Friday, January 14, 2022

எனக்கு ஒரு கனவு உண்டு – மார்டின் லூதர் கிங்

 


இந்த இடத்தில் கொந்தளிக்கும் மக்கள் கடல் முன்பு நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன். ஏட்டளவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி நூறாண்டுகள் கடந்துவிட்டது. கிடைத்ததா நம் இன மக்களுக்கு உரிமை. கறுப்பினத்தவரை அடிமையாகக் கருதும் வெள்ளை இனத்தவரின் மனப்போக்கு இன்னும் மாறவில்லை. நிறத்தால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றே அவர்கள்நினைக்கிறார்கள். வெள்ளையர்கள் மட்டும் – என எழுதப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையே அதற்கு உதாரணம். எப்போதும் ஒரு சாரார் சார்பாகவே பூமி சுழலாது. போராட்டம் என்று நாம் வன்முறையை கையில் எடுத்துவிடக் கூடாது. மகாத்மா காந்தி அகிம்சையைக் கைகொண்டதினால்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆயுதம் ஏந்துவது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக் கொடுக்காது. வெள்ளையினத்தவர்கள் மீது தாக்குதலை நிகழ்த்துபவர்கள் போராட்டத்தை வேறு வழியில் திசைதிருப்ப பார்க்கிறார்கள்.

 

எல்லோரும் கடவுளின் புத்திரர்கள் இதில் நிறம் எங்கிருந்து வந்தது. நாடு, மொழி, இனம் என்று பிரிவினை காட்டுவதைவிட தோல் நிறத்தால் ஒருவன் உயர்ந்தவன் என்பதை என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்னாலும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஒருவனின் மதிப்பு குணத்தால் தான் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர நிறத்தால் அல்ல. ஆள்வோர்கள் கூட கறுப்பினத்தவரை குற்றவாளியாக பார்க்கும் மனோபாவம் மாற வேண்டும். பிறப்பால் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று யாரும் இங்கு மார்தட்டிக் கொள்ள முடியாது. எல்லோரும் அன்னையின் வயிற்றில் பத்து மாதம் இருந்துதான் பிறக்கிறோம். இந்த தேசத்தின் வளர்ச்சியில் கறுப்பினத்தவர்களுக்கு பங்கு இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு அரசாங்கமானது நிறப்பாகுபாட்டை முன்வைத்து ஒரு இனத்தின் மீதே அக்கறை இல்லாமல் நடந்து கொள்டால் நாங்கள் என்ன செய்வது.

 

அமெரிக்கா சுதந்திரமடைந்த போது இந்த தேசம் வெள்ளையர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றா அரசாணை வெளியிட்டீர்கள். அமெரிக்க விடுதலை போரில் கறுப்பினத்தவர்கள் இரத்தம் சிந்தவில்லையா என்ன? எங்களை ஆள்வோர்களை நாங்கள் தீர்மானிக்கக் கூடாது என்பதால் தானே கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமையை நீங்கள் வழங்கவில்லை. அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். தோட்டாக்களுக்கு பயந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. செய் அல்லது செத்து மடி இதுவே எங்கள் முடிவு. எப்போது கடவுள் வானத்திலிருந்து இறங்கி வந்து சொன்னார் வெள்ளையர் மட்டுமே எனது குமாரரர்கள் என்று. வெள்ளை இனத்தவரின் கடவுள் கருப்புத் தோலைக் கொண்டிருந்தால் உடனே எல்லா வெள்ளைஇனத்தாரும் சேர்ந்து அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வீர்களா? சிறகு இருப்பதே பறப்பதற்காகத்தானே. வானம் விசாலமானது தனிப்பட்டவர்களுக்கு மட்டும் என இந்த உலகை யாரும் சொந்த கொண்டாட முடியாது. நான் இப்போது இங்கு நின்று பேசுவது வெள்ளை மாளிகையின் வேர்களையே அசைத்துப் பார்க்கும்.

 

நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் ஒடுக்கப்பட்ட இனம் ஒருநாள் விஸ்வரூபம் எடுக்குமென்று. குட்ட குட்டக் குனிவது இனி நடக்காது. நாங்கள் இந்த அமெரிக்க நாட்டின் பங்குதாரர்கள். எங்களது உரிமைகளை நாங்கள் போராடிப் பெறுவோம். ஒரு சிறுதீப்பொறி காட்டையே அழித்துவிடப்போகிறது. உரிமையைப் பெறும்வரை இந்தப் போராட்டம் ஓயாது. மழையைத் தருவதே கருமேகங்கள் தானே. கருவண்ணம் என்பதற்காக இரவு வானத்தை வெறுத்துவிடுவோமா? சட்டம் எல்லா மக்களையும் சமமாக நடத்து வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளிடம் கறுப்பின வெறுப்பை நஞ்சாக ஊட்டி வளர்க்கக் கூடாது. கோஷமிட்டுவிட்டு அடங்கிப் போய்விடுவார்கள் என எண்ணாதீர்கள். அநீதிக்கு எதிரான இந்தப் போர் என்னோடு முடியப்போவதில்லை. வாழ்ந்தால்  ஆறரை கோடி முழுமையும் வாழ்வோம் வீழில் ஆறரைகோடி முழுமையும் வீழ்வோம். கனன்று  கொண்டிருக்கும் எரிமலை ஒரு நாள் நெருப்பை கக்கியே தீரும்.

 

கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காக தூக்குகயிற்றை முத்தமிடவும் நான் தயாராக இருக்கிறேன். அலைகளை தடுத்துவிடலாம் ஆழிப்பேரலையை. எனக்கு ஒரு கனவு உண்டு. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் சர்ச்களில் வெள்ளைக்காரர்களுக்கு சரிசமமாக கறுப்பினத்தவரும் அமரும் நிலை வரும். ஆள்வோர்களைத் தீர்மானிக்கும் வாக்குரிமை எங்களுக்கு கிடைக்கும். வல்லாதிக்க அமெரிக்க நாட்டினை ஆள்வதற்கு ஒரு கறுப்பினத்தவர் புறப்பட்டு வருவார். இன்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக நான் விடுக்கும் இவ்வுரை ஒவ்வொரு போராட்டக் குழுவுக்கும் வேதமாகும். எனக்கு ஒரு கனவு உண்டு. ப்ராட்டஸ்டாண்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே சகோதரத்துவம் மலருமென்று. எனக்கு ஒரு கனவு உண்டு. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பினத்தவர்கள் மீது காட்டும் வெறுப்பு ஒருநாள் அன்பாக மாறுமென்று. அமெரிக்க நாட்டின் முதுகெலும்பாக கறுப்பினத்தவர்கள் வரும் காலங்களில் கருதப்படுவார்களென்று. வெள்ளை இனத்தவர்கள்  கறுப்பினத்தவர்களோடு கைகுலுக்க தயக்கம் காட்ட மாட்டார்களென்று. எனக்கு ஒரு கனவு உண்டு. இந்த உலகில் கறுப்பினத்தவரை இரட்சிக்க ஒரு தேவதூதன் தோன்றுவானென்று.

 

வருங்காலங்களில் கறுப்பினத்தவர்களிடையே வரலாற்று நாயகர்கள்  உருவாகி வருவார்களென்று. மகாத்மா காந்தி போல நாமும் அகிம்சையை ஆயுதமாக்கிக் கொள்வோம். துப்பாக்கிகளுக்கு துப்பாக்கிகளாலேயே பதில் சொல்லும் தேசம் அகிம்சைக்கு தலைவணங்கியே தீரும். நான் இங்கு விதைத்தது வருங்காலங்களில் விருட்சமாகும். சிக்கிமுக்கி கற்களில் நெருப்புப்பொறி ஒழிந்துள்ளது என நான் நிரூபித்துவிட்டேன். நாளை நாடுமுழுவதும் சுதந்திரத்தீ பற்றி எரியப்போகிறது. எனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு எல்லா கறுப்பினத்தவர்களும் வீதியில் இறங்கி போராடப்போகிறார்கள். இன்று இங்கு நான் காணும் எழுச்சி நாளைய அமெரிக்க நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடும். எனது கனவு நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

No comments:

Post a Comment