Sunday, December 10, 2023

அறுபத்து மூவர் (பக்தியினால் பெருமானை ஆட்கொண்ட பெரியவர்கள் புராணம்)

 


மனிதனுக்கு எதற்காக தெய்வம் தேவைப்படுகிறது. அவனுக்கு அன்னையின் வயிற்றியிலிருந்து பிறந்து வந்திருக்கிறோம் என்று தெரியும். ஆனால் மரணத்துக்குப் பின் தனது நிலை என்ன என்று தெரியாது. வாலிபத்தில் இரத்தத் திமிரில் கடவுள் மறுப்பை கையிலெடுப்பவன், மங்கை ஒருத்தியை கரம்பிடித்து இல்லறத்தில் நுழையும் போதுதான் வாழ்க்கை என்றால் என்னவென்று அறிகிறான். அவன் போட்ட கணக்கு தப்பாகும் போதுதான் விதியைப் பற்றி யோசிக்கிறான். வாடகை கேட்டு வீட்டுக்காரன் கதவைத் தட்டும்போது ஒளிந்து கொள்கிறான். கடன்காரன் கழுத்தை நெரிக்கும் போது அப்பனே முருகா என்று அலறுகிறான்.

 

உலகை வென்ற அலெக்ஸாண்டர் மத்திம வயதைக் கூடத் தாண்டவில்லை. நெப்போலியனோ மனிதர்களற்ற தீவில் அனாதையாகத்தான் இறந்தான். கணக்கு நாம் போடலாம் அது நிகழ வேண்டுமா வேண்டாமா என்று நிர்ணயிப்பவன் அவன். தன்னிடம் கடன் வாங்கியவனை கதியற்றவன் வாங்கிவிட்டான் இருந்தால் கொடுத்துவிடமாட்டானா அவகாசம் கொடுத்தால் தான் என்ன ஏதோ சிறுதொகை தானே என்று மன்னிக்க மனம் வருகிறதா? பிறர் வயிற்றில் அடித்து சேர்த்த பணத்தையெல்லாம் மருத்துவமனையில் கொண்டு போய் கொடுத்துவிட்டு வார்டில் முருகா முருகா என்றால் என்றால் அவன் பழனி மலையிலிருந்து இறங்கி வந்துவிடுவானா? கோயில் நகைகளை களவு செய்து சாப்பிட்டால் உண்ட சோறு செரிக்குமா? சிவன் சொத்து குல நாசம் என்று சும்மாவா சொன்னார்கள். உன் மனைவி பத்தினித் தெய்வமாக இருக்க வேண்டுமென்று நீ விருப்பப்படுவது போலத்தானே மற்றவனும் கருதுவான். பிறர் மனை நோக்கா பேராண்மை என்று தானே சொல்லி வைத்தான் வள்ளுவன்.

 

உடலை மனம் இயக்குகிறது. மனத்தை ஆன்மா இயக்குகிறது. ஆன்மா எதற்காக உடலெடுத்தது. இந்த வாழ்க்கைக்கு நோக்கம் இருக்க வேண்டுமல்லவா? மனிதனின் இலக்கு அவனது வயதுக்கேற்றவாறு மாறுகிறதல்லவா? மாணவப்பருவத்தில் டாக்டராக வேண்டும் என்கிறான். படித்து முடித்ததும் நல்ல வேலை அமைய வேண்டும் என்கிறான். வாலிபத்தில் அழகிற மனைவி அமைய வேண்டும் என்கிறான். மத்திம வயதில் வீடு, வாகனம வாங்க வேண்டுமென்று ஆசை வருகிறது. அறுபதைத் தாண்டியவுடன் பிள்ளைகளை கரை சேர்த்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறான். இந்த நாட்டில் யாராவது ஒருவரேனும் எனது வாழ்வின் இலக்கு கடவுளைக் காண்பது என்று சொல்ல முன்வருவார்களா? புழு, பூச்சியாக பிறவியெடுக்காமல் மனிதப்பிறப்பு எடுத்தது எதற்காக என்று யோசித்ததுண்டா? பாரதம் புண்ணிய பூமி என்கிறார்களே எதனால் அப்பெயர் வந்தது என்று எண்ணிப் பார்த்ததுண்டா?

 

அரசன் தன் வெற்றியைக் கொண்டாட வானுயரக் கோபுரம் அமைத்து கோயில் எழுப்பினானே எதற்காக. புத்தமும், சமணமும் கோலேச்சிய மண்ணில் சைவம் எப்படி தப்பிப் பிழைத்தது. அன்னியர்களுக்கு கோயில் நகைகளே பொக்கிஷமாகத் தெரிந்தன அவர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து அவர்கள் பொக்கிஷமாக நினைத்ததை கொள்ளையடித்துச் சென்றார்கள். உண்மையான பொக்கிஷம் அதுவல்ல நான்கு வேதங்களும், உபநிடதமும் பரத மண்ணுக்கே உரியன. அனைத்தும் உணர்ந்த ஞானிகளை இந்த கலியுகத்தில் பிச்சைக்காரன் பரதேசி என்று தான் மக்கள் விளிக்கிறார்கள். நல்லவர் ஒருவர் உள்ளார்எனில் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை இதோ பிச்சையெடுத்துக் கொண்டு போகின்றானே அவனால் தான் மழை பெய்கிறது இதை நீங்கள் அறிவீர்களா?

 

நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் வளத்தையெல்லாம் கப்பலில் தங்கள் நாட்டுக்கு கொண்டுபோய் இறக்கினார்கள். அவர்கள் கண்ணுக்கு அது பெரிதாகத் தெரிந்தன. கைலாயம் அவர்களைப் பொருத்த வரை ஒரு பனிமலை, கங்கை ஒரு நதி அவ்வளவுதான். இந்தியாவில் ஒரு காசி தான் இருக்கிறதா, ஊரில் இருக்கின்ற ஒவ்வொரு சுடுகாடும் காசிதான். சிவன் என்ன கோயிலுள்ள உள்ள பள்ளியறையிலா இருக்கிறான். அவன் சாம்பலைப் பூசிக்கொண்டு சுடுகாட்டில் தான் இருக்கிறான். நாம் இறந்த பிறகு சிவலோத்தில் சிவனை சந்திக்கலாம், ஆனால் தாம் வாழும் காலத்திலேயே சிவனை சந்தித்தவர்கள் அறுபத்து மூவர், அவர்களைத்தான் நாம் நாயன்மார்கள் என்கிறோம். சிவாலயங்களில் அறுபத்து மூவர் சிலையை வைத்து வணங்குகின்றோம். அவர்களது வரலாற்றைத் தான் நாம் அடுத்த அத்தியாயத்திலிருந்து பார்க்க இருக்கின்றோம்.

No comments:

Post a Comment