துயரநீர்ச்
சுழலில் சிக்கிக் கொண்டுவிட்டேன். விதி வாழ்க்கையின் லகானை தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்துள்ளது. கடவுள் என்னை துயரத்தின் வாரிசு ஆகுக என்று கட்டளையிட்டார். கொழுத்த
ஆடு மேய்ப்பனின் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். வாழ்க்கையின் விதிமுறைகளை அனுசரிப்பதற்குப்
பதிலாக கல்லறையில் படுத்துக் கொள்ளலாம். பிறப்புக்கும், இறப்புக்கும் மத்தியிலுள்ள
வாழ்க்கை குரங்கு கை பூமாலையாக ஆகிவிட்டது. வலியவர்கள் தன் பணவலிமையால் எதையும் சாதித்துக்
கொள்கின்றனர்.
நல்லவனும்,
கொலைகாரனும் ஒரே தெய்வத்தைத் தான் வணங்குகிறார்கள். குற்றவாளி சட்டத்தின் ஓட்டை வழியாக
தப்பிவிடுகிறான். அவனது பாவம் மன்னிக்கப்பட்டதாக ஆகிவிடுமா? அப்பாவி வாழ்க்கையை எதிர்கொள்ள
பயந்து தற்கொலை செய்து கொள்கிறான். இதன் மூலம் அவன் கடவுள் மீது நம்பிக்கையில்லா
தீர்மானம் கொண்டு வருகிறான். கடவுள் தன் படைப்பு பூரணத்துவம் அடையும் வரை காத்திருப்பார்
என்றால், இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு முடிவே இல்லாமல் போய்விடுமல்லவா?
சமூகம்
சாத்தானுக்கு ஏவல் புரிகிறது. கடவுளை சாந்தப்படுத்த யாகங்களே போதும் என சமூகம் நினைக்கிறது.
பரிசோதனை எலிக்கு கருணை காட்டாத மனிதன் கடவுளிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா?
நாளை நடைபெற இருப்பதை இன்றே அறிந்துகொண்டால் தூக்கம் வருமா? கடவுளைப் பொறுத்தவரை
மனிதன் மண் தான். மண்ணிலிருந்து தோன்றியவன் இறுதியில் மண்ணுக்கு இரையாகிறான். கடவுள்
மனிதன் மூலமாக வெளிப்படுகிறார். கடவுளை மறுப்பவனிடமிருந்து கூட அவன் வெளிப்படலாம்.
ஆனால் அந்த வெளிப்பாட்டில் மனிதர்களுக்கிடையே வேறுபாடு உள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து
வெளிப்படும் கடவுளால் அவரைச் சுற்றி அதிர்வலைகளை ஏற்படுகிறது. கடவுளைத் தேடுபவர்களை
அவரின்பால் அது ஈர்க்கிறது. மனிதர்களுக்கு இடையே நிலவும் சக்தி அளவிலான வேறுபாடுகளுக்கு
பூர்வ ஜென்ம பலன் காரணமாக இருக்கலாம்.
உண்மை
என்னவென்று யாருக்குத் தெரியும். சில வேளைகளில் செயலைச் செய்ய வேண்டுமென்ற விருப்பார்வம் எதனால் எங்கிருந்து ஏற்படுகிறதென்று யோசித்துப்
பாரக்க வேண்டும். இல்லறத்தான் ஞானியைப் பார்த்து இவர் போல எல்லாத்தையும் துறந்துவிட்டு
கெளபீனதாரியாக பிச்சையெடுத்து சாப்பிடலாம் என்று எண்ணுகிறான். சந்நியாசியின் மனதோ
ஒரு பெண்குட்டியோடு வாழ்ந்து குழந்தை குட்டிகளோடு சுகமாய் இருந்திருக்கலாம் என இல்லறத்தானைப்
பார்த்து உள்ளுக்குள் ஏங்குகிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை.
முனைவராக
இருந்தாலும் வாழ்க்கைப் பாடத்தை சரியாகப் படிக்காமல் வெற்றி கிட்டாது. புல்லாங்குழல்
தான் மனிதன், அதை லயத்தோடு இசைப்பவன் கடவுளாக இருக்கிறான். கடவுள் கோடிக்கணக்கான
கண்களால் இவ்வுலகைக் காண்கிறான். கோடிக்கணக்கான கைகளால் செயல் புரிகிறான். யாருக்கும்
அவன் விதிவிலக்கு அளிக்கவில்லை. மரணத்தை பொதுவில் வைத்து மனிதனின் வாழ்க்கையில் திருவிளையாடல்
புரிகிறான். விடிவதற்கு சில நாழிகைக்கு முன் பூமி மீது காரிருள் கவிந்திருக்கும். வாழ்க்கையும்
அப்படித்தான்.
நாளை
என்ன நடக்கும் என்று யாராலும் கணித்துச் சொல்ல முடியாது. யூகங்களைப் பெரிதுபடுத்தி
அதை உலகம் பூராவும் திட்டமிட்டு பரப்புகிறார்கள். உலகம் அழியப்போகிறது என்ற பயத்தை மக்களின் மனத்தில் தோன்றச் செய்வதே
அவர்களின் நோக்கம். இப்படி கோடிக்கணக்கான மனிதர்களின் பயவுணர்வு காற்றலைகளை பாதிக்கிறது.
உலக அழிவை விரைந்து கொண்டு வருகிறது. எண்ணத்தின் ஆற்றலால் மனிதன் எப்படி உயர்ந்தானோ,
அப்படியே அழிவையும் தேடிக் கொள்கிறான்.
வாழ்க்கைப்
புத்தகத்தில் சுவாரஸியமே அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதது தான். எல்லோரும் சாகப்
போகிறவர்கள் தான். எந்தவொரு மனிதனும் எதிரிக்கு முன்னால் பிணமாக கூலர் பாக்ஸில் தான்
கிடத்தப்பட்டிருப்பதை விரும்பமாட்டான். மறதி கடவுள் தந்த வரம். இல்லையென்றால் மனிதனின்
சித்தம் கலங்கிவிடும். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை மனிதனின் ஆயுள் குறைவு தான். அந்த
வாழ்வைக் கொண்டாடாமல் அதைத் தவறவிட்டுவிடுகிறான். அன்பே கடவுள் என்ற புத்தர் பிறந்த
மண்ணில் தான் சகமனிதனை திட்டமிட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்வதும் அரங்கேறுகிறது.
அடிமைப்படுத்துதலுக்கு
எதிராக முதலில் கிளர்ச்சியை தூண்டிவிட்டவர் இயேசு. அவரது வானரசு என்ற கோட்பாட்டை அவரின்
சீடர்களே கூட முழுமையாக புரிந்து கொண்டார்களா எனத் தெரியவில்லை. மதக் கட்டுப்பாடு
மிகுந்த அன்றைய சூழலில் அவர் செய்தது மாபெரும் புரட்சி. ஓய்வு நாளில் அற்புதங்கள் செய்ததால்
யூதர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. யூதர்கள் அதிகாரத்தால்
அன்று ஜெயித்தார்கள், ஆனால் கொள்கையால் இயேசுவிடம் தோற்றார்கள். உலக மக்கள்தொகையில்
அதிகம் பேர் கிறித்தவ மதத்தை பின்பற்றுவதே இதற்கு சாட்சி.
சத்தியத்தைப்
பின்பற்றுபவர்களின் கண் பார்த்து பேசுவது இயலாத காரியம். மனோவேகத்தில் நான்காயிரம்
ஆண்டுகளுக்கு முன்னால் போர் நடந்த குருட்சேத்திர யுத்தக்களத்துக்கு நம்மால் செல்ல
முடிகிறதல்லவா? கோயிலின் பிரம்மாண்டமான கோபுரத்துக்கு முன் நாம் நம்மை சிறு எறும்பாக
உணர்கிறோமா இல்லையா? புத்தர் இறந்துவிட்டார் அவர் போதனைகள் இன்றும் வாழ்கிறது. தர்மச்சக்கரம்
சுழன்று கொண்டேயுள்ளது. அநீதியை எதிர்த்து சத்தியத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு சோதனைகள்
தோன்றலாம், கிருஷ்ணனின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஜெயித்தால் மண்ணை ஆள்வாய்.
மரணித்தால் சுவர்க்கம் புகுவாய் எனவே மனந்தளராமல் முன்னேறிக் கொண்டேயிரு.
No comments:
Post a Comment