Sunday, November 29, 2020

திருவடி 5 (கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டி விட்டோம்)

 


உயிர்கள் முக்தி அடைவதற்கு முன்னால் பாரத மண்ணில் உடலெடுக்க வேண்டும். இந்து மதம் தனது அடித்தளமாக வேதத்தைக் கொண்டுள்ளது. இந்த நான்கு வேதங்களும் இறைவனால் அருளப்பட்டது. இந்த வேதங்கள் அனைத்தும் வழிகள் பல இலக்கு ஒன்றே என்கிறது. அசாதாரணமான நிகழ்வின் மீது கட்டமைக்கப்பட்ட மதங்கள் மட்டுமே அழிவைச் சந்திக்கும். மற்ற பகுதிகளுக்கு இறைத் தூதரை அனுப்பி வைத்த இறைவன் பாரத மண்ணில் அவரே அவதாரம் செய்கிறார். நானே வழி, என் மூலமாகத்தான் நீ கடவுளைக் காண முடியும் என்று எந்த தீர்க்கதரிசியும் இந்தியாவில் அறைகூவல் விடுத்ததில்லை.

 

தேடுபவர்கள் என் மூலமாக கண்டடைவார்கள் என யாரும் இங்கு பிரசங்கம் செய்ததில்லை. தேடுகிற நீயே அது என்று தான் இந்து மதம் போதிக்கிறது. உள்ளே குடியிருக்கும் ஆன்மாவுக்கு இந்த உடல் கோயிலாக இருக்க வேண்டும் என்கிறது இந்து மதம். சைவமும், வைணவமும் ஆழமாக வேர் விட்டிருந்ததால் தான் எந்தத் தாக்குதல்களையும் தாங்கி நிற்க முடிந்தது. வார்த்தையாலோ காகிதத்திலோ அல்ல சத்தியத்தை உன் வாழ்க்கையில் பின்பற்றுகிறாயா என்பது தான் முக்கியம். மகுடமோ, அரியணையோ எனக்குத் தேவையில்லை மரணத்தின் ரகசியத்தை எனக்கு நீ கூறு என்று எமதர்மனிடம் பிரகலாதன் கேட்டு நின்றதாக உபநிடதங்கள் கூறுகின்றன.

 

சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப்பிள்ளையின் ஆறாவது தாரமான சின்னம்மைக்கு ஐந்தாவது குழந்தையாக 5.10.1823ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இராமலிங்கம் என்று பெயரிட்டு அழைத்தனர். சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்த இராமலிங்கம் சகோதரர் சபாபதிப்பிள்ளையின் பராமரிப்பில் சென்னையில் வளர்ந்தான். கல்விக்காக குருமார்களிடம் அனுப்பிய போது அவரோ இராமலிங்கம் சுயம்புலிங்கம் தன்னை உணர்ந்தவனுக்கு நான் எப்படி குருவாக இருந்து போதிப்பது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பிள்ளை முருகனை கட்டிக் கொண்டது. ஒன்பது வயதிலேயே கந்தக் கோட்டத்திலுள்ள தெய்வத்தை தமிழால் வாவென்றழைத்தது. முருகனின் தரிசனம் கிடைத்த பிறகு இராமலிங்கம் வாயிலிருந்து தமிழ் ஊற்றாய் பெருக்கெடுத்தது.

 

சபாபதிக்கு அன்று உடம்புக்கு நோவு. புராணப் பிரசங்கத்துக்கு வேறு யாரைக் கூப்பிடுவது என்று காரியஸ்தர்கள் யோசித்த போது, இராமலிங்கத்தை அழைத்துப் போகலாம் என்று முடிவானது. தமிழுக்கான மேடையில் முருகன் தன்னை வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறான் என இராமலிங்கம் புரிந்து கொண்டது. அன்று நிகழ்த்தப்பட்ட பிரசங்கத்தில் தேன் குடித்த வண்டாய் எல்லோரும் இராமலிங்கத்தின் பேச்சுக்கு மயங்கினார்கள். இது சபாபதிப்பிள்ளையின் காதுக்கு எட்டியது. அவர் தனக்கு பின் வந்திருப்பது சாதாரணக் குழந்தை அல்ல கடவுள் காரியத்துக்கு நாமும் மண்சுமப்போம் என்று அமைதியானார்.

 

முருகனே தமிழுக்காக சம்பந்தராய் அவதாரமெடுத்ததை இராமலிங்கம் அறிந்து கொண்டது. திருவாசகத்தை வாசித்த போது இராமலிங்கத்தின் மெய்யே உருகிப் போனது. சென்னைப் பட்டணத்தின் பொய்யான வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இராமலிங்கம் மருதூர் வந்தடைந்தது. பின்பு கடலூர் வழியாக வடலூர் வந்து அங்கு சமரச சன்மார்க்க சங்கத்தையும், சத்திய தருமச் சாலையையும் நிறுவியது. மண்ணை பொன்னாக்கும் இரசவாதத்தை செய்துகாட்டி இந்த மண்ணுக்காவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும் ஏன் இறைவனை மறந்து பாவக்குழியில் விழுந்து புரள்கிறீர்கள் என்றது. இராமலிங்கம் பசிக்கு உணவளித்து ஞானத்தாகத்தை தீர்க்கவும் வழி காட்டியதால் வள்ளலார் என அழைக்கப்பட்டது. வள்ளலாரிடமிருந்து நாம் பெற்றுக்  கொண்ட ஞானப் பொக்கிஷம் ஏழேழுப் பிறவியிலும் நம் கூட வந்து நம்மை அரண் போலக் காக்கும் சக்தி படைத்தது.

 

1874ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் அன்று வள்ளலார் வெள்ளாடை உடுத்தி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என வாயால் உச்சரித்துக் கொண்டு சித்தி மாளிகையின் அறையினுள்ளே நுழைந்தார். பக்த கோடிகள் கதவினை வெளிப்புறத்திலிருந்து தாழிட்டார்கள். அவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் திறக்கக் கூடாது என வள்ளலார் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். அவ்வூர் தாசில்தாரிடம் விஷயம் போக மூன்றாம் நாள் திறக்கச் சொல்லும் உத்தரவுடன் வந்து நின்றார். அரச கட்டளைக்கு அடிபணிந்து திறக்கவே உள்ளே அடிகளைக் காணோம் வெறும் கற்பூர வாசமடித்தது. அதிகாரிகள் வெறுங்கையோடு திரும்பினார்கள். ஜோதி சிவத்திடம் கரைந்துவிட்டது. உலகில் சைவ நெறியைக் காக்க போரிடும் மையமாக வடலூர் இன்றளவும் விளங்கி வருகிறது.

Monday, November 2, 2020

திருவடி 4 (பட்டினத்தார் நுனிக்கரும்பு இனிக்கும்வரை நடந்து கொண்டிருந்தார்)

 


உலையில் பழுக்க வைத்து சம்மட்டியால் அடித்தால் தானே அருவாள் உருவாகும். சோதனையும், துன்பங்களும் அப்படியே. அவர்கள் பணத்தாசையும், பெண்ணாசையும் பிடித்து அலைந்து தனக்குத் தானே குழிவெட்டிக் கொள்கிறார்கள், நீ வா உனக்கு மட்டுமாவது உண்மை என்னவென்று புரியவைக்கிறேன் என்று சொல்கின்றான் சிவன். சுவையென்பது வாய் வரைக்கும் தானே தொண்டையைத் தாண்டிவிட்டால் என கொக்கி போடுகிறான். இன்னாருக்கு இன்ன இடத்தில் பிறக்கப்போகிறோம் என்பது யாருக்காவது முன்கூட்டியே தெரியுமா என்ன? பணத்தின் மூலமாக உடலை விலைபேசலாம் மனதை அடிமையாக்க முடியுமா? உடலும் ஓரிரவு மட்டும் தானே உனக்கு வாடகை அடுத்த வாடிக்கையாளர் கையில் பணத்தோடு காத்திருப்பான் அல்லவா? நல்லதை கடைவிரிப்பவர்கள் கொள்வாரில்லை என புலம்பத்தான் வேண்டியிருக்கிறது. காலப்போக்கில் பெண், பொன், மண் திகட்ட ஆரம்பிக்கிறது இதுநாள் வரை நீ சக்கரைப் பாகுவைத்தான் தேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாய். பேரானந்தக் கடலில் அலையில் மட்டுமே நீ கால்நனைத்தாய். மீனுக்கு தான் கடலில் இருக்கிறோம் என்ற தன்னுணர்வு வருமா? நீ கனவு காண்கிறாய் என்பது விழித்த பிறகு தானே உனக்குத்  தெரிகிறது. வாழ்க்கையும் சொப்பனம் தான். சோதனையும், கஷ்டங்களும் உனக்கு அடிமேல் அடி கொடுத்து விழித்துக்கொள் விழித்துக்கொள் என்கிறது.

 

எது இங்கு நிலையானது அதைக் கண்டுபிடி. பெண்ணாசைக்கு நீ ஆட்பட்டாயேயானால் செக்குமாடு மாதிரி இங்கேயே சுற்றிச் சுற்றி வர வேண்டியதுதான். மணணாசையால் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு மீதி நாட்களை சிறைச்சாலையில் கழிக்க வேண்டியது தான். நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உனக்கு ஒருபாடம் ஆனால் நீ அதை புரிந்து கொள்ள மாட்டாய். இது அறிவியல் யுகமாக இருக்கலாம் ஆனாலும் வாய் வழியாகத்தானே உண்கிறோம், நாசி வழியாகத்தானே சுவாசிக்கிறோம். எப்படி நாணயத்துக்கு இருபக்கம் உள்ளதோ அதே போல் வாழ்க்கைக்கு மறுபக்கம் உள்ளது. மரணம் அதைத் தெரியப்படுத்தும். அணை போட்டுத் தடுத்தாலும் நதி கடலை நாடத்தானே செய்கிறது.

 

எத்தனையோ கோடி பேர்களில் ஒருசிலர் தானே உலகத்தைத் துறக்கிறார்கள். சந்நியாசி உலகத்தைத் துறந்தவன் மட்டுமல்ல உலகத்தைப் பொறுத்தவரை அவன் இறந்தவன். உன் நடைமுறை வாழ்க்கையை நேர்படுத்திக் கொள்ளாமல் கடவுள் அருவமா, உருவமா என்று வாதிடுவதில் என்ன பயன். எத்தனை பிறவிகளாக வணங்குவதையே தொழிலாகக் கொண்டிருப்பாய் அவனை நோக்கி ஒருஅடி எடுத்து  வைக்க வேண்டாமா? இந்து மதத்தில் இத்தனை தெய்வங்கள் எதற்கு என்கிறாய்? தாயானவள் குடும்பத்திலுள்ளவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி விதவிதமாக சமைக்க வேண்டியுள்ளதே. முருக பக்தியில் ஆட்பட்டுப் போனால் கந்தா என்றவுடன் கண்களில் கண்ணீர் வர வேண்டாமா? வாழ்வை ஒழுங்காக வாழ்ந்திருந்தால் மரணத்தைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். அம்மா என்ற சொல் உன் அம்மாவை மட்டுமா குறிக்கிறது. கடவுள் மனிதனாக இறங்குவதைப் போல மனிதன் கடவுளாக ஏற்றம் பெறும்வரை இந்த சொக்கட்டான் விளையாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

 

காவிரிபூம்பட்டினத்தில் திருவெண்காடர் பெரும் செல்வந்தர். ஆள்வதற்கு ராஜ்ஜியமிருந்தும் ஒரு வாரிசில்லையே என்ற ஏக்கம் அவருக்கிருந்தது. திருவிடைமருதூர் ஈசனிடம் வரமருள வேண்டிக் கொண்டார். நடப்பது எதுகுறித்து என்று மனிதனால் உணர்ந்து கொள்ள முடியுமா என்ன? அன்றிரவு திருவிடைமருதூரில் வசிக்கும் இருக்கின்ற செல்வத்தையெல்லாம் சிவகாரியங்களில் இழந்த ஆதிசைவர் கனவில் தோன்றி நான் தீர்த்தங்கரை வில்வ மரத்தடியில் ஒரு ஆண் குழந்தையாக தவழ்கிறேன் என்னை திருவெண்காடர் தேடி வருவார் அவரிடம் ஒப்படைத்து விட்டு எனது எடைக்கு எடை தங்கம் தருவார் பெற்றுக் கொள், உன் பீடை ஒழியும் என்றார். அதே நேரம் திருவெண்காடர் கனவில் தோன்றி ஆதிசைவர் குழந்தை தருவார் பெற்றுக் கொண்டு எடைக்கு எடை தங்கம் கொடுத்துவிடுமாறு கூறி இருந்தார்.

 

திருவெண்காடர் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். அவர் உள்ளம் குளிர்ந்தது. சிவனருட்செல்வனாதலால் மருதவாணன் என அவனுக்கு பெயரிட்டார். சிவகலை அம்மாள் குழந்தையின் கால் மண்ணில் பாவாமல் சீராட்டி வளர்த்தாள். காலம் மிகவும் புதிரானது எப்போது காலை வாரிவிட்டுச் சிரிக்கும் எனத் தெரியாது. மருதவாணன் வாலிப பருவத்தை எட்டினான். தந்தையின் முதுமை காரணமாக அவருக்கு ஓய்வளித்துவிட்டு மரக்கலத்தில் வாணிபத்திற்கு தானே புறப்பட்டுச் சென்றான். திருவெண்காடரும், சிவகலையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். மருதவாணன் பொற்குவியலோடு வருவான் என்று திருவெண்காடர் காத்திருந்தார். எவ்வளவு செல்வந்தராக இருந்தும் திருவெண்காடருக்கு பணப்பித்து இருந்தது. அன்று காலை மருதவாணன் திரும்பிவிட்டதாகவும் மரக்கலம் முழுவதும் எருமூட்டைகளும், தவிட்டு மூட்டைகளும் இருப்பதாகவும் வேலையாட்கள் வந்து திருவெண்காடரிம் தகவலை தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

 

மருதவாணன் என்ன காரியம் செய்து வந்திருக்கிறான் பார்ப்போம் என்று திருவெண்காடர் துறைமுகத்துக்கு விஜயம் செய்தார். கோபாவேசத்துடன் வரட்டியொன்றை அவர் தூக்கி வீசியெறிய அதிலிருந்து மாணிக்கப்பரல்களும், நவரத்தினங்களும் சிதறி ஓடின. தவிட்டு மூட்டையைக் கொட்டிப் பார்க்க அனைத்தும் பொற்குவியல்கள். திருவெண்காடர் என்ன தான் இருந்தாலும் என் வளர்ப்பு அல்லவா என பெருமிதம் கொண்டார். மருதவாணனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறினர். திருவெண்காடர் மருதவாணனைக் காண வீட்டிற்கு ஓடிச் சென்றார். விஷயத்தைக் கூறாமல் சிவகலையிடம் பிள்ளையைப் பற்றிக் கேட்க அவன் இந்தப் பெட்டியை உங்களிடம் தரச் சொன்னான் இங்கேதான் எங்கேயாவது ஒளிந்திருப்பான் என்றாள் சிவகலை. திருவெண்காடர் பட்டுத்துணியை அவிழ்த்து பெட்டியைத் திறந்து பார்த்தார். அதில் ஊசியும், ஓலைச்சுருளும் இருந்தது. திருவெண்காடர் ஓலைச்சுருளை எடுத்துப் படிக்க அதில் காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. சிவனுக்கு முருகன் ஞானாவுபதேசம் செய்தது போல திருவெண்காடருக்கு யாரும் சொல்லிக் கொடுக்காததை மருதவாணன் சொல்லிக் கொடுத்துவிட்டான்.

 

திருவெண்காடராக வீட்டினுள் சென்றவர், கெளபீனத்துடன் பட்டினத்தாராக வீதியில் இறங்கினார். மருதவாணா பணத்துக்கு அப்புறம்தான் பந்தபாசம் என்று வைத்திருந்தேன் அல்லவா எனக்கு சிறந்த பாடம் புகட்டி விட்டாய். மாயையைப் பிடித்து உழன்று கொண்டிருந்த எனக்கு உண்மை பிடிபட்டுவிட்டது. காவிரிபூம்பட்டினம் அவரது கோலத்தைப் பார்த்து எள்ளி நகைத்தது. பட்டினத்தடிகள் நினைத்துக் கொண்டார் தான் எதை இழந்தேன் எதைப் பெற்றான் என்று ஈசனுக்குத் தெரியும் இவர்களுக்கென்ன என்று. இறந்தன பிறக்கும் பிறந்தன இறக்கும் எனச் சொல்லிக் கொண்டே ராஜவீதியில் திருவோட்டினை ஏந்திச் சென்றார். அவரது பாடல்களைக் கேட்கும் பொருட்டே ஈசன் நுனிக்கரும்பு இனிக்கும் வரை அவரை நடக்க வைத்தான்.