Saturday, April 21, 2018

கருவறை வாசனை


கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டி எறிந்துவிட்டு மரத்தை வேரோடு சாய்ப்பதை போலத்தான் மரணம் நம்மை நெருங்குகிறது. உறவுகளின் இழப்பு நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நமது நம்பிக்கை நீரூற்று கொஞ்சம் கொஞ்சமாக வற்ற ஆரம்பிக்கிறது. பிரியமானவர்களின் இறப்பு மரணத்தைவிடக் கொடியதாக இருக்கிறது. வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் அவர்களை நினைவுபடுத்திக் கொண்டேயுள்ளது. உயிரோடு இருக்கும்போது அவர்களிடம் மனம் கோணும்படி தான் நடந்து கொண்டது ஞாபகம் வருகிறது. வீதியில் நடக்கும போது அவளின் குரல் போல் உள்ளதே என திரும்பிப் பார்க்க நேரிடுகிறது.

பெண்ணிடமுள்ள புனிதத்தன்மைதான் ஆணை ஈர்க்கிறது. அவளுடைய கண்கள் மூலமாகத்தானே பத்து மாதம் இவ்வுலகைப் பார்த்து வந்தோம். ஒருவனுடைய வாழ்க்கைக்கு பிள்ளையார்சுழி போடுவதும், முற்றுப்புள்ளி வைப்பதும் பெண்ணாகவே இருக்கிறாள். உடல் வலிமையை விட மனவலிமை பெண்ணுக்கு அதிகமாக இருக்கிறது. உலகில் வாழும் எல்லோரும் அவளின் வாய் வழியாகத்தான் உணவை உட்கொண்டோம், அவளி்ன் இரத்தத்தைத் தான் பாலாய் குடித்தோம். வயிற்றிலிருக்கும் போது அவள் பேசுவதைக் கேட்டுத்தான் தாய்மொழியை கற்றுக் கொள்கிறோம். ஒரு உயிரை உலகத்துக்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமான காரியமா என்ன.

வாலிபத்தில் அம்மாவின் சாயலுள்ள பெண்களால் தான் ஆண் அதிகம் கவரப்படுகிறான். நிம்மதியற்ற நேரத்தில் அம்மாவின் மடியில் சாய்ந்து கொண்டு உறங்குவதையே அவன் விரும்புகிறான். அவளின் கொலுசு சத்தம் தான் அவன் கேட்கும் முதல் சங்கீதம். தாயின் வயிற்றிலிருந்து அவன் வெளிவந்துவிட்டாலும், தனது மனஊஞ்சலை விட்டு மண்ணில் அவனை இறக்கிவிடுவதே இல்லை அவள். அவளுடைய மனம் பாதுகாப்பு அரண்போல அவனைப் பாதுகாக்கிறது. அம்மா மட்டும் அறிந்த அவனுக்கு அப்பா எனும் புது உறவை அவள் தான் அறிமுகப்படுத்துகிறாள். புது வாசலை அவனுக்கு திறந்துவிடுவதும் அவள்தான். அவனுடைய சிறகுகளை முறிக்கும் எண்ணம் அவளுக்கு வருவதே இல்லை. அவன் அம்மா என்று மழலையில் அழைக்கும் போது அவளின் தாய்மை உணர்வு பூரித்துப் பொங்குகிறது.

உறக்கம் வரும்வரை அவள் அவனுடைய தலையை வருடிக் கொண்டிருக்கிறாள். தனக்கு அப்புறம் இவனை யார் கண்ணும்கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வி அப்பொழுது அவள் மனதில் எழுகிறது. காலம் அவனை வெயிலில் அலைய வைக்கும் போதெல்லாம், அவள் தன் புடவைத் தலைப்பால் அவன் உடலை போர்த்தி அழைத்துச் சென்றது அவனுக்கு ஞாபகம வரும். ஒரு பெண்ணை அவன் எதிர்கொள்ளும் போதெல்லாம் அவனுடைய அம்மாதான் அப்பெண்ணின் உள்ளிலிருந்து அவனை வாஞ்சையுடன் பார்க்கிறாள்.

இப்போது தடுமாறி விழும் அவனை தாங்கித் தூக்க அவள் இல்லை. பசி வயிற்றைக் கிள்ளும் போது அவள் நிலா காட்டி சோறு ஊட்டியது ஞாபகத்திற்கு வருகிறது. அவன் மனக்கலக்கத்தில் இருக்கும் போதெல்லாம் கனவில் அவள் வந்து ஆறுதல் கூறுவாள். அவன் உழைத்துக் களைத்து மாலையில் வீடு திரும்பும் போது, தென்றலாக வந்து தழுவிக் கொள்வதும் அவள்தான். நதிநீரில் கால் நனைக்கும் போதெல்லாம் அவளின் காணாமல் போன மெட்டி காலடியில் நிரடுவதாகவே அவனுக்குத் தோன்றும். மின்தடையால் உறக்கம் வராமல் புரண்டு படுக்கும் போது அவள் மழை இரவில் கொசுக்களை விரட்ட இரவு முழுவதும் பனைவோலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வரும்.

அவனுக்கு உடல் சுகவீனமடையும் போதெல்லாம், வீட்டில் அவன் கூடவே யாரோ நடமாடுவது போல அவனுக்குத் தோன்றும். அவன் எந்ததேசத்துக்கும் அதிபதி இல்லையென்றாலும் அவளுக்கு ராஜா தான். அவனுக்கு மேகமாக வந்து நிழல் தருபவளாகவும், மழையாக வந்து தாகம் தீர்ப்பவளாகவும் அவளே இருக்கிறாள். அவன் தாயை நினைத்து கண்ணீர்விடும் சமயங்களில் அவள் தன் வயிற்றை வாஞ்சையுடன் தடவிப் பார்த்துக் கொள்கிறாள்.

அவள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலை அவன் கேட்க நேரும் போதெல்லாம் கண்ணீர் அரும்புகிறது. அவளுக்கு பின் செல்லப் பெயரால் அவனை யாரும் அழைப்பது இல்லை. காபி மட்டும் சாப்பிட்டுவிட்டு காசு இல்லாததால் அடுத்தவர் தோசை சாப்பிடுவதை பசியோடு பார்க்கும் போதெல்லாம், அவள் பள்ளிக்கு கொடுத்தனுப்பும் சாப்பாடு பிடிக்காமல் அதை சாப்பிடாமல் வைத்து மாலையில் அவள் முன்பு வீசியெறிந்தது ஞாபகம் வரும். பேருந்தில் அம்மாவின் கைப்பிடித்து நிற்கும் குழந்தையைக் கண்டால் அவன் எழுந்து இடம்விடுவான். விலாசம் கேட்டு வெயிலில் குழந்தையோடு அலையும் பெண்ணுக்கு சோடா வாங்கிக் கொடுப்பான். குழந்தையோடு மழையில் நனையும் பெண்ணுக்கு தனது குடையில் இடம் கொடுப்பான். வாசற் கதவை அவள் எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என்பதால் அவன் இரவில் கதவை தாழிடுவதில்லை. அம்மாவின் சாயல் இருக்கிறதேயென்று முன்சென்று முகம் பார்த்து ஏமாந்திருக்கிறான்.

பீரோவிலுள்ள சேலைகளில் இன்னும் அவள் வாசமடிக்கிறது. அவள் பிரியத்துடன் எடுத்துக் கொடுத்த நைந்து போன சட்டையை இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். காலத்தின் கைகளில் தன்னை ஒப்படைத்துப் போன அவளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான். டிரங்கு பெட்டியில் அவள் எழுதி அஞ்சல் செய்யப்படாத கடிதத்தை இன்று வரை அவன் கோடி முறையாவது படித்திருப்பான்.

No comments:

Post a Comment