Wednesday, June 12, 2019

புத்ரன்


தூது சென்ற கண்ணனால் கெளரவர்களை சமதானம் செய்ய முடியவில்லை. இனி போர் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வருகிறான். சதுரங்க ஆட்டத்தில் முதல் காயை கண்ணனே நகர்த்துகிறான். கெளரவர்களின் படைத் தலைவனான கர்ணனிடம் பாண்டவர்களை ஒழித்துவிடும் உக்கிரம் இருப்பதை கண்ணன் அறிந்திருந்தான். வரும் வழியில் அங்க தேச அரசனான கர்ணனிடம் நீ சூதனல்ல சத்ரியன் உன் தாய் குந்தி. நீ பாண்டவர்கள் ஐவரில் மூத்தவன் என்ற உண்மையை தெரியப்படுத்திவிட்டுத்தான் குந்தியிடம் வந்து விவரத்தை தெரிவித்தான்.

குந்தி குந்திபோஜனால் வளர்க்கப்பட்டவள் பிராமண சேவைக்காக துர்வாசர் அளித்த வரத்தை தவறாகப் பயன்படுத்தி சூரியனால் முறைதவறி விவாகத்துக்கு முன்னரே தாயானவள். அந்தச் செயலுக்கான பலன்கள் அவளை நிழல் போல பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்த உலகில் வினைப்பயன் தானே பிறப்பு இறப்பை நிர்ணயிக்கிறது. குந்தியே மறந்துவிட்ட ஒன்று எப்போதோ அவள் எச்சமிட்டது இப்போது விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

குந்தியை பகடைக்காயாக உருட்ட கண்ணன் முடிவெடுத்ததுவிட்டான். அவனுக்குத் தேவை பாண்டவர்களின் வெற்றி. சுயம்வரத்தில் சூதனென்று திரெளபதி நிராகரித்த போது முன்வந்து வெளிப்படுத்தாத கண்ணன் தனது எண்ணம் ஈடேறும் பொருட்டு கடைசி ஆயுதமாக இந்த அஸ்திரத்தை உபயோகிக்கிறான்.

ராஜ்யத்தை இழந்தவர்களுக்கு ராஜ்யத்தை அடைய வேண்டுமென்ற வெறி இருக்கும். பாண்டவர்களிடம் அந்த வன்மத்தை தீயூட்டி வளர்த்தவள் திரெளபதி. திரெளபதி போர் நிகழ்வதற்கு காரணமாகவும், குந்தி போரின் முடிவுக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறார்கள். ஆவதும் அழிவதும் பெண்ணாலே என்ற சொற்றொடருக்கு இதுவும் காரணமாக அமையக்கூடும்.

பாண்டுவைக் கைப்பிடித்து பட்டத்து ராணியாக ஓர்ஆண்டு மட்டுமே குந்தியால் இருக்க  முடிந்தது. பாண்டு இறந்தவுடன் மாத்ரி உடன்கட்டை ஏற அவளது இரு புதல்வர்களையும் தன் மகன்களாகவே வளர்த்து வந்தாள் குந்தி. பாண்டவர்களிடம் எதைக் கொண்டும் பிரிவு வந்துவிடக் கூடாதென்று உறுதியோடு இருந்தாள். அர்ஜூனன் வில்வித்தைக் காண்பித்து வென்று வந்த பரிசுப் பொருளான திரெளபதியை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்கும் இதுதான் காரணம்.

ஆளாகிவிட்ட பாண்டவர்களுக்கு அவர்களின் பங்கை அளிக்க திருதுராஷ்டிரன் முன்வர வேண்டுமென குந்தி விரும்பினாள். சூதில் திரெளபதியை பணயம் வைத்து தோற்றதற்காக பீமன் வெகுண்டெழுந்த போது கூட குந்தி தான் அவனைச் சமாதானப்படுத்தினாள். திரெளபதியை துகிலுரித்தபோது ஆண்மையற்றவர்களை பிள்ளைகளாகப் பெற்றுவிட்டோமே என அவள் வயிற்றில் அறைந்து கொண்டாள். அந்த சம்பவத்துக்கு பிறகு ஐம்புலன்களை இயக்கும் மனமாக ஐந்து பேரையும் திரெளபதிதான் இயக்கி வந்தாள்.

இப்போது அவளுக்கு கர்ணன் தன் மகன் என்பதை விட தான் பாண்வர்களின் ராஜமாதா என்பதே முக்கியமாக இருந்தது. ராஜ்யம் பாண்டவர்களுக்கு கிடைக்க தான் கர்ணனிடம் மடிப்பிச்சைக் கேட்க தயாராக இருப்பதாக கண்ணனிடம் அவள் தெரிவித்தாள்.

போருக்கு முதல் நாள் மாலை கங்கைக் கரையில் உலவிக் கொண்டிருந்த கர்ணனை தயக்கத்துடன் சந்திக்கச் சென்றாள் குந்தி.

“என் மகனே எப்படி இருக்கிறாய்”?

“யாரம்மா நீ என்னை உரிமையுடன் மகனே என்று அழைக்கிறாய்”?

“குழந்தாய்! உன்னை இந்த பாழும் நரகத்தில் தள்ளி விட்டவள் நான் தான்”!

“ஓ, உங்களது குரல் என் நெஞ்சைப் பிளக்கிறதே. பூர்வஜென்ம தொடர்போ! யார் நீங்கள் நான் தேரோட்டி அதிவிரதன் மகன் அங்கதேச அரசன்”.

“நான் துர்பாக்கியவதி குந்தி தேவி”.

“ஓ, ராஜமாதாவா!
துரோணாச்சாரியார் சத்ரியனுக்கு மட்டும் தான் அர்ஜூனனை எதிர்த்து நிற்கும் உரிமை உள்ளது என்ற போது அவையிலிருந்த நீங்கள் உங்கள் திருவாயைத் திறந்து என் மகனே என்று அழைத்திருக்கலாமே. துரியோதனன் எனக்கு மகுடம் சூட்டி அங்கதேச அரசையே எனக்கு அளிக்க முன்வந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்போது நான் கெளரவர்களின் படைத்தலைவன் என்பதால் தானே என்னைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும். துரியோதனனுக்கு என்னால் துரோகம் இழைக்க முடியாது. இந்த செல்லாக்காசுக்கு மதிப்பளித்தவனின் முதுகில் குத்துவது நியாயமாகாது”.

“உன்னை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன்”!

“என் வேதனை மிகுந்த நெஞ்சம் உங்கள் உள்ளத்தில் இப்போதுதான் இரக்கத்தைச் சுரக்கச் செய்ததா”.

“நீ என் மகன். பாண்டவர்கள் ஐவருள் மூத்தவன்”.

“ஆற்றில் மிதந்த எனக்கு அடைக்கலம் அளித்தவர்களை நான்  என்ன செய்வது. சூதனுக்கு ராஜ்யமளித்து உணவு மேஜையில் கெளரவம் பார்க்காது பக்கத்தில் அமரவைத்து உணவு உண்ண இடமளித்து  அழகு பார்க்கும் துரியோதனனை என்ன செய்வது. சுயம்வரத்தில் சூதனுக்கு என்னால் மணமுடிக்க முடியாது என்று ஏசிய திரெளபதி உண்டாக்கிய காயம் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறிவிடுமா என்ன”?

“வா உனக்கு அங்கீகாரம் அளிக்கிறேன். அஸ்தினாபுரம் உன்னுடையது வா வந்து மகுடம் சூடிக் கொள்”.

“நான் உயிர் என்றால் துரியோதனன் ஆன்மா. என்றாவது உயிர் ஆன்மாவுக்கு துரோகம் செய்யுமா அம்மா. எனக்கு தாய்ப் பாசம் என்னவென்று தெரியாது. நான் சூதன் என்பதால் என் மனைவி படுக்கறையில் கூட அவள் பக்கத்தில் முப்பது வருடங்களாக இடமளிக்கவில்லை தெரியுமா? ராஜ்யத்துக்காக நான் உங்கள் அழைப்பை ஏற்று வருவேனாயின் என்னைவிட ஈனப்பிறவி யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது. கனவில் கூட என்னால் துரியோதனனுக்கு துரோகம் இழைக்க முடியாது”.

“நான் செய்த தவறுக்கு, நான் தானே பிராயச்சித்தம் தேட வேண்டும். நீ அரசனாக அரியணையை அலங்கரிப்பதை நான் காண வேண்டாமா? அஸ்தினாபுரம் உனதல்லவா”.

“ஆ! அஸ்தினாபுரம் ராஜமகுடம். துரியோதனனுக்கு துரோகம் செய்துவிட்டு, செய்நன்றி மறந்துவிட்டு இதுநாள் வரை பகைமை பாராட்டியவர்களோடு சிநேகிதம் கொள்வது முடியாத காரியம்”.

“எனக்காக இறங்கி வரக்கூடாதா மகனே. உனக்கு சாமரம் வீச உனது ஐந்து சகோதரர்களும் தயாராய் இருக்கிறார்கள்”.

“துரியோதனனுக்கு என்னால் நம்பிக்கை துரோகம் செய்ய முடியாது அம்மா. வேறு ஏதேனும் வேறு கேளம்மா. கொடுத்துச் சிவந்த கரங்கள் அதற்காக காத்திருக்கிறது”.

“நாளை போர் தொடங்கப் போகிறதல்லவா. நீ எனக்கு இரண்டு வரங்கள் தந்தாக வேண்டும், தருவாயா”?

“அம்மா தூக்கி எறிந்தவனிடம் கையேந்த நேர்கிறதே என வருந்துகிறாயா? மாயக் கவர்ச்சிகளுக்கு ஆட்படாத இரும்பு இதயமம்மா என்னுடையது. உயிர் மட்டும் துரியோதனனுக்கு வேறு என்ன வேண்டுமானாலும் கேளும் தருகிறேன்”.

“எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. பாண்டவர்களைக் காக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை கர்ணா! இந்த அன்னையின் கதகதப்பு இன்னும் அவர்களுக்கு தேவைப்படுகிறது கர்ணா. என்னில் ஒருபாதியாக நீ பத்து மாதம் இருந்தாயல்லவா. உனது சகோதரர்களுக்கென்று நீ செய்யப்போவது இது மட்டுந்தான் ஞாபகமிருக்கட்டும் கர்ணா”.

“கண்ணன் சொல்லிக் கொடுத்தானா வரம் கேட்கச் சொல்லி. பாண்டவர்களுக்காக அந்த வேலையும் பார்க்கின்றானா நீ கேளும் அம்மையே”?

“முதலாவது நீ நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டும் தான் பிரயோகிக்க வேண்டும். இரண்டாவது மற்ற நான்கு சகோதரர்களுக்கும் உன்னால் தீங்கு நேரக்கூடாது”.

பத்து மாதம் என்னைச் சுமந்ததற்காக நான் இதைச் செய்கிறேன். என் வீரத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். போரில் அவர்கள் வென்ற பிறகு தெரிந்து கொள்ளட்டும் நான் அவர்களின் மூத்த சகோதரன் என்று. எந்த தர்ம கிரந்தமும் நியாயத்தை பார்க்காது. செய்நன்றி தான் மிக முக்கியம். இறக்கும் வரை துரியோதனன் நண்பனாகவே இறப்பேன். கண்ணனிடம் போய்ச் சொல்லுங்கள் இந்த முறையும் அவன் தந்திரமே வெற்றி பெற்றதென்று. நான் போட்ட பிச்சை தான் ராஜ்யம் என்று. மரணத்தை விழைவிப்பவர்களே வாருங்கள். போரில் வீர மறவனாக உயிர்விடும் பாக்கியத்தை எனக்குத் தாருங்கள். சூதனாக வாழ்ந்து சத்ரியனாக சாவது இவ்வுலகில் நான் ஒருவனாக மட்டுந்தான் இருக்கும்.

மேடை


சேதுப்பிள்ளை சென்னைவாசி. நகரத்து டாம்பீகமெல்லாம் கேட்காமலேயே அவரை வந்து ஒட்டிக்கொண்டன. வள்ளி பவனில் முறுவல் தோசையை சாப்பிடாமல் ஒருநாள் முடியாது அவருக்கு. இந்த சாம்பார் ருசிக்காக ஹோட்டல் நடத்தரவனுக்கு கோயில் கட்டலாம் என்ற ரகம் அவர். காபியையும் சாப்பிட்டு கும்பகர்ணன் மாதிரி ஏப்பம் விட்டால்தான் பிறந்ததற்கான பலனை அடைந்துவிட்டதாய் அர்த்தம் அவருக்கு. கைகழுவும் போது எதேச்சையாக கண்ணாடியைப் பார்த்தார். பக்கத்தில் கைகழுவும் உருவத்தை எங்கேயோ பாத்ததாகப்பட. அட நம்ம மாதவன் அவனே தான் கல்லூரி சிநேகிதம் பார்த்து எத்தனை வருஷமாச்சி என சிலாகித்தபடி, சற்று சத்தமாக “மாதவா என்னைத் தெரியுதா? என்ன அடையாளம் தெரியலையா செம்போடை கல்லூரியில ஒண்ணா படிச்சோம்ல இன்னுமா ஞாபகம் வரலை.

மாதவன் நெற்றிப்பொட்டைத் தட்டியபடி “ஓ வர்றது வர்றது இப்பத்தான் ஞாபகத்துக்கு வர்றது என்றார். “இப்பத்தான் கை நனைக்கிறியா எனக்கு ஆச்சி என்ன பிரமாதம் இன்னொரு ரவா தோசை சாப்பிட்டா போச்சி என்ன சொல்ற என்றார் சேதுப்பிள்ளை. “இந்த துடுக்குத்தனம் தான் உங்கிட்ட எனக்குப் பிடிச்சதே என்றார் மாதவன்.

“என்ன ஒரு பிரமாதமான நாள் ரவா தோசை, பேசுறத்துக்கு நீ, கூடவே ஒரு காபி இதான் சுவர்க்கம்ங்கிறது என்றார் சேதுப்பிள்ளை. “என்ன பண்ற, குடும்பம் எங்க இருக்குது என்று விசாரித்தார் மாதவன். “அப்பா  பண்ண புண்ணியம் வீண்போகலை சிவப்பதவி கையெழுத்து போடுறத்துக்கே சம்பளம் தர்றாண்ணா பார்த்துக்கயேன். மூத்தவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சி மாப்பிள்ளை பெங்களூர்ல எல்&டில வேலை பார்க்கிறார். இளையவன் ஆர்மில ஆபிஸராய் இருக்கான் பிக்கல் பிடுங்கல் இல்லாத லைஃப் என்றார் சேதுப்பிள்ளை. “அப்ப அனுபவி ராஜா அனுபவி தானா என்று கிண்டலடித்தார் மாதவன்.

“என் ஜாதகத்தை விடு கதைக்கு வருவோம். என்ன  விஷயமா சென்னைக்கு வந்த, யாரெல்லாம் வந்திருக்கா என விசாரித்தார் சேதுப்பிள்ளை. மாதவன் சற்று நிதானித்து “அப்பாவோட ரைஸ்மில்லைத்தான் நான் பார்த்துகிட்டு வர்றேன். ஒரு மகன் இருக்கான் அவனை என்கூடதான் வச்சிருக்கேன் என்றார். “சரி மாதவா அந்த பூங்கொடியைத்தானே கல்யாணம் பண்ணிகிட்ட என்றார் சேதுப்பிள்ளை. எங்கேயோ பார்த்தபடி “இல்ல அதுவிஷயமாத்தான் சென்னைக்கு அடிக்கடி வந்து போகும்படி ஆச்சி என்றார் மாதவன்.

“அப்ப பூங்கொடி… என்று கொக்கியைப் போட்டார் சேதுப்பிள்ளை. செருமியபடி தண்ணீர் அருந்திவிட்டு தனது பேச்சை ஆரம்பித்தார் மாதவன். “அது ஒரு பெரிய கதை. எனக்காக தனக்கு பார்த்த வரன்களையெல்லாம் தட்டிக் கழிச்சிகிட்டே வந்தா பூங்கொடி. சீமையிலேந்துதான் வரன் அமையுங்கிறதுல அவ அப்பா உறுதியாய் இருந்தார். எனக்கும் அப்பப்ப தகவல் வரும் வீட்ல ரொம்ப அழுத்தம் கொடுக்கறாங்கண்ணு.

சுயம்வரத்துல கலந்துக்கணும்ணா இளவரசனா இருந்தாகணும் இல்ல. ஆனா மனசுக்கு இதெல்லாம் தெரியுதா. அந்த வயசுல படிச்சி படிச்சி சொன்னாலும் விளங்குதா என்ற? மின்மினிப்பூச்சியால சூரியனுக்கு வழிகாட்ட முடியுமா. விட்டில் பூச்சியாத்தான் போய் சிக்கிக்கிறோம். அதுக்கு வயசும் ஒரு காரணம். காதல்ங்கிற தீபம் எரிய ஆரம்பிச்சதுக்கப்புறம் மனுசனுக்கு சோறு, தண்ணி கூட மறந்து போயிடுறது. நினைப்பும் அவளைப் பத்தி கனவும் அவளைப் பத்தியின்னு பித்து பிடிச்ச மாதியில்ல இருக்கு.

இந்த சினிமா இருக்கே அது கற்பனைன்னு தோணுதா நமக்கு. பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மெழுகா உருகுதுல மனம். உனக்கு நான் தான் எனக்கு நீ தான்ங்கிறது பசுமரத்தாணி போலல்ல மனசுலர பதிஞ்சிடுது. சினிமாவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் அதிகம்னு பாழும் மனசு கேட்கிறதா என்ன. மனக்கோயிலுக்கு சாமியை எழுந்தருளச் சொன்னா எப்படி? கண்ணுக்கு அழகா இருக்கறதுனால மட்டுந்தான் ஒரு பொண்ணுகிட்ட மனசை பறிகொடுத்துர்றோம்மா என்ன? எந்த செடி மரமாகும்னும், எந்த காதல் ஜெயிக்கும்னும் யாருக்குத் தெரியும்.

கரைப்பார் கரைச்சா  கல்லும் கரையும்னு எங்க காதலை தண்ணில போட்ட கோலமாதிரி ஆக்கப் பார்த்தாங்க அவ ஊட்ல. அவன்ட்ட என்னத்த கண்ட ஆத்தான்னு ஒப்பாரி வைக்காத குறைதான். இவனப் பாரு தாயி வேப்பம்பட்டி மிராசுதார் பையம் சொந்தமா வீடு இருக்கும, கார் இருக்கு, கூப்பிட்ட குரலுக்கு சேவகம் பண்ண ஆளுங்க இருக்காங்க ராணி மாதிரி இருக்கலாம் என்ன தாயி சொல்ற, இந்த மாதிரி பஜனை தான் அவ ஊட்ல எந்நேரமும்.

அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்கிறது இராமாயணத்துல வேணாம் ஒத்து வரலாம், தினசரி வாழ்க்கையில நடக்கக்கூடிய காரியமா இது. குலம், கோத்ரம்னு எத்தனை உப்புக்கு பேராத சமாச்சாரங்கள் இந்த காதலுக்குத் தடையா இருக்கு. சின்னஞ்சிறுசுக ஏதோ ஆசைப்படுதுக வாழ்ந்துட்டுப் போகட்டும்ன்னு உடுறாங்களா என்ன. குடும்ப கெளரவமாம், மனசை ஒருத்தன்ட்டயும் உடம்பை ஒருத்தன்ட்டயும் கொடுக்கறத்துக்கு பேரு கெளரவமா. என்ன காசு பணம் கடைசில வரட்டியைப் போட்டுத்தானே எல்லோரையும் எரிக்கப் போறாங்க.

பணக்கார இடம் வளைச்சிப் போட பாக்குறான்னு கடைசியா எங்க அப்பாகிட்ட வந்து நின்னுது இந்த விஷயம். எங்க அப்பாவுக்கு எம்மேல வைச்ச நம்பிக்கையே போச்சி. படிக்க அனுப்பின இடத்துல ஏன்டா உனக்கு இந்த வீண் வேலைன்னு கேட்க எனக்கு தர்மசங்கடமா ஆயிடிச்சி. நம்ப தராதரம் என்னன்ணு உனக்கு புரியவேணாமாடான்னு என் அம்மா என்னை வார்த்தையாலயே கொள்ளி வச்சிடுச்சி. நான் கிழிச்சி கோட்டை மீற மாட்டன்னு இப்பயும் நான் நம்புறேன்டான்னு அப்பா மட்டும் சொல்லிகிட்டே இருந்தாரு.

எந்தப் பொறியில எங்க அப்பாவை சிக்க வைக்கலாம்னு பூங்கொடி அப்பா தரப்புல அலைஞ்சிகிட்டே இருந்தாங்க. மில் ஓனர்கள் சங்கத்திலேர்ந்து பணத்தை எங்க அப்பா கையாடிட்டதா பொய்ப் புகார் கொடுக்க வைச்சி அவரை இரண்டு நாள் லாக்கப்ல வைச்சி அடிச்சி விசாரிச்சியிருக்காங்க. அவமானம் தாங்காம எங்க அப்பா தற்கொலை பண்ற அளவுக்கு விஷயம் எல்லை மீறி போயிடிச்சி. சாகறத்துக்கு ஒருநாள்முந்தி சொந்தக்கார பொண்ணைக் காண்பிச்சி தாலிய கட்டுன்னாரு, நான் வேற என்ன பண்றது. மனசை கல்லாக்கிகிட்டு தாலிய கட்டுனேன்.

எனக்கு ஆனதுகப்புறம் அவளை சும்மா விடுவாங்களா. அவளுக்கும் பண்ணி வைச்சாங்க. காசு பணம் உள்ளவனுங்க பொண்ணை பொருளாகத்தான் பார்ப்பாங்க போலிருக்கு. சீர் செனத்தி மட்டுமில்லாம எங்க சங்கதி வெளியே தெரியக்கூடாதுன்னு அம்புட்டு சொத்தையும் மாப்பிள்ளை பேருக்கு  எழுதி வைச்சாரு பூங்கொடி அப்பா. ஆண்டவன் போடுறது எப்பவுமே தப்புக் கணக்காத்தான் இருக்கு. ஆடி அடங்குற வரைக்கும் மனுசன் என்ன ஆட்டம் போடுறான். கடைசியா கோணித் துணியையும் உருவிக்கிட்டுத் தானே எரிய உடுறான் வெட்டியான். கொலை செய்யக் கூட தயங்காதவன் தான் ஊர்ல சொத்து பத்தோட இருக்கான். பழி பாவத்துக்கு அஞ்சுறவன் இன்னும் பிச்சையெடுக்கத்தான் வேண்டியிருக்கு. இந்த உலகத்துல பணத்தால எதையும் விலைக்கு வாங்கிடலாம் என்பது தான உண்மை நிலைமை.

இந்த வயசுலயும் வாழ்க்கைனா என்னண்ணு புரிஞ்சும் புரியாத மாதிரிதான் இருக்கு. ஒருத்தன் பிச்சையெடுக்கறதும் ஒருத்தன் பேரரசனா இருக்கறதும் எதனால. நான் வக்கத்துப்  போனதுனால தானே அவ எனக்கு வாக்கப்படலை. யாருக்கு யாரு முடிச்சு போடுறதுன்னு இறைவன் தான் முடிவு பண்றாண்ணு நம்ப முடியுதா? ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடையே ஜீவன் போராட்டம் தான் நடத்த வேண்டியிருக்கு. அவள இழந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையில எனக்கு பிடிப்பு இல்லாம போச்சுது. கப்பல் கவுந்திருந்தா கூட அந்தளவுக்கு துக்கம் ஏற்பட்டிருக்காது. என்னை வேரோட பேத்து வேற இடத்தில் வலுக்கட்டாயமா வச்சது மாதிரி ஆகிடிச்சி. சினிமா உட்பட எல்லாக் கண்றாவியைும் என் வாழ்க்கையிலிருந்து தூர எறிஞ்சிட்டேன்னா பாத்துக்க. இந்த வியூகத்தை யாரால உடைக்க முடியும். இங்கிருந்து வெளியேறும் வழி யாருக்குத் தெரியும். கங்கையில முழுகுனா பண்ணுண பாவம் தொலைஞ்சிடுமா என்ன? பிறப்பை வச்சி உயர்வு தாழ்வுன்னு பாகுபாடு காட்டுற கருமாந்திரம் எப்பத்தான் முடியுமோ. உபதேசம் பண்றதுனால திருந்துற கூட்டம் இல்ல இது. எல்லாம் விதின்னு நினைச்சுக்கிறத தவிர நம்மால் வேற என்ன பண்ண முடியும்.

புகுந்த வீட்டில பிரமை புடிச்ச மாதிரி இருந்திருக்கா. என்னத்த மனசுல வச்சிகிட்டு இருந்தாலோ என்னவோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். பூங்கொடியை டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டியிருக்காங்க. அவர் கைமீறிப் போச்சுது கீழ்பாக்கத்துக்கு கொண்டு போகச் சொல்லி இருக்காரு. அவள அங்க போய் உட்டுட்டு வந்தவுணுங்க தான் திரும்பிப் என்ன ஏதுன்னு யாரும் போய் பாக்கலை. விஷயம் என் காதுக்கு வந்துச்சி நான் துடிதுடிச்சி போயிட்டேன். அப்பயே என் உயிர் போயிடிச்சி, ஏதோ நடைபிணமாத்தான் இப்ப அலைஞ்சிகிட்டு இருக்கேன்.

நான் தான் காதலிச்ச பாவத்துக்காக மாசம் ஒரு தடவை வந்து ஹார்லிக்ஸ், பூ, பழம், புடவை எடுத்துட்டு வந்துப் பாத்துட்டுப் போவேன். என்ன சாமியோ என்ன பூதமோ அவ வாழ்க்கை சீரழிஞ்சதுக்கு நான்தானே காரணம். அவ கனவு சிதைஞ்சி போய் நான்கு சுவத்துக்குள்ள நிர்கதியாய் நிற்கிறாளே இத  நான் யாருகிட்ட போய்ச் சொல்லி அழுவேன். ஒவ்வொரு மாசமும் வரும்போது என்னைய அடையாளம் தெரிஞ்சிக்கிறாளா அழைச்சிட்டு போயிடலாமான்னு பார்ப்பேன். கோயில்ல கடவுளே இல்ல இருக்கிறது வெறும் கல்லுதான். அத கும்புடற மனுசன் மனசும் கல்லுதான். விதிக்கிறவனுக்கு கொஞ்சம் கூட மனசுல ஈரமே இருக்காதா. பூங்கொடியோட நினைவு நான் இறக்கிற வரைக்கும் ஏதோவொரு மூலைல இருந்துகிட்டுதான் இருக்கும் என மாதவன் தன் கதையை சொல்லிக் கொண்டே போக. சேதுப்பிள்ளைக்கு முதன் முறையாக அன்று ரவா தோசை கசந்தது.