உயிர்கள் முக்தி அடைவதற்கு முன்னால் பாரத மண்ணில் உடலெடுக்க வேண்டும். இந்து
மதம் தனது அடித்தளமாக வேதத்தைக் கொண்டுள்ளது. இந்த நான்கு வேதங்களும் இறைவனால் அருளப்பட்டது.
இந்த வேதங்கள் அனைத்தும் வழிகள் பல இலக்கு ஒன்றே என்கிறது. அசாதாரணமான நிகழ்வின் மீது
கட்டமைக்கப்பட்ட மதங்கள் மட்டுமே அழிவைச் சந்திக்கும். மற்ற பகுதிகளுக்கு இறைத் தூதரை
அனுப்பி வைத்த இறைவன் பாரத மண்ணில் அவரே அவதாரம் செய்கிறார். நானே வழி, என் மூலமாகத்தான்
நீ கடவுளைக் காண முடியும் என்று எந்த தீர்க்கதரிசியும் இந்தியாவில் அறைகூவல் விடுத்ததில்லை.
தேடுபவர்கள் என் மூலமாக கண்டடைவார்கள் என யாரும் இங்கு பிரசங்கம் செய்ததில்லை.
தேடுகிற நீயே அது என்று தான் இந்து மதம் போதிக்கிறது. உள்ளே குடியிருக்கும் ஆன்மாவுக்கு
இந்த உடல் கோயிலாக இருக்க வேண்டும் என்கிறது இந்து மதம். சைவமும், வைணவமும் ஆழமாக
வேர் விட்டிருந்ததால் தான் எந்தத் தாக்குதல்களையும் தாங்கி நிற்க முடிந்தது. வார்த்தையாலோ
காகிதத்திலோ அல்ல சத்தியத்தை உன் வாழ்க்கையில் பின்பற்றுகிறாயா என்பது தான் முக்கியம்.
மகுடமோ, அரியணையோ எனக்குத் தேவையில்லை மரணத்தின் ரகசியத்தை எனக்கு நீ கூறு என்று
எமதர்மனிடம் பிரகலாதன் கேட்டு நின்றதாக உபநிடதங்கள் கூறுகின்றன.
சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப்பிள்ளையின் ஆறாவது தாரமான சின்னம்மைக்கு
ஐந்தாவது குழந்தையாக 5.10.1823ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இராமலிங்கம் என்று
பெயரிட்டு அழைத்தனர். சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்த இராமலிங்கம் சகோதரர்
சபாபதிப்பிள்ளையின் பராமரிப்பில் சென்னையில் வளர்ந்தான். கல்விக்காக குருமார்களிடம்
அனுப்பிய போது அவரோ இராமலிங்கம் சுயம்புலிங்கம் தன்னை உணர்ந்தவனுக்கு நான் எப்படி
குருவாக இருந்து போதிப்பது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பிள்ளை முருகனை
கட்டிக் கொண்டது. ஒன்பது வயதிலேயே கந்தக் கோட்டத்திலுள்ள தெய்வத்தை தமிழால் வாவென்றழைத்தது.
முருகனின் தரிசனம் கிடைத்த பிறகு இராமலிங்கம் வாயிலிருந்து தமிழ் ஊற்றாய் பெருக்கெடுத்தது.
சபாபதிக்கு அன்று உடம்புக்கு நோவு. புராணப் பிரசங்கத்துக்கு வேறு யாரைக் கூப்பிடுவது
என்று காரியஸ்தர்கள் யோசித்த போது, இராமலிங்கத்தை அழைத்துப் போகலாம் என்று முடிவானது.
தமிழுக்கான மேடையில் முருகன் தன்னை வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறான் என இராமலிங்கம்
புரிந்து கொண்டது. அன்று நிகழ்த்தப்பட்ட பிரசங்கத்தில் தேன் குடித்த வண்டாய் எல்லோரும்
இராமலிங்கத்தின் பேச்சுக்கு மயங்கினார்கள். இது சபாபதிப்பிள்ளையின் காதுக்கு எட்டியது.
அவர் தனக்கு பின் வந்திருப்பது சாதாரணக் குழந்தை அல்ல கடவுள் காரியத்துக்கு நாமும்
மண்சுமப்போம் என்று அமைதியானார்.
முருகனே தமிழுக்காக சம்பந்தராய் அவதாரமெடுத்ததை இராமலிங்கம் அறிந்து கொண்டது.
திருவாசகத்தை வாசித்த போது இராமலிங்கத்தின் மெய்யே உருகிப் போனது. சென்னைப் பட்டணத்தின்
பொய்யான வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இராமலிங்கம் மருதூர் வந்தடைந்தது.
பின்பு கடலூர் வழியாக வடலூர் வந்து அங்கு சமரச சன்மார்க்க சங்கத்தையும், சத்திய தருமச்
சாலையையும் நிறுவியது. மண்ணை பொன்னாக்கும் இரசவாதத்தை செய்துகாட்டி இந்த மண்ணுக்காவும்,
பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும் ஏன் இறைவனை மறந்து பாவக்குழியில் விழுந்து புரள்கிறீர்கள்
என்றது. இராமலிங்கம் பசிக்கு உணவளித்து ஞானத்தாகத்தை தீர்க்கவும் வழி காட்டியதால் வள்ளலார்
என அழைக்கப்பட்டது. வள்ளலாரிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட ஞானப் பொக்கிஷம் ஏழேழுப் பிறவியிலும் நம்
கூட வந்து நம்மை அரண் போலக் காக்கும் சக்தி படைத்தது.
1874ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் அன்று வள்ளலார் வெள்ளாடை உடுத்தி அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என வாயால் உச்சரித்துக் கொண்டு
சித்தி மாளிகையின் அறையினுள்ளே நுழைந்தார். பக்த கோடிகள் கதவினை வெளிப்புறத்திலிருந்து
தாழிட்டார்கள். அவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் திறக்கக் கூடாது என வள்ளலார் ஏற்கனவே
அறிவுறுத்தி இருந்தார். அவ்வூர் தாசில்தாரிடம் விஷயம் போக மூன்றாம் நாள் திறக்கச்
சொல்லும் உத்தரவுடன் வந்து நின்றார். அரச கட்டளைக்கு அடிபணிந்து திறக்கவே உள்ளே அடிகளைக்
காணோம் வெறும் கற்பூர வாசமடித்தது. அதிகாரிகள் வெறுங்கையோடு திரும்பினார்கள். ஜோதி
சிவத்திடம் கரைந்துவிட்டது. உலகில் சைவ நெறியைக் காக்க போரிடும் மையமாக வடலூர் இன்றளவும்
விளங்கி வருகிறது.
No comments:
Post a Comment