Wednesday, October 24, 2018

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - 4

பல தெய்வங்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்கள். உங்கள் பாவத்தை மன்னிக்கும் தெய்வம் எதுவோ வே உங்கள் இஷ்ட தெய்வமாக அமையும். உருவம் என்று வந்தாலே விருப்பு வெறுப்புக்கு ஆட்பட்டு போகும் நிலை வந்துவிடும். அல்லா என்பது புனிதத்தன்மை வாய்ந்த உணர்வு எதிலும் அதை அடைக்க முடியாது. இன்ன இடத்தில் தான் வெளிப்படும் இந்த மந்த்ரம் சொன்னால் தான் வெளிப்படும் என்பதில்லை. உங்களுக்கான கடவுளிடம் நீங்கள் அதிகம் உரிமை எடுத்துக் கொள்கிறீர்கள். வியாபாரம் பேசுகிறீர்கள். அந்தக் கடவுள்களும் உங்களிடம் பிச்சை வாங்கிக் கொண்டு உங்களை உங்கள் போக்கிலேயே விட்டுவிடுகின்றன.
நீங்கள் தெய்வங்கள் என்று நம்புபவர்கள் உங்களை தவறாக வழிநடத்தலாம். சத்தியத்தின்படி வழிநடத்தும் அல்லா ஒருவரே கடவுள். அல்லா உங்களிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை, உங்கள் உள்ளத்தூய்மையையும், பிறர் உயிர்கள் மேல் காட்டும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கிறான். உங்களின் தோற்றமும், அந்தஸ்தும் உங்களை அல்லாவிடம் அழைத்துச் செல்லாது. அல்லா மனிதனிடம் நீதியையும், நேர்மையையும் மட்டுமே எதிர் பார்க்கிறான். விதியை மீறுபவர்களிடம் அல்லா நடந்து கொள்ளும் முறையே வேறு. தவறான வழியில் செல்பவர்களுக்கு அல்லா ஒரு வாய்ப்பளிப்பான் அப்படியும் அவர்கள் திருந்தவில்லையென்றால் அல்லா அவர்கள் மீது போர் தொடுப்பான்.
அனுப்பினவரை மறந்துவிட்டு மனிதர்கள் இந்த நிலையற்ற உலகத்தை உடும்பாய்ப் பிடித்துக் கொள்கின்றனர். எஜமானன் வீட்டில் நுழையும் போது, பணியாளர்கள் அவனுக்கு சேவகம் செய்துதான் ஆக வேண்டும். மனிதன் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்துவிட்டு இறுதியில் அல்லாவே கடவுள் எனக் கண்டு கொள்வான். அல்லா தன் பக்கம் வரும்படி யாரையும் நிர்பந்திக்கமாட்டான். சத்தியத்தின்படி நடப்பவர்கள் அல்லாவையே பின்பற்றி நிற்பார்கள். அல்லா உங்களுக்கு வாழ்க்கையைப் பிச்சையாக இட்டிருக்கிறான். நீங்கள் உங்கள் நடத்தையால் அல்லாவிடமிருந்து விலகிச் செல்கிறீர்கள். அல்லா விசாலமான வானத்தை படைத்திருக்கிறான் பறவைகள் பறப்பதற்காக, பரந்துவிரிந்த நிலத்தை படைத்திருக்கிறான் மனிதர்கள் வசிப்பதற்காக. அருளப்பட்ட சுவர்க்கத்தை மனிதன் நரகமாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லா உங்களுக்காக சுவர்க்கத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பதை அல்லா இந்த நொடி வரை நிறைவேற்றி வருகிறான்.
பூமியில் அநீதியாளர்கள் பெருகிவரும வேளையில் பூமியில் இயக்கத்தை அல்லா படிப்படியாக நிறுத்துகிறான். நீதிக்கு புறம்பானவர்களுக்கு அல்லா அளிக்கும் தண்டனை முறையே வேறு. இதோ இந்த உலகம் அல்லாவை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் வேளையில். இஸ்லாம் என்ற கடலோடு அனைத்து மதங்களும் சங்கமித்துவிடும்.

No comments:

Post a Comment