பிரார்த்தனை
உரையாடல் ஆகமுடியாது. பிரார்த்தனையில் பக்தன் பேசுகிறான் கடவுள் பேசுவதில்லை. பொருளற்ற
வாழ்க்கையில் மனிதனுக்கு பிடிமானமளிப்பதே பிரார்த்தனைதான். பிரார்த்தனை என்பது நல்லதற்கு
நன்றி கூறும் விதமாகவும் கெட்டதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டி முறையிடுவதாகவும்
இருக்க வேண்டும். பிரார்த்தனையில் கடவுள் மெளனமாக இருக்கிறார். அதற்காக அவன் பிரார்த்தனையை
செவிமடுக்கவில்லை என்று அர்த்தமில்லை. பிரார்த்தனையின் போது பக்தன்விடும் கண்ணீர்
அவன் பாவங்களைக் கழுவுகிறது.
இந்த
உலகில் பிரார்த்தனை நடக்காத நேரமே கிடையாது. கடவுளின் படைப்பு பூரணமானவை இல்லை என்பதால்
பிரார்த்தனையின் மூலம் நமது கஷ்டங்களை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.
கடவுளுக்கு வேறுபல வேலைகள் இருக்கலாம். ஆனால் பரதேவதைகள் இந்த வேலையை கண்ணும் கருத்துமாக
செய்து கொண்டிருக்கின்றன. வார்த்தைகளால் எந்த அளவு வெளிப்படுத்த முடியும் உங்கள் துயரத்தை.
தேவாலய வாசலில் நீங்கள் கால் வைக்கும் போதே உங்கள் சரித்திரம் முழுவதையும் அவர் தெரிந்து
கொள்கிறார். நீங்கள் நுழையும் போதும் கடவுள் மெளனமாயிருந்தார். நீங்கள் உங்கள் பிரார்த்தனை
ஏறெடுத்த பின்பும் அவர் மெளனத்தைக் கடைபிடித்தார் என்றால் அதற்கு
என்ன அர்த்தம்.
பிரார்த்தனையின்
போது உங்கள் அகந்தை கரைகிறது கடவுளின் அருள் உங்கள் மீது இறங்க அது வாய்ப்பினை ஏற்படுத்திக்
கொடுக்கிறது. அன்பே கடவுள் என்றால் அவர் மனிதர்கள்படும் அவஸ்தையை நியாயப்படுத்தி பேச
மாட்டார். கடவுளுக்குத் தெரியும் உங்கள் தோள் மீது சுமையை சுமத்தினால் நீங்கள் இளைப்பாற
இடம் தேடுவீர்கள் என்று. துன்பப்படும் போது மனம் விழித்துக் கொள்கிறது. அது கடவுளுடனான
தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயலுகிறது. கஷ்டங்கள் நாம் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தையும்
மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க நல்வாய்ப்பாக
அது அமைகிறது.
அஞ்ஞானத்தில்
மூழ்கியுள்ள பெரும்பாலான மக்களிடமிருந்து ஒரு சிலரைத்தான் கடவுள் தட்டி எழுப்புகிறார்.
பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடவேண்டுமென்ற வேட்கையைத் தூண்டுகிறார். பணம்
மிதமிஞ்சி இருந்தால் அவர்கள் தேவாலயத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க மாட்டார்கள்.
வாழ்க்கையின் அர்த்தத்தை அதிரகசியமாக தன்னுள் புதைத்து வைத்திருக்கிறார் கடவுள். கடவுளைக்
காட்டுகிறேன் என்று சொல்பவர்களிடம் ஏமாந்து போக வேண்டாம். பிரார்த்தனை மூலம் நீங்கள்
தட்டும் போது அந்தக் கதவு திறந்து கடவுளின் தரிசனத்தைக் காண்பீர்கள்.
ஒரு மனிதனின்
இதயத்தில் அன்பை பிரவேசிக்கச் செய்ய ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்றால் அதையும் பொறுமையுடன்
செய்து முடிப்பார் கடவுள். வெறும் சடங்கு போல பிரார்த்தனை செய்யக் கூடாது கடவுள் செவிமடுப்பார்
என்ற உள்ளுணர்வுடன் பிரார்த்தனையை ஏறெடுக்க வேண்டும். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவர்கள்
கடவுள் நமக்கு அளித்தார் என்ற நன்றியுணர்வுடன் இருக்க மாட்டார்கள். வாழ்க்கையே ஒருவருக்கு
பிரார்த்தனை ஆகும் போது அவன் மெளனமாய் இருக்க அவன் வழியே கடவுள் பேச ஆரம்பிக்கிறார்.
வாழ்க்கையின்
நிச்சயமற்றத் தன்மையை நாம் உணரும் போது நமக்கு இன்னொரு வாசல் திறக்கிறது. வற்புறுத்திப்
பெறலாம் என்ற நினைப்பு மனிதனுக்கு வரக்கூடாது. பணிவன்புடன் பிரார்த்தனையை ஏறெடுத்தால்
தேவன் செவிமடுப்பார். எது நமக்கு நன்மை தருமோ அவற்றை மட்டும் கடவுள் நமக்களிப்பார்
என்ற புரிதல் வேண்டும். எனது விருப்பத்தை உங்கள் முன் வைக்கிறேன் எனும் போது இறுதி
முடிவெடுக்கும் அதிகாரத்தை கடவுளிடம் ஒப்படைத்துவிடுகிறீர்கள். மனிதனால் உருவாக்கப்பட்டதை
விட்டுவிடுங்கள் இயற்கையோடு பேசுங்கள் அது உங்களுக்கு கண்டிப்பாக கடவுளைக் காட்டும்.
பிரார்த்தனை
மனிதனுக்கும் கடவுளுக்கும இடையேயுள்ள பாலமாக செயல்படுகிறது. அருள் காற்று வீசிக் கொண்டுதான்
உள்ளது நீங்கள் தான் பாய்மரத்தை விரிக்க வேண்டும். அன்பானவர்களின் கண்களில் கருணை நிரம்பி
இருக்கும். பிரார்த்தனையை மனித குலம் இழந்துவிடக்கூடாது ஏனெனில் கடவுளின் அருள் கிரணங்கள்
அதன் வழியாகவே பாய்கிறது. கடவுள் மீது குற்றம் சுமத்தாதீர்கள் நம் மனத்தில் என்ன உள்ளதோ
அதுவே வெளியில் வெளிப்படுகிறது.
புனிதமான
எந்த ஒன்றையும் மனிதன் வணங்க வேண்டுமென்றுதான் கடவுள் விருப்பப்படுகிறார். சத்தியத்துக்கு
பிரதிவுபகாரமாக சிலுவையை ஏற்றுக் கொண்ட இயேசு தான் சீடர்களின் கால்களை புனிதநீரால்
கழுவுகிறார். வாழ்க்கைக் கடலைக் கடக்க உதவும் இந்த உடலாகிய படகுக்கு என்ன நேருமோ என்ற
அச்சத்தை இறைவனிடம் ஒப்பிவித்துவிடுங்கள். வாழ்க்கை ரயில் பயணம் போன்றது உங்கள் சுமைகளை
இன்னும் தலையில் சுமக்காதீர்கள். நியாயத்தீர்ப்பு நாளில் தேவனுக்கு கொடுப்பதற்கு பாவ
மூட்டையை சுமந்து வராதீர்கள். உயிர்த்தெழுந்த இயேசு வெள்ளிக் காசுக்காக காட்டிக் கொடுத்த
யூதாஸுக்கு பாவமன்னிப்பு வழங்கியிருப்பார். நான் கடவுள் என்று சொல்பவன் எவனும் கண்டிப்பாக
சாத்தானாகத்தான் இருப்பான் என்பதை மறக்காதீர்கள்.
No comments:
Post a Comment