Friday, March 16, 2018

மண்ணின் மகாபுருஷர்கள் -- 1


இதோ சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார் இயேசு. இன்னும் அவருக்கு உயிர் இருக்கிறது. தனக்கு இருபுறமும் திருடர்கள் அறையப்பட்டிருப்பதை பார்க்கிறார். இன்னும் அவரை தச்சனின் மகனாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். கீழே குனிந்து ஜனங்களைப் பார்க்கிறார். ‘பிதாவே இவர்களை மன்னியும் இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்’ என தனக்குள் முணுமுணுக்கிறார்.

மண்ணில் உதிரம் வழிகிறது. எத்தனையோ பேர்களை உண்டு செரித்த வயிறல்லவோ அதற்கு. மேரி கண்ணில் நீர் வழிய அண்ணாந்து பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாள். மக்களில் பெரும்பானோர் இயேசுவை காறி உமிழ்ந்து வசை மாறி பொழிகின்றனர். அவர் முணுமுணுப்பதைப் பார்த்து மக்கள் இவன் எலியாவை அழைக்கிறான் பார் என்றார்கள்.

விண்ணுலக சாம்ராஜ்யம் என்பதை யூதர்கள் தவறாகப் புரிந்து
கொண்டனர். மீண்டும் அண்ணாந்து பார்த்து முணுமுணுக்கிறார் ‘பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்’ என. இதோ வெட்டவெளியிலிருந்து ஒரு நீர்த்துளி அவரின் உதடுகள் மீது விழுகிறது. தலைகுனிந்து ‘உம் விருப்பம் அதுவாக இருந்தால் அப்படியே ஆகட்டும்’ என்கிறார்.

யூதர்களின் ராஜா என்றழைக்கப்பட்டவர் உலகுக்கே ராஜாவானார். அப்படியே உன் சித்தப்படி ஆகட்டும் என்று இறைவனின் ஆளுகைக்கு தன்னை ஒப்படைத்த பின் தச்சனின் மகனான இயேசு, கிறிஸ்துவாக உருமாறுகிறார்.அலைகள் கடலுக்குள் திரும்புதைப் போல அவர் கடவுளுக்குள் ஐக்கியமாகிறார்.

கடவுளின் குமாரர்களுக்கு மரணத்தையே மக்கள் பரிசாகத் தருகின்றனர். அன்பே கடவுள் என போதிக்கவே தேவமைந்தன் இறங்கி வந்தார். மீண்டும் குழந்தையாகாமல் உங்களுக்கு பரலோக சாம்ராஜ்யத்தில் இடமில்லை என்றார். உள்ளத்தளவில் மனிதன் மீண்டும் குழந்தையாக மாற அவர் வலியுறுத்தினார். இன்றளவும் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள் எல்லாம் தேவனின் காலடியில் தான் சரண்புகுகிறார்கள்.

அன்பை விதைத்துவிட்டுப் போன அந்த மனுஷகுமாரன் வன்முறைக்கு அஹிம்சையையே பதிலாகத் தந்தார். எல்லா நாடுகளும் ஆயுதங்களை எல்லாம் கடலில் தூக்கி போட்டுவிட்டால் மேய்ப்பன் மீண்டும் இம்மண்ணுலகுக்கு வருகை தருவார்.  

No comments:

Post a Comment