Wednesday, September 30, 2020

சாக்ரடீஸ் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்!

 


ஏதென்ஸ் நகர வீதிகளில் அலைந்து திரியும் இளைஞர்களே. வாழ்க்கையை பொய்யிலும், புரட்டிலும் அற்ப காரியங்களுக்காகவும் செலவழித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது. உன்னையே நீ அறிவாய். நீங்கள் உள்ளுக்குள் புதையலைச் சுமந்து கொண்டு பிச்சைக்காரர்களைப் போல் அலைகின்றீர்கள். வாலிபம் என்பது வாழ்க்கையின் வசந்தகாலம், வலைவீசும் வனிதையரின் கடைக்கண் பார்வைக்காக இதயத்தைப் பறிகொடுத்துவிட்டு உங்கள் முகவரியை தொலைத்துவிடாதீர்கள். வாழ்க்கை யாருக்கும் தலைவாழை இலை போட்டு விருந்து வைக்காது, தூங்கிக் கொண்டிருப்பவனை தட்டி எழுப்பி புதையல் இருக்கும் பாதாள அறையின் சாவியைக் கொடுக்காது. பஞ்சுமெத்தையில் பரத்தையர்களோடு பேரின்பத்தில் மூழ்கி திளைத்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவர்களின் காலடியில் அடிமைப்பட்டு கிடக்கும் உங்களுக்கு எனது வார்த்தை எனும் வாள் மூலம் காயத்தை ஏற்படுத்துகிறேன் விழித்துக் கொள்ளுங்கள் உறங்குவதற்கான நேரமில்லை இது.

 

இளைஞர்களே சுதந்திர வானில் சிறகடித்துப் பறப்பதைவிட்டுவிட்டு இரண்டு நெல்மணிக்காக கிளிகளைப் போல கூண்டுக்குள் அடிமைப்பட்டு கிடக்கலாமா? மக்களை ஆளுபவர்களின் உண்மையான முகம் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களின் முகமூடியைத்தான் பார்க்கின்றீர்கள். நீதிமான்கள் என்று உங்களால் தொழப்படுபவர்கள் கூட தங்கள் சொந்த வாழ்க்கையில் மிருகங்களைவிட கேவலமான நடத்தை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். பலியாடுகள் அறியாது தாங்கள் எதற்காக பலி கொடுக்கப்படுகிறோம் என்று. ஆட்டுமந்தையாய் இருக்கும் வரை அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டும். கடவுள் பெயரால் கையில் விலங்கிடப்பட்டிருக்கும் உங்களுக்கு நான் விடுதலை அளிக்கிறேன்.

 

இளைஞர்களே நீங்கள் கங்குகள் நான் தீ வைக்கிறேன் பற்றி எரியட்டும் கிரேக்கம். கடவுள் பெயரால் நடக்கும் பித்தலாட்டத்தை எதிர்த்து எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் எத்தனை நாட்கள் ஊமைகளாய் காலத்தைக் கடத்துவீர்கள். உங்களைப் பாவிகள் என்றழைக்கும் கூட்டம் திரைமறைவில் என்னென்ன லீலைகள் செய்கின்றார்கள் என உங்களுக்குத் தெரியுமா? தனது பலம் என்ன என்று தெரியாதவரை தான் யானையை அங்குசத்தால் பணியவைக்க முடியும். பேரலை என்பது பல சிறியஅலைகள் ஒன்று சேர்ந்தது என இந்நாட்டு வேந்தன் அறிந்து கொள்ளட்டும்.

 

மெலிட்டஸ் கூட்டத்தைப் பார்த்தாயா அதில் அரசை எதிர்த்து கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் கயவன் சாக்ரடீஸ் பேசுவதைக் கேட்டாயா? எதிரிகளை இனம் கண்டுவிடலாம். இவன் போன்ற துரோகிகளிடம் தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். காவலர்களே புரட்சியைத் தூண்டியதற்காக சாக்ரடீஸை கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து வாருங்கள். சாட்சிக் கூண்டில் நிற்கும் சாக்ரடீஸிடம் நீதிபதி அவருடைய பேச்சுக்கு விளக்கம் கேட்கிறார்.

 

சாக்ரடீஸ் உன் பேச்சுக்கள் இளைஞர்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடும்படியாக இருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன பதில் தரப்போகிறாய்?

 

ஓ! நாட்டை வெல்பவனைவிட தன்னை வெல்பவனே அரசன் என நான் கூறியது தவறா? நெஞ்சுரத்திடம் கையை உயர்த்துவதும், தாழ்பணிந்து கைகட்டி நிற்பதும் உன் கையில் தான் இருக்கிறது என இளைஞர்களை தட்டி  எழுப்பியது என் தவறா?

 

வாழ்க்கை ருசிப்பதிலும், கேளிக்கைகளிலும், விளையாட்டிலும் வீணாக ஈடுபட்டு பொழுதைக் கழிப்பதற்காக அல்ல, அடுத்த தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க நீ உன் இன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டும். விருட்சம் கிளைபரப்ப நீ மண்ணுள் வேராக இருக்க வேண்டும் என நான் அவர்களுக்கு எடுத்துரைத்ததில் என்ன தவறு கண்டீர்? விடுதலைக்கான திசையை சுட்டிக் காட்டியதற்காக குற்றம் இழைத்ததாக என் ஆட்காட்டி விரலை வெட்டி விடுவீர்களா இதுதான் கிரேக்க நாட்டு நீதியா? பல்லக்கு சுமப்பவன் அமர்ந்து வருபவனிடம் உனக்குதான் கால்கள் இருக்கிறதே எனக் கேட்டால் அவன் கிளர்ச்சியாளன் ஆகிவிடுவானா? அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி மரணத்தை முத்தமிட்ட போராளி இவன் என்று நாளைய வரலாறு உன்னைப் பற்றிக் கூறும் என நான் கூறியதில் என்ன தவறு கண்டீர்? நீங்கள் எண்ணியதை தான் நான் பேச வேண்டுமென்றால் அதற்கு சாக்ரடீஸ் எதற்கு?

 

பார்த்தீர்களா நீதியரசர் முன்னிலையிலேயே தன் வார்த்தைகளுக்கு என்ன வியாக்கியானம் அளிக்கிறான் என்று. நயவஞ்சகன், துரோகி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பவன் பாம்பின் விஷத்தைவிடக் கொடியது இவன் வாயிலிருந்து புறப்பட்டு வரும் வார்த்தைகள். இவனை பேசவிட்டால் நீதியரசரையே தன் வார்த்தை ஜாலத்தால் மயக்கிவிடுவான். விரைவாக தீர்ப்பளியுங்கள் என்று சபையோர் சார்பாக வேண்டுகிறேன்.

 

தேசவிரோத காரியங்களில் ஈடுபட்டது சாட்சியின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் சாக்ரடீஸூக்கு மரணதண்டனை விதிக்கிறது இந்த நீதிமன்றம்.

 

இன்று நான் விஷமருந்த வேண்டும். வாழ்வு மகளை விட்டுவிட்டு மரணதேவதையை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும். எனக்கு இன்னொரு வாசல் திறந்துவிட்டது. பிறக்கும்போது அழுது கொண்டே பிறந்திருக்கலாம் இறக்கும் போது நான் அழ விரும்பவில்லை. மரணத்தைக்கூட வீரத்துடன் எதிர்கொண்டான் சாக்ரடீஸ் என்றுதான் வரலாறு சொல்ல வேண்டும். நான் ஒன்றும் கொலைகாரனல்ல சத்தியத்தின் பக்கம் நிற்பதால் சாவை எதிர்கொள்ளவிருக்கும் தியாகி நான். மதகுருமார்கள் என்னைப் பேசவிட்டால் எங்கே தங்களது ஆட்டம் நின்றுவிடுமோ என அச்சப்பட்டு தான் என்னை கொல்லத் துணிந்திருக்கிறார்கள்.

 

எனது மரணத்தின்போது அரசனின் கையிலுள்ள செங்கோல் நியாயத்தை சீர் தூக்கிப் பார்க்கவில்லை என்பது உண்மையாகிவிடும். அரசே நீ என்னை வேருடன் சாய்த்துவிடலாம். நான் விதைத்த விதையை தேடிப் பிடித்து உன்னால் அழிக்க முடியாது. அரசனே நான் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறேன் என்று ஒருநாள் நீ உணர்ந்து கொள்வாய். இது எனது அந்திமகாலம் இந்த அறிவுசூரியன் இல்லாமல் உலகில் அறியாமை இருள் அகலாது. ஞானத்தை விலைபேசி நான் விற்கவில்லை.

 

அடிமைப்பட்டிருக்கும் நாட்டிலெ்லாம் இந்த சாக்ரடீஸ் தோன்றுவான் ஆள்வோருக்கு எதிராக அறிவாயுதத்தை உபயோகிப்பான். நான் இந்த உலகத்திற்கு கொடுத்துப் போகும் பகுத்தறிவால் எத்தனை சாம்ராஜ்யங்கள் வீழப் போகுது பாருங்கள். இதோ என்னைக் கொல்ல விஷம் வந்துவிட்டது. மரணத்தை சற்று தள்ளிப்போடும் ஆசை எனக்கில்லை இப்பொழுதே அருந்துகிறேன்.

 

எனது கல்லறையில் எழுதி வையுங்கள் பலரை விழிக்கச் செய்தவதன் இங்கு ஓய்வெடுக்கிறான் என்று. நான் இறந்து போகலாம் பலநூறு ஆண்டுகள் நான் ஏற்றி வைத்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். வாதத்தை வாதத்தால் வெல்ல முடியாத கோழைகள் சாம்ராஜ்யம் ஞானத்தீயால் விரைவில் சாம்பலாகும்.

1 comment: