பிணத்தின் மீது காசை விட்டெறிந்து போவதைப் போலத்தான் எங்களுக்கு பிச்சையிடுகிறார்கள். வானக் கூரையின் கீழே தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். விசேஷ நாட்களில் கோயில் வாசலே எங்களுக்கு கதி. கையேந்துபவன் மரக்கட்டைதான். சுயக்கொலை செய்து கொள்ளாமல் யாராலேயும் கையேந்த முடியாது. என்னோட நொண்டி, நொடமானவனெல்லாம் பிச்சை எடுக்கிறான். இவனுக்கு கால்,
கையை ஊனமாக்காம வயித்தை ஊனமாக்கியிருந்தான் அந்தக் கடவுள்னா இந்த நிலைமைக்கு அவன் வந்திருப்பானா?
கவலையைப் போக்கும் அருமருந்தாக நான் சிகரெட்டைத்தான் நினைக்கிறேன். பாம்பு கடிச்சாக் கூட நான் பயப்படமாட்டேன், இந்த மனுசப் பயல்களின் வாயிலேர்ந்து வர்ற வார்த்தை இருக்கே. ஆத்துல ஓடுற தண்ணீர் கூட எங்களைத் தீண்டுவதற்கு யோசிக்கும். எஜமானனுக்கு சேவகம் செய்ற நாய் எங்களைக் கண்டால் துரத்தும். எங்களுக்கு காசு போடுறவன் எப்படி சம்பாதிக்கிறான்னு யாருக்குத் தெரியும்.
கொஞ்ச நாளா சிறுக்கி மவ ஒருத்தி நான் போற இடத்துக்கெல்லாம் வந்துர்றா. அவ மடியில கிடக்கிற புள்ளைய பார்த்துட்டு மவராசனுங்க அவ திருவோட்டை நிரப்பிட்டுப் போறானுங்க. பிச்சைக்காரனுக்கு பொறந்தவன் அம்பானி ஆவணும்னு ஆசைப்பட்டா நடக்குமா? வாழ்ற வரைக்கும் வயித்துல இருக்குற நெருப்பை அணைக்க அல்லாடுறோம் அப்புறம் தீயில எரிஞ்சி சாம்பலாவுறோம்.
இந்த ரோட்டைக் கடக்க எவ்வளவு கஷ்டமாயிருக்கு. கீ கொடுத்த பொம்மை மாதிரி மனுசப்பயலுங்க அங்கேயும் இங்கேயும் போறானுங்க. மனுஷனுக்கு எங்க இப்ப மதிப்பிருக்கு எல்லாம் பணம் தான். எந்த வழியிலயாவது பணத்தை சம்பாதின்னு சொல்லிக் கொடுத்து தான் சின்ன புள்ளையிலேர்ந்து வளக்குறானுங்க. சொந்த பந்தந்தான் சிக்கலே. சிலந்தி வலையில சிக்குற இரை போலத்தான் நாம.
அப்படித்தான் அந்தச் சிவன் பண்ணி வச்சிருக்கான்.
கோயில்ல அன்னதானத்துக்கு டோக்கன் தருவானுங்க. வயிறு நிரம்பின உடனே ஒரு திருப்தி வரும் பாருங்க அதுதான் கடவுள்னு நினைக்குறேன். இந்த உலகத்தை சாட்சியாய் இருந்து பார்க்கிறதுல ஒரு சுகம் இருக்கு. நாங்க மனுசப்பயலுங்ககிட்ட கையேந்துறோம், அவனுங்க சாமிகிட்ட பதவி உயர்வு, குழந்தை பாக்கியம்னு கையேந்தி நிக்கிறானுங்க.
பக்தியை வளர்க்கிறேனு சொல்லிகிட்டு காவி கட்டிகிட்டு அதையும் காசு பண்றானுங்க. இந்தக் காலத்துல கோயில்லேயும், ஆஸ்பத்திரிலேயும் தான் கூட்டம் அதிகமா இருக்கு. மனுசனை கூறு போட்டு ஆராய்ஞ்சவங்க சிவன், அவன் கிடுக்கி போடுறான் அம்மா, ஆத்தான்னு கத்துனா கேப்பானா? மனுசனுக்கு ஆசைங்க செவத்த தோலுக்கு, பணங்காசுக்கு. ஆசைய அடக்கினா சிவனாயிடுவோம்னு தெரியாதப் பயலுங்க சாவுகிராக்கிங்க.
தூங்குறப்ப இந்த உலகம் இருக்காங்க. பகல்ல மட்டும் தான் இருக்குதுனா அதுக்கு ஏங்க முக்கியத்துவம் கொடுக்குறோம். கனவு காணும்போது நிசம் போல இருக்குதுங்களா. கண் விழிச்சதுக்கப்புறம்தானேங்க கனவுன்னு தெரியுது. வாழ்க்கையே கனவுதான்னு சித்தர் சொன்னதை கேட்குறீங்களா நீங்க. உங்க சங்காத்தமே வேணாண்ணு தானேங்க ஒதுங்கி மலைல போய்ச் சித்தருங்க வசிக்கிறாங்க. அங்கயும் போய் பணம் பணம்னா வேறெங்கங்க அவங்க போவாங்க.
நான் விருப்பப்பட்டு பிச்சைக்காரனா ஆவுலங்க. என் ஜாதகத்துல சந்நியாச யோகம் இருக்குண்ணான், அதான் என் தலையெழுத்து இப்படி ஆகிப்போச்சு. கண்ணை மூடி கொஞ்ச நேரம் அமைதியா இருந்து பாருங்க முடியுதுங்களா? உள்ளுக்குள்ள புதையல் இருக்குங்க வெளி விஷயத்துல மனசை ஏன் அலையவிடறீங்க? சாவைக் கண்டு எனக்கு பயமில்லீங்க ஏன்னா நான் தனியாகத்தானேங்க அலையறேன். மனுசப்பயலுங்க வாயை வளத்துட்டானுங்க அவனுங்களால பேசாம இருக்க முடியாது. வாயாலதான் வளர்ந்து நிக்கிறானுங்க பேமானிங்க.
இந்த உடம்பே அவன் கடனா கொடுத்தது தானுங்க. நீங்க போடுற ஆட்டத்தையெல்லாம் அவன் பார்த்துக்கிட்டுத் தானுங்க இருக்கான். நெஞ்சை நிமித்தி நிற்கிறவனுங்க எல்லாம் அவன் காலுல விழுந்தாவனுமே அப்ப என்ன பண்ணுவானுங்க. உடம்பு விழுந்திடக் கூடாதுன்னு தாங்க பிச்சையெடுக்கிறேன். மனசுக்கு தீனி போட்டனா எத்தனை தடவை பிறக்குறதுங்க இங்க.
மனுசனுக்கு நாக்குல விஷம் இருக்குங்க. வார்த்தையை விடும்போது யோசிக்கிறதே இல்லங்க அவன். அகந்தை இருக்கிற வரைக்கும் மனுசனால கடவுள் இருக்கிற திசையில கூட திரும்ப முடியாதுங்க. புலன்கள் வழியே மனசை செலுத்திக்கிட்ட இருந்தோம்னா முடிவு பயங்கரமாயிருக்குங்க. மனசோட லகானைப் புடிச்சி இழுக்கலேனா அது ஊர் மேயத்தாங்க போவும். சொல்லித் தெரியறது இல்லீங்க பட்டாத்தான் புரியும் போங்க.
அருணகிரிநாதரை ஏன் புள்ள பாடவைச்சான்? பட்டினத்தாரை ஏன் அப்பன் கரும்போட ஓடவைச்சான்? மனம் தாங்க படம் காட்டுது. நடிங்க வேணாங்கலை, பாத்திரத்தோட ஒன்றிப் போயிட்டா எப்படிங்க? ஆத்மா இருக்கோ இல்லையோ அதப் பத்தி பேச வேணாங்க. மரணத்தை எதிர்கொள்றதுக்கு தயாராயிட்டீங்களான்னு உங்களையே நீங்க கேட்டுப்பாருங்க. எல்லாரும் எண்பது வயசு வரை வாழ்றது இங்க நிச்சயமில்லீங்க.
நட்சத்திரமெல்லாம் கண்ணுதானுங்க அது உங்களையே பார்த்துகிட்டு இருக்கிறதா தோணலை. நாலு பேரு இருக்கிற மட்டும் நல்லவனா நடிச்சா எப்படிங்க. மனசை மனுசன் கோயிலாவா வச்சிருக்கான், குகையாத்தாங்க வச்சிருக்கான். சமயம் பார்த்து வேட்டையாடுற விலங்காத்தாங்க அவன் இன்னும் இருக்கான். வேஷத்தை கலைச்சதுக்கப்புறம் இன்னொரு உடம்புக்கு ஆளாப்பறந்தா எப்படிங்க.
சிவன் யாருக்காவது விதிவிலக்கு அளிச்சான்னு கேள்விப்பட்டிருக்கீங்களாங்க. விதி வாழ்க்கையில எப்படியெல்லாம் விளையாடுது பாருங்க. எனக்கு தவறு செய்ய வாய்ப்பு இல்லீங்க, அப்படினா சந்தர்ப்பம் கிடைக்கிறவன் தவறு செய்யலாம்னு அர்த்தமாங்க.
கடவுளே விரும்பினாலொழிய அவன் தரிசனம் பெற முடியாதுங்க. கத்தி கூப்பாடு போடுங்க அவன் இறங்கிவரானானு பார்ப்போம். நாங்க மட்டும் பாவப் பிறப்பாங்க. எல்லோருக்கும் முடிவு ஒண்ணு தானுங்களே. எரிச்சாலும், புதைச்சாலும் கடைசியிலே மண்ணுக்கு இரையாகத் தானே போறோம்.
கடவுளுக்கு பணத்தால அபிஷேகம் பண்றதுனால பாவக்கணக்கு தீர்ந்துபோயிடுமாங்க. வினைப் பயனை அனுபவிக்கத்தாங்க உடலெடுக்கிறோம். இயேசு, புத்தரெல்லாம் அன்பை தானே போதிச்சாங்க. இப்ப போய் மேடையேறி அகிம்சையை பிரசாரம் பண்ணினா பைத்தியம்னு சொல்ற கூட்டங்க இது. அதிகாரத்துல உள்ளவங்க வன்முறையைப் பயன்படுத்தி தங்களோட காரியத்தை சாதிச்சிக்கலைன்னு சொல்லுங்க பார்ப்போம். நாடு எங்கங்க போய்க்கிட்டு இருக்கு. மனுஷன் ஏங்க மனுசனா இருக்க மாட்டேங்கிறான். ஓங்குற அரிவாள கழுத்தில இறக்க எப்படிங்க மனசு வர்றது.
திருவள்ளுவலேர்ந்து எல்லோரும் சொல்லிட்டுத்தானே போயிருக்காங்க. நேத்தி இருந்தவன் இன்றில்லை. அழியப் போற உடம்பைச் சொந்தம் கொண்டாட சண்டை போட்டுக்காதீங்க. ராமன் ஏகபத்தினிவிரதன் அப்படிங்கிறதுனால தாங்க கோயில் கட்டி கும்பிடுறோம். ராமனை கும்பிட்டுட்டு இராவணனா ஏன் நடந்துக்கறீங்க. எத்தனை மகான்கள் இருந்த பூமிங்க இது. அவங்களை கும்பிடச் சொல்லித்தானுங்களே உங்களை வளர்த்தானுங்க.
பட்டினத்தார் ‘பிறந்த இடத்தை தேடுதே பேதை மனம்
கறந்த இடத்தை நாடுதே கண்’ என்று ஏன் பாடிவச்சான்னு எண்ணிப் பாருங்கங்க. வாழ்க்கைங்கிறது கண்ணாடிப் பாத்திரம் மாதிரிங்க உடைச்சா ஒட்ட வைக்க முடியுமாங்க. வெறும் தோல் விவகாரத்தால வாழ்க்கையை இழந்துடாதீங்க. நான் பிச்சைக்காரன் தாங்க ஒரு விதத்துல நான் சக்கரவர்த்திங்க. உங்க வேலைவெட்டிக்கு நடுவுல என்னையத் தேடி கோயில் கோயிலா அலையாதீங்க. ‘உனக்கு நீயே ஒளியாய் இரு’ன்னு புத்தர் தானுங்களே சொல்லிட்டு செத்துப் போனது. கோயில்ல உள்ளது சாமியா? கல்லான்னு அவரைக் கேளுங்க சொல்லுவாறு. நீங்க கத்துக்கிற மனநிலைல இருந்தா இந்தப் பிச்சைக்காரன்கிட்டக் கூட பாடம் படிக்கலாம்ங்க. இந்த வாழ்க்கைய நிஜம்னு நினைச்சி உடும்பாப் புடிச்சிக்காதீங்க. உங்க ஊருல சுடுகாடு இருக்குங்களா? சிதை எரியிறதை ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்துண்டு வாங்க போங்க!
No comments:
Post a Comment