Wednesday, May 16, 2018

கருவறை வாசனை


நதிப்பிரவாகமாக சிந்தனை ஓட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. சில வேளைகளில் இப்படி அமைந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஞாபக அடுக்குகளிலிருந்து மேலெழும்பும்.
பேனா நகர மறுக்கிறது. சிந்தனை ஓட்டம் மட்டும் நின்றபாடில்லை. காதலித்தவளை அடிக்கடி இந்த மனம் சீண்டிப்பார்க்கிறது. பெண்களுக்கு இருமனமாக இருக்க வேண்டும்.
கண்பார்த்து சிரித்ததையும், அவனை நினைத்தவுடன் நாணத்தால் முகம் சிவந்ததையும் எளிதாக மறந்து விடுகிறாள். மறந்து விடுகிறாள் என்பது சரியாகாது. அந்த மனத்தை புறந்தள்ளி கொண்டவனை இன்னொரு மனத்தின் சிம்மாசனத்தில் அமர்த்திவிடுகிறாள்.
பெண்ணால் தான் சிவன் பித்தனாகி இருப்பான். கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவன் தான்.
பள்ளியின் நீலநிற தாவணியும் வெள்ளை ரவிக்கையும் அவளுக்கு பொருத்தமாயிருக்கும். கலர் என்றால் அப்படியொரு கலர். இவன் கறுப்பு அரூபி.
இப்போது தான் அரூபி என்று நினைத்துக் கொள்கிறானே தவிர, அப்போது அப்படியில்லை. இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் போது இவன் கால் பூமியில் இருக்காது.
இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள். குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருப்பாளோ. என் நினைவுகளை குழி தோண்டி புதைத்திருப்பாள்.
பெண்கள் அன்பை நிராகரித்து பணத்தையே பெரிதென மதிக்கிறார்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு எங்கிருந்து ஏற்பட்டிருக்கும். அரசனின் அந்தப்புர நாயகிகளெல்லாம் அரசனின் அழகுக்காகவா அவனுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார்கள்.
இராமாயண காலத்திலேயே சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாக இருந்தால் தான் சுயம்வரத்திலேயே பங்கேற்க முடியும்.
காதல் புனிதமானது தான். ஆனாலும் மன அழுக்கு காதலையும் விட்டு வைக்கவில்லை. தங்க நகைகள் மீது பெண்கள் ஏன் பேயாய் அலைகிறார்கள் என எனக்குப் புரியவில்லை.
இவனுக்கு வக்கிருந்தால் வாங்கித் தந்திருப்பான். இப்படி எழுதிக் கொண்டிருக்க மாட்டான்.
இப்போது காதலை நேரில் சொல்ல தைரியம் இல்லாதவர்கள். செல்போனில் மெசேஜ் அனுப்பிவிடுகிறார்கள். அன்று அப்படியா?
சினிமாவின் பாதிப்பு இளசுகளிடம் இன்று கொஞ்சம் அதிகமாய்த்தான் இருக்கிறது. அன்று அப்படி அல்ல.
என் காலத்தில் காதலை கடிதம் சுமந்தது மாதிரி, இன்று காற்று சுமக்கிறது. எத்தனை பேர்களின் காதல் காற்றலைகளில் அலைந்து கொண்டிருக்கிறதோ?
எழுத உட்கார்ந்த நேரமே சரியில்லை. இந்த காதல் வேதாளம் இப்படி தோளில் அமர்ந்து கொண்டு கேள்வி மேல் கேட்டு இம்சைப்படுத்துகிறது.
எல்லாரையும் போல என் முதல் கவிதையும் காதலியை வர்ணித்து எழுதப்பட்டது தான். காதலைவிட பைத்தியக்காரத்தனம் இந்த உலகில் வேறெதுவும் கிடையாது.
எழுதி பிச்சை கேட்டது போதும் நாலுகாசு சம்பாதிக்க வழியைப் பாரு இது என் வீட்டுக்காரி. கல்யாணச் சந்தையில் பெண் தன் எடைக்கு நிகராக அவனிடம் பணம் இருக்கிறதா எனப் பார்க்கிறாள்.
அதுசரி இதை ஏன் நான் இந்த நாற்காலியில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். பணத்தை எங்கே தேடுவேனென்று ஏற்கனவே கேட்டாகிவிட்டதல்லவா?
எழுத்தை நம்பி வாழ்வதென்பது தற்கொலைக்குச் சமமானது. எழுதிப் பிழைக்கிறவர்களுக்கு சினிமாவின் தயவு அவசியமாய் தேவைப்படுது. ஆனா அங்க எழுதறவனை நிஜார கழட்டிட்டுத்தான் ஆடவிடறாங்க.
இந்த நினைவுக்கு கப்பம் கட்ட வேண்டியதில்லை. அதனால் தான் அவளையே நினைத்துக் கொண்டுள்ளது. சித்தர்கள் சொல்லித் வைத்ததற்கெல்லாம் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
என்னைப் பொறுத்தவரை கொடுத்துக் கெடுக்கிறான் சிவன் என்று தான் சொல்வேன். உடலைப் பேணுவதிலேயே வாழ்நாளை செலவழிக்கிறோம். இறுதி ஊர்வலத்துக்குக் கூட குளிப்பாட்டித் தான் கூட்டிச் செல்கிறார்கள்.
இந்தக் காற்றையும் விலைகொடுத்து வாங்க வேண்டிய காலம் வரலாம். அலைந்து கொண்டிருக்கிற மனம் ஆன்மாவில் லயிப்பதைத்தான் உறக்கம் என்கிறோமோ?
மூளை நரம்புகள் விண்ணென்று தெரிக்கிறது. காபி அருந்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. என் எழுத்து யாருக்கு பிரயோஜனமாகும். எழுதுவதற்கு பேப்பர், பேனா வாங்க வேண்டியிருக்கிறதே அவனுக்கு பிரயோஜனமாகாதா என்ன.
இரவின் ரகசியம் சிவனுக்கு மட்டும் தான் தெரியும். அழகானவர்களின் மண்டையோட்டினை பார்த்து தான் அவன் தன் கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறான்.
காலவெள்ளம் எவ்வளவு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமா என யோசிக்க வேண்டியிருக்கிறது.
கைநோகிறது பேனா நகரமாட்டேன் என்கிறது. நினைவுக் கிணற்றில் தூர் வாரினால் இன்னும் என்னென்ன அகப்படுமோ?
கண்களை மெல்ல மூடினேன். நினைவு அலைகள் மட்டும் எழும்பியபடியே இருந்தது. சமீபகாலமாக மனதில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிடப் போகிறதென்று பயம் கவ்விக் கொள்கிறது.
ஒரு நூறு வருடத்துக்கு முன் பிறந்திருக்கக் கூடாதா என ஏக்கமாக உள்ளது. தடுக்கி விழுந்தவனை வியாதி வந்து படுக்க வைத்தது. உடல் பெரும் சுமையாக இருக்கிறது. உறக்கத்துக்கு மனம் ஏங்கித் தவிக்கிறது.
காரணமில்லாமல் காரியமில்லை செய்த பாவத்துக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்துவிடுகிறது. காலில் குத்தியிருந்தால் பிடுங்கிவிடலாம் மனதில் குத்திய முள்ளை என்ன செய்வது.
காலம் தாழ்ந்துதான் நான் விழித்துக் கொண்டேன். அப்போது நிம்மதி என்னைவிட்டு தொலைந்து போயிருந்தது. இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
அன்பு செலுத்த யாருமில்லாதபோது மனிதன் அனாதையைப் போல் உணருகிறான். ஏற்கனவே பேதலித்துப் போன மனதை காலமும் பயமுறுத்துகிறது.
நேரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. மரணத்திற்குப்பின் வாழ்வு இருந்தால் எனக்கு அது கொடியதாகத்தான் இருக்கும். மாம்சம் சாம்பலாக வேண்டும். நினைவு சூன்யமாக வேண்டும்.
ஒவ்வொன்றாக என் கையைவிட்டு போய்க் கொண்டிருக்கிறது. நம்பிக்கையின் ஆணிவேரையே வாழ்க்கை அசைத்துப் பார்க்கிறது. உறவுகள் எத்தனை காலத்துக்கு நம் கூடவே இருக்கும்.
மனிதனின் கையாலாகாத தனத்தை கடவுள் உணர்த்திக் கொண்டே இருக்கிறான். அவனிடமிருந்து ஒவ்வொன்றாக பறித்துக் கொள்கிறான்.
அம்மாவின் கருவறை கொடுத்த நிம்மதியை வேறெங்கே தேடுவேன். தாயின் அன்புக்கு நிகரானது இவ்வுலகில் வேறொன்றுமில்லை.
இப்போது ஏன் என் நினைவு அம்மாவை வட்டமிடுகிறது எனத் தெரியவில்லை. இன்னும் அவள் என்னை சுமந்து கொண்டுதான் இருக்கிறாள்.
அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இந்த உலகத்தில் என்னைத் தன்னந்தனியாக விட்டுவிட அவளுக்கு இஷ்டமிருக்காது.
பெண் என்ற வட்டத்துக்குள் தான் இன்று வரை என் வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டுள்ளது. விடை தெரியாத புதிராகத்தான் விடிகிறது பொழுதுகள்.
இயேசு சிலுவை சுமந்து போது மேரிக்கு எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன். தனது மகனுக்கு தன் கையால் காரியம் செய்வது இறப்பை விடக் கொடுமையானதல்லவா? சுழன்றடிக்கும் வாழ்க்கைப் புயல் யாரை எங்கு கொண்டு சேர்க்கும் என யாருக்குத் தெரியும்?

Tuesday, May 8, 2018

கூடு


வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் கடையில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியிருந்தது.கலையரசன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
திருவாரூர் செல்லும் பேருந்து வந்தது.அவ்வளவு கூட்டம் இல்லை.கலையரசன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். அவன் இப்போது மடாலயத்திற்கு சென்று கொண்டிருக்கிறான்.
வாழ்க்கையில் அவன் எதிர்கொண்ட அனைத்திலுமே தோல்வியடைந்திருக்கிறான். காதல்,கல்வி,வேலை என அனைத்தும் அவனுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தன.
ஊருவிட்டு ஊரு வந்து சென்னையிலுள்ள பெண்ணைக் காதலிக்க நெஞ்சுரம் வேண்டாமா? கடைசியாக அப்பெண் வானனும் பூமியும் எப்போதும் ஒன்று சேர்வதில்லை என வசனம் பேசிவிட்டு விடை பெற்றுக் கொண்டாள்.
கல்லூரியில் கடைசி ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்ததால் இரண்டாம் வகுப்பில் தான் தேர்ச்சி பெற முடிந்தது கலையரசனால்.
கிட்டதட்ட அரை சதம் அடித்திருப்பான் நேர்முகத் தேர்வில். அதில் சில இடங்களில் வேலை பார்த்தும் சரிவராமல் விட்டுவிட்டான். மனதை ஒரு முகப்படுத்தி எந்த இடத்திலேயும் அவனால் நிலைக்க முடியவில்லை.
தோல்வியால் துவண்டிருந்த அவன் இந்த உலக இயக்கத்திற்கு அடித்தளமாக விளங்கும் சக்தியை அறிந்து கொள்வதற்கு முயன்றான்.
பணம் பிரதானமாய்ப் போன உலகமாக ஏன் மாறியது இவ்வையகம் என தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். பேருந்து முன்னோக்கிச் செல்ல மரங்களும்,வீடுகளும் பின்னோக்கிச் சென்ற வண்ணமிருந்தன. இதுவரை தான் சந்தித்த நபர்களில் பலபேர் தாங்கள் என்னமோ வானிலிருந்து குதித்து வந்தவர்கள் மாதிரியும் மற்றவர்கள் மட்டும் பிறந்து வந்த மாதிரியும் நடந்து கொண்டதைக் கண்டு மனம் குமைந்திருக்கிறான்.
பணம் முதன்மைப்படுத்தப்படும் உலகில் வாழப்பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வது? பிறப்பையும் இறப்பையும் நிர்ணயிக்கும் சக்தி எது. வாழ்க்கையின் பொருள் என்ன. பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தில் மனிதன் சிறு தூசு என தன்னை உணராமல் ஏன் தான்தோன்றியாக் குதி்க்கிறான்.
உண்மையின் பாதை கடினமானது என்பதை உணர்ந்திருந்தான் கலையரசன். கைபட்டவுடன் சுருண்டு கொள்ளும் மரவட்டை மாதிரி தோல்வி என்ற அடி கிடைத்த பின் மனம் ஏன் உள்முகத் தேடலில் ஈடுபடுகிறது.ஆலயங்களில் கூட்டம் குவிகிறது இருந்தும் பாலத்காரமும்,கொலையும்,திருட்டும் குறைந்திருக்கிறதா என்ன?
கோவிலிலுள்ள தெய்வங்கள் மனிதனால் படைக்கப்பட்டவை, ஆதலால் தான் தங்க ஆபரணங்கள் சூட்டி அழகு பார்க்கிறார்கள். ஒவ்வொருவனுக்கும் தனித்தனி தெய்வமா என்ன? எல்லோருக்கும் ஒரே தெய்வம் தானே, தெய்வங்களை நேசிப்பவர்கள் அவர்களின் படைப்பான மனிதர்களை மட்டும் ஏன் வெறுக்கிறார்கள்.
மனசாட்சிக்கு விரோதமாய் தவறுகளை செய்துவிட்டு யாகம் வளர்த்தால் சொர்க்கத்துக்கான சாவி கையில் கிடைத்துவிடுமா என்ன? மக்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களும், சித்து வேலைக் காட்டுபவர்களும் தான் பணத்தை குவிக்கிறார்கள். இதெல்லாம் விட கொடுமை இவர்களின் நன்கொடையில் தான் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த பாரத மண்ணில் எத்தனையோ ஞானிகள் தோன்றி இருக்கிறார்கள். தெய்வ அனுபூதி பெற்ற அவர்களிடம் மக்கள் சென்று செல்வத்தையும், வசதி வாய்ப்பையும் வேண்டுகிறார்கள். இந்த பேருந்து மாதிரி காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யங்கள், சக்கரவர்த்திகள், பேரழகிகள் அடித்துச் செல்லப்பட்டு மண்ணோடு மண் ஆனார்கள்.
குருமார்களிடம் நான் மட்டும் ஏன் அவஸ்தைபடுகிறேன் எனக் கேட்டால். கர்ம வினை என இரண்டே வார்த்தைகளில் வாயை அடைத்துவிடுவார்கள். கண்ணுக்குப் புலனாகாத வலையில் சிக்கிக் கொண்டுள்ளேன் என்பது மட்டும் உண்மை. தீபம் இருட்டை விரட்டுவது போல குரு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் ஒளியேற்ற மாட்டாரா என மனம் சரணடைய புனிதருடைய பாதக் கமலத்தை தேடியலைகிறது.
வாழ்க்கையின் இன்னல்களைக் காணும் போது மரணம் ஒரு விடுதலையாகப்படுகிறது. மரண சர்ப்பம் எவரையும் தீண்டாமல் விடாது என்கிற போதும் மனிதர்கள் அகங்காரத்துடன் நடந்து கொள்வது ஏன்? கண்முன்னே ஒவ்வொருவராக சாகும் போதும் மனிதன் தன்னை சாவு நெருங்காது என ஆணவத்துடன் நடந்து கொள்வது எதனால்?
காலமே புதிர்களைப் போடுகிறது. காலமே புதிர்களை அவிழ்க்கிறது. மனிதம் தொலைத்த மானுடம் தன்னுடைய கோர முகத்தை மறைத்து முகமூடியுடன் உலாவுகிறது. மடாலயத்தில் ஓர் இரவு கழித்த பிறகாவது வாழ்க்கையில் திருப்பம் நேருமா என்ற யோசனையில் பயணித்து வந்தான் கலையரசன்.
"மடப்புரம் எல்லாம் எழுந்து வாங்க" என்ற கண்டக்டரின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. பேருந்தை விட்டு கீழே இறங்கினான். கோயிலை நோக்கி நடந்தான்.மன்னார்குடியிலிருந்து கிளம்பும் முன்பு சிக்கலில் உள்ள தனது நண்பன் முகுந்தனுக்கு போன் செய்து எட்டரை மணிக்குள் வந்துவிடச் சொல்லியிருந்தான்.
தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தியானம் செய்தான்.கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஏழு ஆனது.முகுந்தனை எதிர்பார்த்து கோயில் பிரகாரத்தில் அமர்ந்தான்.
முன்பு இரண்டொரு முறை இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறான்.இரவில் எங்கு படுப்பார்கள் என்ற விவரமெல்லாம் கலையரசனுக்குத் தெரியாது.முகுந்தன் தான் அடிக்கடி வியாழக்கிழமை இரவுகளில் வந்து தங்கிவிட்டுப் செல்வதாகச் சொல்வான்.
ஆலயத்திற்கு வருவோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கிது.மணி ஒன்பதரையை நெருங்கியது. அப்போது பின்னால் யாரோ தொடுவது போலிருந்தது கலையரசன் திரும்பிப் பார்த்தான், முகுந்தன் நின்றிருந்தான்.கலையரசனுக்கு இப்போது தான் உயிர் வந்தது.
முகுந்தன் "இன்றிரவு தங்க வேண்டாம் வா போகலாம்" என்று சொல்லி கலையரசனின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். இவ்வளவு வேகமாக ஒருவனால் நடக்க முடியுமா என வியந்தபடி அவன் பின்னால் சென்றான் கலையரசன்.இருவரும் திருவாரூர் பேருந்து நிலையத்தை அடைந்தார்கள்."மன்னார்குடிக்கு இதான் கடைசி பஸ்" ஏறு என்றான் முகுந்தன்.
கலையரசனுக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை பேருந்தில் ஏறி அமர்ந்தான்.வீட்டை அடைந்து படுத்துறங்கினான்.காலை மணி ஒன்பது இருக்கும் தொலைபேசி அழைப்பு மணி ஒலித்தது, கலையரசன் போனை எடுத்தான்.மறுமுனையில் முகுந்தன் "நேற்றைக்கு என்னால் வரமுடியலைடா மாப்ள, வேலை இருந்துச்சி தப்பா நினைச்சிக்காத. நீ கோயில்ல தான் படுத்து இருந்தியா?" என்றான்.
உறைந்து போனான் கலையரசன், அப்போ வந்தது யாரு என்று தனக்குள் கேட்டபடி நாற்காலில் சாய்ந்தான்.

Monday, May 7, 2018

மகாபுருஷர்


மனிதனில் சரிபாதி விகிதத்தில் ஆணும் பெண்ணும் இருக்கின்றனர். இறக்கும் வரை மனிதனால் பெண்ணாசையிலிருந்து விடுபட முடியாது. பெண்ணாசையால் மீண்டும் பிறந்ததை அறிந்த பீஷ்மன் இந்தப் பிறவியிலும் பெண் மோகத்தில் சிக்கிக் கொண்டால் அடுத்து மீண்டும் பிறவியெடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தான். கங்கை புத்திரனான பீஷ்மன் பெண்ணைப் பற்றிய ஆசைகளை தனது மனத்திலிருந்து அடியோடு தூக்கியெறிந்து சுயக்கொலை செய்து கொண்டான்.

பீஷ்மன் ராஜ்ஜியத்தைத் துறந்தது பெரிதல்ல. லெளகீகமே வேண்டாமென்று முடிவு எடுத்தவனுக்கு அரியாசனம் எதற்கு. பாலின ஈர்ப்பிலிருந்து விடுபட்டவனுக்கு எதிரேயுள்ள ஏதோவொன்று விலகிக் கொள்கிறது. கடவுளின் தரிசனம் அவனுக்கு காணக் கிடைக்கிறது. கடவுள் நம் வழியே செயல்பட வேண்டுமென்றால் நம்மிடமுள்ள அகந்தையை அவர் வதம் செய்ய நாம் வாய்ப்பளிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.

மனிதனின் அகந்தையை திருப்தி செய்துகொள்ள ஏற்படுத்தப்பட்டது தான் இவ்வுலகம். மனம் தான் இந்த மாயாலோகத்தை உண்டு பண்ணுகிறது. உலகில் நடந்த சமர்களுக்கெல்லாம் அகந்தையே காரணம். சில மனிதர்களின் நான் என்ற அகந்தையை கடவுள் கொலை செய்கிறார். அந்த மனிதனின் வழியே இறை சக்தி வெளிப்பட ஆரம்பிக்கிறது. சலனமற்ற குளத்தில் சூரியன் பிரதிபலிப்பதைப் போல்.

தர்ம சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது. உத்தமர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுவது இந்த உலகில் வழி வழியாக நடந்து வந்துள்ளது. தனது சகோதரனுக்காக அம்பையைக் கவர்ந்து வருவதும். வெல்லப்பட்ட அம்பையை ஏற்க சாளுவ மன்னன் மறுத்துவிட, தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டும் அம்பையை கருணையின்றி புறக்கணிப்பதும். நிராகரிப்பின் வலி பொறுக்க முடியாமல் அம்பை தற்கொலை செய்து கொள்வதும். பீஷ்மனை பலிதீர்க்க அவள் சிகண்டி உடலில் புகுந்து கொள்வதும். தகுந்த சந்தர்ப்பத்துக்காக அவள் காத்திருப்பதும். பீஷ்மனின் முடிவை விதி அம்பாவின் மூலமாக தீர்மானித்திருக்கிறது. வாழ்வதற்கு ஆசைப்படுபவன் பேடிகளின் மீது அம்பு எய்ய மாட்டேன் என ஒரு நாளும் சொல்ல மாட்டான்.

திரெளபதி உடைகளை துச்சாதனன் களையும் போது சத்தியத்தின் குரல் அசரீரியாக பீஷ்மனுக்கு மட்டும் கேட்டது. பெண்களை அவர்கள் விரும்பினாலன்றி வேறு யாராலும் அவர்களை நிர்வாணப்படுத்த முடியாதென்று. சபையில் நடந்தது என்னவென்று அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. வெறும் காரிருளைத் தான் அவர் தன்னெதிரே கண்டார். இருக்கையிலிருந்து எழ முடியாமலும், தொண்டையிலிருந்து குரல் எழுப்ப முடியாமலும் அவர் கல்லாகிவிட்டார். சற்று நேரத்திற்கு அவர் சிலையாகிவிட்டார்.

தந்தையிடமிருந்து நீ விரும்பும் போது தான் உன் மரணம் நிகழும் என வரம் வாங்கிய பீஷ்மன். குருட்ஷேத்திர போரில் சிகண்டியால் வீழ்த்தப்பட்டான். சிகண்டி மீது அம்பு எய்திருக்கலாம் அவன் பின்பற்றி வந்த தர்மம் அதை தடுத்தது. பெண் அம்சம் கொண்டவர்களை அதுவும் போர்க்களத்தில் கூட நிராகரிக்கும் அளவுக்கு பீஷ்மனுக்கு என்ன நேர்ந்தது. சத்தியம் எந்த ரூபத்தில் வந்து யாரைச் சாகடிக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அம்புப்படுக்கையில் பீஷ்மன் கிடந்த போது பீஷ்மனுக்கு மரணத்தாகம் எடுத்தது. அதைத் தணிக்கக் அவனது தாய் கங்கை வரவில்லை.

Wednesday, May 2, 2018

இன்னொரு வாசல்


ஆசைப்பட்டது கிடைத்தவுடன் நாம் இதைத்தான் தேடினோமா என்று எண்ணுகிறோம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டுதானுள்ளது. அந்த நெருப்புக்கு எண்ணெய்விட்டு வளர்ப்பது நாமே. உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் செல்வத்தைத் தேடி ஓடுகிறார்கள். மீதி பேர் பெண்களையெல்லாம் தன் ஆசைநாயகி ஆக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நல்லவர் ஒருவர் உள்ளார்  எனில் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை போலத்தான் உண்மையை தேடும் ஒருசிலருக்காகத்தான் இந்த உலகம் இன்றுவரை நிலைத்துள்ளது.

தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன் அதர்மத்துக்கு தோள் கொடுத்தால் வம்சத்துக்கே தீராப்பலி வந்துசேரும். சித்தார்த்தன் மனிதன்படும் துயரங்களுக்கான காரணத்தைத் தேடி ஓடினான். அவனை அரண்மனையிலிருந்து வெளியேற்றிய சக்தியே அவனுக்கு ஞானத்தைப் பரிசளித்தது. உண்மையின் பாதையை தேர்ந்தெடுத்ததால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார் இயேசு. தச்சன் மகனின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடியது, ஏனெனில் பிரசங்கத்தில் உண்மை இருந்தது. கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள் விட்டில் பூச்சியைப் போல் நெருப்புக்கு இரையாவார்கள். உண்மையின் ஒளிக்கு விளம்பரங்கள் தேவையிருக்காது.

பேரழகிகளையெல்லாம் ஒருநாள் மரணம் விழுங்கப்போகிறது. அவர்களை நினைத்து ஏங்கிக் கிடப்பதால் பயனொன்றுமில்லை. தோலில் சுருக்கத்தையும், கேசத்தில் நரையைும் பரிசாகக் கொடுத்து காலம் எப்படி அவளை சின்னாபின்னப்படுத்தியுள்ளது என்று பார். நீ மட்டுமே குழம்புவதாக நினைக்காதே, போர்க்களத்தில் அர்ஜூனன் குழம்பவில்லையா? எதையும் உன்னை ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிக்காதே. இடம் கொடுத்தால் ஆயுள் முழுவதற்கும் அதற்கு அடிமையாக இருக்க வேண்டியிருக்கும். இயேசுவின் போதனைகளில் கூட நீ முரண்பாடுகளைக் காணலாம். அதனைக் காரணமாக வைத்து அவரின் உண்மைத் தன்மையை சந்தேகிக்காதே.

ஒரு செயலைச் செய்வதற்குரிய விருப்பார்வம் கடவுளிடமிருந்து வருகிறது. எந்த சக்தி நம்மை பிறக்க வைத்ததோ அந்த சக்தி நம்மை கருவியாக உபயோகப்படுத்தி தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. கடவுளின் கைகளில் பொம்மைகளைவிட நாம் மேலானவர்களல்ல. எல்லைக்குட்பட்ட மனம் தனது நம்பிக்கைகள் பொய்க்கும்போது பரிதவிக்கிறது. இப்போது அந்த மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்வது கடவுளின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆலயத்தில் திரைச்சீலையை விலக்கினால் தெய்வத்தின் தரிசனம் கிடைப்பது போல், மனத்திற்கும் ஞானத்திற்கும் இடையேயான திரையை நீ விலக்க வேண்டும். எல்லாம் உன்னுள்ளே உள்ளது. வெளியில் கிடைக்கும் தோல்வி போன்ற அழுத்தங்களே உன் மனம் உண்முகப்பட காரணமாகிறது.

இழந்துவிட்ட சுவர்க்கத்தை நினைத்து மனிதன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. புறவுலகை சகல வசதிகளோடும் அமைத்துக் கொண்ட மனிதனுக்கு கடவுள் தேவைப்படாத பொருளாகிவிட்டார். இத்தனை வசதிகள் சுவர்க்கத்தில் இல்லாவிட்டாலும் அங்கு நிம்மதி கிடைக்கும். இதை மனிதன் உணர்வதில்லை. கடவுளைக் கண்டவர்கள் சராசரி வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வார்கள். பைத்தியமாக, பிச்சைக்காரர்களாகத் தான் அவர்கள் இவ்வுலகில் அலைந்து கொண்டிருப்பார்கள். மதம் ஒரு வாசல் அதற்காக இந்த வாசல் வழியாக மட்டும் சென்றால் தான் கடவுள் வெளிப்படுவார் என்பதில்லை. இறப்புக்கு பிறகும் மதச்சடங்குள் பின்பற்றப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நூற்றாண்டில் மதகுருமார்கள் சட்டத்திற்கு முன் நிற்கவைக்கப்படுகிறார்கள். நாத்திகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்டுகிறார்கள். கட்டற்ற சுதந்திரம் எனும் போதும் அதற்கு நாமே ஒரு எல்லை வகுத்துக் கொள்வது நல்லது. பக்குவமற்ற ஆட்களால் கருத்து மோதல் கொலையில் போய் முடிகிறது. ஒரு மனிதன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆன்மீக வாழ்வில் முன்னேற்றமே இல்லையென அலுத்துக் கொள்ளக் கூடாது. ஆன்மீகப் பாதையில் கடவுளை அடைவதற்கு இன்னும் சில அடிகளே இருக்கலாம். புதையல் கிடைக்கவில்லை என அலுத்துக் கொண்டு மேற்கொண்டு தோண்டுவதை நிறுத்தக்கூடாது. பொறுமையோடு நடை போட்டோமானால் வாழ்வின் நோக்கம் இந்த ஜென்மத்திலேயே நிறைவேறும்.

வாழ்க்கையைத் துறந்து பக்கிரியாக அலைபவர்களிடம் போய், உலகியல் ரீதியிலான வெற்றிக்காண வழிமுறைகள கேட்கிறார்கள். நாளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையால் தான் படுக்கையில் வீழ்கிறார்கள். வருத்தப்படுபவர்களுக்கு உதவாமல் அது அவர்களின் கர்மபலன் என்று வேடிக்கைப் பார்த்தால் கடவுளின் கோபத்திற்கு ஆளாவோம். கல்லை பொன்னாக்கினால் போதும் மனிதர்கள் யாரையும் கடவுளாக ஒத்துக்கொள்வார்கள். பணத்தை தேடியே ஓடிக்கொண்டிருப்பது காற்றினைச் சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

‘நான் இருக்கிறேன். நான் மட்டுமே இருக்கிறேன். ஆணும், பெண்ணுமாக நானே இவ்வுலகில் நிறைந்திருக்கிறேன். இந்த அலைகள் எழுவதற்கு நானே காரணம். கிழக்கு சிவப்பதற்கு நானே காரணம். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே நீ உலாவிக் கொண்டிருக்கிறாய், நான் பிறக்கவுமில்லை, இறக்கவுமில்லை என்றும் நிலையாய் இருக்கிறேன். அன்பை வெளிப்படுத்த ஒரு உதடையும், அரிவாளை ஓங்க ஒரு கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். ஓர் இரவுக்காகத் தான் மனிதர்களைப் படைத்து ஆட்டுவித்து வருகிறேன். இதோ வலைவிரிக்கிறேன் மீன்களுக்காக அல்ல மனிதர்களுக்காக.

நான் பைத்தியக்காரன் தான் அப்படியென்றால், நான் படைத்த உலகம் பைத்தியக்கார விடுதி தானே. மேய்ப்பன் எப்பொழுதும் தப்பிய ஆட்டைத்தான் தேடிக் கொண்டிருப்பான். ஆட்டுமந்தையில் எந்த ஆடு எப்போது உணவாகும் என்று ஆட்டுக்குத் தெரியாது. ஆட்டிடம் சம்மதம் கேட்டா பலியிடுகிறார்கள். இது மனிதனுக்கும் பொருந்தும். மரணநிழல் மனிதனை துரத்திக் கொண்டேயுள்ளது. அவளை நான் நெருங்கிக் கொண்டே இருக்கிறேன்--’. கடவுள் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார். ஆதாம் ஏவாளை கடவுளிடமிருந்து காப்பாற்றி கொண்டு சென்றுவிட்டான். கடவுள் ஆதாமை என்ன செய்தார் என்று தெரியாது. ஆனால் ஏவாள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருந்து கொண்டு ஆதாமை தேடிக் கொண்டிருக்கிறாள். தாயானாலும், தாரமானாலும் சிவகாமியின் சிந்தனை சிவனைப்பற்றியதே.

Saturday, April 28, 2018

உன்னதத்தைத் தேடி


துயரநீர்ச் சுழலில் சிக்கிக் கொண்டுவிட்டேன். விதி வாழ்க்கையின் லகானை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கடவுள் என்னை துயரத்தின் வாரிசு ஆகுக என்று கட்டளையிட்டார். கொழுத்த ஆடு மேய்ப்பனின் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். வாழ்க்கையின் விதிமுறைகளை அனுசரிப்பதற்குப் பதிலாக கல்லறையில் படுத்துக் கொள்ளலாம். பிறப்புக்கும், இறப்புக்கும் மத்தியிலுள்ள வாழ்க்கை குரங்கு கை பூமாலையாக ஆகிவிட்டது. வலியவர்கள் தன் பணவலிமையால் எதையும் சாதித்துக் கொள்கின்றனர்.

நல்லவனும், கொலைகாரனும் ஒரே தெய்வத்தைத் தான் வணங்குகிறார்கள். குற்றவாளி சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பிவிடுகிறான். அவனது பாவம் மன்னிக்கப்பட்டதாக ஆகிவிடுமா? அப்பாவி வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து தற்கொலை செய்து கொள்கிறான். இதன் மூலம் அவன் கடவுள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறான். கடவுள் தன் படைப்பு பூரணத்துவம் அடையும் வரை காத்திருப்பார் என்றால், இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு முடிவே இல்லாமல் போய்விடுமல்லவா?

சமூகம் சாத்தானுக்கு ஏவல் புரிகிறது. கடவுளை சாந்தப்படுத்த யாகங்களே போதும் என சமூகம் நினைக்கிறது. பரிசோதனை எலிக்கு கருணை காட்டாத மனிதன் கடவுளிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா? நாளை நடைபெற இருப்பதை இன்றே அறிந்துகொண்டால் தூக்கம் வருமா? கடவுளைப் பொறுத்தவரை மனிதன் மண் தான். மண்ணிலிருந்து தோன்றியவன் இறுதியில் மண்ணுக்கு இரையாகிறான். கடவுள் மனிதன் மூலமாக வெளிப்படுகிறார். கடவுளை மறுப்பவனிடமிருந்து கூட அவன் வெளிப்படலாம். ஆனால் அந்த வெளிப்பாட்டில் மனிதர்களுக்கிடையே வேறுபாடு உள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து வெளிப்படும் கடவுளால் அவரைச் சுற்றி அதிர்வலைகளை ஏற்படுகிறது. கடவுளைத் தேடுபவர்களை அவரின்பால் அது ஈர்க்கிறது. மனிதர்களுக்கு இடையே நிலவும் சக்தி அளவிலான வேறுபாடுகளுக்கு பூர்வ ஜென்ம பலன் காரணமாக இருக்கலாம்.

உண்மை என்னவென்று யாருக்குத் தெரியும். சில வேளைகளில் செயலைச் செய்ய வேண்டுமென்ற விருப்பார்வம்  எதனால் எங்கிருந்து ஏற்படுகிறதென்று யோசித்துப் பாரக்க வேண்டும். இல்லறத்தான் ஞானியைப் பார்த்து இவர் போல எல்லாத்தையும் துறந்துவிட்டு கெளபீனதாரியாக பிச்சையெடுத்து சாப்பிடலாம் என்று எண்ணுகிறான். சந்நியாசியின் மனதோ ஒரு பெண்குட்டியோடு வாழ்ந்து குழந்தை குட்டிகளோடு சுகமாய் இருந்திருக்கலாம் என இல்லறத்தானைப் பார்த்து உள்ளுக்குள் ஏங்குகிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை.

முனைவராக இருந்தாலும் வாழ்க்கைப் பாடத்தை சரியாகப் படிக்காமல் வெற்றி கிட்டாது. புல்லாங்குழல் தான் மனிதன், அதை லயத்தோடு இசைப்பவன் கடவுளாக இருக்கிறான். கடவுள் கோடிக்கணக்கான கண்களால் இவ்வுலகைக் காண்கிறான். கோடிக்கணக்கான கைகளால் செயல் புரிகிறான். யாருக்கும் அவன் விதிவிலக்கு அளிக்கவில்லை. மரணத்தை பொதுவில் வைத்து மனிதனின் வாழ்க்கையில் திருவிளையாடல் புரிகிறான். விடிவதற்கு சில நாழிகைக்கு முன் பூமி மீது காரிருள் கவிந்திருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான்.

நாளை என்ன நடக்கும் என்று யாராலும் கணித்துச் சொல்ல முடியாது. யூகங்களைப் பெரிதுபடுத்தி அதை உலகம் பூராவும் திட்டமிட்டு பரப்புகிறார்கள். உலகம் அழியப்போகிறது  என்ற பயத்தை மக்களின் மனத்தில் தோன்றச் செய்வதே அவர்களின் நோக்கம். இப்படி கோடிக்கணக்கான மனிதர்களின் பயவுணர்வு காற்றலைகளை பாதிக்கிறது. உலக அழிவை விரைந்து கொண்டு வருகிறது. எண்ணத்தின் ஆற்றலால் மனிதன் எப்படி உயர்ந்தானோ, அப்படியே அழிவையும் தேடிக் கொள்கிறான்.

வாழ்க்கைப் புத்தகத்தில் சுவாரஸியமே அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதது தான். எல்லோரும் சாகப் போகிறவர்கள் தான். எந்தவொரு மனிதனும் எதிரிக்கு முன்னால் பிணமாக கூலர் பாக்ஸில் தான் கிடத்தப்பட்டிருப்பதை விரும்பமாட்டான். மறதி கடவுள் தந்த வரம். இல்லையென்றால் மனிதனின் சித்தம் கலங்கிவிடும். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை மனிதனின் ஆயுள் குறைவு தான். அந்த வாழ்வைக் கொண்டாடாமல் அதைத் தவறவிட்டுவிடுகிறான். அன்பே கடவுள் என்ற புத்தர் பிறந்த மண்ணில் தான் சகமனிதனை திட்டமிட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்வதும் அரங்கேறுகிறது.

அடிமைப்படுத்துதலுக்கு எதிராக முதலில் கிளர்ச்சியை தூண்டிவிட்டவர் இயேசு. அவரது வானரசு என்ற கோட்பாட்டை அவரின் சீடர்களே கூட முழுமையாக புரிந்து கொண்டார்களா எனத் தெரியவில்லை. மதக் கட்டுப்பாடு மிகுந்த அன்றைய சூழலில் அவர் செய்தது மாபெரும் புரட்சி. ஓய்வு நாளில் அற்புதங்கள் செய்ததால் யூதர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. யூதர்கள் அதிகாரத்தால் அன்று ஜெயித்தார்கள், ஆனால் கொள்கையால் இயேசுவிடம் தோற்றார்கள். உலக மக்கள்தொகையில் அதிகம் பேர் கிறித்தவ மதத்தை பின்பற்றுவதே இதற்கு சாட்சி.

சத்தியத்தைப் பின்பற்றுபவர்களின் கண் பார்த்து பேசுவது இயலாத காரியம். மனோவேகத்தில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் போர் நடந்த குருட்சேத்திர யுத்தக்களத்துக்கு நம்மால் செல்ல முடிகிறதல்லவா? கோயிலின் பிரம்மாண்டமான கோபுரத்துக்கு முன் நாம் நம்மை சிறு எறும்பாக உணர்கிறோமா இல்லையா? புத்தர் இறந்துவிட்டார் அவர் போதனைகள் இன்றும் வாழ்கிறது. தர்மச்சக்கரம் சுழன்று கொண்டேயுள்ளது. அநீதியை எதிர்த்து சத்தியத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு சோதனைகள் தோன்றலாம், கிருஷ்ணனின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஜெயித்தால் மண்ணை ஆள்வாய். மரணித்தால் சுவர்க்கம் புகுவாய் எனவே மனந்தளராமல் முன்னேறிக் கொண்டேயிரு.