Saturday, September 26, 2020

திருவடி 2 (உதித்தது வானில் உச்சித் திலகம்)

 



உலகம் சக்தி சொரூபம். அவளது லீலைகளே இங்கு நடப்பவை எல்லாம். பெண்ணின் கருவறைதான் இந்த உலகம். அவள் சிருஷ்டி செய்த மாயஉலகத்தில் தான் ஜீவன்கள் சிக்கித் தவிக்கின்றன. இந்த தாய்ச்சியைத் தொடும் விளையாட்டில் அவள் சலிப்படைவதே இல்லை. அவளது அருட்கடலில் மூழ்கியவர்கள் எல்லோரும் கையில் முத்துடன் திரும்பினார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். யாருக்கு தன்னைக் காட்டியருள வேண்டும் என்பதை அவளே தீர்மானிக்கிறாள். சக்தி இவ்வுலகில் பலவாகி நிற்கிறாள். அவளது மாயத்திரையை விலக்கி உண்மையின் தரிசனம் காண்பது அவ்வளவு எளிதல்ல. நட்சத்திரங்களையும், கிரகங்களையும், உயிர்களையும் உள்ளிலிருந்து ஆட்டுவிக்கும் ஆற்றல் தான் சக்கி என்பது. உலகன்னைக்கு சூரியன்கூட நெற்றித் திலகமாகத்தான் இருக்கிறான். உங்களுடன் வாழும் தாயும், மனைவியும் பராசக்தியின் வடிவங்களே. உலகத்தைத் துறந்த பட்டினத்தாரால் பெற்றவளின் அன்பை உதற முடியவில்லை. அன்னைக்கு தந்த வாக்குதான் அவள் இறக்கும் தருவாயில் ஆதிசங்கரரை அம்மையை நாடி ஓடோடி வரவைத்ததது.

 

பெண்கள் இருதயத்திலிருந்து வாழ்கிறார்கள், கருணையும், அன்பும் அங்குதான் குடிகொண்டுள்ளது. அக்கரையில் நிற்கும் அவளை நீ சென்று சேர சம்சாரக்கடலை கடந்து தான் ஆகவேண்டும். சக்தியின் சிந்தனை சிவனைப் பற்றியதாகவே இருக்கிறது. அவளது ஆசைவலையிலிருந்து தப்பிப்பது என்பது ஜீவன்களுக்கு சாத்தியமற்ற ஒன்று. தாய் தந்தையிடமிருந்து உடலெடுத்தவர்கள் எல்லோரும் சபலத்திற்கு ஆட்படும் பலகீனமான ஆத்மாக்கள் தான். சிவன் மாயையைக் கடக்க மனிதனுக்கு உதவி புரிகிறான் என்பதே சக்தியின் கோபத்திற்குக் காரணம். போகமா, யோகமா என்று வருகிற போது மனிதன் போகத்தையே தேர்ந்தெடுக்கிறான். மனிதன் தான் எரிந்துவிடுவோம் என்று தெரிந்தும் விட்டில் பூச்சியைப் போல் ஆசை நெருப்பை முத்தமிட்டுக் கொண்டு இருக்கிறான். ஐம்புலன்களுக்கு அடிமையாய் இருக்கும்வரை அவளது திருவிளையாடல்களுக்கு ஆட்பட்டு தான் ஆகவேண்டும். பெண்ணாசையை வென்ற பீஷ்மரை அழிக்க அவள் அம்பா வடிவில் வரவேண்டி இருந்தது.

 

இவ்வுலகம் சக்தியின் பாடசாலை, சிவன் உட்பட எல்லோரும் அவளது சீடர்கள் தான். ஒருவகையில் இவ்வுலகம் சம்ஹார பூமி, தான் பழிதீர்க்க நினைக்கும் அசுரர்கள் எப்போது பிறப்பார்கள் என அவள் காத்துக் கொண்டு இருக்கிறாள். உலகை ஆளும் சிவனே அவளின் காலடியின் கீழ்தான் கிடக்கிறான். இவ்வுலகம் விழித்துக் கொண்டே நாம் காணும் கனவு என்று உணரும்போது அவள் பிடி தளர்கிறது. நீ மரிக்கும்போது உன்னை வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கிறாள். ஈசன் நடமாடும் இடுகாட்டில் அவளுக்கென்ன வேலை. மனிதர்கள் தவறான வழியில் சென்றாலும் தன் மகன்தானே என்ற பாசம் அவளுக்கு இருக்கத்தான் செய்கிறது. ப்ரம்மம் விதி என்ற பெயரில் அவளையும் ஆட்டுவிக்கவே செய்கிறது.

 

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் சுப்ரமணியன். திருக்கடவூரில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அபிராமி அன்னையே அவருக்கு எல்லாம். பக்திப் பித்தில் எங்கு இருக்கிறோம் ஏது செய்கிறோம் என்று அறிய மாட்டார். அகக்காட்சி கிடைக்கும்போது புறத்தில் உள்ளவைகள் எல்லாம் முக்கியத்துவம் இழந்துவிடுகின்றன அல்லவா. அன்றும் அப்படித்தான் அபிராமி அன்னையின் சந்நதிக்கு எதிரே அமர்ந்து அவளின் திருக்காட்சியை கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். அத்தருணத்தில் தஞ்சை சரபோஜி மன்னன் அன்று தை அமாவாசை என்பதால் காவிரிக்கரையில் நீராடிவிட்டு பரிவாரங்களுடன் கோவிலுக்குள் பிரவேசித்தான். கோயிலுக்கு நுழைந்த மன்னனை எல்லோரும் சிரம்தாழ்த்தி வணங்கித் தொழுதபோது அபிராமிபட்டர் சந்நிதிக்கு வெளியே சிலையோல் அமர்ந்திருந்தார். மன்னனுக்கு காலில் முள் தைத்தது போல் ஆயிற்று. உள்ளே சென்று வணங்கியவனுக்கு காலில் குத்திய முள் உறுத்திக் கொண்டே இருந்தது.

 

மன்னன் தன்னை அவமானப்படுத்திய நபரைப் பற்றி விசாரித்தான். இதுதான் சமயம் என்று மற்றவர்கள் அவனுக்கு தான் எல்லாம் தெரிந்தவன் என்று நினைப்பு, ஏதோ சில மந்திரங்கள் உச்சாடனம் செய்தால் மன்னனைவிடப் பெரியவன் ஆகிவிடுவானா என எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்கள். எல்லாம் அறிந்தவனோ நான் விசாரிக்கிறேன் என்றான் மன்னன். சந்நதிக்கு வெளியே வந்து பட்டரே நீர் எல்லாம் அறிந்தவராமே எங்கே இன்று என்ன திதி கூறு பார்ப்போம் என்றான் மன்னன். திடீரென்று புறஉலக ஞாபகத்துக்கு திரும்பிய பட்டர் சிறிதும் யோசிக்காமல் பட்டென்று பெளர்ணமி என்று பதிலளித்துவிட்டார். அரசன் அப்படியா இன்று இரவு நிலவு வரவில்லையென்றால் உனக்கு மரணம் தான் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

சுதாரித்துக் கொண்ட அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் ஓடிச் சென்று அவ்வளவுதானா இனிமேல் உன் திருக்காட்சியை என்னால் தரிசிக்க முடியாதா போய்விட வேண்டியதுதானா என அழுது புலம்பினார். ஒரு முடிவுக்கு வந்தவராய் கோயில் திருச்சுற்றில் குழிவெட்டி நெருப்பு மூட்டி மேல்விட்டத்திலிருந்து நூறு சாரங்கள் கொண்ட உறியைத் தொங்கவிட்டு அதில் நின்றபடி உதிக்கின்ற செங்கதிரே என அந்தாதி பாடலானார். ஒவ்வொரு பாடலை பாடி முடித்ததும் ஒருவொரு உறியாக அறுத்துக் கொண்டே  வந்தார். இரவும் வந்தது அபிராமி பட்டர் மரணசர்ப்பம் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். எழுபத்தொன்பதாவது பாடலை பாடியபோது அபிராமி அன்னை பட்டருக்கு தனது திருக்காட்சியைக் காட்டியருளினாள். அம்மை தான் காதில் அணிந்திருந்த தாடங்கத்தை வானில் வீசி எறிய அது ஒளிவீசும் நிலவாய் மாறி பிரகாசமாய் மின்னியது. அன்னையின் அருளால் நூறு பாடல்களையும் பாடி நிறைவு செய்தார் அபிராமி பட்டர். செய்தியைக் கேள்விபட்ட சரபோஜி மன்னன் ஓடோடி வந்து அபிராமி பட்டரின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

 

மனிதர்கள் தான் பாகுபாடு பார்ப்பார்கள். தெய்வம் பேரரசன், பிச்சைக்காரன் என்று பாகுபாடு பார்க்குமா? நீங்கள் கவனித்துப் பாருங்கள் பூனைக்குட்டி மியாவ், மியாவ்  என்று கத்தியவுடன் தாய்ப்பூனை எங்கிருந்தாலும் ஓடோடி வருவதை. பூனைக்குட்டியால் கத்தத்தான் முடியும் அதனால் வேறென்ன செய்ய முடியும். அப்படித்தான் நாமும். உள்ளம் உருக வேண்டினால், முருகனை தரிசித்ததும் தாரையாக தாரையாக கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தால் அவன் திருக்காட்சி கிடைக்காமலா போய்விடும். இதோ அபிராமி அன்னை பட்டரின் ஆன்மச்சுடரை பற்ற வைத்துவிட்டாள் அந்த வெளிச்சத்தில் இனி பல்லாயிரக்கணக்கானோர் கடைத்தேருவார்கள். அந்தாதி பாடுபவர்கள் அபிராமியைக் காண திருக்கடவூருக்கு வரவே செய்வார்கள். இங்கு தான் அபிராமி பட்டர் உட்கார்ந்திருந்தாரா எனத் அந்த இடத்தைத்  தடவித்தடவி உள்ளங்குளிர்வார்கள். இவை எல்லாவற்றையும் கருவறையிலிருந்து அபிராமி அன்னை பார்த்துக் கொண்டுதான் இருப்பாள்.

No comments:

Post a Comment