Thursday, March 22, 2018

மகள்


முப்பத்தைந்து வருடங்களாக என்னிடமிருந்து ஒவ்வொன்றாக பறித்துக் கொண்ட இறைவன் இன்றெனக்கு மகளை பரிசாகத் தந்திருக்கிறான். மண்ணில் நாம் தூவிய விதை முளைவிட்டால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். எந்தவொரு தந்தையும் தனது குழந்தையை உச்சிமுகரும் பொழுது சுவர்க்கத்தின் கீற்றை உணருகிறான். மனிதர்களைவிட பொம்மைகள் தான் அவளை வசீகரிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களைப் பார்த்து அவளது முகம் பிரகாசமடையும். குழந்தைகள் நிறைந்த வீடு எப்போதும் அலங்கோலமாகத்தான் இருக்கும்.

அவளது அழுகுரல் கேட்டு எங்கிருந்தாலும் எங்களுடைய கால்கள் படுக்கையறையை நோக்கி ஓடிவரும். தனக்கென ராஜ்யமில்லாத எந்தத் தகப்பனும் தனது மகளை இளவரசியாகத்தான் வளர்க்க எண்ணுவான். எவ்வளவோ பேர் தவமிருக்க தேவதை தான் வசிக்க எங்கள் வீட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அவளது மழலை நான் எழுத முடியாத கவிதையாகிறது. ஒருநாள் நள்ளிரவில் அறைக் கதவைத் திறக்கையில் அவள் கடவுளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். சுவர்க்கத்தின் திறவுகோலை எங்கிருந்து அவள் கொண்டு வந்தாள்.

அவளுடன் விளையாட ஓவியத்தில் உள்ள குழந்தைகளெல்லாம் உயிர் பெற்று விடுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் எனது விரல்களைத் தொட்டு குழந்தைகள் உலகத்துக்கு என்னையும் அழைக்கிறாள். அவள் நிழல் விழுந்த காகிதத்தில் எதனை எழுதினாலும் அது கவிதையாகிறது. அவள் பேசும் பாஷைக்குரிய அகராதி கடவுளிடம் தான் இருக்க வேண்டும். அவளை சாப்பிட வைக்க ஒவ்வொரு நாளும் புதியதொரு விளையாட்டினை நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவள் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எப்போது எழுவாள் என்றிருக்கும்.

தத்தித் தத்தி பாட்டியின் கையைப் பிடித்து நடக்கப் பழகும் அவளுக்கு உலகமே விளையாட்டு மைதானமாகத்தான் தோற்றமளிக்கும். கிருத்திகா அப்பா என்று தான் என்னை அடையாளப்படுத்துகிறார்கள் நாங்கள் வசிக்கும் தெருவில் என்னை. உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு நிலாவைச் சுட்டிக் காட்டும் அவளுக்கு எதனை வாங்கிக் கொடுத்து அவளை என்னால் சமாதானப்படுத்த முடியும். இனி எங்கள் வாழ்க்கைச் சக்கரம் அவளைச் சுற்றித் தான் வட்டமிடப்போகிறது. பயணத்துணையாக வந்தவளுக்கு அவளைப் பார்த்துக் கொள்வதைவிட வேறென்ன வேலை. தாத்தா உலகில் பேத்திக்கான இடம் பாட்டிக்கான இடத்தைவிடப் பெரியது.

குழந்தைகள் இருக்கும் வரை இவ்வுலகத்தை கடவுளால் கைவிட இயலாது. ஒருவகையில் மனிதன் மீது இருக்கும் நம்பிக்கை காரணமாகத்தான் கடவுள் பூமிக்கு குழந்தைகளை அனுப்பிவைக்கிறார். என் கண்பார்த்து அவள் சிரிக்கும் போது கவலைகளை மறக்கிறேன். அவளது குழந்தைப் பருவம் வசந்தகாலமாய் இருக்க வேண்டுமென்று நான் பரிதவிக்கிறேன். என் அப்பா என்று அவள் தன் தோழிகளிடம் என்னை அறிமுகப்படுத்தும் போது ஏற்படும் கெளரவத்துக்காக நான் காத்துக்கிடக்கிறேன்.

ஆண்களிடம் அப்பாவின் சாயலை அவள் தேடும் வயதில் அவளை ஒருவனிடம் கரம் பிடித்துக் கொடுக்கும் வரையிலாவது நான் உயிரோடு இருக்க வேண்டுமென்பதே எனது பேராசை. அந்த ஆசிர்வாதத்துக்காகத்தான் தெய்வத்தை நாடி கோயில் படி ஏறுகிறேன். ஒவ்வொரு தகப்பனும் தன் மகளுக்காக தனதுடலை திரியாக்கி ஒளிகொடுக்கின்றனர். முதுமையில் சாய்ந்து கொள்ள தோள் தருவாள் என்றெண்ணித் தான் மகளை வளர்க்கின்றனர்.

No comments:

Post a Comment