எந்த மகனுக்கும் தெரியாதது
சமையலறை கரித்துண்டுகளுக்குத் தெரியும்
வடித்த சாதத்தில் அன்பையும் கலந்ததினால்தான்
அவளை நினைக்கும்போதே கண்ணீர் அரும்புகிறது
மகனின் வாழ்க்கையில் அம்மாவுக்கான இடத்தை
யாராலும் நிரப்ப முடியாது
அடுப்புப் புகையிலிருந்தும், சமையலறை சுவர்களிலிருந்தும்
விடுதலை பெற அம்மாக்கள்
ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்
அம்மாவுக்கான உலகத்தைக் கூடுமானவரை பெற்ற மகனே
ஆக்கிரமித்துக் கொள்கிறான்
சிதைக்கு தீமூட்டிவிட்டு அடுத்தநாள் வந்து பார்த்தேன்
கடலில் கரைக்க அவள் சாம்பலைத்தான்
என்னால் சேகரிக்க முடிந்தது
நடுநிசியில் திடீரென கண்விழிக்கும் போது
பார்க்க நேரிடுகிறது
அவளுடைய புகைப்படத்தில் கண்கள் மட்டும்
ஒளிர்ந்து கொண்டிருப்பதை
ஆண்களுக்குப் புரியாது அம்மா என்பதற்கான அர்த்தம்
ராஜ்ஜியம் இல்லாவிட்டாலும் இவன் அவளுக்கு ராசாதான்.
No comments:
Post a Comment