Wednesday, September 23, 2020

திருவடி 1 (நாச்சியார் அரங்கனுக்கு எவ்வாறு நாயகியானாள்)

 


அதிகாலை புஷ்பம் பறிக்க பூந்தோட்டம் சென்ற விஷ்ணுசித்தர் துளசி செடிக்கு கீழே பெண் சிசு ஒன்றைக் கண்டெடுத்தார். விஷ்ணுசித்தருக்கு இருந்த ஒரே குறை குழந்தையின்மை, அதையும் வடபெருங்கோயில் வீரபத்ரசாயி குழந்தையைக் கொடுத்து நிவர்த்தி செய்துவிட்டார். விஷ்ணுசித்தர் குழந்தையை பூப்போல அள்ளிக்கொண்டு தனது துணைவியான குமுதவல்லியிடம் காட்டினார். அக்குழந்தைக்கு கோதை எனப் பெயரிட்டு கண் போல காத்து வளர்த்தனர்.

 

பெருமானுக்கு ஒரு நாள் கூட தவறாமல் புஷ்பமாலை தொடுத்து அணிவித்து இறைசேவை செய்து வந்தார் விஷ்ணுசித்தர். வைணவம் இரண்டானது என்கிறது.  பக்தன் பகவான் என்கிறது. தெய்வத்துக்கு கைங்கர்யம் செய்யவே பிறவியெடுத்தோம் என்ற பாடம் எடுக்கிறது. இரும்பு இயல்பாகவே காந்தத்தால் ஈர்க்கப்படுவது போல பரமாத்மா ஜீவாத்மா ஈர்ப்பினால் உருவானது தான் பாகவதம் போன்றதெல்லாம். கண்ணன் கதையை உபதேசித்ததின் மூலம் கோதையின் நெஞ்சத்தில் கண்ணன் பால் பக்தியை விதைத்தார் விஷ்ணுசித்தர்.

 

கண்ணன் என்ற பிம்பம் கோதையின் அகவுலகை ஆக்கிரமிக்க  ஆரம்பித்தது. கோதை இவ்வுலகையே பிருந்தாவனமாகக் கருத ஆரம்பித்தாள். கண்ணன் என்ற பெயர் காதில் விழுந்தவுடனேயே கோதையின் மனம் தன்னுணர்வு இழக்க ஆரம்பித்தது. கரையில் வைத்துச் சென்ற உடையைத் திருடிப்போக கண்ணன் வரமாட்டானா என அவள் மனம் ஏங்கியது. நீலவண்ணக் கண்ணா உன் விளையாட்டு கோபிகைகளோடு மட்டும் தானா என அவள் மனம் கண்ணனைக் கெஞ்சியது.

 

காதல் புரிபவர்களின் கால்கள் தரையில் பாவாது. அவன் உடல்தான் மண்ணில் இருக்கும் உள்ளமோ அவள் திருவடியைத் தேடி விண்ணுலகில் அலைந்து கொண்டிருக்கும். மனம் அவன் ஆடும் பொம்மை விளையாட்டுக்காக காதலியின் பிம்பத்தை சிருஷ்டித்துக் கொடுக்கும். அந்த பிரதிபிம்பம் அவனுடைய தாயைவிட அவன்மீது அக்கறை செலுத்தும். எந்த பிரதிபலனும் எதிர்பாராது அன்பை மழையெனப் பொழிவாள். காதலன் தனது மனம் சிருஷ்டித் தந்த காதலியின் திருவடியில் சரண்புகுகிறான். இது மனதின் ஏமாற்றுவேலை கண்ணுக்கு எதிரே நடமாடுபவள் புனிதவதியோ, பரிபூரணமானவளோ கிடையாது. மனம் இப்படித்தான் வலை பின்னிக் கொள்கிறது. இந்த வலையிலிருந்து மீள்வது என்பது கடைசி வரை யாராலும் இயலாமல் போய் விடுகிறது.

 

ஆணுக்கு இந்தப் பிரபஞ்சமே பொண்ணாகத் தெரியும், பெண்ணுக்கு இந்தப் பிரபஞ்சமே ஆணாகத் தெரியும். காதல் ஏக்கம் கொண்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பள்ளத்தில் நீர் பாய்வது போல் இந்த கடவுட்தன்மை உள்ளே புகுந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. அப்படிப் புகுந்த கடவுட்தன்மை உங்கள் மனதுக்கு பிடித்த ரூபம் எடுத்துக் கொள்கிறது. காதலனுக்கு காதலியாகவும், காதலிக்கு காதலனாகவும் ஜாலம் காட்ட ஆரம்பிக்கிறது. காதல் மரம் பூத்துக் குலுங்குவதை நீங்கள் கண்டு ஆனந்தமடைகின்றீர்கள். அதன் வேரான மரணத்திலிருந்து தான் மரம் கிளைபரப்பி இருப்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். காதலும், மரணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல மனிதனின் விருப்பத் தேர்வு இதில் செல்லுபடியாகாது.

 

கோதை மனுஷி கண்ணனோ கடவுள். கோதையால் கடவுளாக முடியாது ஆதலால் கண்ணன் மனித நிலைக்கு இறங்கி வருகிறான். சாதாரண மானிடப் பெண் என்று கண்ணன் கோதையின் அன்பை புறந்தள்ளிப் போய் இருக்கலாம், கோதையின் பிரேமை அவனது கடவுட் தன்மையை கரைத்துவிட்டது. காதலிப்பவர்கள் காதலனையோ, காதலியையோ அவர்கள் விரும்பவில்லை அவர்கள் மூலமாக வெளிப்படும் கடவுட்தன்மையைத் தான் விரும்புகிறார்கள். அவர்கள் உள்ளே இருக்கும் கடவுட்தன்மைதான் ஆணையோ பெண்னையோ வசீகரிக்கிறது. வெறும் உடல் சங்கமிப்பது மிருகக்காமம். காதலியின் மனதைக் இயக்கும் ஆத்மனை அறிந்து கொள்ள விழைவதே காதல். மனிதனின் புறஅழகுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லை என்றே கூறலாம். உள்ளுக்குள் ஆசைகள் இருக்கும் வரை அலைகள் ஓயாது. அலைகளோடு தன்னை சம்மந்தப்படுத்திக் கொள்ளாமல் சரணடைபவர்களின் உள்ளே மொட்டு மலர ஆரம்பிக்கிறது. மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் வித்தியாசப்பட ஆரம்பிக்கிறார்கள்.

 

நீயே எனக்குச் சொந்தம் உன் மாலையை நான் சூடி அழகுப் பார்த்தால்  என்ன என்று தான் ஒவ்வொரு நாளும் பெருமானுக்கு அணிவிக்க இருந்த மாலையை தான் சூடி கண்ணாடியில் அழகு பார்த்தாள் கோதை. ஒரு நாள் பெருமானுக்கு சாற்ற எடுத்துச் சென்ற மாலையில் நீளமான முடியொன்று சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதற்ற முற்ற விஷ்ணுசித்தருக்கு இது கோதையின் வேலை என்று தெரிய வந்தது. இதுநாள் வரை மானிடப் பெண் சூடிக் கொடுத்த மாலையவா பெருமானுக்கு அணிவித்து வந்தேன் என்று கலக்கமுற்றது விஷ்ணுசித்தரின் மனம். பிறப்பால் என்ன குலம் என்று தெரியாத கோதை சூடிக் கொடுத்ததால் பெருமானுக்கு தோஷம் ஏற்பட்டுவிட்டது எனவே தோஷம் ஏற்பட காரணமாயிருந்த தான் பொருமானுக்கு செய்யும் சேவையை இனிமேலும் தொடர முடியாது எனவும் முடிவு செய்தார் விஷ்ணுசித்தர். கோதைக்குத் தானே அவன் காதலன், விஷ்ணுசித்தருக்கு இல்லையே. கடவுள் காரியமாதலால் சகிக்க முடியாது கோதையின் மனம் புண்படும்படி பேசிவிட்டர் விஷ்ணுசித்தர். அன்று இரவு விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றிய பெருமான் சேவை சார்த்துவதை நிறுத்தாதே சித்தரே கோதை சூடிக் கொடுத்த மாலையையே கொண்டுவாரும் யாம் இன்புற்று அணிவோம் என்றான்.

 

பருவமெய்திய கோதைக்கு வரன் பார்க்க விஷ்ணுசித்தர் முற்படவே, கோதையோ நான் கண்ணனுக்கானவள் என்றாள். கனவில் கூட பிற ஆண்மகனை நாடமாட்டேன் என்றாள். விஷ்ணுசித்தரோ கண்ணன் கல்லாய் அல்லவா இருக்கிறான் என்றார். உலகுக்கு படியளப்பவனை  உன்னுடைய பதி என்றால் உலகம் உன்னைப் பைத்தியம் என்று சொல்லி சிரிக்காதா என்றார். கோதையோ தனது காதல் கல்லையும் உயிர்ப்பிக்கும் என்று தனது காதலில் உறுதியாக நின்றாள். கண்ணனை நினைத்ததற்காக கோபிகைகள் எல்லோரையுமா அவனால் மணக்க முடிந்தது, வணங்கும் கடவுளை குடித்தனம் நடத்த அழைப்பது புத்தியுள்ளவர்கள் செய்கிற காரியமா என்றார் ஆதங்கத்துடன் விஷ்ணுசித்தர்.

 

பெருமானுக்கு என்று மாலை தொடுத்துவிட்டு அதை பிணத்துக்கு போட உங்களுக்கு மனம் வருமா அப்பா என்றாள் கோதை. எவ்வளவோ பேர் கண்ணனை அழுது அரற்றி அழைக்கிறாங்க உன் வாழ்க்கைக்கு விளக்கேத்த அவன் வருவான்னு நினைச்சு காலத்தை கழிச்சிடாதம்மா எல்லாம் நான் கும்பிடுற அந்த வடபத்ரசாயிக்கே வெளிச்சம். நாழியாயிடுத்து போ போய் படுத்துக்க என்றார் மனபாரத்துடன் விஷ்ணுசித்தர்.

 

அன்றிரவு அரங்கன் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி கோதையை திருவரங்கம் அழைத்து வரும்படி பணித்தான். கோதையை பாண்டிய மன்னன் பரிவாரங்களுடன் எதிர் நின்று வரவேற்றான். கண்ணனின் நினைவாலே கோதையின் மெய் உருகி விட்டது. இருந்த ஒளிரூப உடலும் கருவறை உள்ளே சென்று அரங்கனுடன் கலந்தது. தனது காதலால் அரங்கனையே ஆண்டாள் இந்த கோதை ஆண்டாள்.

1 comment: