இமயமாக எழுந்து நிற்கும் இஸ்லாம். இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்ததால் நாம் அந்த
மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. எவனொருவன் இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றானோ
அவன் இஸ்லாமியன் தான். குர்ஆன் ஒரு மகாசமுத்திரம் அதில் நாம் ஒவ்வொரு முறை மூழ்கும்
போதும் முத்தெடுக்க முடியும். உண்மையைக் கண்டடைய வேண்டும் என்ற வேட்கை உடையவர்களுக்கு
குர்ஆன் பாடம் நடத்தும். காற்று, மழை, வெளிச்சம் எல்லாம் அல்லா அனுப்பியது எனவே நாம்
அனுப்பினவருக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும். பிறர் இஸ்லாம் மீது சேற்றைவாரி தூற்றினாலும்
உண்மை எங்கிருக்கிறதோ அந்த மதம் தானே உலகில் உயர்ந்து நிற்கும். நீ இந்த நரகத்திலிருந்து
காப்பாற்றப்பட வேண்டியவன் என அல்லா நினைத்தால் தான் குர்ஆன் உன்னை வந்தடையும்.
ஜோசியக்காரனின் வார்த்தைகளைக் கூட நம்பிவிடலாம். கடவுளை கண்டேன் என சொல்பவனிடம்
நீ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவனுக்கு ஒரு கடவுள் இவனுக்கு ஒரு கடவுள் அல்ல. நம்
எல்லோருக்கும் ஒரே கடவுள், அல்லா தான் அந்த கடவுள். ஒருசிலருக்கு சிகரெட் பிடிக்கவில்லையென்றால்
தூக்கமே வராது உறக்கத்தைக் கொடுப்பதால் சிகரெட் அவனுக்கு கடவுளாகிவிடுமா? சிறு வயதில்
விளையாடுவதற்கு பொம்மை கொடுப்பார்கள் அந்த பொம்மைகளை இறுதி நாள்வரை கட்டி அழுது
கொண்டு இருப்பீர்களா? மூடனே உன்னைச் சுற்றி வெளிச்சமிருக்கிறது சற்று கண்திறந்து பாரடா
என்கிறேன்.
நெருப்பு சுடும் என்கிறார்கள். உன் கையில் நெருப்புபட்டு காயமடைந்தால் தான்
உன்னால் உணர முடியும். நான் கண்டேன் என்கிறான், நீ கண்டதால் எனக்கென்ன பயன் எனக்கும்
அவனைக் காட்டமுடியுமா என நீ கேட்க வேண்டும். ஆடுமேய்ப்பவனுக்கு தெரிந்திருக்கும் மந்தையில்
எந்த ஆட்டினை அடுத்த நாள் பலியிடுவதென்று. அந்த ஆட்டுக்குத் தெரியுமா? புற்களை மேய்ந்து
போதை தலைக்கேறியிருக்கும் அந்த ஆட்டுக்கு நம்மால் பாடம் நடத்த முடியுமா? நடக்கிற காரியமா
அது! ஏன்டா அவன் தான் பலியிடுவேன் என்கிறானே பலியிடுவற்கு நீ என்ன ஆடா இல்லை நீ புலி
என்று சொல்வதற்கு இறுதி தூதராக நபிஅவர்கள் வர வேண்டியிருக்கிறது. நான் வேண்டிக்கொண்டேன்
நடந்தது என்கிறான் அப்பனே அதுவல்ல விஷயம் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை கடவுளென்றால்
உனக்கு என்னவேண்டும் என்பது மட்டுமல்ல உன் ஜாதகத்தையே அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பார்க்கிறதுக்கு தங்கம் மாதிரி இருக்கலாம் அதற்காக வெண்கல குத்துவிளக்கை கொடுத்தால்
பேசாமல் வாங்கிக்கொண்டு வந்துவிடுவாயா பத்தர்கிட்ட கொடுத்து உரசிப் பார்க்க மாட்டாய்.
அப்ப விளக்கையே உரசிப் பார்க்கிற நீ சார்ந்திருக்கும் மதத்தை உரசிப்பார்க்க வேண்டாமாங்கிறேன்.
தங்கமா இல்லை முலாம் பூசுனதை தங்கம்னு சொல்லி பித்தலாட்டம் செய்கிறார்களா என்று. நான்
சொல்லி ஏற்றுக்கொள்ள வேண்டாம் பந்தாய் அவர்களின் கால்களில் உதைபடுவாய் பார் அப்போது
தெரியும். அப்போது இவன் கத்தினானே கைகாட்டிவிட்டானே பைத்தியம் என்றோமே என்று புலம்புவாய்.
புலம்பி என்ன பயன் தலைக்கு மேலே தண்ணீர் போய்விட்டதே. கத்துகிறவன் என்ன கத்துகிறான்
என்று காதுகொடுத்து கேட்க வேண்டும். இந்த காதுல சேதியை வாங்கு பிடிக்கலைன்னா பூ சுத்தறான்
அப்படின்னா அந்தக் காதால விட்டுவிடுங்கிறேன் இல்லை காசா பணமா என்ன?
ஏகனை அநேகன் என்கிறீர்கள். மனிதனுக்கு ஆறாவது அறிவு கொடுத்ததற்கே பகுத்தறிவதற்காகத்தான்.
வானில் இருப்பது ஒரு சூரியன். ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு
சூரியனா உதிக்கிறது. எதிரே நிற்பவனின் பிம்பத்தை பிரதிபலிக்கிறது நிலைக்கண்ணாடி. வருகிறாய்
தலைவாரிக் கொள்கிறாய் முகப்பவுடர் பூசிக் கொள்கிறாய் அதைவிட்டு நகர்ந்து செல்கிறாய்
அதுதானடா உலகம். எனக்கு சாவே வராது என்று சொல்வது நான் எப்போதும் கண்ணாடிமுன் நின்றுகொண்டிருப்பேன்
என்று பிதற்றுவதற்கு ஒப்பாகும். பகுத்தறிந்து பார்த்தால் ஏக இறைவன் தான், நீ புத்தியை
அடகுவைத்துவிட்டு என்னிடம் வந்தால் எப்படி நான்கு திசை போகிறது ஒருதிசையை காட்ட முடியும்
கூடவேவா நான் வரமுடியும். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதைதான். இந்த சமூகம்
ஒருசில பிள்ளையாருக்காக நான் உட்பட எத்தனை பேரை குரங்காக்கியிருக்கிறது தெரியுமா?
No comments:
Post a Comment