Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

Friday, September 29, 2023

சத்திய சோதனை


 

சத்தியமே கடவுள் என்றவர் மகாத்மா காந்தி. எல்லா நாடுகளும் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆளும் அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த காந்தி அகிம்சையை தேர்ந்தெடுத்தார். வாழ்க்கை அவரைப் பரிசோதித்தது ஆனால் அவர் எள்ளளவு கூட களங்கம் இல்லாதவராக இருந்தார். அவர் ராமரை வணங்கியதால் தீய எண்ணங்கள் அவர் மனதிலிருந்து எழுவதில்லை. சத்தியத்தின் வழி நடந்ததால் அவர் பேச்சுக்கு மதிப்பு இருந்தது. அவர் இந்து மதத்தில் பிறந்திருந்தாலும் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவராக இருந்தார். சொந்த வாழ்க்கைக்காகவோ குடும்ப நலனுக்காக தனது அதிகாரத்தை சுயநலத்துக்காகவோ அவர் பயன்படுத்தியது கிடையாது. தியாக மனப்பான்மை உள்ளவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் சாவதற்கு தயாராய் இருக்க வேண்டுமென்றார். பிரிட்டிஷாரின் ராஜதந்திரங்களால் அவர் பொறுமையை இழந்துவிடவில்லை. போராட்டத்தின் தோல்விகளிலிருந்து படிப்பினையைக் கற்றுக் கொண்டார். வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் எதற்காக செலவழிக்க வேண்டுமென்று திட்டமிடல் இருந்ததால் தான் அவர் மகாத்மா என போற்றப்படுகிறார். எதிலும் பற்றற்ற துறவு மனத்தால் தான் அவர் ஓராடை தரித்தார்.

 

காந்தி சிறு வயதிலேயே தாயையும், தந்தையையும் இரு கண்களைப் போல் வைத்து காக்க வேண்டுமென உறுதி பூண்டார். அரிச்சந்திரன் நாடகத்தை பார்த்தவுடன் பொய் பேசுவதைக் கைவிட்டார். காந்திக்கு சிறுவயதிலிருந்தே தாமதமாகப் போவது பிடிக்காது. ஒழுக்கம், நேர்மை, வைராக்கியம் கொண்டவராக இருந்தார். தாய் தந்தைக்கும், ஆசிரியருக்கும் நாம் தரும் பரிசு நன்னடத்தையே என அவர் உணர்திருந்தார். அக்கால வழக்கப்படி பதிமூன்று வயதிலேயே காந்தி கஸ்தூரிபாயை கரம் பிடித்தார். தந்தையின் உயிர் பிரியும் போது தான் அவர் அருகில் இல்லையே என்று எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறார் காந்தி. பதினெட்டு வயதில் காந்தி ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற இங்கிலாந்து கிளம்பினார். லண்டனில் வசித்தபோது மது அருந்த மாட்டேன், பிற மாதர்களை விரும்ப மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன் என்று தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறவில்லை. இருபத்திரண்டு வயதில் 1892 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ந்தேதி நாடு திரும்பிய போது அவரது தாய் உயிருடன் இல்லை. காந்தி இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவர். நீதிபதியின் முன் தமது கட்சிக்காரரின் வழக்கை எடுத்துரைக்க எழுந்து நின்ற அவரால் பேசமுடியவில்லை எந்த இடத்திலும் நிலையாக இருந்து அவரால் பொருள் ஈட்ட முடியவில்லை.

 

பிறப்பால் உயர்ந்தவர் யாருமில்லை அவர் உயர்ந்தவரா தாழ்ந்தவரா என அவரது செயல்பாடுகள்தான் தீர்மானிக்கிறது என்ற கருத்துடையவர் காந்தி. தீண்டாமை மனித சமூகத்திடமிருந்து களைந்தெடுக்க வேண்டிய பயங்கரவாதம் என்பதில் உறுதியாக இருந்தார். அரசியலமைப்புச் சட்டப்படி அமைச்சர்கள் மக்கள் சேவகர்கள் தான் அவர்கள் ஒன்றும் எஜமானர்கள் அல்ல என்பதில் உறுதியாக இருந்தார். தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய போது கூட தனக்கு அளிக்கப்பட்ட வெகுமதிகளை தான் தொடங்கிய  ஆசிரமத்திற்கு அளித்துவிட்டுத்தான் புறப்பட்டார். சகோதரியின் வாழ்க்கைச் செலவுக்கு தன்னிடம் கையில்பணமில்லை என்பதால் பிராண ஜீவன் மேத்தாவிடம் மாதம் பத்து ரூபாய் அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். சகோதரிமகள் விதவையாகி தாயிடம் வந்துவிட தங்களுக்கு பத்துரூபாய் போதவில்லை என சகோதரி காந்திக்கு கடிதம் எழுதினார். பொதுச் சொத்தை சொந்த நலனுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்த காந்தி மேலும் பணம் அனுப்பும் நிலையில் நானில்லை என்று பதிலளித்தார். மகாத்மா காந்தி உயிருடன் இருக்கும்போதே அவரது தொண்டர்களால் கூட இந்தக் கொள்கையை கடைப்பிடிக்க முடியவில்லை.

 

இந்தியா விடுதலையடைந்த நாளான 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் நாடே கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்க விடுதலைப் போராட்டத்திற்கு தலைமையேற்று விடுதலைப் பெற்றுத் தந்த காந்தியோ டில்லியிலேயே இல்லை காஷ்மீரில் ஒரு கிராமத்தில் பற்றி எரியும் மதக்கலவரத்தை அடக்க ஒரு ஏழை இஸ்லாமியர் வீட்டில் தங்கியிருந்தார். காந்தியின் கண்ணெதிரிலேயே இந்து – முஸ்லீம் கலவரத்துக்கு நாடு நல்ல விலை கொடுக்க நேர்ந்தது. மதவெறி இந்தியாவை இரண்டு துண்டாக்கியதோடு அல்லாமல் மாத்மாவின் உயிரைப் பறித்தது. அரிஜனர்களில் ஆலயப் பிரவேசத்தை முன்னிறுத்தி காந்தி தொடங்கிய யாத்திரை ஒரிஸ்ஸா வந்தடைந்தது. காந்தியின் மனைவி கஸ்தூரிபா ஜகன்னாதபுரி ஆலயத்துக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து வந்தார். இதைக் கேள்விப்பட்ட காந்தி நான் என்னை அரிஜனன் என்று கருதுபவன் எங்களை போவிலுக்குள் அனுமதிக்காத போது நீ எப்படி சென்று வரலாம் என கோபித்துக் கொண்டார். அவரது உடல் நலிவுற்று மயக்கமடைந்தார், மருத்துவர் வரவழைக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டவுடன் தன்னிலை அடைந்தார். சாதியுணர்வு,  மதவெறியற்ற இந்தியாவை கனவு கண்டவர் காந்தி.

 

காந்தி தனது பேச்சிலும் எழுத்திலும் குறிப்பிட்டது இதுதான். ‘நீங்கள் ஒழுக்கமுடன் வாழ்ந்தால் எது கடவுளோ அதற்கு அருகில் கொண்டு செல்லப்படுவீர்கள். கடவுள் சத்தியப்பேரொளி வாழ்க்கையில் ஒழுக்க நெறி தவறாதவர்கள் தான் கடவுளைக் காண முடியும். இறையச்சம் கொண்டவர்களின் எண்ணம் களங்கமில்லாமல் இருக்கும். தர்மத்தை நிலைநாட்ட கடவுள் வரவேண்டிய அவசியமில்லை அதற்காகத்தான் உன்னையும் என்னையும் படைத்திருக்கிறார். கட்டுப்பாடற்ற மதமும் நாடும் இப்போது இல்லையென்றாலும் ஒருநாள் சீரழிவைச் சந்திக்கும். கடவுள் உனக்கு கருணைகாட்ட வேண்டுமென்றால் நீ உனக்கு கீழே உள்ளவர்களுக்கு கருணைகாட்ட வேண்டும். அன்பே கடவுள், உண்மையே தெய்வம், நியாயமே இறைவன் இதில் உறுதி கொண்டிருந்தார் காந்தி. காந்தி பணி நியமித்தமாக ரயிலில் டர்பனிலிருந்து பிரிட்டோரியாவுக்கு செல்லும் வழயியில் ஒரு வெள்ளைக்காரப் பயணி காந்தி அமர்ந்திருக்கும் பெட்டிக்கு வந்தார் காந்தி அமர்ந்திருப்பதை பார்த்து அவருடன் வாக்குவாதம் செய்தார் காந்தி இருக்கையைவிட்டு எழுந்து வேறு பெட்டிக்கு போக மறுக்கவே ரயில்வே கண்காணிப்பாளரிம் புகார் செய்தார். எவ்வளவோ வாதம் செய்தும் போலீஸ்காரர்கள் காந்தியை நடுவழியில் இறக்கிவிடப்பட்டார். இந்தச் சம்பவம் காந்தியின் வாழ்க்கையே மாற்றியது. தென்னாப்பிரிக்க ஆங்கிலேயரின் நிறவெறியின் ஒருவகை வெளிப்பாடு இது என்பதை உணர்ந்தார். இனவெறியை களைவதற்கான போராட்டத்தை தன்னிலிருந்து ஆரம்பிப்பதற்கான காரியங்களில் அவர் மனது ஈடுபட்டது. சார்லஸ் டவுனிலிருந்து ஜோகன்னஸ்பர்க் நகருக்குள் சாரட் வண்டியில் பயணம் செய்த போதும் நிறவெறியின் மோதுமான அனுபவத்தை அடைந்தார் காந்தி.

 

தென்னாப்பிரிக்காவில் இந்து, முஸ்லீம், பார்சி, கிறிஸ்தவர், குஜராத்தி, மதராஸி, பஞ்சாபி முதலியவர்களை ஒன்றிணைப்பதில் காந்தி முக்கியப் பங்கு வகித்தார். நிறவெறியை ஒழிக்க வேண்டுமென்ற காந்தியின் கருத்து எல்லாக் கூட்டங்களிலும் ஒலிக்க ஆரம்பித்தது. தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய டால்ஸ்டாய் பண்ணைக்கு 1902ஆம் ஆண்டு கோகலே வருகைதந்த போது காந்தியைச் சந்தித்தார். அந்த சந்திப்புதான் காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்டது. இந்தியா திரும்பிய காந்தியை தாகூர்தான் முதன்முதலில் மகாத்மா என்றழைத்தார். முதல் உலகப்போரில் இந்தியர்களை ராணுவ சிப்பாய்களாக அணிதிரட்ட வெள்ளைய அரசாங்கம் காந்தியை கேடயமாக பயன்படுத்திக் கொண்டது. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதின்மூன்றாம் இந்தியாவுக்கு கறுப்பு நாளாக அமைந்தது. அன்றுதான் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் ‘ரெளலட் சட்ட’த்தை எதிர்த்து ஜாலியன்வாலாபாக் என்ற மைதானத்தில் ஒன்று கூடிய மக்களை ‘ஜெனரல் ஓ டயர்’ என்பவனின் உத்தரவின் பேரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். அதைக் கண்டித்து உள்நாட்டில் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தின்போது காந்தி வயல் ஒன்றில் அரை ஆடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த குடியானவனை சந்தித்தார். அதுமுதற்கொண்டு அவனைப் போன்றே அரை ஆடை அணியத் தொடங்கினார்.

 

1928 ஆம் ஆண்டு காந்தி தலைமையில் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுதந்திரம் பெறுவதே நமது குறிக்கோள்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தண்டியாத்திரையில் காந்தியின் தலைமையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். காந்தி – இர்வின் சந்திப்பு குறித்து பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் கருத்து தெரிவித்தபோது ‘காந்தி ஒரு அரை நிர்வாணப் பக்கிரி பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டு வரும் அவர் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் பிரதிநிதியான வைஸ்ராய்க்குச் சமமாக அமர்ந்திருப்பது எவ்வளவு அருவருக்கத்தக்க விஷயம்’ என்று கூறினார். பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு எவ்வித உரிமையும் வழங்க விரும்பவில்லை என்பதனை அறிந்த காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறக் கோரும் தீர்மானம் நிறைவேறியது. அடுத்த நாள் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் எல்லோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் போராட்டத்தின் விளைவாக ‘கிளமண்ட் அட்லி’ தலைமையிலான மந்திரிசபை இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க சம்மதித்தது. காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட பின் ஜின்னா வெளியிட்ட அறிக்கையில் ‘ஒரு நல்ல இந்து இறந்துபோனான்’ எனக் குறிப்பிட்டது இங்கு நினைவுகூறத் தக்கது.

Saturday, January 29, 2022

ஜனவரி 30 காந்தியடிகளின் நினைவு தினம் மண்ணின் மகாபுருஷர் காந்தி எப்போது மகாத்மா ஆனார்

 


ரயில் வண்டியிலிருந்து வெள்ளைக்காரர்களால் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார் காந்தி. அவருக்கு என்ன நடந்தது எனப் புரியவே சில நிமிடங்கள் ஆனது. நிறவேறுபாட்டினால் மட்டும் அவர்கள் தன்னைவிட உயர்ந்தவர்களாகிவிடுவார்களா என்ற கேள்வி அவர் மனத்தில் எழுந்தது. சகபயணியாக தன்னோடு பயணம் செய்வதற்கு அவர் ஏன் சங்கோஜப்படவேண்டும். என்னைக் கீழே தள்ளி ஷு கால்களால் மிதிப்பதற்கு எந்த மதப்புத்தகம் அவருக்கு கற்றுக் கொடுத்தது.

 

படைப்பில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு உண்டா என்ற கேள்வியை அவர் கடவுள் முன் வைத்தார். சக மனிதன் என்ற கருணையில்லாமல் இப்படிச் செய்பவர்கள் மனஅளவில் இன்னும் மிருகமாகத்தான் இருக்கின்றார்கள். பிறப்பு நம் கைியில் இல்லாதபோது பிறந்ததால் நான் உயர்ந்தவன் என்று எவ்வாறு கூறிக் கொள்ள முடியும். தீண்டத்தகாதவர்கள் எனக் காற்று நினைக்கிறதா, இயற்கையின் தவப்புதல்வர்களில் அவர்களும் ஒருவர் தானே.

 

மரணம் நம்மை திகம்பரனாக்கிவிடுகிறது. நாம் இறப்புக்கு பின் எதையும் கொண்டு போக முடியாது. அப்படி இருந்தும் தான் உயர்ந்தவனென்று இவர்கள் அகங்காரம் கொள்கிறார்களே. கருமேகத்திலிருந்து மழைத்துளி விழுவதற்காக அவர்களால் வானத்தை வெறுக்க முடியுமா? தன்னைத் தானே வெற்றி கொண்டவர்கள் யாரேனும் இப்படி நினைப்பார்களா? சமூகம் புறஅடையாளத்தை வைத்தே மனிதனின் தகுதியை நிர்ணயிக்கிறது.

 

இருதயத்திலிருந்து வாழ சமூகம் இடமளிக்காது. பாலகனாய் இருக்கும் போதே சமூகம் அவர்களுக்கு விஷத்தை தந்துவிடுகிறது. தரகர்கள் சமூகத்தை ஏய்த்துப் பிழைக்க வேண்டுமென்பதற்காக சமூகத்தை இருகூறாய் பிரித்து வைத்திருக்கிறார்கள். மதிப்பு வாய்ந்த மனிதர்கள் கூட பிறரின் புறத்தோற்றத்தைப் பார்த்து மனம் உவந்து கேலி செய்கின்றனர். இன்னொரு மனத்தை மகிழச் செய்வதுதானே இந்த வாழ்க்கையின் பரிசாக இருக்க முடியும். இவர்கள் கைகளில் உள்ள அதிகாரத்தால் சூரியனை உதிக்காமல் செய்துவிட முடியுமா?

 

இந்த உலகத்தில் புழுவைப் போன்றவன் தானே மனிதன். இறக்கை முளைத்துவிட்டது என்பதற்காக பட்டாம்பூச்சியால் வானத்தை அளக்க முடியுமா? கடவுள் நம்மை மடியச் செய்வதற்கு கரும்பலகையில் எழுதி  அழிக்கின்ற காலஅளவு கூட ஆகாது. கையில் ஆயுதம் ஏந்தாமல் இவர்களை எதிர்க்க முடியுமா? எதிர்ப்பவர்களுக்கு அடக்குமுறையால் பதில் சொல்லும் இவர்கள். அஹிம்சையால் எதிர்ப்பைக் காட்டினால் என்ன செய்வார்கள். உயிரை துச்சமென நினைத்தால் பீரங்கி முன்பு கூட நம்மால் அஞ்சாமல் நிற்க முடியும் அல்லவா.

 

புரட்சிக் கனலை மக்கள் உள்ளத்தில் ஏற்றி வைத்தால் அந்த அக்னியை வெள்ளைக்காரர்களால் அணைக்க முடியுமா? அடக்குமுறையை எதிர்த்து மக்கள் ஒன்றுபட்டால் சாத்தியமாகாதது ஏதேனும் உள்ளதா? ஜனங்களிடம் உத்வேகத்தை விதைத்தால் இரும்புக் கோட்டைகள் கூட தூள் தூளாக நொறுங்கி விழும் அல்லவா. யாவர்க்கும் பொதுவாம் நீதி என்பதை நிலைநாட்டிட அக்கிரமக்காரர்களை கூண்டோடு ஒழித்திட என் வாழ்நாள் முழுவதையும் செலவழிப்பேன் என காந்தி முடிவு செய்த போது அவர் சாதாரண ஆன்மாவிலிருந்து மகாத்மாவானார்.