Saturday, December 5, 2020

மார்க்கம் என்னை அழைக்கிறது – 4

 


இருக்கு இல்லைங்கிறது வேற விஷயம். நீ நேரில் பார்த்த மாதிரி வக்காலத்து வாங்கறங்கிறேன். இப்ப காய்கறிகடைக்கு போய் காய்கறி வாங்குற எந்த மண்ணுல விளைஞ்சதுன்னா கேட்கற. கேட்டீன்னா கடைக்காரன் உன்னை ஏறஇறங்க ஒருமாதிரி பார்க்கமாட்டான். சமையலுக்கு உதவுவதை சத்தம் போடாம வாங்கிட்டு வர்ற பக்கத்து வீட்டுக்காரன் எதிர்த்த வீட்டுக்காரன்கிட்ட சாதி பார்க்குற. எல்லோரும் தாயின் வயிற்றிலிருந்துதான் வெளியே வர்றோம். பிறப்பால் நான் உயந்தவன்னு ஒருவனும் மார்தட்டிக்க முடியாது. அடுத்தவன் சுவாசப்பைக்குள் போயிட்டு வர்ற காற்றைத் தானே நீ சுவாசிக்கற. எல்லாரையும் மண்தான் திங்கப் போகுது. இதுல நீ உயர்ந்தவன்ங்கிற. அல்லா மரணத்தை பொதுவில்தான் வைத்து இருக்கிறான். வர்றதுக்கும்  ஒரு வழிதான் போறதுக்கும் ஒரு வழிதான்.

 

வந்துபோகும் நீ மண்ணை ஏன் சொந்தம் கொண்டாடுகிறாய் என்கிறேன். இளவயதில் இரத்தத் திமிரில் முறுக்கிக் கொண்டு திரியலாம். நாற்பதைக் கடந்துவிட்டால் மரணத்தின் நிழல் வாழ்க்கையில் கவிய ஆரம்பித்தவுடன் பயம் வருகிறதல்லவா. நீ அடுத்தவன் முதுகை படிக்கல்லாக்கி ஏறி வந்திருக்கலாம் அது அல்லாவுக்கு தெரியாமலிருக்குமா? சம்பாதிக்கலாம் தான் அதிலும் ஒரு நெறிமுறை வேணும். எவ்வளவு தான் கொட்டிக் கிடந்தாலும் மூன்று வேளைக்கு மேல் சாப்பிட வயிறு இடம்தருகிறதா என்ன? மருத்துவமனையிலில் இருந்துகொண்டு பாதி சொத்தை கரைக்கிறாயே நேர்மையாக சம்பாதித்ததென்றால் இப்படி கரையுமா? நான் கேட்கிறேன் படிக்கறது இராமாயணம் இடிக்கிறது இராமர் கோவிலா?

 

புல், பூண்டு, நரி, புலி எல்லாம் வாழ்கிறதுதான். அதன் வாழ்க்கை எப்போதாவது வரலாறு ஆகியிருக்கிறதா? நீ இங்கே குபேரனாக இருக்கலாம் போகும்போது ஒரு குண்டூசியை உன்னால் எடுத்துப் போக முடியுமா? காட்டுல சிங்கம் இருக்கே வயிறு நிறைஞ்சுதுன்னா வேட்டையாடாது. உனக்கு எவ்வளவு தான் கொட்டிக் கொடுத்தாலும் போதுங்கிறியா? வானத்தை பார்த்தாயா பிரதிபலன் பாராது பொழிகிறது, பார்த்தாயா அதுக்கென்ன தலையெழுத்தா? அசலுக்கு அநியாய வட்டி கேட்கிற அந்த வட்டியையும் குட்டிப் போட வைக்கிறியே எந்த ஊர் நியாயம் இது. செத்தவன் வீட்டுக்கு போய் துக்கம் விசாரிக்கிறியே நீயும் ஒருநாள் போக வேண்டியிருக்குமேன்னு யோசிச்சியா? அப்படி யோசிச்சீன்னா எந்த மதத்தை சேர்ந்தவனாய் இருந்தாலும் நீ இஸ்லாமியன் தான். காட்டாற்று வெள்ளம் வருது கரை உடைஞ்சி வீடு தண்ணீரில மூழ்கிடுமோன்னு பயப்படுறீல.

 

நல்லது பண்ணிட்டு அண்டார்டிகாவுக்கு போ உனக்கு சேர வேண்டிய உணவை பனிக்கரடி கொண்டு வந்து கொடுக்குங்கிறேன். இதை நான் சொன்னா நம்பமாட்ட பண்றதையெல்லாம் பண்ணிட்டு கடைசி காலத்துல சம்போமகாதேவான்னா என்ன அர்த்தம். வீடு போபோங்குது காடு வாவாங்குது அப்ப இருதலைக்கொள்ளி எறும்புமாதிரி தவிப்பீல. நீ என்னதான் பக்திப்பழம் மாதிரி நடிக்கலாம் அவன்கிட்ட முடியுமா? அல்லாகிட்ட உன் பாட்சா பலிக்காது அவன் சகலத்தையும் அறிந்தவன். நான் அப்படித்தான் வாக்கிங்கும் போக மாட்டேன் ஜாக்கிங்கும் போக மாட்டேன் ஆனா நாய் என்னை துறத்துனதுன்னு வை ஒலிம்பிக்ல ஓடுறவன் என்கிட்ட தோத்துறுவான் அப்படி ஓடுவேன்.

 

நீ உமி கொண்டுவா நான் அவல் கொண்டு வர்றேன் ஊதிஊதி தின்போங்கிற கதையா? வாய்ப்பு எப்போதும் ஒருமுறைதான் நீ என்ன தான் பலபிறவிகள்ன்னு கற்பிதம் கொண்டாலும் சரி. என்னெல்லாமோ திட்டமெல்லாம் போடுற நடந்துருதா? அப்ப லகான் யார் கையில இருக்கு? சுற்றிலும் அகழி வெட்டி கோட்டைக்குள்ள பதுங்கிக்கிற கதையா? எத்தனை நாள் அப்படி இருப்ப? பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லைங்கிறேன். இந்தப் பூமி அல்லாவினுடைய வீடு நீ அசிங்கம் பண்ணிவைச்சிட்டு போய்விடாதேங்கிறேன். ஈ தான் கண்டதுலையும் உட்காருங்கிறேன். நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்ச கதையை கேள்விப்பட்டிருக்கியா அது தான் இப்ப நடந்து போச்சி. வீடு பெருசா இருந்தா என்ன உள்ளம் சிறுசால்ல இருக்கு.

 

ஆசையே அழிவுக்கு காரணம்னு எல்லோரும் தான் பள்ளிக்கூடத்துல பாடம் படிச்சோம். என்ன கோயில் காளையா தண்ணி தெளிச்ச விடுறதுக்கு. அடுத்தவன் விஷயத்துல மூக்கை நுழைக்கிறது எல்லோருக்கும் பிடிக்கும்தானே. முதல்ல உன் யோக்கிதை என்னன்னு பார்த்துட்டு அடுத்தவன் மேலே கையைக் காட்டுங்கறேன். நம்பிக்கைத் துரோகம் செய்தவன் வானளாவிய அதிகாரம் படைத்தவனாக இருக்கலாம். அதனால் என்ன வரலாறு அவனை மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ளாது. வாழ்க்கை திறந்த புத்தகமாக இருக்க வேண்டுமேத் தவிர, அசிங்கங்களின் குவியலாக இருக்கக்கூடாது. காசு வரும் போகும். அல்லாவை நம்பி இறையச்சத்துடன் வாழ்பவனையே உத்தமன் என்று உலகம் சொல்லும். என்னடா நம்பிய இறைவன் சோதனை செய்கிறானே எனக் கருத வேண்டாம். தங்கமானாலும் உருக்கினால் தானே ஆபரணம் செய்யமுடியும். வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் அல்லா மீது வைக்கும் விசுவாசமே நம்மை இங்கு கரைசேர்க்கும்.

மார்க்கம் என்னை அழைக்கிறது – 3

 


சரி இறைவன் எங்கும் இருப்பவனாக வைத்துக் கொள்வோம். அவன் நீ வணங்குகிறாயா இல்லையா என்றா பார்க்கப் போகிறான். எங்க சாமின்னா நீ செய்கிற அயோக்கியத்தனத்துக்கெல்லாம் அது துணை வருமா? நீ எங்கெல்லாமமோ தேடிப் பாரு ஏண்டா பறிகொடுத்தது எங்கேயோ அங்க தானே அது இருக்குங்கிறேன். சாமி எங்கேயாவது வந்து சொல்லிச்சா இது என் எல்லைன்னு நீதான் சொல்லிகிட்டுத் திரியற. இந்தியாவை ஏழை நாடுங்கிறோம் பணக்காரனும் இருக்கத்தானே செய்கிறான். டாப் 10 லிஸ்ட்ல இடம்பிடிக்கிறாங்கள்ள. அப்ப எவன்  வல்லவனோ அவங்கிட்ட வாலாட்டத்தானே செய்யற. ஊருக்குள்ள உலவுற சிங்கமெல்லாம் டாஸ்மாக் வாசல்லதானே தவங்கிடக்கிங்கறேன்.

 

சட்டையை எப்படி வாங்குற இது அளவுங்கிறில இல்ல சட்டைய வாங்கிட்டு உடம்பு அளவை மாத்திப்பியா அப்படித்தான் இருக்கு நீ சொல்றது. இப்ப பூமி இருக்கு வானம் இருக்கு உதிக்கிற சூரியன் ஒன்றுதானே இரண்டா உதிக்குது. எப்பயாவது சூரியன் மேற்கே உதிச்சு நீ பார்த்து இருக்கியா. பெய்கிற மழை கீழேதானே விழுது ஏன்  மேலே போகலை என்னைக்காவது யோசிச்சி பார்த்து இருக்கியா. ஆண்டவன் அறிவைக் கொடுத்திருக்கான் ஆனா நீ அடிமையாத்தான் இருப்போம்ங்கிற. என்ன விருதா தரப்போறாங்க இருக்கிற அடிமைகளிலேயே இவன் உயர்ந்தவன் எள்ளுண்ணா எண்ணெய்யா வந்து நிக்கறவன்னு. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்ங்கிற நான்  கேட்கிறேன் வீட்டை வாடகைக்கு விடணும்னா நாலு பேர்கிட்ட விசாரிக்கிற இல்ல, அவன் எப்படிபட்டவன்னு விசாரிக்கிற இல்ல. பொண்ணுக்கு வர்ற வரனைப் பத்தி விசாரிக்கிறாயா இல்லையா. உன் சமயத்தைப் பத்தி விசாரிங்கிறேன். கிணத்துத் தவளையாய் ஏன் கத்துறேங்கிறேன் மேலே வந்து பாருங்கிறேன். பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் இருண்டுடுமா என்ன. வானத்துல ராக்கெட் ஏவுறவன் பஞ்சாங்கமா பாக்குறான். கூட்டுப்புழு றெக்கை முளைச்சி பட்டாம்பூச்சியாய் வானத்துல பறக்குதுல உனக்கு என்ன வந்துது மண்புழு கணக்கா ஏன் மண்ணை குடையறேங்கிறேன். ரெண்டு கால் ரெண்டு கை இருக்கிறதுனால மட்டும் மனுசன் கிடையாது. நல்லவனா இருந்தாலும் கெட்டவனா இருந்தாலும் நாலு பேர்தான் தூக்கிட்டுப் போகப்போறானுங்க அங்க போய் என்ன பண்ணுவங்கிறேன். ஆளு, அம்பு, படை, பலம் உன்கூட வருமாங்கிறேன். இங்கே நீ முக்கியஸ்தரா இருக்கலாம் அங்கே அவன் சொல்லுக்கு நீ கட்டுப்பட்டுத்தானே ஆகணும்.

 

முள் குத்திடிச்சிங்கிற நான் கேட்கிறேன் முள்ளா வந்து குத்திச்சி. தட்டுறது சரிதான் ஏன் தப்பான இடத்துல தட்டுறேங்கிறேன். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டு கொடுக்குங்கிற. விதியை நம்பிநம்பித்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேங்கிறேன். கோழையா நூறு வருஷம் வாழ்றதை விட வீரனா ஒருநாள் வாழ்ந்து செத்துப் போகலாங்கிறேன். வாழ்க்கையோட அரிச்சுவடி கூட உனக்குத் தெரியாதுங்கிறேன். குர்ஆன் அடங்கி இருக்கச் சொல்லுது நீ ஆடுவேண்ணா நான் என்ன செய்யறது. ஒன்னு சொல்றதை நம்பணும் இல்ல சுயபுத்தி இருக்கணும். நீ ஏறுகிற தோணியில ஓட்டை இருக்குடா மூழ்கிடுங்கிறேன் நீ என்னை அலட்சியப்படுத்துற. ஒரு வாய்ப்பு தான் தருவான் அல்லா.

 

காண்பதெல்லாம் மஞ்சளாத் தெரிந்தால் அது காமாலைடா கடவுள் இல்லைங்கிறேன். வார்த்தை ஜாலத்தை நம்பாதேங்கிறேன், பிறந்தது பெரிய விஷயத்துக்காக சிறுபிள்ளைத்தனமா இருக்காதேங்கிறேன். வாழ்க்கை நாடகத்துல கடவுள் எங்கிருந்து வருகிறார்ங்கிறேன். உன் அரிதாரத்தைக் களைக்கும்போதுதான் தெரியும் கடவுள்ன்னா யாருன்னுங்கிறேன். உன் வேஷத்தை நீ கலைச்சா அவன் வேஷத்தை அவன் கலைப்பாங்கிறேன். சிட்டுக்குருவிக்கணக்கா சில்லரைத்தனமா வாழ்கிறவன் மெக்கா இருக்கும் திசையிலகூட தலைவச்சி படுக்க முடியாதுங்கிறேன். நான் மதில்மேல் உட்கார்ந்து இருக்கேன் அந்தப்பக்கம் என்ன நடக்குது இந்தப் பக்கம் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியும். என்னை ஏமாத்த முடியாது. பொழுதை விடியச் செய்கிறவன் அல்லா என்று படுக்கையிலிருந்து உன்னை எழுப்பிச் சொல்கிறேன் நீ நம்பமாட்டேங்கிறே.

 

வசந்தம் வருவதானால் தானாய் வரும் யாரும் அதை தள்ளிவிட முடியாது என்கிறேன். சோளக்கொல்லை பொம்மைதான் இரவில் வயல் வரப்புகளைக் காக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. நான் பாம்பாய் இருந்தால் அல்லவா கருடனுக்கு பயப்படவேண்டும். முயற்சி செய்யாமல் ஒன்றை அடைந்துவிட்டால் அதன் முக்கியத்துவத்தை உணர மாட்டாய். நீ விளையாடு நான் வேடிக்கைப் பார்க்கிறேன் என்பவன் கடவுளல்ல. படைத்தவனுக்கு முன்பு சக்கரவர்த்தியும் பரதேசியும் சமமானவர்கள்தான். யாருக்கும் எந்த விதிவிலக்கும் கிடையாது. வாழ்வு ஒருமுறைதான் அல்லாவைக் கண்டுகொள்ளவில்லையென்றால் நீ  கரையேற முடியாது!

Thursday, December 3, 2020

மார்க்கம் என்னை அழைக்கிறது – 2

 


இமயமாக எழுந்து நிற்கும் இஸ்லாம். இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்ததால் நாம் அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. எவனொருவன் இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றானோ அவன் இஸ்லாமியன் தான். குர்ஆன் ஒரு மகாசமுத்திரம் அதில் நாம் ஒவ்வொரு முறை மூழ்கும் போதும் முத்தெடுக்க முடியும். உண்மையைக் கண்டடைய வேண்டும் என்ற வேட்கை உடையவர்களுக்கு குர்ஆன் பாடம் நடத்தும். காற்று, மழை, வெளிச்சம் எல்லாம் அல்லா அனுப்பியது எனவே நாம் அனுப்பினவருக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும். பிறர் இஸ்லாம் மீது சேற்றைவாரி தூற்றினாலும் உண்மை எங்கிருக்கிறதோ அந்த மதம் தானே உலகில் உயர்ந்து நிற்கும். நீ இந்த நரகத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவன் என அல்லா நினைத்தால் தான் குர்ஆன் உன்னை வந்தடையும்.

 

ஜோசியக்காரனின் வார்த்தைகளைக் கூட நம்பிவிடலாம். கடவுளை கண்டேன் என சொல்பவனிடம் நீ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவனுக்கு ஒரு கடவுள் இவனுக்கு ஒரு கடவுள் அல்ல. நம் எல்லோருக்கும் ஒரே கடவுள், அல்லா தான் அந்த கடவுள். ஒருசிலருக்கு சிகரெட் பிடிக்கவில்லையென்றால் தூக்கமே வராது உறக்கத்தைக் கொடுப்பதால் சிகரெட் அவனுக்கு கடவுளாகிவிடுமா? சிறு வயதில் விளையாடுவதற்கு பொம்மை கொடுப்பார்கள் அந்த பொம்மைகளை இறுதி நாள்வரை கட்டி அழுது கொண்டு இருப்பீர்களா? மூடனே உன்னைச் சுற்றி வெளிச்சமிருக்கிறது சற்று கண்திறந்து பாரடா என்கிறேன்.

 

நெருப்பு சுடும் என்கிறார்கள். உன் கையில் நெருப்புபட்டு காயமடைந்தால் தான் உன்னால் உணர முடியும். நான் கண்டேன் என்கிறான், நீ கண்டதால் எனக்கென்ன பயன் எனக்கும் அவனைக் காட்டமுடியுமா என நீ கேட்க வேண்டும். ஆடுமேய்ப்பவனுக்கு தெரிந்திருக்கும் மந்தையில் எந்த ஆட்டினை அடுத்த நாள் பலியிடுவதென்று. அந்த ஆட்டுக்குத் தெரியுமா? புற்களை மேய்ந்து போதை தலைக்கேறியிருக்கும் அந்த ஆட்டுக்கு நம்மால் பாடம் நடத்த முடியுமா? நடக்கிற காரியமா அது! ஏன்டா அவன் தான் பலியிடுவேன் என்கிறானே பலியிடுவற்கு நீ என்ன ஆடா இல்லை நீ புலி என்று சொல்வதற்கு இறுதி தூதராக நபிஅவர்கள் வர வேண்டியிருக்கிறது. நான் வேண்டிக்கொண்டேன் நடந்தது என்கிறான் அப்பனே அதுவல்ல விஷயம் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை கடவுளென்றால் உனக்கு என்னவேண்டும் என்பது மட்டுமல்ல உன் ஜாதகத்தையே அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

பார்க்கிறதுக்கு தங்கம் மாதிரி இருக்கலாம் அதற்காக வெண்கல குத்துவிளக்கை கொடுத்தால் பேசாமல் வாங்கிக்கொண்டு வந்துவிடுவாயா பத்தர்கிட்ட கொடுத்து உரசிப் பார்க்க மாட்டாய். அப்ப விளக்கையே உரசிப் பார்க்கிற நீ சார்ந்திருக்கும் மதத்தை உரசிப்பார்க்க வேண்டாமாங்கிறேன். தங்கமா இல்லை முலாம் பூசுனதை தங்கம்னு சொல்லி பித்தலாட்டம் செய்கிறார்களா என்று. நான் சொல்லி ஏற்றுக்கொள்ள வேண்டாம் பந்தாய் அவர்களின் கால்களில் உதைபடுவாய் பார் அப்போது தெரியும். அப்போது இவன் கத்தினானே கைகாட்டிவிட்டானே பைத்தியம் என்றோமே என்று புலம்புவாய். புலம்பி என்ன பயன் தலைக்கு மேலே தண்ணீர் போய்விட்டதே. கத்துகிறவன் என்ன கத்துகிறான் என்று காதுகொடுத்து கேட்க வேண்டும். இந்த காதுல சேதியை வாங்கு பிடிக்கலைன்னா பூ சுத்தறான் அப்படின்னா அந்தக் காதால விட்டுவிடுங்கிறேன் இல்லை காசா பணமா என்ன?

 

ஏகனை அநேகன் என்கிறீர்கள். மனிதனுக்கு ஆறாவது அறிவு கொடுத்ததற்கே பகுத்தறிவதற்காகத்தான். வானில் இருப்பது ஒரு சூரியன். ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சூரியனா உதிக்கிறது. எதிரே நிற்பவனின் பிம்பத்தை பிரதிபலிக்கிறது நிலைக்கண்ணாடி. வருகிறாய் தலைவாரிக் கொள்கிறாய் முகப்பவுடர் பூசிக் கொள்கிறாய் அதைவிட்டு நகர்ந்து செல்கிறாய் அதுதானடா உலகம். எனக்கு சாவே வராது என்று சொல்வது நான் எப்போதும் கண்ணாடிமுன் நின்றுகொண்டிருப்பேன் என்று பிதற்றுவதற்கு ஒப்பாகும். பகுத்தறிந்து பார்த்தால் ஏக இறைவன் தான், நீ புத்தியை அடகுவைத்துவிட்டு என்னிடம் வந்தால் எப்படி நான்கு திசை போகிறது ஒருதிசையை காட்ட முடியும் கூடவேவா நான் வரமுடியும். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதைதான். இந்த சமூகம் ஒருசில பிள்ளையாருக்காக நான் உட்பட எத்தனை பேரை குரங்காக்கியிருக்கிறது தெரியுமா?

 

மானிடன் உலகத்தில் ஓர அங்கம் அவ்வளவே. அவனிடம் ஆளக்கொடுத்துவிட்டு அல்லா ஓய்வெடுக்கப் போய்விடவில்லை பணிசெய்து கொண்டுதான் இருக்கிறான். கருவறையில் பிறந்த எவரும் கடவுளாக முடியுமா இதுதான் என் கேள்வி. இது வந்துபோகும் ஒரு இடம் என்று தெரிந்து கொண்டால் நீ விழித்துக் கொள்வாய். இல்லாவிட்டால்    மரணத்துக்குப் பின் என்ன என்று தெரியாதவன் சொர்க்கத்துக்கு நான் கடவுச்சீட்டு கொடுக்கிறேன் என்பான். அதையும் நம்பி நீ போய் ஏமாந்து வருவாய். இறுதியாக ஒன்று என்னடா இவன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறான் என்று நினைக்காதீர்கள் நீ மோட்சத்தையோ சொர்க்கத்தையோ நினைத்து பிரார்த்தனை செய்யவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. உண்மையாக இறையச்சத்துடன் வாழ்ந்தால் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறந்து வானவர்கள் உன்னை அழைத்துச் செல்வார்கள்!

மார்க்கம் என்னை அழைக்கிறது – 1

 


அல்லா இருந்து கொண்டிருக்கிறான். உண்மைக்காக ஒலிக்கும் குரல்களை வானமண்டலத்திலிருந்து கேட்கிறான். மனிதர்கள் காக்கைகளாக இருந்தால் சோற்றுப் பருக்கைகளை தின்றுவிட்டு எச்சமிட்டுப் போய்விடலாம். சாதாரண சூதாட்டத்திலும், கேளிக்கைகளிலும் என்ன இருக்கிறது. அல்லாவின் காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்டு இருக்கின்றோம். அல்லா மதங்கடந்த கடவுள். கிணற்றுத் தவளையாக இருந்துகொண்டு என் மதம் தான் உயர்ந்தது எனப் வாதாடிக் கொண்டிருக்கக் கூடாது. அல்லா ஒளிப்பிழம்பால் சூழப்பட்டு இருக்கிறான்.

 

குர்ஆனின் ஒரு அத்தியாயத்தையாவது உங்களின் கடவுளர்களின்  துணை கொண்டு எழுத முடியுமா? சத்தியத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு மதக்கண்ணாடியால் பார்ப்பவருக்கு அல்லா கடவுளாக தெரியமாட்டான். வாழ்க்கை கடலிலிருந்து கரைசேர்ந்த பின்னர் தான் அல்லா தான் கடவுள் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இறுதித் தூதரால் அருளப்பட்ட திருக்குர்ஆன் வாழ்க்கையை விட மறுமைதான் முக்கியம் என்கிறது. கல்லறையில் மரித்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் ஆற்றல் அல்லாவிடம் மட்டுமே உள்ளது.

 

உலகம் தர்மத்தை ஏற்பவர்கள் ஒரு அணியாகவும் எதிர்ப்பவர்கள் ஒரு அணியாகவும் இரண்டு அணியாக பிளவுபட்டு நிற்கிறது. சத்தியத்தை ஏற்பவர்கள் சீரழிக்கப்படலாம். தர்மத்தை எதிர்ப்பவர்களை அல்லா மரணத்தில் கைவைத்து பார்ப்பான். இஸ்லாம் மனிதன் மகத்தான ஒரு காரியத்திற்காக படைக்கப்பட்டான் என்கிறது. இஸ்லாம் எங்குபோய் ஒளிந்தாலும் கடவுளின் கண்பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது. விண்ணும், மண்ணும், காற்றும், நீருமாக அல்லாவே இருக்கிறான். தீர்ப்பு எல்லோராலும் எழுத முடியும். அத்தீர்ப்பு நியாயத்தின் பக்கம் நிற்கிறதா எனக் கேட்கிறது இஸ்லாம். ஜோடித்து கட்டுக்கதைகளை பக்கம்பக்கமாக நீட்டி முழக்கி எழுதலாம் அதில் சத்தியம் இருக்கவேண்டும், ஓரளவுக்காவது உண்மை இருக்கவேண்டும். மேடை ஏறி உபதேசிப்பது பெரிதல்ல அதன்படி வாழ வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வாழ்வு செல்லாக்காசாகிப் போகும்.

 

உங்கள் எண்ணங்களையும், செயல்களையும் அல்லா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். கருவிலுள்ள சிசுவைப் பற்றிக்கூட அல்லா அறிந்து வைத்திருக்கிறான். மரணத்தில் அல்லாவைச் சந்திக்கப் போகிறோம் என்ற நினைவில் வாழ வேண்டும். அவனுக்கு வேண்டப்பட்டவர், வேண்டப்படாதவர் யாருமில்லை. நபிமார்களுக்கும் நமக்கும் கூட அவன் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. அல்லா ஒருவன் தான் கடவுள். எப்படியெனில் பூமியை அந்தரத்தில் சுழலவிடும், கோள்களை அதன் பாதையில் செலுத்தும் சக்தி அவன். பூமியும், கடலும், காற்றும் யாருடைய கட்டளைக்குக் கீழ்படிகிறதோ அவனே அல்லா. நாம் அஞ்சுவதும், பணிவதும் அல்லாவுக்கே. இணைவைப்பவர்கள் நண்பகலில் இருண்டுபோகச் செய்யட்டுமே பார்ப்போம்.

 

கடவுள் மனித உருவெடுத்தால் ஆசை, மோகத்திற்கு ஆட்பட்டுத்தான் ஆகவேண்டும். அல்லா ஒருவனே உருமற்றவன். சத்தியத்தை கைக்கொள்கிறவர்களுக்கு வழிகாட்டக் கூடியவன். மெக்கா இருக்கும் திசையே உண்மையின் திசை. அல்லா ஒருவனே கடவுள். தண்டனையே கிடையாது மனம் போன போக்கில் வாழலாம் என்றால் அதற்கு எதற்கு மதம். அதற்கு எதற்கு கடவுளர்கள். தடுக்கி விழுந்தவனை தட்டிக் கொடுப்பதுதான் மதமாக இருக்க வேண்டுமேத் தவிர, ஓடமுயல்பவனை காலைவாரிவிடுவதல்ல. மதம் ஒழுக்கத்தைத் தான் உபதேசிக்க வேண்டுமேத் தவிர வேசித்தனத்தை அல்ல. பிரமாண்டமாக இருக்கலாம் அதில் குடிகொண்டவனின் உள்ளம் சில்லரைத்தனமாக இருந்தால்.

 

கடவுள் அறிவுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கவேண்டும். சிந்தனையால் சிறைப்பிடிக்கப்பட முடியாதவனாக இருக்க வேண்டும். ஆட்டுமந்தையைப் போல் கூட்டத்தை சேர்க்காமல் சத்தியப்படி நடப்பவர்களை மட்டுமே மார்க்கத்தை பின்பற்றுங்கள் என அறைகூவல் விடுக்கவேண்டும். உள்ளுக்குள் இருக்கும் ஷைத்தானுக்கு விடை கொடுத்தால் அல்லா அந்த இடத்தில் அமர்வான். குற்றச் செயலுக்கு வக்காலத்து வாங்கும் எந்த மதமும் உருப்பட்டதாக சரித்திரமில்லை. சத்தியத்தை சக்கரைப் பொங்கல் என நினைக்கும் எந்த மார்க்கத்தின் வேரும் அழுகித்தான் போகும். ஆரவார கூச்சலே மார்க்கமாகிவிட்டது தயவுசெய்து அமைதியை நாடுபவர்கள் அல்லாவிடம் வாருங்கள். அவன் சொல்லும் சொற்களை சற்று காதுகொடுத்து கேளுங்கள்.