Tuesday, September 3, 2019

பரசு



ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய் இருந்தது. ஜமத்க்னிக்கும் ரேணுகாதேவிக்கும் ஐந்தாவதாக பிறந்த குழந்தை சத்ரிய வம்சத்தையே வேரறுக்கும் என யாரும் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. பிராமணவம்ச பரசுராமருக்கு சிறுவயது முதல் ஆயுதங்களின் மீது தீராத மோகம்.

வர்ணாசிரம தர்மத்தை மீறியதால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர் பரசுராமர். ரத்தத்தைப் பார்த்து மயங்கிவிழும் சராசரி பிராமணரல்ல அவர். அன்று ரிஷி வம்சத்தவர்கள் தங்கள் மனைவிமார்கள் மனதளவில் கூட கற்புநிலை தவறக்கூடாது என நினைப்பார்கள். வாழ்க்கைக்கு அப்பால் எதையோ தேடும் வைராக்கியவாதிகள் தங்கள் மனைவிமார்களை ஒரு பொம்மையாகத்தான் கருதினார்கள். எதிரெதிர் துருவங்கள் தங்களை ஈர்த்துக் கொள்வது இயல்புதான் என்பதை உணரதாவர்கள்.

காலவெள்ளம் தறிகெட்டு ஓடிக்கொண்டுள்ளது. எதைத்தான் கடைசியில் நிலைநிறுத்தப் போகிறது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. ஏற்கனவே விதிக்கப்பட்டதுதான் நடந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. எந்த சக்தி மனிதர்களை பொம்மையாக ஆட்டுவிக்கிறது என்று தெரியவில்லை.

எந்த நம்பிக்கையில் மனிதஇனம் விடியும் பொழுதுகளை எதிர்கொள்கிறது. வாழ்க்கை ஒருவருக்கு வரமாகவும் ஒருவருக்கு சாபமாகவும் அமைந்துவிடுவது ஏன்? மனித மனம் இரும்பாக இருப்பதினால் தான் கோயிலிலுள்ள தெய்வங்கள் எல்லாம் கற்சிலையாகத்தான் காட்சியளிக்கின்றன.

இயற்கை மனிதனைப் படைத்து அவன் வழியே இந்த உலகை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. மனித இனம் தோன்ற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் புரியவில்லை. வேதங்கள் ஆன்மாவைப் பற்றி பேசினாலும் மற்ற மதங்களின் வேதங்கள் இந்த உலகினை ஒரு சிறைச்சாலை என்றும், தண்டனை நிறைவேற்றப்படும் இடம் என்றும் நிரூபிக்கின்றன. புத்தர், இயேசு போன்றவர்கள் தப்பிக்கும் வழியைத் தேடியவர்கள் தான். அப்போதைய சமூகம் அவர்களை பைத்தியம் என முத்திரைக் குத்தியது.

சாதாரணமாக நம்மிடையே வாழ்ந்து போனவர்கள் எப்படி தெய்வமானார்கள். மதங்களின் முதுகெலும்பாக அதிசயிக்கத்தக்க மனிதரின் அற்புதங்கள் தான் திகழ்கின்றன. ஞானமடைதல் என்பது நாம் செல்ல வேண்டிய பாதையை தெரிந்து கொள்ளும் ஒரு நிகழ்வா? ஞானமடைந்தவர்களுக்கும் முக்தியின் மேல் நாட்டம் இருக்குமா? ஆமாம் ஜமதக்னி ஞானம் பெற்றார் முக்தியின் மேல் இருக்கும் நாட்டமே அவரது வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது.

ஜெபம், தியானம், பூஜை மூலம் முக்தியை அடைந்துவிட முடியுமா? உடலை படகாகக் கொண்டு வாழ்க்கைக் கடலை கடந்துவிட முடியுமா? ஞானத்தை கூர் தீட்டுவதன் மூலம் கடவுளுக்கும் நமக்குமான திரைச்சீலையை கிழித்துவிட முடியுமா? மனிதனாகப் பிறந்து தெய்வமாகலாம் என்று பரத கண்டத்தில் நிறைய பேர் நிரூபித்துச் சென்றிருக்கிறார்கள் இல்லையா? கைவிடப்பட்ட மனிதன் இறுதியாக கடவுளின் அறைக் கதவைத் தானே தட்டிப் பார்ப்பான். கர்மவினைகள் மீண்டும் பிறக்க வைக்கும் என்பதால் தான் முனிவர்கள் காட்டின் நடுவே குடில்களை அமைத்துக் கொண்டு கடவுள் காரியங்களில் ஈடுபடுகிறார்களா? மீண்டும் பிறக்க எந்த மனிதனும் விரும்புவதில்லையே எதனால்?

ஞான அக்னியின் மூலம் கடவுள் இருக்கும் பாதையை அறியத்தானா தவம் இருப்பது. ராமனாக இருக்கும் ஒருவன் தனது மனைவி சீதையாக இருக்க வேண்டும் என்ற விரும்புவது நியாயந்தானே! இதோ காலம் தாயத்தை உருட்டுகிறது, விழுகிறது என்ன என்பதை கடவுள் மட்டுமே அறிவார். தவம் செய்பவர்கள் அனைவருக்கும் சிவனைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துவிடுமா என்ன? காட்சி தந்த சிவன் பரசு என்ற அஸ்திரத்தை தந்தபடியால் தான் பெயருக்கு முன்பாக பரசு என்று ஒட்டிக் கொண்டது.

கற்புக்கரசி கோபத்துடன் பார்த்தால் பச்சை மரம்கூட பற்றி எரியுமாம். ரேணுகாதேவியின் பதிவிரதைத்தன்மை அப்படிப்பட்டது. சுடப்படாத களிமண் பானையில் நீரெடுத்து வருவதே அவளது பதிவிரதைத் தன்மைக்கு அடையாளம். மனதால் கூட அந்நிய ஆடவனைத் தீண்டாததால் அவளால் இந்த அதிசயத்தை நடத்திக் காட்ட முடிந்தது. இது ஆண்களுடைய உலகமாக இருக்கலாம், சகல காரியத்திற்கும் காரணமாக இருப்பவர்கள் ஏனோ பெண்கள் தான். சக்தி சிவம் காலத்திலிருந்து இதுதான் கதை. சக்கரவர்த்திகள் பலரும் பெண்கள் விஷயத்தில் பலவீனமாகத்தான் இருந்தார்கள். பெண்களை தங்களின் உடைமையாக்கிக் கொள்ள நினைத்தவர்களின் துரோகத்தின் வரலாறு இன்னும் நீண்டு கொண்டே உள்ளது. அதற்கு கடவுளின் அகதரிசனத்தின் நிழல் பெண்கள் மூலம் கிடைத்தது ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் பெண்கள் கடவுளைக் காட்ட வல்லவர்கள் அல்ல. இயற்கை ஆண்களுக்கு பெண்களின் மீது கவர்ச்சியை உண்டாக்கி அவனால் கடைசிவரை கடவுளை கண்டடைய முடியாமல் செய்துவிடுகிறது. இயற்கை பெண்களைப் பொத்திப் பாதுகாக்கிறது. ஆண்களை உன் வல்லமையை நிரூபித்து வேண்டியதைப் பெற்றுக் கொள் என விதி வகுக்கிறது. அவள் சீதையானாலும் சர்வலட்சணம் பொருந்திய ஆண் மகனைப் பார்க்கும் பொழுது அவள் மனம் சஞ்சலமடையவே செய்யும்.

தாயானாலும், தாரமானாலும் சிவகாமியின் சிந்தனை சிவனைப் பற்றியதே. எது கிடைக்கவில்லையோ அதன் மீது ஏற்படும் தீவிர நாட்டம் ஒரு பிரளயத்தையே உருவாக்கும். மறுக்கப்படும் விஷயத்தை நோக்கி மனம் பேயாய் அலையும். சந்தர்ப்பம் வாய்த்த பின்னும் சிவனே என்று இருக்க யாரும் இங்கே உத்தமர்கள் இல்லை. சிங்கத்தின் கண்ணுக்கு மான் ஒரு மாமிசமாகத்தான் தெரியும். மனிதர்கள் வாழ்க்கைக்கு அப்பால் உள்ளதை வெல்ல நினைக்கிறார்கள். இறைவன் மனிதனின் பாதையை திசை திருப்பவே பெண்களைப் பயன்படுத்துகிறான். அவதாரங்கள் கூட பெண்ணாசையை வெல்ல முடியாமைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் வானரசை உண்டாக்க நினைத்தவர்களின் பேச்சுக்களை மக்களால் புரிந்து கொள்ள முடியாது. பெண் தந்திரமானவள் ஆண்மகனை வளர்க்கும் போதே தன்னை அவன் வெல்ல முடியாதபடிக்கு செய்துவிடுகிறாள். கடவுள் தன் பிரதிநிதியான பெண்கள் மூலம் தான் நினைத்ததை சாதித்துக் கொள்கிறான்.

விடிகாலையில் கந்தர்வலோகத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் ஆற்றங்கரையில் நின்று கொண்டு இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருக்கிறான். அது ஒளிரூப உடல் என்பதை அறியாத ரேணுகாதேவி இச்சைக்கு ஆற்பட்டு சிலையாக நிற்கிறாள். அந்த சமயத்தில் சீதையானாலும் சஞ்சலப்பட்டு நிற்கவே செய்திருப்பாள். தேவவம்சம் அரக்க வம்சத்தின் மீதோ அரக்க வம்சம் தேவ வம்சத்தின் மீதோ ஈடுபாடு காட்டுவது புதிதல்ல. அதனால் தான் ராமனே சீதையை தீக்குளிக்கச் சொன்னான். ஆனந்தப் பரவசத்தில் ரேணுகாதேவி தன்னையே மறந்துவிட்டாள். அவள் தன்னிலை உணர்ந்த போது கந்தர்வன் மாயமாய் மறைந்திருந்தான். ஆற்றில் இறங்கி தண்ணீர் எடுக்க முயலும்போது கையிலுள்ள களிமண் பானை சேறாய் உருக்குலைந்து தண்ணீரில் கரைந்தது. ரேணுகாதேவியால் வெறும் கையுடன் தான் குடிலுக்குத் திரும்ப முடிந்தது.

நிலைமையை உணர்ந்த ஜமதக்னி கோபம் கொள்கிறார். இதற்கு அவர் ரேணுகாதேவி தன்னைக் கொன்று இருந்தால் கூட அமைதியாகத்தான் இருந்திருப்பார். துரோகம் மரணத்தைவிடக் கொடியது. யூதாஸ் கடவுளின் பிரதிநிதி என இயேசு அறியாமலா இருந்திருப்பார். புனிதத்தை இழந்துவிட்டவளுக்கு இனி வாழ அருகதை இல்லை என்றே ஜமதக்னி முடிவுக்கு வருகிறார். தன் தாயென்பதால் நான்கு சகோதரர்களும் அவளை கொலை புரிய மறுத்துவிட பரசுராமரோ தந்தையின் பேச்சைக் கேட்க முன்வருகிறார். சிவன் தந்த பரசு என்ற அஸ்திரத்தை முதன்முறையாக பரசுராமர் இங்கு தான் பயன்படுத்துகிறார். என்றோ எழுதப்பட்ட விதியின் நூல் கொண்டு சிவன் இன்றும் ஆட்டுவிக்கிறான்.

No comments:

Post a Comment