Saturday, January 29, 2022

ஜனவரி 30 காந்தியடிகளின் நினைவு தினம் மண்ணின் மகாபுருஷர் காந்தி எப்போது மகாத்மா ஆனார்

 


ரயில் வண்டியிலிருந்து வெள்ளைக்காரர்களால் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார் காந்தி. அவருக்கு என்ன நடந்தது எனப் புரியவே சில நிமிடங்கள் ஆனது. நிறவேறுபாட்டினால் மட்டும் அவர்கள் தன்னைவிட உயர்ந்தவர்களாகிவிடுவார்களா என்ற கேள்வி அவர் மனத்தில் எழுந்தது. சகபயணியாக தன்னோடு பயணம் செய்வதற்கு அவர் ஏன் சங்கோஜப்படவேண்டும். என்னைக் கீழே தள்ளி ஷு கால்களால் மிதிப்பதற்கு எந்த மதப்புத்தகம் அவருக்கு கற்றுக் கொடுத்தது.

 

படைப்பில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு உண்டா என்ற கேள்வியை அவர் கடவுள் முன் வைத்தார். சக மனிதன் என்ற கருணையில்லாமல் இப்படிச் செய்பவர்கள் மனஅளவில் இன்னும் மிருகமாகத்தான் இருக்கின்றார்கள். பிறப்பு நம் கைியில் இல்லாதபோது பிறந்ததால் நான் உயர்ந்தவன் என்று எவ்வாறு கூறிக் கொள்ள முடியும். தீண்டத்தகாதவர்கள் எனக் காற்று நினைக்கிறதா, இயற்கையின் தவப்புதல்வர்களில் அவர்களும் ஒருவர் தானே.

 

மரணம் நம்மை திகம்பரனாக்கிவிடுகிறது. நாம் இறப்புக்கு பின் எதையும் கொண்டு போக முடியாது. அப்படி இருந்தும் தான் உயர்ந்தவனென்று இவர்கள் அகங்காரம் கொள்கிறார்களே. கருமேகத்திலிருந்து மழைத்துளி விழுவதற்காக அவர்களால் வானத்தை வெறுக்க முடியுமா? தன்னைத் தானே வெற்றி கொண்டவர்கள் யாரேனும் இப்படி நினைப்பார்களா? சமூகம் புறஅடையாளத்தை வைத்தே மனிதனின் தகுதியை நிர்ணயிக்கிறது.

 

இருதயத்திலிருந்து வாழ சமூகம் இடமளிக்காது. பாலகனாய் இருக்கும் போதே சமூகம் அவர்களுக்கு விஷத்தை தந்துவிடுகிறது. தரகர்கள் சமூகத்தை ஏய்த்துப் பிழைக்க வேண்டுமென்பதற்காக சமூகத்தை இருகூறாய் பிரித்து வைத்திருக்கிறார்கள். மதிப்பு வாய்ந்த மனிதர்கள் கூட பிறரின் புறத்தோற்றத்தைப் பார்த்து மனம் உவந்து கேலி செய்கின்றனர். இன்னொரு மனத்தை மகிழச் செய்வதுதானே இந்த வாழ்க்கையின் பரிசாக இருக்க முடியும். இவர்கள் கைகளில் உள்ள அதிகாரத்தால் சூரியனை உதிக்காமல் செய்துவிட முடியுமா?

 

இந்த உலகத்தில் புழுவைப் போன்றவன் தானே மனிதன். இறக்கை முளைத்துவிட்டது என்பதற்காக பட்டாம்பூச்சியால் வானத்தை அளக்க முடியுமா? கடவுள் நம்மை மடியச் செய்வதற்கு கரும்பலகையில் எழுதி  அழிக்கின்ற காலஅளவு கூட ஆகாது. கையில் ஆயுதம் ஏந்தாமல் இவர்களை எதிர்க்க முடியுமா? எதிர்ப்பவர்களுக்கு அடக்குமுறையால் பதில் சொல்லும் இவர்கள். அஹிம்சையால் எதிர்ப்பைக் காட்டினால் என்ன செய்வார்கள். உயிரை துச்சமென நினைத்தால் பீரங்கி முன்பு கூட நம்மால் அஞ்சாமல் நிற்க முடியும் அல்லவா.

 

புரட்சிக் கனலை மக்கள் உள்ளத்தில் ஏற்றி வைத்தால் அந்த அக்னியை வெள்ளைக்காரர்களால் அணைக்க முடியுமா? அடக்குமுறையை எதிர்த்து மக்கள் ஒன்றுபட்டால் சாத்தியமாகாதது ஏதேனும் உள்ளதா? ஜனங்களிடம் உத்வேகத்தை விதைத்தால் இரும்புக் கோட்டைகள் கூட தூள் தூளாக நொறுங்கி விழும் அல்லவா. யாவர்க்கும் பொதுவாம் நீதி என்பதை நிலைநாட்டிட அக்கிரமக்காரர்களை கூண்டோடு ஒழித்திட என் வாழ்நாள் முழுவதையும் செலவழிப்பேன் என காந்தி முடிவு செய்த போது அவர் சாதாரண ஆன்மாவிலிருந்து மகாத்மாவானார்.

No comments:

Post a Comment