Friday, January 14, 2022

தேடிக் கண்டுகொண்டேன்


பரமஹம்சம் என்றொரு பறவை வானத்தில் பறந்தபடியே முட்டையிடும் கீழே வரவர பாதி தூரத்திலேயே குஞ்சு பொரிக்கும். மேலும் கீழே வரவர முக்கால் தூரத்திலேயே அந்த குஞ்சுக்கு இறக்கை முளைத்துவிடும். பின் அந்தப்பறவையின் கால்கள் தரையில் படாமலேயே அப்படியே மேல் நோக்கி வானத்தில் சிறகடித்துப் பறந்துவிடும். அது போன்றவர்கள் தான் ஞானிகள். பூமியோடு சம்பந்தப்படாதவர்கள். கடவுளை நோக்கி சென்றுவிட்டவர்கள். பறவையின் உருவம் நீரில் பிரதிபலிப்பதைப் போல நீங்கள் அந்த ஞானியர்களை பார்க்கலாம். ஆனால் அவர்கள் உடலோடு தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். தான் வந்த வேலை முடிந்ததும் பிரகிருதியான ஸ்தூல உடலை விட்டுவிடக் கூடியவர்கள். புருஷனான ஆன்மாவில் நிலைத்திருப்பவர்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களையும் கடந்தவர்கள். ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவர்கள். பலநூறு பேரை கடைத்தேற்றுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள். துன்பம் என்பது மனதுக்கு கொடுக்கப்படும் அடிகள் அப்போதுதான் அது மேலானதை நாடும். வாழ்க்கையின் துன்பத்தையே அனுபவிக்காதவனுக்கு தேடல் இருக்காது ஆத்மவிசாரமும் இருக்காது.

 

இன்பத்தைவிட துன்பம் நல்ல ஆசிரியன். துன்பப்படும் மனமே பிறப்பறுக்கும் வித்தையை நாடும். ஞானிகள் சமுத்திரத்தில் நீந்துபவர்கள் இல்லறமாகிய நதியில் போக்கை அறியாமலா இருப்பார்கள். அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இருந்தால் உலகம் இந்த அவல நிலையை அடைந்திருக்காது. இறை பாதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதர்களுக்கு வழங்கியுள்ளது. நாம் எத்தனை பேர் உண்மையின் பாதையை தேர்ந்தெடுக்கிறோம். எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு செல்வதற்கு. நீங்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்தை நாடுவீர்களா? உங்கள் வேண்டுதலை நிறைவேற்றினால் அது தெய்வம் இல்லையென்றால் கல் அப்படித்தானே. எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தாரால் தாயைத் துறக்க முடிந்ததா? ஆதிசங்கரர் பிரம்மமானாலும் ஆர்யாம்பாளின் பிள்ளை தானே? காகிதத்திற்கு மதிப்பு தந்து நீதானே பணமாக்கினாய் பின் அதையே மூட்டை மூட்டையாக கட்டிவைத்துக் கொண்டு வீட்டை பாதுகாக்கிறாயே ஏன்?

 

உலகாலும் சக்கரவர்த்தியாக இருக்கிறான் நாட்டில் ஒரு குண்டூசி கீழே விழுந்தாலும் அவனுக்கு செய்தி எட்டிவிடுகிறது ஆட்சிக் கட்டிலில் ஏறிய சில மாதங்களிலேயே நோய் பீடித்து இறந்துவிடுகிறானே எப்படி. அப்போது அறிவை விதி வென்றுவிடுகிறது. மனிதன் போடும் கணக்கு தப்பாகிவிடுகிறது. ஆரம்பத்தில் பிறப்பும் நம் கையில் இல்லை அடுத்தடுத்த நடப்பும் நம் கையில் இல்லை. மனிதன் இரண்டுவிதமான வாழ்க்கையைக் கைகொள்ளலாம் ஒன்று இல்லறம் மற்றொன்று துறவறம். இரண்டுமே நல்அறங்கள். எல்லாம் இருக்கின்றவர் துறப்பதற்கும் ஒன்றுமே இல்லாதவர் கெளபீனதாரியாக திரிவதற்கும் வேறுபாடு இருக்கிறது. எல்லாம் இருந்தும் பட்டினத்தார் ஏன் துறந்தார் என்று கேள்வி கேட்டுப் பாருங்களேன். இந்த இயற்கைதான் நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்கள் தாயின் மார்பில் பாலை சுரக்கச் செய்தது. எல்லோரும் பெண், பொன், பொருள் என்று புறத்தே தானே தேடுகிறோம் அகத்தே தேடுபவர் தன்னுள்ளே தீபவிளக்கை ஏற்றிக் கொள்கிறார். அந்த ஜோதியின் வெளிச்சம் அவனுக்கு உண்மையான உலகத்தைக் காட்டுகிறது.

 

நீங்கள், நான் பார்ப்பதெல்லாம் பொய்யான உலகம் அதைத்தான் மாயை என்கிறார் சங்கரர். மாற்றம் அடைந்து கொண்டே செல்வதுதான் உலக இயல்பு. நாம் இறக்கும் வரை உடல்ரீதியிலான வளர்ச்சியும் மனரீதியிலான வளர்ச்சியும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆட்சி மாறுகிறது, காட்சி மாறுகிறது வென்றவர்கள் தோற்கிறார்கள், தோற்றவர்கள் வெல்லுகிறார்கள் எல்லாம் இந்த மாயஉலகத்துக்கான மோதல்கள். உண்மையில் மனமே உலகை சிருஷ்டிக்கிறது. உள்ளே மனம் எங்கிருந்து எழுகிறது என்று பாருங்கள். தோற்றுவாய் தெரியாது. உறக்கத்தில் எங்கே போகிறது உலகம். நித்யமென்றால் இங்கே தானே இருக்க வேண்டும். படக்காட்சி போல் உலகைக் காண்கிறோம் அதோடு நம்மையும் சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். உண்மையில் இங்கே என்ன நடந்து கொண்டு இருக்கிறது. யாருக்கும் தெரியாது. உலகின் நோக்கமே உனக்கு தெரியாத போது நீ ஏன் சிரமப்படுகிறாய் என்கிறார் ஞானி. எவன் படைத்தானோ அவன் பார்த்துக் கொள்ள மாட்டானா. ஸம்பவானி யுகே! யுகே! என்றே சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அதர்மத்தை அழிக்க அவதாரம் தான் வரவேண்டும் என்பதில்லை.

 

யாருக்கு நினைத்தபடி வாழ்வு அமைகிறது. நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்வதைவிட வேறு வழியில்லை. வாழ்க்கை இங்குமங்குமாக நம்மை பந்தாடுகிறது. நாம் கட்டிய கோட்டையெல்லாம் தவிடுபொடியாகிறது. உறவுகளெல்லாம் கண்ணெதிரேயே மறைகிறார்கள். சித்தமே வெடித்துவிடும் அளவுக்கு சித்ரவதை நடக்கிறது. நான் என்ற அகந்தை சம்ஹாரம் ஆனவுடன் தான் சரணடைதல் நிகழ்கிறது. அறிவு கடவுளுக்கும் உனக்குமான தூரத்தை அதிகரித்துவிட்டது. அருணகிரிநாதரைப் பற்றி பேசினால் கட்டுக்கதை காதில்பூ சுற்றுகிறார்கள் என்கிறாய். அதனால் தான் உன் அகந்தை மரித்தவுடன் கடவுள் எதிரே வந்துவிடுகிறார். தெய்வம் மனுஷ ரூப. ஜீவனுடைய இலக்கு முக்தி கடவுள் உங்களை முக்தர்களாக்குவதற்கே மீண்டும் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்கச் செய்கிறார். ஏதாவதொரு பிறவியில் சிதறும் ஞானத்தீப் பொறிகளால் உள்ளுக்குள் பற்றிக்கொள்ள  மாட்டாயா எனக் காத்திருக்கிறார்.

 

கடவுள் கருவில் தங்கும் கர்பத்தை மட்டும் உருவாக்கியதோடு தன் வேலையை நிறுத்திக் கொள்ளாமல் அவரே உன் குருவாக அவதரித்து உன்னைத் கடைத்தேற்ற வழி வகுக்கிறார். ஆகாரம் என்பது உணவு மட்டுமல்ல ஐந்து புலன்கள் வழியாக செல்லும் ஒவ்வொன்றுமே ஆகாரம் தான். பார்ப்பது, கேட்பது, உணர்வது, நுகர்வது, சுவைப்பது என எதன் வழியாக தகவல் சென்றாலும் அதுவும் ஆகாரமே. நல்லதை நாம்தான் தேடிப் போக வேண்டும் கெட்டது நம் வீட்டு வரவேற்பறைக்கே வந்துவிடும். ஜீவகாருண்யம் என்பது புலாலை மறுப்பது மட்டுமல்ல புலன்களுக்கு கடிவாளம் போடுவதுதான். ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு திசையில் செல்வதை தவிர்ப்பது தான். வேட்கையுடன் திரியும் புலன்களை வழிக்கு கொண்டுவருவது தான். நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு புறத்தே அலையும் புலன்களை அகத்தே பார்க்க வைத்தால் ஞானவாசல் திறந்துவிடும். எல்லாம் உனக்குள்ளே இருக்கிறது அதனால் தான் கடவு(உ)ள் என்றார்கள்.

 

எல்லோரும் கோயிலுக்குப் போகிறோம் வணங்குகிறோம் வேண்டுகிறோம். அவர் நமக்கு கொடுப்பதற்கு கடமைப்பட்டவர் என்றே நினைக்கிறோம். மாகாணம் மைய அரசிடம் கையேந்தி நிற்பதில்லையா அதுமாதிரி. புதையலுக்கு மேலே உட்கார்ந்து பிச்சையெடுத்தானே அந்தக் கதைதான். எல்லோரும் எதன் பின்னாடி ஓடுகிறார்களோ அதன் பின்னாடி ஓடுகிறோம். நமக்குள்ளே உள்ளவற்றின் மதிப்பு தெரிவதில்லை அதனை குப்பை என்றே கருதுகிறோம். கல்லும், வைரமும் பூமிக்குள் இருந்து வருபவை. கல்லை அலட்சியப்படுத்துகிறோம் வைரத்தை மோதிரமாக அணிந்து கொள்கிறோம். எதன் பொருட்டு பிறவியெடுத்தோம் என்பதையே மறந்துவிடுகிறோம். பிறருக்கு உபதேசம் செய்ய நமக்கு தகுதியிருக்கிறதா என முதலில் பார்ப்பதில்லை. கனவு நனவானால் வாழ்க்கை இனிக்கும். கனவு நிறைவேறாமல் போனால் வாழ்க்கை கசக்கும். காயம்பட்டவுடன் தான் கடவுளை நினைக்கிறான். கோடிகளில் புரள்பவனிடம் கடவுளுக்கு என்ன வேலை. வீட்டு பூஜை அறையில் ஆளுர விநாயகர் சிலை இருக்கும் ஆனால் மனதில் ஏழைகளின்பால் கருணை இருக்காது. இவன் என்ன தான் கத்தினாலும் பிள்ளையார் இவன் வீட்டு வாசற்படியைக்கூட மிதிக்க மாட்டார்.

 

சுவர்க்கமும், நரகமும் உனக்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு பணமிருக்கிறது என்று பார்த்து வழங்கப்படுவதில்லை. உனது புண்ணிய கணக்கை பார்த்துதான் வழங்கப்படுகிறது. கோயிலுக்கு போ போகாமல் இரு அது முக்கியமில்லை அவன் படைப்பின் மீது அன்பு செலுத்த வேண்டும். அன்பே சிவம். வாழ்க்கையில் வேர்விட்டுவிட்டாய் என்றால் மரணம் அடியோடு சாய்க்கும்போது பெருந்துயரமாக இருக்கும். அதனால் தான் தாமரை இலை தண்ணீர்போல என்றார்கள். எப்போதும் கிளம்புவதற்கு தயாராய் இருக்க வேண்டும். எல்லாம் சுடுகாட்டுப் பிணங்கள் இதையே கட்டிக் கொண்டிருந்தால் எப்படி என்ற எண்ணம் பிறக்க வேண்டும். சுவாசம் உட்சென்று வெளிவருகிறதே அது நம்முடைய கட்டளையையா கேட்டு நிற்கிறது. இதயத்தை இயங்கச் செய்யும் சுவிட்ச் எதுவும் நம்மிடம் உள்ளதா? அப்படி இருந்தால் யாரும் ஹார்ட் அட்டாக்கில் சாக மாட்டோம். அப்போது இங்கு இருப்பது உன் விருப்பத்தினால் அல்ல என்று தெரிய வருகிறது.

 

பக்தி உனது அகக்கண்ணை திறக்க வேண்டும். முருகா என்றவுடன் ஆற்றொழுக்காய் கண்ணீர் கண்களிலிருந்து தாரை தாரையாக வழிய வேண்டும். உடம்பு புல்லரித்து மயிற்கால்கள் குத்திட்டு நிற்க வேண்டும். சகலத்தையும் அவனிடத்தில் ஒப்படைத்துவிடும் துணிவு வேண்டும். எல்லாம் அவன் செயல் என சும்மா இருந்துவிட வேண்டும். யோகம் நான்கு அவை கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், ராஜயோகம். சிவமாக நான்கு வழியிருக்கிறது. இறைவனை வணங்க வேண்டுமென்றால் அண்ணாந்து வானத்தைப் பார்த்துதானே தொழுகிறோம். உடலிலே ஏழு சக்கரங்கள் உள்ளது. முதுகுதண்டிற்கு கீழே உள்ள மூலாதாரம் மேலே ஸ்வாதிஷ்டானத்தைப் பார்க்கிறது ஸ்வாதிஷ்டானம் மேலே மணிப்பூரகத்தை பார்க்கிறது மணிப்பூரகம் மேலே அனாஹதத்தைப் பார்க்கிறது அனாஹதம் மேலே விசுக்தியைப் பார்க்கிறது விசுக்தி மேலே ஆக்ஞாவைப் பார்க்கிறது ஆக்ஞா மேலே சஹஸ்ரஹாரத்தை பார்க்கிறது. சஹஸ்ரஹாரத்தை ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலருடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள். கிழக்கில் பரிதி உதித்தவுடன் தாமரை மலரும். அதுபோலே சஹஸ்ரஹாரம் மேலே ப்ரம்மத்தைப் பார்க்கிறது. இப்போது தெரிந்திருக்கும் கடவுளென்றால் ஏன் மேலே பார்க்கிறோம் என்று.

 

தோல்வி கூட ஒருவனுக்கு குருவாய் அமைந்துவிடுகிறது. அதுவரை தன்னைக் கொம்பன் என்று நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு பேரிடி தலையில் விழுகிறது. வாழ்க்கை ஒரு கண்டிப்பான ஆசிரியன் பாடம் கற்றுக் கொடுத்துவிடும். ஒரு செயலில் முயற்சி கால் பங்கு விதி முக்கால் பங்கு. ரமணமகரிஷிக்கு புற்றுநோய் வந்தது. ஆத்மஞானிக்கு வரலாமா? சிவமாகிவிட்டவரை எப்படி சோதிக்க முடியும், கேள்வி எழுகிறதல்லவா? கொண்டு வந்த பிராரப்த கர்மத்தை இப்பிறவியிலேயே அனுபவித்து தீர்க்கவில்லையென்றால் மிச்சத்துக்காக மேலும் ஒருபிறவி எடுக்க வேண்டிவரும். உண்மையை உணர்ந்தவர்கள் மீண்டும் இந்த உலகுக்கு வர ஆசைப்படுவார்களா? கஷ்டம் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது அவரவர் தகுதிக்கு ஏற்றபடி வருகிறது. ஏழைகளுக்கு ஒருவிதத்தில் பணக்காரனுக்கு வேறொரு விதத்தில். எல்லாம் சிவமென்ற நாயன்மார்களுக்கு தேடி வராத கஷ்டங்களா உன்னை வேரோடு அசைத்துப் பார்க்கிறது.

 

கஷ்டம் சிறுகல் அதை கண்ணுக்கு அருகே வைத்துப் பார்த்தால் பூதாகரமாகத்தான் தெரியும். கவலைப்படுவதால் உங்கள் உயரத்தை ஒரு அங்குலம் அளவாவது உயர்த்த முடியுமா என்ன? சாமானியர்களெல்லாம் பிறந்துவிட்டோம் என்பதற்காக வாழ்பவர்கள் தானே. உலகம் சிக்கலான இயந்திரம் மேற்கொண்டு ஏனய்யா நடத்துகிறீர்கள் என்று நம்மால் கேட்க முடியுமா? கேட்டவர்களுக்கு மட்டும் பதில் கிடைத்ததா என்ன? இங்கே நாம் என்ன சொல்கிறோம் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்போம் அங்கேயும் அதே கதைதான். உடலே பிச்சைப் பாத்திரம் தானே. உலகத்திலேயே பெரிய சுடுகாடு வயிறு தானே. போதும் என்ற திருப்தி வருகிறதா அதற்கு. எல்லாவற்றையும் எரித்துவிட்டு இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறதே. உலகம் யாரையும் சார்ந்து இல்லை. பேரரசர்களும், மகாஞானிகளும் கூட இறந்து தான் போனார்கள். அதனால் உலகம் ஸ்தம்பித்தா நின்றுவிட்டது. இதோ சூரியன் உதித்ததும் காரியங்கள் அததுபாட்டுக்கு நடக்கத்தானே செய்கிறது.

 

நீ பெரியவனா நான் பெரியவனா? எங்க சாமி பெருசா உங்க சாமி பெருசா? உலகத்திலேயே நம்பர் ஒன் பணக்காரர்ன்னு இருக்கலாம். உலகத்திலேயே நம்பர் ஒன் கடவுள்ன்னு இருக்க முடியுமா? கடவுளையும் பணத்தை வைச்சா எடை போடுறது. பசிக்கு சோறு போடுறவன் கடவுளாவே ஆகிவிடுகிறான். உண்டியலில் காசு போடுறவன் கடைசி வரைக்கும் பிச்சைக்காரனாத்தான் இருந்தாக வேண்டும். பிரதிபலன் எதிர்பாராம சோறு போடுறவனுக்கும் பிரதிபலன் எதிர்பார்த்து உண்டியலில் காசு போடுகிறவனுக்கும் வித்தியாசம் இருக்குல்ல. சைவம்ங்கிறது ஒரு தத்துவம், வைணவம்ங்கிறது ஒரு தத்துவம். சைவம் இரண்டல்லாதது என்கிறது எல்லோருமே இறைவன்டா என்கிறது வைணவம் அப்படியில்ல இரண்டானது என்பதில் உறுதியாய் நிற்கிறது. நீ சேவகன் கடவுள் பரமாத்மா ஜீவன்களை ஆட்சி பண்ணுகிற ஒருவர் இருக்கார் என்று அவதாரக்கதைகளை பேசுகிறது. அவருவமோ உருவமோ கடவுள் ஒருவராகத்தானே இருக்க வேண்டும். கிழக்கு திசைக்கு ஒரு கடவுள் மேற்கு திசைக்கு ஒரு கடவுள்ன்னு இருக்க சாத்தியமே இல்லை அல்லவா? அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான சக்தி நம்மை காலத்திலும், இடத்திலும் வைத்துப் பார்க்கிறது ஏன் இந்த திருவிளையாடல் என்று யாருக்குத் தெரியும்.

 

படிப்போமோ, வேலை கிடைக்குமோ, கல்யாணம் நடக்குமோ, குழந்தை பிறக்குமோ தெரியாது தான், ஆனாலும் நமக்கு நடக்குமென்றே நினைப்போம்.  மரணம் சர்வநிச்சயம் என்றாலும் நமக்கு விதிவிலக்கு உண்டென்று நினைத்துக் கொண்டிருப்போம். இறைவனைத் தான் எல்லோருக்கும் தெரிகிறதே. ஈசனுக்கு உன்னைத் தெரிகிறதா என்று பார். பண்டிகையன்று ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். பண்ணையார் வீட்டிலும், ஜமீன்தார் வீட்டிலும் புத்தம்புதிய ஆடைகள், பலகார வகைகள் விதவிதமாக இருக்கும். ஈசன் பண்ணையார் வீட்டு கதவைத்தட்டுவான் என்றா நினைக்கிறீர்கள். ஊருக்கு அவர்கள் பெரியவனாக இருக்கலாம் உள்ளத்தில் சிறியவர்களாயிற்றே. ஏழைவீட்டு கதவைத்தான் தட்டுவான் அதுதான் அன்பு அதுதான் சிவம். அவன் முக்காலத்துக்கும் அதாவது பிறந்த பிறவியிலும், வாழ்கின்ற பிறவியிலும், பிறக்கப்போகும் பிறவியிலும் பொறுப்பை எடுத்துக் கொண்டால் போதாதா.முருகன் ஆறுமுகன் பன்னிருகரத்தவன் திருவடி இரண்டுதான் ஏன் தெரியுமா? பற்றுவதற்கு நமக்கு இருக்கும் கைகள் இரண்டுதானே அதுதான் காரணம்.

 

நாடிதளரும் போதுதான் நாளும், கோளும் புரிய வருகிறது. கடன் கொடுத்தவன் கிட்டி போடுகிறான் உறவையும், நிலையையும் சொல்லி புலம்பினால் விட்டுவிடுவானா? நல்லவனுக்கு நாக்கு சுத்தமாக இருக்க வேண்டும். நம் நாட்டில் பாருங்கள் வல்லவன் என்று சொல்லி பீற்றிக் கொள்கிறார்களே அவர்கள் வாக்கு சுத்தமாக இருக்கிறதா? சுட்டிக்காட்டினால் அரசியலிலும், வியாபாரத்திலும் பொய் பேசினால் தான் போஜனமாகும் என்பார்கள். படிப்பை முடிக்கிற வரைக்கும் நீ முத்துசாமியின் பிள்ளையா இருக்கலாம் ஒண்ணும் தப்பில்லை. ஐம்பது வயது வரைக்கும் முத்துசாமியோட பிள்ளையாவே இருந்தா நீ பிறந்திருக்கவே வேண்டாம். தோன்றின் புகழோடு தோன்றுக என்றான் வள்ளுவன். அப்பன் பெயரை காப்பாத்திட்டான் என்பார்கள். ஒருவயசு வரைதான் நீ முத்துசாமியோட பிள்ளை, இன்னாருடைய அப்பான்னு சொல்லி அவரை சுட்டிக்காட்டும்போதுதான் எம்பிள்ளை தலையெடுத்துட்டான் பிழைச்சிக்குவான் அப்படின்னு அவர் கம்பீரமா தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் நடப்பார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் வள்ளுவனே சொல்லி இருக்கானே வேறு யார் சொல்லணும்.

 

பாதம் தேய்ந்து போக கோயில் கோயிலா படிஏறுனேனே அப்பா முருகப்பா நல்ல பாதை ஒன்றை காட்டக்கூடாதா என பக்தன் வேண்டித் தொழுது நிற்கிறான். கருவறையிலிருந்து அசரீரி கேட்கிறது வெயிலாக இருந்தால் நிழல் தருவேன், இருளாக இருந்தால் ஒளி தருவேன் என்று. போய்க் கொண்டே இருக்கிறான் சொன்னாரே செய்தாரா என திரும்பிப் பார்க்கிறான். இரண்டு காலடி அவனைத் தொடர்ந்து வருகிறது சரி சொன்ன மாதிரியே நம்மை தொடர்ந்து வந்து காவந்து பண்ணுகிறார் என சமாதானம் அடைகிறான். அன்று வியாபாரம் படுத்துவிட்டது கையில நயாபைசா இல்லை பிள்ளைக்கு  உடம்புக்கு நோவு என்ன பண்ணுவது தலைசுற்றுகிறது திரும்பிப் பார்க்கிறான் தொடர்ந்து வந்த காலடியைக் காணோம். என்ன கஷ்டகாலத்துல இப்படி நிர்கதியா விட்டுட்டுப் போயிட்டாரே என கோயிலுக்குள் காலடி எடுத்து வைக்கிறான். அசரீரி கேட்கிறது பக்தா மனக்கலக்கத்தில் மயக்கமுற்றாய் வீழ்ந்துவிடாமல் உன்னைத் தாங்கிய காலடிகள் தமதே என்று. அது தான் இறைவன்.

 

முருகன் அருணகிரிநாதரை சும்மா இரு என்கிறான். சும்மா இரு என்றால் எதையும் செய்யாதே சிலை போலிரு என்றா அர்த்தம். மனம் சும்மா இருக்க வேண்டும். செய்யும் வேலையில் ஊன்றி இருக்க வேண்டும் காரியத்தை விட்டுவிட்டு வேறெங்கோ ஓடக்கூடாது. அப்போதுதான் புறத்தே ஓடும் மனம் அகத்தே திரும்பிப் பார்க்கும். ஜீவன் அறிவை நாடும். ஞானம் எங்கோ இல்லை நீ அலைந்து திரிவதற்கு உன் மனதில் தான் புதைந்திருக்கிறது. திரை விலக வேண்டும். திரைவிலக கதவைத் தட்ட வேண்டும். மகிழ்ச்சி கொண்டாட வைக்குமே தவிர உன்னை உள்ளுக்குள் திரும்ப வைக்காது. அதற்குத்தான் துன்பம். துன்பம் தரும் பரிசே ஞானம். எங்கேயாவது செல்வச்சீமான்கள் ஞானப் பாதையில் நுழைகிறார்களா? பசியை உணராதவனுக்கு உணவின் அருமை தெரியாது. கொடுத்துக் கெடுப்பவனும் அவன் தான். மன்னன்  எழுப்பிய கற்கோயிலை விட்டுவிட்டு பூசலார் எழுப்பிய மனக்கோயிலுக்குள் எழுந்தருளியவன்தானே சிவன். தொழுநோய் கண்ட அருணகிரிநாதரின் உடலை முருகன் தன் பொற்கரங்களால் தாங்கிப் பிடிக்கவில்லையா. வந்துபோகும் இடத்தில்தான் பெண்ணையும், பொன்னையும், மண்ணையும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். 

 

ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஆற்றல் இருக்கிறது, சக்தி இருக்கிறது. விதைக்கு மண்ணைப் பிளந்து வெளிவரும் சக்தி எங்கிருந்து வந்தது. காக்கை போல் நம்மால் பறக்க முடியுமா? தவளையைப் போல் நம்மால் தண்ணீரிலேயே கிடக்க முடியுமா? மனிதன் வானிலையை கணிப்பான் பூகம்பத்தை கணிப்பான் அவனால் இயற்கையை கணிக்கத்தான் முடியும். பூலோகத்தின் சாதாரண பிரஜை தான் மனிதன் பூமியையே சொந்தம் கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டான். கடவுள் எங்கேயும் இருப்பான் என்றால் கல்லிலேயும் இருப்பான் அது தானே தாத்பரியம். நீ இரு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்குகிறாயே அது வெளியே இருக்கும் எதையும் அல்ல உன் ஆத்மாவைத்தான் நீ வணங்குகிறாய். பக்தி, ஞானம் எல்லாம் ஆத்மாவுக்கும் உனக்குமான திரையை விலக்கத்தான். வணங்கப்பட வேண்டியது ஆன்மாவே தவிர வேறெந்த தெய்வமும் அல்ல. எல்லா அறிவும் ஆத்மனை அறிந்து கொண்டால் வந்துவிடும். மனிதனால் எல்லாமே நடத்திக்காட்ட முடியாது. எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடக்கும்.

 

சூழ்நிலை கர்மவினையாலேயே அமைகிறது. நாம் நல்ல நேரம் பார்த்து அலுவலகம் கிளம்புகிறோம் எதிர்ப்படுபவன் யாரென்று விதிதானே நிர்ணயிக்கிறது. வாழ்க்கை ஒரு வாய்ப்பு விதி உன்னை தெருவில் நிறுத்தும் முன்பு அதை நீ புரிந்து கொள்ள வேண்டும். நமக்கான பொக்கிஷத்தை பூலோகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் அதற்கப்புறம் இறைவன் நம்மை அனுப்புகிறான். பொக்கிஷம் அடங்கிய பெட்டியை திறப்பதற்கான சாவி நம்மிடமே இருக்கிறது. ஆனால் இவனென்ன செய்கிறான் தன் உயரம் தனக்குத் தெரியும் என்கிற மாதிரி தனக்குக் கிடைத்ததை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே. இவன் அடுத்தவன் பெட்டியில் என்ன இருக்கும் என்பதிலேயே கண்ணாய் இருக்கிறான். எதிர்த்த வீட்டுக்காரனின் பையன் டாக்டருக்கு படிக்கிறாங்கிறத்துக்காக பனிரெண்டாம் வகுப்பு பாஸாகவே ததிகினதோம் போட்ட பையனைக் கொண்டுபோய் கோட்டையும், ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டி உட்காரென்றால் என்னாகும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. பிறத்தியாருக்காகவே வாழ்கின்றதை எப்போது விட்டுத் தொலைக்கப் போகிறார்களோ?

 

நாயொன்று கட்டுக்காவலை மீறி அரண்மனைக்குள் நுழைந்துவிட்டது. கண்ணாடி மாளிகையில் நாயின் பிம்பம் ஆயிரமாயிரமாய் பிரதிபலித்தது. தன் இனத்தைப் பார்த்தால் குரைக்கும் நாய்தானே குரைக்க ஆரம்பித்தது. செத்து விழும்வரை குரைத்துக் கொண்டிருந்தது. சற்று குரைப்பதை நிறுத்தி என்னவாகிறது என்று அக்கம்பக்கம் கவனித்து இருக்கலாம். நாய்க்கு அது தோன்றாது, நமக்கும் தான். உலகத்தில் பிறரிடத்தில் நீங்கள் அன்பு காட்டினால் அன்பு கிடைக்கும். கருணை காட்டினால் கருணை கிடைக்கும். ஒருவரை அலட்சியப்படுத்திவிட்டு அன்பை எதிர்பார்க்கக் கூடாது. எவ்வளவோ பேர் சாகிறார்கள் எல்லோரையுமா உலகம் ஞாபகம் வைத்துக் கொள்கிறது. இறந்தவர்களுடைய சொந்தபந்தங்களே பத்துநாளில் அவரை தூக்கியெறிந்துவிட்டு பழைய நிலைக்கு திரும்பிவிடுகிறார்களே. எவ்வளவு இடர் வந்தாலும் உண்மையின் பாதையிலிருந்து விலகிக் கொள்ளாதவர்களையே உலகம் நினைத்துப் பார்க்கிறது. இப்படியும் ஒருவன் வாழ்ந்தானா என அவனுடைய சரித்திரத்தை புரட்டிப் பார்க்கிறது.

 

கடவுளிடம் நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். நமக்கு வயது முப்பது என்று வைத்துக் கொள்வோம். முப்பது வருடங்களாக உலகில் தங்குவதற்கு இடம் கொடுத்தான் அல்லவா? முப்பபது வருடங்களாக உயிர் வாழ்வதற்கு தொடர்ந்து உணவு வழங்கி வந்துள்ளான் அல்லவா? மூன்று நாள் உணவு கிடைக்கவில்லை என்பதற்காக முப்பது வருடங்களாக அன்ன ஆகாரம் கொடுத்து இருக்க இடம் கொடுத்து காத்தவனை ஒரே நாளில் தூக்கியெறிந்துவிடுவதா? ஒரு கதையுண்டு அந்த ஊரில் வாழ்ந்த பெரியவர் உயர்ரக குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். அது காணாமல் போனது. ஊர்வாசிகள் நாலைந்து பேர் பெரியவர் வீட்டுக்கு வந்து என்ன நல்லகுதிரையாயிற்றே இப்படி காணாமல் போய்விட்டதே என ஆறுதல் கூறினார்கள். அப்பெரியவர் அலட்டிக்கொள்ளாமல் எல்லாம் அவன் செயல் என்றார். அடுத்த நாள் அந்தக் குதிரை ராஜ வம்ச குதிரையொன்றை கூட்டிக் கொண்டு வந்தது. ஊர்வாசிகள் திரும்பவும் கூடி வந்து பெரியவருக்கு அதிர்ஷ்டம் என்றார்கள். திரும்பவும் அந்தப் பெரியவர் எல்லாம் அவன் செயல் என்று அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்.

 

அடுத்த நாள் அந்த ராஜ வம்ச குதிரை மீதேறி சவாரி செய்த போது தவறி விழுந்து அந்த பெரியவருடைய மகன் வலது காலை உடைத்துக் கொண்டான். ஊர்வாசிகள் கூடி வந்து இப்படி ஆகிவிட்டதே என்றார்கள். அந்தப் பெரியவரோ முகத்தில் சலனமில்லாமல் எல்லாம் அவன் செயல் என்றார். இப்படியாய் இருக்க அந்த நாட்டின் மீது பக்கத்து நாடு போர் தொடுக்க வந்தது. நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் படையில் சேரும்படி அரசர் உத்தரவிட்டார். அந்த ஊரிலுள்ள இளைஞர்கள் அனைவரும் போர் முனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். காலில் அடிபட்டு பின்னமானதால் பெரியவருடைய மகனை படையில் சேர்த்துக் கொள்ளவில்லை. கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கிறது. இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு எல்லாம் அவன் செயல் என்று. உலகில் எல்லா செயல்களும் காரண காரியத்தோடுதான் நடக்கிறது. எது நமக்கு சாதகம் எது நமக்கு பாதகம் என்று நம்மால் முடிவு செய்ய இயலாது. ரயிலில் செல்லும்போது பாரத்தை ஏன் தூக்கி தலையில் வைத்துக் கொள்கிறாய் இறக்கி வைத்துவிடு.

 

ரமணமகரிஷியின் சுலோகத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறேன்

“கிடைக்கும் முன் கடுகேயானாலும்

மலையாக்கிக் காண்பித்து

கிடைத்த பின் மலையேயானாலும்

கடுகாக்கிக் காண்பிக்கும் – மடமனம்”

ஆசைவைப்போம், கனவு காண்போம். அதைப் பற்றியே கற்பனை செய்வோம். இருபத்துநான்குமணி நேரமும் அதன் நினைப்பாகவே இருப்போம். ஆசைப்பட்டது கிடைக்க உயிரை இழக்கக்கூட தயாராவோம். எதிர்பார்த்தது கிடைத்துவிட்டால் மனம் அலட்சியமாக அதை புறந்தள்ளிவிட்டு அடுத்ததை நாடும். அதுதான் மடமனம். ஐம்புலன்களும் மனதை இழுக்கும். கண் பார் பார் என்கும் காது கேள் கேள் என்கும் நாசி முகர் முகர் என்கும் இப்படி புலன்கள் வழியே மனம் ஓடிக்கொண்டிருந்தால், சும்மா இருக்காமல் ருசிகண்ட பூனையாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தால் அதற்கு கடிவாளம் போட்டு கண்களை அலையவிடாமல் நேர்கொண்ட பார்வையாக அமைத்துக் கொள்வது இந்தக் காலகட்டத்துக்கு ரொம்ப நல்லது.

 

ஸத்யம், ஞானம், அனந்தம் – ப்ரம்மம். அதாவது எது சத்தியமாகவும் அறிவு சொரூபமாகவும் எல்லையற்றதாகவும் இருக்கிறதோ அது ப்ரம்மம். வேதங்கள், உபநிடதங்கள் எச்சிலாக்கப்பட்டு விட்டன. எச்சிலாக்கப்படாத ஒரு விஷயம் ப்ரம்மம். சர்க்கரை மலையிலிருந்து எறும்பு ஒரு துணுக்கைத்தான் எடுத்துவர முடியும். சமுத்திரத்தின் ஜலத்தினை கையிலெடுத்து இதுதான் கடலென்றால் அது எவ்வுளவு பொய்யோ அல்லது எவ்வளவு மெய்யோ அதுதான் ப்ரம்மம். இங்கிருப்பது ஒரேயொரு நான் மட்டுமே. நாமெல்லாம் அதாவது பிரபஞ்சமே அவனுடல். ஆகாயமே வெட்ட வெளியே மீனாகவும், விலங்காகவும், மனிதனாகவும் உருவெடுக்கிறது. காலாகாலத்துக்கு என்னென்ன தேவையோ, எதை வெளிக்கொண்டு வரவேண்டுமோ அதனை தானே நடத்துகிறது. நாமெல்லாம் அதன் கருவிகள். நம்மை அது உபயோகப்படுத்திக் கொள்கிறது.

 

ஒரு செயலைச் செய்வதும் செய்யாமலிருப்பதும் நம் வசம் இல்லை. ஆகாசம் நம்மை உந்தித் தள்ளுகிறது. இறை இறங்கி வந்தது அது இராமன். மனிதன் கடவுளாக மேலேறிப்போனான் அது புத்தன். நான் யார்? இந்தக் கேள்வியை கோள்களும், நட்சத்திரங்களும், மலையும், மரமும் தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறது. மூச்சு இருக்கும் வரைதான் பேச்சு. சங்கரன் மாயை என்கிறானே உறக்கத்தில் கனவு காண்கிறோம் சரி. வாழ்வதாகவும் கனவு காண்கிறோமா? பொண்டாட்டியும் பிள்ளைகளும் அறுபது வருட கனவுதானா? வாலிபம் போய்விட்டால் உள்ளுக்குள் அலாரம் அடிக்கிறதே. பாதி கிணறு கடந்தாச்சு, தலை நரைத்துப் போச்சு முக்கால் கிழம் ஆயாச்சி, கண்பார்வை மங்குகிறது, தலை சுற்றுகிறது எமலோகத்தில் சித்திரகுப்தன் தூசுதட்டி நம் ஃபைலை எடுத்துவிட்டான் அதான். ஈசனின் கருணை உள்ளம் தானே மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவித்தன்மையை அளித்தது. எல்லோருக்கும் அவரவர்கள் நல்லவர்கள் தான் நல்முத்துக்கள் தான். உடல் நடுக்கூடத்தில் கிடக்க உயிரை அழைத்துக்போக எமகிங்கரர்கள் வருகிறார்களா சிவகணங்கள் வருகின்றனவா என்பதிலேயே தெரிந்துவிடாதா தான் வாழ்ந்த வாழ்க்கை எப்படிபட்டதென்று. நாம் தான் சொல்லிக் கொள்கிறோம் சிவபதம் அடைந்தார் என்று. என்ன எல்லா ஜீவனுமா சிவபதம் அடைகின்றன!

No comments:

Post a Comment