Sunday, August 19, 2018

சிக்கல் சிங்காரவேலா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்


யாதுமாகி நின்றாய்
உலகுக்கு மூலாதாரம் சிவமாம்
அச்சிவத்திலிருந்து தோன்றிய பரஞ்சோதிப் பிழம்பாகி
உலக அன்னை பார்வதிதேவி மெச்சிகின்ற பிள்ளையாகி
எதிலும் ஜெயம் உனக்கு என்றவள்
தன் சக்தியை வேலாக்கி முருகனிடம் தந்துவிட்டமையால்
சிக்கல் சிங்காரவேலனாகி
முற்றும் உணர்ந்துகொள்ள இயலாத ஞானப்பொருளாகி
விரல்ரேகைகள் ஒன்றாய் அமைந்த மனிதர்கள் உலகில் உண்டோ
அறுசுவைகளில் ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்று பிடிக்கும் அன்றோ
ஆனாலும் அவரவர் பக்திபாவத்துக்கு ஏற்றபடி ஓடோடி வரும்
ஆறுமுகம் கொண்ட பன்னிருகரத்தனாகி
மண்ணில் பிறந்துவிட்டால் ஆறுபருவங்ளை அனுசரித்தே வாழவேண்டும்
பிறவிப் பிணி அறுக்க அனைவரும் தொழும்
ஆறுகோலங்களைத் துறந்து திருவோடு ஏந்தி
யாசகம் கேட்கும் பழநி ஆண்டவராகி
சிவனுக்கு ப்ரணவப் பொருள் உரைத்த குருவாகி
அசுரர்களால் அழிவு ஏற்படும் என அஞ்சி
தேவர்கள் தேவேந்திரன் தலைமையில் உன்னிடம் அடைக்கலம் கேட்க
சூரனை சம்ஹாரம் செய்து தர்மத்தை காத்திட்ட தேவசேனாதிபதியாகி
பழம் கிடைக்கவில்லை என்பதால்
தந்தையிடம் கோபித்து பழநிமலை மீது ஏறி அமர்ந்தவன்
தன்னை விட்டு விலகிப்போன பிள்ளை தற்குறியாகாமல்
தனிக் கோவில் எழுப்பி அவன் மீது திருமுருகாற்றுப்படை பாடுமளவுக்கு
தந்தையின் மதிப்பால் உயராமல் சுயஉழைப்பால் உயர்ந்த
உன்னை சிவனே வியக்குமளவு
தந்தையின் பந்ததத்தை அறுத்து நீ தரணிக்கே மைந்தனாகி
ஏட்டுப் படிப்பால் புத்திக்கு எட்டாத ஒன்றை
காட்டிலும், மேட்டிலும், காவியும், கமண்டலமும் கொண்டு அலைந்து திரிந்து
உடலே கரையான் புற்றால் மூடுமளவுக்கு தவம் செய்து
கோடான கோடி முனிவர்கள் தேடியலையும் தத்துவப்பொருளாகி
ஐம்பூதங்களின் அடிமையாய் உழலும் அனைவரையும்
நாற்பறமும் ராட்சச சுவர் கொண்ட இச்சிறைச்சாலையில்
வலியவர்களால் கொத்தடிமையாக நடத்தப்படும் அப்பாவிகளை
கருணை கொண்டு விடுவித்தருளும் நீதிநெறி தவறாத நல்அரசனாகி
வயிற்றிலும், தோளிலும் சுமந்து
அன்பை வாரி வாரி பொழிந்து
தான் பசியாறாவிட்டாலும்
இருக்கும் உணவை புசிக்கக் கொடுத்து
வறுமையில் வாடச்செய்யாமல்
சீராட்டி பாராட்டி தன் குழந்தைகளை வளர்க்கும் தாய்தந்தையாகி
ஏறாத கோவிலில்லை
செய்யாத பரிகாரமில்லை
மழலை ஒலி கேட்கின்ற மகத்தானதொரு வாழ்வைத் தா
என்று வேண்டி நிற்போர்க்கு அருள்புரிந்து
தொட்டிலில் வீறிட்டழும் தெய்வக் குழந்தையாகி
உறவுகளால் கைவிடப்பட்டு
அனாதையாய் வீதியில் திரிந்து இறந்துபோகும் முதியவர்களுக்கு
தன்னோடு வீரபாகு முதலிய வீரர்களை அழைத்து வந்து
ஈமச்சடங்கு செய்து
மனச்சாந்தியுடன் அவர்களை மேலுலகுக்கு அனுப்பும்
பெற்றெக்காத தவப்புதல்வனாகி
பலவருடங்காளாய் வெறும் படிக்கல்லாய் இருப்போர்க்கு
அவர்களின் உள்ளே ஒளிந்திருக்கும் அற்புதசிற்பத்தைக் கண்டு
அக்னியை வலம் வந்து நம்பிக்கையாய் கைப்பிடித்து
வலித்தாலும் பரவாயில்லையென்று உளியால் அடித்தடித்து
பிறர் வணங்கும் தெய்வச்சிலையாக மாற்றும் மனைவியாகி
சிறுகுடிசையில் பெண்ணாய் பிறந்ததினால்
கன்னியாகவே காலம் கழித்திட வேண்டுமா குமரா
என் கையேந்தி தாலி பாக்கியம் கேட்போர்க்கு
செல்வம் ஆற்று நீரென காலத்தில் வந்து போகும்
வாழ்வதற்கு நல்மனம் போதும்
குணத்தால் பிறர் குறைசொல்ல முடியாத வாழ்வு வாழ்ந்தால்
ஊற்று நீரென பதினாறு பேறுகள் பொங்கி வந்து
பாதங்களில் தவங்கி்டக்கும் - என்று
நல்வார்த்தை கூறி கைப்பிடிக்கும் உத்தம புருஷனாகி
காசு பணம் கையில் இல்லாமல் கரைந்தவுடன்
தாயாய் பிள்ளையாய் பழகி கூடிக்களித்த சொந்தபந்தம்
அந்நியமாய் அற்பப்புழுவினைப் போல் நம்மைப் பார்க்கும்
பல நண்பர்கள் என் பெயரைக் கேட்டு
அப்படியொருவனிடம் எனக்கு பழக்கமில்லை என ஒதுங்கிவிட
என்னுடைய நஷ்டத்தில் பாதியை நீ தோளில் சுமந்து
புதைகுழியிலிருந்து என்னை மீட்டெடுத்து
மானம் காத்த உயிர் நண்பனாகி
கண்களில் பார்வையாகி
செவிகளில் ஓசையாகி
நாசியில் மணமுமாகி
நாவினில் செந்தமிழ் பாடலாகி
உடலில் உறையும் உயிராகி
பயணிக்கும் பாதையாகி
உடலுக்கு வாழ்வளிக்கும் வளிமண்டல காற்றாகி
உடலுக்கு சக்தியளிக்கும் உணவான காய்கனியாகி
அனைத்தையும் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆன்மாவாகி
எங்கெங்கு காண்கையிலும் முடிவில்லா வெளியென
நீண்டிருக்கும் விண்ணாகி
பாலைவன மண் மாறிவிடாமல்
தன் நீரை ஆவியாகக் கொடுத்து
பூஞ்சோலையாய் பூமியை வைத்திருக்கும் கடலாகி
பேய்களுக்கும்பிணிகளுக்கும்
அடுத்தவரை துன்பப்படுத்தி சுகங்காணும் எவருக்கும் சத்ருவாகி
புறக்கவர்ச்சியினால் கவரப்பட்டு மனம் எங்கெங்கோ செல்கிறதே
உனை நினைக்கும் அதே மனம் ஈக்களைப் போல்
மலத்திலும் போய் உட்கார்ந்து கொள்கிறதே
உனை தரிசிக்கும் அதே கண்கள் தீயச் செயலைக் காண
ஆர்வம் கொண்டு அலைகிறதே
உனது திருப்புகழை கேட்கும் அதே செவிகள்
மற்றவர்களின் அந்தரங்க செய்திகளை
குதூகலத்துடன் கேட்க விழைகிறதே
உனை பக்தியினால் கைகூப்பித் தொழும் அதே கைகள்
பெண்உடலை ஆரத்தழுவ மோகம் கொண்டு துடிக்கிறதே
உனது திருக்கோவிலை நோக்கிவரும் அதே பாதங்கள்
பாவத்தை கூவி விற்கும் பரத்தையர் வீடுகளுக்கும் செல்கிறதே
உனது பெருமையினைப் பாடிடும் அதே வாய்
அகராதியில் இல்லாத அத்தனை கெட்ட வார்த்தைகளையும்
கோபத்தினால் பிறர் மீது உமிழ்கிறதே
இத்தனை கேடுடைய மனிதப்பிறப்பெனக்கு
இந்திரப்பதவி கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாமப்பா
இனிவொரு கருவறையில் என் உயிர் புகாமல்
பிறவாமை வரம் கொடுத்து
முருகா உன் திருவடியில் ஏற்றுக்கொள்வாய்
சரண் புகுந்தேன்
சண்முகா உன் சரணமப்பா.
உனதடிமை ப.மதியழகன்

No comments:

Post a Comment