எதனாலும் எனக்கு அழிவு கிடையாது. தேவர்கள் என்னைக் கண்டால் இனி ஓடிஒளிவார்கள். மூன்று லோகங்களும் எனக்கு இனி அடிமை. இனி நாராயணன் என் பெயரைக் கேட்டாலே நடுங்குவான். தேவலோகத்துக்குள் நான் நுழைந்தால் இனி இந்திரன் தான் எனக்கு சாமரம் வீச வேண்டும். இனி மூவுலகங்களிலும் இந்த ஹிரண்யகசிபு கொடியே பறக்க வேண்டும். எனக்கு பூலோக ராஜ்யம் கசந்துவிட்டது. நாம் வைகுண்டத்துக்கு திக்விஜயம் செய்வோம் தயாராகுங்கள். எதிர்க்க ஆளில்லை என்று இறுமாப்பு காட்டும் நாராயணனுக்கு நான் யார் என்று காட்டுகிறேன். என்ன நாரதா திருமால் என்னை எதிர்கொள்ளப் போகிறாரா இல்லை பயந்து கொண்டு ஓடிஒளியப் போகின்றாரா என அலட்சியப் பார்வையோடு நாரதரை நோக்கினான் ஹிரண்யகசிபு.
ஹிரண்யகசிபு வந்திருக்கிறேன் வைகுண்டத்துக் கதவுகள் திறக்கட்டும்.
எங்கே அந்த நாராயணன் ஓ பள்ளியறையிலா உடைத்து தள்ளுங்கள் கதவை, எங்கே அவனைக் காணோம்.
பயந்து ஓடிஒளிவதுதான் நாராயணனுக்கு கைவந்த கலையாயிற்றே. அவனது பரிவாரங்களை கைது செய்து
இழுத்து வாருங்கள் ஹரியால் மூவுலகைக் கடந்து செல்ல முடிகிறதா எனப் பார்ப்போம். நாம்
இப்போது தேவலோகம் புகுவோம். ஏய் இந்திரா எங்கே ஒளிந்திருக்கிறாய். இத்தனை வருடங்களாக
சுகபோகத்தை அனுபவித்தது பத்தாதா. நரனுக்கு ஒரு நீதி, தேவனுக்கு ஒரு நீதியா? ஹிரண்யகசிபு
இருக்கையில் அமர்ந்து பேசலாமே என்றான் இந்திரன். பேசுவோம் பேசுவோம் என்றான் ஹரண்யகசிபு.
எங்கே ஆடச்சொல்லுங்கள் நாங்களும் கண்குளிரப் பார்க்கிறோம் ரம்பை, மேனகை, ஊர்வசியின்
நாட்டியத்தை. ஆ சரணடைந்தால் உயிர் உங்களிடம் இருக்கும் யோசித்துக் கொள்ளுங்கள். நாராயணன்
தன்னை நம்பியவர்களை நட்டாற்றில் விட்டானா? இனி ஹரிநாமத்தை மூவுலகிலும் யாரும் உச்சரிக்கக்
கூடாது.
தேவி எங்கே என் பிரகலாதன். பணிப்பெண்கள் விளையாட்டுக் காட்டிக்
கொண்டிருக்கிறார்கள் இதோ அழைத்து வருகிறேன் மன்னா என்று சொல்கிறாள் அரசி. பிரகலாதனைப்
பார்த்து உன்னைப் பார்த்தவுடன் என் உள்ளம் பூரிப்படைகிறது. உலகிற்கே ராஜா நான் உன்
முன்பு தான் மண்டியிடுகிறேன். இந்த உலகில் நான் விலைமதிக்க முடியாததாக நினைப்பது உன்
அன்பைத்தான். மூவுலகங்களையும் நான் ஆள்கிறேன், என்னை நீ தான் ஆள்கிறாய். எப்போதுமே
சிங்கம் போன்று கர்ஜிப்பவன் உன் முன்பு மியாவ் எனச் சொல்லி விளையாட்டுக் காட்ட வேண்டியிருக்கிறது.
மும்மூர்த்திகளே பணிந்து வணங்கும் எனது திருவடி உன்னைக் காணவே ஓடுகிறது. உன் தேனினும்
இனிய மழலையை ஒரு நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். எதிர்காலத்தில் நீ அப்பனுக்கேற்ற
பிள்ளை எனப் பெயர் வாங்க வேண்டும். இந்த ராஜ்யத்திற்கு ஒரே வாரிசு நீதான். நீ நாலும்
தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாளை முதல் உன்னை குருகுலவாசத்துக்கு அனுப்பு
முடிவு செய்திருக்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பி என்ன தேவி உனக்கு இதில் சம்மதம்
தானே என்கிறான்.
ஆச்சாரியரே என் குலக்கொழுந்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். வீரத்தை
அவன் என்னிடமிருந்து கற்றுக் கொள்வான். ஞானத்தை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளட்டும்.
வீரத்திலும், ஞானத்திலும் அவன் பகலவனாக விளங்க வேண்டும். வானில் நட்சத்திரங்கள் பல
ஆனால் சூரியன் ஒன்று தானே. ஆயிரம் யானை வலிமையுடையவனுக்கு சிறிது ஞாமிருந்தால் போதும்
இம்மூவுலகையும் ஆண்டுவிடலாம். தகப்பனார் போல் தந்திரம் இருந்தால்தான் மும்மூர்த்திகளையும்
பணிய வைக்க முடியும். நீங்கள் அறியாததல்ல அவன் விருட்சமாகி நிழல் தருவது உங்கள் கைகளில்
தான் இருக்கிறது. நான் வருகிறேன் என்று பிரகலாதனை பாடசாலையில் விட்டுவிட்டு கிளம்பினான்
ஹிரண்யகசிபு.
ஒருநாள் அரண்மனையில் பிரகலாதன் இறைநாமத்தை சொல்லிக் கொண்டிருக்க
அங்கு வந்த ஹிரண்யகசிபு என்ன பிரகலாதா என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்னிடம் சொல்
என்று கேட்கிறான். உடனே பிரகலாதன் ஓம் நமோ நாராயணாய நம என்று சொல்லத்துவங்க ஹிரண்யகசிபுக்கு
கோபம் தலைக்கேறுகிறது. இதை உனக்கு யார் சொல்லித் தந்தது என்கிறான். நம்மை படைத்தவனின்
நாமம் நமக்கு பிறர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா தந்தையே என்கிறான் பிரகலாதன். மூவுலகங்களையும்
நான் ஆட்சி செய்யும் போது நீ நாராயண மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருக்கிறாய்
ஓம் ஹிரண்யகசிபு நமக என்று சொல் என பிரகலாதனை நிர்பந்திக்கிறான் ஹிரண்யகசிபு. பிரகலாதனோ
படைத்தவன் நாமத்தை மட்டுமே இந்த பக்தனின் வாய் சொல்லும் தந்தையே என்கிறான். பிரகலாதன்
ஏதேதோ பிதற்றுகிறான் என்று எண்ணிய ஹிரண்யகசிபு ஆச்சாரியரை அழைக்கிறான். நாளைக்குள்
பிரகலாதனுக்கு ஓம் ஹிரண்கசிபு நமக என்ற மந்திரத்தை ஓதுவதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும்
இல்லாவிட்டால் உங்கள் தலை உங்கள் உடலில் இருக்காது என்று மிரட்டி அனுப்புகிறான்.
அடுத்த நாள் பாடசாலையிலிருந்து திரும்பிய பிரகலாதனை அழைத்து இன்று
என்ன கற்றுக் கொண்டாய் சொல் என்கிறான். ஓம் நமோ நாராயணாய நம என்றவுடன் பேயறை விழுந்தது
பிரகலாதனுக்கு. போதும் போதும் நம் பிள்ளை என பொறுத்துக் கொண்டால் நீ எல்லை மீறிப்
போகிறாய். இப்போது என் நாமத்தை சொல் உன்னைவிட்டு விடுகிறேன் சொல் சொல் என ஹிரண்யகசிபு
பிரகலாதனை கட்டாயப் படுத்துகிறான். பிரகலாதனோ திரும்பவும் நாராயண மந்திரத்தைக் கூற
வீரர்களை அழைத்து இந்தப் பொடியன் என் நாமத்தைக் கூறும் வரைக்கும் கசையால் அடியுங்கள்
என கட்டளையிட்டுச் செல்கிறான். எத்தனை அடிகள் வாங்கியும் பிரகலாதன் ஹிரண்யகசிபு மந்திரத்தை
சொல்ல மறுக்கவே. அங்கு வந்த ஹிரண்யகசிபு என்ன அடிபொறுக்க முடியாமல் ஒத்துக் கொள்வான்
சின்னஞ்சிறு பையனாயிற்றே என நினைத்து விட்டேன். ஆயிரம் முறை நாராயணன் என்கிறாயே உன்
ஹரி இப்போது எங்கே இருக்கிறான் மூவுலகமும் தான் என் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறது
என்றான் ஹிரண்கசிபு.