Saturday, April 28, 2018

உன்னதத்தைத் தேடி


துயரநீர்ச் சுழலில் சிக்கிக் கொண்டுவிட்டேன். விதி வாழ்க்கையின் லகானை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கடவுள் என்னை துயரத்தின் வாரிசு ஆகுக என்று கட்டளையிட்டார். கொழுத்த ஆடு மேய்ப்பனின் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். வாழ்க்கையின் விதிமுறைகளை அனுசரிப்பதற்குப் பதிலாக கல்லறையில் படுத்துக் கொள்ளலாம். பிறப்புக்கும், இறப்புக்கும் மத்தியிலுள்ள வாழ்க்கை குரங்கு கை பூமாலையாக ஆகிவிட்டது. வலியவர்கள் தன் பணவலிமையால் எதையும் சாதித்துக் கொள்கின்றனர்.

நல்லவனும், கொலைகாரனும் ஒரே தெய்வத்தைத் தான் வணங்குகிறார்கள். குற்றவாளி சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பிவிடுகிறான். அவனது பாவம் மன்னிக்கப்பட்டதாக ஆகிவிடுமா? அப்பாவி வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து தற்கொலை செய்து கொள்கிறான். இதன் மூலம் அவன் கடவுள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறான். கடவுள் தன் படைப்பு பூரணத்துவம் அடையும் வரை காத்திருப்பார் என்றால், இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு முடிவே இல்லாமல் போய்விடுமல்லவா?

சமூகம் சாத்தானுக்கு ஏவல் புரிகிறது. கடவுளை சாந்தப்படுத்த யாகங்களே போதும் என சமூகம் நினைக்கிறது. பரிசோதனை எலிக்கு கருணை காட்டாத மனிதன் கடவுளிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா? நாளை நடைபெற இருப்பதை இன்றே அறிந்துகொண்டால் தூக்கம் வருமா? கடவுளைப் பொறுத்தவரை மனிதன் மண் தான். மண்ணிலிருந்து தோன்றியவன் இறுதியில் மண்ணுக்கு இரையாகிறான். கடவுள் மனிதன் மூலமாக வெளிப்படுகிறார். கடவுளை மறுப்பவனிடமிருந்து கூட அவன் வெளிப்படலாம். ஆனால் அந்த வெளிப்பாட்டில் மனிதர்களுக்கிடையே வேறுபாடு உள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து வெளிப்படும் கடவுளால் அவரைச் சுற்றி அதிர்வலைகளை ஏற்படுகிறது. கடவுளைத் தேடுபவர்களை அவரின்பால் அது ஈர்க்கிறது. மனிதர்களுக்கு இடையே நிலவும் சக்தி அளவிலான வேறுபாடுகளுக்கு பூர்வ ஜென்ம பலன் காரணமாக இருக்கலாம்.

உண்மை என்னவென்று யாருக்குத் தெரியும். சில வேளைகளில் செயலைச் செய்ய வேண்டுமென்ற விருப்பார்வம்  எதனால் எங்கிருந்து ஏற்படுகிறதென்று யோசித்துப் பாரக்க வேண்டும். இல்லறத்தான் ஞானியைப் பார்த்து இவர் போல எல்லாத்தையும் துறந்துவிட்டு கெளபீனதாரியாக பிச்சையெடுத்து சாப்பிடலாம் என்று எண்ணுகிறான். சந்நியாசியின் மனதோ ஒரு பெண்குட்டியோடு வாழ்ந்து குழந்தை குட்டிகளோடு சுகமாய் இருந்திருக்கலாம் என இல்லறத்தானைப் பார்த்து உள்ளுக்குள் ஏங்குகிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை.

முனைவராக இருந்தாலும் வாழ்க்கைப் பாடத்தை சரியாகப் படிக்காமல் வெற்றி கிட்டாது. புல்லாங்குழல் தான் மனிதன், அதை லயத்தோடு இசைப்பவன் கடவுளாக இருக்கிறான். கடவுள் கோடிக்கணக்கான கண்களால் இவ்வுலகைக் காண்கிறான். கோடிக்கணக்கான கைகளால் செயல் புரிகிறான். யாருக்கும் அவன் விதிவிலக்கு அளிக்கவில்லை. மரணத்தை பொதுவில் வைத்து மனிதனின் வாழ்க்கையில் திருவிளையாடல் புரிகிறான். விடிவதற்கு சில நாழிகைக்கு முன் பூமி மீது காரிருள் கவிந்திருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான்.

நாளை என்ன நடக்கும் என்று யாராலும் கணித்துச் சொல்ல முடியாது. யூகங்களைப் பெரிதுபடுத்தி அதை உலகம் பூராவும் திட்டமிட்டு பரப்புகிறார்கள். உலகம் அழியப்போகிறது  என்ற பயத்தை மக்களின் மனத்தில் தோன்றச் செய்வதே அவர்களின் நோக்கம். இப்படி கோடிக்கணக்கான மனிதர்களின் பயவுணர்வு காற்றலைகளை பாதிக்கிறது. உலக அழிவை விரைந்து கொண்டு வருகிறது. எண்ணத்தின் ஆற்றலால் மனிதன் எப்படி உயர்ந்தானோ, அப்படியே அழிவையும் தேடிக் கொள்கிறான்.

வாழ்க்கைப் புத்தகத்தில் சுவாரஸியமே அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதது தான். எல்லோரும் சாகப் போகிறவர்கள் தான். எந்தவொரு மனிதனும் எதிரிக்கு முன்னால் பிணமாக கூலர் பாக்ஸில் தான் கிடத்தப்பட்டிருப்பதை விரும்பமாட்டான். மறதி கடவுள் தந்த வரம். இல்லையென்றால் மனிதனின் சித்தம் கலங்கிவிடும். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை மனிதனின் ஆயுள் குறைவு தான். அந்த வாழ்வைக் கொண்டாடாமல் அதைத் தவறவிட்டுவிடுகிறான். அன்பே கடவுள் என்ற புத்தர் பிறந்த மண்ணில் தான் சகமனிதனை திட்டமிட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்வதும் அரங்கேறுகிறது.

அடிமைப்படுத்துதலுக்கு எதிராக முதலில் கிளர்ச்சியை தூண்டிவிட்டவர் இயேசு. அவரது வானரசு என்ற கோட்பாட்டை அவரின் சீடர்களே கூட முழுமையாக புரிந்து கொண்டார்களா எனத் தெரியவில்லை. மதக் கட்டுப்பாடு மிகுந்த அன்றைய சூழலில் அவர் செய்தது மாபெரும் புரட்சி. ஓய்வு நாளில் அற்புதங்கள் செய்ததால் யூதர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. யூதர்கள் அதிகாரத்தால் அன்று ஜெயித்தார்கள், ஆனால் கொள்கையால் இயேசுவிடம் தோற்றார்கள். உலக மக்கள்தொகையில் அதிகம் பேர் கிறித்தவ மதத்தை பின்பற்றுவதே இதற்கு சாட்சி.

சத்தியத்தைப் பின்பற்றுபவர்களின் கண் பார்த்து பேசுவது இயலாத காரியம். மனோவேகத்தில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் போர் நடந்த குருட்சேத்திர யுத்தக்களத்துக்கு நம்மால் செல்ல முடிகிறதல்லவா? கோயிலின் பிரம்மாண்டமான கோபுரத்துக்கு முன் நாம் நம்மை சிறு எறும்பாக உணர்கிறோமா இல்லையா? புத்தர் இறந்துவிட்டார் அவர் போதனைகள் இன்றும் வாழ்கிறது. தர்மச்சக்கரம் சுழன்று கொண்டேயுள்ளது. அநீதியை எதிர்த்து சத்தியத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு சோதனைகள் தோன்றலாம், கிருஷ்ணனின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஜெயித்தால் மண்ணை ஆள்வாய். மரணித்தால் சுவர்க்கம் புகுவாய் எனவே மனந்தளராமல் முன்னேறிக் கொண்டேயிரு.

Thursday, April 26, 2018

கனவின் விலாசம்


கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தின் ஆழத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று எனது அறை தங்கக்கிரணங்களால் சூழப்பட்டு அதீத வெளிச்சத்துடன் காணப்பட்டது. இதை நான் கண் திறந்து பார்க்கவில்லை. மனக்கண் இதையெல்லாம் எனக்குத் தெரியப்படுத்தியது. இரண்டு பரதேவதைகள் எனது அறைக்குள் பிரவேசித்தன. ஒரு பரதேவதைக்கு இறக்கை இருந்தது. வெள்ளைக் நிறத்தில் முட்டி தெரிகிற மாதிரி கட்டை கவுன் போட்டிருந்தது. தன் பெயர் pretty பரதேவதை என அது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. இன்னொரு பரதேவதைக்கு இறக்கை சிறிய அளவில் காணப்பட்டது. கறுமை நிறத்துடன் கண்கள் பெரிதாக அவலட்சணமாக காட்சியளித்தது. அதன் பெயர் ugly பரதேவதையாம்.

இரண்டு பரதேவதைகளும் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடியே நடனமாடின. Pretty பரதேவதை நல்ல ஆத்மாவை கடவுளிடம் கூட்டிச் செல்லும் வேலையை செய்யவல்லது. Pretty பரதேவதை என்னிடம் ‘வாழ்க்கையைப் பற்றி உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கடவுளிடம் நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்’ என்றது. நான் சம்மதம் தெரிவிக்கவே, என் கையைப் பிடித்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தது.

சுவர்க்கத்தை அடைந்தோம். அங்கு ஒரு மனித உருவம் நாற்காலியில் அமர்ந்தபடி மேசையின் மீது பரீட்சை அட்டையை வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. தொள தொள ஆடையும் சிகப்பு நிற சால்வையை தோளில் போர்த்தியபடி இருந்த அந்த உருவம், என்னை நோக்கி கவனத்தை திருப்பியது. கருணை பொங்கும் முகத்தோடு ‘வந்துவிட்டாயா’ என்றது. ‘நீ எழுதிய துயர்மிகு வரிகள் என்னை இங்கே தூங்கவிடாமல் செய்தது. எனக்கு இங்கே புத்தக அலமாரி உள்ளது. உன்னுடையை தொகுப்பையும் நான் சேகரித்து வைத்துள்ளேன். பேச்சுத் துணைக்கு நீ வந்துவிட்டதால் எனக்கு இனி போரடிக்காது. யாரை இங்கு அழைக்கலாம் என்று யோசித்தபோது நீ தான் என் நினைவுக்கு வந்தாய். உன்னைக் கண்டால் எனக்கு வியப்பாக உள்ளது. நீ விடாமல் தட்டிக் கொண்டே இருந்தாய், இப்போது உனக்காக என் கதவை திறந்துவிட்டேன். உள்ளே பிரவேசித்துவிட்டாய் இனி உன் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ என்றார். முதல் முறையாக கடவுளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் நான் என்ற உணர்வு ஏற்பட்டது.

தனக்கு எதிரேயுள்ள இருக்கையில் என்னை அமரச் செய்தார். என் கேள்விகளை எதிர்கொள்ள அவர் ஆயத்தமானார். ‘நான் வாழ்க்கையின் பொருள் என்ன?’ என்றேன். அவர் தன் மெளத்தை கலைத்து ‘பிறப்பையும், இறப்பையும் நான் தான் தீர்மானிக்கிறேன், இல்லை என்று சொல்லவில்லை. பணத்தைத் தேடி நீங்கள் ஓட ஓட கடவுளுக்கும் உங்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மகத்தான ஒரு வாய்ப்பாக வாழ்க்கையை மனிதன் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டான். பணத்தை கொண்டு எல்லாவற்றையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற போது மனிதனுக்கு நான் தேவையில்லாமல் போய்விட்டேன். இளகிய மனம படைத்த என்னை மனிதன் ஏமாற்றிவிட்டான்.

வாழ்க்கைப் பாடத்தை மனிதன் சரிவரப் படிக்கவில்லை. கடவுளுக்கு காணிக்கையை அள்ளித்தந்து அவரை சாந்தப்படுத்திவிடலாம் என நினைக்கிறான். சொத்துக்காக தன் கூடப்பிறந்த சகோதரனையே கொல்ல முயல்கிறான். பச்சிளம் குழந்தைகளை தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். வயோதிகத்தில் கூட தன் தவறுகளை அவன் உணர்வதில்லை. மனிதர்கள் தங்களுக்குள் அன்பை வெளிப்படுத்தி வாழ்வதையே நான் விரும்புகிறேன். எனக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வாழ்க்கை   ஒரு பந்தயமுமல்ல. அன்பு செய்ய மனிதனுக்கு கிடைத்திருக்கும் மகத்தான வாய்ப்பு.

அடர்ந்த மெளனம். திரும்பவும் என் மனதைக் குடைந்து கொண்டிருந்த அக்கேள்வியை கடவுள் முன் வைக்கிறேன்.’மனிதர்களுக்கிடையில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்?’ ‘எனது படைப்பு தான் மனிதன் ஆனாலும் நான் அவனை அடிமைப்படுத்த நினைக்கவில்லை. ஆனால் மனிதனுக்கு அடிமைகள் தேவைப்படுகிறார்கள். மனிதன் சக மனிதனை தன்னைவிடத் தாழ்ந்தவன் எண்ணச் செய்வதில் வெற்றி அடைகிறான். கடவுள் பெயரால் பேதத்தை ஏற்படுத்தி தனது ஆளுமையை நிலைநாட்டுகின்றான். பணத்தை வைத்து மனிதனை எடைபோடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஏழைகள் பணக்காரர்களைவிட தாழ்ந்தவர் அல்ல. எத்தகைய சோதனை வந்தாலும் வாழ்க்கையில் உண்மையைக் கைவிடாதவர் எனக்குச் சமமானவர். மெய்யான வாழ்வுக்காக தன்னலத்தை கொல்கின்றவன் என்னை அடையும் பாதையில் அடியெடுத்து வைக்கிறான்.

மேசையின் மீது கண்ணாடி தம்பளரில் உள்ள தண்ணீரை அருந்திவிட்டு, எனது அடுத்த கேள்வியை எதிர்நோக்குகிறார். என் மனதை குடைந்து கொண்டிருந்த கேள்வி ஒன்றை அவர் முன் வைக்கிறேன். ‘மரணத்திற்கு பின் என்ன நடக்கும்?’ ‘இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி உச்சகட்டத்தில் உள்ளது. நான் இருக்கும் கிரகத்தை அவனால் நெருங்க முடியவில்லை. மரணத்துக்கு காரணமாணவன் நானென்று தெரிந்தால், அவன் என்னை விட்டுவைக்க மாட்டான். மரணத்திற்கு விடைகாண மனிதனால் முடியாது. கண்ணெதிரே பிறர் சாவதைப் பார்க்கும் போது தான் சாவோம் என்ற எண்ணம் மட்டும் மனிதனுக்கு வருவதேயில்லை. வயோதிகத்தில் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஏற்படத் தொடங்கும். ஆனால் மனிதர்கள் கிழவன் ஏதோ உளறுகிறான் என்பார்கள். உலகை வென்ற அலெக்ஸாண்டர் தனது உள்ளங்கையில் வைத்து அதை கொண்டு செல்ல முடிந்ததா? நாளை நாம் உயிரோடிருப்போம் என்பது கூட உறுதியில்லை அல்லவா? நிகழ்காலத்தை தவறவிட்டுவிடுபவனால் எதிர்காலத்தில் மட்டும் அப்படி என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும். பிறந்துவிட்டால் இறப்பை எதிர்கொண்டுதானே தீர வேண்டும். மரணத்தில் நீ பூமியில் செய்த செயல்களுக்கான பலனைப் பெற்றுக் கொள்வாய். நீ உத்தமன் என்றால் மறுமைநாளில் நீ என்னைச் சந்திக்கும் போது உன் தலை கவிழாது. மனிதனின் எல்லாச் செயல்களும் அவனை மரணத்திற்கே இட்டுச் செல்கின்றன.

பிறந்தது முதல் மரணநிழல் மனிதனை நெருங்கிக் கொண்டேயுள்ளது. மரணத்திற்கு தப்பி ஓடுபவன் எமனின் காலடியில் தான் போய் விழுவான். உங்கள் வாழ்க்கையில் சத்தியத்துக்கு நீங்கள் இடமளித்திருந்தால், மரணத்தைக் கண்டு பயப்படவேண்டாம். உனக்கு மரணிக்க சம்மதமெனில் மரண ரகசியத்தை உன்னிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறான்’ என்றார் கடவுள். வாழ்க்கையில் மகத்துவம் புரிந்த எனக்கு வாழ்ந்து பாரக்க ஆசை வந்தது. மரணத்தை நேரடியாக எதிர்கொண்டு கொள்கிறேன் என்ற கூறிவிட்டு கடவுளிடமிருந்து விடை பெற்றேன் நான்.

Wednesday, April 25, 2018

எதையோ தொலைத்தேன்


நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தேசிய ஒருமைப்பாடு என்ற கட்டுரையைத் தான் காலாண்டிலும், அரையாண்டிலும், முழுஆண்டிலும் கேட்டிருந்தார்கள். பத்தாம் வகுப்பு விடுமுறையில் இவனோடு வயது குறைந்த நண்பர்களோடு பேப்பரும், பேனாவுமாக கிணற்றடியில் உட்காரந்து எழுத ஏதாவது தோன்றாதா என தவங்கிடப்போம். குடியிருந்த காலனியில் பக்கத்து வீட்டு மாமி தரும் நாவலை வயதுக்கு மீறிய பொறுமையுடன் உட்கார்ந்து படிப்பான். ஆறாம் வகுப்புக்கு தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மாறிய போது இவன் படித்த ஆரம்பப்பள்ளியில் தமிழுக்கு வகுப்பெடுத்தார்கள் கவர்னர் என்ற ஆங்கில சொல்லை பாதுகாவலர் என்று நான் மொழிமாற்றம் செய்தேன். டீச்சர் அன்போடு திருத்தவில்லையென்றால் அன்றோடு தமிழ் வேண்டாம் வராது என்று ஓடிவந்திருப்பேன்.

அப்பா வாரந்தோறும் வாங்கி வரும் தேவியை யார் முதலில் படிப்பது என அக்காவிற்கும், எனக்கும் போட்டி நடக்கும். அக்கா கிசுகிசுவை படித்துவிட்டுத்தான் இவனிடம் தருவாள். இவன் தலையங்கத்தை படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பான். சிறுவயதில் இந்தியா நமது தாய்நாடு என்று இவன் மனதில் வேரூன்றிவிட்டது. பேருந்து நிலையத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் வால்போஸ்டரை சுட்டிக் காட்டி இந்தியா டுடே வாங்கித் தரும்படி அப்பாவை நச்சிரிப்பான். கட்டுரைப் போட்டிக்கு எழுதித் தரும்படி இவன் எந்த ஆசிரியரிடமும் போய் கெஞ்சியதில்லை. இவனே யோசித்து தயார் செய்துவிடுவான். ஆனால் தமிழ்வாத்தியார் தன்னிடம் எழுதி வாங்கியவனைத்தான் தேர்வு செய்வார்.

பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடித்ததால் அம்மா இவனை பள்ளிவரை அடித்து இழுத்து வந்தது இவனுக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அடிக்கு பயந்து பள்ளிக்கு போகமாட்டேனென்று அதற்கப்புறம் அடம்பிடித்ததில்லை. ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் தான் படித்தான். தாளாளர் தன் மனைவியை மாணவர்களுக்கு எதிரிலேயே அவர் முடியைப் பிடித்து அடித்து இழுத்துச் செல்வார். இதனால் அவர் எப்போது பள்ளிக்கு நுழைவாரோ என்ற பயவுணர்வு மாலை பள்ளி விடும்வரை இருந்து கொண்டேயிருக்கும். பள்ளிக் கடிகாரத்தின் பெரிய முள் பன்னிரெண்டைக் கடக்கும் போது சற்று வேகமாக நகரும் பெரிய முள் பன்னிரெண்டை நெருங்கும் போதெல்லாம் பாடத்தைவிட்டுவிட்டு ஒரு கூட்டமே கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியிலிருந்து இவனை பாதியிலேயே அப்பா வீட்டுக்கு அழைத்து வந்தார். தாத்தா இறந்துவிட்டதாக அம்மா சொன்னாள். அதனை இவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பேருந்தில் தாத்தா ஊருக்கு போய் இறங்கினோம். மரநாற்காலியில் அவர் உட்காரவைக்கப்பட்டு இருந்தார். தாத்தாவை அசைவற்ற நிலையில் பார்த்தவுடன், எப்போது வந்தாலும் கண் தெரியாத தாத்தா ஆரஞ்சு சுளை மிட்டாய் கொடுத்து தன்னை அவர் பக்கத்தில் அழைத்து முகத்தை வாஞ்சையோடு தடவிப் பார்ப்பார். இப்போது ஏன் அப்படி செய்யவில்லை என இவனுக்கு வருத்தாமாக இருந்தது. சிறிது நேரத்தில் கண்ணாடி பாட்டிலில் வாங்கி வைத்திருந்த மிட்டாயின் மீது கவனம் திரும்பியது.

அப்பா வழி பாட்டியையும், அம்மா வழி பாட்டியைும் இவன் பார்த்ததே இல்லை. பாட்டியின் மடியில் படுத்து கதை கேட்டு உறங்கும் பாக்கியம் இவனுக்கு கிடைக்காமல் போனது. முடிவெட்ட செல்லும் போதெல்லாம் ரஜினி கிராப் வெட்டிவிடச் சொல்லும்படி வீடடிலேயே அப்பாவிடம் சொல்லி அழைத்து வருவான். சலூன் கடைக்காரர் முடியை வெட்டாமல் அப்படியே விடுவது தான் ரஜினி கிராப் என்று சொன்னது இன்னும் இவனுக்கு ஞாபகமிருக்கிறது.

அக்காவோடு வளர்ந்தாலும் வேறு பெண்களைப் பார்க்கும் போது வேற்றுகிரக வாசிகளைப் பார்ப்பது போல் தான் பார்ப்பான். இவன் வீசும் கல்லுக்கு மட்டும் ஏன் புளியம் பழம் விழுவதில்லை என இன்றும் யோசித்துக் கொண்டிருக்கிறான். வேலியோர தட்டானைப் பிடிக்கும் போது முள் எத்தனை முறை காலைப் பதம் பார்த்தாலும் இவனுக்கு வலிப்பதில்லை. இவன் கோர்வையாக கதை சொல்வதைப் பார்த்து கூட்டம் மகுடிப்பாம்பாய் மயங்கும். கதை கேட்பதற்கென்றே இவனைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

பத்தாம்வகுப்பு முடித்த பின் சில தடங்கல்களால் செகண்ட் குரூப் எடுக்க வேண்டி வந்தது. அது ஒரு கிறித்தவப் பள்ளி. இவன் வகுப்பில் ஏழே பேர் என்பதால் வகுப்புக்கு வாத்தியார்கள் யாரும் வருவதில்லை. கூண்டுக்கிளி வாய்ப்பு கிடைத்தால் தப்பிக்கத்தானே பார்க்கும். படிக்கிறேன் என்று சொல்லி ஊரைச் சுற்றித்திரிந்தது தான் மிச்சம். சுதாரித்துக் கொண்டு இங்கே படித்தால் தேற முடியாது என்று முடிவெடுத்து பாலிடெக்னிக் படிப்புக்கு அச்சாரம் போட்டான் இவன்.

அப்பா, அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பொய்யாக்கி கடைசி செமஸ்டரில் அரியஸ் வைத்து வெளியே வந்தான். எதிர்பாராத இந்த தோல்விதான் இவன் வாழ்க்கையையே மாற்றியது. இவன் தொலைத்த காலமே இவனை தன் கால்களால் பந்தாடியது. அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தோம். நண்பர்களுடனான தொடர்பு அறுந்தது. அப்பாவின் காசில் சொகுசாக இருந்ததால் கிடைத்த இடத்தில் உடம்பை வளைத்து வேலை செய்ய முடியவில்லை இவனால். தன்னை வருத்திக் கொண்டானா அல்லது திருத்திக் கொண்டானா எனத் தெரியவில்லை, சென்னையில் வசித்த ஏழு வருடங்களில் எந்த தியேட்டரிலும இவன் காலடி பட்டதில்லை.

ஏதோ ஒரு வார இதழில் பாலகுமாரனின் குருவைப் பற்றியத் தொடரின் ஒரு பகுதியை தற்செயலாக படிக்க நேர்ந்தது. அதன் பாதிப்பால் அவரின் எழுத்துக்களைத் தேடி அலைந்தேன். அரசு நூலகத்தில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றிரண்டு தான் கிடைத்தது. ஏதேச்சையாக சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருக்கையில் பழைய புத்தக்கடையில் வெளியே சிதறிக் கிடந்த புத்தகத்தில் பாதி கிழிந்த நிலையில் அவர் புகைப்படத்தைப் பார்த்தேன். அவரது ஐம்பது நாவல்களை அங்கே தான் பொறுக்கி எடுத்து படித்தேன். அந்த பாலகுமாரன் என்ற கண்டிப்பான பெரியவர் தான் குருவாக இவனுக்கு தமிழ் மூன்றாடுகள் தமிழ் கற்றுத்தந்தார். அவர் எழுதிய குரு என்ற புத்தகம் இவன் பார்வையை முற்றிலும் மாற்றியது உள்ளுக்குள் மாற்றம்  நிகழ்ந்தது. பாலகுமாரன் விதைத்த விதை தான் நான் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டு தாக்குப்பிடிப்பேனா என்று பார்ப்போம்.

Saturday, April 21, 2018

கருவறை வாசனை


கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டி எறிந்துவிட்டு மரத்தை வேரோடு சாய்ப்பதை போலத்தான் மரணம் நம்மை நெருங்குகிறது. உறவுகளின் இழப்பு நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நமது நம்பிக்கை நீரூற்று கொஞ்சம் கொஞ்சமாக வற்ற ஆரம்பிக்கிறது. பிரியமானவர்களின் இறப்பு மரணத்தைவிடக் கொடியதாக இருக்கிறது. வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் அவர்களை நினைவுபடுத்திக் கொண்டேயுள்ளது. உயிரோடு இருக்கும்போது அவர்களிடம் மனம் கோணும்படி தான் நடந்து கொண்டது ஞாபகம் வருகிறது. வீதியில் நடக்கும போது அவளின் குரல் போல் உள்ளதே என திரும்பிப் பார்க்க நேரிடுகிறது.

பெண்ணிடமுள்ள புனிதத்தன்மைதான் ஆணை ஈர்க்கிறது. அவளுடைய கண்கள் மூலமாகத்தானே பத்து மாதம் இவ்வுலகைப் பார்த்து வந்தோம். ஒருவனுடைய வாழ்க்கைக்கு பிள்ளையார்சுழி போடுவதும், முற்றுப்புள்ளி வைப்பதும் பெண்ணாகவே இருக்கிறாள். உடல் வலிமையை விட மனவலிமை பெண்ணுக்கு அதிகமாக இருக்கிறது. உலகில் வாழும் எல்லோரும் அவளின் வாய் வழியாகத்தான் உணவை உட்கொண்டோம், அவளி்ன் இரத்தத்தைத் தான் பாலாய் குடித்தோம். வயிற்றிலிருக்கும் போது அவள் பேசுவதைக் கேட்டுத்தான் தாய்மொழியை கற்றுக் கொள்கிறோம். ஒரு உயிரை உலகத்துக்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமான காரியமா என்ன.

வாலிபத்தில் அம்மாவின் சாயலுள்ள பெண்களால் தான் ஆண் அதிகம் கவரப்படுகிறான். நிம்மதியற்ற நேரத்தில் அம்மாவின் மடியில் சாய்ந்து கொண்டு உறங்குவதையே அவன் விரும்புகிறான். அவளின் கொலுசு சத்தம் தான் அவன் கேட்கும் முதல் சங்கீதம். தாயின் வயிற்றிலிருந்து அவன் வெளிவந்துவிட்டாலும், தனது மனஊஞ்சலை விட்டு மண்ணில் அவனை இறக்கிவிடுவதே இல்லை அவள். அவளுடைய மனம் பாதுகாப்பு அரண்போல அவனைப் பாதுகாக்கிறது. அம்மா மட்டும் அறிந்த அவனுக்கு அப்பா எனும் புது உறவை அவள் தான் அறிமுகப்படுத்துகிறாள். புது வாசலை அவனுக்கு திறந்துவிடுவதும் அவள்தான். அவனுடைய சிறகுகளை முறிக்கும் எண்ணம் அவளுக்கு வருவதே இல்லை. அவன் அம்மா என்று மழலையில் அழைக்கும் போது அவளின் தாய்மை உணர்வு பூரித்துப் பொங்குகிறது.

உறக்கம் வரும்வரை அவள் அவனுடைய தலையை வருடிக் கொண்டிருக்கிறாள். தனக்கு அப்புறம் இவனை யார் கண்ணும்கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வி அப்பொழுது அவள் மனதில் எழுகிறது. காலம் அவனை வெயிலில் அலைய வைக்கும் போதெல்லாம், அவள் தன் புடவைத் தலைப்பால் அவன் உடலை போர்த்தி அழைத்துச் சென்றது அவனுக்கு ஞாபகம வரும். ஒரு பெண்ணை அவன் எதிர்கொள்ளும் போதெல்லாம் அவனுடைய அம்மாதான் அப்பெண்ணின் உள்ளிலிருந்து அவனை வாஞ்சையுடன் பார்க்கிறாள்.

இப்போது தடுமாறி விழும் அவனை தாங்கித் தூக்க அவள் இல்லை. பசி வயிற்றைக் கிள்ளும் போது அவள் நிலா காட்டி சோறு ஊட்டியது ஞாபகத்திற்கு வருகிறது. அவன் மனக்கலக்கத்தில் இருக்கும் போதெல்லாம் கனவில் அவள் வந்து ஆறுதல் கூறுவாள். அவன் உழைத்துக் களைத்து மாலையில் வீடு திரும்பும் போது, தென்றலாக வந்து தழுவிக் கொள்வதும் அவள்தான். நதிநீரில் கால் நனைக்கும் போதெல்லாம் அவளின் காணாமல் போன மெட்டி காலடியில் நிரடுவதாகவே அவனுக்குத் தோன்றும். மின்தடையால் உறக்கம் வராமல் புரண்டு படுக்கும் போது அவள் மழை இரவில் கொசுக்களை விரட்ட இரவு முழுவதும் பனைவோலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வரும்.

அவனுக்கு உடல் சுகவீனமடையும் போதெல்லாம், வீட்டில் அவன் கூடவே யாரோ நடமாடுவது போல அவனுக்குத் தோன்றும். அவன் எந்ததேசத்துக்கும் அதிபதி இல்லையென்றாலும் அவளுக்கு ராஜா தான். அவனுக்கு மேகமாக வந்து நிழல் தருபவளாகவும், மழையாக வந்து தாகம் தீர்ப்பவளாகவும் அவளே இருக்கிறாள். அவன் தாயை நினைத்து கண்ணீர்விடும் சமயங்களில் அவள் தன் வயிற்றை வாஞ்சையுடன் தடவிப் பார்த்துக் கொள்கிறாள்.

அவள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலை அவன் கேட்க நேரும் போதெல்லாம் கண்ணீர் அரும்புகிறது. அவளுக்கு பின் செல்லப் பெயரால் அவனை யாரும் அழைப்பது இல்லை. காபி மட்டும் சாப்பிட்டுவிட்டு காசு இல்லாததால் அடுத்தவர் தோசை சாப்பிடுவதை பசியோடு பார்க்கும் போதெல்லாம், அவள் பள்ளிக்கு கொடுத்தனுப்பும் சாப்பாடு பிடிக்காமல் அதை சாப்பிடாமல் வைத்து மாலையில் அவள் முன்பு வீசியெறிந்தது ஞாபகம் வரும். பேருந்தில் அம்மாவின் கைப்பிடித்து நிற்கும் குழந்தையைக் கண்டால் அவன் எழுந்து இடம்விடுவான். விலாசம் கேட்டு வெயிலில் குழந்தையோடு அலையும் பெண்ணுக்கு சோடா வாங்கிக் கொடுப்பான். குழந்தையோடு மழையில் நனையும் பெண்ணுக்கு தனது குடையில் இடம் கொடுப்பான். வாசற் கதவை அவள் எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என்பதால் அவன் இரவில் கதவை தாழிடுவதில்லை. அம்மாவின் சாயல் இருக்கிறதேயென்று முன்சென்று முகம் பார்த்து ஏமாந்திருக்கிறான்.

பீரோவிலுள்ள சேலைகளில் இன்னும் அவள் வாசமடிக்கிறது. அவள் பிரியத்துடன் எடுத்துக் கொடுத்த நைந்து போன சட்டையை இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். காலத்தின் கைகளில் தன்னை ஒப்படைத்துப் போன அவளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான். டிரங்கு பெட்டியில் அவள் எழுதி அஞ்சல் செய்யப்படாத கடிதத்தை இன்று வரை அவன் கோடி முறையாவது படித்திருப்பான்.

Saturday, April 14, 2018

இறையுணர்வு


கடவுள் கருணையே வடிவானவராக இருக்கிறார். மனிதர்களுக்கு ஞானத் தந்தையாக விளங்கும் அவர், அதற்காக பிரதிபலனை எதிர்பார்த்து ஏங்கவில்லை அவர். அதற்கு ஈடாக அன்பு ஒன்றையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். கடவுள் புல் தழைப்பதற்கு மழையை அனுப்புகிறார். மனிதர்களுக்கு அதனைவிட மேலானவற்றை அவர் செய்வார். ஒரு மதத்திற்குரிய கடவுளல்ல அவர். மனிதர்களுக்கான கடவுள். பேதத்தை ஏற்படுத்தி நீங்கள் மோதிக் கொள்வதை வேடிக்கைப் பார்க்கும் கடவுளல்ல அவர். உங்களின் அன்னையை விட அன்வு மிகுந்தவர்.

கடவுளின் வாசற்கதவு எப்போதாவது தட்டப்படும் போது வியந்து போகிறார். கைவிடப்பட்ட உலகில் கடவுளைத் தேடுவது யாரென்று. இயற்கை கடவுளின் ஆளுமைக்கு உட்பட்டதா என்றால், ஆம் என்றும் கூறலாம் இல்லையென்றும் கூறலாம். இந்தப் விசாலமான பூமியில் மனிதக்கடவுளும், இயற்கையின் அதிபதியும் மோதிக் கொள்கிறார்கள். மனிதக்கடவுளிடம் அன்பு மட்டுமே இருக்கிறது. இயற்கையிடம் ஆயுதம் இருக்கிறது. கடவுள் இந்தப் பூமியில் அன்பு விதையை விதைத்துள்ளார். அது வளர்ந்து விருட்சமாக கோடிக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம்.

மனிதனும் மற்ற உயிரினங்களும் புவியீர்ப்பு சக்தியை எதிர்த்தே செயல்படுகின்றன. வளர்இளம் பருவத்தில் ஈர்ப்பு சக்தியை எதிர்த்து நம்மால் திறம்பட செயலாற்ற முடியும், வயது ஏற ஏற ஈர்ப்புவிசையை எதிர்க்கும் ஆற்றல் படிப்படியாக குறையத் தொடங்கும். உடல் தளர்ந்ததும் காந்த விசையைப் போல் செயல்பட்டு உடலின் இயக்கத்தை இறுதியில் நிறுத்துகிறது. உலகம் அழியும் வரை இயற்கை மனித இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.

கடவுள் அன்பிற்குரிய பாதைக்கு நம்மை அழைக்கிறார். இயற்கையோ மனிதனின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டது. கொலைகாரனானாலும் என் மகன் என்று தாய் கரிசனம் காட்டுவதைப் போல கடவுள் நடந்து கொள்கிறார். இயற்கையோ கண்டிப்பாக தன் விதி பின்பற்றப்பட வேண்டும், அதன்படி அவன் ஆயுட்காலத்திலேயே குற்றத்திற்கான தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது.

மனிதன் ஆத்மாவோடு பிறப்பதில்லை. தமது செயல்களால் இறைவனிடமிருந்து பரிசாக ஆன்னாவை பெற்றுக் கொள்கிறான். காந்தியைப் போன்ற வெகு சிலரே ஆத்மாவை பரிசாகப் பெற்றிருக்கக் கூடும். மரணத்திற்கு பின்னால் சூன்யம் என்கிறார் புத்தர். இது ஒரு வகையில் உண்மை, எப்படியென்றால் பாவ காரியத்தில் ஈடுபட்டவன் இறப்புக்கு பிறகான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லப்படமாட்டான். பூமியில் புனிதராக வாழ்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் வானரசில் கடவுளோடு இன்றும் வாழ்ந்து கொண்டிக்கிறார்கள். மனதால் கூட பாவம் செய்யாதவர்கள் குறைவுதான், எனவே ஏறத்தாழ வெகுசிலரைத் தவிர மற்ற அனைவரும் சூன்யத்தையே தண்டனையாகப் பெறுகிறார்கள்.

பஞ்சபூதங்களாலான ஆகாயம், பூமி, நீர், காற்று, நெருப்பு, இவை ஒத்துழைக்கவில்லை என்றால் உலக அழிவைச் சந்தித்துவிடும். இயற்கையின் உந்துதல் தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. உலகம் போர்க்களமாக மாறியதற்கு இயற்கையே காரணம். குற்றவாளிக்கு இயற்கை தரும் தண்டனை என்னவென்று கடவுள் அறிந்தேயிருக்கிறார். கடவுளை உதாசீனப்படுத்தும் மனிதன், இயற்கையைக் கண்டு அச்சம் கொள்கிறான். எதிர்க்க வலுவில்லாமல் மறைவிடம் தேடி ஓடி ஒளிந்து கொள்கிறான். கடவுள் கீழே இறங்கி வந்தாலும் மனிதனின் இயல்பை மாற்ற முடியாது என்கிறது இயற்கை.

இயற்கை அனுமதிக்கும் வரைதான் மனிதன் பூமியை ஆள முடியும். மனிதக்கடவுள் துயரம் மிகுந்தவராக இருக்கிறார். உண்மையின் வழி நடப்பவர்கள் இறுதிக்காலத்தில் கூக்குரலிடும்போது அவரிடமிருந்து மெளனமே பதிலாக வருகிறது. மனிதக்கடவுள் மனிதனுக்கு உணர்த்த நினைப்பது இதுதான். மண்ணுக்கு நீ இரையாகும் முன்பே விழித்துக்கொள், இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் இறப்பு மிக்க் கொடியதாக அமைந்துவிடும். மேலும் கடலில் எழும் அலைகளுக்கு எங்கிருந்து கட்டளை வருகிறதென்று இன்று வரை எனக்குத் தெரியாது என்கிறார். இயற்கையின் கைதியாகிவிட்ட மனிதனை தன்னால் மீட்க முடியாத கையாலாகாத தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொள்கிறார்.

Saturday, April 7, 2018

வேதனைப் பாதை


மைதானத்தில் உதைபடும் பந்தாய் தான் மனித வாழ்க்கை இருக்கிறது. இத்தனை வேதனைகளைத் தாங்கிக் கொண்டு எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் சில வேளைகளில் மனித மனத்தில் எழத்தான் செய்கிறது. கவலையை மறக்க மதுவை நாடி ஓடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மனதிற்கும் அங்குசம் தேவையாய் இருக்கிறது. இல்லையென்றால் மதம் பிடித்து தன்னிலை தவறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. மனிதனின் சுயநலம் தான் வாழ்க்கையை நரகமாக்குகிறது.

கண்டுபிடிப்புகள் புறவசதிகளை மேம்படுத்த உதவுகிறதே தவிர மனத்தை மேம்படுத்த சிறு அளவிலும் உதவவில்லை. மனம் தீய எண்ணங்களின் கூடாரமாகவும், பேய்களின் வசிப்பிடமாகவும் இருக்கிறது. பெளதிக உலகில் மனதின் கருவியாகவே உடல் இருக்கின்றது. மனிதனின் அகந்தைதான் மனம். மனம் நசியும் போதுதான் இறைக் காட்சிகள் தோன்றத் துவங்கும். கடவுளின் எண்ணத்தின் பிரதிபலிப்பே இவ்வுலகம். மனித எண்ணத்தின் பிரதிபலிப்பே கண்டுபிடிப்புகள்.

ஒருவர் தனது மனதால் இன்னொருவருடைய மனதில் ஒர் எண்ணத்தை உருவாக்குவது சாத்தியம் தான். கடவுள் தான் இப்பணியைச் செய்து வருகிறார். அவருடைய பேரண்ட மனம் தான் மனிதனுடைய மனதில் எண்ணத்தை எழச் செய்கிறது. கடவுள் தனது இந்த அற்புதசக்தியை சில நபர்களுக்கு வரமாக அருளுகிறார். ஆனால் அவர்கள் இந்த மாயவித்தையை மனிதர்கள் மீது பிரயோகப்படுத்துவதில்லை. அவர்களை ஞானிகள் என்கிறோம். அவர்கள் இச்சைக்கு அப்பாற்பட்டு இருக்கிறார்கள். கடவுளை அடைவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. எதிரிகளின் சாம்ராஜ்யத்தில் ஒற்றர்கள் வேவு பார்ப்பதைப் போல சாத்தான் தனது பிரதிநிதிகள் மூலம் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பூமியில் தனது கைவரிசையை காட்டி வருகிறான்.

தனக்கு ஆட்பட்ட மனத்தை பொம்மையாக ஆட்டுவிப்பது சாத்தானுக்கு கைவந்த கலை. கடவுளை நாடும் மனம் கோயிலாகவும், சாத்தானை நாடும் மனம் குகையாகவும் இருக்கிறது. சாத்தான் மனிதனை கேடயமாகப் பயன்படுத்தி கடவுளிடம் மோதுகிறான். ஒரு பெண்ணைக் கண்டதும் காதல் தோன்றுமாயின், கடவுள் ஜெயிக்கிறார். காமம் எழுமாயின் சாத்தான் சிரிக்கிறான். மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கவே கடவுள் விரும்புகிறார். மனிதன் மீது தனது ஆளுமையை செலுத்தி, அவனை கைப்பாவையாக மாற்றவே சாத்தான் விரும்புகிறான்.

குற்றவாளிகளின் கூடாரமாக சாத்தான் இந்த உலகத்தை மாற்றி வைத்திருக்கிறான். புலன்களை வேட்டையாட விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தோமானால், அந்திம காலம் வேதனை மிகுந்ததாக இருக்கும். சாத்தானின் குரலை மறுதலிக்கும் போதுதான், மனிதனின் மெய்யான வாழ்வு தொடங்குகிறது. ஞானத்தந்தையான கடவுள் தனது குமாரனை ஒருக்காலும் கைவிடுவதில்லை. உலகத்தின் பாரத்தை அவர் சுமந்தாலும் தனது படைப்பு பூரணத்துவம் பெறுமென்று அவர் வெகுகாலமாக காத்திருக்கிறார்.

ஆணுக்கு கடவுளைக் காண்பதற்கு தடையாக பெண் இருக்கிறாள். அவள்தான் தாயும், காதலியும். தாய் தனது மகன் கடவுளைக் காண தாமே தடையாக இருப்பதை உணர்ந்து நகர்ந்து கொள்கிறாள். காதலிக்கு விலகிக் கொள்ள விருப்பமில்லை, விலகினால் தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட தயங்குவான், தன்னை அலட்சியப்படுத்தி, தான் கிழித்த லெட்சுமணக் கோட்டை தாண்டிவிடுவான் என்ற பயம் அவளுக்கு.

எந்த உடலை பேணிப் பாதுகாக்கிறோமோ அந்த உடல் இறுதியில் தீயிக்கு தான் இரையாகப் போகிறது. அழகு அழகு என்று எதைக் கொண்டாடுகிறார்கள் மனிதர்கள், குருதியையும், எலும்பையும் போர்த்தியுள்ள தோலைத்தானே. உறக்கம் ஆறுதல் அளிக்கிறது. விடியல் வேதனையாற்றில் நீந்த வாவென அழைக்கிறது. அன்பு உங்களைப் புனிதப்படுத்தும், கடவுளை உங்களை நோக்கி அழைத்து வரும். வெறுப்பு உங்களை மிருகமாக்கும். இறந்த பிறகும் மனம் சாந்தியடையாமல் இன்னொரு உடல் தேடி உங்களை அலையவைக்கும்.

இதோ வானிலிருந்து பெய்யும் மழை மனிதர்களைப் புனிதப்படுத்தும். இதன் மூலம் கடவுளின் கருணை வெளிப்படுகிறதல்லவா? எல்லா கதவுகளையும், ஜன்னல்களையும் நீ சார்த்திவிட்டாலும், கடவுளின் கண்கள் மட்டும் உன்னை கவனித்துக் கொண்டிருக்கும்.

Thursday, April 5, 2018

சாவின் அழகு


இயற்கை பாம்பாக இருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விழுங்கி ஏப்பம் விடுகிறது. உலக அழிவை முன்னிட்டு பரப்பப்படும் வதந்திகள் இன்றளவும் குறைந்தபாடில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரை அவனளவில் உலகம் அழிந்து தானே போகிறது. மரணம் இதைத் தானே ஆதிகாலம் தொட்டு நிகழ்த்தி வருகிறது. சாவை மறப்பதற்குத் தானே மனிதன் ஆசை வலையில் விழுந்து கிடக்கிறான். மரண சர்ப்பம் பிறந்ததிலிருந்து அவனைத் தொடர்ந்து கொண்டு தானே வருகிறது. உடலை கடன் கொடுத்த கடவுளுக்கு அதை திருப்பிக் எடுத்துக் கொள்ள உரிமையில்லையா?

மரணவிதி இவ்வுலகில் இயங்குவதால் தானே அவ்வப்போது அவதாரங்கள் நிகழ்கிறது. கடைத்தேற்ற வந்தவர்களை கல்லால் அடித்து விரட்டியவர்களின் சந்ததிகள் தானே இவர்கள். மரணத்தின் நிழல் நம்மீது கவியும் போது மனம் உண்மை பேச விழைகிறதல்லவா? வானத்து சந்திரன் எத்தனை சாம்ராஜ்யங்களை, சக்கரவர்த்திகளை, பேரழகிகளைக் கண்டிருக்கும். பலகோடி பேர்களை உண்டு செரித்த வயிறல்லவோ மண்ணுக்கு. சாம்பலை நதியில் கரைக்கும் போது கூட தோன்றுகிறதா? இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது என்று!

கடவுளின் கிருபை வேண்டுமென்றால் அவனது படைப்பான சகமனிதர்களை நேசிக்க வேண்டுமல்லவா? பாவிகளை இரட்சிக்கத்தான் வந்தார் இயேசு, அதற்காக பாவக்கணக்கினை தொடர்ந்து கொண்டிருந்தால் மீட்பு சாத்தியமாகுமா? கடவுளின் குரல் எல்லா மனிதனுக்குள்ளும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது, ஆனால் அவன் சாத்தானுக்கே ஏவல் புரிகிறான். சாவு நம்மை அழைக்கும் போது நான் வரமாட்டேனென்று சொந்த பந்தங்களை காரணம் காட்ட முடியுமா?

மரண வெள்ளம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது ஒருநாளும் மனிதர்களை தரம்பிரித்து பார்த்ததில்லை. விதி வெகு நியாயமாக நடந்து கொள்கிறது. உலக நாடக மேடையில் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கலைந்து பயணத்தைத் தொடர்வதே மரணம். நான் ராஜா வேடமிட்டேன் எனக்கு கடவுளுக்கு அருகில் இடம் கொடுக்க வேண்டுமென்றால் முடியுமா? கடவுள் தனக்குப் பிரியமானவர்களாக யாரையும் கருதுவதில்லை. அடித்தால் செத்துவிடுகிறதே கொசு அதைவிட நாமொன்றும் மேலானவர்கள் அல்ல.

அற்பபுழுக்களான நாம் பிறரைவிட நாம் உயர்ந்தவர் என்றும், நாடு,மொழி,இனம் என்று நம்மை நாமே பிரித்து வைத்திருக்கிறோம். மரணத்தை பொறுத்தவரை மர்மத்தின் முடிச்சை மனிதனால் எந்நாளும் அவிழ்க்க இயலாது. குளத்தில் நீந்தும் மீன் தன்னைக் கடவுள் என்று எண்ணிக் கொண்டால் நாம் என்ன செய்வது. நடந்தேற வேண்டிய ஒன்றை நிறுத்த மனிதன் படாதபாடுபடுகிறான், ஆனால் மனிதனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. வான மண்டலத்தை ஆராயும் அவனால் கடவுளின் நிழலைக்கூட நெருங்க முடியாது. இல்லை என்பவர்கள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள், உண்டு என்பவர்கள் தான் விசாலமான வானத்தை அளந்து பார்க்க விழைகிறார்கள். மரண ஆற்று வெள்ளத்தில் மனிதர்கள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள். கரை சேர்ந்தவரகள் யாரென்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.

வசந்தத்திற்கு தயாராகும் மரம் சருகுகளை உதிர்க்கத்தான் செய்யும், அதற்காக மரம் அழுகிறதா என்ன? பூமிக்கு வருகைதர நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதால் நம்மை மக்கள் கல்வீசித்துரத்துவார்கள் என்றால், தப்பித்து ஓடாதீர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்த இயேசுவை நினைத்துக்கொண்டு அவர்களை நெருங்குங்கள்!

Tuesday, April 3, 2018

பிரார்த்தனை


பிரார்த்தனை உரையாடல் ஆகமுடியாது. பிரார்த்தனையில் பக்தன் பேசுகிறான் கடவுள் பேசுவதில்லை. பொருளற்ற வாழ்க்கையில் மனிதனுக்கு பிடிமானமளிப்பதே பிரார்த்தனைதான். பிரார்த்தனை என்பது நல்லதற்கு நன்றி கூறும் விதமாகவும் கெட்டதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டி முறையிடுவதாகவும் இருக்க வேண்டும். பிரார்த்தனையில் கடவுள் மெளனமாக இருக்கிறார். அதற்காக அவன் பிரார்த்தனையை செவிமடுக்கவில்லை என்று அர்த்தமில்லை. பிரார்த்தனையின் போது பக்தன்விடும் கண்ணீர் அவன் பாவங்களைக் கழுவுகிறது.

இந்த உலகில் பிரார்த்தனை நடக்காத நேரமே கிடையாது. கடவுளின் படைப்பு பூரணமானவை இல்லை என்பதால் பிரார்த்தனையின் மூலம் நமது கஷ்டங்களை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. கடவுளுக்கு வேறுபல வேலைகள் இருக்கலாம். ஆனால் பரதேவதைகள் இந்த வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கின்றன. வார்த்தைகளால் எந்த அளவு வெளிப்படுத்த முடியும் உங்கள் துயரத்தை. தேவாலய வாசலில் நீங்கள் கால் வைக்கும் போதே உங்கள் சரித்திரம் முழுவதையும் அவர் தெரிந்து கொள்கிறார். நீங்கள் நுழையும் போதும் கடவுள் மெளனமாயிருந்தார். நீங்கள் உங்கள் பிரார்த்தனை ஏறெடுத்த பின்பும் அவர் மெளனத்தைக் கடைபிடித்தார் என்றால்  அதற்கு  என்ன அர்த்தம்.

பிரார்த்தனையின் போது உங்கள் அகந்தை கரைகிறது கடவுளின் அருள் உங்கள் மீது இறங்க அது வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அன்பே கடவுள் என்றால் அவர் மனிதர்கள்படும் அவஸ்தையை நியாயப்படுத்தி பேச மாட்டார். கடவுளுக்குத் தெரியும் உங்கள் தோள் மீது சுமையை சுமத்தினால் நீங்கள் இளைப்பாற இடம் தேடுவீர்கள் என்று. துன்பப்படும் போது மனம் விழித்துக் கொள்கிறது. அது கடவுளுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயலுகிறது. கஷ்டங்கள் நாம் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க நல்வாய்ப்பாக அது அமைகிறது.

அஞ்ஞானத்தில் மூழ்கியுள்ள பெரும்பாலான மக்களிடமிருந்து ஒரு சிலரைத்தான் கடவுள் தட்டி எழுப்புகிறார். பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடவேண்டுமென்ற வேட்கையைத் தூண்டுகிறார். பணம் மிதமிஞ்சி இருந்தால் அவர்கள் தேவாலயத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க மாட்டார்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை அதிரகசியமாக தன்னுள் புதைத்து வைத்திருக்கிறார் கடவுள். கடவுளைக் காட்டுகிறேன் என்று சொல்பவர்களிடம் ஏமாந்து போக வேண்டாம். பிரார்த்தனை மூலம் நீங்கள் தட்டும் போது அந்தக் கதவு திறந்து கடவுளின் தரிசனத்தைக் காண்பீர்கள்.

ஒரு மனிதனின் இதயத்தில் அன்பை பிரவேசிக்கச் செய்ய ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்றால் அதையும் பொறுமையுடன் செய்து முடிப்பார் கடவுள். வெறும் சடங்கு போல பிரார்த்தனை செய்யக் கூடாது கடவுள் செவிமடுப்பார் என்ற உள்ளுணர்வுடன் பிரார்த்தனையை ஏறெடுக்க வேண்டும். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவர்கள் கடவுள் நமக்கு அளித்தார் என்ற நன்றியுணர்வுடன் இருக்க மாட்டார்கள். வாழ்க்கையே ஒருவருக்கு பிரார்த்தனை ஆகும் போது அவன் மெளனமாய் இருக்க அவன் வழியே கடவுள் பேச ஆரம்பிக்கிறார்.

வாழ்க்கையின் நிச்சயமற்றத் தன்மையை நாம் உணரும் போது நமக்கு இன்னொரு வாசல் திறக்கிறது. வற்புறுத்திப் பெறலாம் என்ற நினைப்பு மனிதனுக்கு வரக்கூடாது. பணிவன்புடன் பிரார்த்தனையை ஏறெடுத்தால் தேவன் செவிமடுப்பார். எது நமக்கு நன்மை தருமோ அவற்றை மட்டும் கடவுள் நமக்களிப்பார் என்ற புரிதல் வேண்டும். எனது விருப்பத்தை உங்கள் முன் வைக்கிறேன் எனும் போது இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை கடவுளிடம் ஒப்படைத்துவிடுகிறீர்கள். மனிதனால் உருவாக்கப்பட்டதை விட்டுவிடுங்கள் இயற்கையோடு பேசுங்கள் அது உங்களுக்கு கண்டிப்பாக கடவுளைக் காட்டும்.

பிரார்த்தனை மனிதனுக்கும் கடவுளுக்கும இடையேயுள்ள பாலமாக செயல்படுகிறது. அருள் காற்று வீசிக் கொண்டுதான் உள்ளது நீங்கள் தான் பாய்மரத்தை விரிக்க வேண்டும். அன்பானவர்களின் கண்களில் கருணை நிரம்பி இருக்கும். பிரார்த்தனையை மனித குலம் இழந்துவிடக்கூடாது ஏனெனில் கடவுளின் அருள் கிரணங்கள் அதன் வழியாகவே பாய்கிறது. கடவுள் மீது குற்றம் சுமத்தாதீர்கள் நம் மனத்தில் என்ன உள்ளதோ அதுவே வெளியில் வெளிப்படுகிறது.

புனிதமான எந்த ஒன்றையும் மனிதன் வணங்க வேண்டுமென்றுதான் கடவுள் விருப்பப்படுகிறார். சத்தியத்துக்கு பிரதிவுபகாரமாக சிலுவையை ஏற்றுக் கொண்ட இயேசு தான் சீடர்களின் கால்களை புனிதநீரால் கழுவுகிறார். வாழ்க்கைக் கடலைக் கடக்க உதவும் இந்த உடலாகிய படகுக்கு என்ன நேருமோ என்ற அச்சத்தை இறைவனிடம் ஒப்பிவித்துவிடுங்கள். வாழ்க்கை ரயில் பயணம் போன்றது உங்கள் சுமைகளை இன்னும் தலையில் சுமக்காதீர்கள். நியாயத்தீர்ப்பு நாளில் தேவனுக்கு கொடுப்பதற்கு பாவ மூட்டையை சுமந்து வராதீர்கள். உயிர்த்தெழுந்த இயேசு வெள்ளிக் காசுக்காக காட்டிக் கொடுத்த யூதாஸுக்கு பாவமன்னிப்பு வழங்கியிருப்பார். நான் கடவுள் என்று சொல்பவன் எவனும் கண்டிப்பாக சாத்தானாகத்தான் இருப்பான் என்பதை மறக்காதீர்கள்.