Friday, January 14, 2022

எனக்கு ஒரு கனவு உண்டு – மார்டின் லூதர் கிங்

 


இந்த இடத்தில் கொந்தளிக்கும் மக்கள் கடல் முன்பு நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன். ஏட்டளவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி நூறாண்டுகள் கடந்துவிட்டது. கிடைத்ததா நம் இன மக்களுக்கு உரிமை. கறுப்பினத்தவரை அடிமையாகக் கருதும் வெள்ளை இனத்தவரின் மனப்போக்கு இன்னும் மாறவில்லை. நிறத்தால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றே அவர்கள்நினைக்கிறார்கள். வெள்ளையர்கள் மட்டும் – என எழுதப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையே அதற்கு உதாரணம். எப்போதும் ஒரு சாரார் சார்பாகவே பூமி சுழலாது. போராட்டம் என்று நாம் வன்முறையை கையில் எடுத்துவிடக் கூடாது. மகாத்மா காந்தி அகிம்சையைக் கைகொண்டதினால்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆயுதம் ஏந்துவது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக் கொடுக்காது. வெள்ளையினத்தவர்கள் மீது தாக்குதலை நிகழ்த்துபவர்கள் போராட்டத்தை வேறு வழியில் திசைதிருப்ப பார்க்கிறார்கள்.

 

எல்லோரும் கடவுளின் புத்திரர்கள் இதில் நிறம் எங்கிருந்து வந்தது. நாடு, மொழி, இனம் என்று பிரிவினை காட்டுவதைவிட தோல் நிறத்தால் ஒருவன் உயர்ந்தவன் என்பதை என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்னாலும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஒருவனின் மதிப்பு குணத்தால் தான் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர நிறத்தால் அல்ல. ஆள்வோர்கள் கூட கறுப்பினத்தவரை குற்றவாளியாக பார்க்கும் மனோபாவம் மாற வேண்டும். பிறப்பால் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று யாரும் இங்கு மார்தட்டிக் கொள்ள முடியாது. எல்லோரும் அன்னையின் வயிற்றில் பத்து மாதம் இருந்துதான் பிறக்கிறோம். இந்த தேசத்தின் வளர்ச்சியில் கறுப்பினத்தவர்களுக்கு பங்கு இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு அரசாங்கமானது நிறப்பாகுபாட்டை முன்வைத்து ஒரு இனத்தின் மீதே அக்கறை இல்லாமல் நடந்து கொள்டால் நாங்கள் என்ன செய்வது.

 

அமெரிக்கா சுதந்திரமடைந்த போது இந்த தேசம் வெள்ளையர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றா அரசாணை வெளியிட்டீர்கள். அமெரிக்க விடுதலை போரில் கறுப்பினத்தவர்கள் இரத்தம் சிந்தவில்லையா என்ன? எங்களை ஆள்வோர்களை நாங்கள் தீர்மானிக்கக் கூடாது என்பதால் தானே கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமையை நீங்கள் வழங்கவில்லை. அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். தோட்டாக்களுக்கு பயந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. செய் அல்லது செத்து மடி இதுவே எங்கள் முடிவு. எப்போது கடவுள் வானத்திலிருந்து இறங்கி வந்து சொன்னார் வெள்ளையர் மட்டுமே எனது குமாரரர்கள் என்று. வெள்ளை இனத்தவரின் கடவுள் கருப்புத் தோலைக் கொண்டிருந்தால் உடனே எல்லா வெள்ளைஇனத்தாரும் சேர்ந்து அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வீர்களா? சிறகு இருப்பதே பறப்பதற்காகத்தானே. வானம் விசாலமானது தனிப்பட்டவர்களுக்கு மட்டும் என இந்த உலகை யாரும் சொந்த கொண்டாட முடியாது. நான் இப்போது இங்கு நின்று பேசுவது வெள்ளை மாளிகையின் வேர்களையே அசைத்துப் பார்க்கும்.

 

நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் ஒடுக்கப்பட்ட இனம் ஒருநாள் விஸ்வரூபம் எடுக்குமென்று. குட்ட குட்டக் குனிவது இனி நடக்காது. நாங்கள் இந்த அமெரிக்க நாட்டின் பங்குதாரர்கள். எங்களது உரிமைகளை நாங்கள் போராடிப் பெறுவோம். ஒரு சிறுதீப்பொறி காட்டையே அழித்துவிடப்போகிறது. உரிமையைப் பெறும்வரை இந்தப் போராட்டம் ஓயாது. மழையைத் தருவதே கருமேகங்கள் தானே. கருவண்ணம் என்பதற்காக இரவு வானத்தை வெறுத்துவிடுவோமா? சட்டம் எல்லா மக்களையும் சமமாக நடத்து வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளிடம் கறுப்பின வெறுப்பை நஞ்சாக ஊட்டி வளர்க்கக் கூடாது. கோஷமிட்டுவிட்டு அடங்கிப் போய்விடுவார்கள் என எண்ணாதீர்கள். அநீதிக்கு எதிரான இந்தப் போர் என்னோடு முடியப்போவதில்லை. வாழ்ந்தால்  ஆறரை கோடி முழுமையும் வாழ்வோம் வீழில் ஆறரைகோடி முழுமையும் வீழ்வோம். கனன்று  கொண்டிருக்கும் எரிமலை ஒரு நாள் நெருப்பை கக்கியே தீரும்.

 

கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காக தூக்குகயிற்றை முத்தமிடவும் நான் தயாராக இருக்கிறேன். அலைகளை தடுத்துவிடலாம் ஆழிப்பேரலையை. எனக்கு ஒரு கனவு உண்டு. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் சர்ச்களில் வெள்ளைக்காரர்களுக்கு சரிசமமாக கறுப்பினத்தவரும் அமரும் நிலை வரும். ஆள்வோர்களைத் தீர்மானிக்கும் வாக்குரிமை எங்களுக்கு கிடைக்கும். வல்லாதிக்க அமெரிக்க நாட்டினை ஆள்வதற்கு ஒரு கறுப்பினத்தவர் புறப்பட்டு வருவார். இன்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக நான் விடுக்கும் இவ்வுரை ஒவ்வொரு போராட்டக் குழுவுக்கும் வேதமாகும். எனக்கு ஒரு கனவு உண்டு. ப்ராட்டஸ்டாண்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே சகோதரத்துவம் மலருமென்று. எனக்கு ஒரு கனவு உண்டு. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பினத்தவர்கள் மீது காட்டும் வெறுப்பு ஒருநாள் அன்பாக மாறுமென்று. அமெரிக்க நாட்டின் முதுகெலும்பாக கறுப்பினத்தவர்கள் வரும் காலங்களில் கருதப்படுவார்களென்று. வெள்ளை இனத்தவர்கள்  கறுப்பினத்தவர்களோடு கைகுலுக்க தயக்கம் காட்ட மாட்டார்களென்று. எனக்கு ஒரு கனவு உண்டு. இந்த உலகில் கறுப்பினத்தவரை இரட்சிக்க ஒரு தேவதூதன் தோன்றுவானென்று.

 

வருங்காலங்களில் கறுப்பினத்தவர்களிடையே வரலாற்று நாயகர்கள்  உருவாகி வருவார்களென்று. மகாத்மா காந்தி போல நாமும் அகிம்சையை ஆயுதமாக்கிக் கொள்வோம். துப்பாக்கிகளுக்கு துப்பாக்கிகளாலேயே பதில் சொல்லும் தேசம் அகிம்சைக்கு தலைவணங்கியே தீரும். நான் இங்கு விதைத்தது வருங்காலங்களில் விருட்சமாகும். சிக்கிமுக்கி கற்களில் நெருப்புப்பொறி ஒழிந்துள்ளது என நான் நிரூபித்துவிட்டேன். நாளை நாடுமுழுவதும் சுதந்திரத்தீ பற்றி எரியப்போகிறது. எனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு எல்லா கறுப்பினத்தவர்களும் வீதியில் இறங்கி போராடப்போகிறார்கள். இன்று இங்கு நான் காணும் எழுச்சி நாளைய அமெரிக்க நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடும். எனது கனவு நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Sunday, February 21, 2021

பாவமன்னிப்பு

 


“ஹலோ ஃபாதர் ஜெயராஜ் பேசுறேன்.”

 

“ஓ ஜீஸஸ்! இப்பதான் உங்களபத்தி நினைச்சிட்டு இருந்தேன் நீங்களே கால் பண்ணிட்டீங்க. என்ன விஷயம் ஃபாதர்” என்றார் தொழிலதிபர் டேவிட் தணிகாசலம்.

 

“ஒண்ணுமில்லை. உங்கள சந்திக்கணும்னு ராயப்பன்னு ஒருத்தர் பிரியப்படுறாரு.”

 

“என்ன பேர் சொன்னீங்க ஃபாதர்?”

 

“ராயப்பன். உங்களுக்கு அவரைத் தெரியுமா?”

 

“ம். இப்பதான் ஞாபகத்துக்கு வருது. வெயிட் பண்ணச் சொல்லுங்க இன்னும் அரைமணி நேரத்துல வர்றேன்.”

 

டேவிட்டின் கண்கள் சிவந்தன. ‘ராயப்பன் ராஸ்கல் ராயப்பன் உன்னை எமலோகத்துக்கு அனுப்புறதுதான் என் முதல் வேலை.’ கைத்துப்பாக்கியில் தோட்டா நிரப்பப்பட்டு இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டு விறுவிறுவென வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் நோக்கி விரைந்தார் டேவிட். கார் சாலையில் சீறிப்பாய்ந்தது.

 

‘ப்ளடி இடியட் ஃப்யூல் பழைய டேவிட்டா என்னை நினைச்சானா காசு, பணம், லொட்டு லொசுக்குன்னு எல்லாத்தையும் பாத்தாச்சி அப்ப என்னைய புழுவா பூட்ஸ் கால்ல மிதிச்சிபுட்டு இப்ப பாம்பானோன்ன மகுடி ஊதலாம்னு பாக்குறானா ஸ்டுப்பிட் ஃபெல்லோ. ராயப்பன்னு அவன் பேரை வாயால சொல்லக்கூட அருவருப்பா இருக்கு. ராயப்பா உன்னோட விதிதான் உன்னை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கு.’ அவரது வலது கையால் பிஸ்டலை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

 

கார் ஃபாதர் வீட்டின் முன் நின்றது. கார் சத்தம் கேட்டதும் ஃபாதர் ஜெயராஜ் வெளியே வந்து டேவிட்டை வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

 

ஃபாதர் டேவிட்டிடம் “நீங்கள் சம்மதித்ததால் தான் அவரை வெயிட் பண்ணச் சொன்னேன். இந்த அறையில தான் இருக்காரு. நீங்கள் சந்தித்துவிட்டு வாருங்கள் நாம் பிறகு பேசுவோம்” என்றார்.

 

டேவிட் அறைக் கதவைத் திறந்ததும் ராயப்பன் சோபாவிலிருந்து எழுந்து கொண்டான். ‘ஸிட் ஸிட்’ என்று சொல்லிக்கொண்டே எதிரே உள்ள சோபாவில் டேவிட் அமர்ந்தார்.

 

கால்மேல் கால்போட்டபடி ராயப்பனை மேலும் கீழுமாக இரண்டு தடவை பார்த்தார், “இத்தனை வருஷம் கழிச்சி தேவையில்லாம தேடி வந்திருக்க மாட்டேன்னு தெரியும். இப்ப என்னோட ஸ்டேடஸே வேற, என்னை உன்னால விலைபேச முடியாது. இல்ல நான் செஞ்சது பாவம்னு ஞானோதயம் வந்திடுச்சின்னு பிச்சை கேட்டு வந்திருக்கியா?” என்றார் வெண்தாடியை வருடியபடி.

 

ராயப்பன் கண்களை தாழ்த்திக் கொண்டு “மிஸ்டர் டேவிட் உங்க பேரைக் கெடுக்கணும்னு நான் விரும்பலை. நான் செஞ்ச தவறுக்கு பிராயச்சித்தம் தேடித்தான் வந்திருக்கேன். நான் ஒரு பாவி டேவிட்.”

 

“நாம சந்திச்சி இருபத்தைந்து வருஷம் இருக்குமா? இப்ப ஞானம் பொறந்திருச்சின்னு வந்து நின்னா நான் நம்பணும் இல்ல.”

 

டேவிட்டின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. நிதானமாக கோட்டுக்கு உள்ளே இருந்த செல்லை எடுத்து காதில் வைத்தார். “ஹலோ செபஸ்டியன் டுடே இஸ் யூவர் டே. அப்பா ப்ளாங்க் செக்கை டேபிள்ல உன் போட்டோவுக்கு கீழ வைச்சிருக்கேன். ரேஸ்ல ஜெயிக்கிற குதிரைமேல பணத்தைக் கட்டுறதுதான் புத்திசாலித்தனம். இதெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு கல்யாணம் பண்ணிகிட்டு ஃபேமிலி மேன் ஆயிடுன்னா கேட்க மாட்டேங்கிற” என்று பேசிவிட்டு டேவிட் போனை கோட்டுக்கு உள்ளே வைத்துக் கொண்டார்.

 

“டேவிட் இது உன் மகன்தானே, படர்றத்துக்கு கொம்பு கிடைச்சதும் எங்களையெல்லாம் மறந்துட்ட டேவிட்.”

 

“எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம் துரோகிகளை ஒருபோதும் மன்னிக்கமுடியாது ராயப்பன்.”

 

“நீ பழைய டேவிட்டா இருந்தேன்னா கமலாவைப் பத்திதான் முதல்ல கேட்டிருப்ப.”

 

“ஓ மை காட்! கமலா இன்னும் அந்தச் சிலுவையை என்னால் இறக்கி வைக்க முடியவில்லையே, கமலா உனக்கு முன் நானொரு குற்றவாளி. என் தரப்பை எதைச் சொல்லி நியாயப்படுத்துவேன் நான்.”

 

“என்னை துரோகி என்கிறாயே கமலா அப்பாவிடம் ஒருலட்சம் வாங்கும்போது உன் மனசாட்சிக்கு என்ன பதில் சொன்னாய் டேவிட்.”

 

“நான் கையாலாகதவன் என் தாயைக் காப்பாற்ற கை நீட்டி வாங்கிக் கொள்வதைவிட வேறு வழி தெரியவில்லை எனக்கு.”

 

“தாயா, கமலாவா என்று வரும்போது நீ தாயைத் தானே தேர்ந்தெடுத்தாய். கமலாவை நட்டாற்றில் விட்டுவிட்டாய் அல்லவா? உன்னைப் போல் மனதுக்கு ஒருத்தி, மஞ்சத்துக்கு வேறொருத்தி என கமலாவும் வாழ்ந்துவிடுவாள் என்று தானே நீ நினைத்தாய் டேவிட்.”

 

“ஓ நோ! ஆற்றைக் கடக்க உதவிய தோணியை மறந்துவிட்டேன்.”

 

“அது என்ன அவ்வளவு ஈஸியா சொல்லிட்ட டேவிட். சமுதாயத்தில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா?”

 

“அப்படியென்றால் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸும் நானும் ஒன்றுதான். நியாயத்தீர்ப்பு நாளில் எப்படி அந்தக் கேள்வியை எதிர்கொள்வேன்.”

 

“உன்னை நியாந்தீர்க்க வேண்டியது இயேசு அல்ல கமலா தான். கமலாவின் இடத்தில் வேறொருத்தியை வைத்து உன்னால் பார்க்க முடிந்து இருக்கிறது. ஆனால் உன் இடத்தில் வேறொருவனை வைத்து கமலாவால் பார்க்க முடியவில்லை. உனக்கு காதல் ஒரு விளையாட்டு அவளுக்கு அதுதான் வாழ்க்கை.”

 

“அதை நீ சொல்லாதே.”

 

“நான் கமலா அப்பா தந்த பணத்தை பெட்டியில் எடுத்து வந்தபோது எதையும் யோசிக்காமல் வாங்கிய கல்நெஞ்சக்காரனின் கைகள் தானே உன்னுடையது டேவிட்.”

 

“பாவக்கறை படிந்தவை இந்தக் கைகள். அப்போது தன்னலத்தைப் பற்றியே யோசித்தது எனது புத்தி. உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த சாத்தானை விழிக்கச் செய்துவிட்டேன். கல்லறைக்குப் போகும்வரை எனக்கு இவ்வுலகில் நிம்மதி இருக்காது.”

 

“நீ விளையாடியது ஒரு பெண்ணோட வாழ்க்கையில். பெண் பாவம் பொல்லாதது என்று சொல்லிக் கேட்டதில்லையா? கமலாவை ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டு பெரிய உத்தமன் மாதிரி பேசுகிறாய்?”

 

“காதலித்த போது என்விரல் நகம் கூட அவள்மீது பட்டதில்லை தெரியுமா? இந்த நாடகத்தில் உனக்கு பங்கில்லை என்று மீன் மாதிரி நழுவப் பார்க்காதே. பணத்துக்காக காதலை விலைபேசிவிட்டேன் என்கின்றாயே அன்று திட்டமிட்டு என்னுடைய பலவீனம் எதுவென்று தெரிந்துதானே அடித்தீர்கள்.”

 

“நீ வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டாய் எனத் தெரிய வந்தால் கமலா என்ன நினைப்பாள் என்று யோசித்து பார்த்தாயா?”

 

“அப்போது எதுவும் என் கையில் இல்லை. அம்மா இறக்கும்போது ஸ்டெல்லாவை என் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு போய்விட்டாள் நான் என்ன செய்வது.”

 

“உன் கோழைத்தனத்துக்கு உன் அம்மாவைக் காரணம்காட்டி தப்பிக்கப் பார்க்காதே.”

 

“யெஸ் ஐயம் புல்ஸிட். செய்த தவறை நியாயப்படுத்தப் பார்க்கிறேன். என் பழைய நினைவுக்குறிப்புகளில் மட்டுமே கமலா இருக்கிறாள். வாழ்க்கை எங்களை எங்கெங்கோ கொண்டு சென்று நிறுத்திவிட்டது. ஒரு புள்ளியில் நாங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வது கர்த்தரே. உன் சோதனையில் இதுவும் ஒன்றென நான் சகித்துக் கொள்ளவேண்டுமா?”

 

“உன் பாவத்தைக் கழுவ கர்த்தரே இந்த வாய்ப்பை தர்றாருன்னு நினைச்சிக்க.”

 

டேவிட் கையைப் பிசைந்தபடி, “ஜீஸஸ்! பாவமூட்டையை இறக்கி வைக்க பாவியின் தயவை நாட வேண்டியிருக்கிறதே. என்ன ராயப்பா பூடகமாக பேசுகிறாய் என்ன வாய்ப்பு சொல்லேன் பார்ப்போம்.”

 

“நான் உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன். என்ன, ஏதுன்னு கேள்வி கேட்காம என்னோட வர்றணும்.”

 

“ம். சரி! இன்னும் ஒன்ன முழுசா நம்ப முடியலை ராயப்பா. செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடுறியா.. இல்ல உன் பாவத்துல என்னையும் பங்கெடுத்துக்க கூப்பிடுறியான்னு தெரியலை.”

 

இருவரும் கிளம்பினார்கள் காரை ராயப்பன் ஓட்டிவந்தான். கார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிறித்தவ மிஷனரீஸ்ல் நின்றது. காரை விட்டு இறங்கிய டேவிட் தயங்கியபடி உள்ளே நுழைந்தார்.

 

“ராயப்பன் இங்கே என்ன நடக்குது?”

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரியும் டேவிட்.”

 

மாடிப்படியிலிருந்து கன்னியாஸ்திரி உடையில் கீழே இறங்கி வந்துகொண்டிருந்த கமலாவைப் பார்த்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த டேவிட் திடுக்கிட்டு எழுந்து கொண்டார்.

 

‘ஓ மை லார்டு! இது என் கமலாவா? கர்த்தரே இது என்ன சோதனை மேல் சோதனை. இந்தக் கோலத்தில் கமலாவை நான் பார்க்கவேண்டுமா?’

 

அருகில் வந்த கமலா “நீங்க டேவிட் தானே?” என்று அடையாளம் கண்டுகொண்டு கேட்டாள்.

 

“ஆமாம். அந்த அடிமுட்டாள் நான் தான்.”

 

“என் வாழ்க்கையிலிருந்து போனவர் போனவர்தான்னு நினைச்சிண்டு இருந்தேன். எப்படி இருக்கிங்க?”

 

ராயப்பன் இடைமறித்து “இப்ப அவரு பழைய டேவிட் இல்ல அவருக்குன்னு சொத்து பத்து, ஆள் அம்பு, படை பந்தோபஸ்துன்னு சகஜமும் அவர் பின்னால் இருக்கு” என்றான்.

 

“ஓ! அப்ப உங்களுக்கு மேரேஜ் ஆகி குழந்தைங்கெல்லாம் இருக்கா?”

 

“ஏன் மெளனமா நிற்கிறீங்க டேவிட், கேட்கறாங்கள்ல பதில் சொல்லுங்க.” என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினான் ராயப்பன்.

 

“கமலா உன் எதிரே குற்றவாளிக் கூண்டில் நான் நிற்கிறேன். என் தரப்பை நியாயப்படுத்த முடியாது.”

 

“டேவிட் என்னை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன். நம் எல்லோருக்குமாக அவர் தானே சிலுவை சுமந்தார்.”

 

“இந்தப் பாவி உன்னைக் கைவிட்ட பின் பிதா உனக்கு அபயமளித்திருக்கிறார்.”

 

“இதோ இங்கே உள்ள ஒவ்வொருக்கும் ஒரு கதையுண்டு.”

 

“காதலிக்கிறேன் என்று ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியது பெரும் குற்றமாக உனக்குப் படவில்லையா கமலா? ஐ மீன்! கமலா என்று பெயர் சொல்லலாமா?”

 

“உங்களைப் போல செய்தது தவறு என ஒத்துக்கொள்ள வேறெந்த மனிதராலும் முடியாது.”

 

“ஒத்துக்கொண்டு என்ன பிரயோஜனம் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை அஸ்தமனமாக்கிவிட்டேனே…”

 

“இல்ல இது அஸ்தமனமல்ல புதியவிடியல். கர்த்தருக்காக ஊழியம் செய்வதை பெரும் பாக்கியமா கருதுறேன். இந்த சிலுவையும், பைபிளும் எப்போதும் எனக்கு துணையாய் இருக்கின்றன. எந்த தேவஆட்டுக்குட்டியும் தேவனிடத்தில் வந்து தானே ஆகவேண்டும்.”

 

“வாழ்க்கையில் வசந்தகாலத்தை நீ பறிகொடுத்ததற்கு நான் தானே காரணம்.”

 

“எல்லோரும் அந்திமகாலத்தில் பிதாவிடம் வந்துதானே ஆகவேண்டும். ஒன்றைப் பெறுவதற்கு, ஒன்றை இழந்தாக வேண்டுமல்லவா.”

 

“கமலா நான் உன் வாழ்க்கையில் பிரவேசித்து உன் கனவுகளை சுக்குநூறாக உடைத்ததற்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எதுவானாலும் கேள்.”

 

“வாழ்க்கை கடல் உங்களை ஒரு கரையிலும் என்னை ஒரு கரையிலும் ஒதுக்கி உள்ளது. நம் வாழ்க்கையை நாம்தானே வாழ வேண்டும்.”

 

“இருபத்தைந்து வருஷமாக குற்றவுணர்ச்சி என்னை மென்று தின்று கொண்டிருந்தது கமலா.”

 

“என்னிடம் அன்பும் பரிவும் காட்டிய மனிதரை இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தவறுசெய்வது மனித இனம் மன்னிப்பு அளிப்பது கடவுளின் குணம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக” எனக் கூறி கமலா இருக்கையிலிருந்து எழுந்துகொண்டாள்.

 

டேவிட் அமைதியாக காரை நோக்கி நடந்தார். மேற்கே மின்னல் வெட்டியது. திரும்பி ஒருமுறை தேவாலயத்தின் மேலுள்ள சிலுவையை பார்த்தார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்ற வரிகள் ஞாபகம் வந்தது. அவை டேவிட்டைப் பொறுத்தவரை கர்த்தரால் சொல்லப்பட்டது அல்ல கமலாவால் சொல்லப்பட்டது.

Sunday, November 29, 2020

திருவடி 5 (கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டி விட்டோம்)

 


உயிர்கள் முக்தி அடைவதற்கு முன்னால் பாரத மண்ணில் உடலெடுக்க வேண்டும். இந்து மதம் தனது அடித்தளமாக வேதத்தைக் கொண்டுள்ளது. இந்த நான்கு வேதங்களும் இறைவனால் அருளப்பட்டது. இந்த வேதங்கள் அனைத்தும் வழிகள் பல இலக்கு ஒன்றே என்கிறது. அசாதாரணமான நிகழ்வின் மீது கட்டமைக்கப்பட்ட மதங்கள் மட்டுமே அழிவைச் சந்திக்கும். மற்ற பகுதிகளுக்கு இறைத் தூதரை அனுப்பி வைத்த இறைவன் பாரத மண்ணில் அவரே அவதாரம் செய்கிறார். நானே வழி, என் மூலமாகத்தான் நீ கடவுளைக் காண முடியும் என்று எந்த தீர்க்கதரிசியும் இந்தியாவில் அறைகூவல் விடுத்ததில்லை.

 

தேடுபவர்கள் என் மூலமாக கண்டடைவார்கள் என யாரும் இங்கு பிரசங்கம் செய்ததில்லை. தேடுகிற நீயே அது என்று தான் இந்து மதம் போதிக்கிறது. உள்ளே குடியிருக்கும் ஆன்மாவுக்கு இந்த உடல் கோயிலாக இருக்க வேண்டும் என்கிறது இந்து மதம். சைவமும், வைணவமும் ஆழமாக வேர் விட்டிருந்ததால் தான் எந்தத் தாக்குதல்களையும் தாங்கி நிற்க முடிந்தது. வார்த்தையாலோ காகிதத்திலோ அல்ல சத்தியத்தை உன் வாழ்க்கையில் பின்பற்றுகிறாயா என்பது தான் முக்கியம். மகுடமோ, அரியணையோ எனக்குத் தேவையில்லை மரணத்தின் ரகசியத்தை எனக்கு நீ கூறு என்று எமதர்மனிடம் பிரகலாதன் கேட்டு நின்றதாக உபநிடதங்கள் கூறுகின்றன.

 

சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப்பிள்ளையின் ஆறாவது தாரமான சின்னம்மைக்கு ஐந்தாவது குழந்தையாக 5.10.1823ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இராமலிங்கம் என்று பெயரிட்டு அழைத்தனர். சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்த இராமலிங்கம் சகோதரர் சபாபதிப்பிள்ளையின் பராமரிப்பில் சென்னையில் வளர்ந்தான். கல்விக்காக குருமார்களிடம் அனுப்பிய போது அவரோ இராமலிங்கம் சுயம்புலிங்கம் தன்னை உணர்ந்தவனுக்கு நான் எப்படி குருவாக இருந்து போதிப்பது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பிள்ளை முருகனை கட்டிக் கொண்டது. ஒன்பது வயதிலேயே கந்தக் கோட்டத்திலுள்ள தெய்வத்தை தமிழால் வாவென்றழைத்தது. முருகனின் தரிசனம் கிடைத்த பிறகு இராமலிங்கம் வாயிலிருந்து தமிழ் ஊற்றாய் பெருக்கெடுத்தது.

 

சபாபதிக்கு அன்று உடம்புக்கு நோவு. புராணப் பிரசங்கத்துக்கு வேறு யாரைக் கூப்பிடுவது என்று காரியஸ்தர்கள் யோசித்த போது, இராமலிங்கத்தை அழைத்துப் போகலாம் என்று முடிவானது. தமிழுக்கான மேடையில் முருகன் தன்னை வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறான் என இராமலிங்கம் புரிந்து கொண்டது. அன்று நிகழ்த்தப்பட்ட பிரசங்கத்தில் தேன் குடித்த வண்டாய் எல்லோரும் இராமலிங்கத்தின் பேச்சுக்கு மயங்கினார்கள். இது சபாபதிப்பிள்ளையின் காதுக்கு எட்டியது. அவர் தனக்கு பின் வந்திருப்பது சாதாரணக் குழந்தை அல்ல கடவுள் காரியத்துக்கு நாமும் மண்சுமப்போம் என்று அமைதியானார்.

 

முருகனே தமிழுக்காக சம்பந்தராய் அவதாரமெடுத்ததை இராமலிங்கம் அறிந்து கொண்டது. திருவாசகத்தை வாசித்த போது இராமலிங்கத்தின் மெய்யே உருகிப் போனது. சென்னைப் பட்டணத்தின் பொய்யான வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இராமலிங்கம் மருதூர் வந்தடைந்தது. பின்பு கடலூர் வழியாக வடலூர் வந்து அங்கு சமரச சன்மார்க்க சங்கத்தையும், சத்திய தருமச் சாலையையும் நிறுவியது. மண்ணை பொன்னாக்கும் இரசவாதத்தை செய்துகாட்டி இந்த மண்ணுக்காவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும் ஏன் இறைவனை மறந்து பாவக்குழியில் விழுந்து புரள்கிறீர்கள் என்றது. இராமலிங்கம் பசிக்கு உணவளித்து ஞானத்தாகத்தை தீர்க்கவும் வழி காட்டியதால் வள்ளலார் என அழைக்கப்பட்டது. வள்ளலாரிடமிருந்து நாம் பெற்றுக்  கொண்ட ஞானப் பொக்கிஷம் ஏழேழுப் பிறவியிலும் நம் கூட வந்து நம்மை அரண் போலக் காக்கும் சக்தி படைத்தது.

 

1874ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் அன்று வள்ளலார் வெள்ளாடை உடுத்தி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என வாயால் உச்சரித்துக் கொண்டு சித்தி மாளிகையின் அறையினுள்ளே நுழைந்தார். பக்த கோடிகள் கதவினை வெளிப்புறத்திலிருந்து தாழிட்டார்கள். அவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் திறக்கக் கூடாது என வள்ளலார் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். அவ்வூர் தாசில்தாரிடம் விஷயம் போக மூன்றாம் நாள் திறக்கச் சொல்லும் உத்தரவுடன் வந்து நின்றார். அரச கட்டளைக்கு அடிபணிந்து திறக்கவே உள்ளே அடிகளைக் காணோம் வெறும் கற்பூர வாசமடித்தது. அதிகாரிகள் வெறுங்கையோடு திரும்பினார்கள். ஜோதி சிவத்திடம் கரைந்துவிட்டது. உலகில் சைவ நெறியைக் காக்க போரிடும் மையமாக வடலூர் இன்றளவும் விளங்கி வருகிறது.

Monday, November 2, 2020

திருவடி 4 (பட்டினத்தார் நுனிக்கரும்பு இனிக்கும்வரை நடந்து கொண்டிருந்தார்)

 


உலையில் பழுக்க வைத்து சம்மட்டியால் அடித்தால் தானே அருவாள் உருவாகும். சோதனையும், துன்பங்களும் அப்படியே. அவர்கள் பணத்தாசையும், பெண்ணாசையும் பிடித்து அலைந்து தனக்குத் தானே குழிவெட்டிக் கொள்கிறார்கள், நீ வா உனக்கு மட்டுமாவது உண்மை என்னவென்று புரியவைக்கிறேன் என்று சொல்கின்றான் சிவன். சுவையென்பது வாய் வரைக்கும் தானே தொண்டையைத் தாண்டிவிட்டால் என கொக்கி போடுகிறான். இன்னாருக்கு இன்ன இடத்தில் பிறக்கப்போகிறோம் என்பது யாருக்காவது முன்கூட்டியே தெரியுமா என்ன? பணத்தின் மூலமாக உடலை விலைபேசலாம் மனதை அடிமையாக்க முடியுமா? உடலும் ஓரிரவு மட்டும் தானே உனக்கு வாடகை அடுத்த வாடிக்கையாளர் கையில் பணத்தோடு காத்திருப்பான் அல்லவா? நல்லதை கடைவிரிப்பவர்கள் கொள்வாரில்லை என புலம்பத்தான் வேண்டியிருக்கிறது. காலப்போக்கில் பெண், பொன், மண் திகட்ட ஆரம்பிக்கிறது இதுநாள் வரை நீ சக்கரைப் பாகுவைத்தான் தேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாய். பேரானந்தக் கடலில் அலையில் மட்டுமே நீ கால்நனைத்தாய். மீனுக்கு தான் கடலில் இருக்கிறோம் என்ற தன்னுணர்வு வருமா? நீ கனவு காண்கிறாய் என்பது விழித்த பிறகு தானே உனக்குத்  தெரிகிறது. வாழ்க்கையும் சொப்பனம் தான். சோதனையும், கஷ்டங்களும் உனக்கு அடிமேல் அடி கொடுத்து விழித்துக்கொள் விழித்துக்கொள் என்கிறது.

 

எது இங்கு நிலையானது அதைக் கண்டுபிடி. பெண்ணாசைக்கு நீ ஆட்பட்டாயேயானால் செக்குமாடு மாதிரி இங்கேயே சுற்றிச் சுற்றி வர வேண்டியதுதான். மணணாசையால் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு மீதி நாட்களை சிறைச்சாலையில் கழிக்க வேண்டியது தான். நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உனக்கு ஒருபாடம் ஆனால் நீ அதை புரிந்து கொள்ள மாட்டாய். இது அறிவியல் யுகமாக இருக்கலாம் ஆனாலும் வாய் வழியாகத்தானே உண்கிறோம், நாசி வழியாகத்தானே சுவாசிக்கிறோம். எப்படி நாணயத்துக்கு இருபக்கம் உள்ளதோ அதே போல் வாழ்க்கைக்கு மறுபக்கம் உள்ளது. மரணம் அதைத் தெரியப்படுத்தும். அணை போட்டுத் தடுத்தாலும் நதி கடலை நாடத்தானே செய்கிறது.

 

எத்தனையோ கோடி பேர்களில் ஒருசிலர் தானே உலகத்தைத் துறக்கிறார்கள். சந்நியாசி உலகத்தைத் துறந்தவன் மட்டுமல்ல உலகத்தைப் பொறுத்தவரை அவன் இறந்தவன். உன் நடைமுறை வாழ்க்கையை நேர்படுத்திக் கொள்ளாமல் கடவுள் அருவமா, உருவமா என்று வாதிடுவதில் என்ன பயன். எத்தனை பிறவிகளாக வணங்குவதையே தொழிலாகக் கொண்டிருப்பாய் அவனை நோக்கி ஒருஅடி எடுத்து  வைக்க வேண்டாமா? இந்து மதத்தில் இத்தனை தெய்வங்கள் எதற்கு என்கிறாய்? தாயானவள் குடும்பத்திலுள்ளவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி விதவிதமாக சமைக்க வேண்டியுள்ளதே. முருக பக்தியில் ஆட்பட்டுப் போனால் கந்தா என்றவுடன் கண்களில் கண்ணீர் வர வேண்டாமா? வாழ்வை ஒழுங்காக வாழ்ந்திருந்தால் மரணத்தைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். அம்மா என்ற சொல் உன் அம்மாவை மட்டுமா குறிக்கிறது. கடவுள் மனிதனாக இறங்குவதைப் போல மனிதன் கடவுளாக ஏற்றம் பெறும்வரை இந்த சொக்கட்டான் விளையாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

 

காவிரிபூம்பட்டினத்தில் திருவெண்காடர் பெரும் செல்வந்தர். ஆள்வதற்கு ராஜ்ஜியமிருந்தும் ஒரு வாரிசில்லையே என்ற ஏக்கம் அவருக்கிருந்தது. திருவிடைமருதூர் ஈசனிடம் வரமருள வேண்டிக் கொண்டார். நடப்பது எதுகுறித்து என்று மனிதனால் உணர்ந்து கொள்ள முடியுமா என்ன? அன்றிரவு திருவிடைமருதூரில் வசிக்கும் இருக்கின்ற செல்வத்தையெல்லாம் சிவகாரியங்களில் இழந்த ஆதிசைவர் கனவில் தோன்றி நான் தீர்த்தங்கரை வில்வ மரத்தடியில் ஒரு ஆண் குழந்தையாக தவழ்கிறேன் என்னை திருவெண்காடர் தேடி வருவார் அவரிடம் ஒப்படைத்து விட்டு எனது எடைக்கு எடை தங்கம் தருவார் பெற்றுக் கொள், உன் பீடை ஒழியும் என்றார். அதே நேரம் திருவெண்காடர் கனவில் தோன்றி ஆதிசைவர் குழந்தை தருவார் பெற்றுக் கொண்டு எடைக்கு எடை தங்கம் கொடுத்துவிடுமாறு கூறி இருந்தார்.

 

திருவெண்காடர் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். அவர் உள்ளம் குளிர்ந்தது. சிவனருட்செல்வனாதலால் மருதவாணன் என அவனுக்கு பெயரிட்டார். சிவகலை அம்மாள் குழந்தையின் கால் மண்ணில் பாவாமல் சீராட்டி வளர்த்தாள். காலம் மிகவும் புதிரானது எப்போது காலை வாரிவிட்டுச் சிரிக்கும் எனத் தெரியாது. மருதவாணன் வாலிப பருவத்தை எட்டினான். தந்தையின் முதுமை காரணமாக அவருக்கு ஓய்வளித்துவிட்டு மரக்கலத்தில் வாணிபத்திற்கு தானே புறப்பட்டுச் சென்றான். திருவெண்காடரும், சிவகலையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். மருதவாணன் பொற்குவியலோடு வருவான் என்று திருவெண்காடர் காத்திருந்தார். எவ்வளவு செல்வந்தராக இருந்தும் திருவெண்காடருக்கு பணப்பித்து இருந்தது. அன்று காலை மருதவாணன் திரும்பிவிட்டதாகவும் மரக்கலம் முழுவதும் எருமூட்டைகளும், தவிட்டு மூட்டைகளும் இருப்பதாகவும் வேலையாட்கள் வந்து திருவெண்காடரிம் தகவலை தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

 

மருதவாணன் என்ன காரியம் செய்து வந்திருக்கிறான் பார்ப்போம் என்று திருவெண்காடர் துறைமுகத்துக்கு விஜயம் செய்தார். கோபாவேசத்துடன் வரட்டியொன்றை அவர் தூக்கி வீசியெறிய அதிலிருந்து மாணிக்கப்பரல்களும், நவரத்தினங்களும் சிதறி ஓடின. தவிட்டு மூட்டையைக் கொட்டிப் பார்க்க அனைத்தும் பொற்குவியல்கள். திருவெண்காடர் என்ன தான் இருந்தாலும் என் வளர்ப்பு அல்லவா என பெருமிதம் கொண்டார். மருதவாணனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறினர். திருவெண்காடர் மருதவாணனைக் காண வீட்டிற்கு ஓடிச் சென்றார். விஷயத்தைக் கூறாமல் சிவகலையிடம் பிள்ளையைப் பற்றிக் கேட்க அவன் இந்தப் பெட்டியை உங்களிடம் தரச் சொன்னான் இங்கேதான் எங்கேயாவது ஒளிந்திருப்பான் என்றாள் சிவகலை. திருவெண்காடர் பட்டுத்துணியை அவிழ்த்து பெட்டியைத் திறந்து பார்த்தார். அதில் ஊசியும், ஓலைச்சுருளும் இருந்தது. திருவெண்காடர் ஓலைச்சுருளை எடுத்துப் படிக்க அதில் காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. சிவனுக்கு முருகன் ஞானாவுபதேசம் செய்தது போல திருவெண்காடருக்கு யாரும் சொல்லிக் கொடுக்காததை மருதவாணன் சொல்லிக் கொடுத்துவிட்டான்.

 

திருவெண்காடராக வீட்டினுள் சென்றவர், கெளபீனத்துடன் பட்டினத்தாராக வீதியில் இறங்கினார். மருதவாணா பணத்துக்கு அப்புறம்தான் பந்தபாசம் என்று வைத்திருந்தேன் அல்லவா எனக்கு சிறந்த பாடம் புகட்டி விட்டாய். மாயையைப் பிடித்து உழன்று கொண்டிருந்த எனக்கு உண்மை பிடிபட்டுவிட்டது. காவிரிபூம்பட்டினம் அவரது கோலத்தைப் பார்த்து எள்ளி நகைத்தது. பட்டினத்தடிகள் நினைத்துக் கொண்டார் தான் எதை இழந்தேன் எதைப் பெற்றான் என்று ஈசனுக்குத் தெரியும் இவர்களுக்கென்ன என்று. இறந்தன பிறக்கும் பிறந்தன இறக்கும் எனச் சொல்லிக் கொண்டே ராஜவீதியில் திருவோட்டினை ஏந்திச் சென்றார். அவரது பாடல்களைக் கேட்கும் பொருட்டே ஈசன் நுனிக்கரும்பு இனிக்கும் வரை அவரை நடக்க வைத்தான்.

Wednesday, September 30, 2020

சாக்ரடீஸ் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்!

 


ஏதென்ஸ் நகர வீதிகளில் அலைந்து திரியும் இளைஞர்களே. வாழ்க்கையை பொய்யிலும், புரட்டிலும் அற்ப காரியங்களுக்காகவும் செலவழித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது. உன்னையே நீ அறிவாய். நீங்கள் உள்ளுக்குள் புதையலைச் சுமந்து கொண்டு பிச்சைக்காரர்களைப் போல் அலைகின்றீர்கள். வாலிபம் என்பது வாழ்க்கையின் வசந்தகாலம், வலைவீசும் வனிதையரின் கடைக்கண் பார்வைக்காக இதயத்தைப் பறிகொடுத்துவிட்டு உங்கள் முகவரியை தொலைத்துவிடாதீர்கள். வாழ்க்கை யாருக்கும் தலைவாழை இலை போட்டு விருந்து வைக்காது, தூங்கிக் கொண்டிருப்பவனை தட்டி எழுப்பி புதையல் இருக்கும் பாதாள அறையின் சாவியைக் கொடுக்காது. பஞ்சுமெத்தையில் பரத்தையர்களோடு பேரின்பத்தில் மூழ்கி திளைத்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவர்களின் காலடியில் அடிமைப்பட்டு கிடக்கும் உங்களுக்கு எனது வார்த்தை எனும் வாள் மூலம் காயத்தை ஏற்படுத்துகிறேன் விழித்துக் கொள்ளுங்கள் உறங்குவதற்கான நேரமில்லை இது.

 

இளைஞர்களே சுதந்திர வானில் சிறகடித்துப் பறப்பதைவிட்டுவிட்டு இரண்டு நெல்மணிக்காக கிளிகளைப் போல கூண்டுக்குள் அடிமைப்பட்டு கிடக்கலாமா? மக்களை ஆளுபவர்களின் உண்மையான முகம் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களின் முகமூடியைத்தான் பார்க்கின்றீர்கள். நீதிமான்கள் என்று உங்களால் தொழப்படுபவர்கள் கூட தங்கள் சொந்த வாழ்க்கையில் மிருகங்களைவிட கேவலமான நடத்தை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். பலியாடுகள் அறியாது தாங்கள் எதற்காக பலி கொடுக்கப்படுகிறோம் என்று. ஆட்டுமந்தையாய் இருக்கும் வரை அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டும். கடவுள் பெயரால் கையில் விலங்கிடப்பட்டிருக்கும் உங்களுக்கு நான் விடுதலை அளிக்கிறேன்.

 

இளைஞர்களே நீங்கள் கங்குகள் நான் தீ வைக்கிறேன் பற்றி எரியட்டும் கிரேக்கம். கடவுள் பெயரால் நடக்கும் பித்தலாட்டத்தை எதிர்த்து எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் எத்தனை நாட்கள் ஊமைகளாய் காலத்தைக் கடத்துவீர்கள். உங்களைப் பாவிகள் என்றழைக்கும் கூட்டம் திரைமறைவில் என்னென்ன லீலைகள் செய்கின்றார்கள் என உங்களுக்குத் தெரியுமா? தனது பலம் என்ன என்று தெரியாதவரை தான் யானையை அங்குசத்தால் பணியவைக்க முடியும். பேரலை என்பது பல சிறியஅலைகள் ஒன்று சேர்ந்தது என இந்நாட்டு வேந்தன் அறிந்து கொள்ளட்டும்.

 

மெலிட்டஸ் கூட்டத்தைப் பார்த்தாயா அதில் அரசை எதிர்த்து கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் கயவன் சாக்ரடீஸ் பேசுவதைக் கேட்டாயா? எதிரிகளை இனம் கண்டுவிடலாம். இவன் போன்ற துரோகிகளிடம் தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். காவலர்களே புரட்சியைத் தூண்டியதற்காக சாக்ரடீஸை கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து வாருங்கள். சாட்சிக் கூண்டில் நிற்கும் சாக்ரடீஸிடம் நீதிபதி அவருடைய பேச்சுக்கு விளக்கம் கேட்கிறார்.

 

சாக்ரடீஸ் உன் பேச்சுக்கள் இளைஞர்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடும்படியாக இருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன பதில் தரப்போகிறாய்?

 

ஓ! நாட்டை வெல்பவனைவிட தன்னை வெல்பவனே அரசன் என நான் கூறியது தவறா? நெஞ்சுரத்திடம் கையை உயர்த்துவதும், தாழ்பணிந்து கைகட்டி நிற்பதும் உன் கையில் தான் இருக்கிறது என இளைஞர்களை தட்டி  எழுப்பியது என் தவறா?

 

வாழ்க்கை ருசிப்பதிலும், கேளிக்கைகளிலும், விளையாட்டிலும் வீணாக ஈடுபட்டு பொழுதைக் கழிப்பதற்காக அல்ல, அடுத்த தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க நீ உன் இன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டும். விருட்சம் கிளைபரப்ப நீ மண்ணுள் வேராக இருக்க வேண்டும் என நான் அவர்களுக்கு எடுத்துரைத்ததில் என்ன தவறு கண்டீர்? விடுதலைக்கான திசையை சுட்டிக் காட்டியதற்காக குற்றம் இழைத்ததாக என் ஆட்காட்டி விரலை வெட்டி விடுவீர்களா இதுதான் கிரேக்க நாட்டு நீதியா? பல்லக்கு சுமப்பவன் அமர்ந்து வருபவனிடம் உனக்குதான் கால்கள் இருக்கிறதே எனக் கேட்டால் அவன் கிளர்ச்சியாளன் ஆகிவிடுவானா? அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி மரணத்தை முத்தமிட்ட போராளி இவன் என்று நாளைய வரலாறு உன்னைப் பற்றிக் கூறும் என நான் கூறியதில் என்ன தவறு கண்டீர்? நீங்கள் எண்ணியதை தான் நான் பேச வேண்டுமென்றால் அதற்கு சாக்ரடீஸ் எதற்கு?

 

பார்த்தீர்களா நீதியரசர் முன்னிலையிலேயே தன் வார்த்தைகளுக்கு என்ன வியாக்கியானம் அளிக்கிறான் என்று. நயவஞ்சகன், துரோகி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பவன் பாம்பின் விஷத்தைவிடக் கொடியது இவன் வாயிலிருந்து புறப்பட்டு வரும் வார்த்தைகள். இவனை பேசவிட்டால் நீதியரசரையே தன் வார்த்தை ஜாலத்தால் மயக்கிவிடுவான். விரைவாக தீர்ப்பளியுங்கள் என்று சபையோர் சார்பாக வேண்டுகிறேன்.

 

தேசவிரோத காரியங்களில் ஈடுபட்டது சாட்சியின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் சாக்ரடீஸூக்கு மரணதண்டனை விதிக்கிறது இந்த நீதிமன்றம்.

 

இன்று நான் விஷமருந்த வேண்டும். வாழ்வு மகளை விட்டுவிட்டு மரணதேவதையை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும். எனக்கு இன்னொரு வாசல் திறந்துவிட்டது. பிறக்கும்போது அழுது கொண்டே பிறந்திருக்கலாம் இறக்கும் போது நான் அழ விரும்பவில்லை. மரணத்தைக்கூட வீரத்துடன் எதிர்கொண்டான் சாக்ரடீஸ் என்றுதான் வரலாறு சொல்ல வேண்டும். நான் ஒன்றும் கொலைகாரனல்ல சத்தியத்தின் பக்கம் நிற்பதால் சாவை எதிர்கொள்ளவிருக்கும் தியாகி நான். மதகுருமார்கள் என்னைப் பேசவிட்டால் எங்கே தங்களது ஆட்டம் நின்றுவிடுமோ என அச்சப்பட்டு தான் என்னை கொல்லத் துணிந்திருக்கிறார்கள்.

 

எனது மரணத்தின்போது அரசனின் கையிலுள்ள செங்கோல் நியாயத்தை சீர் தூக்கிப் பார்க்கவில்லை என்பது உண்மையாகிவிடும். அரசே நீ என்னை வேருடன் சாய்த்துவிடலாம். நான் விதைத்த விதையை தேடிப் பிடித்து உன்னால் அழிக்க முடியாது. அரசனே நான் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறேன் என்று ஒருநாள் நீ உணர்ந்து கொள்வாய். இது எனது அந்திமகாலம் இந்த அறிவுசூரியன் இல்லாமல் உலகில் அறியாமை இருள் அகலாது. ஞானத்தை விலைபேசி நான் விற்கவில்லை.

 

அடிமைப்பட்டிருக்கும் நாட்டிலெ்லாம் இந்த சாக்ரடீஸ் தோன்றுவான் ஆள்வோருக்கு எதிராக அறிவாயுதத்தை உபயோகிப்பான். நான் இந்த உலகத்திற்கு கொடுத்துப் போகும் பகுத்தறிவால் எத்தனை சாம்ராஜ்யங்கள் வீழப் போகுது பாருங்கள். இதோ என்னைக் கொல்ல விஷம் வந்துவிட்டது. மரணத்தை சற்று தள்ளிப்போடும் ஆசை எனக்கில்லை இப்பொழுதே அருந்துகிறேன்.

 

எனது கல்லறையில் எழுதி வையுங்கள் பலரை விழிக்கச் செய்தவதன் இங்கு ஓய்வெடுக்கிறான் என்று. நான் இறந்து போகலாம் பலநூறு ஆண்டுகள் நான் ஏற்றி வைத்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். வாதத்தை வாதத்தால் வெல்ல முடியாத கோழைகள் சாம்ராஜ்யம் ஞானத்தீயால் விரைவில் சாம்பலாகும்.

Tuesday, September 29, 2020

திருவடி 3 (எங்கெங்கு கேட்டிடினும் அவன் திருப்புகழே)

 


ஆறுமுகன் கடவுளர்களின் கடவுள். முருகா என்று அவன் நாமத்தை உச்சரித்தாலே பக்தன் மனம் பரவசமடையும். எத்திசை நோக்கி வேண்டுமானாலும் வணங்கலாம் அவன் எங்குமிருக்கிறான். கந்தன்  தமிழில் வைதாரையும் வாழவைப்பான். காடு மலைகளில் முனிவர்கள் தேடி அலைவது தத்துவப்பொருளான முருகனைத்தான். முருகன் பரப்பிரம்மம், இந்தப் பிரபஞ்சத்துக்கே அதிபதி. அவன் அழைக்காமல் தானாக யாரும் பழனி செல்ல முடியாது, வேலனைக் காண வேளை வரவேண்டும். சத்தியத்தின் வழி நடப்பவர்கள் அவனிடம் சரணடைந்துதான் ஆகவேண்டும். தெய்வக்குழந்தை கிரகங்களையெல்லாம் பளிங்கு போல் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அக்குழந்தைக்கு. அடியவர்களுக்கு அடியெடுத்துக் கொடுத்து தமிழில் பாடச் சொல்லிக் கேட்கும். பக்தனுக்கு ஏதாவது ஒன்றென்றால் தான் கடவுள் என்பதைக்கூட அக்குழந்தை மறந்துவிடும். ஆதியில் இருந்தே முருகக்குழந்தை இங்கு தான் இருந்து வருகிறது. பிறவா நிலையை அடைந்தவர்களை அக்குழந்தைதான் மேலுலகங்களுக்கு அழைத்துச் செல்லும்.

 

தன்னை நம்பியவர்களை கரை சேர்ப்பதே அதன் வேலையாக இருக்கிறது. இந்த உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதே அதன் வேலை. உலகில் நீதியை நிலைநிறுத்த அது ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறது. இந்த உலகில் அறத்தை நிலைநிறுத்த அது மனிதர்களை கைப்பாவையாகக் கொண்டு சம்ஹாரம் செய்கிறது. விதி என்ற கோட்பாட்டை உருவாக்கியதே அதுதான். ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்துள்ளது. ஐம்பூதங்களும் முருகக்குழந்தைக்கு அடிமை வேலை செய்கின்றன. ஜனனத்தையும் மரணத்தையும் அதுவே நிர்ணயிக்கிறது. தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை என்று தமிழ்ப்பித்தில் தன்னை மறந்து கிளிப்பிள்ளையைப் போல் முருகலோகத்தில் சொல்லிக் கொண்டு திரிகின்றது. தமிழனும், தமிழும் இங்கு நிலைத்திருக்கும் வரை அது அறுபடை வீட்டிலிருந்து இவ்வுலகை அரசாட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.

 

திருவண்ணாமலையில் பக்திநெறி பிறழாது வாழ்ந்து வந்த திருவெண்காடர், முத்தம்மை தம்பதியினருக்கு ஆதிலெட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆசைக்கு ஒரு பெண் பிறந்தாயிற்று ஆஸ்திக்கு ஒரு ஆண் வேண்டுமே என அவர்கள் முருகனிடம் பிரார்த்திக்க, அவனருளால் அருணகிரி பிறந்தான். வசதிக்கு குறைவில்லாத வணிகக் குடும்பம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்று சகல வசதிகளும் கிடைத்தவுடன் அருணகிரியின் உள்ளம் பிற சுகங்களின்பால் நாட்டம் கொண்டது. வாணிகத்திற்காக கடல் கடந்து சென்ற தந்தை திரும்பவில்லையே என்ற கவலை அருணகிரிக்கு துளியும் இல்லை. அருணகிரி பரணில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கக் காசுகளைத் திருடிக் கொண்டு பரத்தையர் வீடுகளே கதியென்று கிடந்தான். முத்தம்மை முருகனால் கிடைத்த பிள்ளை தறுதலை ஆகிவிட்டதே என மனம் நொந்து இறந்தாள்.

 

நாம் பணியவில்லையென்றால் வாழ்க்கை பாடம் நடத்திவிடும். விதி சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆனால் எப்படி செயல்பட வேண்டும் என்ற முடிவை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறது. ஒருவேளை சோற்றுக்கே அல்லாடுபவர்கள் இங்கிருக்கும்போது உனக்கு பெண்போகம் கேட்கிறதா என வாழ்க்கை சீறிப்பாயும். நீ குருகுலத்தில் உன் ஆசாரியரிடம் கற்றது இதுதானா எனக் கேலி செய்யும். உன்னைப் பார்த்து பித்ருலோகத்தில் உள்ள உன் தாய்தந்தை தலையிலடித்துக் கொள்வார்கள் என செவிட்டில் அறையும். காலத்தே பயிர் செய் என்று சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள் என்று உனக்கு விளங்க வைக்கப் பார்க்கும். அத்தனையும் இழந்துவிட்டு கிழிந்த சட்டையோடு வீதியில கையேந்தி நிப்பப்பாரு அப்ப வச்சிக்கிறேன் என் கச்சேரியை என முகத்தில் காறி உமிழும். அனுபவிச்ச உடம்பு என்னாவப் போகுது பாரு என்று தலையில் அடித்துக் கொள்ளும். மனதின் கருவிதான் உடல். மனம், தான் சுகப்பட ஓருடம்பு போதாது என்று இந்த உலகில் எத்தனை உடலை மனம் எடுத்து போகக்கடலில் மூழ்கியிருக்கிறது பாருங்கள். மனமே இனிமே கறந்த இடத்தையும், பிறந்த இடத்தையும் நீ தேடவே கூடாதென்று வாழ்க்கை சாபமிட்டது.

 

கல்யாணம் பண்ணினால் பொறுப்பு வரும் அருணகிரி திருந்துவான் என எண்ணி ஆதிலெட்சுமி தான் முன்நின்று அருணகிரிக்கு திருமணம் முடித்தாள். என்ன தான் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது மலத்தை நாடித்தானே ஓடும். செல்வம் கரைந்தது மட்டுமல்லாமல் உடல் தொழுநோய் கண்டது. மன்மதனே என்று பல்லிளித்தவர்களெல்லாம் வீட்டு பக்கம் வந்தால் அவ்வளவுதான் என்று அருணகிரி முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். தொழுநோய் கண்டாலும் அருணகிரியின் மனம் ருசிகண்ட பூனையாக உடும்பாக இச்சையைப் பற்றிக் கொண்டதை விடுவதாக இல்லை. பரத்தையர் வீடுகளுக்கு போய் கெஞ்சத் தொடங்கினான், அவலட்சணத்தை காணச் சகிக்காது அவர்கள் கதவடைத்தார்கள். ராஜமரியாதையோடு மஞ்சத்தில் வனிதையரோடு வீழ்ந்து கிடந்ததை நினைத்துப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தான் அருணகிரி. எதிரே ஒரு பெண்ணுருவம் அசைந்து வருவதைப் பார்த்து அருணகிரிக்கு சபலம் ஊற்றெடுத்தது. மனம் தூரிகையை எடுத்து சித்திரம் வரைந்து வருபவள் இவள்தான் என்றது. மெல்ல மெல்ல அந்த உருவம் அருகில் வந்தபோது பார்த்தால் அவள் ஆதிலெட்சுமி, விதுவிதுத்துப்போனது அருணகிரியின் உள்ளம்.

 

ஆதிலெட்சுமி அருணகிரியை நெருங்கி வந்து உன் அவலட்சணம் பெண்ணுக்கு அருவருப்பைத்தான் ஏற்படுத்தும், உனக்கு பெண்ணுடல் தானே வேண்டும் என்னை தமக்கை என்று பார்க்காதே உன் இச்சையைத் தீர்க்க நான் என்னுடல் தருகிறேன் மனமுவந்து சொல்கிறேன் என்னைப் பயன்படுத்திக்கொள் அருணகிரி என்று சொல்லி அவள் தலைநிமிர்கையில் அருணகிரி தலைகுனிந்தான். அருணகிரிக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அம்மா ஸ்தானத்தில் இருப்பவள் இப்படி கேட்டுவிட்டாளே என்று செய்வதறியாது கோயில் நோக்கி ஓடினான். தான் ஒரு காமப்புலையன் என்று தன்னை வெறுத்து வல்லாள மகராஜா கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தான். மனிதர்கள் தொடத் தயங்கிய தொழுநோய் கண்ட உடலை முருகன் தன் திருக்கரங்களால் தாங்கி நின்றான். வேலவன் தன் திருவாயால் ‘வேளை வரவில்லை உமக்கு தமிழில் நீ பாட எத்தனையோ சந்தங்கள் இருக்கு’ என்றான். நானா கவிபாடுவதா எனத் தயங்கிய அருணகிரியிடம், லோக நாயகனே முத்தை என்று முதலடி எடுத்துக் கொடுத்தான். இறக்கும் வரை அருணகிரி கந்தன் திருப்புகழை பாடி வந்தார்.

 

விதைப்பவன் ஒருவன் அறுப்பவன் ஒருவன் இதுதான் உலகநியதி. வியாதியாலே சாக்காடு, செல்லும் பாதையெங்கும் பூக்காடு, இடுகாட்டில் தீக்காடு இதுதான் சைவநீதி. நீ உழைத்ததற்கு பலன் கிடைக்க ஆயிரம் ஆண்டுகளும் ஆகலாம், அடுத்த நொடியிலும் கிடைக்கலாம் எல்லாம் அவன் சித்தம். பட்டுப் போகவிருந்த மரத்திற்கு நீர்வார்த்தேனே அதற்கான பலன் கிடைக்கவில்லையே எனக் கலங்காதே. உனக்கு உணவு அளிக்கபடவேண்டும் என்று விதி இருந்தால் நீ அண்டார்டிகாவில் இருந்தாலும் பனிக்கரடி உன்னிடம் உணவைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். நடப்பது நடந்தே தீரும். விதியை யாராலும் மாற்ற முடியாது. பாரத்தை சுமக்காதே அவனிடம் விட்டுவிடு அவனிஷ்டப்படி நடக்கட்டும். பிரச்சனையை ஆரம்பித்து வைத்தவனே தீர்த்தும் வைப்பான். அவனவன் பிராப்தப்படி ஆங்காங்கு இருந்து ஒருவன் ஆட்டுவிக்கத்தான் செய்கிறான். ஆகையால் சண்முகனிடம் சகலத்தையும் ஒப்படைத்து சரண்புகுவோம்.

Saturday, September 26, 2020

திருவடி 2 (உதித்தது வானில் உச்சித் திலகம்)

 



உலகம் சக்தி சொரூபம். அவளது லீலைகளே இங்கு நடப்பவை எல்லாம். பெண்ணின் கருவறைதான் இந்த உலகம். அவள் சிருஷ்டி செய்த மாயஉலகத்தில் தான் ஜீவன்கள் சிக்கித் தவிக்கின்றன. இந்த தாய்ச்சியைத் தொடும் விளையாட்டில் அவள் சலிப்படைவதே இல்லை. அவளது அருட்கடலில் மூழ்கியவர்கள் எல்லோரும் கையில் முத்துடன் திரும்பினார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். யாருக்கு தன்னைக் காட்டியருள வேண்டும் என்பதை அவளே தீர்மானிக்கிறாள். சக்தி இவ்வுலகில் பலவாகி நிற்கிறாள். அவளது மாயத்திரையை விலக்கி உண்மையின் தரிசனம் காண்பது அவ்வளவு எளிதல்ல. நட்சத்திரங்களையும், கிரகங்களையும், உயிர்களையும் உள்ளிலிருந்து ஆட்டுவிக்கும் ஆற்றல் தான் சக்கி என்பது. உலகன்னைக்கு சூரியன்கூட நெற்றித் திலகமாகத்தான் இருக்கிறான். உங்களுடன் வாழும் தாயும், மனைவியும் பராசக்தியின் வடிவங்களே. உலகத்தைத் துறந்த பட்டினத்தாரால் பெற்றவளின் அன்பை உதற முடியவில்லை. அன்னைக்கு தந்த வாக்குதான் அவள் இறக்கும் தருவாயில் ஆதிசங்கரரை அம்மையை நாடி ஓடோடி வரவைத்ததது.

 

பெண்கள் இருதயத்திலிருந்து வாழ்கிறார்கள், கருணையும், அன்பும் அங்குதான் குடிகொண்டுள்ளது. அக்கரையில் நிற்கும் அவளை நீ சென்று சேர சம்சாரக்கடலை கடந்து தான் ஆகவேண்டும். சக்தியின் சிந்தனை சிவனைப் பற்றியதாகவே இருக்கிறது. அவளது ஆசைவலையிலிருந்து தப்பிப்பது என்பது ஜீவன்களுக்கு சாத்தியமற்ற ஒன்று. தாய் தந்தையிடமிருந்து உடலெடுத்தவர்கள் எல்லோரும் சபலத்திற்கு ஆட்படும் பலகீனமான ஆத்மாக்கள் தான். சிவன் மாயையைக் கடக்க மனிதனுக்கு உதவி புரிகிறான் என்பதே சக்தியின் கோபத்திற்குக் காரணம். போகமா, யோகமா என்று வருகிற போது மனிதன் போகத்தையே தேர்ந்தெடுக்கிறான். மனிதன் தான் எரிந்துவிடுவோம் என்று தெரிந்தும் விட்டில் பூச்சியைப் போல் ஆசை நெருப்பை முத்தமிட்டுக் கொண்டு இருக்கிறான். ஐம்புலன்களுக்கு அடிமையாய் இருக்கும்வரை அவளது திருவிளையாடல்களுக்கு ஆட்பட்டு தான் ஆகவேண்டும். பெண்ணாசையை வென்ற பீஷ்மரை அழிக்க அவள் அம்பா வடிவில் வரவேண்டி இருந்தது.

 

இவ்வுலகம் சக்தியின் பாடசாலை, சிவன் உட்பட எல்லோரும் அவளது சீடர்கள் தான். ஒருவகையில் இவ்வுலகம் சம்ஹார பூமி, தான் பழிதீர்க்க நினைக்கும் அசுரர்கள் எப்போது பிறப்பார்கள் என அவள் காத்துக் கொண்டு இருக்கிறாள். உலகை ஆளும் சிவனே அவளின் காலடியின் கீழ்தான் கிடக்கிறான். இவ்வுலகம் விழித்துக் கொண்டே நாம் காணும் கனவு என்று உணரும்போது அவள் பிடி தளர்கிறது. நீ மரிக்கும்போது உன்னை வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கிறாள். ஈசன் நடமாடும் இடுகாட்டில் அவளுக்கென்ன வேலை. மனிதர்கள் தவறான வழியில் சென்றாலும் தன் மகன்தானே என்ற பாசம் அவளுக்கு இருக்கத்தான் செய்கிறது. ப்ரம்மம் விதி என்ற பெயரில் அவளையும் ஆட்டுவிக்கவே செய்கிறது.

 

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் சுப்ரமணியன். திருக்கடவூரில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அபிராமி அன்னையே அவருக்கு எல்லாம். பக்திப் பித்தில் எங்கு இருக்கிறோம் ஏது செய்கிறோம் என்று அறிய மாட்டார். அகக்காட்சி கிடைக்கும்போது புறத்தில் உள்ளவைகள் எல்லாம் முக்கியத்துவம் இழந்துவிடுகின்றன அல்லவா. அன்றும் அப்படித்தான் அபிராமி அன்னையின் சந்நதிக்கு எதிரே அமர்ந்து அவளின் திருக்காட்சியை கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். அத்தருணத்தில் தஞ்சை சரபோஜி மன்னன் அன்று தை அமாவாசை என்பதால் காவிரிக்கரையில் நீராடிவிட்டு பரிவாரங்களுடன் கோவிலுக்குள் பிரவேசித்தான். கோயிலுக்கு நுழைந்த மன்னனை எல்லோரும் சிரம்தாழ்த்தி வணங்கித் தொழுதபோது அபிராமிபட்டர் சந்நிதிக்கு வெளியே சிலையோல் அமர்ந்திருந்தார். மன்னனுக்கு காலில் முள் தைத்தது போல் ஆயிற்று. உள்ளே சென்று வணங்கியவனுக்கு காலில் குத்திய முள் உறுத்திக் கொண்டே இருந்தது.

 

மன்னன் தன்னை அவமானப்படுத்திய நபரைப் பற்றி விசாரித்தான். இதுதான் சமயம் என்று மற்றவர்கள் அவனுக்கு தான் எல்லாம் தெரிந்தவன் என்று நினைப்பு, ஏதோ சில மந்திரங்கள் உச்சாடனம் செய்தால் மன்னனைவிடப் பெரியவன் ஆகிவிடுவானா என எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்கள். எல்லாம் அறிந்தவனோ நான் விசாரிக்கிறேன் என்றான் மன்னன். சந்நதிக்கு வெளியே வந்து பட்டரே நீர் எல்லாம் அறிந்தவராமே எங்கே இன்று என்ன திதி கூறு பார்ப்போம் என்றான் மன்னன். திடீரென்று புறஉலக ஞாபகத்துக்கு திரும்பிய பட்டர் சிறிதும் யோசிக்காமல் பட்டென்று பெளர்ணமி என்று பதிலளித்துவிட்டார். அரசன் அப்படியா இன்று இரவு நிலவு வரவில்லையென்றால் உனக்கு மரணம் தான் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

சுதாரித்துக் கொண்ட அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் ஓடிச் சென்று அவ்வளவுதானா இனிமேல் உன் திருக்காட்சியை என்னால் தரிசிக்க முடியாதா போய்விட வேண்டியதுதானா என அழுது புலம்பினார். ஒரு முடிவுக்கு வந்தவராய் கோயில் திருச்சுற்றில் குழிவெட்டி நெருப்பு மூட்டி மேல்விட்டத்திலிருந்து நூறு சாரங்கள் கொண்ட உறியைத் தொங்கவிட்டு அதில் நின்றபடி உதிக்கின்ற செங்கதிரே என அந்தாதி பாடலானார். ஒவ்வொரு பாடலை பாடி முடித்ததும் ஒருவொரு உறியாக அறுத்துக் கொண்டே  வந்தார். இரவும் வந்தது அபிராமி பட்டர் மரணசர்ப்பம் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். எழுபத்தொன்பதாவது பாடலை பாடியபோது அபிராமி அன்னை பட்டருக்கு தனது திருக்காட்சியைக் காட்டியருளினாள். அம்மை தான் காதில் அணிந்திருந்த தாடங்கத்தை வானில் வீசி எறிய அது ஒளிவீசும் நிலவாய் மாறி பிரகாசமாய் மின்னியது. அன்னையின் அருளால் நூறு பாடல்களையும் பாடி நிறைவு செய்தார் அபிராமி பட்டர். செய்தியைக் கேள்விபட்ட சரபோஜி மன்னன் ஓடோடி வந்து அபிராமி பட்டரின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

 

மனிதர்கள் தான் பாகுபாடு பார்ப்பார்கள். தெய்வம் பேரரசன், பிச்சைக்காரன் என்று பாகுபாடு பார்க்குமா? நீங்கள் கவனித்துப் பாருங்கள் பூனைக்குட்டி மியாவ், மியாவ்  என்று கத்தியவுடன் தாய்ப்பூனை எங்கிருந்தாலும் ஓடோடி வருவதை. பூனைக்குட்டியால் கத்தத்தான் முடியும் அதனால் வேறென்ன செய்ய முடியும். அப்படித்தான் நாமும். உள்ளம் உருக வேண்டினால், முருகனை தரிசித்ததும் தாரையாக தாரையாக கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தால் அவன் திருக்காட்சி கிடைக்காமலா போய்விடும். இதோ அபிராமி அன்னை பட்டரின் ஆன்மச்சுடரை பற்ற வைத்துவிட்டாள் அந்த வெளிச்சத்தில் இனி பல்லாயிரக்கணக்கானோர் கடைத்தேருவார்கள். அந்தாதி பாடுபவர்கள் அபிராமியைக் காண திருக்கடவூருக்கு வரவே செய்வார்கள். இங்கு தான் அபிராமி பட்டர் உட்கார்ந்திருந்தாரா எனத் அந்த இடத்தைத்  தடவித்தடவி உள்ளங்குளிர்வார்கள். இவை எல்லாவற்றையும் கருவறையிலிருந்து அபிராமி அன்னை பார்த்துக் கொண்டுதான் இருப்பாள்.