Wednesday, September 30, 2020

சாக்ரடீஸ் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்!

 


ஏதென்ஸ் நகர வீதிகளில் அலைந்து திரியும் இளைஞர்களே. வாழ்க்கையை பொய்யிலும், புரட்டிலும் அற்ப காரியங்களுக்காகவும் செலவழித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது. உன்னையே நீ அறிவாய். நீங்கள் உள்ளுக்குள் புதையலைச் சுமந்து கொண்டு பிச்சைக்காரர்களைப் போல் அலைகின்றீர்கள். வாலிபம் என்பது வாழ்க்கையின் வசந்தகாலம், வலைவீசும் வனிதையரின் கடைக்கண் பார்வைக்காக இதயத்தைப் பறிகொடுத்துவிட்டு உங்கள் முகவரியை தொலைத்துவிடாதீர்கள். வாழ்க்கை யாருக்கும் தலைவாழை இலை போட்டு விருந்து வைக்காது, தூங்கிக் கொண்டிருப்பவனை தட்டி எழுப்பி புதையல் இருக்கும் பாதாள அறையின் சாவியைக் கொடுக்காது. பஞ்சுமெத்தையில் பரத்தையர்களோடு பேரின்பத்தில் மூழ்கி திளைத்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவர்களின் காலடியில் அடிமைப்பட்டு கிடக்கும் உங்களுக்கு எனது வார்த்தை எனும் வாள் மூலம் காயத்தை ஏற்படுத்துகிறேன் விழித்துக் கொள்ளுங்கள் உறங்குவதற்கான நேரமில்லை இது.

 

இளைஞர்களே சுதந்திர வானில் சிறகடித்துப் பறப்பதைவிட்டுவிட்டு இரண்டு நெல்மணிக்காக கிளிகளைப் போல கூண்டுக்குள் அடிமைப்பட்டு கிடக்கலாமா? மக்களை ஆளுபவர்களின் உண்மையான முகம் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களின் முகமூடியைத்தான் பார்க்கின்றீர்கள். நீதிமான்கள் என்று உங்களால் தொழப்படுபவர்கள் கூட தங்கள் சொந்த வாழ்க்கையில் மிருகங்களைவிட கேவலமான நடத்தை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். பலியாடுகள் அறியாது தாங்கள் எதற்காக பலி கொடுக்கப்படுகிறோம் என்று. ஆட்டுமந்தையாய் இருக்கும் வரை அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டும். கடவுள் பெயரால் கையில் விலங்கிடப்பட்டிருக்கும் உங்களுக்கு நான் விடுதலை அளிக்கிறேன்.

 

இளைஞர்களே நீங்கள் கங்குகள் நான் தீ வைக்கிறேன் பற்றி எரியட்டும் கிரேக்கம். கடவுள் பெயரால் நடக்கும் பித்தலாட்டத்தை எதிர்த்து எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் எத்தனை நாட்கள் ஊமைகளாய் காலத்தைக் கடத்துவீர்கள். உங்களைப் பாவிகள் என்றழைக்கும் கூட்டம் திரைமறைவில் என்னென்ன லீலைகள் செய்கின்றார்கள் என உங்களுக்குத் தெரியுமா? தனது பலம் என்ன என்று தெரியாதவரை தான் யானையை அங்குசத்தால் பணியவைக்க முடியும். பேரலை என்பது பல சிறியஅலைகள் ஒன்று சேர்ந்தது என இந்நாட்டு வேந்தன் அறிந்து கொள்ளட்டும்.

 

மெலிட்டஸ் கூட்டத்தைப் பார்த்தாயா அதில் அரசை எதிர்த்து கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் கயவன் சாக்ரடீஸ் பேசுவதைக் கேட்டாயா? எதிரிகளை இனம் கண்டுவிடலாம். இவன் போன்ற துரோகிகளிடம் தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். காவலர்களே புரட்சியைத் தூண்டியதற்காக சாக்ரடீஸை கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து வாருங்கள். சாட்சிக் கூண்டில் நிற்கும் சாக்ரடீஸிடம் நீதிபதி அவருடைய பேச்சுக்கு விளக்கம் கேட்கிறார்.

 

சாக்ரடீஸ் உன் பேச்சுக்கள் இளைஞர்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடும்படியாக இருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன பதில் தரப்போகிறாய்?

 

ஓ! நாட்டை வெல்பவனைவிட தன்னை வெல்பவனே அரசன் என நான் கூறியது தவறா? நெஞ்சுரத்திடம் கையை உயர்த்துவதும், தாழ்பணிந்து கைகட்டி நிற்பதும் உன் கையில் தான் இருக்கிறது என இளைஞர்களை தட்டி  எழுப்பியது என் தவறா?

 

வாழ்க்கை ருசிப்பதிலும், கேளிக்கைகளிலும், விளையாட்டிலும் வீணாக ஈடுபட்டு பொழுதைக் கழிப்பதற்காக அல்ல, அடுத்த தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க நீ உன் இன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டும். விருட்சம் கிளைபரப்ப நீ மண்ணுள் வேராக இருக்க வேண்டும் என நான் அவர்களுக்கு எடுத்துரைத்ததில் என்ன தவறு கண்டீர்? விடுதலைக்கான திசையை சுட்டிக் காட்டியதற்காக குற்றம் இழைத்ததாக என் ஆட்காட்டி விரலை வெட்டி விடுவீர்களா இதுதான் கிரேக்க நாட்டு நீதியா? பல்லக்கு சுமப்பவன் அமர்ந்து வருபவனிடம் உனக்குதான் கால்கள் இருக்கிறதே எனக் கேட்டால் அவன் கிளர்ச்சியாளன் ஆகிவிடுவானா? அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி மரணத்தை முத்தமிட்ட போராளி இவன் என்று நாளைய வரலாறு உன்னைப் பற்றிக் கூறும் என நான் கூறியதில் என்ன தவறு கண்டீர்? நீங்கள் எண்ணியதை தான் நான் பேச வேண்டுமென்றால் அதற்கு சாக்ரடீஸ் எதற்கு?

 

பார்த்தீர்களா நீதியரசர் முன்னிலையிலேயே தன் வார்த்தைகளுக்கு என்ன வியாக்கியானம் அளிக்கிறான் என்று. நயவஞ்சகன், துரோகி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பவன் பாம்பின் விஷத்தைவிடக் கொடியது இவன் வாயிலிருந்து புறப்பட்டு வரும் வார்த்தைகள். இவனை பேசவிட்டால் நீதியரசரையே தன் வார்த்தை ஜாலத்தால் மயக்கிவிடுவான். விரைவாக தீர்ப்பளியுங்கள் என்று சபையோர் சார்பாக வேண்டுகிறேன்.

 

தேசவிரோத காரியங்களில் ஈடுபட்டது சாட்சியின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் சாக்ரடீஸூக்கு மரணதண்டனை விதிக்கிறது இந்த நீதிமன்றம்.

 

இன்று நான் விஷமருந்த வேண்டும். வாழ்வு மகளை விட்டுவிட்டு மரணதேவதையை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும். எனக்கு இன்னொரு வாசல் திறந்துவிட்டது. பிறக்கும்போது அழுது கொண்டே பிறந்திருக்கலாம் இறக்கும் போது நான் அழ விரும்பவில்லை. மரணத்தைக்கூட வீரத்துடன் எதிர்கொண்டான் சாக்ரடீஸ் என்றுதான் வரலாறு சொல்ல வேண்டும். நான் ஒன்றும் கொலைகாரனல்ல சத்தியத்தின் பக்கம் நிற்பதால் சாவை எதிர்கொள்ளவிருக்கும் தியாகி நான். மதகுருமார்கள் என்னைப் பேசவிட்டால் எங்கே தங்களது ஆட்டம் நின்றுவிடுமோ என அச்சப்பட்டு தான் என்னை கொல்லத் துணிந்திருக்கிறார்கள்.

 

எனது மரணத்தின்போது அரசனின் கையிலுள்ள செங்கோல் நியாயத்தை சீர் தூக்கிப் பார்க்கவில்லை என்பது உண்மையாகிவிடும். அரசே நீ என்னை வேருடன் சாய்த்துவிடலாம். நான் விதைத்த விதையை தேடிப் பிடித்து உன்னால் அழிக்க முடியாது. அரசனே நான் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறேன் என்று ஒருநாள் நீ உணர்ந்து கொள்வாய். இது எனது அந்திமகாலம் இந்த அறிவுசூரியன் இல்லாமல் உலகில் அறியாமை இருள் அகலாது. ஞானத்தை விலைபேசி நான் விற்கவில்லை.

 

அடிமைப்பட்டிருக்கும் நாட்டிலெ்லாம் இந்த சாக்ரடீஸ் தோன்றுவான் ஆள்வோருக்கு எதிராக அறிவாயுதத்தை உபயோகிப்பான். நான் இந்த உலகத்திற்கு கொடுத்துப் போகும் பகுத்தறிவால் எத்தனை சாம்ராஜ்யங்கள் வீழப் போகுது பாருங்கள். இதோ என்னைக் கொல்ல விஷம் வந்துவிட்டது. மரணத்தை சற்று தள்ளிப்போடும் ஆசை எனக்கில்லை இப்பொழுதே அருந்துகிறேன்.

 

எனது கல்லறையில் எழுதி வையுங்கள் பலரை விழிக்கச் செய்தவதன் இங்கு ஓய்வெடுக்கிறான் என்று. நான் இறந்து போகலாம் பலநூறு ஆண்டுகள் நான் ஏற்றி வைத்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். வாதத்தை வாதத்தால் வெல்ல முடியாத கோழைகள் சாம்ராஜ்யம் ஞானத்தீயால் விரைவில் சாம்பலாகும்.

Tuesday, September 29, 2020

திருவடி 3 (எங்கெங்கு கேட்டிடினும் அவன் திருப்புகழே)

 


ஆறுமுகன் கடவுளர்களின் கடவுள். முருகா என்று அவன் நாமத்தை உச்சரித்தாலே பக்தன் மனம் பரவசமடையும். எத்திசை நோக்கி வேண்டுமானாலும் வணங்கலாம் அவன் எங்குமிருக்கிறான். கந்தன்  தமிழில் வைதாரையும் வாழவைப்பான். காடு மலைகளில் முனிவர்கள் தேடி அலைவது தத்துவப்பொருளான முருகனைத்தான். முருகன் பரப்பிரம்மம், இந்தப் பிரபஞ்சத்துக்கே அதிபதி. அவன் அழைக்காமல் தானாக யாரும் பழனி செல்ல முடியாது, வேலனைக் காண வேளை வரவேண்டும். சத்தியத்தின் வழி நடப்பவர்கள் அவனிடம் சரணடைந்துதான் ஆகவேண்டும். தெய்வக்குழந்தை கிரகங்களையெல்லாம் பளிங்கு போல் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அக்குழந்தைக்கு. அடியவர்களுக்கு அடியெடுத்துக் கொடுத்து தமிழில் பாடச் சொல்லிக் கேட்கும். பக்தனுக்கு ஏதாவது ஒன்றென்றால் தான் கடவுள் என்பதைக்கூட அக்குழந்தை மறந்துவிடும். ஆதியில் இருந்தே முருகக்குழந்தை இங்கு தான் இருந்து வருகிறது. பிறவா நிலையை அடைந்தவர்களை அக்குழந்தைதான் மேலுலகங்களுக்கு அழைத்துச் செல்லும்.

 

தன்னை நம்பியவர்களை கரை சேர்ப்பதே அதன் வேலையாக இருக்கிறது. இந்த உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதே அதன் வேலை. உலகில் நீதியை நிலைநிறுத்த அது ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறது. இந்த உலகில் அறத்தை நிலைநிறுத்த அது மனிதர்களை கைப்பாவையாகக் கொண்டு சம்ஹாரம் செய்கிறது. விதி என்ற கோட்பாட்டை உருவாக்கியதே அதுதான். ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்துள்ளது. ஐம்பூதங்களும் முருகக்குழந்தைக்கு அடிமை வேலை செய்கின்றன. ஜனனத்தையும் மரணத்தையும் அதுவே நிர்ணயிக்கிறது. தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை என்று தமிழ்ப்பித்தில் தன்னை மறந்து கிளிப்பிள்ளையைப் போல் முருகலோகத்தில் சொல்லிக் கொண்டு திரிகின்றது. தமிழனும், தமிழும் இங்கு நிலைத்திருக்கும் வரை அது அறுபடை வீட்டிலிருந்து இவ்வுலகை அரசாட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.

 

திருவண்ணாமலையில் பக்திநெறி பிறழாது வாழ்ந்து வந்த திருவெண்காடர், முத்தம்மை தம்பதியினருக்கு ஆதிலெட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆசைக்கு ஒரு பெண் பிறந்தாயிற்று ஆஸ்திக்கு ஒரு ஆண் வேண்டுமே என அவர்கள் முருகனிடம் பிரார்த்திக்க, அவனருளால் அருணகிரி பிறந்தான். வசதிக்கு குறைவில்லாத வணிகக் குடும்பம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்று சகல வசதிகளும் கிடைத்தவுடன் அருணகிரியின் உள்ளம் பிற சுகங்களின்பால் நாட்டம் கொண்டது. வாணிகத்திற்காக கடல் கடந்து சென்ற தந்தை திரும்பவில்லையே என்ற கவலை அருணகிரிக்கு துளியும் இல்லை. அருணகிரி பரணில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கக் காசுகளைத் திருடிக் கொண்டு பரத்தையர் வீடுகளே கதியென்று கிடந்தான். முத்தம்மை முருகனால் கிடைத்த பிள்ளை தறுதலை ஆகிவிட்டதே என மனம் நொந்து இறந்தாள்.

 

நாம் பணியவில்லையென்றால் வாழ்க்கை பாடம் நடத்திவிடும். விதி சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆனால் எப்படி செயல்பட வேண்டும் என்ற முடிவை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறது. ஒருவேளை சோற்றுக்கே அல்லாடுபவர்கள் இங்கிருக்கும்போது உனக்கு பெண்போகம் கேட்கிறதா என வாழ்க்கை சீறிப்பாயும். நீ குருகுலத்தில் உன் ஆசாரியரிடம் கற்றது இதுதானா எனக் கேலி செய்யும். உன்னைப் பார்த்து பித்ருலோகத்தில் உள்ள உன் தாய்தந்தை தலையிலடித்துக் கொள்வார்கள் என செவிட்டில் அறையும். காலத்தே பயிர் செய் என்று சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள் என்று உனக்கு விளங்க வைக்கப் பார்க்கும். அத்தனையும் இழந்துவிட்டு கிழிந்த சட்டையோடு வீதியில கையேந்தி நிப்பப்பாரு அப்ப வச்சிக்கிறேன் என் கச்சேரியை என முகத்தில் காறி உமிழும். அனுபவிச்ச உடம்பு என்னாவப் போகுது பாரு என்று தலையில் அடித்துக் கொள்ளும். மனதின் கருவிதான் உடல். மனம், தான் சுகப்பட ஓருடம்பு போதாது என்று இந்த உலகில் எத்தனை உடலை மனம் எடுத்து போகக்கடலில் மூழ்கியிருக்கிறது பாருங்கள். மனமே இனிமே கறந்த இடத்தையும், பிறந்த இடத்தையும் நீ தேடவே கூடாதென்று வாழ்க்கை சாபமிட்டது.

 

கல்யாணம் பண்ணினால் பொறுப்பு வரும் அருணகிரி திருந்துவான் என எண்ணி ஆதிலெட்சுமி தான் முன்நின்று அருணகிரிக்கு திருமணம் முடித்தாள். என்ன தான் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது மலத்தை நாடித்தானே ஓடும். செல்வம் கரைந்தது மட்டுமல்லாமல் உடல் தொழுநோய் கண்டது. மன்மதனே என்று பல்லிளித்தவர்களெல்லாம் வீட்டு பக்கம் வந்தால் அவ்வளவுதான் என்று அருணகிரி முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். தொழுநோய் கண்டாலும் அருணகிரியின் மனம் ருசிகண்ட பூனையாக உடும்பாக இச்சையைப் பற்றிக் கொண்டதை விடுவதாக இல்லை. பரத்தையர் வீடுகளுக்கு போய் கெஞ்சத் தொடங்கினான், அவலட்சணத்தை காணச் சகிக்காது அவர்கள் கதவடைத்தார்கள். ராஜமரியாதையோடு மஞ்சத்தில் வனிதையரோடு வீழ்ந்து கிடந்ததை நினைத்துப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தான் அருணகிரி. எதிரே ஒரு பெண்ணுருவம் அசைந்து வருவதைப் பார்த்து அருணகிரிக்கு சபலம் ஊற்றெடுத்தது. மனம் தூரிகையை எடுத்து சித்திரம் வரைந்து வருபவள் இவள்தான் என்றது. மெல்ல மெல்ல அந்த உருவம் அருகில் வந்தபோது பார்த்தால் அவள் ஆதிலெட்சுமி, விதுவிதுத்துப்போனது அருணகிரியின் உள்ளம்.

 

ஆதிலெட்சுமி அருணகிரியை நெருங்கி வந்து உன் அவலட்சணம் பெண்ணுக்கு அருவருப்பைத்தான் ஏற்படுத்தும், உனக்கு பெண்ணுடல் தானே வேண்டும் என்னை தமக்கை என்று பார்க்காதே உன் இச்சையைத் தீர்க்க நான் என்னுடல் தருகிறேன் மனமுவந்து சொல்கிறேன் என்னைப் பயன்படுத்திக்கொள் அருணகிரி என்று சொல்லி அவள் தலைநிமிர்கையில் அருணகிரி தலைகுனிந்தான். அருணகிரிக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அம்மா ஸ்தானத்தில் இருப்பவள் இப்படி கேட்டுவிட்டாளே என்று செய்வதறியாது கோயில் நோக்கி ஓடினான். தான் ஒரு காமப்புலையன் என்று தன்னை வெறுத்து வல்லாள மகராஜா கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தான். மனிதர்கள் தொடத் தயங்கிய தொழுநோய் கண்ட உடலை முருகன் தன் திருக்கரங்களால் தாங்கி நின்றான். வேலவன் தன் திருவாயால் ‘வேளை வரவில்லை உமக்கு தமிழில் நீ பாட எத்தனையோ சந்தங்கள் இருக்கு’ என்றான். நானா கவிபாடுவதா எனத் தயங்கிய அருணகிரியிடம், லோக நாயகனே முத்தை என்று முதலடி எடுத்துக் கொடுத்தான். இறக்கும் வரை அருணகிரி கந்தன் திருப்புகழை பாடி வந்தார்.

 

விதைப்பவன் ஒருவன் அறுப்பவன் ஒருவன் இதுதான் உலகநியதி. வியாதியாலே சாக்காடு, செல்லும் பாதையெங்கும் பூக்காடு, இடுகாட்டில் தீக்காடு இதுதான் சைவநீதி. நீ உழைத்ததற்கு பலன் கிடைக்க ஆயிரம் ஆண்டுகளும் ஆகலாம், அடுத்த நொடியிலும் கிடைக்கலாம் எல்லாம் அவன் சித்தம். பட்டுப் போகவிருந்த மரத்திற்கு நீர்வார்த்தேனே அதற்கான பலன் கிடைக்கவில்லையே எனக் கலங்காதே. உனக்கு உணவு அளிக்கபடவேண்டும் என்று விதி இருந்தால் நீ அண்டார்டிகாவில் இருந்தாலும் பனிக்கரடி உன்னிடம் உணவைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். நடப்பது நடந்தே தீரும். விதியை யாராலும் மாற்ற முடியாது. பாரத்தை சுமக்காதே அவனிடம் விட்டுவிடு அவனிஷ்டப்படி நடக்கட்டும். பிரச்சனையை ஆரம்பித்து வைத்தவனே தீர்த்தும் வைப்பான். அவனவன் பிராப்தப்படி ஆங்காங்கு இருந்து ஒருவன் ஆட்டுவிக்கத்தான் செய்கிறான். ஆகையால் சண்முகனிடம் சகலத்தையும் ஒப்படைத்து சரண்புகுவோம்.

Saturday, September 26, 2020

திருவடி 2 (உதித்தது வானில் உச்சித் திலகம்)

 



உலகம் சக்தி சொரூபம். அவளது லீலைகளே இங்கு நடப்பவை எல்லாம். பெண்ணின் கருவறைதான் இந்த உலகம். அவள் சிருஷ்டி செய்த மாயஉலகத்தில் தான் ஜீவன்கள் சிக்கித் தவிக்கின்றன. இந்த தாய்ச்சியைத் தொடும் விளையாட்டில் அவள் சலிப்படைவதே இல்லை. அவளது அருட்கடலில் மூழ்கியவர்கள் எல்லோரும் கையில் முத்துடன் திரும்பினார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். யாருக்கு தன்னைக் காட்டியருள வேண்டும் என்பதை அவளே தீர்மானிக்கிறாள். சக்தி இவ்வுலகில் பலவாகி நிற்கிறாள். அவளது மாயத்திரையை விலக்கி உண்மையின் தரிசனம் காண்பது அவ்வளவு எளிதல்ல. நட்சத்திரங்களையும், கிரகங்களையும், உயிர்களையும் உள்ளிலிருந்து ஆட்டுவிக்கும் ஆற்றல் தான் சக்கி என்பது. உலகன்னைக்கு சூரியன்கூட நெற்றித் திலகமாகத்தான் இருக்கிறான். உங்களுடன் வாழும் தாயும், மனைவியும் பராசக்தியின் வடிவங்களே. உலகத்தைத் துறந்த பட்டினத்தாரால் பெற்றவளின் அன்பை உதற முடியவில்லை. அன்னைக்கு தந்த வாக்குதான் அவள் இறக்கும் தருவாயில் ஆதிசங்கரரை அம்மையை நாடி ஓடோடி வரவைத்ததது.

 

பெண்கள் இருதயத்திலிருந்து வாழ்கிறார்கள், கருணையும், அன்பும் அங்குதான் குடிகொண்டுள்ளது. அக்கரையில் நிற்கும் அவளை நீ சென்று சேர சம்சாரக்கடலை கடந்து தான் ஆகவேண்டும். சக்தியின் சிந்தனை சிவனைப் பற்றியதாகவே இருக்கிறது. அவளது ஆசைவலையிலிருந்து தப்பிப்பது என்பது ஜீவன்களுக்கு சாத்தியமற்ற ஒன்று. தாய் தந்தையிடமிருந்து உடலெடுத்தவர்கள் எல்லோரும் சபலத்திற்கு ஆட்படும் பலகீனமான ஆத்மாக்கள் தான். சிவன் மாயையைக் கடக்க மனிதனுக்கு உதவி புரிகிறான் என்பதே சக்தியின் கோபத்திற்குக் காரணம். போகமா, யோகமா என்று வருகிற போது மனிதன் போகத்தையே தேர்ந்தெடுக்கிறான். மனிதன் தான் எரிந்துவிடுவோம் என்று தெரிந்தும் விட்டில் பூச்சியைப் போல் ஆசை நெருப்பை முத்தமிட்டுக் கொண்டு இருக்கிறான். ஐம்புலன்களுக்கு அடிமையாய் இருக்கும்வரை அவளது திருவிளையாடல்களுக்கு ஆட்பட்டு தான் ஆகவேண்டும். பெண்ணாசையை வென்ற பீஷ்மரை அழிக்க அவள் அம்பா வடிவில் வரவேண்டி இருந்தது.

 

இவ்வுலகம் சக்தியின் பாடசாலை, சிவன் உட்பட எல்லோரும் அவளது சீடர்கள் தான். ஒருவகையில் இவ்வுலகம் சம்ஹார பூமி, தான் பழிதீர்க்க நினைக்கும் அசுரர்கள் எப்போது பிறப்பார்கள் என அவள் காத்துக் கொண்டு இருக்கிறாள். உலகை ஆளும் சிவனே அவளின் காலடியின் கீழ்தான் கிடக்கிறான். இவ்வுலகம் விழித்துக் கொண்டே நாம் காணும் கனவு என்று உணரும்போது அவள் பிடி தளர்கிறது. நீ மரிக்கும்போது உன்னை வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கிறாள். ஈசன் நடமாடும் இடுகாட்டில் அவளுக்கென்ன வேலை. மனிதர்கள் தவறான வழியில் சென்றாலும் தன் மகன்தானே என்ற பாசம் அவளுக்கு இருக்கத்தான் செய்கிறது. ப்ரம்மம் விதி என்ற பெயரில் அவளையும் ஆட்டுவிக்கவே செய்கிறது.

 

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் சுப்ரமணியன். திருக்கடவூரில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அபிராமி அன்னையே அவருக்கு எல்லாம். பக்திப் பித்தில் எங்கு இருக்கிறோம் ஏது செய்கிறோம் என்று அறிய மாட்டார். அகக்காட்சி கிடைக்கும்போது புறத்தில் உள்ளவைகள் எல்லாம் முக்கியத்துவம் இழந்துவிடுகின்றன அல்லவா. அன்றும் அப்படித்தான் அபிராமி அன்னையின் சந்நதிக்கு எதிரே அமர்ந்து அவளின் திருக்காட்சியை கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். அத்தருணத்தில் தஞ்சை சரபோஜி மன்னன் அன்று தை அமாவாசை என்பதால் காவிரிக்கரையில் நீராடிவிட்டு பரிவாரங்களுடன் கோவிலுக்குள் பிரவேசித்தான். கோயிலுக்கு நுழைந்த மன்னனை எல்லோரும் சிரம்தாழ்த்தி வணங்கித் தொழுதபோது அபிராமிபட்டர் சந்நிதிக்கு வெளியே சிலையோல் அமர்ந்திருந்தார். மன்னனுக்கு காலில் முள் தைத்தது போல் ஆயிற்று. உள்ளே சென்று வணங்கியவனுக்கு காலில் குத்திய முள் உறுத்திக் கொண்டே இருந்தது.

 

மன்னன் தன்னை அவமானப்படுத்திய நபரைப் பற்றி விசாரித்தான். இதுதான் சமயம் என்று மற்றவர்கள் அவனுக்கு தான் எல்லாம் தெரிந்தவன் என்று நினைப்பு, ஏதோ சில மந்திரங்கள் உச்சாடனம் செய்தால் மன்னனைவிடப் பெரியவன் ஆகிவிடுவானா என எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்கள். எல்லாம் அறிந்தவனோ நான் விசாரிக்கிறேன் என்றான் மன்னன். சந்நதிக்கு வெளியே வந்து பட்டரே நீர் எல்லாம் அறிந்தவராமே எங்கே இன்று என்ன திதி கூறு பார்ப்போம் என்றான் மன்னன். திடீரென்று புறஉலக ஞாபகத்துக்கு திரும்பிய பட்டர் சிறிதும் யோசிக்காமல் பட்டென்று பெளர்ணமி என்று பதிலளித்துவிட்டார். அரசன் அப்படியா இன்று இரவு நிலவு வரவில்லையென்றால் உனக்கு மரணம் தான் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

சுதாரித்துக் கொண்ட அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் ஓடிச் சென்று அவ்வளவுதானா இனிமேல் உன் திருக்காட்சியை என்னால் தரிசிக்க முடியாதா போய்விட வேண்டியதுதானா என அழுது புலம்பினார். ஒரு முடிவுக்கு வந்தவராய் கோயில் திருச்சுற்றில் குழிவெட்டி நெருப்பு மூட்டி மேல்விட்டத்திலிருந்து நூறு சாரங்கள் கொண்ட உறியைத் தொங்கவிட்டு அதில் நின்றபடி உதிக்கின்ற செங்கதிரே என அந்தாதி பாடலானார். ஒவ்வொரு பாடலை பாடி முடித்ததும் ஒருவொரு உறியாக அறுத்துக் கொண்டே  வந்தார். இரவும் வந்தது அபிராமி பட்டர் மரணசர்ப்பம் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். எழுபத்தொன்பதாவது பாடலை பாடியபோது அபிராமி அன்னை பட்டருக்கு தனது திருக்காட்சியைக் காட்டியருளினாள். அம்மை தான் காதில் அணிந்திருந்த தாடங்கத்தை வானில் வீசி எறிய அது ஒளிவீசும் நிலவாய் மாறி பிரகாசமாய் மின்னியது. அன்னையின் அருளால் நூறு பாடல்களையும் பாடி நிறைவு செய்தார் அபிராமி பட்டர். செய்தியைக் கேள்விபட்ட சரபோஜி மன்னன் ஓடோடி வந்து அபிராமி பட்டரின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

 

மனிதர்கள் தான் பாகுபாடு பார்ப்பார்கள். தெய்வம் பேரரசன், பிச்சைக்காரன் என்று பாகுபாடு பார்க்குமா? நீங்கள் கவனித்துப் பாருங்கள் பூனைக்குட்டி மியாவ், மியாவ்  என்று கத்தியவுடன் தாய்ப்பூனை எங்கிருந்தாலும் ஓடோடி வருவதை. பூனைக்குட்டியால் கத்தத்தான் முடியும் அதனால் வேறென்ன செய்ய முடியும். அப்படித்தான் நாமும். உள்ளம் உருக வேண்டினால், முருகனை தரிசித்ததும் தாரையாக தாரையாக கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தால் அவன் திருக்காட்சி கிடைக்காமலா போய்விடும். இதோ அபிராமி அன்னை பட்டரின் ஆன்மச்சுடரை பற்ற வைத்துவிட்டாள் அந்த வெளிச்சத்தில் இனி பல்லாயிரக்கணக்கானோர் கடைத்தேருவார்கள். அந்தாதி பாடுபவர்கள் அபிராமியைக் காண திருக்கடவூருக்கு வரவே செய்வார்கள். இங்கு தான் அபிராமி பட்டர் உட்கார்ந்திருந்தாரா எனத் அந்த இடத்தைத்  தடவித்தடவி உள்ளங்குளிர்வார்கள். இவை எல்லாவற்றையும் கருவறையிலிருந்து அபிராமி அன்னை பார்த்துக் கொண்டுதான் இருப்பாள்.

Wednesday, September 23, 2020

திருவடி 1 (நாச்சியார் அரங்கனுக்கு எவ்வாறு நாயகியானாள்)

 


அதிகாலை புஷ்பம் பறிக்க பூந்தோட்டம் சென்ற விஷ்ணுசித்தர் துளசி செடிக்கு கீழே பெண் சிசு ஒன்றைக் கண்டெடுத்தார். விஷ்ணுசித்தருக்கு இருந்த ஒரே குறை குழந்தையின்மை, அதையும் வடபெருங்கோயில் வீரபத்ரசாயி குழந்தையைக் கொடுத்து நிவர்த்தி செய்துவிட்டார். விஷ்ணுசித்தர் குழந்தையை பூப்போல அள்ளிக்கொண்டு தனது துணைவியான குமுதவல்லியிடம் காட்டினார். அக்குழந்தைக்கு கோதை எனப் பெயரிட்டு கண் போல காத்து வளர்த்தனர்.

 

பெருமானுக்கு ஒரு நாள் கூட தவறாமல் புஷ்பமாலை தொடுத்து அணிவித்து இறைசேவை செய்து வந்தார் விஷ்ணுசித்தர். வைணவம் இரண்டானது என்கிறது.  பக்தன் பகவான் என்கிறது. தெய்வத்துக்கு கைங்கர்யம் செய்யவே பிறவியெடுத்தோம் என்ற பாடம் எடுக்கிறது. இரும்பு இயல்பாகவே காந்தத்தால் ஈர்க்கப்படுவது போல பரமாத்மா ஜீவாத்மா ஈர்ப்பினால் உருவானது தான் பாகவதம் போன்றதெல்லாம். கண்ணன் கதையை உபதேசித்ததின் மூலம் கோதையின் நெஞ்சத்தில் கண்ணன் பால் பக்தியை விதைத்தார் விஷ்ணுசித்தர்.

 

கண்ணன் என்ற பிம்பம் கோதையின் அகவுலகை ஆக்கிரமிக்க  ஆரம்பித்தது. கோதை இவ்வுலகையே பிருந்தாவனமாகக் கருத ஆரம்பித்தாள். கண்ணன் என்ற பெயர் காதில் விழுந்தவுடனேயே கோதையின் மனம் தன்னுணர்வு இழக்க ஆரம்பித்தது. கரையில் வைத்துச் சென்ற உடையைத் திருடிப்போக கண்ணன் வரமாட்டானா என அவள் மனம் ஏங்கியது. நீலவண்ணக் கண்ணா உன் விளையாட்டு கோபிகைகளோடு மட்டும் தானா என அவள் மனம் கண்ணனைக் கெஞ்சியது.

 

காதல் புரிபவர்களின் கால்கள் தரையில் பாவாது. அவன் உடல்தான் மண்ணில் இருக்கும் உள்ளமோ அவள் திருவடியைத் தேடி விண்ணுலகில் அலைந்து கொண்டிருக்கும். மனம் அவன் ஆடும் பொம்மை விளையாட்டுக்காக காதலியின் பிம்பத்தை சிருஷ்டித்துக் கொடுக்கும். அந்த பிரதிபிம்பம் அவனுடைய தாயைவிட அவன்மீது அக்கறை செலுத்தும். எந்த பிரதிபலனும் எதிர்பாராது அன்பை மழையெனப் பொழிவாள். காதலன் தனது மனம் சிருஷ்டித் தந்த காதலியின் திருவடியில் சரண்புகுகிறான். இது மனதின் ஏமாற்றுவேலை கண்ணுக்கு எதிரே நடமாடுபவள் புனிதவதியோ, பரிபூரணமானவளோ கிடையாது. மனம் இப்படித்தான் வலை பின்னிக் கொள்கிறது. இந்த வலையிலிருந்து மீள்வது என்பது கடைசி வரை யாராலும் இயலாமல் போய் விடுகிறது.

 

ஆணுக்கு இந்தப் பிரபஞ்சமே பொண்ணாகத் தெரியும், பெண்ணுக்கு இந்தப் பிரபஞ்சமே ஆணாகத் தெரியும். காதல் ஏக்கம் கொண்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பள்ளத்தில் நீர் பாய்வது போல் இந்த கடவுட்தன்மை உள்ளே புகுந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. அப்படிப் புகுந்த கடவுட்தன்மை உங்கள் மனதுக்கு பிடித்த ரூபம் எடுத்துக் கொள்கிறது. காதலனுக்கு காதலியாகவும், காதலிக்கு காதலனாகவும் ஜாலம் காட்ட ஆரம்பிக்கிறது. காதல் மரம் பூத்துக் குலுங்குவதை நீங்கள் கண்டு ஆனந்தமடைகின்றீர்கள். அதன் வேரான மரணத்திலிருந்து தான் மரம் கிளைபரப்பி இருப்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். காதலும், மரணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல மனிதனின் விருப்பத் தேர்வு இதில் செல்லுபடியாகாது.

 

கோதை மனுஷி கண்ணனோ கடவுள். கோதையால் கடவுளாக முடியாது ஆதலால் கண்ணன் மனித நிலைக்கு இறங்கி வருகிறான். சாதாரண மானிடப் பெண் என்று கண்ணன் கோதையின் அன்பை புறந்தள்ளிப் போய் இருக்கலாம், கோதையின் பிரேமை அவனது கடவுட் தன்மையை கரைத்துவிட்டது. காதலிப்பவர்கள் காதலனையோ, காதலியையோ அவர்கள் விரும்பவில்லை அவர்கள் மூலமாக வெளிப்படும் கடவுட்தன்மையைத் தான் விரும்புகிறார்கள். அவர்கள் உள்ளே இருக்கும் கடவுட்தன்மைதான் ஆணையோ பெண்னையோ வசீகரிக்கிறது. வெறும் உடல் சங்கமிப்பது மிருகக்காமம். காதலியின் மனதைக் இயக்கும் ஆத்மனை அறிந்து கொள்ள விழைவதே காதல். மனிதனின் புறஅழகுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லை என்றே கூறலாம். உள்ளுக்குள் ஆசைகள் இருக்கும் வரை அலைகள் ஓயாது. அலைகளோடு தன்னை சம்மந்தப்படுத்திக் கொள்ளாமல் சரணடைபவர்களின் உள்ளே மொட்டு மலர ஆரம்பிக்கிறது. மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் வித்தியாசப்பட ஆரம்பிக்கிறார்கள்.

 

நீயே எனக்குச் சொந்தம் உன் மாலையை நான் சூடி அழகுப் பார்த்தால்  என்ன என்று தான் ஒவ்வொரு நாளும் பெருமானுக்கு அணிவிக்க இருந்த மாலையை தான் சூடி கண்ணாடியில் அழகு பார்த்தாள் கோதை. ஒரு நாள் பெருமானுக்கு சாற்ற எடுத்துச் சென்ற மாலையில் நீளமான முடியொன்று சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதற்ற முற்ற விஷ்ணுசித்தருக்கு இது கோதையின் வேலை என்று தெரிய வந்தது. இதுநாள் வரை மானிடப் பெண் சூடிக் கொடுத்த மாலையவா பெருமானுக்கு அணிவித்து வந்தேன் என்று கலக்கமுற்றது விஷ்ணுசித்தரின் மனம். பிறப்பால் என்ன குலம் என்று தெரியாத கோதை சூடிக் கொடுத்ததால் பெருமானுக்கு தோஷம் ஏற்பட்டுவிட்டது எனவே தோஷம் ஏற்பட காரணமாயிருந்த தான் பொருமானுக்கு செய்யும் சேவையை இனிமேலும் தொடர முடியாது எனவும் முடிவு செய்தார் விஷ்ணுசித்தர். கோதைக்குத் தானே அவன் காதலன், விஷ்ணுசித்தருக்கு இல்லையே. கடவுள் காரியமாதலால் சகிக்க முடியாது கோதையின் மனம் புண்படும்படி பேசிவிட்டர் விஷ்ணுசித்தர். அன்று இரவு விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றிய பெருமான் சேவை சார்த்துவதை நிறுத்தாதே சித்தரே கோதை சூடிக் கொடுத்த மாலையையே கொண்டுவாரும் யாம் இன்புற்று அணிவோம் என்றான்.

 

பருவமெய்திய கோதைக்கு வரன் பார்க்க விஷ்ணுசித்தர் முற்படவே, கோதையோ நான் கண்ணனுக்கானவள் என்றாள். கனவில் கூட பிற ஆண்மகனை நாடமாட்டேன் என்றாள். விஷ்ணுசித்தரோ கண்ணன் கல்லாய் அல்லவா இருக்கிறான் என்றார். உலகுக்கு படியளப்பவனை  உன்னுடைய பதி என்றால் உலகம் உன்னைப் பைத்தியம் என்று சொல்லி சிரிக்காதா என்றார். கோதையோ தனது காதல் கல்லையும் உயிர்ப்பிக்கும் என்று தனது காதலில் உறுதியாக நின்றாள். கண்ணனை நினைத்ததற்காக கோபிகைகள் எல்லோரையுமா அவனால் மணக்க முடிந்தது, வணங்கும் கடவுளை குடித்தனம் நடத்த அழைப்பது புத்தியுள்ளவர்கள் செய்கிற காரியமா என்றார் ஆதங்கத்துடன் விஷ்ணுசித்தர்.

 

பெருமானுக்கு என்று மாலை தொடுத்துவிட்டு அதை பிணத்துக்கு போட உங்களுக்கு மனம் வருமா அப்பா என்றாள் கோதை. எவ்வளவோ பேர் கண்ணனை அழுது அரற்றி அழைக்கிறாங்க உன் வாழ்க்கைக்கு விளக்கேத்த அவன் வருவான்னு நினைச்சு காலத்தை கழிச்சிடாதம்மா எல்லாம் நான் கும்பிடுற அந்த வடபத்ரசாயிக்கே வெளிச்சம். நாழியாயிடுத்து போ போய் படுத்துக்க என்றார் மனபாரத்துடன் விஷ்ணுசித்தர்.

 

அன்றிரவு அரங்கன் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி கோதையை திருவரங்கம் அழைத்து வரும்படி பணித்தான். கோதையை பாண்டிய மன்னன் பரிவாரங்களுடன் எதிர் நின்று வரவேற்றான். கண்ணனின் நினைவாலே கோதையின் மெய் உருகி விட்டது. இருந்த ஒளிரூப உடலும் கருவறை உள்ளே சென்று அரங்கனுடன் கலந்தது. தனது காதலால் அரங்கனையே ஆண்டாள் இந்த கோதை ஆண்டாள்.

Sunday, September 20, 2020

அரவான்

 


தன்னுடைய நடையை விரைவாக்கினான் நந்தகுமார்.அவன் பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றும் வெகுதொலைவில் இல்லை;வகுப்புகள் துவங்கவும் இன்னும் இருபது நிமிடமிருந்தது.

 

அவனது நடைவேகத்துக்குக் காரணம் விடலைப் பருவ பையன்களின் கேலி.தனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதைப் சில மாதங்களாய் உணர்ந்து கொண்டு வந்தான்.தன்னை ஒத்த பிராயமுடையவர்களின் உடலில் ஏற்பட்ட மாற்றம் தன்னிலிருந்து வேறுபடுவதை எண்ணி அச்சம் கொண்டான்.

 

அரும்பு மீசை உதட்டின் மேல் வளர்ந்து, குரல் உடைந்து சற்றே கரகரப்பாக மாறிக் கொண்டிருந்த டீன் ஏஜ் பையன்கள் நிறைந்த வகுப்பில்,நந்தகுமார் குரல் மட்டும் கீச்சி கீச்சுவென ஒலிக்கும் போது வகுப்பே சிரிப்பலையில் மூழ்கும்.

 

சமூக அறிவியல் வாத்தியார் பாடத்தின் இடையே பொது அறிவு வினாவிற்கான பதிலை ஒவ்வொரு மாணவனாக எழுப்பி கேட்டுக்கொண்டு வரும்போது எழுந்து நின்ற நந்தகுமாரை "தெரியாதுன்னா அப்படியே சும்மா நிக்கவேண்டியது தானடா, என்னடா மேனா மினுக்கியாட்டம் நெளியற நிமிர்ந்து நின்னுடா விறைப்பா" என்று நையாண்டி செய்த போது மாணவிகள் அனைவரும் முகத்தைப் பொத்திக் கொண்டு சிரிக்க நந்தகுமாரின் முகம் வாடிப்போய் காற்றுப் போன பலூனாகிவிட்டது.உள்ளுக்குள் உடைந்து போனான்.அவனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் அனிச்சையாக நடக்கும் செயலுக்கும் நந்தகுமார் தொடர்ந்து தண்டணைப் பெற்று வந்தான்.

 

பள்ளியின் நுழைவாயிலை அடைந்தவுடன் அவன் மனம் நிம்மதியடைந்தது.ஆமாம்! இன்று அவன் எதிர்ப்படவில்லை.இரு தினங்களாய் வாட்டர் டாங்க் அருகில் அமர்ந்து கொண்டு அவ்விடத்தைக் கடந்து செல்லும் போது ஒம்போது என உரக்கச் சத்தமிடுபவனிடமிருந்து தப்பித்து வந்துவிட்டோமென்று பெருமூச்சுவிட்டான்.

 

மறுநாள் காலை பாத்ரூமில் குளிக்கும் போது அக்கா முகத்தில் தேய்த்துவிட்டு மீதம் வைத்திருந்த மஞ்சளைப் பார்த்தான்.நீண்ட நாட்களாய் அவனது மனதில் ஒரு குறுகுறுப்பு,மஞ்சள் பூசி குளித்து ரோஸ்பவுடர் அப்பிக் கொண்டு கண்ணாடியில் தன் எழிலை பார்த்துவிட வேண்டுமென்று.

 

நீண்ட நேரமாய் நிலைக்கண்ணாடி முன்பு முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்த நந்தகுமாரை அவனது அப்பா ரெங்கநாதன் அவனுடைய கையைப் பற்றித் திருப்பி என்னடா அப்படியே மெய்மறந்து பார்த்துகிட்டு இருக்கிற மூஞ்சிய தேனா வழியுது என்று கேட்டபோது அவனது முகத்தில் அப்பியிருந்த மஞ்சளைப் பார்த்துவிட்டு ஓங்கி கன்னத்தில் ஒரு அறைவிட்டார்.கேடுகெட்ட ஒரு புள்ளையை திருஷ்டிப் பரிகாரமாதிரி பெத்து வச்சிருக்கா;அவனவன் சின்ன வயசிலேயே கம்ப்யூட்டர்,ரோபோன்னு ஆராய்ச்சி பண்ணி டாக்டர் வாங்குறான்;இவன் முகத்துல மஞ்சளைத் தடவிகிட்டு பொட்டபுள்ள மாதிரி அழகு பார்த்துகிட்டு இருக்கான்.இந்தக் கண்றாவியெல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து எனத் திட்டினார்.

 

இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அப்பாவுடன் பக்கத்து ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறிய நந்தகுமார்,ஆண்கள் இருக்கை காலியாயிருக்க அவர்களின் அருகே உட்கார கூச்சப்பட்டு பெண்கள் உட்கார்ந்திருக்கும் ஸீட்டில் மத்திம வயதுடைய பெண்ணருகில் அமர,அவன் இவனுடைய முகத்தைப் பார்த்துக் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.

 

பேருந்தின் பின்பகுதியிலிருந்து நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கநாதன் அவனை நோக்கிப் பாய்ந்து வந்து ஓர் அறை அறைந்து இனிமே வீட்டுப்பக்கம் வராத ஒழிஞ்சுபோ எங்கயாச்சும்;நீ பண்ற கூத்தையெல்லாம் பொறுத்துகிட்டு இருக்கமுடியாது.உன்னை அவதுப்புல,உன்னைய பதினைஞ்சு வருஷமா வளர்த்தேன் பாரு அதுக்கு என்னையத் துப்பிட்டுப் போறா.போ ஒரேயடியா இன்ணையோட தலை மூழ்கிட்டேன் எனச் ஆவேசத்துடன் சொல்லிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி விறுவிறுவென திரும்பிப் பார்க்காமல் சென்று மறைந்தார்.

 

ஆண்கள் கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டு வார்த்தைகளால் காயப்படுத்தி துரத்தியடிக்கப்படுவதும்.தானாய் ஒதுங்கி தனிமையில் அறையில் அடைந்து கிடந்த போது பித்துப் பிடித்துவிடும் நிலையிலிருந்துத் தப்பிக்க பெண்களிடம் நட்புணர்வுடன் பழகப்போய் அவர்களால் பிராணியைப் போய் முகம் சுளித்து அருவருப்பாய் விரட்டப்படுவதுமான இந்த அன்றாட நிகழ்விலிந்து தன்னைக் காப்பாற்ற,தன் உணர்வை புரிந்துகொண்டு அரவணைக்க ஓர் அன்புள்ளம் இல்லையா இந்த உலகில் என்ற கேள்விகோடு ஏதோ ஒரு ஊரில் நடத்துனரால் இறக்கிவிடப்பட்டு கால்போன போக்கில் நடக்கத் துவங்கினான்.

 

பாதைகள் கிளைகிளையாகப் பிரிந்து சாலை போக்குவரத்தால் நெருங்க இயலாத பொட்டல் கிராமத்திற்கு அவனை இழுத்துச் சென்றது.இருள் மெல்லக் கவ்வத் துவங்கியது,

குளத்தருகே அமர்ந்திருந்த அவனை அருகாமையிலிருந்து வரும் சத்தம் ஈர்த்தது.

 

அவ்விடத்தை அவன் அடைந்த போது கோவில் திருவிழாவில் பாரதத்திலிருந்து விராடபர்வம் தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது.

 

பாண்டவர்கள் வனவாசத்தின் இறுதில் அஞ்ஞாதவாசத்தில் ஐவரும் மாறுவேடமிட்டு விராட தேசத்தில் நுழைகிறார்கள்.விராட தேசத்து அரசபையில் தங்கள் திறமையை அரசன் முன்பு வெளிப்படுத்தி பணியாட்களாக சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார்கள்.தருமர் அரசனுக்கு அருகில் மதியூகியாயிருந்து அவ்வப்போது அரசருடன் பகடையாடுபவராக,பீமன் சமையற்கலைஞனாக,அருச்சனன் திருநங்கை வேடமிட்டு அந்தப்புர பணிப்பெண்ணாக,நகுலனும் சகாதேவனும் கால்நடைகளைப் பராமரிப்பவனாக பாண்டவர்கள் தங்களின் ராஜவம்ச வாழ்வை மறந்து சாதாரண வேலைக்காரர்களாக ஆகும் காட்சிகளில் அக்கிராமமே தெருக்கூத்துக் கலைஞர்களின் நடிப்பை ஆவென வாயைப் பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

அந்தப்புரத்தில் சேவைபுரியும் திருநங்கை வேஷமிட்ட அருச்சுனன் கதாபாத்திரத்தை சுற்றிலும் அரவானிகள் கூட்டம் நிற்பதைப் நந்தகுமார் அங்கு கண்டான்.அவனது விரக்தியடைந்த மனதில் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது

 

கூத்து முடிந்தது அரிதாரத்தைக் கலைந்து வேறு ஊருக்குக் கிளம்பி கொண்டிருந்த அரவானிகளிடம் வந்து மிரள விழித்தபடி நி்ன்றான்.

 

என்ன பையா யாரு நீ?” என்றாள் ஒரு அரவானி

 

நான் வீட்டைவிட்டு ஓடிவந்துட்டேன், என்னைய உங்க கூட்டத்துல சேர்த்திருப்பீங்களா?” என்றான் அப்பாவியாக.

 

வயதில் மூத்த அரவானி அவனை தன்னருகே அழைத்து விபரத்தைக் கேட்க,நடந்த அனைத்தையும் கூறினான்.

 

 

சில நிமிடநேரம் யோசித்த அவன் சடங்கு முடிஞ்சாத்தான் எங்க சமூகத்துல சேர்த்துப்போம்,அதுக்கு மும்பை போகணும் பயமில்லாம?” என்றாள்.

 

சரியென்று தலையாட்டினான்

 

இரு தினங்கள் கழித்து மும்பை செல்லும் ரயிலில் இரு அரவானிகளுடன் அமர்ந்திருந்தான் நந்தகுமார்.மௌனமாக அமர்ந்திருந்த அவனைப் பார்த்து என்னப்பா சோகமாயிருக்குற இப்படி ஆயிட்டோம்ன்னா ...., எப்படி ஆயிட்டோம் நம்ம சொல்லு?”

 

"......"

 

ஸ்டேஷனுக்கு வர்ற வழியில இறுதி ஊர்வலம் போனிச்சேப் பார்த்தியா?”

 

பார்த்தேன் என்றான்

 

பாடையில படுக்கவைச்சிக் கொண்டு போறாங்களே, அது என்ன?”

 

பொணம்

 

சரி ஆம்பளையா? பொம்பளையா? அது?”

 

பொம்பளை

 

பத்தியா கல்யாணங்கட்டி மவராசியா வாழ்ந்து குழந்தை குட்டிகளோட இருந்தவ உயிர் போச்சுனா அவ பொணமாயிடுறா;நாம இறந்தாலும் பொணம் தான்.சடலத்துல இது அரவானிப் பொணம்ன்னு வேறுபாடு இருக்கா என்ன? எல்லாம் தசைப் பிண்டம் தான்.நம்ம சமூகத்தைப் பத்தி பையிள்ல ஒரு வாக்கியம் வரும் படிச்சிருக்கியா பரலோக ராஜ்யத்தில் அவர்களுக்கு இடமுண்டுன்னு, அதை நினைச்சு இந்தக் கஷ்டங்களைத் தாங்கிக்கணும்

 

இனிமே சோத்துக்கும் உடுத்த துணிமணிக்கும் என்ன பண்ணப் போறோம், பிச்சையெடுக்கிற நிலைமை வந்திருமோன்னு பயப்படுறீயா?ஏன் உன்னால சொந்தக் கால்ல நின்னு சுயமா சம்பாதிக்க முடியாதா என்ன?இது ஒரு ஊனம்னு நினைக்காத படிப்பு,வேலைன்னு உன்னை பிஸியா வைச்சிக்கிட்டீனா உன்னைப் பத்தின ஞாபகம் மறந்து காலம் தன்னால ஓடிடும்.எனக் கூறி அவனைத் தேற்ற முயன்றாள் அந்த அரவானி.

 

 

ரயில் இருளை கிழித்தபடி அதிவேகமாக பல்வேறு ஊர்களை கடந்து சென்று கொண்டிருந்தது.தூங்காமல் விழித்துக் கொண்டு ஓரிடத்தில் நிலைகுத்திய பார்வையோடு ஜன்னலருகே உட்கார்ந்திருந்த அவனைப் பார்த்த அரவானியில் ஒருவள் மெல்ல அருகில் வந்து ஊரை இழந்திட்ட,உறவை இழந்திட்ட, ஆனா நம்பிக்கையை இழந்திட்டீனா வாழ்றது கஷ்டமாயிடும்,எதையும் தைரியமா எதிர்கொள்ளனும்.இங்க நிலையா இருக்கிற இயற்கை நம்ம மேல ஒரு பாகுபாடும் காட்டறதில்லை,நிலையில்லாத வாழ்க்கையில நீர்க்குமிழி மாறி கண நேரம் வந்து போற மனிதர்கள் தான் நம்மை உதாசீனப்படுத்துறாங்க.அடுத்தவங்க நம்ம என்ன நினைப்பாங்களோன்னு எண்ணிக்கிட்டே இருந்தா யாரால எதைச் செய்ய முடியும் சொல்லு ராமர் மேல வைச்ச நம்பிக்கையில அனுமார் ஒரே தாவல்ல கடலைத் தாண்டிட்டார்.ராமச்சந்திர மூர்த்தி கடலைத் தாண்ட சேது பாலம் கட்ட  வேண்டியதாப் போச்சு.நாளைக்கு விடியும்னு நம்பிக்கையிருந்தாம்ப்பா படுக்கையில நிம்மதியா உறங்க முடியும் என்ற அரவானியின் ஆறுதல் வார்த்தைகள் அவனது மனக்காயத்தை ஆற்ற அப்படியே உறங்கிப்போனான் நந்தகுமார்.

 

அன்றைய காலை பொழுது அவனுக்கு விடிந்தது.மும்பை நகரம் அவனுக்கு வியப்பளித்தது.இப்பூமியில் இப்படியும் ஒரு நகரம் இருக்க முடியுமா?என வானுயர்ந்த கட்டிடங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்தான்.ஏதோ ஒரு உந்து சக்தி தன்னை தள்ளிக் கொண்டே வந்து இங்கு நிறுத்தியிருப்பதை எண்ணினான்.

 

இனிமேல் தன் பெயர் நந்தகுமார் இல்லை, நந்தகுமாரி நந்தகுமாரி நந்தகுமாரி என மூன்று முறை மனசுக்குள் அழுத்தமாக உச்சரித்தான்.அவமானங்கள் அனைத்தும் அவனுக்குள் வைராக்யம் வேர்விடுவதற்கு வித்திட்டன. காற்று முழுவேகத்தோடு அவன் மீது மோதி தோளில் சுமந்து வந்த பழைய நினைவுக் குப்பைகளை அடித்துக் கொண்டு அரபிக்கடல் நோக்கிச் சென்றது.

Thursday, September 17, 2020

கடவுள் துகள் (ஸ்டீபன் ஹாக்கிங்கின் குவாண்டம் கொள்கையை முன்வைத்து)

 



மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட அறிவியலாளர்கள் ஆதியில் சக்தி அதாவது ஆற்றல் தான் இருந்தது அதிலிருந்து தான் அணுக்கள், மூலக்கூறுகள் உருவாயின என்கிறார்கள். அந்த ஆற்றலுக்கு காரணகர்த்தா யார் என்பதற்கு அவர்களால் விடை கூற முடியவில்லை. நாம் கைகளை அசைக்கிறோம் அதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது நம்மிடமிருக்கும் சக்தியின் சிறுபகுதியை நாம் நம் கைகளை அசைக்க உபயோகப்படுத்திக் கொள்கிறோம் அதைப் போன்று கடவுள் தம்மிடமிருக்கும் ஆற்றலின் சிறுபகுதியை ஏன் பெருவெடிப்பிற்காக உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறதல்லவா? மனிதர்களில் சிலர் பணக்காரர்களாகவும் பலர் ஏழைகளாகவும் மற்றும் சிலர் அங்கஹீனமாகவும் பலர் ஆரோக்கியமாகவும் பிறப்பதற்கு என்ன காரணமென்று இன்றுவரை அறிவியலால் விடைகூற முடியவில்லை. அத்தகைய விளிம்பு நிலை மக்களுக்கு மதம்தானே நம்பிக்கைத் தருகிறது. துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது என்ற ஆறுதல் வார்த்தை தானே மக்களிடம் நம்பிக்கை அளித்து தாங்கள்படும் துயரங்களைப் பொறுத்துக் கொள்ள வைக்கிறது.

 

எந்த வேத நூலிலாவது கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் எனக் கூறப்பட்டுள்ளதா? அணுகுண்டுகள் தயாரிக்கும் சமன்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளதா? இதையெல்லாம் அறிவியல் தானே செய்தது. இவ்வுலகத்தில் இருதயத்திலிருந்து செயல்படுபவர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் தான். இதன்காரணமாகத்தான் இயேசு தன்னை பிதாவினுடைய ஒரே குமாரன் என்று சொல்லிக் கொண்டார். இயற்பியலின் கோட்பாட்டின்படிதான் மனித இனம் உருவானது கடவுள் அதற்குக் காரணமில்லை என்றால் இயேசு என்ற தச்சனின் மகன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது எப்படி? கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்ததினால் தான் தெய்வீகத்தன்மை கொண்ட இரட்சகர்கள் உலகில் அவ்வப்போது அவதரிக்கின்றார்கள்.

 

நோயின் கடுமைகளை பிரார்த்தனையின் மூலம் கடவுளிடம் தெரியப்படுத்தும் நோயாளிகளுக்கு அறிவியல் என்ன பதில் கூறப்போகிறது. இந்தப் பூமி தோன்றுவதற்கு முன்பு வெற்றிடம் தான் இருந்திருக்கும் அந்த வெற்றிடத்திலிருந்துதான் பல்லாயிரக்கணக்கான சூரிய மண்டலங்கள் தோன்றிருக்கும் அந்த வெற்றிடம் எல்லாவற்றுக்கும் சாட்சியாக காலம், இடம் ஆகியவற்றுக்கு கட்டுப்படாமல் இன்றும் இருக்கிறது என்றும் இருக்கும் இதை அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இயேசுவிடம் வானரசு பூமியிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்று கேள்வி எழுப்பிய போது அங்கு காலம் இருக்காது என்று உறுதியாக பதிலளிக்கிறார் இயேசு. இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனின் துயரத்திற்கு  அவன் காலத்திற்கும், இடத்திற்கும் அடிமையாய் இருப்பதே காரணம் என்று உணர்ந்திருந்தார் என்று சுவிசேஷத்தைப் படிக்கும்போது நமக்கு தெரிய வருகிறது.

 

ஸ்டீபன் ஹாக்கிங் பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பில் நாம் வசிக்கும் பூமி நிலை கொண்டுள்ள சூரிய மண்டலத்தைப் பெற்றிருக்கும் இப்பிரபஞ்சத்தைப் போன்ற இணை பிரபஞ்சங்கள் உருவாகி இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஏதேனும் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கில்லை என்றும் தனது ஆய்வுக் கட்டுரையில் அவர் தெரிவிரித்துள்ளார். தனது முந்தைய நூலான A Brief History Of Timeல் கடவுளின் பங்கு பிரபஞ்சத்தின் தோற்றத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஒத்துக்கொண்ட அவர் தனது The Grand Design என்னும் சமீபத்திய புத்தகத்தில் அதை மறுத்துள்ளார். அவரது கருத்துக்களை ஒட்டுமொத்த அறிவியல் உலகமும் ஏற்றுக்கொள்கிறது. இதனை நாம் சற்றே ஆராய வேண்டியுள்ளது, ஏனெனில் அறிவியல் முற்றிலும் மூளை சம்பந்தப்பட்டது ஆனால் மதமோ இருதயம் சம்பந்தப்பட்டது. அறிவியல் கிழக்கு  என்றால் மதம் மேற்கு இரண்டுமே எந்த நூற்றாண்டிலும் சந்தித்துக் கொள்ளாது.

 

புத்தி ஒவ்வொரு நிகழ்வுக்குமான காரண, காரியங்களை ஆராயும். எகிப்திய பிரமிடுகள் மரணத்தின் போது மனித உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறுகிறது என்பதை எகிப்தியர்கள் நம்பியதாகவும் அது மீண்டும் மனித உடலுக்குள் நுழைய வாய்ப்பிருப்பதாகவும் அது தன் உடலைத் தேடி வரும்போது ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காகவே எகிப்தியர்கள் பிரமிடுகளை ஏற்படுத்தி உடல்களை  பாதுகாத்தார்கள் என்பதை இன்று அறிவியல் ஒத்துக் கொள்கிறது. அறிவுக் கனியை உண்டதாலேயே ஆதாம் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் மேம்பட்ட அறிவைப் பெற்ற ஆதாமின் சந்ததி மரணத்தையும் பரிசாகப் பெற்றது. இதனை நீங்கள் சுவிசேஷத்தில் அறியலாம். இருதயத்திலிருந்து வாழ்பவர்கள் தன்மூலம் இறைவன் செயல்பட வாய்ப்பளிக்கிறார்கள். இயேசுவும், புத்தரும் வெறும் மூங்கில் தான் உள்ளேயிருந்து இசைப்பவன் கடவுள். எதையும் ஆராய்பவர்களால் காதலையும், கடவுளையும் உணர்ந்து கொள்ள முடியாது. நமது இருதயம் எப்போதும் கடவுளுடன் தொடர்பிலுள்ளது. அதுதான் உள்ளுணர்வாக அவ்வப்போது நம்மை வழிநடத்துகிறது. மனதின் ஒருபகுதிக்கு இறைவன் இருப்பது தெரியும் அதனால் தான் நாம் மோசமான தவறுகளைச் செய்யும்போது இறையச்சத்திற்கு ஆளாகிறோம். நாம் செய்வதனைத்திற்கும் சாட்சித்தன்மையாக ஒன்று உள்ளது அதுவே கடவுள் என்று இந்த உலகம் இன்னும் சில நூற்றாண்டுகளில் ஒத்துக் கொள்ளும்.

Tuesday, September 15, 2020

வீடு

 


    விடிஞ்சா தீபாவளி. வீடே எனக்கு அந்நியமாத்தான் தெரியுது. ஆத்தா தான் சோறூட்டணும், ஆத்தா கூடத்தான் படுத்துக்கணும், ஆத்தா தான் குளிப்பாட்டணும்னு எல்லாத்துக்கும் இந்த ஆத்தா தான். இந்த நிசப்தம் என்னைய ஏதோ செய்யுது. மனுசனை உசிரோட சிலுவையில அறையறது மாதிரி. கால்ல சக்கரம் கட்டின மாதிரி அங்கேயும் இங்கேயும் பறப்பா. யானையாம் கோழியாம் என்று கதையை ஆரம்பித்த உடனேயே கண்ணு சொருக ஆரம்பிச்சுடும் அவளுக்கு.

 

    எல்லாப் பொண்டு, பொடுசுகளும் கீர்த்தனா இல்லையா கீர்த்தனா இல்லையாகிதுங்க நான் என்னத்த சொல்ல. அவ பிறந்ததுக்கப்புறம் தான் அவரு முகத்துல சிரிப்பையே பாத்தேன். அந்த சிட்டானுக்காகத்தான் நாங்க உசிரை கையில புடிச்சிகிட்டு இருக்கோம். வீடுங்கறது சுவரும், செங்கல்லுமா மனுசா இல்லையா? வயசுல நான் ஒண்ணும் இல்லாதப்பட்டவ இல்ல. அப்பாவுக்கு தியாகி பென்ஷன் வந்தது. மூணு அண்ணன் நான் கடைசி. பிள்ளையார் மாதிரி அப்பா, அம்மாவையே சுத்திகிட்டு திரிஞ்சா சரிப்படாதுன்னு மூத்த அண்ணனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சாங்க. அங்கேயே கல்யாணம் பண்ணி அந்த நாட்டு குடிமகனாகவும் ஆயாச்சி. வந்து அப்பா அம்மாவை பார்த்து போவார் தான் வருஷத்துக்கு ஒரு முறை.

 

    இவரு தான் நாராயணன் பார்டருல வேலை பாக்குறாரு அரசாங்க உத்தியோகம் தான் நல்ல சம்பளம் என்று அவர்களாக முடிவெடுத்துவிட்டு சமாச்சாரத்தை என்னிடம் வந்து சொன்னார்கள். அம்மா இருந்தாலாவது உனக்குச் சம்மதமா என்ன ஏதுன்னு வாய் வார்த்தையா கேட்டிருப்பா அவதான் எங்களை அனாதையா உட்டுட்டு போயிட்டாளே. அம்மா போனப்பவே அவ கூட போயிருக்கணும் எல்லாம் விதி. தலையெழுத்துண்ணு ஒன்னு இருக்குல்ல அதை யாரால மாத்த முடியும். கழுத்த நீட்டியாச்சி பத்து நாள் கூட இருந்துட்டு ரயில் ஏறுனவர்தான் முத குழந்தை பிறந்தப்பக் கூட வந்து என்ன ஏதுன்னு எட்டிப் பாக்கலை.

 

    அப்பவே ஆஸ்பத்திரி வாட்ச்மேன் கேட்டான் பொண்ணா பொறந்துட்டு நீ கஷ்டப்படுறது பத்தாதாம்மா ஏம்மா பொண்ணைப் பெத்தேன்னு. டவுன்ல வளந்த பொண்ணு நான் கிராமத்துல குப்பை கொட்டுற மாதிரி ஆயிடிச்சி. மாமியார் அவருக்கு சின்ன வயசிலேயே தவறிட்டா. அவளுக்கும் சேர்த்து வைச்சி மாமனார் இல்லாத அக்கிரமமும் பண்ணினார். யார்கிட்ட சொல்லி நான் அழறது. எழுதுன கடிதாசியைக் கூட படிச்சுப் பார்த்துதான் போஸ்ட் செய்வாரு. தான் பொண்ணுக்கு குழந்தை இல்லைனா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்.

 

    கலாவுக்கு ஒரு வயசு ஆனப்ப லீவுல வந்தாரு. அப்ப எடுத்த போட்டோ தான் இங்க மாட்டியிருக்கிறது. அடுத்தது தான் இவன் பொறந்தான். பேராண்டிக்கு நான் பேரு வைக்கிறேன்னு தாத்தா புகழேந்தின்னு வைச்சாரு. அவன பிழைக்க வைச்சி கொண்டு வந்ததே எனக்குப் பெரும்பாடா போச்சி. அவரு மாத்தலாகி தமிழ்நாட்டுக்கு வந்த கொஞ்ச வருஷத்துல பேராண்டியை தொட்டு தூக்கி பாத்த சந்தோஷத்துல அந்த புண்ணியவான் போய்ச் சேந்தாரு. வீட்டு மேல பஞ்சாயத்து நடந்தப்ப ஊர்ல யாரும் இவரு பக்கம் பேசலை. அதோட கொடுத்த பணத்துக்கு வித்துட்டு நாங்க ஒதுங்கிட்டோம்.

 

    வாய கட்டி வயித்தகட்டி என் சொந்த ஊர்ல மனை வாங்குனோம். அங்க இங்க கடன் வாங்கி வீட எழுப்பங்காட்டிலும் நாக்கு தள்ளிடிச்சி. புதுசா கட்டடம் எழுப்பினா உடையவங்களை காவு வாங்கும்னு சொல்வாங்களே அதே மாதிரி ஆகிப்போச்சி. நான் செத்து பிழைச்சி வந்தேன்னா பார்த்துக்குங்க. எல்லாம் தலையெடுக்கிற காலத்துல அவரை சென்னைக்கு தூக்கி அடிச்சாங்க. கடைசி வரைக்கும் நகரத்து வாழ்க்கையோட எங்களால ஒத்துப் போக முடியலை. அங்க அப்பன் ஆத்தா கூட இருந்து புத்திமதி சொல்லியும் புகழேந்தி எந்த வேலையிலேயும் நிலைக்க மாட்டேனுட்டான். ஜோசியக்காரனுங்க சூரிய திசை முடியனும்னு சொல்லிட்டாங்க வேறன்ன செய்யிறது.

 

    அவரு ரிட்டயர்டு ஆனாரு. சாமான் செட்டெல்லாம் தூக்கிகிட்டு சொந்த வீட்டுக்கே குடிவந்தோம். கலாவை சென்னையில இருக்கிறப்பயே கட்டிக் கொடுத்தாச்சி. அப்பப்ப இங்க வந்து இருக்கறோமா இல்லையான்னு எட்டிப்பார்ப்பா அவ்வளோதான். அடிமை வேலை ஒத்துவர மாட்டேங்கிதுன்னு புகழேந்திக்கு கடை வைத்துக் கொடுத்தோம். புகழேந்திக்கு கல்யாணப் பேச்சு எழுந்ததும் கலா கேட்டேவிட்டாள் கடையில  வர்ற வருமானத்தை வச்சி எப்படி குடும்பம் நடத்துவான்னு.

 

    இல்லாதப்பட்டவங்க அதனால நாம கேட்கக் கூடாதுன்னு கட்டுன புடவையோடதான் சுசீலாவைக் கூட்டி வந்தோம். சுசீலா நல்லவதான் ஆனா ஒருசொல் பொறுக்க மாட்டாள். இல்லாதப்பட்டவங்க வீட்டிலேர்ந்து வந்ததுனால நம்மை இளக்காரமா நினைக்கிறாங்களோ என்ற எண்ணம் அவளுக்கு. சரின்னு நானும் உட்டுட்டேன் கோவம் இருக்கற இடத்துலதானே குணம் இருக்கும்னு. இரண்டு வருஷம் கழிச்சி சுசீலாவுக்கு தங்கியது. முருகப்பயபுள்ள தான் பேரனா பொறப்பான்னு நினைச்சிருந்தேன். கீர்த்தனா பிறந்தாள். வீட்டில ஒரு குழந்தை தவழ்ந்தா குதூகலத்துக்கு கேட்கவா வேண்டும். அள்ளி அள்ளி அவளை அணைத்துக்கொண்டேன். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துலதானே. இந்த அணையப்போற தீபத்துக்கு எண்ணை வார்க்கத்தான் கடவுள் கீர்த்தனாவை அனுப்பி வைச்சிருக்கான். கீர்த்தனான்னா அவருக்கும் உசிரு என்ன இருந்தாலும் தன்னோட வாரிசு இல்லையா? அவருக்கு உடம்பு நோவு வந்து ஆஸ்பத்திரி, ஆபரேஷன்னு அலைய வேண்டி வந்துடுச்சி. கீர்த்தனாவை பாக்கும் போது அவரு முகம் பிரகாசமடையும் பாருங்க தாத்தாவின் உலகத்தில் பேத்திக்கான இடம் பாட்டிக்கான இடத்தைவிடப் பெரியது தானே.

 

    அவரு நடமாட முடியாம வீட்டில இருந்தப்ப ஆழந்தெரியாம காலை விட்டு கடையையும் மூடிவிட்டான் புகழேந்தி. கஷ்டகாலம் குழந்தை முகத்தை பார்த்தாவது திருந்தணும். ஒரு அவசரத்துக்கு எங்க போவான். எல்லாம் எங்க தலையிலேயே வந்து விழுந்தது. பேத்திக்கு ஒண்ணுன்னா அவரு கணக்கு பாக்க மாட்டாரு. தாத்தா செல்லமா அவ இருந்தாலும் அடிப்பதற்கும், அணைப்பதற்கும் நான் தான் வேணும் அவளுக்கு. அந்த பச்ச மண்ண எதுக்க வைச்சிகிட்டு சண்டை போட வேண்டியதா போச்சி.

 

    நான் சராசரி மாமியார் இல்ல. அதை தொட்டா குத்தம் இத தொட்ட குத்தம்னு சொல்ல மாட்டேன். சமையல் வேலை என்னுது நீ ஒத்தாசையா இருந்தா போதும் என்பேன். என்ன இருந்தாலும் மருமகளைவிட பெத்தமவ ஒருவிதத்துல உசத்தியாதான் போயிடுறா. மருமகள எந்த மாமியார் மகமாதிரி நடத்துறா சொல்லுங்க பார்ப்போம். எதுக்கெடுத்தாலும் பாம்பா படமெடுத்து ஆடுனா நான் என்ன செய்யிறது. சொல்லிக் கொடுக்கிற அக்கம்பக்கத்துக் காரங்களுக்கு நாம நல்லபடியா வாழணுங்கிற எண்ணம்  இருக்காது. வெளி தெருவுக்கு போனா நம்மளபத்தி நாக்கு மேல பல்லுபோட்டு யாரும் பேசிடக்கூடாது. அதுக்கு நாம குடும்ப விஷயம் எதையும் வெளியில பேசக்கூடாது இதுதான் என் தரப்பு.

 

    உத்தியோகம் புருஷலட்சணம் போய் சம்பாரிச்சுட்டு வாடாண்ணா. உப்பு விக்கப் போனேன் மழை பெய்யுது உமி விக்கப்போனேன் காத்து அடிச்சிதுன்னு தான் உருப்படாததுக்கு காரணம் சொல்ல ஆரம்பிச்சிட்டான் புகழேந்தி. எவ்வளவு காலத்துக்கு நாங்க முட்டுக் கொடுத்துக்கிட்டே நிற்போம் நாங்க இருக்கிறப்பவே சொந்தக் கால்ல நிக்கப் பழகிக்க வேணாம். எல்லாத்துக்கும் நம்ம கைய எதிர்பார்த்தா எரிச்சலா வராது. குழந்தைக்கு செய்யலாம் சரி அவனுக்கும் சேர்த்து நாமளே செய்யணும்ணா எப்படி. நான் பெத்தது சிங்கமா இருந்துதுன்னா இந்த விஷயம் சந்தி சிரிச்சிருக்காது. பொண்ணு பொறந்திருக்கு நாளைக்கே சடங்கு, சம்பிரதாயம்னு எடுத்து செய்ய வேண்டி வருமேன்னு பொறுப்பு வேணாம்.

 

    சுசீலாவுக்கு எதற்கெடுத்தாலும் எங்கையையே எதிர்பார்த்து நிக்கிறது பிடிக்கலை. எரிஞ்சி எரிஞ்சி விழறாண்ணா ஏன் விழமாட்டா. பேசாம எப்படி கேட்டதுக்கெல்லாம் பணம் கொடுக்க முடியும் அப்படி இப்படி சொல்லத்தானே செய்வோம். அதை அவ உடும்பா பிடிச்சிகிட்டா. இப்ப என்னாச்சி அந்த உருப்படாதவனால ஊரே சிரிச்சிப் போச்சு. இதுல கலா வேற எரிகிற நெருப்புல எண்ணை ஊத்துற மாதிரி சம்பந்தமில்லாமல் வார்த்தையை விட்டுவிட்டாள். தனிக்குடித்தனம் போறோமென்று வேறு வீடு பாத்து போய்விட்டார்கள்.

 

    அவருக்கு வெளி தெருவுக்கு செல்ல முடியாது. சீவனத்துப்போய் வீட்டோட இருக்கற மனுசனுக்கு கீர்த்தனா தான் ஒரே ஆறுதல். அவ இல்லாம அவருக்கு வீட்ல இருக்க முடியலை. இதுக்கெல்லாம் நான்தான் காரணம்னு ராத்திரியெல்லாம் ஒரே புலம்பல். எனக்கு அங்கேயும் இங்கேயும் கீர்த்தனா ஓடுறது கணக்கா பிரமை, அவ உருவம் என் கண்ணுக்குள்ளயே நிக்கிறதாலேயோ என்னவோ. விசேஷத்துக்கு போயிருந்தா கூட ஆத்தா என்னோட படுக்கிறதுக்கு வந்துடு என்று போன் செய்வாள். ஏனோ தெரியலை ஒருமணி நேரத்தில் இருபது தடவையாவது வாசலை வந்து பாத்துட்டேன். எவ்வளவு அழுத்தத்தைத்தான் மனசு தாங்கும். எங்க காலம்தான் மலையேறிப் போச்சில்ல. என்னால வந்த பிரச்சனையை நானே தீர்க்கறேன்னு செருப்பை போட்டுகிட்டு புகழேந்தி வீட்டுக்கு கிளம்பிட்டேன். வாசலில் வந்து நின்று கொண்டு நான் போவதை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி இருக்கும் அவருக்குத் தெரியாதா நான் மருமக காலில் விழுந்தாவது கீர்த்தனாவோட அவளையும் கூட்டிவருவேனென்று.