Tuesday, May 28, 2019

போதி


ஆசை, வெறி இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதா என்ன. மனதை அடக்கத் தெரிந்திருந்தால் மனிதன் அத்துமீறி குற்றம் இழைப்பானா? ஆதாம் அறிவுக் கனியை உண்ட போது உணர்ச்சி வெள்ளம் கரையை உடைத்து பாய்ந்தது. எண்ண அலைகள் மனதில் எழுவதும் அடங்குவதுமாகத் தான் இருக்கும். எண்ணத்தின் மூலவேர்களை ஆராயச் சொன்ன சாதுக்கள், எண்ணத்தின் பின்னாலிலிருந்து உன்னை இறைவன் பார்க்கிறான் என்றார்கள்.

ஸ்ரீராமர் தெய்வமாக போற்றப்படுவதற்கு பதிவிரதன் என்ற ஒரு காரணம் போதாதா. அடிமை சேவகம் செய்து பிழைக்கும் நமக்கு சந்தர்ப்பம் அமையவில்லை அவ்வளவுதான். பத்தாயிரம் மனைவியரைக் கொண்ட தசரதனுக்கு பிறந்தவர் ஒழுக்கசீலராக வாழ்ந்தார் என்றால் எவ்வளவு வைராக்கியம் அந்த மனிதருக்கு இருந்திருக்க வேண்டும்.

கிறித்தவத்தில் சொல்வார்கள்உன் பிதா பரமண்டலத்தில் உத்தமராக இருக்கிறார் என்கின்ற ஒரே காரணத்திற்காக நீ உத்தமனாக இருக்க வேண்டும்என்று. இந்தக் கணினி யுகத்தில் மனிதன் தவறு செய்ய யோசிப்பதில்லை. அதன் விளைவுகளைப் பற்றியும் எண்ணிப் பார்ப்பதில்லை. உடலெடுத்ததே சுகத்தை அனுபவிப்பதற்காகத்தான் என அவன் நினைக்கிறான்.

செய்த தவறுக்கு தண்டனை கிடைக்காமல் தப்பிவிடலாம். ஆனால் மனதில் குற்றவுணர்ச்சி இல்லையென்றால் அவனே அரக்கன். .பி.கோ சட்டம் மாதிரி கடவுளின் விதி இந்த உலகத்தில் செயல்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவ்விதியிடமிருந்து தீர்ப்பினைப் பெறுகிறோம். ஒரு மனிதனின் இருப்பை அழிக்க முயல்பவன் மனஅளவில் இன்னும் மிருகமாகத்தான் இருக்கிறான்.

கொலை பாதகன் தன் அந்திம காலத்தில் மரணத்தை எதிர்நோக்கும் போது மிகுந்த துன்பத்தை அனுபவிப்பான். முக்கியப் பிரஞை என்பதற்காக இறந்தபின் அவனை கடவுளுக்கு அருகில் அரியாசணத்திலா அமர வைப்பார்கள். மோசஸின் கடவுள் தான்கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்என்றாரா இல்லை. உண்மையான கடவுளும் அதே கொள்கை உடையவர் தான்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டலாம் தான். அது உள்ளுக்குள் கடவுளை பிரவேசிக்கச் செய்யும். ஆனால் இறப்பிற்கு பிறகான வாழ்க்கைக்காக அவயங்களை அடக்கிக் கொண்டா இருக்கிறோம். ஒருவர் எத்தகையவர் என்பதை அவரின் மரணமே தீர்மானிக்கிறது. உயிர்த்தெழுந்த போதுதானே உலகம் அறிந்துகொண்டது இயேசு கடவுளின் குமாரன் என்று.

இறைவனின் ஆட்சி அதிகாரம் அதாவது கடவுளின் மேலாதிக்கம் இன்றைய உலகத்தில் குறைவாகவே உள்ளது. அறம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்ற விருப்பமுள்ள மனிதர்கள் இந்த உலகத்தில் பிறப்பது இல்லை. கண்டுபிடிப்புகள் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் மனிதன் கைவிடப்பட்டுவிட்டான். இந்த உலகம் கைவிடப்பட்ட உலகமாகிவிட்டது. இறைவனை சொந்தம் கொண்டாடுபவர்கள் களங்கமற்றவர்களாக இல்லை. தங்களின் வழியே சிறந்தது எனச் சொல்லிக் கொள்ள இங்கே யாருக்கும் அருகதை இல்லை.

கடவுளின் வெறி இருந்த காலம் மலையேறிவிட்டது. இந்த உலகம் கடவுளின் வீடு என்று எண்ணியவர்கள் இங்கே குறைந்துவிட்டனர். சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தெய்வத்தை மறந்துவிட்டார்கள். புத்தர் தான் பிறந்த தேசத்தால் புறக்கணிக்கப்பட்டவர். அமைதிப் புரட்சி செய்ய தன் குமாரனை கடவுள் இனி இந்தப் பூமிக்கு அனுப்பி வைக்க மாட்டார்.

வாழ்க்கைச் சிக்கலைத் தீர்க்க புனிதநூல்களில் தீர்வைத் தேடியது இன்று அடியோடு நின்றுவிட்டது. மனித குலம் தன்னலத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மனித மனம் எதனால் கடவுளிடமிருந்து விலகிச் சென்றது என்ற காரணத்தை கண்டறிய முடியவில்லை. உலகம் பணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது. நீ பணத்தால் எதையும் இங்கு சாதித்துக் கொள்ளலாம என்பதே இன்றைய நிலை.

யார் பிறந்து வந்தாலும் இனி உலகத்தில் தர்மத்தை நிலைநாட்ட முடியாது. மனிதன் அன்பு செலுத்துவதற்குக்கூட பிரதிபலனை எதிர்பார்க்கிறான் தனது மகன் நல்லவனாக இருக்க வேண்டுமென்று பெற்றோர்கள் ஆசைப்படுவதில்லை, அவன் செல்வந்தனாக இருக்க வேண்டுமென்றே அவர்கள் விரும்புகிறார்கள். அந்தஸ்து மனிதனிடம் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறது.

கடவுளர்பூமி என்று இந்த உலகை இனி சொல்லிக் கொள்ள முடியாது. சத்தியவெறி கொண்டவர்கள் கடவுளின் பேரரசை அமைக்க விரும்பினார்கள், மக்கள் அவர்களுக்கு மரணத்தையே பரிசாகத் தந்தார்கள். இக்காலத்தில் வாலிபர்களுக்கு முறையற்ற முறையில் உடலின் தேவைகளை பூர்த்திசெய்து கொள்வது தவறெனப்படவில்லை. தீய நோக்கங்களுக்கு தன் மனதை எளிதாக ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். தீய பார்வையே குற்றம் புரிந்ததற்குச் சமம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

கடவுள் மனித குலத்தை கைவிட்டுவிட்டான். அவன் வகுத்த விதியை மட்டும் அவன் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் பூமியில் பிறப்பு நடைபெறுகிறது. மனிதர்கள் தங்களுக்கு தாங்களே முடிவைத் தேடிக் கொள்வார்கள் என்று கடவுள் முடிவெடுத்துவிட்டார். புத்தரின் சூன்யக் கொள்கை வெற்றி பெற கடவுளே காரணமாகிவிட்டார். கடவுள் மனிதனின் ஆத்மாவைக் கொன்று அவனை பழிதீர்த்துக் கொண்டார்.

புத்தர் சரியாக பனிரெண்டு ஆண்டுகள் கழித்து தனது ஊருக்குத் திரும்பி இருந்தார். தந்தை சுத்தோதனர் தனது ஒரே மகனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். “எல்லா வசதிகளும் இந்த நாட்டில் இருக்க எதைத் தேடி நீ வெளியேறினாய்என்றார். “உடல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது வாழ்க்கை இல்லை தந்தையேஎன்றார் புத்தர். “இன்னொரு முறை என்னை தந்தையே என்று அழை, இதற்காகத்தான் பனிரெண்டு ஆண்டுகளாக காத்திருந்தேன்என்றார் கண்ணீர் மல்க சுத்தோதனர்.

சத்தியத்தின் ஒளி என் மூலமாகச் செயல்பட இடம் கொடுத்துவிட்டேன் தந்தையே, இனி நான் உங்கள் மகனல்லஎன்றார் புத்தர். “எனக்குப் பிறகு இந்த ராஜ்யத்தை யார் ஆள்வது என்று நினைத்துப் பார்த்தாயா?” என்றார் சுத்தோதனர். “இந்த நதி கடலோடு கலந்துவிட்டது, இனி  என் நாடு, என் மக்கள் என்ற பேதம் எனக்கில்லை தந்தையேஎன்றார் புத்தர்.

இதோ பார் உன் மனைவி யசோதரை வந்திருக்கிறாள் அவள் முகத்தைப் பார்”. கண்ணீர் மல்க நிற்கும் யசோதரை புத்தரைப் பார்த்து, “நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்து எவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டது ஒருமுறையாவது என்னை நினைத்துப் பார்த்தீர்களா?” என்றாள் யசோதரை. “சித்தார்த்தனுடன் நீ கொண்டுள்ள உறவைப் பற்றி என்னிடம் பேசாதே யசோதா சித்தார்த்தன் மரித்துவிட்டான் நான் புத்தர்என்றார். அவருடைய பதிலால் சினமடைந்த சுத்தோதனர் புத்தருக்கு எதிராய் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டினார்.

அவரை சாந்தப்படுத்திய யசோதரை, “அரண்மனையைவிட்டு நீங்கள் வெளியேறும் போது என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே?” என்றாள்.

வாழ்க்கையின் துயரத்திற்கு விடை காண வேண்டும் என்பதைத் தவிர அப்போது ஒன்றும்  நினைக்கத் தோன்றவில்லை யசோதாஎன்றார் புத்தர்.

நான் தடுத்தவுடன் உங்கள் முடிவைக் கைவிட நீங்கள் என்ன அவ்வளவு பலகீனமானவரா?” என்றாள் யசோதரை.

உறவுச் சங்கிலியை ஒரு நொடியில் அறுத்தெறிவது அவ்வளவு சுலபமில்லை யசோதா. நாம் செலுத்தும் அன்பே நமக்கு பலவீனமாகுமா யசோதா. அப்போது என் மனம் கல்லாகிவிடவில்லை ஏதோ ஒரு உந்துதலால் தான் நான் அரண்மனையைவிட்டு இரவே வெளியேறினேன்என்றார் புத்தர்.

இதே வேலையை நான் செய்திருந்தால் நீங்களும், சமூகமும் என்னைக் கொண்டாடி இருப்பீர்களா?” என்றாள் யசோதரை.

நற்செயலுக்கான பலன்களும், தீச்செயல்களுக்கான பலன்களும் நிழல் போல மனிதனைத் தொடர்ந்து வருகிறது யசோதா, யார் யாரை எங்கு வைக்க வேண்டுமென அதுவே முடிவு செய்கிறது”.

நீங்கள் ஏன் வெளியேறினீர்கள்? வீட்டிலேயே நீங்கள் தேடியதை அடைந்திருக்க முடியாதா?” என்றாள் யசோதரை.

அடைந்திருக்கலாம் தான் யசோதா, மரணத்தை துரத்திக் கொண்டு தான் நாட்டைவிட்டு ஓடினேன் யசோதா. நானும் பயந்து கொண்டு அரண்மனையிலேயே இருந்திருந்தால் சுகபோகங்களால் சத்தியத்தை மறந்து இருப்பேன் அல்லவா?” என்றார் புத்தர்.

தந்தைமார்கள் தங்கள் மகனுக்கு சொத்தை விட்டுச் செல்வார்கள், நீங்கள் உங்கள் மகன் ராகுலனுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்றாள் யசோதரை.

புத்தர் தான் அரண்மனையைவிட்டுக் கிளம்பும்போது அவரது மகன் உறங்கிக் கொண்டிருந்தான். போர்வையை விலக்கி அவன் முகத்தைப் பார்த்தால் தனது வைராக்கியம் பனியாக உருகிவிடுமோ என அஞ்சி மகனின் முகத்தை காணாமலேயே அரண்மனையைவிட்டு வெளியேறினார். இந்த பனிரெண்டு வருடங்களில் எங்கோ ஒரு மூலையில் ராகுலனின் நினைவு ஒளிந்து இருக்கவேண்டும். புத்தர் யாருடைய பேச்சையும் செவிமடுக்கவில்லை. அவரது கண்கள் ராகுலனைத் தேடின.

ஒரு தந்தையாக உங்கள் மகனுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என யசோதா கேட்டாள். மகனே நான் கண்டடைந்த ஞானத்தின் மூலமாக உனக்கு நான் தீட்சை அளிக்கிறேன். நான் துறவு பூணவில்லையென்றால் சத்தியத்தைத் தேடி நீ அரண்மனையைவிட்டு வெளியேறியிருப்பாய். மகனே என்னை கையாலாகாதவன் என எண்ணிவிடாதே. நீ கடக்க வேண்டிய பாதையில் நான் ஒளியாய் இருப்பேன்.

இதோ இந்தத் திருவோட்டைப் பிடி. என் ஞானத்தை உனக்கு நான் பிச்சையாக இடுகிறேன் மகனே. இனி இந்தக் கைகள் தான் எனது பிச்சைப் பாத்திரம். ஞானம் பெற்ற அன்று நான் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன் என் மகனே. வாழ்க்கைக் கடலில் நீ மூழ்கிவிடாதபடி உன்னைக் காப்பாற்றத்தான் ஞானமடைந்த அடுத்த நொடியே நான் உன்னைக் காண கபிலவஸ்து நாட்டிற்கு வந்தேன். எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன். எனது மனக்காயங்கள் இனி ஆறிவிடும். என்னைத் தேடுவதிலேயே நேரத்தை வீணடிக்காதே என் மகனேஎன்று விடைபெற்று அவர் மீது விழுந்த
அரண்மனையின் நிழலையும் தாண்டி எங்கோ புத்தர் சென்று கொண்டிருந்தார்.

Wednesday, October 24, 2018

பொம்மலாட்டம்


1
மனக்குளத்தில் கல்லெறிந்துவிட்டு வேடிக்கை பார்ப்பது யார்
சஞ்சலமுடைய மனம் வாழ்க்கையின் ஒளிக்கீற்றை காணவிடாது
என் மனவானை எண்ண மேகங்கள் சூழ்ந்தவண்ணமே இருக்கின்றன
ஏதோவொன்றை நினைத்து ஏங்கியே என் தூக்கம் தொலைகிறது
உறக்கம் ஓய்வைத் தராதபோது பகல் எனக்கு நரகமாகிறது
இரையை ருசித்த மீன் தூண்டிலின் ரணத்தை அனுபவித்துதானே ஆகவேண்டும்
எனது வேட்கையைத் தூண்டும் உடலும் ஒருநாள் சிதையில் எரியப் போவதுதானே
மோக வலையை கிழித்தெறியும் சூலாயுதம் சிவனிடம் மட்டுமே இருக்கிறது
வசீகரிக்கக்கூடிய அழகுடையவர்களெல்லாம் ஒருநாள் நெருப்புக்கு இரையாகத்தானே போகிறார்கள்
ஊசலாடும் மனது மாய உலகினை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறது
எனக்கு நிம்மதியான உறக்கத்தை கல்லறை ஒன்றே கொடுக்கும்
இயற்கையின் சட்டதிட்டங்கள் கடுமையானவை என எனக்குத் தெரியாது
நடப்பவை அனைத்தும் என்றோ முடிவு செய்யப்பட்டவை என்பது உண்மைதான்
இந்த உலகம் அசாதாரண மனிதர்களை பைத்தியம் என்று தான் அழைக்கிறது
இந்தச் சிறைச்சாலையில் விடுதலை உணர்வுக் கொண்டவர்களே தங்களைக்
கைதிகளாக உணருகிறார்கள்
இந்த அலைகளின் மோகம் தணிவதாகத் தெரியவில்லை
எனது ஆன்மாவின் ஏக்க கீதங்களைக் கடவுள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்
இன்று வரை மன்னிப்பின் ஒளி என்மீது படவில்லை
கடவுளின் கைக்கூலிகளுக்கு கருணையென்றால் என்னவென்று தெரியாது
கடவுளின் பிரதிநிதி இன்னும் இந்த உலகைவந்து அடையவில்லை
சாத்தான் ஒருவனால் தான் கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற முடிந்தது
நியாயத்தீர்ப்புநாளில் இந்தப் பாவியால் கடவுளின் கண்களை நேரிடையாக சந்திக்க இயலுமா
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் சதுரங்க விளையாட்டில்
நகர்த்தப்படும் காய்கள் தான் மனிதர்கள்
சாத்தானுக்கு பணிவிடை செய்யும் என்னால் தான் கடவுளின் மகத்துவத்தை உணர முடியும்
இந்த வாழ்க்கை கடவுளுக்கு விளையாட்டாக இருக்கலாம்
எனது துயர்மிகு வரிகளில் ஏதோவொரு உண்மை ஒளிந்திருக்கலாம்
துயரச்சிலுவையை சுமப்பவர்கள் எல்லோரும் கடவுளின் குமாரரர்களாக ஆகிவிட முடியாது.


2
ஆழ்கடலின் சலனங்களே அலைகளாகின்றன
வானமண்டலத்தின் கண்களே விண்மீன்கள்
வாழ்க்கை சிலருக்குப் பரிசாகவும் சிலருக்கு தண்டனையாகவும் ஆகிவிடுகிறது
வந்துபோகும் மனிதனால் கடவுளின் இருப்பைக் கண்டுகொள்ள முடியுமா
இந்த உடற்கூட்டிற்குள் சிறைப்பட்டிருப்பது இம்சையல்லவா
படைப்பு பூரணமடையும்வரை இந்த உலகம் இங்கு இருந்துகொண்டுதான் இருக்கும்
நடப்பவைகளை கைகட்டி பார்க்க வேடிக்கைப் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலை எனக்கு
ஆசாபாசங்களை வைத்து கடவுள் மனிதனை பலவீனப்படுத்தி இருக்கிறான்
மரணம் சற்றே நம்மை ஆசுவாசப்டுத்திக் கொள்ள இடமளிக்கிறது
இயற்கை கடினமான ஆசிரியராக என்னிடம் நடந்து கொள்கிறது
என்னிடம் மட்டும் ஏன் பறித்துக்கொண்டாய் என்று உன்னிடம் நான் காரணம் கேட்க முடியாது
உனது குமாரனுக்கே சிலுவையை பரிசளித்தவன் தானே நீ
நீ கருணையுடையவனாய் இருந்திருந்தால் என்னை இங்கே அனுப்பியிருக்க மாட்டாய்
உன்னைப் பற்றிய ஒரு உண்மையை நான் சொல்லாமல் இருப்பதற்கு நீ காரணமல்ல
சத்தியத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கெல்லாம் நீ நரகத்தைத் தானே பரிசாக அளித்தாய்
உன்னால் வஞ்சிக்கப்பட்டவர்களின் மரணஓலம் என்காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
பரிசோதனை எலிகளிடம் ஆராய்ச்சியாளனுக்குப் பரிவு ஏற்படுமா என்ன
எங்கே தொலைத்தேன் என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன்
உன்னைப் மறுப்பவனுக்கு வாழ்வில் ஏற்றம் தருவதுதானே உன் திருவிளையாடல்
உன்னைத் தேடுபவர்களிடம் நீ திருவோட்டைத்தானே பரிசாகத் தருகிறாய்
விலைகொடுத்து எதையும் வாங்கக் கூடிய தனவந்தர்கள் உனக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்
அன்பிற்கு என்ன விலையை நிர்ணயிக்க முடியும்
வாழ்வுப் புத்தகத்தில் என் பக்கம் மட்டும் வெற்றிடமாக இருக்கட்டும்
ஒவ்வொரு விடியலும் வேதனையைத் தான் தாங்கி வருகிறது
அமைதியான இரவு என்று எனக்கு வாய்க்கும்
நிசப்தமான அந்திப்பொழுதில் மலைப்பிரசங்கத்தை கேட்கும் ஜனத்திரள்களில்
நானும் ஒருவனாக நின்று கொண்டிருக்கிறேன்
பாழடைந்து கிடக்கும் எனது மனக்குகையில் பிரார்த்தனை ஒலி கேட்கிறது
வேதனைக் கிடங்குகளுக்கு உரிமையாளனாகத்தான் என்னை ஆக்கிவைத்திருக்கிறது இந்த வாழ்க்கை
எந்த வாதப்பிரதிவாதத்தையும் செவிமடுக்காமல் எதேச்சதிகாரமாய்
அவன் எடுக்கும் முடிவுகளுக்கு நான் எத்தனை நாள் ஆதரவளிப்பது.


3
இரவுப்பொழுதை நான் வாவென்று அழைப்பதற்கு கனவுகள் தான் காரணம்
இந்த நெடிய வாழ்வில் கனவுகள் தான் இளைப்பாறுதல் தருகிறது
நீரோட்டத்தின் திசையில் செல்பவர்களை நதி தாங்கிக் கொள்கிறது
இந்த வெண்மேகங்கள் ஒன்று மாதிரி மற்றொன்று இருப்பதில்லை
இயற்கையின் உந்துதலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன
மரணத்தை விழைவிப்பவர்களுக்கு நீயாரென்பது முக்கியமல்ல
அந்திப் பொழுதில்தான் என்மனவிருட்சம் பூத்துக் குலுங்குகிறது
வெயிலில் வெறுங்காலுடன் நடப்பவர்களின் பாதங்கள் நிழலை நாடித்தானே செல்லும்
வார்த்தை தவறிவிட்டதற்காக உன்மீது எனக்கு வருத்தமில்லை
ஆட்டுவிப்பவனுக்கு மட்டும்தான் தெரியும் இங்கு நடப்பது பொம்மலாட்டம் என்று
செடியிலிருந்து பறிக்கப்பட்ட மலரிடம் மனிதன் நன்றியினை எதிர்பார்க்கலாமா
நிராகரிப்பின் வலி மரணத்தைவிடக் கொடியதென்று நீ உணரமாட்டாயா
குற்றம் புரிந்த என்னை என் நிழல்கூட வெறுத்து ஒதுக்குகிறது
நிமித்தங்கள் செய்த எச்சரிக்கையை நான் அலட்சியப்படுத்திவிட்டேன்
வார்த்தைகள் என்னைக் காயப்படுத்துகிறது
எனது சுமையை வேறுயார் சுமப்பார்கள்
சுவர்க்கத்தின் கடவுச்சீட்டுக்காக இந்த உலகத்தில் உள்ளோரை நரகத்தில் என்னால் தள்ள இயலாது
எனது சக்திக்கு மீறிய செயலை என்னிடமிருந்து நீ எதிர்பார்க்காதே
என்னை சோதனைக்கு உள்ளாக்கும்  முன்பு எனது தரப்பு நியாயத்தையும் நான் சொல்லிவிடுகிறேன்
நான் கதறி அழும்போது ஆறுதலாய் தலைகோதிவிட எனக்கென்று எவருமில்லை
எல்லாவற்றையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டவர்கள் கடைசியாக என் உயிரையும் கேட்கிறார்கள்
ஆபிரகாமுக்கு முன்பிருந்த உனக்கு என்னைப் பற்றியும் தெரிந்திருக்குமே
திருச்சபைக்கு வரும் பாவிகளை நீ இரட்சிக்க மாட்டாயா
பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து நீ மட்டும் எப்படி தப்பினாய்
துயரக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கிழக்குக்கு ஒரே ரட்சகன் நீயல்லவா
உனது வருகையை நான் இந்த உலகுக்கு தெரிவிக்கிறேன்
ஏனெனில் மெசியாவுக்கு சாட்சியாக இங்கிருப்பது நான் ஒருவன் மட்டும் தானே.

Saturday, July 28, 2018

உயிர்த்திசை

எந்த மகனுக்கும் தெரியாதது
சமையலறை கரித்துண்டுகளுக்குத் தெரியும்
வடித்த சாதத்தில் அன்பையும் கலந்ததினால்தான்
அவளை நினைக்கும்போதே கண்ணீர் அரும்புகிறது
மகனின் வாழ்க்கையில் அம்மாவுக்கான இடத்தை
யாராலும் நிரப்ப முடியாது
அடுப்புப் புகையிலிருந்தும், சமையலறை சுவர்களிலிருந்தும்
விடுதலை பெற அம்மாக்கள்
ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்
அம்மாவுக்கான உலகத்தைக் கூடுமானவரை பெற்ற மகனே
ஆக்கிரமித்துக் கொள்கிறான்
சிதைக்கு தீமூட்டிவிட்டு அடுத்தநாள் வந்து பார்த்தேன்
கடலில் கரைக்க அவள் சாம்பலைத்தான்
என்னால் சேகரிக்க முடிந்தது
நடுநிசியில் திடீரென கண்விழிக்கும்  போது
பார்க்க நேரிடுகிறது
அவளுடைய புகைப்படத்தில் கண்கள் மட்டும்
ஒளிர்ந்து கொண்டிருப்பதை
ஆண்களுக்குப் புரியாது அம்மா என்பதற்கான அர்த்தம்
ராஜ்ஜியம் இல்லாவிட்டாலும் இவன் அவளுக்கு ராசாதான்.