Wednesday, March 21, 2018

அம்மா


பால்யநதியிலிருந்து நாமெல்லோரும் விருப்பமில்லாமல் தான் கரையேறுகிறோம். பிறந்தவுடன் கிடைக்கும் அம்மாவின் கதகதப்பைத் தான் இறுதி வரைத் தேடுகிறோம். பொத்தி பொத்தி வளர்ப்பவள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை. பால்ய நினைவலைகள் அவ்வப்போது வந்து நம் கால்களை நனைக்கிறது. பால்ய மனவெளியில் எண்ண மேகங்கள் அணிவகுத்து வருவதில்லை. அழுது கொண்டே பிறக்கும் குழந்தைக்குத் தெரியாது அம்மா, அப்பா என்கிற இரண்டு தேவதைகள் தனக்காக காத்திருக்கிறார்கள் என்று.

குழந்தைகள் வெற்றுக் காகிதமாகத் தான் இப்பூமிக்கு வருகை தருகிறார்கள். சமூகம் என்ற நான்கு பேர் அந்தத் தாளில் கிறுக்குகிறார்கள். சலனமற்ற பால்யநதியில் ஆகாயம் பிரதிபலிக்கிறது. தண்ணீரில் குதித்து அதனைக் கலங்கடிப்போராகத்தான் சமூகம் இன்றளவும் இருக்கிறது.

வாழ்க்கை எனும் வேதாளம் தோளில் ஏறிக்கொள்ளும் முன் அவன் இப்பொதுதாவது நிம்மதியாகத் தூங்கட்டும் என்று அவனைத் தாலாட்டுகிறது இயற்கை. தும்பியைப் பிடித்து இறக்கையை பிய்த்து எறிவதில் அப்படியொரு ஆனந்தம். பால்யம் சிறகுகளைத் தருகிறது சமூகம் அதை முடமாக்கி வேடிக்கைப் பார்க்கிறது.

பால்யவனத்தில் பட்டாம்பூச்சியாய்த் திரிந்ததை நினைத்துப் பார்க்கிறேன். பால்ய மொட்டுக்கள் தாங்களே தான் இதழ் விரிக்க வேண்டும். சிப்பிகள் ஒருபோதும் பனித்துளியை பாரமாக நினைக்காது. பால்ய நினைவுகள் படமாக மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. சடங்குகளை உயிராகக் கருதும் சமூகம் சாத்தானாகவே செயல்படுகிறது.

ரத்தத்தை பாலாக ஊட்டும் அம்மாக்களுக்கு என்றுமே தன் பிள்ளை ராஜ்யமில்லாவிட்டாலும் ராஜாதான். உடல் வாகனையை வைத்தே ஒவ்வொரு குழந்தையும் அம்மாக்களை அடையாளம் கண்டு கொள்கிறது. அம்மா எடுத்துத் தந்த கூழாங்கல்லை இன்றும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது. அம்பாரி ஏற பேத்தி வந்துவிட்டாலும் என்னைப் பற்றிய கவலையிலேயே சோர்ந்து போகிறாள். என் இயலாமையை குத்திக் காட்டாமல் நேரம் வந்துதுண்ணா எல்லாம் கூடி வரும் என்பாள். இன்னும் நான் சொந்தக் காலில் நிற்கவில்லை என்றாலும் இன்றும் என்னைக் கேட்டு கேட்டுத் தான் சமைத்துப் போடுகிறாள். அம்மா இருக்கும் வரை அவளின் சேலைத் தலைப்பில் தான் நாமெல்லாரும் ஒளிந்து கொள்கிறோம். அவள் மேனியில் சுருக்கங்கள் விழுந்திருந்தாலும் இன்றும் எனக்கு அவள் தேவதையாகத் தான் தெரிகிறாள்.

No comments:

Post a Comment