இருக்கு இல்லைங்கிறது வேற விஷயம். நீ நேரில் பார்த்த மாதிரி
வக்காலத்து வாங்கறங்கிறேன். இப்ப காய்கறிகடைக்கு போய் காய்கறி வாங்குற எந்த மண்ணுல
விளைஞ்சதுன்னா கேட்கற. கேட்டீன்னா கடைக்காரன் உன்னை ஏறஇறங்க ஒருமாதிரி பார்க்கமாட்டான்.
சமையலுக்கு உதவுவதை சத்தம் போடாம வாங்கிட்டு வர்ற பக்கத்து வீட்டுக்காரன் எதிர்த்த
வீட்டுக்காரன்கிட்ட சாதி பார்க்குற. எல்லோரும் தாயின் வயிற்றிலிருந்துதான் வெளியே
வர்றோம். பிறப்பால் நான் உயந்தவன்னு ஒருவனும் மார்தட்டிக்க முடியாது. அடுத்தவன் சுவாசப்பைக்குள்
போயிட்டு வர்ற காற்றைத் தானே நீ சுவாசிக்கற. எல்லாரையும் மண்தான் திங்கப் போகுது.
இதுல நீ உயர்ந்தவன்ங்கிற. அல்லா மரணத்தை பொதுவில்தான் வைத்து இருக்கிறான். வர்றதுக்கும் ஒரு வழிதான் போறதுக்கும் ஒரு வழிதான்.
வந்துபோகும் நீ மண்ணை ஏன் சொந்தம் கொண்டாடுகிறாய் என்கிறேன்.
இளவயதில் இரத்தத் திமிரில் முறுக்கிக் கொண்டு திரியலாம். நாற்பதைக் கடந்துவிட்டால்
மரணத்தின் நிழல் வாழ்க்கையில் கவிய ஆரம்பித்தவுடன் பயம் வருகிறதல்லவா. நீ அடுத்தவன்
முதுகை படிக்கல்லாக்கி ஏறி வந்திருக்கலாம் அது அல்லாவுக்கு தெரியாமலிருக்குமா? சம்பாதிக்கலாம்
தான் அதிலும் ஒரு நெறிமுறை வேணும். எவ்வளவு தான் கொட்டிக் கிடந்தாலும் மூன்று வேளைக்கு
மேல் சாப்பிட வயிறு இடம்தருகிறதா என்ன? மருத்துவமனையிலில் இருந்துகொண்டு பாதி சொத்தை
கரைக்கிறாயே நேர்மையாக சம்பாதித்ததென்றால் இப்படி கரையுமா? நான் கேட்கிறேன் படிக்கறது
இராமாயணம் இடிக்கிறது இராமர் கோவிலா?
புல், பூண்டு, நரி, புலி எல்லாம் வாழ்கிறதுதான். அதன் வாழ்க்கை
எப்போதாவது வரலாறு ஆகியிருக்கிறதா? நீ இங்கே குபேரனாக இருக்கலாம் போகும்போது ஒரு
குண்டூசியை உன்னால் எடுத்துப் போக முடியுமா? காட்டுல சிங்கம் இருக்கே வயிறு நிறைஞ்சுதுன்னா
வேட்டையாடாது. உனக்கு எவ்வளவு தான் கொட்டிக் கொடுத்தாலும் போதுங்கிறியா? வானத்தை
பார்த்தாயா பிரதிபலன் பாராது பொழிகிறது, பார்த்தாயா அதுக்கென்ன தலையெழுத்தா? அசலுக்கு
அநியாய வட்டி கேட்கிற அந்த வட்டியையும் குட்டிப் போட வைக்கிறியே எந்த ஊர் நியாயம்
இது. செத்தவன் வீட்டுக்கு போய் துக்கம் விசாரிக்கிறியே நீயும் ஒருநாள் போக வேண்டியிருக்குமேன்னு
யோசிச்சியா? அப்படி யோசிச்சீன்னா எந்த மதத்தை சேர்ந்தவனாய் இருந்தாலும் நீ இஸ்லாமியன்
தான். காட்டாற்று வெள்ளம் வருது கரை உடைஞ்சி வீடு தண்ணீரில மூழ்கிடுமோன்னு பயப்படுறீல.
நல்லது பண்ணிட்டு அண்டார்டிகாவுக்கு போ உனக்கு சேர வேண்டிய
உணவை பனிக்கரடி கொண்டு வந்து கொடுக்குங்கிறேன். இதை நான் சொன்னா நம்பமாட்ட பண்றதையெல்லாம்
பண்ணிட்டு கடைசி காலத்துல சம்போமகாதேவான்னா என்ன அர்த்தம். வீடு போபோங்குது காடு
வாவாங்குது அப்ப இருதலைக்கொள்ளி எறும்புமாதிரி தவிப்பீல. நீ என்னதான் பக்திப்பழம்
மாதிரி நடிக்கலாம் அவன்கிட்ட முடியுமா? அல்லாகிட்ட உன் பாட்சா பலிக்காது அவன் சகலத்தையும்
அறிந்தவன். நான் அப்படித்தான் வாக்கிங்கும் போக மாட்டேன் ஜாக்கிங்கும் போக மாட்டேன்
ஆனா நாய் என்னை துறத்துனதுன்னு வை ஒலிம்பிக்ல ஓடுறவன் என்கிட்ட தோத்துறுவான் அப்படி
ஓடுவேன்.
நீ உமி கொண்டுவா நான் அவல் கொண்டு வர்றேன் ஊதிஊதி தின்போங்கிற
கதையா? வாய்ப்பு எப்போதும் ஒருமுறைதான் நீ என்ன தான் பலபிறவிகள்ன்னு கற்பிதம் கொண்டாலும்
சரி. என்னெல்லாமோ திட்டமெல்லாம் போடுற நடந்துருதா? அப்ப லகான் யார் கையில இருக்கு?
சுற்றிலும் அகழி வெட்டி கோட்டைக்குள்ள பதுங்கிக்கிற கதையா? எத்தனை நாள் அப்படி இருப்ப?
பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லைங்கிறேன். இந்தப் பூமி அல்லாவினுடைய வீடு நீ அசிங்கம்
பண்ணிவைச்சிட்டு போய்விடாதேங்கிறேன். ஈ தான் கண்டதுலையும் உட்காருங்கிறேன். நாயை குளிப்பாட்டி
நடு வீட்டுல வைச்ச கதையை கேள்விப்பட்டிருக்கியா அது தான் இப்ப நடந்து போச்சி. வீடு
பெருசா இருந்தா என்ன உள்ளம் சிறுசால்ல இருக்கு.
ஆசையே அழிவுக்கு காரணம்னு எல்லோரும் தான் பள்ளிக்கூடத்துல பாடம்
படிச்சோம். என்ன கோயில் காளையா தண்ணி தெளிச்ச விடுறதுக்கு. அடுத்தவன் விஷயத்துல மூக்கை
நுழைக்கிறது எல்லோருக்கும் பிடிக்கும்தானே. முதல்ல உன் யோக்கிதை என்னன்னு பார்த்துட்டு
அடுத்தவன் மேலே கையைக் காட்டுங்கறேன். நம்பிக்கைத் துரோகம் செய்தவன் வானளாவிய அதிகாரம்
படைத்தவனாக இருக்கலாம். அதனால் என்ன வரலாறு அவனை மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ளாது.
வாழ்க்கை திறந்த புத்தகமாக இருக்க வேண்டுமேத் தவிர, அசிங்கங்களின் குவியலாக இருக்கக்கூடாது.
காசு வரும் போகும். அல்லாவை நம்பி இறையச்சத்துடன் வாழ்பவனையே உத்தமன் என்று உலகம்
சொல்லும். என்னடா நம்பிய இறைவன் சோதனை செய்கிறானே எனக் கருத வேண்டாம். தங்கமானாலும்
உருக்கினால் தானே ஆபரணம் செய்யமுடியும். வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் அல்லா மீது
வைக்கும் விசுவாசமே நம்மை இங்கு கரைசேர்க்கும்.