்ணிகிட்டு ஃபேமிலி மேன் ஆயிடுன்னா கேட்க மாட்டேங்கிற” என்று பேசிவிட்டு டேவிட் போனை கோட்டுக்கு உள்ளே வைத்துக் கொண்டார்.

 

“டேவிட் இது உன் மகன்தானே, படர்றத்துக்கு கொம்பு கிடைச்சதும் எங்களையெல்லாம் மறந்துட்ட டேவிட்.”

 

“எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம் துரோகிகளை ஒருபோதும் மன்னிக்கமுடியாது ராயப்பன்.”

 

“நீ பழைய டேவிட்டா இருந்தேன்னா கமலாவைப் பத்திதான் முதல்ல கேட்டிருப்ப.”

 

“ஓ மை காட்! கமலா இன்னும் அந்தச் சிலுவையை என்னால் இறக்கி வைக்க முடியவில்லையே, கமலா உனக்கு முன் நானொரு குற்றவாளி. என் தரப்பை எதைச் சொல்லி நியாயப்படுத்துவேன் நான்.”

 

“என்னை துரோகி என்கிறாயே கமலா அப்பாவிடம் ஒருலட்சம் வாங்கும்போது உன் மனசாட்சிக்கு என்ன பதில் சொன்னாய் டேவிட்.”

 

“நான் கையாலாகதவன் என் தாயைக் காப்பாற்ற கை நீட்டி வாங்கிக் கொள்வதைவிட வேறு வழி தெரியவில்லை எனக்கு.”

 

“தாயா, கமலாவா என்று வரும்போது நீ தாயைத் தானே தேர்ந்தெடுத்தாய். கமலாவை நட்டாற்றில் விட்டுவிட்டாய் அல்லவா? உன்னைப் போல் மனதுக்கு ஒருத்தி, மஞ்சத்துக்கு வேறொருத்தி என கமலாவும் வாழ்ந்துவிடுவாள் என்று தானே நீ நினைத்தாய் டேவிட்.”

 

“ஓ நோ! ஆற்றைக் கடக்க உதவிய தோணியை மறந்துவிட்டேன்.”

 

“அது என்ன அவ்வளவு ஈஸியா சொல்லிட்ட டேவிட். சமுதாயத்தில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா?”

 

“அப்படியென்றால் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸும் நானும் ஒன்றுதான். நியாயத்தீர்ப்பு நாளில் எப்படி அந்தக் கேள்வியை எதிர்கொள்வேன்.”

 

“உன்னை நியாந்தீர்க்க வேண்டியது இயேசு அல்ல கமலா தான். கமலாவின் இடத்தில் வேறொருத்தியை வைத்து உன்னால் பார்க்க முடிந்து இருக்கிறது. ஆனால் உன் இடத்தில் வேறொருவனை வைத்து கமலாவால் பார்க்க முடியவில்லை. உனக்கு காதல் ஒரு விளையாட்டு அவளுக்கு அதுதான் வாழ்க்கை.”

 

“அதை நீ சொல்லாதே.”

 

“நான் கமலா அப்பா தந்த பணத்தை பெட்டியில் எடுத்து வந்தபோது எதையும் யோசிக்காமல் வாங்கிய கல்நெஞ்சக்காரனின் கைகள் தானே உன்னுடையது டேவிட்.”

 

“பாவக்கறை படிந்தவை இந்தக் கைகள். அப்போது தன்னலத்தைப் பற்றியே யோசித்தது எனது புத்தி. உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த சாத்தானை விழிக்கச் செய்துவிட்டேன். கல்லறைக்குப் போகும்வரை எனக்கு இவ்வுலகில் நிம்மதி இருக்காது.”

 

“நீ விளையாடியது ஒரு பெண்ணோட வாழ்க்கையில். பெண் பாவம் பொல்லாதது என்று சொல்லிக் கேட்டதில்லையா? கமலாவை ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டு பெரிய உத்தமன் மாதிரி பேசுகிறாய்?”

 

“காதலித்த போது என்விரல் நகம் கூட அவள்மீது பட்டதில்லை தெரியுமா? இந்த நாடகத்தில் உனக்கு பங்கில்லை என்று மீன் மாதிரி நழுவப் பார்க்காதே. பணத்துக்காக காதலை விலைபேசிவிட்டேன் என்கின்றாயே அன்று திட்டமிட்டு என்னுடைய பலவீனம் எதுவென்று தெரிந்துதானே அடித்தீர்கள்.”

 

“நீ வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டாய் எனத் தெரிய வந்தால் கமலா என்ன நினைப்பாள் என்று யோசித்து பார்த்தாயா?”

 

“அப்போது எதுவும் என் கையில் இல்லை. அம்மா இறக்கும்போது ஸ்டெல்லாவை என் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு போய்விட்டாள் நான் என்ன செய்வது.”

 

“உன் கோழைத்தனத்துக்கு உன் அம்மாவைக் காரணம்காட்டி தப்பிக்கப் பார்க்காதே.”

 

“யெஸ் ஐயம் புல்ஸிட். செய்த தவறை நியாயப்படுத்தப் பார்க்கிறேன். என் பழைய நினைவுக்குறிப்புகளில் மட்டுமே கமலா இருக்கிறாள். வாழ்க்கை எங்களை எங்கெங்கோ கொண்டு சென்று நிறுத்திவிட்டது. ஒரு புள்ளியில் நாங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வது கர்த்தரே. உன் சோதனையில் இதுவும் ஒன்றென நான் சகித்துக் கொள்ளவேண்டுமா?”

 

“உன் பாவத்தைக் கழுவ கர்த்தரே இந்த வாய்ப்பை தர்றாருன்னு நினைச்சிக்க.”

 

டேவிட் கையைப் பிசைந்தபடி, “ஜீஸஸ்! பாவமூட்டையை இறக்கி வைக்க பாவியின் தயவை நாட வேண்டியிருக்கிறதே. என்ன ராயப்பா பூடகமாக பேசுகிறாய் என்ன வாய்ப்பு சொல்லேன் பார்ப்போம்.”

 

“நான் உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன். என்ன, ஏதுன்னு கேள்வி கேட்காம என்னோட வர்றணும்.”

 

“ம். சரி! இன்னும் ஒன்ன முழுசா நம்ப முடியலை ராயப்பா. செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடுறியா.. இல்ல உன் பாவத்துல என்னையும் பங்கெடுத்துக்க கூப்பிடுறியான்னு தெரியலை.”

 

இருவரும் கிளம்பினார்கள் காரை ராயப்பன் ஓட்டிவந்தான். கார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிறித்தவ மிஷனரீஸ்ல் நின்றது. காரை விட்டு இறங்கிய டேவிட் தயங்கியபடி உள்ளே நுழைந்தார்.

 

“ராயப்பன் இங்கே என்ன நடக்குது?”

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரியும் டேவிட்.”

 

மாடிப்படியிலிருந்து கன்னியாஸ்திரி உடையில் கீழே இறங்கி வந்துகொண்டிருந்த கமலாவைப் பார்த்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த டேவிட் திடுக்கிட்டு எழுந்து கொண்டார்.

 

‘ஓ மை லார்டு! இது என் கமலாவா? கர்த்தரே இது என்ன சோதனை மேல் சோதனை. இந்தக் கோலத்தில் கமலாவை நான் பார்க்கவேண்டுமா?’

 

அருகில் வந்த கமலா “நீங்க டேவிட் தானே?” என்று அடையாளம் கண்டுகொண்டு கேட்டாள்.

 

“ஆமாம். அந்த அடிமுட்டாள் நான் தான்.”

 

“என் வாழ்க்கையிலிருந்து போனவர் போனவர்தான்னு நினைச்சிண்டு இருந்தேன். எப்படி இருக்கிங்க?”

 

ராயப்பன் இடைமறித்து “இப்ப அவரு பழைய டேவிட் இல்ல அவருக்குன்னு சொத்து பத்து, ஆள் அம்பு, படை பந்தோபஸ்துன்னு சகஜமும் அவர் பின்னால் இருக்கு” என்றான்.

 

“ஓ! அப்ப உங்களுக்கு மேரேஜ் ஆகி குழந்தைங்கெல்லாம் இருக்கா?”

 

“ஏன் மெளனமா நிற்கிறீங்க டேவிட், கேட்கறாங்கள்ல பதில் சொல்லுங்க.” என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினான் ராயப்பன்.

 

“கமலா உன் எதிரே குற்றவாளிக் கூண்டில் நான் நிற்கிறேன். என் தரப்பை நியாயப்படுத்த முடியாது.”

 

“டேவிட் என்னை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன். நம் எல்லோருக்குமாக அவர் தானே சிலுவை சுமந்தார்.”

 

“இந்தப் பாவி உன்னைக் கைவிட்ட பின் பிதா உனக்கு அபயமளித்திருக்கிறார்.”

 

“இதோ இங்கே உள்ள ஒவ்வொருக்கும் ஒரு கதையுண்டு.”

 

“காதலிக்கிறேன் என்று ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியது பெரும் குற்றமாக உனக்குப் படவில்லையா கமலா? ஐ மீன்! கமலா என்று பெயர் சொல்லலாமா?”

 

“உங்களைப் போல செய்தது தவறு என ஒத்துக்கொள்ள வேறெந்த மனிதராலும் முடியாது.”

 

“ஒத்துக்கொண்டு என்ன பிரயோஜனம் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை அஸ்தமனமாக்கிவிட்டேனே…”

 

“இல்ல இது அஸ்தமனமல்ல புதியவிடியல். கர்த்தருக்காக ஊழியம் செய்வதை பெரும் பாக்கியமா கருதுறேன். இந்த சிலுவையும், பைபிளும் எப்போதும் எனக்கு துணையாய் இருக்கின்றன. எந்த தேவஆட்டுக்குட்டியும் தேவனிடத்தில் வந்து தானே ஆகவேண்டும்.”

 

“வாழ்க்கையில் வசந்தகாலத்தை நீ பறிகொடுத்ததற்கு நான் தானே காரணம்.”

 

“எல்லோரும் அந்திமகாலத்தில் பிதாவிடம் வந்துதானே ஆகவேண்டும். ஒன்றைப் பெறுவதற்கு, ஒன்றை இழந்தாக வேண்டுமல்லவா.”

 

“கமலா நான் உன் வாழ்க்கையில் பிரவேசித்து உன் கனவுகளை சுக்குநூறாக உடைத்ததற்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எதுவானாலும் கேள்.”

 

“வாழ்க்கை கடல் உங்களை ஒரு கரையிலும் என்னை ஒரு கரையிலும் ஒதுக்கி உள்ளது. நம் வாழ்க்கையை நாம்தானே வாழ வேண்டும்.”

 

“இருபத்தைந்து வருஷமாக குற்றவுணர்ச்சி என்னை மென்று தின்று கொண்டிருந்தது கமலா.”

 

“என்னிடம் அன்பும் பரிவும் காட்டிய மனிதரை இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தவறுசெய்வது மனித இனம் மன்னிப்பு அளிப்பது கடவுளின் குணம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக” எனக் கூறி கமலா இருக்கையிலிருந்து எழுந்துகொண்டாள்.

 

டேவிட் அமைதியாக காரை நோக்கி நடந்தார். மேற்கே மின்னல் வெட்டியது. திரும்பி ஒருமுறை தேவாலயத்தின் மேலுள்ள சிலுவையை பார்த்தார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்ற வரிகள் ஞாபகம் வந்தது. அவை டேவிட்டைப் பொறுத்தவரை கர்த்தரால் சொல்லப்பட்டது அல்ல கமலாவால் சொல்லப்பட்டது.

Saturday, December 5, 2020

மார்க்கம் என்னை அழைக்கிறது – 4

 


இருக்கு இல்லைங்கிறது வேற விஷயம். நீ நேரில் பார்த்த மாதிரி வக்காலத்து வாங்கறங்கிறேன். இப்ப காய்கறிகடைக்கு போய் காய்கறி வாங்குற எந்த மண்ணுல விளைஞ்சதுன்னா கேட்கற. கேட்டீன்னா கடைக்காரன் உன்னை ஏறஇறங்க ஒருமாதிரி பார்க்கமாட்டான். சமையலுக்கு உதவுவதை சத்தம் போடாம வாங்கிட்டு வர்ற பக்கத்து வீட்டுக்காரன் எதிர்த்த வீட்டுக்காரன்கிட்ட சாதி பார்க்குற. எல்லோரும் தாயின் வயிற்றிலிருந்துதான் வெளியே வர்றோம். பிறப்பால் நான் உயந்தவன்னு ஒருவனும் மார்தட்டிக்க முடியாது. அடுத்தவன் சுவாசப்பைக்குள் போயிட்டு வர்ற காற்றைத் தானே நீ சுவாசிக்கற. எல்லாரையும் மண்தான் திங்கப் போகுது. இதுல நீ உயர்ந்தவன்ங்கிற. அல்லா மரணத்தை பொதுவில்தான் வைத்து இருக்கிறான். வர்றதுக்கும்  ஒரு வழிதான் போறதுக்கும் ஒரு வழிதான்.

 

வந்துபோகும் நீ மண்ணை ஏன் சொந்தம் கொண்டாடுகிறாய் என்கிறேன். இளவயதில் இரத்தத் திமிரில் முறுக்கிக் கொண்டு திரியலாம். நாற்பதைக் கடந்துவிட்டால் மரணத்தின் நிழல் வாழ்க்கையில் கவிய ஆரம்பித்தவுடன் பயம் வருகிறதல்லவா. நீ அடுத்தவன் முதுகை படிக்கல்லாக்கி ஏறி வந்திருக்கலாம் அது அல்லாவுக்கு தெரியாமலிருக்குமா? சம்பாதிக்கலாம் தான் அதிலும் ஒரு நெறிமுறை வேணும். எவ்வளவு தான் கொட்டிக் கிடந்தாலும் மூன்று வேளைக்கு மேல் சாப்பிட வயிறு இடம்தருகிறதா என்ன? மருத்துவமனையிலில் இருந்துகொண்டு பாதி சொத்தை கரைக்கிறாயே நேர்மையாக சம்பாதித்ததென்றால் இப்படி கரையுமா? நான் கேட்கிறேன் படிக்கறது இராமாயணம் இடிக்கிறது இராமர் கோவிலா?

 

புல், பூண்டு, நரி, புலி எல்லாம் வாழ்கிறதுதான். அதன் வாழ்க்கை எப்போதாவது வரலாறு ஆகியிருக்கிறதா? நீ இங்கே குபேரனாக இருக்கலாம் போகும்போது ஒரு குண்டூசியை உன்னால் எடுத்துப் போக முடியுமா? காட்டுல சிங்கம் இருக்கே வயிறு நிறைஞ்சுதுன்னா வேட்டையாடாது. உனக்கு எவ்வளவு தான் கொட்டிக் கொடுத்தாலும் போதுங்கிறியா? வானத்தை பார்த்தாயா பிரதிபலன் பாராது பொழிகிறது, பார்த்தாயா அதுக்கென்ன தலையெழுத்தா? அசலுக்கு அநியாய வட்டி கேட்கிற அந்த வட்டியையும் குட்டிப் போட வைக்கிறியே எந்த ஊர் நியாயம் இது. செத்தவன் வீட்டுக்கு போய் துக்கம் விசாரிக்கிறியே நீயும் ஒருநாள் போக வேண்டியிருக்குமேன்னு யோசிச்சியா? அப்படி யோசிச்சீன்னா எந்த மதத்தை சேர்ந்தவனாய் இருந்தாலும் நீ இஸ்லாமியன் தான். காட்டாற்று வெள்ளம் வருது கரை உடைஞ்சி வீடு தண்ணீரில மூழ்கிடுமோன்னு பயப்படுறீல.

 

நல்லது பண்ணிட்டு அண்டார்டிகாவுக்கு போ உனக்கு சேர வேண்டிய உணவை பனிக்கரடி கொண்டு வந்து கொடுக்குங்கிறேன். இதை நான் சொன்னா நம்பமாட்ட பண்றதையெல்லாம் பண்ணிட்டு கடைசி காலத்துல சம்போமகாதேவான்னா என்ன அர்த்தம். வீடு போபோங்குது காடு வாவாங்குது அப்ப இருதலைக்கொள்ளி எறும்புமாதிரி தவிப்பீல. நீ என்னதான் பக்திப்பழம் மாதிரி நடிக்கலாம் அவன்கிட்ட முடியுமா? அல்லாகிட்ட உன் பாட்சா பலிக்காது அவன் சகலத்தையும் அறிந்தவன். நான் அப்படித்தான் வாக்கிங்கும் போக மாட்டேன் ஜாக்கிங்கும் போக மாட்டேன் ஆனா நாய் என்னை துறத்துனதுன்னு வை ஒலிம்பிக்ல ஓடுறவன் என்கிட்ட தோத்துறுவான் அப்படி ஓடுவேன்.

 

நீ உமி கொண்டுவா நான் அவல் கொண்டு வர்றேன் ஊதிஊதி தின்போங்கிற கதையா? வாய்ப்பு எப்போதும் ஒருமுறைதான் நீ என்ன தான் பலபிறவிகள்ன்னு கற்பிதம் கொண்டாலும் சரி. என்னெல்லாமோ திட்டமெல்லாம் போடுற நடந்துருதா? அப்ப லகான் யார் கையில இருக்கு? சுற்றிலும் அகழி வெட்டி கோட்டைக்குள்ள பதுங்கிக்கிற கதையா? எத்தனை நாள் அப்படி இருப்ப? பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லைங்கிறேன். இந்தப் பூமி அல்லாவினுடைய வீடு நீ அசிங்கம் பண்ணிவைச்சிட்டு போய்விடாதேங்கிறேன். ஈ தான் கண்டதுலையும் உட்காருங்கிறேன். நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்ச கதையை கேள்விப்பட்டிருக்கியா அது தான் இப்ப நடந்து போச்சி. வீடு பெருசா இருந்தா என்ன உள்ளம் சிறுசால்ல இருக்கு.

 

ஆசையே அழிவுக்கு காரணம்னு எல்லோரும் தான் பள்ளிக்கூடத்துல பாடம் படிச்சோம். என்ன கோயில் காளையா தண்ணி தெளிச்ச விடுறதுக்கு. அடுத்தவன் விஷயத்துல மூக்கை நுழைக்கிறது எல்லோருக்கும் பிடிக்கும்தானே. முதல்ல உன் யோக்கிதை என்னன்னு பார்த்துட்டு அடுத்தவன் மேலே கையைக் காட்டுங்கறேன். நம்பிக்கைத் துரோகம் செய்தவன் வானளாவிய அதிகாரம் படைத்தவனாக இருக்கலாம். அதனால் என்ன வரலாறு அவனை மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ளாது. வாழ்க்கை திறந்த புத்தகமாக இருக்க வேண்டுமேத் தவிர, அசிங்கங்களின் குவியலாக இருக்கக்கூடாது. காசு வரும் போகும். அல்லாவை நம்பி இறையச்சத்துடன் வாழ்பவனையே உத்தமன் என்று உலகம் சொல்லும். என்னடா நம்பிய இறைவன் சோதனை செய்கிறானே எனக் கருத வேண்டாம். தங்கமானாலும் உருக்கினால் தானே ஆபரணம் செய்யமுடியும். வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் அல்லா மீது வைக்கும் விசுவாசமே நம்மை இங்கு கரைசேர்க்கும்.

மார்க்கம் என்னை அழைக்கிறது – 3

 


சரி இறைவன் எங்கும் இருப்பவனாக வைத்துக் கொள்வோம். அவன் நீ வணங்குகிறாயா இல்லையா என்றா பார்க்கப் போகிறான். எங்க சாமின்னா நீ செய்கிற அயோக்கியத்தனத்துக்கெல்லாம் அது துணை வருமா? நீ எங்கெல்லாமமோ தேடிப் பாரு ஏண்டா பறிகொடுத்தது எங்கேயோ அங்க தானே அது இருக்குங்கிறேன். சாமி எங்கேயாவது வந்து சொல்லிச்சா இது என் எல்லைன்னு நீதான் சொல்லிகிட்டுத் திரியற. இந்தியாவை ஏழை நாடுங்கிறோம் பணக்காரனும் இருக்கத்தானே செய்கிறான். டாப் 10 லிஸ்ட்ல இடம்பிடிக்கிறாங்கள்ள. அப்ப எவன்  வல்லவனோ அவங்கிட்ட வாலாட்டத்தானே செய்யற. ஊருக்குள்ள உலவுற சிங்கமெல்லாம் டாஸ்மாக் வாசல்லதானே தவங்கிடக்கிங்கறேன்.

 

சட்டையை எப்படி வாங்குற இது அளவுங்கிறில இல்ல சட்டைய வாங்கிட்டு உடம்பு அளவை மாத்திப்பியா அப்படித்தான் இருக்கு நீ சொல்றது. இப்ப பூமி இருக்கு வானம் இருக்கு உதிக்கிற சூரியன் ஒன்றுதானே இரண்டா உதிக்குது. எப்பயாவது சூரியன் மேற்கே உதிச்சு நீ பார்த்து இருக்கியா. பெய்கிற மழை கீழேதானே விழுது ஏன்  மேலே போகலை என்னைக்காவது யோசிச்சி பார்த்து இருக்கியா. ஆண்டவன் அறிவைக் கொடுத்திருக்கான் ஆனா நீ அடிமையாத்தான் இருப்போம்ங்கிற. என்ன விருதா தரப்போறாங்க இருக்கிற அடிமைகளிலேயே இவன் உயர்ந்தவன் எள்ளுண்ணா எண்ணெய்யா வந்து நிக்கறவன்னு. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்ங்கிற நான்  கேட்கிறேன் வீட்டை வாடகைக்கு விடணும்னா நாலு பேர்கிட்ட விசாரிக்கிற இல்ல, அவன் எப்படிபட்டவன்னு விசாரிக்கிற இல்ல. பொண்ணுக்கு வர்ற வரனைப் பத்தி விசாரிக்கிறாயா இல்லையா. உன் சமயத்தைப் பத்தி விசாரிங்கிறேன். கிணத்துத் தவளையாய் ஏன் கத்துறேங்கிறேன் மேலே வந்து பாருங்கிறேன். பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் இருண்டுடுமா என்ன. வானத்துல ராக்கெட் ஏவுறவன் பஞ்சாங்கமா பாக்குறான். கூட்டுப்புழு றெக்கை முளைச்சி பட்டாம்பூச்சியாய் வானத்துல பறக்குதுல உனக்கு என்ன வந்துது மண்புழு கணக்கா ஏன் மண்ணை குடையறேங்கிறேன். ரெண்டு கால் ரெண்டு கை இருக்கிறதுனால மட்டும் மனுசன் கிடையாது. நல்லவனா இருந்தாலும் கெட்டவனா இருந்தாலும் நாலு பேர்தான் தூக்கிட்டுப் போகப்போறானுங்க அங்க போய் என்ன பண்ணுவங்கிறேன். ஆளு, அம்பு, படை, பலம் உன்கூட வருமாங்கிறேன். இங்கே நீ முக்கியஸ்தரா இருக்கலாம் அங்கே அவன் சொல்லுக்கு நீ கட்டுப்பட்டுத்தானே ஆகணும்.

 

முள் குத்திடிச்சிங்கிற நான் கேட்கிறேன் முள்ளா வந்து குத்திச்சி. தட்டுறது சரிதான் ஏன் தப்பான இடத்துல தட்டுறேங்கிறேன். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டு கொடுக்குங்கிற. விதியை நம்பிநம்பித்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேங்கிறேன். கோழையா நூறு வருஷம் வாழ்றதை விட வீரனா ஒருநாள் வாழ்ந்து செத்துப் போகலாங்கிறேன். வாழ்க்கையோட அரிச்சுவடி கூட உனக்குத் தெரியாதுங்கிறேன். குர்ஆன் அடங்கி இருக்கச் சொல்லுது நீ ஆடுவேண்ணா நான் என்ன செய்யறது. ஒன்னு சொல்றதை நம்பணும் இல்ல சுயபுத்தி இருக்கணும். நீ ஏறுகிற தோணியில ஓட்டை இருக்குடா மூழ்கிடுங்கிறேன் நீ என்னை அலட்சியப்படுத்துற. ஒரு வாய்ப்பு தான் தருவான் அல்லா.

 

காண்பதெல்லாம் மஞ்சளாத் தெரிந்தால் அது காமாலைடா கடவுள் இல்லைங்கிறேன். வார்த்தை ஜாலத்தை நம்பாதேங்கிறேன், பிறந்தது பெரிய விஷயத்துக்காக சிறுபிள்ளைத்தனமா இருக்காதேங்கிறேன். வாழ்க்கை நாடகத்துல கடவுள் எங்கிருந்து வருகிறார்ங்கிறேன். உன் அரிதாரத்தைக் களைக்கும்போதுதான் தெரியும் கடவுள்ன்னா யாருன்னுங்கிறேன். உன் வேஷத்தை நீ கலைச்சா அவன் வேஷத்தை அவன் கலைப்பாங்கிறேன். சிட்டுக்குருவிக்கணக்கா சில்லரைத்தனமா வாழ்கிறவன் மெக்கா இருக்கும் திசையிலகூட தலைவச்சி படுக்க முடியாதுங்கிறேன். நான் மதில்மேல் உட்கார்ந்து இருக்கேன் அந்தப்பக்கம் என்ன நடக்குது இந்தப் பக்கம் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியும். என்னை ஏமாத்த முடியாது. பொழுதை விடியச் செய்கிறவன் அல்லா என்று படுக்கையிலிருந்து உன்னை எழுப்பிச் சொல்கிறேன் நீ நம்பமாட்டேங்கிறே.

 

வசந்தம் வருவதானால் தானாய் வரும் யாரும் அதை தள்ளிவிட முடியாது என்கிறேன். சோளக்கொல்லை பொம்மைதான் இரவில் வயல் வரப்புகளைக் காக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. நான் பாம்பாய் இருந்தால் அல்லவா கருடனுக்கு பயப்படவேண்டும். முயற்சி செய்யாமல் ஒன்றை அடைந்துவிட்டால் அதன் முக்கியத்துவத்தை உணர மாட்டாய். நீ விளையாடு நான் வேடிக்கைப் பார்க்கிறேன் என்பவன் கடவுளல்ல. படைத்தவனுக்கு முன்பு சக்கரவர்த்தியும் பரதேசியும் சமமானவர்கள்தான். யாருக்கும் எந்த விதிவிலக்கும் கிடையாது. வாழ்வு ஒருமுறைதான் அல்லாவைக் கண்டுகொள்ளவில்லையென்றால் நீ  கரையேற முடியாது!

Thursday, December 3, 2020

மார்க்கம் என்னை அழைக்கிறது – 2

 


இமயமாக எழுந்து நிற்கும் இஸ்லாம். இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்ததால் நாம் அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. எவனொருவன் இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றானோ அவன் இஸ்லாமியன் தான். குர்ஆன் ஒரு மகாசமுத்திரம் அதில் நாம் ஒவ்வொரு முறை மூழ்கும் போதும் முத்தெடுக்க முடியும். உண்மையைக் கண்டடைய வேண்டும் என்ற வேட்கை உடையவர்களுக்கு குர்ஆன் பாடம் நடத்தும். காற்று, மழை, வெளிச்சம் எல்லாம் அல்லா அனுப்பியது எனவே நாம் அனுப்பினவருக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும். பிறர் இஸ்லாம் மீது சேற்றைவாரி தூற்றினாலும் உண்மை எங்கிருக்கிறதோ அந்த மதம் தானே உலகில் உயர்ந்து நிற்கும். நீ இந்த நரகத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவன் என அல்லா நினைத்தால் தான் குர்ஆன் உன்னை வந்தடையும்.

 

ஜோசியக்காரனின் வார்த்தைகளைக் கூட நம்பிவிடலாம். கடவுளை கண்டேன் என சொல்பவனிடம் நீ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவனுக்கு ஒரு கடவுள் இவனுக்கு ஒரு கடவுள் அல்ல. நம் எல்லோருக்கும் ஒரே கடவுள், அல்லா தான் அந்த கடவுள். ஒருசிலருக்கு சிகரெட் பிடிக்கவில்லையென்றால் தூக்கமே வராது உறக்கத்தைக் கொடுப்பதால் சிகரெட் அவனுக்கு கடவுளாகிவிடுமா? சிறு வயதில் விளையாடுவதற்கு பொம்மை கொடுப்பார்கள் அந்த பொம்மைகளை இறுதி நாள்வரை கட்டி அழுது கொண்டு இருப்பீர்களா? மூடனே உன்னைச் சுற்றி வெளிச்சமிருக்கிறது சற்று கண்திறந்து பாரடா என்கிறேன்.

 

நெருப்பு சுடும் என்கிறார்கள். உன் கையில் நெருப்புபட்டு காயமடைந்தால் தான் உன்னால் உணர முடியும். நான் கண்டேன் என்கிறான், நீ கண்டதால் எனக்கென்ன பயன் எனக்கும் அவனைக் காட்டமுடியுமா என நீ கேட்க வேண்டும். ஆடுமேய்ப்பவனுக்கு தெரிந்திருக்கும் மந்தையில் எந்த ஆட்டினை அடுத்த நாள் பலியிடுவதென்று. அந்த ஆட்டுக்குத் தெரியுமா? புற்களை மேய்ந்து போதை தலைக்கேறியிருக்கும் அந்த ஆட்டுக்கு நம்மால் பாடம் நடத்த முடியுமா? நடக்கிற காரியமா அது! ஏன்டா அவன் தான் பலியிடுவேன் என்கிறானே பலியிடுவற்கு நீ என்ன ஆடா இல்லை நீ புலி என்று சொல்வதற்கு இறுதி தூதராக நபிஅவர்கள் வர வேண்டியிருக்கிறது. நான் வேண்டிக்கொண்டேன் நடந்தது என்கிறான் அப்பனே அதுவல்ல விஷயம் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை கடவுளென்றால் உனக்கு என்னவேண்டும் என்பது மட்டுமல்ல உன் ஜாதகத்தையே அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

பார்க்கிறதுக்கு தங்கம் மாதிரி இருக்கலாம் அதற்காக வெண்கல குத்துவிளக்கை கொடுத்தால் பேசாமல் வாங்கிக்கொண்டு வந்துவிடுவாயா பத்தர்கிட்ட கொடுத்து உரசிப் பார்க்க மாட்டாய். அப்ப விளக்கையே உரசிப் பார்க்கிற நீ சார்ந்திருக்கும் மதத்தை உரசிப்பார்க்க வேண்டாமாங்கிறேன். தங்கமா இல்லை முலாம் பூசுனதை தங்கம்னு சொல்லி பித்தலாட்டம் செய்கிறார்களா என்று. நான் சொல்லி ஏற்றுக்கொள்ள வேண்டாம் பந்தாய் அவர்களின் கால்களில் உதைபடுவாய் பார் அப்போது தெரியும். அப்போது இவன் கத்தினானே கைகாட்டிவிட்டானே பைத்தியம் என்றோமே என்று புலம்புவாய். புலம்பி என்ன பயன் தலைக்கு மேலே தண்ணீர் போய்விட்டதே. கத்துகிறவன் என்ன கத்துகிறான் என்று காதுகொடுத்து கேட்க வேண்டும். இந்த காதுல சேதியை வாங்கு பிடிக்கலைன்னா பூ சுத்தறான் அப்படின்னா அந்தக் காதால விட்டுவிடுங்கிறேன் இல்லை காசா பணமா என்ன?

 

ஏகனை அநேகன் என்கிறீர்கள். மனிதனுக்கு ஆறாவது அறிவு கொடுத்ததற்கே பகுத்தறிவதற்காகத்தான். வானில் இருப்பது ஒரு சூரியன். ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சூரியனா உதிக்கிறது. எதிரே நிற்பவனின் பிம்பத்தை பிரதிபலிக்கிறது நிலைக்கண்ணாடி. வருகிறாய் தலைவாரிக் கொள்கிறாய் முகப்பவுடர் பூசிக் கொள்கிறாய் அதைவிட்டு நகர்ந்து செல்கிறாய் அதுதானடா உலகம். எனக்கு சாவே வராது என்று சொல்வது நான் எப்போதும் கண்ணாடிமுன் நின்றுகொண்டிருப்பேன் என்று பிதற்றுவதற்கு ஒப்பாகும். பகுத்தறிந்து பார்த்தால் ஏக இறைவன் தான், நீ புத்தியை அடகுவைத்துவிட்டு என்னிடம் வந்தால் எப்படி நான்கு திசை போகிறது ஒருதிசையை காட்ட முடியும் கூடவேவா நான் வரமுடியும். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதைதான். இந்த சமூகம் ஒருசில பிள்ளையாருக்காக நான் உட்பட எத்தனை பேரை குரங்காக்கியிருக்கிறது தெரியுமா?

 

மானிடன் உலகத்தில் ஓர அங்கம் அவ்வளவே. அவனிடம் ஆளக்கொடுத்துவிட்டு அல்லா ஓய்வெடுக்கப் போய்விடவில்லை பணிசெய்து கொண்டுதான் இருக்கிறான். கருவறையில் பிறந்த எவரும் கடவுளாக முடியுமா இதுதான் என் கேள்வி. இது வந்துபோகும் ஒரு இடம் என்று தெரிந்து கொண்டால் நீ விழித்துக் கொள்வாய். இல்லாவிட்டால்    மரணத்துக்குப் பின் என்ன என்று தெரியாதவன் சொர்க்கத்துக்கு நான் கடவுச்சீட்டு கொடுக்கிறேன் என்பான். அதையும் நம்பி நீ போய் ஏமாந்து வருவாய். இறுதியாக ஒன்று என்னடா இவன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறான் என்று நினைக்காதீர்கள் நீ மோட்சத்தையோ சொர்க்கத்தையோ நினைத்து பிரார்த்தனை செய்யவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. உண்மையாக இறையச்சத்துடன் வாழ்ந்தால் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறந்து வானவர்கள் உன்னை அழைத்துச் செல்வார்கள்!

மார்க்கம் என்னை அழைக்கிறது – 1

 


அல்லா இருந்து கொண்டிருக்கிறான். உண்மைக்காக ஒலிக்கும் குரல்களை வானமண்டலத்திலிருந்து கேட்கிறான். மனிதர்கள் காக்கைகளாக இருந்தால் சோற்றுப் பருக்கைகளை தின்றுவிட்டு எச்சமிட்டுப் போய்விடலாம். சாதாரண சூதாட்டத்திலும், கேளிக்கைகளிலும் என்ன இருக்கிறது. அல்லாவின் காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்டு இருக்கின்றோம். அல்லா மதங்கடந்த கடவுள். கிணற்றுத் தவளையாக இருந்துகொண்டு என் மதம் தான் உயர்ந்தது எனப் வாதாடிக் கொண்டிருக்கக் கூடாது. அல்லா ஒளிப்பிழம்பால் சூழப்பட்டு இருக்கிறான்.

 

குர்ஆனின் ஒரு அத்தியாயத்தையாவது உங்களின் கடவுளர்களின்  துணை கொண்டு எழுத முடியுமா? சத்தியத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு மதக்கண்ணாடியால் பார்ப்பவருக்கு அல்லா கடவுளாக தெரியமாட்டான். வாழ்க்கை கடலிலிருந்து கரைசேர்ந்த பின்னர் தான் அல்லா தான் கடவுள் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இறுதித் தூதரால் அருளப்பட்ட திருக்குர்ஆன் வாழ்க்கையை விட மறுமைதான் முக்கியம் என்கிறது. கல்லறையில் மரித்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் ஆற்றல் அல்லாவிடம் மட்டுமே உள்ளது.

 

உலகம் தர்மத்தை ஏற்பவர்கள் ஒரு அணியாகவும் எதிர்ப்பவர்கள் ஒரு அணியாகவும் இரண்டு அணியாக பிளவுபட்டு நிற்கிறது. சத்தியத்தை ஏற்பவர்கள் சீரழிக்கப்படலாம். தர்மத்தை எதிர்ப்பவர்களை அல்லா மரணத்தில் கைவைத்து பார்ப்பான். இஸ்லாம் மனிதன் மகத்தான ஒரு காரியத்திற்காக படைக்கப்பட்டான் என்கிறது. இஸ்லாம் எங்குபோய் ஒளிந்தாலும் கடவுளின் கண்பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது. விண்ணும், மண்ணும், காற்றும், நீருமாக அல்லாவே இருக்கிறான். தீர்ப்பு எல்லோராலும் எழுத முடியும். அத்தீர்ப்பு நியாயத்தின் பக்கம் நிற்கிறதா எனக் கேட்கிறது இஸ்லாம். ஜோடித்து கட்டுக்கதைகளை பக்கம்பக்கமாக நீட்டி முழக்கி எழுதலாம் அதில் சத்தியம் இருக்கவேண்டும், ஓரளவுக்காவது உண்மை இருக்கவேண்டும். மேடை ஏறி உபதேசிப்பது பெரிதல்ல அதன்படி வாழ வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வாழ்வு செல்லாக்காசாகிப் போகும்.

 

உங்கள் எண்ணங்களையும், செயல்களையும் அல்லா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். கருவிலுள்ள சிசுவைப் பற்றிக்கூட அல்லா அறிந்து வைத்திருக்கிறான். மரணத்தில் அல்லாவைச் சந்திக்கப் போகிறோம் என்ற நினைவில் வாழ வேண்டும். அவனுக்கு வேண்டப்பட்டவர், வேண்டப்படாதவர் யாருமில்லை. நபிமார்களுக்கும் நமக்கும் கூட அவன் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. அல்லா ஒருவன் தான் கடவுள். எப்படியெனில் பூமியை அந்தரத்தில் சுழலவிடும், கோள்களை அதன் பாதையில் செலுத்தும் சக்தி அவன். பூமியும், கடலும், காற்றும் யாருடைய கட்டளைக்குக் கீழ்படிகிறதோ அவனே அல்லா. நாம் அஞ்சுவதும், பணிவதும் அல்லாவுக்கே. இணைவைப்பவர்கள் நண்பகலில் இருண்டுபோகச் செய்யட்டுமே பார்ப்போம்.

 

கடவுள் மனித உருவெடுத்தால் ஆசை, மோகத்திற்கு ஆட்பட்டுத்தான் ஆகவேண்டும். அல்லா ஒருவனே உருமற்றவன். சத்தியத்தை கைக்கொள்கிறவர்களுக்கு வழிகாட்டக் கூடியவன். மெக்கா இருக்கும் திசையே உண்மையின் திசை. அல்லா ஒருவனே கடவுள். தண்டனையே கிடையாது மனம் போன போக்கில் வாழலாம் என்றால் அதற்கு எதற்கு மதம். அதற்கு எதற்கு கடவுளர்கள். தடுக்கி விழுந்தவனை தட்டிக் கொடுப்பதுதான் மதமாக இருக்க வேண்டுமேத் தவிர, ஓடமுயல்பவனை காலைவாரிவிடுவதல்ல. மதம் ஒழுக்கத்தைத் தான் உபதேசிக்க வேண்டுமேத் தவிர வேசித்தனத்தை அல்ல. பிரமாண்டமாக இருக்கலாம் அதில் குடிகொண்டவனின் உள்ளம் சில்லரைத்தனமாக இருந்தால்.

 

கடவுள் அறிவுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கவேண்டும். சிந்தனையால் சிறைப்பிடிக்கப்பட முடியாதவனாக இருக்க வேண்டும். ஆட்டுமந்தையைப் போல் கூட்டத்தை சேர்க்காமல் சத்தியப்படி நடப்பவர்களை மட்டுமே மார்க்கத்தை பின்பற்றுங்கள் என அறைகூவல் விடுக்கவேண்டும். உள்ளுக்குள் இருக்கும் ஷைத்தானுக்கு விடை கொடுத்தால் அல்லா அந்த இடத்தில் அமர்வான். குற்றச் செயலுக்கு வக்காலத்து வாங்கும் எந்த மதமும் உருப்பட்டதாக சரித்திரமில்லை. சத்தியத்தை சக்கரைப் பொங்கல் என நினைக்கும் எந்த மார்க்கத்தின் வேரும் அழுகித்தான் போகும். ஆரவார கூச்சலே மார்க்கமாகிவிட்டது தயவுசெய்து அமைதியை நாடுபவர்கள் அல்லாவிடம் வாருங்கள். அவன் சொல்லும் சொற்களை சற்று காதுகொடுத்து கேளுங்கள்.

Sunday, November 29, 2020

திருவடி 5 (கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டி விட்டோம்)

 


உயிர்கள் முக்தி அடைவதற்கு முன்னால் பாரத மண்ணில் உடலெடுக்க வேண்டும். இந்து மதம் தனது அடித்தளமாக வேதத்தைக் கொண்டுள்ளது. இந்த நான்கு வேதங்களும் இறைவனால் அருளப்பட்டது. இந்த வேதங்கள் அனைத்தும் வழிகள் பல இலக்கு ஒன்றே என்கிறது. அசாதாரணமான நிகழ்வின் மீது கட்டமைக்கப்பட்ட மதங்கள் மட்டுமே அழிவைச் சந்திக்கும். மற்ற பகுதிகளுக்கு இறைத் தூதரை அனுப்பி வைத்த இறைவன் பாரத மண்ணில் அவரே அவதாரம் செய்கிறார். நானே வழி, என் மூலமாகத்தான் நீ கடவுளைக் காண முடியும் என்று எந்த தீர்க்கதரிசியும் இந்தியாவில் அறைகூவல் விடுத்ததில்லை.

 

தேடுபவர்கள் என் மூலமாக கண்டடைவார்கள் என யாரும் இங்கு பிரசங்கம் செய்ததில்லை. தேடுகிற நீயே அது என்று தான் இந்து மதம் போதிக்கிறது. உள்ளே குடியிருக்கும் ஆன்மாவுக்கு இந்த உடல் கோயிலாக இருக்க வேண்டும் என்கிறது இந்து மதம். சைவமும், வைணவமும் ஆழமாக வேர் விட்டிருந்ததால் தான் எந்தத் தாக்குதல்களையும் தாங்கி நிற்க முடிந்தது. வார்த்தையாலோ காகிதத்திலோ அல்ல சத்தியத்தை உன் வாழ்க்கையில் பின்பற்றுகிறாயா என்பது தான் முக்கியம். மகுடமோ, அரியணையோ எனக்குத் தேவையில்லை மரணத்தின் ரகசியத்தை எனக்கு நீ கூறு என்று எமதர்மனிடம் பிரகலாதன் கேட்டு நின்றதாக உபநிடதங்கள் கூறுகின்றன.

 

சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப்பிள்ளையின் ஆறாவது தாரமான சின்னம்மைக்கு ஐந்தாவது குழந்தையாக 5.10.1823ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இராமலிங்கம் என்று பெயரிட்டு அழைத்தனர். சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்த இராமலிங்கம் சகோதரர் சபாபதிப்பிள்ளையின் பராமரிப்பில் சென்னையில் வளர்ந்தான். கல்விக்காக குருமார்களிடம் அனுப்பிய போது அவரோ இராமலிங்கம் சுயம்புலிங்கம் தன்னை உணர்ந்தவனுக்கு நான் எப்படி குருவாக இருந்து போதிப்பது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பிள்ளை முருகனை கட்டிக் கொண்டது. ஒன்பது வயதிலேயே கந்தக் கோட்டத்திலுள்ள தெய்வத்தை தமிழால் வாவென்றழைத்தது. முருகனின் தரிசனம் கிடைத்த பிறகு இராமலிங்கம் வாயிலிருந்து தமிழ் ஊற்றாய் பெருக்கெடுத்தது.

 

சபாபதிக்கு அன்று உடம்புக்கு நோவு. புராணப் பிரசங்கத்துக்கு வேறு யாரைக் கூப்பிடுவது என்று காரியஸ்தர்கள் யோசித்த போது, இராமலிங்கத்தை அழைத்துப் போகலாம் என்று முடிவானது. தமிழுக்கான மேடையில் முருகன் தன்னை வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறான் என இராமலிங்கம் புரிந்து கொண்டது. அன்று நிகழ்த்தப்பட்ட பிரசங்கத்தில் தேன் குடித்த வண்டாய் எல்லோரும் இராமலிங்கத்தின் பேச்சுக்கு மயங்கினார்கள். இது சபாபதிப்பிள்ளையின் காதுக்கு எட்டியது. அவர் தனக்கு பின் வந்திருப்பது சாதாரணக் குழந்தை அல்ல கடவுள் காரியத்துக்கு நாமும் மண்சுமப்போம் என்று அமைதியானார்.

 

முருகனே தமிழுக்காக சம்பந்தராய் அவதாரமெடுத்ததை இராமலிங்கம் அறிந்து கொண்டது. திருவாசகத்தை வாசித்த போது இராமலிங்கத்தின் மெய்யே உருகிப் போனது. சென்னைப் பட்டணத்தின் பொய்யான வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இராமலிங்கம் மருதூர் வந்தடைந்தது. பின்பு கடலூர் வழியாக வடலூர் வந்து அங்கு சமரச சன்மார்க்க சங்கத்தையும், சத்திய தருமச் சாலையையும் நிறுவியது. மண்ணை பொன்னாக்கும் இரசவாதத்தை செய்துகாட்டி இந்த மண்ணுக்காவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும் ஏன் இறைவனை மறந்து பாவக்குழியில் விழுந்து புரள்கிறீர்கள் என்றது. இராமலிங்கம் பசிக்கு உணவளித்து ஞானத்தாகத்தை தீர்க்கவும் வழி காட்டியதால் வள்ளலார் என அழைக்கப்பட்டது. வள்ளலாரிடமிருந்து நாம் பெற்றுக்  கொண்ட ஞானப் பொக்கிஷம் ஏழேழுப் பிறவியிலும் நம் கூட வந்து நம்மை அரண் போலக் காக்கும் சக்தி படைத்தது.

 

1874ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் அன்று வள்ளலார் வெள்ளாடை உடுத்தி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என வாயால் உச்சரித்துக் கொண்டு சித்தி மாளிகையின் அறையினுள்ளே நுழைந்தார். பக்த கோடிகள் கதவினை வெளிப்புறத்திலிருந்து தாழிட்டார்கள். அவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் திறக்கக் கூடாது என வள்ளலார் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். அவ்வூர் தாசில்தாரிடம் விஷயம் போக மூன்றாம் நாள் திறக்கச் சொல்லும் உத்தரவுடன் வந்து நின்றார். அரச கட்டளைக்கு அடிபணிந்து திறக்கவே உள்ளே அடிகளைக் காணோம் வெறும் கற்பூர வாசமடித்தது. அதிகாரிகள் வெறுங்கையோடு திரும்பினார்கள். ஜோதி சிவத்திடம் கரைந்துவிட்டது. உலகில் சைவ நெறியைக் காக்க போரிடும் மையமாக வடலூர் இன்றளவும் விளங்கி வருகிறது.

Monday, November 2, 2020

திருவடி 4 (பட்டினத்தார் நுனிக்கரும்பு இனிக்கும்வரை நடந்து கொண்டிருந்தார்)

 


உலையில் பழுக்க வைத்து சம்மட்டியால் அடித்தால் தானே அருவாள் உருவாகும். சோதனையும், துன்பங்களும் அப்படியே. அவர்கள் பணத்தாசையும், பெண்ணாசையும் பிடித்து அலைந்து தனக்குத் தானே குழிவெட்டிக் கொள்கிறார்கள், நீ வா உனக்கு மட்டுமாவது உண்மை என்னவென்று புரியவைக்கிறேன் என்று சொல்கின்றான் சிவன். சுவையென்பது வாய் வரைக்கும் தானே தொண்டையைத் தாண்டிவிட்டால் என கொக்கி போடுகிறான். இன்னாருக்கு இன்ன இடத்தில் பிறக்கப்போகிறோம் என்பது யாருக்காவது முன்கூட்டியே தெரியுமா என்ன? பணத்தின் மூலமாக உடலை விலைபேசலாம் மனதை அடிமையாக்க முடியுமா? உடலும் ஓரிரவு மட்டும் தானே உனக்கு வாடகை அடுத்த வாடிக்கையாளர் கையில் பணத்தோடு காத்திருப்பான் அல்லவா? நல்லதை கடைவிரிப்பவர்கள் கொள்வாரில்லை என புலம்பத்தான் வேண்டியிருக்கிறது. காலப்போக்கில் பெண், பொன், மண் திகட்ட ஆரம்பிக்கிறது இதுநாள் வரை நீ சக்கரைப் பாகுவைத்தான் தேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாய். பேரானந்தக் கடலில் அலையில் மட்டுமே நீ கால்நனைத்தாய். மீனுக்கு தான் கடலில் இருக்கிறோம் என்ற தன்னுணர்வு வருமா? நீ கனவு காண்கிறாய் என்பது விழித்த பிறகு தானே உனக்குத்  தெரிகிறது. வாழ்க்கையும் சொப்பனம் தான். சோதனையும், கஷ்டங்களும் உனக்கு அடிமேல் அடி கொடுத்து விழித்துக்கொள் விழித்துக்கொள் என்கிறது.

 

எது இங்கு நிலையானது அதைக் கண்டுபிடி. பெண்ணாசைக்கு நீ ஆட்பட்டாயேயானால் செக்குமாடு மாதிரி இங்கேயே சுற்றிச் சுற்றி வர வேண்டியதுதான். மணணாசையால் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு மீதி நாட்களை சிறைச்சாலையில் கழிக்க வேண்டியது தான். நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உனக்கு ஒருபாடம் ஆனால் நீ அதை புரிந்து கொள்ள மாட்டாய். இது அறிவியல் யுகமாக இருக்கலாம் ஆனாலும் வாய் வழியாகத்தானே உண்கிறோம், நாசி வழியாகத்தானே சுவாசிக்கிறோம். எப்படி நாணயத்துக்கு இருபக்கம் உள்ளதோ அதே போல் வாழ்க்கைக்கு மறுபக்கம் உள்ளது. மரணம் அதைத் தெரியப்படுத்தும். அணை போட்டுத் தடுத்தாலும் நதி கடலை நாடத்தானே செய்கிறது.

 

எத்தனையோ கோடி பேர்களில் ஒருசிலர் தானே உலகத்தைத் துறக்கிறார்கள். சந்நியாசி உலகத்தைத் துறந்தவன் மட்டுமல்ல உலகத்தைப் பொறுத்தவரை அவன் இறந்தவன். உன் நடைமுறை வாழ்க்கையை நேர்படுத்திக் கொள்ளாமல் கடவுள் அருவமா, உருவமா என்று வாதிடுவதில் என்ன பயன். எத்தனை பிறவிகளாக வணங்குவதையே தொழிலாகக் கொண்டிருப்பாய் அவனை நோக்கி ஒருஅடி எடுத்து  வைக்க வேண்டாமா? இந்து மதத்தில் இத்தனை தெய்வங்கள் எதற்கு என்கிறாய்? தாயானவள் குடும்பத்திலுள்ளவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி விதவிதமாக சமைக்க வேண்டியுள்ளதே. முருக பக்தியில் ஆட்பட்டுப் போனால் கந்தா என்றவுடன் கண்களில் கண்ணீர் வர வேண்டாமா? வாழ்வை ஒழுங்காக வாழ்ந்திருந்தால் மரணத்தைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். அம்மா என்ற சொல் உன் அம்மாவை மட்டுமா குறிக்கிறது. கடவுள் மனிதனாக இறங்குவதைப் போல மனிதன் கடவுளாக ஏற்றம் பெறும்வரை இந்த சொக்கட்டான் விளையாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

 

காவிரிபூம்பட்டினத்தில் திருவெண்காடர் பெரும் செல்வந்தர். ஆள்வதற்கு ராஜ்ஜியமிருந்தும் ஒரு வாரிசில்லையே என்ற ஏக்கம் அவருக்கிருந்தது. திருவிடைமருதூர் ஈசனிடம் வரமருள வேண்டிக் கொண்டார். நடப்பது எதுகுறித்து என்று மனிதனால் உணர்ந்து கொள்ள முடியுமா என்ன? அன்றிரவு திருவிடைமருதூரில் வசிக்கும் இருக்கின்ற செல்வத்தையெல்லாம் சிவகாரியங்களில் இழந்த ஆதிசைவர் கனவில் தோன்றி நான் தீர்த்தங்கரை வில்வ மரத்தடியில் ஒரு ஆண் குழந்தையாக தவழ்கிறேன் என்னை திருவெண்காடர் தேடி வருவார் அவரிடம் ஒப்படைத்து விட்டு எனது எடைக்கு எடை தங்கம் தருவார் பெற்றுக் கொள், உன் பீடை ஒழியும் என்றார். அதே நேரம் திருவெண்காடர் கனவில் தோன்றி ஆதிசைவர் குழந்தை தருவார் பெற்றுக் கொண்டு எடைக்கு எடை தங்கம் கொடுத்துவிடுமாறு கூறி இருந்தார்.

 

திருவெண்காடர் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். அவர் உள்ளம் குளிர்ந்தது. சிவனருட்செல்வனாதலால் மருதவாணன் என அவனுக்கு பெயரிட்டார். சிவகலை அம்மாள் குழந்தையின் கால் மண்ணில் பாவாமல் சீராட்டி வளர்த்தாள். காலம் மிகவும் புதிரானது எப்போது காலை வாரிவிட்டுச் சிரிக்கும் எனத் தெரியாது. மருதவாணன் வாலிப பருவத்தை எட்டினான். தந்தையின் முதுமை காரணமாக அவருக்கு ஓய்வளித்துவிட்டு மரக்கலத்தில் வாணிபத்திற்கு தானே புறப்பட்டுச் சென்றான். திருவெண்காடரும், சிவகலையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். மருதவாணன் பொற்குவியலோடு வருவான் என்று திருவெண்காடர் காத்திருந்தார். எவ்வளவு செல்வந்தராக இருந்தும் திருவெண்காடருக்கு பணப்பித்து இருந்தது. அன்று காலை மருதவாணன் திரும்பிவிட்டதாகவும் மரக்கலம் முழுவதும் எருமூட்டைகளும், தவிட்டு மூட்டைகளும் இருப்பதாகவும் வேலையாட்கள் வந்து திருவெண்காடரிம் தகவலை தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

 

மருதவாணன் என்ன காரியம் செய்து வந்திருக்கிறான் பார்ப்போம் என்று திருவெண்காடர் துறைமுகத்துக்கு விஜயம் செய்தார். கோபாவேசத்துடன் வரட்டியொன்றை அவர் தூக்கி வீசியெறிய அதிலிருந்து மாணிக்கப்பரல்களும், நவரத்தினங்களும் சிதறி ஓடின. தவிட்டு மூட்டையைக் கொட்டிப் பார்க்க அனைத்தும் பொற்குவியல்கள். திருவெண்காடர் என்ன தான் இருந்தாலும் என் வளர்ப்பு அல்லவா என பெருமிதம் கொண்டார். மருதவாணனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறினர். திருவெண்காடர் மருதவாணனைக் காண வீட்டிற்கு ஓடிச் சென்றார். விஷயத்தைக் கூறாமல் சிவகலையிடம் பிள்ளையைப் பற்றிக் கேட்க அவன் இந்தப் பெட்டியை உங்களிடம் தரச் சொன்னான் இங்கேதான் எங்கேயாவது ஒளிந்திருப்பான் என்றாள் சிவகலை. திருவெண்காடர் பட்டுத்துணியை அவிழ்த்து பெட்டியைத் திறந்து பார்த்தார். அதில் ஊசியும், ஓலைச்சுருளும் இருந்தது. திருவெண்காடர் ஓலைச்சுருளை எடுத்துப் படிக்க அதில் காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. சிவனுக்கு முருகன் ஞானாவுபதேசம் செய்தது போல திருவெண்காடருக்கு யாரும் சொல்லிக் கொடுக்காததை மருதவாணன் சொல்லிக் கொடுத்துவிட்டான்.

 

திருவெண்காடராக வீட்டினுள் சென்றவர், கெளபீனத்துடன் பட்டினத்தாராக வீதியில் இறங்கினார். மருதவாணா பணத்துக்கு அப்புறம்தான் பந்தபாசம் என்று வைத்திருந்தேன் அல்லவா எனக்கு சிறந்த பாடம் புகட்டி விட்டாய். மாயையைப் பிடித்து உழன்று கொண்டிருந்த எனக்கு உண்மை பிடிபட்டுவிட்டது. காவிரிபூம்பட்டினம் அவரது கோலத்தைப் பார்த்து எள்ளி நகைத்தது. பட்டினத்தடிகள் நினைத்துக் கொண்டார் தான் எதை இழந்தேன் எதைப் பெற்றான் என்று ஈசனுக்குத் தெரியும் இவர்களுக்கென்ன என்று. இறந்தன பிறக்கும் பிறந்தன இறக்கும் எனச் சொல்லிக் கொண்டே ராஜவீதியில் திருவோட்டினை ஏந்திச் சென்றார். அவரது பாடல்களைக் கேட்கும் பொருட்டே ஈசன் நுனிக்கரும்பு இனிக்கும் வரை அவரை நடக்க வைத்தான்.