ஆறுமுகன் கடவுளர்களின் கடவுள். முருகா என்று அவன் நாமத்தை உச்சரித்தாலே பக்தன்
மனம் பரவசமடையும். எத்திசை நோக்கி வேண்டுமானாலும் வணங்கலாம் அவன் எங்குமிருக்கிறான்.
கந்தன் தமிழில் வைதாரையும் வாழவைப்பான். காடு
மலைகளில் முனிவர்கள் தேடி அலைவது தத்துவப்பொருளான முருகனைத்தான். முருகன் பரப்பிரம்மம்,
இந்தப் பிரபஞ்சத்துக்கே அதிபதி. அவன் அழைக்காமல் தானாக யாரும் பழனி செல்ல முடியாது,
வேலனைக் காண வேளை வரவேண்டும். சத்தியத்தின் வழி நடப்பவர்கள் அவனிடம் சரணடைந்துதான்
ஆகவேண்டும். தெய்வக்குழந்தை கிரகங்களையெல்லாம் பளிங்கு போல் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது.
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அக்குழந்தைக்கு. அடியவர்களுக்கு அடியெடுத்துக் கொடுத்து
தமிழில் பாடச் சொல்லிக் கேட்கும். பக்தனுக்கு ஏதாவது ஒன்றென்றால் தான் கடவுள் என்பதைக்கூட
அக்குழந்தை மறந்துவிடும். ஆதியில் இருந்தே முருகக்குழந்தை இங்கு தான் இருந்து வருகிறது.
பிறவா நிலையை அடைந்தவர்களை அக்குழந்தைதான் மேலுலகங்களுக்கு அழைத்துச் செல்லும்.
தன்னை நம்பியவர்களை கரை சேர்ப்பதே அதன் வேலையாக இருக்கிறது. இந்த உலகில் தர்மத்தை
நிலைநாட்டுவதே அதன் வேலை. உலகில் நீதியை நிலைநிறுத்த அது ஒரு சர்வாதிகாரி போல் நடந்து
கொள்கிறது. இந்த உலகில் அறத்தை நிலைநிறுத்த அது மனிதர்களை கைப்பாவையாகக் கொண்டு சம்ஹாரம்
செய்கிறது. விதி என்ற கோட்பாட்டை உருவாக்கியதே அதுதான். ஒவ்வொரு மனிதனைப் பற்றியும்
ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்துள்ளது. ஐம்பூதங்களும் முருகக்குழந்தைக்கு அடிமை
வேலை செய்கின்றன. ஜனனத்தையும் மரணத்தையும் அதுவே நிர்ணயிக்கிறது. தமிழுக்கு தொண்டு
செய்தோன் சாவதில்லை என்று தமிழ்ப்பித்தில் தன்னை மறந்து கிளிப்பிள்ளையைப் போல் முருகலோகத்தில்
சொல்லிக் கொண்டு திரிகின்றது. தமிழனும், தமிழும் இங்கு நிலைத்திருக்கும் வரை அது
அறுபடை வீட்டிலிருந்து இவ்வுலகை அரசாட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.
திருவண்ணாமலையில் பக்திநெறி பிறழாது வாழ்ந்து வந்த திருவெண்காடர், முத்தம்மை
தம்பதியினருக்கு ஆதிலெட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆசைக்கு ஒரு பெண் பிறந்தாயிற்று
ஆஸ்திக்கு ஒரு ஆண் வேண்டுமே என அவர்கள் முருகனிடம் பிரார்த்திக்க, அவனருளால் அருணகிரி
பிறந்தான். வசதிக்கு குறைவில்லாத வணிகக் குடும்பம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க
இடம் என்று சகல வசதிகளும் கிடைத்தவுடன் அருணகிரியின் உள்ளம் பிற சுகங்களின்பால் நாட்டம்
கொண்டது. வாணிகத்திற்காக கடல் கடந்து சென்ற தந்தை திரும்பவில்லையே என்ற கவலை அருணகிரிக்கு
துளியும் இல்லை. அருணகிரி பரணில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கக் காசுகளைத் திருடிக்
கொண்டு பரத்தையர் வீடுகளே கதியென்று கிடந்தான். முத்தம்மை முருகனால் கிடைத்த பிள்ளை
தறுதலை ஆகிவிட்டதே என மனம் நொந்து இறந்தாள்.
நாம் பணியவில்லையென்றால் வாழ்க்கை பாடம் நடத்திவிடும். விதி சூழ்நிலையை ஏற்படுத்திக்
கொடுக்கும் ஆனால் எப்படி செயல்பட வேண்டும் என்ற முடிவை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறது.
ஒருவேளை சோற்றுக்கே அல்லாடுபவர்கள் இங்கிருக்கும்போது உனக்கு பெண்போகம் கேட்கிறதா
என வாழ்க்கை சீறிப்பாயும். நீ குருகுலத்தில் உன் ஆசாரியரிடம் கற்றது இதுதானா எனக் கேலி
செய்யும். உன்னைப் பார்த்து பித்ருலோகத்தில் உள்ள உன் தாய்தந்தை தலையிலடித்துக் கொள்வார்கள்
என செவிட்டில் அறையும். காலத்தே பயிர் செய் என்று சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள்
என்று உனக்கு விளங்க வைக்கப் பார்க்கும். அத்தனையும் இழந்துவிட்டு கிழிந்த சட்டையோடு
வீதியில கையேந்தி நிப்பப்பாரு அப்ப வச்சிக்கிறேன் என் கச்சேரியை என முகத்தில் காறி
உமிழும். அனுபவிச்ச உடம்பு என்னாவப் போகுது பாரு என்று தலையில் அடித்துக் கொள்ளும்.
மனதின் கருவிதான் உடல். மனம், தான் சுகப்பட ஓருடம்பு போதாது என்று இந்த உலகில் எத்தனை
உடலை மனம் எடுத்து போகக்கடலில் மூழ்கியிருக்கிறது பாருங்கள். மனமே இனிமே கறந்த இடத்தையும்,
பிறந்த இடத்தையும் நீ தேடவே கூடாதென்று வாழ்க்கை சாபமிட்டது.
கல்யாணம் பண்ணினால் பொறுப்பு வரும் அருணகிரி திருந்துவான் என எண்ணி ஆதிலெட்சுமி
தான் முன்நின்று அருணகிரிக்கு திருமணம் முடித்தாள். என்ன தான் நாயைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும் அது மலத்தை நாடித்தானே ஓடும். செல்வம் கரைந்தது மட்டுமல்லாமல்
உடல் தொழுநோய் கண்டது. மன்மதனே என்று பல்லிளித்தவர்களெல்லாம் வீட்டு பக்கம் வந்தால்
அவ்வளவுதான் என்று அருணகிரி முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். தொழுநோய் கண்டாலும் அருணகிரியின்
மனம் ருசிகண்ட பூனையாக உடும்பாக இச்சையைப் பற்றிக் கொண்டதை விடுவதாக இல்லை. பரத்தையர்
வீடுகளுக்கு போய் கெஞ்சத் தொடங்கினான், அவலட்சணத்தை காணச் சகிக்காது அவர்கள் கதவடைத்தார்கள்.
ராஜமரியாதையோடு மஞ்சத்தில் வனிதையரோடு வீழ்ந்து கிடந்ததை நினைத்துப் பார்த்தபடி நடந்து
கொண்டிருந்தான் அருணகிரி. எதிரே ஒரு பெண்ணுருவம் அசைந்து வருவதைப் பார்த்து அருணகிரிக்கு
சபலம் ஊற்றெடுத்தது. மனம் தூரிகையை எடுத்து சித்திரம் வரைந்து வருபவள் இவள்தான் என்றது.
மெல்ல மெல்ல அந்த உருவம் அருகில் வந்தபோது பார்த்தால் அவள் ஆதிலெட்சுமி, விதுவிதுத்துப்போனது
அருணகிரியின் உள்ளம்.
ஆதிலெட்சுமி அருணகிரியை நெருங்கி வந்து உன் அவலட்சணம் பெண்ணுக்கு அருவருப்பைத்தான்
ஏற்படுத்தும், உனக்கு பெண்ணுடல் தானே வேண்டும் என்னை தமக்கை என்று பார்க்காதே உன் இச்சையைத்
தீர்க்க நான் என்னுடல் தருகிறேன் மனமுவந்து சொல்கிறேன் என்னைப் பயன்படுத்திக்கொள்
அருணகிரி என்று சொல்லி அவள் தலைநிமிர்கையில் அருணகிரி தலைகுனிந்தான். அருணகிரிக்கு
தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அம்மா ஸ்தானத்தில் இருப்பவள் இப்படி கேட்டுவிட்டாளே
என்று செய்வதறியாது கோயில் நோக்கி ஓடினான். தான் ஒரு காமப்புலையன் என்று தன்னை வெறுத்து
வல்லாள மகராஜா கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தான். மனிதர்கள் தொடத் தயங்கிய தொழுநோய்
கண்ட உடலை முருகன் தன் திருக்கரங்களால் தாங்கி நின்றான். வேலவன் தன் திருவாயால் ‘வேளை
வரவில்லை உமக்கு தமிழில் நீ பாட எத்தனையோ சந்தங்கள் இருக்கு’ என்றான். நானா கவிபாடுவதா
எனத் தயங்கிய அருணகிரியிடம், லோக நாயகனே முத்தை என்று முதலடி எடுத்துக் கொடுத்தான்.
இறக்கும் வரை அருணகிரி கந்தன் திருப்புகழை பாடி வந்தார்.
விதைப்பவன் ஒருவன் அறுப்பவன் ஒருவன் இதுதான் உலகநியதி. வியாதியாலே சாக்காடு,
செல்லும் பாதையெங்கும் பூக்காடு, இடுகாட்டில் தீக்காடு இதுதான் சைவநீதி. நீ உழைத்ததற்கு
பலன் கிடைக்க ஆயிரம் ஆண்டுகளும் ஆகலாம், அடுத்த நொடியிலும் கிடைக்கலாம் எல்லாம் அவன்
சித்தம். பட்டுப் போகவிருந்த மரத்திற்கு நீர்வார்த்தேனே அதற்கான பலன் கிடைக்கவில்லையே
எனக் கலங்காதே. உனக்கு உணவு அளிக்கபடவேண்டும் என்று விதி இருந்தால் நீ அண்டார்டிகாவில்
இருந்தாலும் பனிக்கரடி உன்னிடம் உணவைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். நடப்பது நடந்தே
தீரும். விதியை யாராலும் மாற்ற முடியாது. பாரத்தை சுமக்காதே அவனிடம் விட்டுவிடு அவனிஷ்டப்படி
நடக்கட்டும். பிரச்சனையை ஆரம்பித்து வைத்தவனே தீர்த்தும் வைப்பான். அவனவன் பிராப்தப்படி
ஆங்காங்கு இருந்து ஒருவன் ஆட்டுவிக்கத்தான் செய்கிறான். ஆகையால் சண்முகனிடம் சகலத்தையும்
ஒப்படைத்து சரண்புகுவோம்.
No comments:
Post a Comment