எந்த தந்தையும் தன் மகன் கவிஞனாயிருப்பதை
விரும்ப மாட்டார்கள். மிருகத்துக்கு பிறந்தால் வேட்டையாட தெரிந்திருக்க வேண்டும். நீ
என்னைக் கைப்பிடித்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சினிமா தியேட்டருக்கு அழைத்துச்
செல்வாயே திரும்பும் போது ஆரஞ்சு சுளை மிட்டாயை வாயில் அதப்பிக் கொண்டு திரும்புவேனே,
இப்போது இந்த வரிகளை நீ படித்தால் அப்போது வாழ்க்கை இனித்தது இப்போது கசக்கிறதா
எனக் கேட்பாய். வாழ்க்கை கூட சினிமா படம் போல இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
உன் சம்பாத்தியத்தில் வளர்ந்த நான் இதுவரையில்
உன்னைக் கொண்டாடியதில்லை. எங்களுக்கு நிம்மதியான தூக்கத்தைத் தந்துவிட்டு நீ படுக்கையில்
புரண்டு கொண்டிருக்கிறாய். எனக்கு பைக் வாங்கி கொடுத்துவிட்டு நீ இன்னும் சைக்கிளிலேயே
செல்கிறாய்.
நீ இருக்கிறாய் என்கிற தைரியத்தில் தான்
வாழ்க்கைக் கடலில் கால் நனைத்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னை படிக்க வைக்க தயாராய்
இருந்தாய் நான் தான் கல்வியைவிட்டு வெகுதூரம் ஓடிக்கொண்டிருந்தேன்.
உழைத்து ஓடாய்த் தேய்ந்த நீ எங்களிடம் கைம்மாறு
எதுவும் எதிர்பார்த்ததில்லை. அம்மா எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது உன்னைத்தான்.
நோய்வாய்ப்பட்டு நீ வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் இன்று வரை குடும்பத்துக்கு நீ
தான் நிழல் தந்து கொண்டிருக்கிறாய். இதோ இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருப்பது
எழுதுகோலில் மை நிரப்பியல்ல உனது உதிரத்தாலே தான். நீங்கள் வார இதழ்களைத் தவிர வேறு
புத்தகங்கள் படித்து நான் பார்த்ததில்லை. அப்படியிருந்தும் உண்மையாக இருக்க வேண்டுமென்ற
உந்துதல் உங்களுக்கு எப்படி வந்தது.
நான் சம்பாதிக்கவில்லையென்றாலும் என் சட்டைப்
பையில் பணம் இருந்து கொண்டேதான் இருக்கும். நான் வியர்வை சிந்தி உழைத்துச் சம்பாதித்த
பணமில்லை என்பதால் தண்ணீர் போல் யோசிக்காமல் செலவழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நீயும் கணக்கு கேட்காமல் பணத்தை தந்துகொண்டுதான் இருக்கிறாய். அப்பா எனக்கு எதிரே
நீ மது அருந்தியோ சிகரெட் புகைத்தோ நான் இதுவரை நான் பார்த்ததில்லை. என் மகனும் அந்தக்
கோலத்தில் என்னைப் பார்க்கமாட்டான். அப்பா என்னுடைய பதின்வயதில் நீ யாரையும் எனக்கு
உதாரணம் காட்டியதில்லை. எப்படி வாழ வேண்டுமென்று நீ வாழ்ந்துகாட்டிக் கொண்டிருக்கிறாய்.
எந்தவொரு பிள்ளையும் அப்பாவைப் பார்த்துத்தானே அதிகம் கற்றுக்கொள்கின்றன.
உன்னைப் பற்றி நான் எழுதும் சாக்கில் அங்கங்கே
என்னைப் பற்றியும் எழுதிக் கொள்கிறேன். அப்பா நீ என்னை அரியணையை அலங்கரிக்கும் அரசனாக்க
ஆசைப்பட்டாய் ஆனால் என்னால் மன்னர்களைத் துதிபாடும் புலவனாகத்தான் முடிந்தது. அப்பா
நான் பிறந்தபோது நீ என் அருகில் இல்லை. பிழைப்புக்காக பிரிந்து சென்ற நீ அறிந்து கொண்டிருப்பாய்
மகன் பிறந்திருக்கிறானென்று. அந்த சந்தோஷத்தைத் தவிர வேறெதையும் இந்த நிமிடம் வரை
நானுனக்கு அளிக்கவில்லை. மாம்பழத்துக்காக பூலோகத்தைச் சுற்றும் முருகனாக நான் இருந்தாலும்
உங்களுக்கு பிள்ளை தானே.
தெய்வம் பேதை போல விதி செய்கிறது. நல்லவர்களுக்கு
சோதனை உண்டாக்கி சுகம் காண்கிறது. எங்களை கரையிலேயே நிற்க வைத்துவிட்டு நீ ஏன் கடலில்
இறங்கினாய். நீ இந்த வையகத்தில் பொருளை விட அருளையே நிரம்ப சேர்த்து வைத்திருக்கிறாய்.
இதோ உனது பேத்தி தாத்தா என்றழைக்கும்போது உனது முகம் பிரகாசமடைகிறது. உன் தாயை சிறுவயதிலேயே
இழந்துவிட்ட நீ என் மகளைப் பார்த்துதான் ஆறுதலடைய வேண்டும்.
சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் போது
சிறிது தொலைவு சென்றதும் பிடியை விட்டுவிடுவார்கள் அது எங்கேயாவது மோதி அடிபடட்டும்
என்பதற்காக அல்ல தன் கண்முன்னே கவனமாய் ஓட்டுகிறானா என்று பார்ப்பதற்கு தான் என்று
இப்போது தெரிந்து கொண்டேன். வாழ்க்கையும் அப்படித்தானோ அப்பா.
No comments:
Post a Comment