Monday, November 5, 2018

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் – 10

உயிர் எடுக்கும் பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது. மனிதனாயப் பிறப்பெடுத்தவன் மட்டுமே இறைவனை அடையக் கூடிய வாய்ப்பினைப் பெறுகிறான். வாழ்க்கை ஒரு வாய்ப்பு என்று உணராதவர்கள் மனிதர்கள். அற்ப சுகத்துக்காக தேடியலைந்து தனது தெய்வாம்சத்தை தொலைத்துவிட்டவர்கள். ஸ்தூல உடலைப் பயன்படுத்தி நீ என்னென்ன காரியங்களைச் செய்தாய் என அல்லா பார்க்கிறான். பிறருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமாவது உனக்கு ஏற்பட்டு இருக்கிறதா என்பது மிக முக்கியம்.
மரணம் பல்வேறு வழிகளில் நம்மை வந்தடைகிறது. நோயை அனுப்புகிற அல்லா கருணை மனதோடு அதை குணப்படுத்தவும் செய்கிறான். அல்லா மனிதர்களுக்கு ஏதோவொரு வழியில் மரணத்தை உணர்த்திக் கொண்டே இருக்கிறான். வாழ்க்கையின் நிலையாமையை ஏதோ ஒருவர் தான் உணருகின்றனர். அல்லா செம்படவனாக இருக்கிறான் வலையில் சிக்கிக் கொண்ட மனிதக்கூட்டம் தான் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது.
மனிதன் தோன்றி மறையும் நீர்க்குமிழி போன்றவன். அல்லா ஒருவனே மதங்களுக்கப்பாற்பட்ட கடவுளாக இருக்கிறான். நாளை என்ன நடைபெறும் என்பதை அவன் ஒருவனே அறிந்திருக்கிறான். இருக்கும் இடத்தைவிட்டு எங்கெங்கோ தேடியலைபவர்கள் இறுதியில் அல்லா தான் கடவுள் என்று கண்டுகொள்வார்கள். அல்லாவை ஏற்றுக் கொண்டவர்கள் தான் வானில் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருப்பது. மறுமை நாளில் நீ யாருடைய துணையுமின்றி தான் அல்லாவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இறையச்சம் கொண்டவர்களை மட்டுமே அல்லா சுவனத்தில் இடமளிக்கிறான்.
மரணத்திற்கு பிறகான நிலையை மனிதனால் ஊகிக்க முடிந்தது, கற்பனை செய்து பார்க்க முடிந்தது, தோராயமாக இப்படித்தான் என கற்பிதம் செய்ய முடிந்தது. வானை முட்டும் ஆலயங்கள் கட்டியதற்கு மரணத்தின் மீதுள்ள அச்சமே காரணமாக அமைந்தது. உண்டியலில் காசுபோட்டால், ஹோமம் வளர்த்தால், பரிகாரம் செய்தால் மரணத்திலிருந்து தப்பிவிடலாமா என்று தான் மனிதன் முயன்று பார்க்கிறான். மரணத்தை நிகழ்த்துபவர்கள் நீ எப்படி பூவுலகில் வாழ்ந்தாய் என்ற கோப்பை படித்துப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு நீ பேரரசனா அல்லது பிச்சைக்காரனா என்பது முக்கியமில்லை.
மரணத்தின் போது மட்டுமே அல்லா கைவைத்துப் பார்க்கிறான். பாவத்தை சம்பாதித்த ஜீவன் தான் அப்படி வாழ்ந்ததற்காக தன்னையே நொந்து கொள்ளுகிறான். பூவுலகில் உனக்கு பெண் மீது மோகமிருந்தால், உன்னிடம் யுவதியைக் கொடுத்துவிட்டு உன் நிம்மதியை பிடுங்கிக் கொள்கிறான். நீ ஏமாற்றி சம்பாதித்த பணம் எல்லாம் நீ மரணிக்கும் போது உனக்குத் துணைவருமா? அழகான மனைவியால் மயானம் வரைக்காவது வர முடியுமா? புத்தகத்தில் வியாக்கியானத்தை நீ எழுதலாம், உன்னுடைய வாழ்க்கைப் புத்தகத்தின் முன்னுரையையும் முடிவுரையையும் அல்லா தான் எழுதுகிறான்.

Saturday, November 3, 2018

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் – 9

இஸ்லாம் அன்பையே விதைக்கச் சொல்கிறது. நீ மண்ணில் விதை போட்டால் மட்டும் போதாது. அக்கறை இருக்க வேண்டும் வேர்பிடிக்க தண்ணீர் இடவேண்டும். சூரியவொளி படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். செடி விருட்சமான பிறகு விதைத்தவர் இருக்க மாட்டார். ஆனாலும் சுவைக்க கனிகளையும், இளைப்பாற நிழலையையும் அந்த மரம் தந்து கொண்டிருக்கும்.
இஸ்லாத்தில் அவரவர் தகுதியை பணத்தை வைத்து நிர்ணயிப்பதில்லை. தனது படைப்புகளின் மீது அன்பு காட்டுபவனை இறைவன் எப்படி கைவிடுவான். இறுதிக் காலத்தில் தாம் குற்றவுணர்வு அடையும்படியான செய்கைகளை நாம் நிகழ்காலத்தில் செய்யக்கூடாது. எதிரிலிருப்பவர்களும் தம்மைப் போல் ஒரு ஜீவன் தான் என்று உணர வேண்டும். தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதிலேயே குறியாய் இருக்கக் கூடாது. இறைவன் தருவது நன்மையோ, தீமையோ அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கைக் கடலில் புயல் வீசினாலும் இறைவனிடம் நம்பிக்கை வைத்து கப்பலைச் செலுத்தினால் நாம் கரையை அடைந்துவிடலாம். எனது செயலால் உனக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டது என வருந்துபவனிடம் இறையம்சம் தென்படவே செய்கிறது. உலகத்தின் விசித்திரமே விதைத்தவன் ஒருவனாக அறுப்பவன் ஒருவனாக இருப்பது தான்.
கருத்து முரண்பாடுகள் உள்ளவர்களை எல்லாம் எதிரிகளாகக் கருதினால் நாம் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள முடியும். நிம்மதியாக உறங்க முடியுமா என்ன. அல்லா நமக்கு தகப்பனாய் இருக்கிறான் எனும் போது உனக்கு எதிராக கேடுடைய செயலை செய்ய பிறரை அவன் அனுமதிப்பானா என்ன? வல்லவர்கள் தான் இங்கு வாழவேண்டுமென்றால் உலகத்து மக்கள்தொகை பாதியாக குறைந்துவிடாதா? இறையச்சம் தான் மானிடனை மனிதர்களாக்குகிறது. இன்று நீ கீழ்ப்பணிந்து நடந்து கொண்டால் நாளை கட்டளையிடும்பணியை உனக்கு அல்லா அருள்வான்.
இருவேறு இடத்தில் செடிகளை நட்டாலும் வேர்கள் உறவாடிக் கொள்வதில்லையா? நான்கு சுவர்களுக்குள் இருந்தாலும் கடவுளின் கண்களிடமிருந்து மனிதனால் தப்பமுடியுமா? இப்பூவுலகில் அல்லாவை மகிமைப்படுத்தும் ஒவ்வொரு உயிரும் மறுமையில் விடுதலையை பெற்றுக் கொள்ளும். சத்தியத்தின் வழி நிற்பவர்கள் யாவரும் அல்லாவைச் சரணடைந்தே ஆகவேண்டும். உலக கோடீஸ்வரர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மிஞ்சிப் போனால் இரண்டு தலைமுறை வரை தானே நினைக்கப்படுவார்கள். அருளாளர்கள் நூற்றாண்டுகளாக நினைக்கப்படுவதற்கு அல்லாவேயன்றி யார் காரணம். ஏழைகளுக்கு நீங்கள் உதவினால் அல்லாவால் விரும்பப்படுகிறவர்கள் பட்டியலில் உன் பெயர் இருக்கும் அல்லவா. இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எக்காலத்திலும் தன் மகிமையை இழக்காது. அல்லாவுக்கு கீழ்ப்படிதலை கோழைத்தனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அல்லா தரும் சுதந்திரத்தை நியாயத்திற்கு எதிராகவும் பயன்படுத்தக் கூடாது.

Thursday, November 1, 2018

கீற்று.காம்ல் எனது சிறுகதை


கீற்று.காம்ல் எனது மேடை சிறுகதை பிரசுரமாகியுள்ளது வாசிக்க இங்கே சொடுக்கவும்

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் – 8


அல்லாவை நம்பியோர் காண்பது வேறு சூரியனை. அந்தகார இருளில் தவித்த உலகிற்கு நபிபெருமான் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். விண்ணகத் தந்தையான அல்லா நியாயப்படியே உலகை வழிநடத்தி வருகிறார். அல்லாவின் சட்டப்படி வாழ்க்கையில் இழந்தவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். வீழ்த்தப்பட்டவர்கள் வாகை சூடுகிறார்கள். நாடு, மொழி, இனம் கடந்து அல்லா ஒருவனே கடவுளரின் கடவுளாக அறியப்படுகிறான். எல்லாம் விதிப்படி நடக்கிறது என்பது உண்மை தான். அந்த விதியை ஆள்பவனாக அல்லா இருக்கிறான். அல்லாவின் பெருமைகளைக் கேட்க வேண்டும் என்பதற்காக காதுகளை இரண்டாய் படைத்தான். அல்லாவின் மக்களைக் காண கண்களை இரண்டாய் படைத்தான். அல்லாவின் புகழை மட்டுமே பாடவேண்டும் என்பதற்காக வாயை ஒன்றாய்ப் படைத்தான்.
அல்லா மற்றவர்களுக்கு உரியதை நீ அபகரிக்காதே என்கிறான். இரு தரப்பிலும் யாரிடம் நியாயமிருக்கிறது என்பதை அல்லாவே முடிவு செய்கிறான். இஸ்லாம் மார்க்கம் மட்டுமே மனிதனை மேம்படுத்துகிறது. உண்மையின் சந்நிதானமாக மெக்கா இன்றளவும் திகழ்கிறது. விண்ணரசை ஏற்றுக் கொள்பவர்கள் அல்லாவுக்கு கீழ்ப்படிய தயங்க மாட்டார்கள். வானரசு திருக்குர்ஆனை மட்டுமே வேதமாக ஏற்றுக் கொள்கிறது.
அல்லா பகலவனாக இருக்கும் போது நீங்கள் ஏன் நட்சத்திரங்களை நாடுகின்றீர்கள். உங்கள் சொல்லுக்கு பூமியில் அதிகாரம் இருக்கலாம் ஆனால் உண்மையின் வழியே உங்களை அல்லாவிடம் கொண்டு செல்லும். அல்லா தனக்கானவர்கள் மற்றவர்களைப் பார்த்து அஞ்சும்படி விட்டுச் செல்லமாட்டான். புவி ராஜ்யத்தில் தன்னிகரற்ற ஒரே கடவுளாக அல்லாவே விளங்குகிறான். அருளப்பட்ட வேதம் சத்தியம் மிகுந்தது என்பதால் தான் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றளவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. உங்கள் செயல்களுக்கான பலன்களை நீங்கள் அனுபவித்து ஆகும்படியே அல்லா விதி வகுத்துள்ளான்.
இந்தப் பிரபஞ்சத்தில் சிறு எறும்புக்கு வேண்டியதைக் கூட அல்லா தான் அளிக்கிறான். கபட குருமார்களை தஞ்சமடைந்து அல்லாவிடமிருந்து தப்பிவிடலாம் என கனவு காண்பவர்களுக்கு அல்லா சிம்ம சொப்பனமாக இருக்கிறான். இந்த உலகத்தில் நீங்கள் காணும் வெளிச்சம் அல்லாவினுடையது. அந்தப் பிரகாசத்தில் வேதத்தை வாசிப்பதும், பாவ காரியங்களுக்கு துணை போவதும் உங்கள் கையில் தான் இருக்கிறது. இந்த உலகில் தாங்கள் செய்யும் காரியங்களுக்கு பதில் சொல்லாமல் யாரும் அல்லாவிடமிருந்து தப்பிவிட முடியாது. அல்லாவின் அருளை வேண்டி மெக்கா நோக்கி வணங்குகிறேன்.

Wednesday, October 31, 2018

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 7

ஏழைகள் எதன் பொருட்டு கஷ்டப்படுகிறார்கள் என்பதை எந்த மதநூலும் விளக்கவில்லை. இந்தக் கலியுகத்தில் திருக்குர்ஆன் மட்டுமே இறையை அடைய வழி காட்டுகிறது. மக்களை மந்தை ஆடுகளைப் போல யாருடைய வயலிலும் மேய்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவதில்லை இஸ்லாம். பாவச் செயலின் பலன்களிலிருந்து பரிகாரம் செய்தால் தப்பிவிடலாம் என்கிறது மற்ற மதங்கள். ஆனால் இஸ்லாம் நீ விதைத்ததை நீ அறுக்க வேண்டும் என்கிறது. மனிதர்கள் எல்லோரும் அல்லாவின் அடிமைகள், அடிமைகளில் தான் தான் உயர்ந்தவன் என்று அடித்துக் கொள்கிறார்கள். இறுதி நாள் நெருங்கி வருகிறது அல்லாவை நம்புகிறவர்கள் கிழக்கில் மட்டுமே கதிரவன் உதிக்கும்.
மற்ற மதங்களிலும் ஒழுக்கம் வலியுறுத்தப்பட்டாலும் அந்த மத தெய்வங்கள் கூட அதைப் பின்பற்றி நடப்பதில்லை. விந்தணுவிலிருந்து வெளி வந்தவர்கள் எந்நாளும் கடவுளாக மாட்டார்கள். ஆரம்பமும் அல்லா தான் முடிவும் அல்லா தான். அல்லா தான் வகுத்த விதியை மதிக்காதவர்களை அவர்கள் எழமுடியாத அளவுக்கு விழச் செய்திடுவான்.
உண்மையான கடவுள் எப்படியிருக்க வேண்டும். அடைக்கலம் புகுந்தவனை அந்நியமாய் நடத்துபவன் கடவுளா? செடியிலிருந்து மலரைக் கொய்ய யோசிப்பவன் அல்லா. மெக்காவின் சட்டதிட்டங்கள் நல்லோருக்கு வாழ்வளிப்பவை. பொம்மலாட்ட பொம்மையைப் போல் உங்களை ஆட்டுவிப்பவனை, மனித சுதந்திரத்தை பறித்துக் கொண்டு சித்ரவதை செய்து சிரிப்பவனையே நீங்கள் கடவுள் என்கிறீர்கள். இறைநம்பிக்கை உங்களை அல்லாவிடம் சேர்க்கும் எனும்போது நீங்கள் ஏன் குறுக்கு வழியை நாடுகிறீர்கள். இந்த பிரபஞ்சமே அல்லாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது, சிறு தூசியான பூமிப் பந்தில் இருந்து கொண்டு எதற்கு ஆராதனை பண்ணுகிறீர்கள் நீங்கள்.
பூமிக்கு நட்சத்திரங்கள் பல. நிலவு ஒன்றுதான். ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் சூரிய ஒளியில் அதைக் காண முடிகிறதா? அல்லா பரிதியாய் இருக்கிறான். மனிதனின் நல்ல செயல்களுக்கும், கெட்ட செயல்களுக்கும் அல்லா சாட்சியாய் இருக்கிறான். உங்களுக்கு மில்லியன் டாலர் சொத்து இருக்கலாம். மறுமை நாளில் வெறுங்கையுடன் தான் நீங்கள் அல்லாவைச் சந்திப்பீர்கள். கஷ்டத்திலுள்ளோர் இறைவனை நினைக்கிறார்கள் சகலவசதியையும் கொண்ட கனவான் அல்லாவை மறக்கிறான்.
அல்லாவின் மரணச்சட்டம் மனிதர்கள் அனைவரையும் சமனாக்கி வைத்திருக்கிறது. சத்தியத்திற்காக வாழ்பவர்களுக்கு அல்லாவே புகலிடம் அளிக்கிறான். திருக்குர்ஆனுக்கு நிகரான சத்தியவேதம் இன்றளவும் எந்த மொழியிலும் இயற்றப்படவில்லை(அருளப்படவில்லை). வேண்டியவர், வேண்டாதவர் எனப் பேதம் பார்ப்பார்கள் எனத் தெரிந்துதான் அல்லா நியாயந்தீர்க்கும் அதிகாரத்தை யாருக்கும் அளிக்காமல் தன்னகத்தில் வைத்துக் கொண்டுள்ளான். உலகச் சக்கரம் சுழல்வதற்கு அச்சாணியாக அல்லாவே இருக்கிறான்.
நீங்கள் துன்புறும்போது கருணை கொள்பவனாகவும், அனாதைகளின் மீது இரக்கம் கொள்பவனாகவும் சத்தியத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு வாழ்வளிப்பவர்களாகவும் அல்லாவே இருக்கிறான். அல்லாவின் கட்டளைப்படியே மரங்கள் அசைகிறது, அலைகள் எழுகிறது, மழை பொழிகின்றது, ஆட்சி மாறுகின்றது. அல்லாவை நோக்கி தஞ்சம் புகுபவர்களுக்கு மெக்காவின் கதவு திறந்தே இருக்கிறது.
பணத்தை வைத்து மனிதர்களின் தகுதியை எடைபோடாத ஒரே மதம் இஸ்லாம். அல்லாவே கொடுப்பான். தவறான வழியில் சென்றால் அல்லாவே பறித்துக் கொள்வான். சத்தியத்தை மட்டுமே பேசும் திருக்குர்ஆன் உலகின் ஒரே வேதமாக ஏற்றுக் கொள்ளப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. வாழ்கையில் துயரங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மெக்காவை நோக்கி வணங்குகிறேன்.

Monday, October 29, 2018

துயர்மிகுவரிகள் புத்தகாவில் கிடைக்கிறது


இயேசுவுடன் நான் நடந்த தருணங்கள் புத்தக வடிவில் புத்தகாவில் வாங்க வாசிக்க பகிர இங்கே சொடுக்கவும்.(http://www.pustaka.co.in/home/ebook/tamil/thuyarmigu-varigal)


Sunday, October 28, 2018

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - 6

மனிதன் தனது பாரத்தைத் தான்தான் சுமந்து செல்வதாகக் கருதுகிறான். ஆனால் அல்லாவே அனைத்தையும் ஏற்கிறான். அல்லாவை மகிமைப்படுத்துபவர்கள் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லா அவர்களின் பெயரைப் பெருமைப்படுத்துகிறான். அல்லா உங்களை சோதனைக்கு உட்படுத்தினால் உங்களிடமிருந்து அபரிதமான ஏதோவொன்றை எதிர்பார்க்கிறான் என்று அர்த்தம். வாழ்க்கை ஒரு வாய்ப்பு அல்லாவை அடைவதற்கு அதைப் பயன்படுத்தாமல் மற்ற விஷயங்களில் அதைப் பயன்படுத்தினால் அல்லாவின் கோபத்துக்கு ஆளாவோம். அல்லா யாருக்கும் அதிகாரம் கொடுப்பதில்லை அமானுஷ்யங்களை செய்பவர்களை அவதாரம் என்று நீங்கள் நம்பவேண்டாம்.
அநீதி செய்பவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள் மறுமை நாளில் அல்லாவால் அவர்கள் தீர்க்கப்படுவார்கள். அல்லா செய்யப்போகிற காரியங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அல்லா தடுக்க நினைக்கும் காரியங்களை யாராலும் செய்து வைக்க முடியாது. மனிதர்கள் நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் அல்லாவே ஆட்டுவிப்பவன். இந்தச் செயலைச் செய்ய விருப்பமில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரம் உங்கள் கையில் இல்லை. அல்லாவே உங்கள் மூலமாக அதனைச் செயல்படுத்துகிறான்.
அல்லா கடும் சோதனைக்கு உங்களை உட்படுத்துதுகிறான் என்றால், விதை அழிந்து எப்படி விருட்சமாகிறதோ அப்படி உங்களை ஆளாக்க நினைக்கிறான் என்று அர்த்தம். துயரத்தில் மூழ்கிக் கிடக்கும் கிழக்குக்கு அல்லா ஒருவனே அடைக்கலம் தருபவன். உடலுடன் இருக்கும் எந்தக் கடவுளும் ஆசாபாசங்களுக்கு உட்பட வேண்டியிருக்கும். அல்லா அதற்கு அப்பாற்பட்டவன். அல்லா மனிதர்களுக்கு பூமியை ஆக்கித் தந்திருக்கிறான். மனிதர்களோ அல்லாவை மறந்து எல்லாவற்றுக்கும் தானே காரணகர்த்தா என்று நினைக்கின்றனர். அல்லாவை நம்புபவர்களுக்கு என்ன செய்து கொடுக்க வேண்டுமென்று அவனுக்குத் தெரியும்.
உள்ளவன் முன்னே இல்லாதவன் பொம்மை என்பதையும், வல்லவன் முன்னே நல்லவன் பொம்மை என்பதையும் அல்லா ஒரு நாறும் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாவின் சட்டம் எல்லோரையும் சமனாக்கி வைத்திருக்கிறது. அல்லாவை சரணடைந்தால் கெட்ட காரியங்களிலிருந்து உங்களை விடுவிக்கப்பண்ணுவான். இந்தப் பூமியில் இறைச்சட்டத்தை நீங்கள் மீறாதிருந்தால் சுவனத்தில் உங்களுக்கு சிறப்பான இடமளிப்பான். நெஞ்சில் ஈரம் இல்லாதவன், மற்றவர்களை துரும்பாக மதிப்பவன், மனிதனை சித்ரவதை செய்து சுகம் காண்பவன் எவனோ அவன் வெகுசீக்கிரத்தில் அல்லாவின் முன்னால் நிறுத்தப்படுவான்.தேனை நாடி வண்டு வருவது போல வரும் காலங்களில் திருக்குர்ஆன் எல்லாவகை மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும். நபியின் வருகை இன்னும் பல நூற்றாண்டுகள் விழாவாக கொண்டாடப்படும்.