Saturday, November 3, 2018

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் – 9

இஸ்லாம் அன்பையே விதைக்கச் சொல்கிறது. நீ மண்ணில் விதை போட்டால் மட்டும் போதாது. அக்கறை இருக்க வேண்டும் வேர்பிடிக்க தண்ணீர் இடவேண்டும். சூரியவொளி படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். செடி விருட்சமான பிறகு விதைத்தவர் இருக்க மாட்டார். ஆனாலும் சுவைக்க கனிகளையும், இளைப்பாற நிழலையையும் அந்த மரம் தந்து கொண்டிருக்கும்.
இஸ்லாத்தில் அவரவர் தகுதியை பணத்தை வைத்து நிர்ணயிப்பதில்லை. தனது படைப்புகளின் மீது அன்பு காட்டுபவனை இறைவன் எப்படி கைவிடுவான். இறுதிக் காலத்தில் தாம் குற்றவுணர்வு அடையும்படியான செய்கைகளை நாம் நிகழ்காலத்தில் செய்யக்கூடாது. எதிரிலிருப்பவர்களும் தம்மைப் போல் ஒரு ஜீவன் தான் என்று உணர வேண்டும். தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதிலேயே குறியாய் இருக்கக் கூடாது. இறைவன் தருவது நன்மையோ, தீமையோ அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கைக் கடலில் புயல் வீசினாலும் இறைவனிடம் நம்பிக்கை வைத்து கப்பலைச் செலுத்தினால் நாம் கரையை அடைந்துவிடலாம். எனது செயலால் உனக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டது என வருந்துபவனிடம் இறையம்சம் தென்படவே செய்கிறது. உலகத்தின் விசித்திரமே விதைத்தவன் ஒருவனாக அறுப்பவன் ஒருவனாக இருப்பது தான்.
கருத்து முரண்பாடுகள் உள்ளவர்களை எல்லாம் எதிரிகளாகக் கருதினால் நாம் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள முடியும். நிம்மதியாக உறங்க முடியுமா என்ன. அல்லா நமக்கு தகப்பனாய் இருக்கிறான் எனும் போது உனக்கு எதிராக கேடுடைய செயலை செய்ய பிறரை அவன் அனுமதிப்பானா என்ன? வல்லவர்கள் தான் இங்கு வாழவேண்டுமென்றால் உலகத்து மக்கள்தொகை பாதியாக குறைந்துவிடாதா? இறையச்சம் தான் மானிடனை மனிதர்களாக்குகிறது. இன்று நீ கீழ்ப்பணிந்து நடந்து கொண்டால் நாளை கட்டளையிடும்பணியை உனக்கு அல்லா அருள்வான்.
இருவேறு இடத்தில் செடிகளை நட்டாலும் வேர்கள் உறவாடிக் கொள்வதில்லையா? நான்கு சுவர்களுக்குள் இருந்தாலும் கடவுளின் கண்களிடமிருந்து மனிதனால் தப்பமுடியுமா? இப்பூவுலகில் அல்லாவை மகிமைப்படுத்தும் ஒவ்வொரு உயிரும் மறுமையில் விடுதலையை பெற்றுக் கொள்ளும். சத்தியத்தின் வழி நிற்பவர்கள் யாவரும் அல்லாவைச் சரணடைந்தே ஆகவேண்டும். உலக கோடீஸ்வரர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மிஞ்சிப் போனால் இரண்டு தலைமுறை வரை தானே நினைக்கப்படுவார்கள். அருளாளர்கள் நூற்றாண்டுகளாக நினைக்கப்படுவதற்கு அல்லாவேயன்றி யார் காரணம். ஏழைகளுக்கு நீங்கள் உதவினால் அல்லாவால் விரும்பப்படுகிறவர்கள் பட்டியலில் உன் பெயர் இருக்கும் அல்லவா. இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எக்காலத்திலும் தன் மகிமையை இழக்காது. அல்லாவுக்கு கீழ்ப்படிதலை கோழைத்தனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அல்லா தரும் சுதந்திரத்தை நியாயத்திற்கு எதிராகவும் பயன்படுத்தக் கூடாது.

No comments:

Post a Comment