Thursday, September 17, 2020

கடவுள் துகள் (ஸ்டீபன் ஹாக்கிங்கின் குவாண்டம் கொள்கையை முன்வைத்து)

 



மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட அறிவியலாளர்கள் ஆதியில் சக்தி அதாவது ஆற்றல் தான் இருந்தது அதிலிருந்து தான் அணுக்கள், மூலக்கூறுகள் உருவாயின என்கிறார்கள். அந்த ஆற்றலுக்கு காரணகர்த்தா யார் என்பதற்கு அவர்களால் விடை கூற முடியவில்லை. நாம் கைகளை அசைக்கிறோம் அதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது நம்மிடமிருக்கும் சக்தியின் சிறுபகுதியை நாம் நம் கைகளை அசைக்க உபயோகப்படுத்திக் கொள்கிறோம் அதைப் போன்று கடவுள் தம்மிடமிருக்கும் ஆற்றலின் சிறுபகுதியை ஏன் பெருவெடிப்பிற்காக உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறதல்லவா? மனிதர்களில் சிலர் பணக்காரர்களாகவும் பலர் ஏழைகளாகவும் மற்றும் சிலர் அங்கஹீனமாகவும் பலர் ஆரோக்கியமாகவும் பிறப்பதற்கு என்ன காரணமென்று இன்றுவரை அறிவியலால் விடைகூற முடியவில்லை. அத்தகைய விளிம்பு நிலை மக்களுக்கு மதம்தானே நம்பிக்கைத் தருகிறது. துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது என்ற ஆறுதல் வார்த்தை தானே மக்களிடம் நம்பிக்கை அளித்து தாங்கள்படும் துயரங்களைப் பொறுத்துக் கொள்ள வைக்கிறது.

 

எந்த வேத நூலிலாவது கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் எனக் கூறப்பட்டுள்ளதா? அணுகுண்டுகள் தயாரிக்கும் சமன்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளதா? இதையெல்லாம் அறிவியல் தானே செய்தது. இவ்வுலகத்தில் இருதயத்திலிருந்து செயல்படுபவர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் தான். இதன்காரணமாகத்தான் இயேசு தன்னை பிதாவினுடைய ஒரே குமாரன் என்று சொல்லிக் கொண்டார். இயற்பியலின் கோட்பாட்டின்படிதான் மனித இனம் உருவானது கடவுள் அதற்குக் காரணமில்லை என்றால் இயேசு என்ற தச்சனின் மகன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது எப்படி? கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்ததினால் தான் தெய்வீகத்தன்மை கொண்ட இரட்சகர்கள் உலகில் அவ்வப்போது அவதரிக்கின்றார்கள்.

 

நோயின் கடுமைகளை பிரார்த்தனையின் மூலம் கடவுளிடம் தெரியப்படுத்தும் நோயாளிகளுக்கு அறிவியல் என்ன பதில் கூறப்போகிறது. இந்தப் பூமி தோன்றுவதற்கு முன்பு வெற்றிடம் தான் இருந்திருக்கும் அந்த வெற்றிடத்திலிருந்துதான் பல்லாயிரக்கணக்கான சூரிய மண்டலங்கள் தோன்றிருக்கும் அந்த வெற்றிடம் எல்லாவற்றுக்கும் சாட்சியாக காலம், இடம் ஆகியவற்றுக்கு கட்டுப்படாமல் இன்றும் இருக்கிறது என்றும் இருக்கும் இதை அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இயேசுவிடம் வானரசு பூமியிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்று கேள்வி எழுப்பிய போது அங்கு காலம் இருக்காது என்று உறுதியாக பதிலளிக்கிறார் இயேசு. இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனின் துயரத்திற்கு  அவன் காலத்திற்கும், இடத்திற்கும் அடிமையாய் இருப்பதே காரணம் என்று உணர்ந்திருந்தார் என்று சுவிசேஷத்தைப் படிக்கும்போது நமக்கு தெரிய வருகிறது.

 

ஸ்டீபன் ஹாக்கிங் பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பில் நாம் வசிக்கும் பூமி நிலை கொண்டுள்ள சூரிய மண்டலத்தைப் பெற்றிருக்கும் இப்பிரபஞ்சத்தைப் போன்ற இணை பிரபஞ்சங்கள் உருவாகி இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஏதேனும் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கில்லை என்றும் தனது ஆய்வுக் கட்டுரையில் அவர் தெரிவிரித்துள்ளார். தனது முந்தைய நூலான A Brief History Of Timeல் கடவுளின் பங்கு பிரபஞ்சத்தின் தோற்றத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஒத்துக்கொண்ட அவர் தனது The Grand Design என்னும் சமீபத்திய புத்தகத்தில் அதை மறுத்துள்ளார். அவரது கருத்துக்களை ஒட்டுமொத்த அறிவியல் உலகமும் ஏற்றுக்கொள்கிறது. இதனை நாம் சற்றே ஆராய வேண்டியுள்ளது, ஏனெனில் அறிவியல் முற்றிலும் மூளை சம்பந்தப்பட்டது ஆனால் மதமோ இருதயம் சம்பந்தப்பட்டது. அறிவியல் கிழக்கு  என்றால் மதம் மேற்கு இரண்டுமே எந்த நூற்றாண்டிலும் சந்தித்துக் கொள்ளாது.

 

புத்தி ஒவ்வொரு நிகழ்வுக்குமான காரண, காரியங்களை ஆராயும். எகிப்திய பிரமிடுகள் மரணத்தின் போது மனித உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறுகிறது என்பதை எகிப்தியர்கள் நம்பியதாகவும் அது மீண்டும் மனித உடலுக்குள் நுழைய வாய்ப்பிருப்பதாகவும் அது தன் உடலைத் தேடி வரும்போது ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காகவே எகிப்தியர்கள் பிரமிடுகளை ஏற்படுத்தி உடல்களை  பாதுகாத்தார்கள் என்பதை இன்று அறிவியல் ஒத்துக் கொள்கிறது. அறிவுக் கனியை உண்டதாலேயே ஆதாம் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் மேம்பட்ட அறிவைப் பெற்ற ஆதாமின் சந்ததி மரணத்தையும் பரிசாகப் பெற்றது. இதனை நீங்கள் சுவிசேஷத்தில் அறியலாம். இருதயத்திலிருந்து வாழ்பவர்கள் தன்மூலம் இறைவன் செயல்பட வாய்ப்பளிக்கிறார்கள். இயேசுவும், புத்தரும் வெறும் மூங்கில் தான் உள்ளேயிருந்து இசைப்பவன் கடவுள். எதையும் ஆராய்பவர்களால் காதலையும், கடவுளையும் உணர்ந்து கொள்ள முடியாது. நமது இருதயம் எப்போதும் கடவுளுடன் தொடர்பிலுள்ளது. அதுதான் உள்ளுணர்வாக அவ்வப்போது நம்மை வழிநடத்துகிறது. மனதின் ஒருபகுதிக்கு இறைவன் இருப்பது தெரியும் அதனால் தான் நாம் மோசமான தவறுகளைச் செய்யும்போது இறையச்சத்திற்கு ஆளாகிறோம். நாம் செய்வதனைத்திற்கும் சாட்சித்தன்மையாக ஒன்று உள்ளது அதுவே கடவுள் என்று இந்த உலகம் இன்னும் சில நூற்றாண்டுகளில் ஒத்துக் கொள்ளும்.

No comments:

Post a Comment