Showing posts with label கண்ணன். Show all posts
Showing posts with label கண்ணன். Show all posts

Wednesday, June 5, 2024

ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் கண்ணன் குழல் ஊதுகிறான்

 


காற்று சங்கீதத்தை சுமந்து வருகிறது. எல்லா மரங்களும் அதற்கு மயங்குகிறதா என்ன? வீணையின் நாதத்தில் நாம் மயங்கினால் நாம் எங்கே இருக்கிறோம் என்பதையே மறந்துவிடுகிறோம். எண்ண அலைகள் அடங்கி மனம் ஆழ்கடல் ஆகிறது. சாதாரண பசும்பால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டவுடன் பிரசாதமாகிறது. சாதாரண நடை பிரகாரத்தைச் சுற்றும் போது பிரதட்சணம் ஆகிறது. சாதாரண சொற்கள் புரோகிதர்களிடமிருந்து எழும்பும்போது மந்திரங்கள் ஆகிறது. ஆரத்தியை தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்கிறோம். அதுவும் கருவறையிலிருந்து வந்துள்ளது, நாமும் கருவறையிலிருந்து வந்துள்ளோம். மணியோசையானது மனதை ஒடுங்கச் செய்கிறது. திருநீறு மனமே நானும் ஒருநாள் சாம்பாலாக வேண்டியதுதான் ரொம்பவும் ஆட்டம் போடக்கூடாது எனத் தெளிய வைக்கிறது.

 

குங்குமமோ எல்லோருடைய உடலிலும் இந்த நிறத்தில் தான் இரத்தம் ஓடுகிறது இதில் யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர் என்ற தத்துவத்தை விளக்கி நிற்கிறது. கோபுரம்தாங்கிகள் கோபுரத்தை தாங்குவதில்லை. அதே போல் இறைவன் தான் வாழ்க்கைப் பாரத்தைச் சுமக்கிறான் என்றுணர்த்துகிறது. துவாரபாலகர்கள் முக்கியஸ்தர்களின் வருகையை மூலவரிடம் சொல்லாது உண்மையான பக்தனின் வருகையை மூலவரிடம் போய் சொல்லி மகிழ்கின்றன. எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது போல் கலசங்கள் எப்போதும் உச்சியில்தான் வைக்கப்பட்டு இருக்கின்றன. பக்தர்களை காப்பாற்றுவதற்காக சுவாமி பல கரங்கள் கொண்டுள்ளார் ஆனால் சரணடைபவர்களுக்கு எளிதாக அவர் திருப்பாதம் ஒன்றே.

 

ஹம்பியில் இருந்து புவனகிரிக்கு வந்தாலும் வேதங்கள் சொல்லிக் கொடுத்தும் குடும்பத்துக்கு தேவையான பொருளீட்ட முடியவில்லை மூன்று குழந்தைகளின் தகப்பனான திம்மண்ணருக்கு. கடைசியில் வேங்கடநாதனைப் பார்த்துக் கொண்டே அவர் உயிர் பிரிந்தது. திம்மண்ணரின் மூன்றாவது மகன் திருப்பதி வேங்கடவனின் அருளால் பிறந்தவனாயிற்றே. திம்மண்ணர் பொருளீட்டி வைக்கவில்லை சந்ததிக்கு அருள் சேர்த்து வைத்திருக்கிறார் அல்லவா? அவர் செய்த புண்ணியம்தான் ஏழை வேங்கடநாதனை நாராயணன் ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வைத்திருக்கிறது. நாவில் சரஸ்வதி நடனமாடும் வேங்கடநாதனுக்கு இல்லறைத் துணைவியாக சரஸ்வதி என்ற பெண்ணே வாய்த்தாள். மகனை பிறக்க வைத்து வம்ச விருத்திக்கு அனுகூலம் செய்த இறைவன் சாப்பாட்டுக்கு வழி செய்யாமல் சோதிக்க ஆரம்பித்துவிட்டான். ஜீவனத்துக்கே கையேந்துபவர்களுக்கு யார் கடன் கொடுப்பார்கள். வேங்கடநாதன் தனது குருவான ஸ்ரீசுசீந்திர தீர்த்தரிடம் சென்று தனது நிலையை எடுத்துக் கூறி சிறிது பணம் பெற்று வந்தார். பிறரிடம் யாசித்து உடலை வளர்ப்பது கேவலமான காரியமாக இருந்தது வேங்கடநாதனுக்கு.

 

குரு சுசீர்திரருக்கு உடம்பு படுத்துவிட்டது. புவனகிரிக்கு ஆள்விட்டு கூப்பிட்டு அனுப்பினார் வேங்கடநாதனை. படுக்கையிலிருந்தபடியே எனக்குப் பிறகு மத்வபீடத்தின் தலைமைப் பொறுப்பை நீதான் ஏற்க வேண்டும் என்றார். என்னை நம்பியே இருக்கும் இரு ஜீவன்களின் கதி  என்றார் வேங்கடநாதர். வேங்கடநாதா நாராயணன் அவர்களை கரைசேர்க்க மாட்டானா என்றார். சிறுபிள்ளைக்கு தந்தையாக இருந்து எந்தவொரு நல்லகாரியத்தையும் அவனுக்கு நான் செய்து வைக்கவில்லையே என வருந்தினார் வேங்கடநாதர். மனைவியிடம் சொல்லிக் கொள்ள வேண்டாம் மகனுக்கு உபநயனம் செய்துவிட்டு இங்கு வந்து சேர் என்றார் சுசீந்திரர். புவனகிரிக்கு சென்று வந்து மத்வ மடத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சில தினங்களிலேயே சுசீந்திரர் மறைந்தார். அது முதற்கொண்டு வேங்கடநாதர் ராகவேந்திர தீர்த்தர் என அழைக்ப்பட்டார். தனது கணவர் துறவு பூண்டதை அறிந்த சரஸ்வதி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். பேயுருவாக அலைந்து கொண்டிருந்த சரஸ்வதியை தன் பக்திப் பிரவாகத்தால் நற்கதியை அடைய வைத்தார். உடுப்பி, பண்டரிபுரம், கொல்லாபுரம், கர்நூர் என தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ராகவேந்திரர் ஆசாதோனி என்னுமிடத்திற்கு வந்தபோது தான் சித்தியடைய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார்.

 

கூடியிருந்த மக்களிடமும், சீடர்களிடமும் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பூமியில் மதிப்பிருக்கிறதோ இல்லையோ நாராயணன் இருக்குமிடத்தில் வைகுண்டத்தில் மதிப்பிருக்கும். நீங்கள் எல்லோரும் என் கண்களுக்கு நாராயணனாகவே தெரிகிறீர்கள். இந்த மரம் வீழப்போகிறது ஆனால் இந்த மரத்திலிருந்து வந்த விதையால் விருட்சமானவைகள் இந்த உலகில் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வியாபித்திருக்கும். பல தீர்த்ததலங்களுக்கு சென்று வந்த இந்த திருவடி இன்று ஓய்வுகொள்ளப் போகிறது. அகத்தில்  உண்மையைத் தேடுபவர்களுக்கு அந்த நாராயணன் என்னும் நெருப்பு பற்றிக் கொள்ளும். பிறரிடம் அபகரித்து அனுபவிப்பது எதுவும் தன்னைத் தானே கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும். வாழ்க்கை நதி ஓடிக் கொண்டேயுள்ளது என்றாவது ஒருநாள் கடவுளுடன் சங்கமித்து தானே ஆகவேண்டும்.

 

வாழ்க்கையில் சிறிதளவாவது சத்தியத்தைக் கடைப்பிடித்தால் மரணத்தை பயமில்லாமல் எதிர் கொள்ளலாம். வெட்ட வெளிதான் நிஜம் இந்த உடல் தோன்றி மறையக் கூடியது. எந்தவொரு நீர்க்குமிழியும் கடலுக்கு ஒரு பொருட்டே அல்ல. நாராயணன் எதற்கு முக்கியத்துவம் தருவான் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவனின் வயிற்றுப் பசியைத் தீர்க்க உணவளிக்கும் ஒருவனே அந்த நேரத்தில் அவனுக்கு கடவுள். நாராயணனின் படைப்பின் மீது இரக்கம கொள்ளாத நீங்கள் அவனிடம் பக்திபூண்டிருப்பதாகச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இங்கே எதுவும் சுயமாக பிரகாசிப்பதில்லை எல்லாமும் சூரியனிடமிருந்து வெளிச்சத்தை எடுத்துக் கொண்டவைதான். மேகத்தால் எத்தனை நாட்களுக்கு சூரியனை மறைத்து வைத்திருக்க முடியும். சத்தியம் ஒளியுடலைக் கொடுக்கும் அந்த ஒளியுடல் பூமியில் வெகு  நாட்களுக்கு இருந்து கொண்டிருக்கும்.

 

ஏற்றத்தின் போது தன்னைக் கர்த்தாவாக்கிக் கொள்வதும் இறக்கத்தின் போது கடவுளைக் குறைகூறுவதும் வேண்டாம். உருவத்தை மனிதர்கள் பார்ப்பார்கள் உள்ளத்தை இறைவன் பார்ப்பான். இந்த அந்தகார இருட்டில் சிறு அகல்விளக்கை நான் ஏற்றிச் செல்கிறேன் அது உங்களுக்கு வழிகாட்டும். இந்த உடல்தான் மண்ணோடு கலக்கப் போகிறது நான் என்னை நினைப்பவர்களின் நெஞ்சத்தில் வாழ்ந்திருப்பேன். இந்த உலகில் என் சரீரத்துக்கு வயது 100 ஆண்டுகளும், எனது சரிதம் புத்தகமாக 300 ஆண்டுகளும், எனது பிருந்தாவனம் கீர்த்தி பெற்று 700 ஆண்டுகளும் இப்பூவுலகில் நிலைத்திருக்கும். ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய.