Friday, May 18, 2018

அகம் பிரம்மாஸ்மி


மனித வாழ்க்கை இன்பத்தின் தேடலாகவே உள்ளது. அவன் துக்கத்தைத் தாங்கிக் கொள்வதெல்லாம் இன்பம் அடுத்து வரும் என்ற நம்பிக்கையில் தான். வாழ்க்கைக் கடலில் ராட்சச அலைகளுக்கெதிராய் மனிதன் நீந்த வேண்டியுள்ளது. மனிதன் தன்பிறப்பை ஒரு விபத்து என்று தான் கருதுகிறான். மனிதனின் மனதில் எழும் ஆசைகளே அவன் பாவ காரியம் செய்ய ஏதுவாய் அமைகிறது. மனம் ஐம்புலன்களின் வழியே இன்ப நுகர்வின் மீது வெறி கொண்டு அலைகிறது. மனிதன் பாவப்பிறவி அவன் மனதின் கைப்பாவையாக இருந்து தான் இறுதியில் இறக்கிறான்.

இந்த மனதிற்கு பெண்ணை அணைக்க இரண்டு கைகள் போதவில்லை என்பதால் தான் இவ்வளவு உருவங்களை எடுத்துள்ளது. மனிதனை மோகத்தீயில் எரிய வைத்து போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. அறுபது வயதில் மரணம் வருமென்றால் அதுவரை மனம் பேயாட்டம் ஆடுகிறது. பொம்மலாட்ட பொம்மையைப் போன்று தான் மனிதன் மனதினால் ஆட்டுவிக்கப்படுகிறான். கிளர்ச்சியூட்டும் கனவுகளைத் தோன்றச் செய்து மனிதனின் ஆசைத் தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்கிறது.

மனம் இந்த மாய லோகத்தை சிருஷ்டித்து தனது அடிமைகளான மனிதர்கள் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறது. பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த மனதிற்கு பூமியை ஆளுமை செய்வது ஒன்றும் கடினமானதல்ல. மனம் தனது ஆய்வுக்கூடமான இந்த உலகத்தில் மனிதர்களை மோதவிட்டு ரசித்துக் கொண்டிருக்கிறது. மரணம் விடுதலையளிக்கும் வரை மனிதன் மனதிற்கு ஏவல் புரிந்துதான் ஆகவேண்டும்.

ஆதிகாலம் தொட்டே மனம் தனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த மனிதனுக்கு மரணத்தையே பரிசாகத் தந்திருக்கிறது. சூட்சும மனதுக்கு ஸ்தூல உடல் கட்டாயத் தேவையாய் இருக்கிறது. பாவ காரியத்தில் மனிதனை விழவைப்பதே மனதின் வேலையாய் இருக்கிறது. மனிதனை சக்கையாக பிழியும் வரை மனதின் வேட்கை தீருவதில்லை. குழந்தைகளுக்கு பொம்மையைக் காட்டி வழிக்குக் கொண்டு வருவதைப் போல் மனம் மனிதனுக்கு கடவுளைக் காட்டி தனக்கு சேவகம் செய்வது தான் உடலெடுத்ததின் பயன் என்று மனிதனை உணர வைக்கிறது. மனிதனுக்கு ஓய்வளிக்கும் இரவில் மனம் வேறொரு உடலை எடுத்துக் கொள்கிறது.

அபூர்வமான சில பிறவிகள் மனத்துடனான தனது தொடர்பை துண்டித்துக் கொள்கின்றனர். அத்தகையவர்களை அவர்கள்  வாழ்ந்த காலகட்டத்தில் மனிதர்கள் ஏசுகின்றனர். பல நூற்றாண்டுகள் கடந்த பின்னர் இறைத் தூதர்கள் எனப் போற்றுகின்றனர். தான் விழுந்து கிடப்பது பாவச் சேற்றில் என்று உணர்ந்திருந்தாலும் மனிதன் அதிலிருந்து மீள விருப்பப்படவில்லை. விட்டில் பூச்சியைப் போல மனதில் எரியும் ஆசைத்தீ மனிதனைச் சாம்பலாக்குகின்றது. பாவ காரியம் செய்ததற்காக பதறாதே பரிகாரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிறது மனம். ஆண், பெண் விளையாட்டில் மனம் சலிப்படைவதே இல்லை.

இதோ இந்த பரசுராம் உட்கார்ந்திருப்பது இந்த ஊரிலுள்ள பழமையான சிவன் கோயிலில். சிவனுக்குத் தெரிந்த மனதின் ஆடுபுலி ஆட்டமெல்லாம் பரசுராமுக்குத் தெரியாது. ஒரு இக்கட்டான சூழ்நிலையே அவனை இங்கே வரவைத்தது. தற்கொலை முடிவுடன் உட்கார்ந்திருக்கும் அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை மனம் தேட ஆரம்பித்தது. ஆனாலும் அவன் தன் தற்கொலை முடிவில் உறுதியாக இருந்தான். அவனுக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. கண்ணில் நீர் அரும்பியது. அவனுக்கு தனக்குத் தண்டனை கொடுத்துக் கொள்வதைவிட வேறு வழி தெரியவில்லை.

இந்த விபரீதமான முடிவு எடுப்பதற்கு தானே காரணம் என தன்னைத் தானே நொந்துகொண்டான். சாதாரணமாக எறும்பு கடித்தாலே சுளீர் என்கிறதே மரணம் வலி மிகுந்ததாக இருக்குமா என அவன் யோசித்தான். ஏதோவொரு புத்தகத்தில் அவன் ஆன்மாவைப் பற்றி படித்திருந்தான். அப்படி இறப்புக்குப் பின் வாழ்க்கை இருக்குமாயின் அது தனக்கு மிகுந்த சங்கடத்தைத் தரும் என எண்ணினான். தான் வாழ்ந்த வாழ்க்கையை முற்றிலும் மறக்கவே அவன் எண்ணினான்.

உயிர் உடலுக்குள் எங்கிருந்து இயங்குகிறது. மரணத்தின் போது எது பிரிகிறது. அப்படி உயிர் பிரிந்தால் இடுகாட்டில் என் உடல் எரிக்கப்படுவதை என்னால் பார்க்க முடியும் அல்லவா? இறந்த பிறகு வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் அவ்வப்போது ஞாபகத்தில் வந்தால் நான் என்ன செய்வது. தற்கொலை செய்து கொண்ட பிறகு வாழும் ஆசை வந்தாலும் உடலில் மீண்டும் புக முடியாது அல்லவா? என்றோ வரப்போகும் மரண அனுபவத்தை வலிந்து வரவழைத்துக் கொண்டால் அது தவறா?

ஒருவனது இருப்பை அழிக்கும் மரணத்தைப் போன்றதொரு கொடியது உலகில் இல்லையல்லவா. ஆனாலும் வாழ்நாள் நீண்டு கொண்டே சென்றால் சலிப்பு ஏற்படாதா? மரணம் இளைப்பாறுதலா, தண்டனையா? அசையாமல் கிடக்கும் உடலைப் பார்த்தால் மனம் பீதியடைகிறதே ஏன்? உயிர் வெளியேறினால் இரத்த ஓட்டம் நின்றுவிடும் என்கிறார்களே, தூக்கத்தில் இரத்த நடைபெறும் போது உயிர் எப்படி வெளியில் சென்று திரும்புகிறது. விழித்த பின்புதானே கனவு என்று தெரிகிறது. அதுவரை நிஜம் போலத்தானே தோன்றுகிறது. இந்த இரவில் மரணித்துவிடவேண்டும் என்று கண்மூடிய பிறகு காலையில் மீண்டும் விழித்தெழுவது கொடுமையானதல்லவா?

தற்கொலை செய்து கொண்டால் சுவர்க்கத்தில் நுழைய முடியாதா? பூமியிலேயே வாழ்நாள் முடியும் வரை பேயாக அலைய வேண்டுமா? மரணத்திப் பிறகான வாழ்வைப் பெறுவதற்கும் நிராகரிப்பதற்கும் மனிதனுக்கு உரிமையில்லையா? புத்தர் போதித்த சூன்யவாதம் மெய்யா இல்லையா என்பது மரணிக்கும் போதுதான் தெரிய வருமா? வாலிப வயதில் இருக்கும் என்னால் வைராக்யமாகத் தேகத்தை உதற முடியாதா? என் உடலை மாய்த்துக் கொள்ள நான் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? தற்கொலை செய்து கொள்பவர்களை கோழை என்கிறார்களே, அதற்கு எவ்வளவு வைராக்கியம் வேண்டும். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்கு கடவுளின் அசரீரி கேட்டதாமே அது உண்மையாகவா?

தோற்றவனின் டைரிக் குறிப்பை இந்த உலகத்தில் யார் தான் படிக்க முன்வருவார்கள். என் முடிவுக்கு கர்மவினை மட்டும் தான் காரணமா? அப்படியென்றால் பாவக்கணக்கு தீரும்வரை பிறவியெடுக்க வேண்டியது தானா? எனக்கு இது தான் விதிக்கப்பட்டது என எண்ணிக் கொள்ளவா? அடுத்து எங்கு யாருடைய கருவில் புக வேண்டும் என நிர்ணயிப்பது யார்? அப்படியென்றால் இந்த பூலோகம் ஒரு பத்ம வியூகமா எந்த மனிதனாலும் வியூகத்தை உடைத்து வெளியேற முடியாதா? கடவுளுக்கு அறம் தான் முக்கியமா உயிர்களில்லையா? முகமூடிகளை நம்பி ஏமாந்ததால் தானே இந்த நிலை எனக்கு ஏற்பட்டது.

பந்தயத்தில் ஓடி ஜெயிக்க முடியவில்லை, என்னால் பந்தயத்தை வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. வெற்றி மாலை சூடியவர்களுக்குத் தானே பெண்ணும், பொன்னும். என்னால் பணத்தை வேட்டையாட முடியவில்லை. எந்த வழியில் வந்தால் என்ன பணம் பணம் தானே. மாதம் ஐம்பதாயிரம் என்றால் பெண்ணைப் பெற்றவர்கள் வாய் பிளக்கிறார்கள். என்னால் ஐயாயிரம் கூட சம்பாதிக்க வக்கில்லாதவனாக இருக்கிறேன். பணத்தைப் பெரிதாக மதிக்கும் மனிதனை கடவுள் தன்னுடைய படைப்பு என்று சொல்லிக் கொள்வானா? ஏங்கி ஏங்கிச் சாக வேண்டியது தான் என் தலையெழுத்தா?

தேவையான அளவு பணமிருந்தால் நான் இங்கு வந்து உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருப்பேனா? யாரோ முகம் தெரியாதவர்கள் என்னைப் பழி தீர்த்துக் கொள்கிறார்கள். என் சிறகை முறித்து அவர்களின் அடிமையாக்க முயலுகிறார்கள். நான் வேதனைப்படுவதைப் பார்த்து குதூகலிக்கிறார்கள். என்னை மரணக் குழியில் தள்ளிவிட்டு கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

அப்போது கோயிலின் மணியோசை அவன் சிந்தனையைக் கலைத்தது. திரும்பிப் பார்த்தான் வயதான மூதாட்டி மூளை வளர்ச்சி குன்றிய இளைஞனை தனது இடுப்பில் சுமந்து கொண்டு மணியடித்துக் கொண்டிருந்தாள். பரசுராமுக்கு தனது அம்மாவைக் காணவேண்டுமென்ற அவா எழுந்தது. விறுவிறுவென எழுந்து நடந்தான். ஏதோ அவனை உந்தித் தள்ளியது.

காலணியை அணிந்து கொண்டான். வாசலில் அமர்ந்திருந்த பிச்சைக்காரனின் திருவோட்டுக்கு அருகில் சில்லறைகாசுகள் சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்த பரசுராம் சற்றும் யோசிக்காமல் அதைப் பொறுக்கி திருவோட்டில் போட்டான். அண்ணாந்து பரசுராமைப் பார்த்த பிச்சைக்காரன்.
சிவனா உன் ஊர் திருவாலங்காடுதானே, நீ இங்க சுத்திறியா?
மரணப்புதிருக்கு விடை தேடுறியா?
மரணத்தோடு விளையாடுறது தானே உன் பொழுதுபோக்கு!
உன் சைவக் கொடிதான் இன்னும் பறக்குதான்னு பார்க்க வந்தியா?
சைவ நெறியை மீறுனதுனால சித்தருங்க உன்னைய அலைய உட்டாங்களா?
அடியவர்க்கு சிவனாக மட்டும் இருந்திருந்தீனா இந்த நிலை வந்திருக்குமா?
வாழ்க்கை வானம் மாதிரி துன்பமேகம் போகும் வரும், பித்தா, பிறைசூடி போய்வா போய்வா! என்றான் இரண்டு கைகளையும் உயர்த்தி பரசுராமைப் பார்த்து அந்த பிச்சைக்காரன்.

No comments:

Post a Comment