Monday, May 28, 2018

வதை


1
இந்த இரவின் சக்கரங்கள் நகர மறுக்கின்றன
எனது மனக்குகை வெளவால்களின் இருப்பிடமாக இருக்கிறது
கனவுலகம் எனது பாரத்தை சிறிதுநேரம் இறக்கி
வைத்துவிட்டு ஆறுதல் தரட்டும்
இந்த நடுநிசியில் அமைதியின் வாசல்
திறந்தேயாக வேண்டுமாய் தவமிருக்கிறேன்
வசந்தத்தின் பாதையை எனது ரதம் தவறவிட்டுவிட்டது
துக்கத்தின் புதல்வனுக்கு
இந்த இரவு ஒரு யுகமாகத்தான் நீளப்போகிறது
கண்கள் ஜீவகளையை இழக்கின்றது
இந்த இரவாவது நான் நிம்மதியாக உறங்கவேண்டும்
உயிர்கள் உறக்கத்தில் லயித்திருக்கும் போது நான்
பிசாசு போல் விழித்திருக்கிறேன்
இந்தப் பூமிப்பந்தில் சகலவிதமான உரிமைகளும்
எனக்கு மறுக்கப்படுகிறது
எண்ண அலைகளின் வேகத்தை எனது உடலால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை
அமைதியற்ற மனம் இந்த இரவில் ஆறுதலைத்தேடி அலைகிறது
உறக்கத்தைப் பறித்துக் கொள்ளுதல் கடவுளின் தண்டனை
முறைகளுள் ஒன்று என தெரிய வருகிறது
அடிமையாயாவது இருக்கின்றேன் யாராவது ஐந்து
நிமிட உறக்கத்தை பிச்சையாய் இடமுடியுமா
சுவர்க்கோழிகள் என்னை கேலி செய்கின்றன
சேவலே கூவிவிடு உன் சத்தத்தைக் கேட்டாவது
சூரியன் எழட்டும்
காலச்சக்கரத்தில் சிக்குண்ட என்னை அது
சாறாக பிழிந்துவிட்டது
நினைவலைகளில் மிதக்கும் காகிதக் கப்பல்
கரைசேர துடிக்கிறது
கங்கையில் முங்கினாலும் எனது பாவங்கள் தொலையாது
விடுதலைக் குயில்களே கீழ்வானம் சிவந்தால்
எனக்குச் சேதி சொல்லுங்கள் ஒவ்வொரு பகலுக்குப்பின்னும்
இரவு வந்தேயாக வேண்டுமா
இரவு என்னைப் பைத்தியக்காரனாக அலையவிட்டுவிட்டது
நரம்புகளைச் சாகடிக்க கிண்ணத்தில் மதுவை
ஊற்ற வேண்டியிருந்தது
இந்த இரவுக் கடலை கடப்பதற்கு கண்ணை மூடிக்கொண்டு
போதையின் பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது
எனது நம்பிக்கை வேர்கள் பலமிழந்துவிட்டன
மரண தேவதையை வரவேற்க கையில் பூமாலையுடன்
காத்திருப்பது இந்த உலகில் நான் ஒருவன் மட்டும்தான்.

2
இதோ என் கண்ணெதிரே கடவுள் இறந்துகிடக்கிறார்
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் உடல் நாற்றமெடுக்க தொடங்கிவிடும்
இன்றுவரை மரணத்தீவில் அவர் பதுங்கி இருந்திருக்கவேண்டும்
மனிதனின் போலியான நடிப்பைக் கண்டு அவர் ஏமாந்துவிட்டார்
கடவுளின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க மனிதன் விரும்பவில்லை
அவரது ஆளுகைக்கு கீழிலிருந்து இந்த பூமியையாவது
விடுவித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்
நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் தன்னை சோதனைக்குள்ளாக்குவதை
அவன் விரும்பவில்லை
பாவத்தின் சம்பளத்தை அவன் ஏற்றுக்கொள்ள மறுத்தான்
சகல அதிகாரங்களையும் கொண்ட ஒருவர் இருந்தால்
தனது திருட்டுத்தனம் வெளிப்பட்டுவிடுமோ எனப் பயந்தான்
தனது செல்வத்தைக் கொண்டு தேவலோகத்தையே பூமியில்
அவனால் சிருஷ்டிக்க முடிந்தது
அவன் வாரி இறைத்த பணத்துக்காக தேவதைகள் அவனது
காலடியில் வீழ்ந்து கிடந்தனர்
மனிதன் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள
என்ன செய்வதற்கும் தயாராக இருந்தான்
கடவுளைத் தவிர எதையும் அவனால் விலைக்கு
வாங்க முடிந்தது
விதிக்கு கட்டுப்பட்டேத்தீர வேண்டுமென்று என்னை யாரும்
கட்டாயப்படுத்த முடியாது என்றான்
பக்கத்து வீட்டில் துக்கம் நிகழ்ந்த போதும்
மரணத்தைப் பற்றி அவன் கவலை கொள்ளவில்லை
கடவுளின் இருப்பு இங்கு யாருக்கும் எந்த விதிவிலக்கும்
கிடையாது என்று அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது
நிரந்தரமான ஏதோவொன்று அவன் கைக்கு அகப்படாமல் இருந்தது
இந்த உடலில் எங்கே உயிர் குடியிருக்கிறதென்று
அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை
எந்த வழியில் சென்றாவது உடலின் தேவையை
பூர்த்தி செய்து கொண்டான்
அடுத்தவன் முதுகை எப்படி படிக்கல்லாகப் பயன்படுத்தி
கொள்வதென்று அவனுக்குத் தெரிந்திருந்தது
கடவுளின் குமாரனென்று யாரும் பூமிக்கு சொந்தம்
கொண்டாடிட வந்துவிடக் கூடாதென்று அஞ்சியே
கடவுளைக் கொலை செய்தான்
கடவுளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
மனிதனிடம் நம்பிக்கை வைத்த குற்றத்துக்காக
சிதையில் கடவுள் எரிந்து கொண்டிருந்தார்.

3
நீ போதித்த அன்பு இந்த உலகத்தில் ஆட்சி செலுத்தவில்லை
மலைப்பிரசங்கம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
எனது இருண்ட வாழ்க்கையில் உனது உபதேசங்களே ஒளியேற்றி வைத்தன
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு ரகசியத்தை நாமிருவரும் மட்டுமே அறிவோம்
எதிர்வருவது நீதான் என்று தெரியாமல் பலமுறை உன்னைக்
கடந்து சென்று இருக்கிறேன்
கடவுள் ஒரு பரதேசி என்பதை இந்த உலகத்தினர் ஒருநாளும்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
நீ ஏற்றி வைத்த நெருப்பு இன்னும் உள்ளுக்குள் எரிந்து கொண்டுதான் இருக்கிறது
இந்த உலகம் கடவுளின் பொம்மை விளையாட்டு என்பதை
உன் மூலமாகத்தான் நான் அறிந்து கொண்டேன்
அடிமைகளிடமிருந்து எழுந்த முதல் விடுதலைக்குரல் உன்னுடையது
ஆவிக்குரிய வாழ்விலிருந்து நான் விலகிப் போகும்போது உள்ளுக்குள்
உன் குரல் கேட்கும்
சிலுவையில் நீ இறக்கும் தருவாயில் முணுமுணுத்த வார்த்தை
என்னவென்று நான் மட்டுமே அறிவேன்
சத்தியத்தின் பாதையை தேர்ந்தெடுத்தால் மரணம் தான்
பரிசாகக் கிடைக்கும் என்று நான் உனக்குச் சொல்லியிருந்தேன்
கடவுள் உண்டென்று நீ ஏற்றுக் கொண்டாய்
அக்கணமே அந்த சக்தியானது உன் மூலமாக செயல்பட ஆரம்பித்துவிட்டது
இந்த உலகம் அன்பினை போதித்தவர்களையெல்லாம் அலட்சியப்படுத்தியது
மனிதன் தன் சுவர்க்கக் கனவுகளை பணத்தின் மூலம் நனவாக்கிக்
கொள்ள முயன்று கொண்டிருந்தான்
மனித மனம் சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
அதிர்ந்து பேசாதீர்கள் இப்போது கல்லறையில் உறங்குபவன்
வாழும் போது தூக்கத்தைத் தொலைத்தவனாக இருக்கலாம்
இந்தப் பூமியில் வாழ்க்கையின் வேர்களைத் தேடிப் போனவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
நான் தவறவிட்ட தேவனின் காலடியை இந்தப் பிறவியிலாவது
அடைய முடியுமா
நான் ராஜபாட்டையை தவிர்த்து முட்களின் பாதையை ஏன்
தேர்ந்தெடுத்தேன் அது உன்னை வந்தடையும் என்பதால் தான்
கர்மவினைகள் என்னைத் துரத்துகிறது எனது இரவு உறக்கத்தை
பேய்கள் களவாடிவிடுகின்றன
அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் பூமிப்பந்தை
தாங்கிக் கொண்டிருப்பது யார்
மாய உலகத்தில் கடவுளின் ஒளிக்கீற்றை காணமுடியவில்லை
நான் நரக இருளில் தள்ளப்பட்டதற்கு விதியை காரணம்காட்டி
தேவன் தப்பிப்பது சரியா
கோள்களின் இயக்கத்தைக் கட்டமைத்தவனைத்தானே
நீங்கள் கடவுள் என்கிறீர்கள்
உங்கள் கடவுள் சாத்தானுடன் நடந்த சூதாட்டத்தில்
இந்த உலகை பணயம் வைத்து இழந்துவிட்டாரா
எதை எதையோ துரத்தி ஓடுகிறேன்
மரணம் என்னை துரத்துவதை மறக்க
குழந்தைத்தனமான கடவுள் நயவஞ்சகமான மனிதர்களைப்
படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா
இரவின் கண்கள் தனிமையில் அழும் கடவுளைக் கண்டிருக்குமல்லவா
இறைவனின் அடிவயிற்றில் எரியும் நெருப்புதானே மனிதனை சாம்பலாக்குகிறது
எச்சமிட்ட காக்கைகளுக்கு மரம் நன்றி சொல்கிறதா என்ன
இன்னும் இன்னும் என்று ஓடும் மனதினை எதைக்
கொண்டு நான் அடக்குவேன்
அங்குசத்தை தொலைத்துவிட்ட பாகனைப் போன்றதுதானே
கடவுளின் நிலைமை
வாழ்க்கையின் கோரமுகத்தை நான் பார்த்துவிட்டேன்
எப்போது இந்த சித்ரவதைக் கூடத்திலிருந்து எனக்கு
விடுதலை அளிப்பாய்
ஒவ்வொரு இரவும் கண்மூடும் போதெல்லாம்
இந்த இரவு எனக்கு விடியக் கூடாது என்றுதானே நான் வேண்டுகிறேன்
எதிர்ப்படுபவர்களில் யாராவது கடவுளாக இருக்கலாம்
என்று எண்ணித்தானே திருவோட்டை நீட்டுகிறேன்
உன்னால் எனக்கு மரணத்தை பிச்சையாகயிட முடியுமா?

Sunday, May 20, 2018

பிழைப்பு


ஆடி மாசம் பொறந்திடிச்சி பூசாரிக்கு அம்மன் கோயில் திருவிழாவை முடிக்கிற வரைக்கும் பிரசவவலிதான். தனிக்கட்டைதான் கோயில் காரியமே கதின்னு கிடக்கிறவரு. ஆடித் திருவிழாவுல இந்த வருஷம் எப்பவும் போல ராமு பிரஸ் தான் நோட்டீஸ் உபயம். அத வாங்கத்தான் இந்த உச்சிவெயில்ல நடையா நடந்து அச்சகத்துக்கு வந்திருக்கிறாரு.

செருப்பை வெளியில கழட்டிப் போடுறப்பவே உள்ளே தரகரும், ஜோசியரும் பேசிகிட்டு இருந்தது அவர் காதில் விழுந்தது. வாய்கயா என்ற ஜோசியர் திருவிசா முடியிற வரைக்கும் உங்க கால் தரையில நிக்காதே என்றார். குத்துவிளக்கு பூசைக்கு எந்த புரோகிதரை ஏற்பாடு பண்ணப் போறீங்க என்றார் தரகர். வசூலைப் பொறுத்துதான் இருக்கு, முதல் நன்கொடை நீங்க ரெண்டு பேருமா இருக்கட்டும் ஆரம்பிச்சு வையுங்களேன் என்றார் பூசாரி.

கேட்டுட்டீங்க, கோயில் காரியம் வேற எம்பேர்ல ஒரு நூறுரூபா எழுதிக்கீங்க என்றார் ஜோசியர். எம் பேர்லயும் தான் என்றார் தரகர். சாமி காரியத்துக்கு கணக்கு பாக்காதீங்க கொடுங்க, அவ எல்லைய காக்குறதுதால தானே நாமே நிம்மதியா இருக்கோம் என்றார் பூசாரி. ஏதோ அவ புண்ணியத்துல தான் நான் வயித்தக் கழுவிகிட்டு இருக்கேன், வேற எந்த புண்ணியவான் எனக்கு அடைக்கலம் கொடுப்பான் இந்த ஊர்ல என்றார் வேதனையுடன் பூசாரி.

என் நிலைமையை ஏன் கேட்கறீங்க, ஜாதகம் பாக்குறதுல பெருசா என்ன சம்பாதிக்க முடியும். பரிகாரம்னு சொல்லிடி நாலு காசு வாங்குறதுல தான் எம் பிழைப்பு ஓடுது என்றார் விரக்தியுடன் ஜோசியர்.

காலத்துக்கு ஏத்த மாதிரி என்னைய மாத்திக்க முடியலை, இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் தாங்களே துணையைத் தேடிக்கிதுங்க, நம்மகிட்டனா ஆறேழு ஜாதகம் தான் கையில இருக்கும். கம்யூட்டர்ல தட்டிவிட்டா ஆயிரம் ஜாதகம் வருமாமே?  நான் கல்யாணம் கட்டிகிட்டப்ப ஃபோனாவது ஒண்ணாவது, இப்ப பாருங்க வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர்ங்கிறாங்க நமக்கு ஒண்ணும் புரியலை போங்க என அலுத்துக் கொண்டார் தரகர்.

நாடு வளருதுங்கிறார்களே, கிராமம் அப்படியே தாங்க இருக்கு வானம் பார்த்த பூமியாதான் இப்பவும் இருக்கு. எண்ணெய் எடுக்கிறேனு விவசாயிங்களை வாழவுடாம பண்ணிட்டா எங்க தான் போவாங்க பிழைப்புக்கு. நாடே இப்ப கம்பெனியா தாங்க செயல்படுது. திருப்பதி தரிசனத்துக்கு இருக்கிற இடத்திலேர்ந்து புக் பண்ணிடலாம்மா, இதைத் தெரியாத ஏழை பாலைங்க தான் க்யூல நின்னு கஷ்டப்படுது என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் பூசாரி.

ஜோசியருங்க முன்னெல்லாம் ஆளைப் பாக்காம ஜோசியம் சொல்ல மாட்டாங்க, இப்ப என்னென்னா செல்லுல மெசேஜ் வருது நிமிடத்துக்கு மூன்று ரூபா உங்க ஜாதகப்பலனை தெரிஞ்சுக்க இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்கன்னு. டி.வில முகம் காட்டறவனையும், பை ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு ஜாதகம் பார்க்கவைனை நம்பித்தான் மக்கள் காசைக் கொண்டு  போய் கொட்டுறாங்க என்றார் ஜோசியர்.

ஏழைங்க நிலைமை ஆணி அறைஞ்ச மாதிரி தாங்க. ஊர் நிலவரமும் சரியில்ல. யாரைப் பார்த்தாலும் பஞ்சப்பாட்டு பாடறான். பாடை கட்டி இழுத்தும் மழை பெய்யலைனா பாத்துக்குங்க. எப்பவுமே திருவிழாக் காரியத்தை இழுத்துப் போட்டு செய்யறவனெல்லாம் கண்டும் காணாத மாதிரி போறான். ஊர்ல கோயில்னு எதுக்குங்க கட்டியிருக்காங்க மனசு சஞ்சலப்பட்டா வந்து சாமியை கும்பிடறதுக்குத் தானே. இப்ப காதலிக்கிறவங்களுக்கு ஏத்த இடமா கோயில் மாறிப் போச்சு. போற வர்றப்ப அவங்க பேசுறது இந்தக் காதுல வந்து விழுது கண்றாவி. போய் அம்மன்கிட்ட கேட்டுட்டுத்தான் வந்தேன், நீ எப்படிம்மா இங்க இருக்கேன்னு? என்றார் கனத்த இதயத்துடன் பூசாரி.

ஏன்யா நீ வேற. ஒரு நாள் காலை நேரத்துல போய் பஸ்ல மாட்டிகிட்டேன். இந்த காலேஜ் பசங்க நடத்துற அட்டூழியம் இருக்கே. பக்கத்துல ஆள் இருக்காங்கன்னு பார்க்கிறாங்களா? வயசுக்கு மரியாதை தரவேணா? என்ன சொல்றது போங்க. பெத்தவங்க கஷ்டத்தை நினைச்சிப் பார்த்தா இப்படிப் பண்ண மனசு வருமா? என்றார் ஜோசியர்.

நாலு எழுத்து படிச்சவங்க தானே ஒரு இங்கிதம் வேணாம். அன்னிக்கு  ஒரு நாள் என்னை வரச்சொன்னவர் வேறெங்கயோ வேலையா போயிட்டார். சரின்னு ஒரு தியேட்டர்ல சிவாஜிபடம் ஓடுதேனு டிக்கெட் எடுத்துட்டு உள்ள போனா, எல்லாம் ஜோடி ஜோடியா வந்திருக்குதுங்க. யாரும் படம் பாக்க வந்ததா தெரியலை. நான் திரும்பி வந்துட்டேன் என்றார் தன் பங்குக்கு தரகர்.

மனசுல ஈரம் இருந்தாதானுங்க மனுசன், கோயில் மராமரத்து வேலைக்காக துபாய் வீட்ல எவ்வளவு கொடுத்தாங்க தெரியுங்களா? வெறும் ஐம்பது ரூபா. எவ்வளோ பெரிய மனசு. அம்மன் இருக்காளே இருக்கிறவனுக்கு அள்ளிக் கொடுக்கிறா, இல்லாதவன் கோவணத்தையும் சேர்த்து உருவிக்கிறா என்றார் பூசாரி.

பணம இல்லைனா பிணந்தான், வாழ்றதுக்கு பதிலா சுடுகாட்ல போய் கால நீட்டி படுத்துக்கலாம். கலிகாலம் பணமட் பேசுது. பணத்தால எல்லாத்தையும் விலைக்கு வாங்க முடியுது. எனக்கு மூணுமாச வாடகை பாக்கி. எனக்கு இந்தத் தொழில விட்டாக்கா வேறெதுவும் தெரியாது. தலையில என்ன எழுதியிருக்கோ அதான் நடக்கும் போலருக்கு. வாழ்க்கையில கிரகங்கள் எப்படியெல்லாம் விளையாடுது என்றார் ஜோசியர்.

சிவனே பிறந்து வந்தாலும் கோள்களோட ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டுத்தானே ஆகணும்.சில பேரோட ஜாதகக் கட்டம் நாற்பது வயசுக்கு மேல தான் வேலை செய்ய ஆரம்பிக்கும். உடும்புப் பிடியா எந்த சாமியையாவது பிடிச்சிக்கணும் வேற வழியே இல்ல என்றார் தெளிவுடன் பூசாரி.

கூழோ, கஞ்சியோ குடிச்சாலும் குடும்பம் பக்கபலமா இல்லைனா மனுசன் வெளியில நடமாட முடியுமா? பாருங்க நம்ம பரமேசு நிலைமைய, ஒரே பொண்ணுன்னு பொத்திப் பொத்தி வளர்த்தாரு அது தன்னோட கூடப்படிக்கிறவனை தான் கல்யாணம் கட்டிப்பேன்னு முடிவா சொல்லிடிச்சி. அதுல விழுந்தவர்தான் வெளிய வந்து யாரு மூஞ்சுலேயும் விழிக்காம ஊட்டுலேயே அடைஞ்சிக் கிடக்கிறாரு. பாவம் மனுசன் என்றார் தரகர்.

யாரு கழுத்துல எப்ப கத்தி விழும்னு தெரியலை, நம்ம வாத்தியார் பொன்னம்பலத்துக்கு ஹார்ட் அட்டாக்காம், வயசுல என்னமா உடம்பை மெயின்ட்டெயின் பண்ணி வச்சிருந்தாரு தெரியுமா? அவருக்கு எப்படின்னு இன்னும் எனக்கு விளங்கலை. ரொம்ப நல்ல மனுசன். இன்னும் ரெண்டு பொண்ணுங்களை கரையேத்துர வரைக்குமாவது அவர் உசிரோட இருக்கணும். பிறப்பும் இறப்பும் அவ கையில தானே இருக்கு நாமெல்லாம் பொம்மைங்க தானே என்றார் கோயில் இருக்கும் திசையைப் பார்த்து பூசாரி.

என் ஜாதகத்தைப் பார்த்துட்டு என் அப்பா உனக்கு சிவப்பதவி கிடைக்காதுடா, நீயும் நம்ம தொழிலுக்கே வந்துடு அப்படின்னுட்டார். அவர் ஒண்ணும் சம்பாதிச்சி வச்சிட்டுப் போகலை. ஒரு வேளை வயித்த நொப்ப அவர் கத்துக் கொடுத்தது தான் இப்ப உதவுது என்றார் கண்கலங்கியவாறு ஜோசியர்.

கண்ணதாசன் சும்மாவா சொன்னாரு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுன்னு. அதிகமா எதிர்பார்க்காத ஏமாற்றம் தான் மிஞ்சும். ஐம்பது ரூபா கொடுத்தான்னா சந்தோஷமா வாங்கிக்க. இருபத்தி ஐந்து ரூபா கொடுப்பான்னு நினைச்சேன் ஐம்பது கொடுத்திருக்கான்னு சந்தோஷப்படு என்றார் கரிசனத்துடன் பூசாரி.

பொங்கித் திங்கவே ஒவ்வொரு நாளும் பெரும்பாடாய் இருக்கு, எம்புள்ளைங்களை கான்வென்ட்ல படிக்க வைக்கணும்ணு ஆசை. எந்தொழில் அவங்களுக்கு வேணாம். அரசு உத்தியோகத்துக்கு போய், காலாட்டிகிட்டு சாப்பிடனும் அவங்க. அந்த ஆசை எனக்கு இருக்கக்கூடாதா? என்றார் ஆதங்கத்துடன் ஜோசியர்.

புதையலுக்கு மேல உக்காந்து பிச்சையெடுக்கிற கதைதான் நம்ம கதை. எந்த விதை எப்ப முளைக்கும்னு யாருக்குத் தெரியும். படியளக்கறவளுக்கே திருவிழா எடுக்க நான் ஒவ்வொருத்தர்கிட்டேயும் பிச்சையெடுக்க வேண்டியிருக்கு நான் கிளம்பறேன் என்றார் பூசாரி.

அப்படின்னா ஏழைங்க ஏக்கப்பட்டே சாகவேண்டியதுதானா? எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டுப் போங்க என்றார் ஜோசியர்.

இதப்பாரு நான் சாதாரண ஆளு, ஏதோ அம்மனுக்கு பூசை செஞ்சி வயித்தக் கழுவிகிட்டு இருக்கேன். காரில வந்து இறங்கறவனை பார்த்து நான் அந்த மாதிரி இருக்கணும்னு ஆசைப்பட்டா அம்மன் இருக்கிறதையும் புடுங்கிட்டு உட்ருவா. இந்த வரவு செலவு கணக்குக்கெல்லாம் நீ அவளைக் கூப்பிடாத. முதல்ல நீ அம்மனைப் போய்ப் பாரு, அவளுக்கு எதுக்க ஏதாவது உன்குன்னு கேட்கத் தோணுதான்னு பாரு போ என்றார் தீர்க்கமாக பூசாரி.

கவலைப்பாடா யாருக்குத்தான் கஷ்டமில்ல என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள் பூசாரியும், தரகரும்.